Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                            18   ஜூன்  2018  
                                                           பொதுக்காலம் 11ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நாபோத்து கல்லால் எறியுண்டு மடிந்தான்.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 21: 1-16

அந்நாள்களில் இஸ்ரயேலனாகிய நாபோத்துக்கு இஸ்ரயேலில், சமாரிய அரசன் ஆகாபின் அரண்மனை அருகில், ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது.

ஆகாபு நாபோத்திடம், "உன் திராட்சைத் தோட்டம் என் அரண்மனை அருகில் இருப்பதால், நான் அதைக் காய்கறித் தோட்டம் ஆக்கும்படி என்னிடம் கொடுத்துவிடு. அதற்குப் பதிலாய் அதைவிட நல்ல திராட்சைத் தோட்டத்தை உனக்குத் தருவேன். உனக்கு விருப்பமானால், அதன் விலையை வெள்ளியாகத் தருகிறேன்"என்றான்.

அதற்கு நாபோத்து ஆகாபிடம், "என் மூதாதையரின் உரிமைச் சொத்தை நான் உமக்குக் கொடாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக!"என்றான். "என் மூதாதையரின் உரிமைச் சொத்தை உமக்குக் கொடுக்க மாட்டேன்" என்று இஸ்ரியேலனாகிய நாபோத்து தன்னிடம் சொன்ன வார்த்தைகளை முன்னிட்டு, ஆகாபு ஆத்திரத்துடனும் கோபத்துடனும் தன் அரண்மனைக்கு வந்தான்; முகத்தைத் திருப்பிக் கொண்டு தன் கட்டிலில் படுத்துக்கிடந்தான்; உணவருந்த மறுத்துவிட்டான்.

அப்போது அவனுடைய மனைவி ஈசபேல் அவனிடம் வந்து, "நீர் ஏன் மனம் சோர்ந்திருக்கிறீர்? ஏன் உணவருந்தவில்லை?"என்று அவனைக் கேட்டாள். அதற்கு அவன் அவளிடம், "நான் இஸ்ரியேலனாகிய நாபோத்திடம் பேசினேன். "உன் திராட்சைத் தோட்டத்தை அதற்கான வெள்ளிக்கு எனக்குக் கொடுத்துவிடு. உனக்கு விருப்பமானால், அதற்குப் பதிலாக வேறு திராட்சைத் தோட்டத்தைத் தருவேன்" என்றேன். அதற்கு அவன் "என் திராட்சைத் தோட்டத்தை உமக்குத் தர மாட்டேன்" என்று சொல்லிவிட்டான்" என்றான்.

அப்போது அவன் மனைவி ஈசபேல் அவனை நோக்கி, "இஸ்ரயேலின் அரசராகிய நீர் இப்படியா நடந்துகொள்வது? எழுந்திருந்து உணவருந்தி மனமகிழ்வாய் இரும். இஸ்ரியேலனாகிய நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை நானே உம்மிடம் ஒப்படைக்கிறேன்"என்றாள்.

எனவே அவள் ஆகாபின் பெயரால் மடல்கள் எழுதி, அவற்றில் அவனது முத்திரையைப் பொறித்து, அம்மடல்களை நாபோத்துடன் நகரில் குடியிருந்த பெரியோருக்கும் உயர்குடி மக்களுக்கும் அனுப்பினாள். அம்மடல்களில் அவள், "நீங்கள் ஒரு நோன்பு அறிவித்து நாபோத்தை மக்கள் முன்னிலையில் அமரச் செய்யுங்கள். அவனுக்கு எதிராய் இழி மனிதர் இருவரை ஏவிவிட்டு, "நீ கடவுளையும் அரசரையும் பழித்துரைத்தாய்" என்று அவன் மீது குற்றம் சாட்டச் செய்யுங்கள். பின்னர் அவனை வெளியே கொண்டு போய்க் கல்லால் எறிந்து கொன்றுபோடுங்கள்"என்று எழுதியிருந்தாள்.

