Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                            07   ஜூன்  2018  
                                                           பொதுக்காலம் 9ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நாம் இயேசுவோடு இறந்தோமானால், அவரோடு வாழ்வோம். 

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 8-15

அன்பிற்குரியவரே, தாவீதின் மரபில் வந்த இயேசு கிறிஸ்து இறந்து உயிர்பெற்று எழுந்தார் என்பதே என் நற்செய்தி. இதனை நினைவில் கொள். இந்நற்செய்திக்காகவே நான் குற்றம் செய்தவனைப் போலச் சிறையிடப்பட்டுத் துன்புறுகிறேன். ஆனால் கடவுளின் வார்த்தையைச் சிறைப்படுத்த முடியாது. தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் மீட்பையும் அதனோடு இணைந்த என்றுமுள்ள மாட்சியையும் கிறிஸ்து இயேசு வழியாக அடையுமாறு அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறேன். பின்வரும் கூற்று நம்பத் தகுந்தது: "நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்; அவரோடு நிலைத்திருந்தால், அவரோடு ஆட்சிசெய்வோம்; நாம் அவரை மறுதலித்தால் அவர் நம்மை மறுதலிப்பார். நாம் நம்பத்தகாதவரெனினும் அவர் நம்பத்தகுந்தவர். ஏனெனில் தம்மையே மறுதலிக்க அவரால் இயலாது." இவற்றை நீ அவர்களுக்கு நினைவுறுத்து. வெறும் சொற்களைப் பற்றிச் சண்டையிடுவது பயனற்றது; அது கேட்போரின் அழிவுக்கு ஏதுவாகும் எனக் கடவுள் முன்னிலையில் சான்று பகர்ந்திடு. நீ கடவுள் முன் ஏற்புடையோனாக நிற்க முழு முயற்சி செய்; உண்மையின் வார்த்தையை நேர்மையாய்ப் பகுத்துக் கூறும் பணியாளாகிய நீ வெட்கமுற வேண்டியதில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா: 25: 4-5. 8-9. 10,14
=================================================================================
 உம் பாதைகளை ஆண்டவரே, நான் அறியச் செய்தருளும். 

ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச் செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். 5யb உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். பல்லவி 

8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். 9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். பல்லவி 

10 ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு, அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும். 14 ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போர்க்கே உரித்தாகும்; அவர் அவர்களுக்குத் தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார். பல்லவி 

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
திபா 119: 34
அல்லேலூயா, அல்லேலூயா!
உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்கு மெய்யுணர்வு தாரும். அதை நான் முழு உள்ளத்தோடு கடைப் பிடிப்பேன். அல்லேலூயா!
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
'நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர்'

தூயமாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 28-34

அக்காலத்தில் மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு சதுசேயர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, "அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?" என்று கேட்டார். அதற்கு இயேசு, "இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக" என்பது முதன்மையான கட்டளை. "உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக" என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை" என்றார். அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், "நன்று போதகரே, "கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை" என்று நீர் கூறியது உண்மையே. அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்பு கொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்துவதும் எரிபலிகளையும் வேறு பலிகளையும் விட மேலானது" என்று கூறினார். அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், "நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை" என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?

கிறிஸ்தவ சிறுமி ஒருத்தி இருந்தாள். அவளுக்கு கோழிக் குஞ்சுகள் என்றால் அவ்வளவு இஷ்டம். எனவே அவள் கடைத்தெருவுக்குச் சென்று, தனது சேமிப்புப் பணத்திலிருந்து இரண்டு கோழிக் குஞ்சுகள் வாங்கி, அவற்றை ஆசை ஆசையாய் வளர்த்து வந்தாள். அவ்விரு கோழிக் குஞ்சுகளும் அவள்மீது பிரியமாய் இருந்தன, அவள் வெளியே எங்கெல்லாம் சென்றாளோ, அங்கெல்லாம் அவை அவள் பின்னாலேயே சென்றன.

ஒரு சமயம் அச்சிறுமி வளர்த்து வந்த கோழிக் குஞ்சுகள் இரண்டும் எதிர் வீட்டுக்காரனுடைய வீட்டுக்கு முன்பாக இருந்த தோட்டத்தில் போய் மேய்ந்து கொண்டிருந்தன. அவனோ ஒரு முன்கோபி. எனவே அவன் தன்வீட்டுத் தோட்டத்தில் எப்படி கோழிக் குஞ்சுகள் வந்து மேய்வது என்று, அந்த இரு கோழிக் குஞ்சுகளையும் பிடித்து, அவற்றினுடைய கழுத்தைத் திருகி தெருவில் எறிந்துவிட்டான்.

பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டிற்கு வந்த சிறுமி, தான் ஆசை ஆசையாய் வளர்ந்து வந்த கோழிக் குஞ்சுகள் இரண்டும் கழுத்து நெரிக்கப்பட்டு தெருவில் கிடப்பதைக் கண்டு பதறிப் போனாள். யார் இந்த பாதகச் செயலைச் செய்தார் என்று அவள் அறிந்தபோது இன்னும் அவள் வேதனைப் பட்டாள். பின்னர் தனது அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு, கழுத்து நெரிக்கப்பட்டுக் கிடந்த இரு கோழிக் குஞ்சுகளையும் எடுத்துக்கொண்டு போய் தன்னுடைய தாயிடம் கொடுத்து, "அம்மா! இந்த இரண்டு கோழிக் குஞ்சுகளையும் வைத்து குழம்பு வையுங்கள்" என்றாள். அவளுடைய அம்மாவோ நிகழ்ந்தவற்றை எல்லாம் அறிந்து வேதனைப்பட்டாள். பிறகு தனது அன்பு மகள் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப, அவ்விரு கோழிக் குஞ்சுகளையும் எடுத்து குழம்பு வைத்துக் கொடுத்தாள்.

சிறுமி அதனைப் பெற்றுக்கொண்டு, எதிர்வீட்டில் இருந்த அந்த முன்கோபியிடம் கொடுத்து, "இந்தக் குழம்பை வைத்துக் சாப்படுங்கள். நீங்கள் கழுத்து நெரித்து கொன்றுபோட்ட இரண்டு கோழிக் குஞ்சுகளிலிருந்துதான் இந்தக் குழம்பு செய்யப்பட்டிருக்கின்றது, வாங்கிக்கொள்ளுங்கள்" என்றாள். சிறுமி இவ்வாறு சொன்னதைக் கேட்டு, எதிர்வீட்டுக்காரன் மிகவும் வருந்தினான். அதே நேரத்தில், தான், கோழிக் குஞ்சுகளின் கழுத்தை நெரித்துக் கொன்றுபோட்டபோதும் அந்தத் தவற்றினை மன்னித்து, கோழிக் குழம்பு கொண்டுவந்திருப்பதற்காக சிறுமியிடம் மன்னிப்புக் கேட்டான். சிறுமியும் அவனை மனதார மன்னித்து அன்பு செய்யத் தொடங்கினார்.

தான் ஆசை ஆசையாய் வளர்த்த கோழிக் குஞ்சுகளைக் கொன்றுபோட்ட ஒருவனை மனதார மன்னித்து அன்புச் செய்த அந்த சிறுமியின் பேரன்பு நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில், மறைநூல் அறிஞர் ஒருவர் இயேசுவிடம் வந்து, "அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?" என்று கேட்கின்றனர். மறைநூல் அறிஞருக்கு அனைத்திலும் முதன்மையான கட்டளை எது என்று தெரிந்திருக்கும். இருந்தாலும் இயேசுவை சோதித்துப் பார்ப்பதற்காக இப்படியொரு கேள்வியைக் கேட்கின்றனர். மறைநூல் அறிஞர் இயேசுவிடம் கேட்ட கேள்விக்கு அவர், " "இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகய் கடவுள் ஒருவே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனதோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக" என்பது முதன்மையான கட்டளை. "உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக" என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை" என்று பதிலளிக்கின்றார்.

இயேசு மறைநூல் அறிஞருக்குச் சொல்கின்ற பதிலிலிருந்து இறையன்பே முதன்மையான கட்டளை என்று புரிந்துகொள்ளலாம். எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை முழுமையாக அன்பு செய்யவேண்டும். அப்படி நாம் அன்பு செய்கின்றபோது இறைவனின் அன்புக்குப் பாத்திரமாவோம். ஆண்டவர் இயேசு முதனமையான கட்டளை என்று சொல்கின்றபோது இறைவனை அன்பு செய்யவேண்டும் என்பதோடு நிறுத்திவிடவில்லை. மாறாக உன்மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருபவர்மீதும் அன்பு கூர்வாயாக" என்கின்றார். மேலும் இக்கட்டளை முன்னர் சொல்லப்பட்ட கட்டளைக்கு இணையான கட்டளை என்பதையும் வலியுறுத்திக் கூறுகின்றார்.

ஆம், நாம் இறைவனை எந்தளவுக்கு முழுமையாக அன்பு செய்கின்றோமோ, அதே அளவுக்கு நமக்கு அடுத்திருப்பவரையும் அன்பு செய்யவேண்டும். அப்போதுதான் நம்முடைய அன்பு முழுமை பெறும்.

ஆகவே, இயேசு நமக்குச் சொல்வது போல, இறைவனையும் நம்மோடு வாழக்கூடிய சகோதர சகோதரிகளையும் முழுமையாய் அன்பு செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள்

ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த சாமுவேல் ரூதர்போல்டு (Samuel Rutherfold) என்பவர் பக்தியான ஒரு கிறிஸ்தவர். திருச்சபையின் போதனைகளையும், சட்ட திட்டங்களையும் மிக நுணுக்கமாகக் கடைப்பிடிப்பவர். குறிப்பாக ஒவ்வொரு நாள் இரவிலும், இரவு உணவு உணவிற்கு முன்பாக குடும்பத்தோடு ஜெபிப்பதையும், இறைவார்த்தையை வாசித்து அதற்கு விளக்கம் தருவதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.

