Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                            19  ஜூன்  2018  
                                                           பொதுக்காலம் 11ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கினாய்.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 21: 17-29

அந்நாள்களில் நாபோத்து இறந்தபின், திஸ்பேயரான எலியாவுக்கு ஆண்டவர் உரைத்த வாக்கு: "நீ புறப்பட்டு, சமாரியாவிலிருந்து ஆட்சிசெய்யும் இஸ்ரயேலின் அரசன் ஆகாபைப் போய்ப் பார். அவன் நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தைத் தன் உடைமையாக்கிக் கொள்ள அங்குப் போயிருக்கிறான். நீ அவனிடம் சொல்ல வேண்டியது: ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீ கொலை செய்து, கொள்ளையடித்திருக்கிறாய் இல்லையா? எனவே, நீ அவனிடம் சொல்ல வேண்டியது. ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கிய அதே இடத்தில் அவை உனது இரத்தத்தையும் நக்கும்."

அப்போது ஆகாபு எலியாவை நோக்கி, "என் எதிரியே! என்னைக் கண்டுபிடித்து விட்டாயா?"என்று கேட்டான்.

அதற்கு அவர், "ஆம், நான் கண்டுபிடித்துவிட்டேன். ஆண்டவர் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்யும் அளவுக்கு உன்னையே விற்றுவிட்டாய். இதோ! நான் உனக்குத் தீங்கு வரச் செய்வேன். உனது வழிமரபை ஒழித்து விடுவேன். உரிமை மக்களாயினும், அடிமைகள் ஆயினும், இஸ்ரயேல் ஆண்மக்களை ஆகாபிடமிருந்து வெட்டி எறிவேன். நெபாற்றின் மகன் எரோபவாமின் குடும்பத்திற்குச் செய்ததுபோல், உன் குடும்பத்திற்கும் செய்வேன். ஏனெனில் நீ இஸ்ரயேலைப் பாவத்திற்கு உள்ளாக்கி எனக்குப் பெருஞ்சினம் மூட்டினாய். மேலும் ஈசபேலைக் குறித்து ஆண்டவர் சொல்வது: இஸ்ரியேலின் மதிலருகே நாய்கள் ஈசபேலைத் தின்னும். ஆகாபைச் சார்ந்தவர்கள் நகரினுள் மடிந்தால், நாய்களுக்கு இரையாவர்; நகர்ப்புறத்தே இறந்தால், வானத்துப் பறவைகளுக்கு இரையாவர்"என்றார்.

ஆண்டவர் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்யுமளவுக்குத் தன்னையே விற்றுவிட்ட ஆகாபைப் போல் கெட்டவன் எவனும் இருந்ததில்லை. ஏனெனில் அவனுடைய மனைவி ஈசபேல் அவனைத் தூண்டி விட்டாள்.

மேலும், இஸ்ரயேல் மக்கள் முன்னிலையிலிருந்து ஆண்டவர் விரட்டியடித்த எமோரியர் செய்துகொண்ட சிலைகளை எல்லாம் வழிபடும் அளவுக்கு அவன் மிகவும் இழிவாக நடந்து கொண்டான்.

அச்சொற்களை ஆகாபு கேட்டவுடன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு வெற்றுடல்மீது சாக்கு உடை உடுத்தி, நோன்பு காத்துச் சாக்குத் துணிமீது படுத்தான்; பணிவோடு நடந்துகொண்டான்.

அப்பொழுது திஸ்பேயரான எலியாவுக்கு ஆண்டவர் உரைத்த வாக்கு: "என் திருமுன் ஆகாபு தன்னைத் தாழ்த்திக் கொண்டதைக் கண்டாயன்றோ? அவன் என் திருமுன் தன்னைத் தாழ்த்திக்கொண்டதால் நான் அவன் வாழ்நாளின்போது தீமை வரச் செய்யாமல், அவனுடைய மகனது வாழ்நாளின்போது அவனுடைய குடும்பத்தாரின் மேல் தீமை விழச்செய்வேன்."

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 51: 1-2. 3-4ab. 9,14 (பல்லவி: 1a)
=================================================================================
 பல்லவி: கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்.