நாபோத்துடன் அந்நகரில் குடியிருந்த பெரியோரும் உயர்குடி மக்களும் ஈசபேல் தமக்கு அனுப்பிய மடல்களில் எழுதி இருந்தவாறே செய்தனர். அவர்கள் ஒரு நோன்பு அறிவித்து, நாபோத்தை மக்கள் முன்னிலையில் அமர்த்தினர்.

அப்பொழுது அந்த இழி மனிதர் இருவரும் வந்து நாபோத்துக்கு எதிரே உட்கார்ந்தனர். அந்த இழி மனிதர் மக்களைப் பார்த்து, "நாபோத்து கடவுளையும் அரசரையும் பழித்துரைத்தான்"என்று அவன் மீது குற்றம் சாட்டினர்.

எனவே, அவர்கள் அவனை நகருக்கு வெளியே கொண்டு போய்க் கல்லால் எறிந்து கொன்றனர்.

பிறகு அவர்கள், "நாபோத்து கல்லால் எறியுண்டு மடிந்தான்"என்று ஈசபேலுக்குச் செய்தி அனுப்பினர்.

நாபோத்து கல்லால் எறியுண்டு மடிந்ததை ஈசபேல் கேட்டவுடன் அவள் ஆகாபை நோக்கி, "நீர் எழுந்து சென்று இஸ்ரியேலனாகிய நாபோத்து உமக்கு விற்க மறுத்த அதே திராட்சைத் தோட்டத்தைச் சொந்தமாக்கிக் கொள்ளும்; நாபோத்து உயிரோடில்லை; அவன் இறந்து போனான்"என்றாள். நாபோத்து இறந்து போனதை ஆகாபு கேட்டு, இஸ்ரியேலனாகிய நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை உடைமையாக்கிக் கொள்ளப் புறப்பட்டுப் போனான்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 5: 1-2a. 4-5a. 5b-6 (பல்லவி: 1b)
=================================================================================
 பல்லவி: ஆண்டவரே, என் பெருமூச்சைக் கவனித்தருளும்.

1 ஆண்டவரே, என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும்; என் பெருமூச்சைக் கவனித்தருளும். 2ய என் அரசரே, என் கடவுளே, என் கெஞ்சும் குரலை உற்றுக்கேளும். பல்லவி

4 ஏனெனில், நீர் பொல்லாங்கைப் பார்த்து மகிழும் இறைவன் இல்லை; உமது முன்னிலையில் தீமைக்கு இடமில்லை. 5ய ஆணவமிக்கோர் உமது கண்முன் நிற்கமாட்டார். பல்லவி

5b தீங்கிழைக்கும் அனைவரையும் நீர் வெறுக்கின்றீர். 6 பொய் பேசுவோரை நீர் அழித்திடுவீர்; கொலை வெறியரையும் வஞ்சகரையும் அருவருக்கின்றீர். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
திபா 119: 105
அல்லேலூயா, அல்லேலூயா! என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே! அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 38-42


அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "கண்ணுக்குக் கண்", "பல்லுக்குப் பல்" என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.

ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக்கொள்ள விட்டுவிடுங்கள். எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள். உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள்."

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.


சிந்தனை

தீமை செய்வோரை எதிர்க்க வேண்டாம்.

இதனால் கால விரயம் தான் மிஞ்சும். அதனோடு இவ்வுலக மக்கள் தீமை செய்வதில் வல்லவர்களாக இருப்பதனால் எதிர்ப்போரை அவர்களால் மிகவே சுலபமாக வென்றிட முடியும். இதனால் தீமையை எதிர்ப்போர் மன உளைச்சலுக்கு ஆளாவதோடு, விரக்தியும் அடைய அதிக வாய்ப்புண்டு.

எனவே தீமை செய்வோரை எதிர்க்க வேண்டாம். அவர்களோடு வீண்வாதங்களும் பயன் தராது.

நன்மை செய்வதில் கருத்தாய் இருந்தால் போதுமானது. அதுவே மனமாற்றங்களை ஏற்படுத்தும்.

