Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                            16   ஜூன்  2018  
                                                           பொதுக்காலம் 10ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
எலிசா புறப்பட்டுப் போய் எலியாவுக்குப் பணிவிடை செய்தார்.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 19-21

அந்நாள்களில் எலியா அங்கிருந்து சென்று, சாபாற்றின் மகன் எலிசாவைக் கண்டார். அப்பொழுது அவர் ஏர் பூட்டி உழுதுகொண்டிருந்தார். அவருக்கு முன்னே பதினோர் ஏர்கள் இருந்தன. பன்னிரண்டாம் ஏரைத் தாமே ஓட்டிக் கொண்டிருந்தார்.

எலியா அவரிடம் சென்று, தம் மேலாடையை அவர்மீது தூக்கிப் போட்டார். எலிசா அவரைக் கடந்து செல்கையில் ஏர் மாடுகளை விட்டுவிட்டு எலியாவிடம் ஓடிவந்து, "நான் என் தாய் தந்தையிடம் விடைபெற்று வர அனுமதி தாரும். அதன் பின் உம்மைப் பின்செல்வேன்" என்றார்.

அதற்கு அவர், "சென்று வா, உனக்கு நான் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டேன்!" என்றார்.

எலிசா எலியாவை விட்டுத் திரும்பி வந்து ஏர் மாடுகளைப் பிடித்து, அடித்துத் தாம் உழுத கலப்பைக்கு நெருப்பு மூட்டி, அம்மாட்டு இறைச்சியைச் சமைத்து, மக்களுக்குப் பரிமாற, அவர்களும் அதை உண்டனர். பின்பு அவர் புறப்பட்டுப் போய் எலியாவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்யலானார்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 16: 1-2a,5. 7-8. 9-10 (பல்லவி: 5a)
=================================================================================
 பல்லவி: ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து.

1 இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன். 2ய நான் ஆண்டவரிடம் "நீரே என் தலைவர்" என்று சொன்னேன். 5 ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. பல்லவி

7 எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது. 8 ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப் பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். பல்லவி

9 என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். 10 ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
திபா 119: 36a,29b

அல்லேலூயா, அல்லேலூயா! உம் ஒழுங்குமுறைகளில் என் இதயம் நாட்டங்கொள்ளச் செய்யும்; உமது திருச்சட்டத்தை எனக்குக் கற்றுத்தாரும். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஆணையிடவே வேண்டாம்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 33-37

அக்காலத்தில் இயேசு கூறியது: "பொய்யாணை இடாதீர். ஆணையிட்டு நேர்ந்து கொண்டதை ஆண்டவருக்குச் செலுத்துவீர்" என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனென்றால் அது கடவுளின் அரியணை. மண்ணுலகின் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது அவரின் கால்மணை. எருசலேம் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது பேரரசரின் நகரம். உங்கள் தலைமுடியின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனெனில் உங்கள் தலைமுடி ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ உங்களால் இயலாது.

ஆகவே நீங்கள் பேசும் போது "ஆம்" என்றால் "ஆம்" எனவும் "இல்லை" என்றால் "இல்லை" எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது."

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
ஆணையிட வேண்டாம்!

ஒரு சமயம் சபர்மதி ஆசிரமத்திற்கு ஒரு சிறுமி சிகிச்சை பெற வந்தாள். அவளிடம் ஆசிரமத்தில் இருந்த ஒரு தொண்டர் விளையாட்டாக எலுமிச்சை பழம் ஒன்றை சபர்மதி ஆற்றில் வீசுவது போல் போக்குக் காட்டிவிட்டு பையில் போட்டுக்கொண்டார். அந்தச் சிறுமிக்கு சந்தேகம் வந்தது. உடனே அவள் அந்தத் தொண்டரிடம், "நீங்கள் எலுமிச்சம் பழத்தை ஆற்றில் தூக்கிப் போட்டீர்களா? இல்லையா?" என்று என்றாள். அந்தத் தொண்டரோ, "நான் வணங்கும் இறைவன் மேல் ஆணை. எலுமிச்சம் பழத்தை ஆற்றில் தூக்கிப் போட்டுவிட்டேன்" என்று மிக உறுதியாகச் சொன்னார்.

அந்தத் தொண்டரின் வார்த்தைகளை நம்பி, சிறுமி ஆற்றில் இறங்க எத்தனித்தாள். அப்போது அந்தத் தொண்டர், தன்னுடைய பையிலிருந்து எலுமிச்சம் பழத்தை எடுத்துக் காட்டினார். இதனால் ஏமாற்றம் அடைந்த அந்தச் சிறுமி, "என்னிடம் பொய் சொல்கிறீர்களா? இருங்கள் உங்களை காந்தியடிகளிடம் சொல்லித் தருகிறேன்" என்று சொல்லி, காந்தியிடம் புகார் அளித்தாள்.