1 கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். 2 என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். பல்லவி

3 ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது. 4ab உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன். பல்லவி

9 என் பாவங்களைப் பாராதபடி உம் முகத்தை மறைத்துக் கொள்ளும்; என் பாவக் கறைகளை எல்லாம் துடைத்தருளும். 14 கடவுளே! எனது மீட்பின் கடவுளே! இரத்தப் பழியினின்று என்னை விடுவித்தருளும்; அப்பொழுது, என் நா உமது நீதியை முன்னிட்டுப் பாடும். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 13: 34

அல்லேலூயா, அல்லேலூயா! புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 43-48

அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: "உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக", "பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக" எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள்.

ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள்.
ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார். உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர் களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரிதண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா?

நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா?

ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.


சிந்தனை

நாம் யாரையும் பகைவர்களாக கருதாவிட்டாலும், வாழ்வின் ஒட்டத்தில் நம்மை பகைவர்களாக கருதுவோர் உண்டு. இவர்களை நேசிப்பதா?

நாம் யாரையும் பகைவர்களாக கொண்டு வாழ்வோமேயானால், நாம் கிறிஸ்துவை தாங்கி வாழ்ந்திட முடியாது. பகைமையோடு காணிக்கை செலுத்திட முடியாது. பகைமையோடு கிறிஸ்துவை உட்கொள்ளவும் முடியாது.

நம்மை பகைவர்களாக கருதுவோரையும் நாம் நேசிக்க வேண்டும் என்பதுவே இன்றைய அழைப்பு. கிறிஸ்துவை தாங்கி வாழ்வோருக்கு இது சாத்தியமே. நம்மால் முடியாவிட்டாலும், நம்மில் வாழும் கிறிஸ்துவால் இது சாத்தியமே. பகைவர்களாக நம்மை கருதுவோரை நாம் நேசிக்க இயலவில்லை என்றால். அப்பொழுதும் கிறிஸ்து நம்மில் இல்லை என்று தான் அர்த்தம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"பகைவரிடமும் அன்பு கூருங்கள்"

முன்பொரு காலத்தில் மருதூர் நாட்டை இளங்குமரன் என்ற அரசர் ஆண்டு வந்தார். ஒருநாள் அமைச்சர்களிடம் அவர், "நம் நாட்டை அடுத்துள்ள அரசர்கள் அனைவரும் நமக்கு பகைவர்களாக உள்ளனர். அவர்களை அழிக்க ஏதேனும் வழி இருந்தால் சொல்லுங்கள்" என்று கேட்டார். "அரசே! உங்களைப் போலவே அவர்களும் வலிமை படைத்த அரசர்கள். அவர்களை அழிக்க முயற்சி செய்தால் நமக்குப் பேரழிவுதான் ஏற்படும்," என்றார் தலைமை அமைச்சர். "அவர்களை அழிக்க உங்களுக்கு வழி தெரியவில்லை. நானே வழி கண்டுபிடிக்கிறேன்" என்றான் இளங்குமரன்.

சில நாட்கள் சென்றன. தூதர்களை அழைத்த இளங்குமரன் அண்டை நாடுகளுக்கு அவர்களை அனுப்பி வைத்தான். ஒவ்வொரு நாட்டு அரசரையும் சந்தித்த அவர்கள், "அரசர் பெருமானே! மருதூர் நாட்டில் கோடை விழா கோலாகலமாக நிகழ உள்ளது. தாங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வேண்டும். எங்கள் அரசரின் அன்பு வேண்டுகோள்," என்று பணிவுடன் அழைத்தனர். அழைப்பை ஏற்று எல்லா அரசர்களும் மருதூர் நாட்டிற்கு வந்தனர். அவர்களை வரவேற்க, மருதூர் நாடெங்கும் அழகிய தோரணங்கள் வைக்கப்பட்டன. இன்னிசை முழங்க, அரசன் இளங்குமரன் அவர்களை ஆரவாரமாக வரவேற்றான். இரு பக்கங்களிலும் குழுமி இருந்த மக்களின் வாழ்த்தொலி விண்ணைப் பிளந்தது.