சென்றவிடமெல்லாம் நன்மை செய்த இறைமகன் தீமையை எதிர்க்கவில்லை மாறாக நன்மைத்தனத்தால் மனமாற்றங்களை விளையச் செய்தார். காலத்தை நல்லது செய்வதில் கரைத்தார்.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
வலக்கன்னத்தில் அறைபவருக்கு இடக் கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்

ஒரு மாலைவேளையில் இறையடியார் ஒருவரும், அவருடைய சீடரும் கோவிலுக்குச் சென்றுவிட்டு, தங்களுடைய இருப்பிடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது இறையடியாரின் சீடரைப் பிடிக்காத முரடன் ஒருவன் அவரைக் கெட்ட வார்த்தையால் திட்டவும், அவதூறாகப் பேசவும் தொடங்கினான்.

தொடக்கத்தில் மிகவும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த சீடர், சிறுது நேரத்தில் அவரும் பதிலுக்கு அந்த முரடனைத் திட்டத்தொடங்கினார். அதுவரைக்கும் சீடரோடு இருந்த இறையடியார், அவரை விட்டு கொஞ்சதூரம் தள்ளிச் சென்றார்.

முரடனுடனான வாய்ச் சண்டையை முடித்துவிட்டு சீடர் இறையடியாரிடம் சென்றார். சீடருக்கு உள்ளுக்குள் கோபம். "ஒருவன் என்னை கெட்ட வார்த்தையால் வசைபாடிக் கொண்டிருக்கும்போது என் அருகே நிற்காமல், இப்படி விலகி வந்துவிட்டீர்களே, ஏன் இப்படிச் செய்தீர்கள்?"என்று அவரிடம் சண்டை பிடித்தார்.

அதற்கு இறையடியார் மிகவும் அமைந்த குரலில், "தொடக்கத்தில் அந்த முரடன் உன்னைத் திட்டும்போது, நீ அமைதியாக இருந்தாய் அல்லவா!, அப்போது பத்து வானதூதர்கள் உன்அருகே நின்றுகொண்டு உன் சார்பாக வாதாடிக்கொண்டிருந்தார்கள். எப்போது நீ பதிலுக்கு அவனைத் திட்டத் தொடங்கினாயோ, அப்போதே அந்த பத்து வானதூதர்களும் உன்னைவிட்டு விலகிச்சென்றார்கள். அதனால்தான் நானும் உன்னைவிட்டு விலகி வந்துவிட்டேன்"என்றார்.

பிறர் செய்யும் குற்றங்களைப் பொறுத்துக்கொள்ளும்போது கடவுள் நம் சார்பாக இருந்து செயலாற்றுகிறார் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு புதியதொரு கட்டளையைத் தருகின்றார். அதுதான் "வலக்கன்னத்தில் அறைபவருக்கு இடக்கன்னத்தையும் திருப்பி காட்டுவதாகும்". இயேசுவின் இப்படிப்பட்ட ஒரு போதனை அன்றைய காலத்தில் ஒரு மிகப்பெரிய புரட்சி, மாற்றம் என்றுகூடச் சொல்லலாம். ஏனென்றால் தொடக்க காலத்தில் நாடோடிகளாக மக்கள் வாழ்ந்தபோது ஒருவன் இன்னொரு இனத்தைச் சேர்ந்த ஒருவனை அடித்துவிட்டால், பதிலுக்கு அவன் அடித்தவனது இனம் முழுவதையும் அழித்துவிடக்கூடிய சூழல் ஏற்பட்டது. இதனால் அழிவு மிகப்பெரிய அளவில் இருந்தது.

இந்த நிலையில் ஹமுராபி என்ற மன்னன் (கி.மு 2500) "ஒருவன் இன்னொருவனது பல்லை உடைத்துவிட்டால், பதிலுக்கு அவன் அடித்தவனது பல்லைமட்டும் உடைத்துக்கொள்ளலாம், அதுக்கு மேல் ஒன்றும் செய்யக்கூடாது" என்ற புதிய சட்டத்தைக் கொண்டுவந்தான். இந்தச் சட்டமே மக்களது வாழ்வில் ஒரு மிகப்பெரிய மாற்றமாகக் கருதப்பட்டது. யூதர்கள் ஹமுராபியின் சட்டத்தை அப்படியே உள்வாங்கிக்கொண்டு, தங்களுடைய சமூக வாழ்வில் கடைபிடித்து வந்தார்கள் என்பது கூடுதல் செய்தி.