பிரார்த்தனைக் கூட்டத்திற்கு பிறகு அந்தத் தொண்டரை அழைத்த காந்தியடிகள், "ஏன் இவ்வாறு செய்தீர்கள்?" என்று கேட்டார். அவரோ, "விளையாட்டுக்காகச் செய்தேன்" என்றார். உடனே காந்தியடிகள் அவரிடம்,"விளையாட்டுக்காகக் குழந்தையிடம் பொய் சொல்கிறீர்கள். பொய் சொல்லும் விளையாட்டை குழந்தை ஆரம்பித்து வாழ்க்கை முழுவதும் அந்த விளையாட்டில் ஈடுபடும். எனவே விளையாட்டுக்குக் கூட பொய் சொல்லக்கூடாது என்று குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பதே பெரியவர்களின் கடமை" என்று மிகவும் கண்டிப்பாய் எடுத்துச் சொன்னார்.

ஆசிரமத்திற்கு வந்த சிறுமியிடம் பொய்யும் தொடர்ந்து பொய்யாணை இடவும் செய்த தொண்டரை காந்தியடிகள் கண்டித்தது மிகவும் பாராட்டுக்குரியது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, ஆண்டவர் பெயரால் ஆணையிடுவதை கடுமையாகக் கண்டிக்கின்றார். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஆணையிடக் கூடாது என்று நியதி இருந்தாலும், ஒருவேளை ஆணையிட்டால் அதனை நிறைவேற்றவேண்டும் என்ற நியதியும் இருந்தது. (இச 5:11). இது இறைவனை இழிவுபடுத்துவது போன்று இருந்தது. ஆனால் ஆண்டவர் இயேசுவோ ஒருபடி மேலே சென்று. ஆணையிடவே கூடாது என்று சொல்கின்றார்.

எதற்காக ஆணையிடக் கூடாது என்ற விளக்கத்தையும் ஆண்டவர் இயேசு நற்செய்தியில் கூறுகின்றார், "ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது கடவுளின் அரியணை. மண்ணுலகின் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது அவரின் கால்மனை. எருசலேம் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது பேரசரின் நகரம். உங்கள் தலைமுடியின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனெனில் உங்கள் தலைமுடி ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ முடியாது". இப்படி ஒரு சூழ்நிலை இருக்கும்போது அதாவது நமக்கு எதன்மீது அதிகாரம் இல்லாதபோது அவற்றின் மீது ஆணையிடுவது, உண்மையில் அவற்றின்மீது அதிகாரம் கொண்டிருக்கின்ற எல்லாம் வல்ல ஆண்டவரை இழிவுபடுத்துவதற்குச் சமமாக இருக்கின்றது. எனவேதான் இயேசு ஆணையிட வேண்டாம் என்று சொல்கின்றார்.

ஆணையிடுவதில் உள்ள இன்னொரு சிக்கல் என்னவென்றால், ஆணையிடுகின்ற யாரும் நம்பத் தகுந்தவர்களாக இருக்க மாட்டார்கள் என்பதுதான். ஆணையிடுகின்ற ஒருவரை நீங்கள் வேண்டுமானால் கவனித்துப் பாருங்கள். அவர் மக்களுடைய நன்மதிப்பையோ நம்பிக்கைக்குரியவராக இல்லாது இருப்பார். உண்மைக்கு கட்டுப்பட்டு நடப்பவர் ஒருபோதும் ஆணையிட மாட்டார். ஏனென்றால், அவர்மீது மற்றவருக்கு நம்பிக்கை இருக்கும். இதையெல்லாம் உணர்ந்ததால்தான் என்னவோ ஆண்டவர் இயேசு ஆணையிட வேண்டாம் என்று சொல்கின்றார்.

இப்படிச் சொல்லிவிட்டு இயேசு தொடர்ந்து சொல்கின்றார், "ஆகவே நீங்கள் பேசும்போது ஆம் என்றால் ஆம் எனவும் இல்லை என்றால் இல்லை எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடமிருந்து வருகின்றது" என்று. ஆம், இறைவனுக்கு தனக்கும் உண்மையாக இருக்கும் யாரும் "வழவழா கொழகொழா" பேச்சுக்கு இடம் கொடுக்கமாட்டார்கள். அவர்கள் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்றுதான் பேசுவார்கள். கடவுளுக்கும் தனக்கும் உண்மையில்லாமல் இருப்பவர்கள்தான் வழவழா கொழகொழா பேச்சுக்கு இடம் கொடுப்பார்கள். அவர்கள் இறைவன்மீதும் எல்லாவற்றின் மீதும் ஆணையிட்டுக் கொண்டிருப்பார்கள். இந்த இருவகையினரில் நாம் எந்த வகையினர் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பல நேரங்களில் நாம் நமக்கும் இறைவனுக்கும் உண்மையில்லாமல் போலியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்நிலை மாறி, எப்போதும் உண்மையுள்ளவர்களாக இருக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.