தங்களுக்குக் கிடைத்த வரவேற்பைக் கண்டு அவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களிடம் இனிமையாக பேசினான் இளங்குமரன். எந்தக் குறையும் ஏற்படாமல் கவனித்துக் கொண்டான். கோடை விழா இனிதே முடிந்தது. அரசர்களை வழி அனுப்பும் விழா நடந்தது. "என் அழைப்பை ஏற்று விழாவைச் சிறப்பித்த உங்களுக்கு நன்றி. உங்கள் வருகையால் எங்கள் நாடே பெருமை பெற்றது. எந்த உதவியானாலும் தயங்காமல் கேளுங்கள்" என்று உணர்ச்சி பொங்கப் பேசினார் இளங்குமரன். பின்னர் அவர்களுக்கு விலை உயர்ந்த பரிசு தந்து அனுப்பினார். அவர்கள் உயிருக்கு ஆபத்து இல்லை என்பதை அறிந்த அமைச்சர்கள் நிம்மதி அடைந்தனர்.

பின்னர் அரசனிடம் அவர்கள், "அரசே! பகைவர்களை எல்லாம் அழிக்கப் போவதாகச் சொன்னீர்கள். முடியாது என்று நாங்கள் சொன்னோம். நாங்கள் சொன்னது தானே நடந்தது?" என்று கேட்டனர். "அமைச்சர்களே! நான் சொன்னதுதான் நடந்தது. பகை அரசர்களை எல்லாம் அழித்து விட்டேன்" என்றார் இளங்குமரன்.
"எப்படி அரசே! நீங்கள்தான் அவர்களை வரவேற்று விருந்து அளித்து அல்லவா அனுப்பியிருக்கிறீர்கள்? அப்படியிருக்கும்போது அவர்களை அழித்து விட்டதாக எப்படிச் சொல்லலாம்?" என்றனர் அமைச்சர்கள். அதற்கு அரசர் மிகவும் பொறுமையாக "பகைவர்களாக இருந்த அவர்கள்மீது அன்பு மழை பொழிந்தேன். இப்போது அவர்கள் நம் நண்பர்களாகி விட்டனர். இப்போது சொல்லுங்கள் நான் சொன்னது போலப் பகைவர்களை அழித்து விட்டேனா? இல்லையா?" என்றார்.
"அரசே! நீங்கள் சொன்னதைச் செய்து விட்டீர்கள். உங்களைப் போன்றே மற்ற அரசர்களும் இருந்தால், இந்த உலகில் பகையே இருக்காது," என்றனர் அமைச்சர்கள்.

பகைவர்களை அழித்து அல்ல, அன்பு செய்து பகைவர்களையும் பகைமையையும் இல்லாது செய்த இளங்குமரன் என்ற மன்னர் நமது சிந்தனைக்குரியவராக இருக்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்" என்கின்றார். யூதர்களைப் பொறுத்தளவில் அயலார் மட்டும் அன்புக் குரியவர்கள், பகைவர்கள் வெறுப்புக்குரியவர்கள் என்றொரு நிலை இருந்தது. ஆண்டவர் இயேசுவோ இந்நிலையை மாற்றி, பகைவரிடத்தில் அன்பு கொள்ளச் சொல்கின்றார். இயேசு பகைவரிடம் ஏன் அன்பு கொள்ளவேண்டும் என்ற காரணத்தையும் சொல்கின்றார். தந்தையாம் கடவுள் நல்லோர் மேலும் தீயோர் மேலும் கதிரவனை உதித்தெழச் செய்கின்றார், நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கின்றார். அவர் இவ்வாறு இருப்பதனால் அவருடைய மக்களாகிய நாமும் பகைவர்களை மன்னித்து அன்பு செய்யக்கூடியவர்களாக இருக்கவேண்டும் என்பதாலேயே ஆண்டவர் இயேசு இவ்வாறு கூறுகின்றார்.

இயேசு கூறுவது போன்று நம்முடைய தனிப்பட்ட வாழ்வில் நாம் நமக்குத் தீங்கு செய்பவர்களையும் நம்முடைய பகைவர்களையும் நாம் அன்பு செய்யத் தயாராக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பகைவர்களை அன்பு செய்வது என்பது கடினமான காரியமே தவிரே, இயலாத காரியமல்ல. ஏனென்றால் ஆண்டவர் இயேசு தனக்குத் தீங்கு செய்தவர்களை மன்னித்து அன்பு செய்தார்.