ஆனால் ஆண்டவர் இயேசுவோ இன்னும் ஒருபடி மேலே போய் "தீமை செய்வரை எதிர்க்க வேண்டாம், மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துகொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக்கொள்ள விட்டுவிடுங்கள்..." என்கிறார். இயேசு இப்படிச் சொல்வதில் பல நன்மைகள் இருக்கின்றன.

ஒருவன் நம்மை அடிக்கும்போது, பதிலுக்கு நாம் அவனை அடித்தால் அங்கே வன்முறை பெருகுமே ஒழிய, வன்முறை ஒருபோதும் குறையாது. மாறாக ஒருவன் நம்மை வலக்கன்னத்தில் அடிக்கும்போது பதிலுக்கு நாம் அவனுக்கு நமது இடக்கன்னத்தையும் திருப்பிக்காட்டினோம் என்றால், அடித்தவன் "இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதனையா அடித்தோம்" என்று தன்னுடைய தவறி உணர்ந்து, திருந்தி நடப்பதற்கான வாய்ப்பு ஏற்படுகின்றது, வன்முறை குறைய வாய்ப்பு இருக்கின்றது.

எனவே, தீமை செய்பவருக்கு எதிராக தீமை செய்யாமல், பொறுமையோடு இருக்கக் கற்றுக்கொள்வோம். ஆண்டவர் இயேசுவைப் போன்று பகைவர்களை மன்னிக்கவும், அவர்களை அன்புசெய்யவும் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
"உங்களை வலக்கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்"

அமெரிக்காவிற்கும் மியான்மாருக்கும் இடையே நடந்த போரின்போது பல அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் வெளிவந்தன. அப்படி வெளிவந்த புகைப்படங்களுள் ஒரு புகைப்படத்தில் சிறுமி ஒருத்தி உடல் முழுக்க தீப்பற்றி எரிந்துகொண்டிருக்க நிர்வாண கோலத்தில் ஓடிக்கொண்டிருப்பாள். அவளுக்குப் பின்னால் இன்னும் பலர் ஓடிவந்துகொண்டிருப்பார்கள். இந்தப் புகைப்படம் வெளிவந்த சமயங்களில் இது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இந்தப் புகைப்படத்தில் இடம்பெற்ற சிறுமியின் பெயர் பின்னாளில் ஃபான் கிம்பெக் எனத் தெரியவந்தது. அவள் ஆபத்திலிருந்து தப்பித்திருந்தாலும் உடல் முழுக்க தீக்காயங்களுடனே காணப்பட்டாள். செய்தி அறிந்த  பத்திரிக்கையாளர்கள் சிலர் அவளை அணுகிச் சென்று, "உடல் முழுக்க தீப்பற்றி எரிய ஓடிவந்த அந்தக் கொடிய அனுபவம் எப்படி இருந்தது? உங்களுக்கு இப்படிப்பட்ட தீமையை இழைத்த அந்தக் கயவர்களை என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?"என்று கேட்டார்கள். அதற்கு கிம்பெக் மிகவும் நிதானமாக, "அந்த அனுபவம் மிகக்கொடியது. ஆனாலும் எனக்கு அந்த கொடுமையைச் செய்த அந்த மனிதர்களை நான் மனதார மன்னித்து விட்டேன். இப்போது நான் அவர்கள்மீது எந்தவித வெறுப்பும் இல்லாமல் இருக்கிறேன்"என்றார்.