ஆகவே, எப்போதும் உண்மையுள்ளவர்களாக இருப்போம், ஆணையிடுவதைத் தவிர்ப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

''இயேசு, 'ஆணையிடவே வேண்டாம்...நீங்கள் பேசும்போது 'ஆம்' என்றால் 'ஆம்' எனவும்
'இல்லை' என்றால் 'இல்லை' எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எனதுவும்
தீயோனிடமிருந்து வருகிறது' என்றார்'' (மத்தேயு 5:34,37)

-- பழைய ஏற்பாட்டு நெறியைப் பல விதங்களில் மாற்றிய இயேசு கடவுளின் பெயரால் ஆணையிடுவதையும் நேர்ந்துகொள்வதையும் விமர்சிக்கின்றார். தாம் கூறுவது உண்மை என்பதை உறுதி செய்வதற்கு மனிதர் கடவுளின் பெயரால் ஆணையிடுகிறார்கள். அதுபோல, கடவுளுக்கென்று நேர்ச்சையாகப் பொருள்களை அளிப்பதும், சில நற்செயல்கள் செய்ய கடவுளுக்கு வாக்களிப்பதும் வழக்கமாக உள்ளது. பொய்யாணை இடுவது தவறு என்னும் போதனை பழைய ஏற்பாட்டில் உண்டு (காண்க: லேவி 19:12; விப 20:16; இச 5:20). ஆனால் இயேசு கடவுளின் பெயரால் ஆணையிடுவதை நாம் எப்போதுமே தவிர்க்க வேண்டும் எனக் கூறுவது தெரிகிறது. மனிதர் ஒருவர் ஒருவரோடு உறவாடும்போது உண்மையின் அடிப்படையில் அந்தப் பரிமாற்றம் நிகழ வேண்டும். எனவே அவர்கள் கூறுவது ஆம் என்றால் ஆம் எனவும் இல்லை என்றால் இல்லை எனவும் இருக்க வேண்டுமே ஒழிய உள்ளொன்று வைத்துப் புறமொன்று கூறுவதாக இருத்தல் ஆகாது என இயேசு நமக்குக் கற்பிக்கிறார்.
-- எனவே, நாம் உண்மை பேசும்போது அதை உறுதிசெய்ய நாம் கடவுளைச் சாட்சிக்கு அழைக்க வேண்டிய தேவை எழாது. நம் விருப்பம்போல கடவுளைப் பயன்படுத்த நினைப்பது தவறு. அதுபோலவே நம் தலைமீதோ, குடும்பத்தவர்மீதோ ஆணையிட்டுச் சொல்ல வேண்டிய தேவை வராது. இதை இயேசு நமக்குப் போதிக்கிறார். மேலும் நம் தலையிலிருக்கின்ற முடியின் நிறத்தைக் கூட மாற்ற நம்மால் இயலாதபோது நாம் கடவுளைச் சாட்சிக்கு அழைப்பது நகைப்புக்குரியது என இயேசு உணர்த்துகிறார் (மத் 5:36). கடவுளுக்கு நாம் நேர்ச்சையாக அளிப்பதை உண்மையாகவே நம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து, நேர்மையான மனத்தோடு அளிக்க வேண்டும். நாம் கொடுக்கும் வாக்கைக் காப்பாற்றுவதும் கடமை ஆகும். ஆனால், நேர்ச்சை அளிப்பதுகூட கவனக் குறைவாகச் செய்யப்படுவது தவறாகும். கடவுளை நம் விருப்பத்திற்கு ஏற்ப நாம் ஆட்டிப் படைக்கலாம் என நினைப்பது தவறு. கடவுள் முன்னிலையிலும் சரி, அவருடைய சாயலாகப் படைக்கப்பட்ட மனிதர் முன்னிலையிலும் சரி நம் வாக்கு உண்மையானதாக, நேர்மையானதாக இருக்க வேண்டும். எங்கே உண்மையும் நேர்மையும் இல்லையோ அங்கே கடவுளின் உடனிருப்பும் இல்லை. இவ்வாறு இயேசு, ''நேர்ச்சை செய்யும்போது உன் வாயால் சொல்வதைச் செயலில் காட்டு'' (காண்க: இச 23:23) என்னும் பழைய ஏற்பாட்டுக் கட்டளைக்கு வேரோட்டமான புதிய விளக்கம் அளிக்கிறார். மேலும், நாம் எப்போதும் பேச்சிலும் செயலிலும் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறார்,

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!