ஆகவே, நாமும் இயேசுவைப் போன்று தீங்கு செய்வோரை, பகைவர்களை மன்னித்து அன்பு செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
பகைவருக்கு அன்பு

கடந்த நூற்றாண்டில் லெபனானில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான கலவரம் வெடித்தபோது இஸ்லாமியர்கள் ஏராளமான கிறிஸ்தவ தேவாலயங்களை தீக்கிரையாக்கினார்கள், நிறைய கிறிஸ்தவர்களைக் கொன்றுபோட்டார்கள். எங்கும் போர்ககளம் போன்று காட்சியளித்தது.

அந்த நேரத்தில் ஒரு குருமாணவர் கலவரக் கும்பலிடம் சிக்கிக்கொண்டார். அவரை அவர்கள் பொதுஇடத்தில் வைத்து சுட்டுத் தள்ளுவது நல்லதல்ல, மலைப்பாங்கான ஓரிடத்திற்கு அழைத்துச் சென்று, அங்கே அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொள்ளுமாறு ஒருவிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தார்கள். எனவே இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒருவன் குருமாணவரைக் கொள்வதற்காக மலைப்பாங்கான ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்றான்.

குருமாணவர் சில ஆண்டுகள் இராணுவத்தில் பணிபுரிந்திருந்ததால், அவருக்கு அந்த இஸ்லாமியனிடமிருந்து எப்படி தப்பிப்பது என்ற வழி தெரிந்திருந்தது. ஆள் வேறு வாட்டசாட்டமாக இருந்தார். இஸ்லாமியனுக்குப் பின்னால் அமைதியாகப் போய்க்கொண்டிருந்தவர் திடிரென்று அவன்மீது பாய்ந்து, அவன் வைத்திருந்த துப்பாக்கியைக் கைப்பற்றி, அவனை மிரட்டத் தொடங்கினார். அவன் பயந்து நடுங்கினான். தெரியாமல் இப்படிச் செய்துவிட்டேன் என்னை மன்னித்தருள்க என்று கெஞ்சிக் கேட்டான்.

அப்போது குருமானவர் ஆண்டவர் இயேசு சொன்ன, உங்கள் பகைவரிடம் அன்பு கூருங்கள்" என்ற வார்த்தையை நினைத்துப் பார்த்தார். உடனே தன்னுடைய கையிருந்த துப்பாக்கியைத் தூர எறிந்துவிட்டு அந்த இஸ்லாமியனிடம், நான் உன்னை மன்னித்துவிட்டேன், நீ இங்கிருந்து போய்விடு" என்றார். உடனே அவன் உயிர் பிழைத்ததே போதும் என்று தலைதெறிக்க ஓடினான்.

ஆனாலும் அவனுக்குள் ஒரு பயம். எங்கே அந்த குருமாணவர் தூர எறிந்த துப்பாக்கியை எடுத்து, தன்னைச் சுட்டுவிடுவாரோ என்ற சந்தேகத்தில் திரும்பிப் பார்த்தான். ஆனால் குருமாணவரோ மிகவும் சாந்தமாக மலையிலிருந்து கீழே இறங்கிக்கொண்டிருந்தார். உடனே அவன் குருமாணவரிடம் ஓடிச்சென்று, அவருடைய காலில் விழுந்து, என்னுடைய குற்றத்தை மன்னித்ததோடு மட்டுமல்லாமல், என்னைக் கொல்லாமல் விட்டீர்களே, அதற்காக நன்றி" என்று சொல்லி கண்ணீர் மல்க நின்றான். குருமாணவர் அவனை முழுமையாக மன்னித்துவிட்டதாகச் சொல்லி, அவனை அங்கிருந்து அனுப்பி வைத்தார்.