கிம்பெக் இவ்வாறு சொன்னதைக் கேட்டு, அவளிடத்தில் பேட்டி கேட்க வந்த பத்திரிக்கையாளர்கள் கண் கலங்கிப் போனார்கள். "தன்னை வெட்டுவோருக்கும் நிழல்தருமாம் மரம். அதுபோன்று தன் உடல் முழுவதும் கருகச் செய்த பாதகர்களை கிம்பெக் மனதார மன்னித்தது ஆச்சரியப்படக்கூடிய விசயம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு புதிய கட்டளை ஒன்றைத் தருகின்றார். அதுதான், "தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, (உங்களை) வலக்கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்"என்பதாகும். இயேசு கொடுக்கக்கூடிய இந்த கட்டளையானது உண்மையிலே ஒரு புரட்சிகரமான கட்டளை என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் பழங்காலத்தில் கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற சட்டம்தான் இருந்தது. கி.மு.2285 லிருந்து  கி.மு. 2242 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்துவந்த ஹமுராபி என்ற மன்னனால் இயற்றப்பட்ட இந்த சட்டமானது அந்த காலகட்டத்தில் மிக உயர்ந்த சட்டமாகக் கருதப்பட்டது. எவ்வாறெனில் இனக்குழுக்களாக வாழ்ந்து வந்த மக்கள், ஒருவன் செய்த தவற்றிற்காக ஒட்டுமொத்த இனத்தையே அழித்து நாசம் செய்தார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ஹமுராபி மன்னால் "ஒருவன் உன்னுடைய ஒரு கண்ணை சேதப்படுத்தினால், பதிலுக்கு அவனுடைய கண்ணை சேதப்படுத்தலாம், ஒருவன் உன்னுடைய ஒரு பல்லை உடைத்தால், பதிலுக்கு நீ அவனுடைய ஒரு பல்லை உடைக்கலாம்" என்பது மாதிரியான சட்டங்கள் இயற்றப்பட்டன. இதனால் பாதிப்பு குறைவாக இருந்தது.

ஹமுராபி மன்னன் இயற்றிய இந்த சட்டத்தை இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய வழக்கத்தில் கொண்டிருந்தார்கள். இதை அறிந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து " "கண்ணுக்குக் கண்", "பல்லுக்குப் பல்" என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்"என்று  சொல்லி அந்தப் புதிய கட்டளையைத் தருகிறார். இயேசு கொடுக்கின்ற இந்தக் கட்டளையை ஏன் புதிய, புரட்சிகரமான கட்டளை என்று சொல்கிறேன் என்றால், அடித்தவரை திருப்பி அடிக்கவேண்டும் என்றுதான் இயேசுவுக்கு முன்பாகவும் இப்போதும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில் ஒருவர் உங்களை வலக்கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள் என்கின்றார்.

எதிரே இருக்கின்ற ஒருவருடைய வலக்கன்னத்தில் அறைய வேண்டும் என்றால், நம்முடைய கையைத் திருப்பிக் கொண்டுதான் அடிக்கவேண்டும். கையைத் திரும்பி வைத்துக்கொண்டு அடிப்பது என்பது இழிவான செயல். அத்தகைய இழிவான செயலை ஒருவர் நமக்குச் செய்தாலும் அதனைப் பொறுத்துக்கொண்டு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டவேண்டும் என்பது இயேசுவின் போதனையாக இருக்கின்றது. இயேசு இப்படிச் சொல்வதற்குப் பின்னால் நிறைய அர்த்தங்கள் இருக்கின்றன என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

அடித்தவரை திருப்பி அடித்தால் வன்முறை மேலும் வலுக்கும். மாறாக வலக்கன்னத்தில் அறைந்தவருக்கு மறுகன்னத்தையும் காட்டுகின்றபோது அங்கே வன்முறை குறைவதற்கு வாய்ப்பிருக்கின்றது. மேலும் கன்னத்தில் அறைந்தவர் இவரையா நாம் அடைந்தோம் என்று தன்னுடைய குற்றத்தை உணர்ந்து திருந்தி நடப்பதற்கு வாய்ப்பிருக்கின்றது. அதனால்தான் இது புதிய மற்றும் புரட்சிகரமான போதனையாக இருக்கின்றது.

ஆகவே, நாம் நமக்குத் தீங்கு செய்வோருக்கு பதிலுக்குத் தீங்கு செய்யாமல், மன்னித்து நன்மை செய்வோம். இயேசுவை முன்மாதிரியாகக் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!