ஒருநாள் இரவு அவர் குடும்பத்தோடு ஜெபித்துக்கொண்டிருந்தபோது கதவு தட்டப்படும் சத்தம்கேட்டு விரைந்து சென்று அதைத் திறந்தார். அப்போது வெளியே ஒரு வழிப்போக்கன் நின்றுகொண்டிருப்பதைக் கண்டார். அவர் நெடுந்தூரம் பயணம் செய்ய இருப்பதாகும், நேரம் ஆகிவிட்டதால் வீட்டின் ஒரு மூலையில் தங்கிக்கொள்ள அனுமதி தரவேண்டும் என்றும் கெஞ்சி நின்றார். அதற்கு அவர் சரி என்று சொல்லி அவரை உள்ளே வரவழைத்தார். அவர் கிறிஸ்தவராக இருந்ததால், அந்த இரவு வழிபாட்டில் கலந்துகொண்டார்.

சாமுவேல் ரூதர்போல்த் ஜெபவழிபாட்டை முடித்துவிட்டு, இறைவார்த்தையை வாசித்து அதற்கு விளக்கம் தரத் தொடங்கினார். இடையிடையே அவர் தன்னுடைய குடும்பத்தாரிடம் கேள்வியும் கேட்டு, அதற்கு விளக்கமும் தந்தார். வழிபோக்கரின் முறை வந்தபோது, அவரிடம், "கடவுள் கொடுத்த கட்டளைகள் மொத்தம் எத்தனை?" என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், கடவுள் கொடுத்த கட்டளைகள் மொத்தம் பதினொன்று" என்று பதிலளித்தார்.

இப்படிப்பட்ட ஒரு பதிலை சற்றும் எதிர்பார்த்திராத சாமுவேல் ரூதர்போல்டு அவரிடம், "கடவுள் பத்துக்கட்டளைகள் தானே கொடுத்திருக்கிறார், பிறகு எப்படி பதினோரு கட்டளைகள் வரும்?" என்றார். அதற்கு அவர், "கடவுள் பத்துக் கட்டளைகள் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், ஒருவர் மற்றவரை அன்புசெய்யுங்கள்" என்ற இன்னொரு கட்டளையும் கொடுத்திருக்கிறார், அதனால்தான் கடவுள் கொடுத்த கட்டளைகள் மொத்தம் பதினொன்று என்று சொன்னேன்" என்றார்.

நற்செய்தி வாசகத்தில் மறைநூல் அறிஞருள் ஒருவர் ஆண்டவர் இயேசுவிடம், அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?" என்று கேட்கின்றார். மறைநூல் அறிஞராக இருந்த அவருக்கு, இந்தக் கேள்விக்கான பதில் தெரிந்திருந்தாலும், இயேசுவை சிக்கலில் மாட்டிவிடவேண்டும் என்ற உள்நோக்கத்தோடு அவர் இப்படிக் கேட்கிட்றார். அதற்கு ஆண்டவர் இயேசு, "கடவுளாகிய ஆண்டவரை முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும், முழு ஆற்றலோடும் அன்புகூர்வாயாக என்பது முதன்மையான கட்டளை. "உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக" என்பது இரண்டாவது கட்டளை". இதைவிட மேலான கட்டளை வேறெதுவும் இல்லை" என்று அவருக்கு மிகத் தெளிவாகப் பதிலளிக்கிறார்.

இறையன்பும், பிறரன்பும்தான் அனைத்துக் கட்டளைகளிலும் சிறந்த கட்டளைகளாக இருக்கின்றன என்பதுதான் இயேசுவின் அழுத்தம் திருத்தமான பதிலாக இருக்கின்றது. இன்றைக்கு நாம் கடவுளை முழுமையாக அன்பு செய்கிறோமா?, நம்மோடு வாழக்கூடிய சக மனிதர்களை முழுமையாய் அன்பு செய்கிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பலநேரங்களில் கடவுளை அன்பு செய்கின்ற அளவுக்கு நம்மோடு வாழக்கூடிய சக மனிதர்களை நாம் அன்புசெய்வதில்லை. ஆலய வழிப்பாடுகளிலும், பல்வேறு பக்தி முயற்சிகளிலும் ஈடுபட்டு, கடவுள்மீது நமக்கிருக்கும் அன்பை வெளிப்படுத்தும் நாம், நம்மோடு வாழக்கூடிய சக மனிதர்களிடத்தில் நாம் அன்பைக்காட்ட முன்வருவதில்லை என்பதுதான் மிகப்பெரிய முரண்பாடாக இருக்கின்றது.
யோவான் எழுதிய முதல் திருமுகம் 4: 20 ல் வாசிக்கின்றோம், "கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக்கொண்டு, தம் சகோதரர், சகோதரிகளை வெறுப்பர் பொய்யர். தம் கண்முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது" என்று அவர் கூறுவார்.

ஆகவே, இறையன்பும், பிறரன்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என உணர்ந்து, நம்மோடு வாழும் சக மனிதர்களை அன்புசெய்வோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!