தன்னைக் கொல்ல நினைத்தவனையும் மன்னித்து அன்புசெய்த குருமாணவர் பகைவனை எப்படி அன்புசெய்யவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு உங்கள் பகைவரை அன்பு செய்யுங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காகச் ஜெபியுங்கள்" என்கிறார். வழக்கமாக ஒருவர் நமக்குத் தீங்குசெய்தால், அவரை பழிக்குப் பழி வாங்குவதான் நம்முடைய இயல்பாக இருக்கிறது. ஆனால் ஆண்டவர் இயேசு இதற்கு முற்றிலும் வேறான, சிறந்ததொரு கட்டளையைத் தருகின்றார். அதுதான் பகைவனை அன்பு செய்யவேண்டும் என்னும் கட்டளை.

இப்படி நாம் பகைவர்களை அன்புசெய்கிறபோது விண்ணகத் தந்தையின் மக்களாகின்றோம் என்றும் சொல்கிறார். நமது விண்ணகத் தந்தை தீமை செய்பவர்களுக்கும், தவறான வழியில் நடப்போருக்கும் தன்னுடைய அருள்மழையைப் பொழிகின்றார், அவர்கள்மீது கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நாமும் அவரைப் போன்று பகைவர்களை, வெறுப்பவர்களை, தீங்கு செய்பவர்களை மன்னித்து, அன்பு செய்யும்போது அவரது மக்களாகின்றோம் என்பது உண்மை.

நமக்கெதிராக தீமை செய்தவர்களை நாம் மன்னித்து, அன்புசெய்கிறபோது அதனால் அதிகமாகப் பயன்பெறுவது நாமாகத்தான் இருப்போம் என்கிறது இன்றைய மருத்துவம். ஏனென்றால் ஒருவரை மன்னிக்காது வாழும்போது நமக்குத் தேவையற்ற மன அழுத்தம், இரத்த கொதிப்பு ஏற்படுகிறது. என்றைக்கு நாம் அவர்களை மன்னித்து, அன்பு செய்யத் தொடங்குகிறோமோ அன்றைக்கு நாம் உடல், மனக் காயங்களிலிருந்து அனைத்திலிருந்தும் விடுதலை அடைகிறோம்.

ஆகவே, இயேசுவின் வழியைப் பின்பற்றும் நாம், அவரைப் போன்று பகைவர்களை மன்னித்து அன்பு செய்யக் கற்றுகொள்வோம், அவர்களுக்காக ஜெபிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

பகையை பாசத்தால் வெல்லுக

"உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக", "பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக" என்னும் (மத்தேயு 5:43) பழைய ஏற்பாட்டின் லேவியர்19:18ன் மேற்கோளாகும். ஆனால் மத்தேயு கையாளும் இம் மேற்கோளில் "பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக" என்னும் பகுதி காணப்படவில்லை. காணப்படாவிட்டாலும் இது அவர்களுடைய எழுதப்படாத சட்டமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்ததால், இயேசு இதை ஒரு சட்டமாகவே கருதியதாக மத்தேயு எழுதியிருக்க வேண்டும். இதில் தவறு ஏதும் இல்லை.இது அவர்களின் அன்றாட வாழ்கை முறையாக இருந்தது.எழுத்தில் இல்லை, அவ்வளவுதான். இப்பகுதியில் நம் எதிரிகளையும் எதிர்ப்புகளையும் எவ்வாறு எதிர்கொள்வது, நமக்குச் சாதகமாக்கிக்கொள்வது என்பதற்கான யுக்தியை இயேசு நமக்குச் சொல்கிறார். எதிரியை, அல்லது பகைவனைப் பகைவனாகக் காணமுற்பட்டால், அந்த பகைக்குள் நாமே மூழ்க நேரிடும்.இயேசு சொல்வதுபோல பகைவனையும் அன்பு செய்யவும் அவனுக்காகச் செபிக்கவும் பழகிக்கொண்டால், பகையை வெல்ல முடியும். பகைவனை வென்ற மகிழ்வில் வாழலாம்.எதிரியை எதிர்த்து அவனைப் பலசாலியாக்கிவிடுகிறோம்.

"உனது பட்டரையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. ஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன். ஏனென்றால் என்னை எதிரியாக, நீ நினைக்கிறாயே தவிற, உன்னை எதிரியாக நான் நினைக்கவில்லை" - பெரிய மனிதரின் வார்த்தைகள். இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்கிய வார்த்தைகள். நீங்களும் இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்; செபிக்கிறேன்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!