Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                            06   ஜூன்  2018  
                                                           பொதுக்காலம் 9ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
உம்மீது என் கைகளை விரித்ததால், உமக்குள் வந்துள்ள கடவுளின் வரத்தைப் புத்துயிர்பெறச் செய்யும். 

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-3; 6-12 

என் அன்பார்ந்த பிள்ளை திமொத்தேயுவுக்கு, கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசு அருளும் வாழ்வு பற்றிய வாக்குறுதிக்கு ஏற்ப அவருடைய திருத்தூதனான பவுல் எழுதுவது: தந்தையாம் கடவுளிடமிருந்தும் நம் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் அருளும் இரக்கமும் அமைதியும் உரித்தாகுக! 
என் முன்னோரைப் போன்று தூய்மையான மனச்சான்றுடன் கடவுளுக்குப் பணியாற்றும் நான் அவருக்கு நன்றி கூறுகிறேன். இரவும் பகலும் இடைவிடாமல் என் மன்றாட்டுகளில் உன்னை நினைவுகூருகின்றேன். உன் மீது என் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருள்கொடையினைத் தூண்டி எழுப்புமாறு நினைவுறுத்துகிறேன். 
கடவுள் நமக்குக் கோழை உள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார். 

எனவே நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்தோ அவர் பொருட்டு நான் கைதியாக இருப்பதைக் குறித்தோ வெட்கமடையத் தேவை இல்லை; கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள். அவர் நம் செயல்களை முன்னிட்டு அல்ல, காலங்களுக்கு முந்திய தமது தீர்மானத்தின்படி, கிறிஸ்து இயேசு வழியாக நமக்கு அளிக்கப்பட்ட அருளின்படி நம்மை மீட்டுள்ளார்; நமக்குத் தூய அழைப்பு விடுத்துள்ளார். நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு உலகில் தோன்றியதன் மூலம் இப்போது அருள் வெளிப்பட்டுள்ளது. 

அவர் சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அந்த நற்செய்தியை அறிவிப்பவனாகவும் திருத்தூதனாகவும் போதகனாகவும் நான் ஏற்படுத்தப்பட்டுள்ளேன். இதன் பொருட்டே நான் இவ்வாறு துன்புற்று வருகிறேன்; எனினும் வெட்கமுறுவதில்லை. ஏனெனில், நான் யாரிடம் நம்பிக்கை கொண்டுள்ளேன் என அறிவேன். அவர் என்னிடம் ஒப்படைத்ததை இறுதிநாள்வரை காத்திட வல்லவர் என்கிற உறுதியான நம்பிக்கை எனக்கு உண்டு. 

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 123: 1-2a. 2bcd. (பல்லவி: 1)
=================================================================================
 பல்லவி: ஆண்டவரே! உம்மை நோக்கி என் கண்களை உயர்த்தியுள்ளேன். 

1 விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன். 2a பணியாளனின் கண்கள் தன் தலைவனின் கைதனை நோக்கி இருப்பதுபோல, என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பல்லவி
 
2b cd பணிப்பெண்ணின் கண்கள் தன் தலைவியின் கைதனை நோக்கியிருப்பதுபோல, எம் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எமக்கு இரங்கும்வரை, எம் கண்கள் உம்மையே நோக்கியிருக்கும். பல்லவி 

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 11: 25 

அல்லேலூயா, அல்லேலூயா! உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே; என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். அல்லேலூயா. 
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
அவர் வாழ்வோரின் கடவுள்; இறந்தோரின் கடவுள் அல்லர்.

தூயமாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 18-27 


அக்காலத்தில் உயிர்த்தெழுதல் இல்லை என்னும் கருத்துடைய சதுசேயர் இயேசுவை அணுகி, "போதகரே, ஒருவர் மகப்பேறின்றித் தம் மனைவியை விட்டுவிட்டு இறந்துபோனால், அவரைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு சகோதரருக்கு வழிமரபு உருவாக்கவேண்டும் என்று மோசே நமக்கு எழுதி வைத்துள்ளார். 

சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். இரண்டாமவர் அவரை மணந்து அவரும் மகப்பேறின்றி இறந்தார். மூன்றாமவருக்கும் அவ்வாறே நிகழ்ந்தது. ஏழு பேருக்கும் மகப்பேறு இல்லாமற்போயிற்று. அனைவருக்கும் கடைசியாக அப்பெண்ணும் இறந்தார். 
அவர்கள் உயிர்த்தெழும்போது, அவர் அவர்களுள் யாருக்கு மனைவியாக இருப்பார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே!" என்று கேட்டனர். 
அதற்கு இயேசு அவர்களிடம், "உங்களுக்கு மறைநூலும் தெரியாது, கடவுளின் வல்லமையும் தெரியாது. இதனால்தான் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள். இறந்து உயிர்த்தெழும்போது யாரும் திருமணம் செய்துகொள்வதில்லை. மாறாக, அவர்கள் விண்ணகத் தூதரைப்போல் இருப்பார்கள். இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசேயின் நூலில் முட்புதர் பற்றிய நிகழ்ச்சியில் இவ்வாறு வாசித்தது இல்லையா?

"ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே என்று கடவுள் அவரிடம் சொன்னாரே! அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். நீங்கள் தவறான கருத்துக் கொண்டிருக்கிறீர்கள்" என்று கூறினார். 


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"அவர் இறந்தோரின் கடவுள் அல்ல, வாழ்வோரின் கடவுள்"

சில ஆண்டுகளுக்கு முன்பாக ஜெர்மனியில் உள்ள ஹனோவர் பகுதியில் வயதான மூதாட்டி ஒருவர் இருந்தார். அவர் கிறிஸ்தவராக இருந்தும் இயேசுவின் உயிர்ப்பில் நம்பிக்கையற்று இருந்தார். அதைவிடவும் இறந்தபிறகு தான் எந்தவிதத்திலும் உயிர்த்தெழுந்துவிடக் கூடாது என்று உறுதியாக இருந்தார். எனவே அவர் சாவதற்கு முன்பாக இப்படி ஓர் உயிலைத் தயார் செய்தார்: "எனக்கு உயிர்ப்பின் மீது நம்பிக்கை கிடையாது. ஆகவே, எனது கல்லறையை பலமான பளிங்குக்கற்களால் கட்டி, அதன்மேல் இரும்புக் கம்பிகள் அமைத்து, அதன்மேல் பெரிய பாறாங்கல்லை வைத்துவிடுங்கள்".

அவர் உயிலை எழுதி முடித்த ஒருசில நாட்களிலே இறந்துபோனார். எனவே அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள், உயிலில் அவர் சொன்னதுபோன்றே அவருடைய உடலை அடக்கம் செய்து, அதன்மேல் கல்லறையை மிக உறுதியாகக் கட்டி எழுப்பினார்கள்.

நாட்கள் நகர்ந்தன. அந்தப் பெண்மணியினுடைய கல்லறை இருந்த பகுதிக்குப் பக்கத்தில் ஒரு மரம் இருந்தது. அந்த மரத்திலிருந்து விழுந்த ஒரு விதையானது, அப்படியே முளைத்து வளர்ந்து அந்த பெண்மணியினுடைய கல்லறையை அசைத்துப் பார்க்கத் தொடங்கியது. இன்றைக்கு அந்தக் கல்லறை உடைந்துபோய், அதில் ஒரு மரமானது உயர்தோங்கி வளர்ந்துள்ளது. யார் உயிர்ப்பிமீது நம்பிக்கையில்லாமல் இருந்தாரோ, அவருடைய கல்லறையிலயே ஒரு மரம் உயிர்த்து எழுந்தது ஆச்சரியப்படக்கூடிய ஒரு விசயமாக இருக்கின்றது.

நற்செய்தி வாசத்தில், உயிர்ப்பின்மீது நம்பிக்கை இல்லாத சதுசேயர்கள் சிலர் இயேசுவை எப்படியாவது சிக்கலில் மாட்டிவிட வேண்டும் என்பதற்காக ஒரு கேள்வியைக் கேட்கிறார்கள். அக்கேள்வியானது கனவிலும் நடைபெறாத, சாத்தியப்படாத, அறிவுக்கு ஒவ்வாத சம்பவங்களை மையமாக வைத்து இருக்கின்றது. சதுசேயர்கள் இப்படி சாத்தியப்படாத, அறிவுக்கு ஒவ்வாத சம்பவங்களை அடிப்படையாக வைத்துக் கேட்கக்கூடிய கேள்விக்கு, இயேசு அவர்கள் நம்பி ஏற்றுக்கொள்கின்ற (விவிலியத்தில் இருக்கின்ற முதல் ஐந்து நூல்கள்) பகுதியிலிருந்தே விடையளித்து அவர்களை வாயடைக்கச் செய்கின்றார்.

இயேசுவின் பணிவாழ்வில், அவரோடு அடிக்கடி பிரச்சனையில், வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் இருபிரிவினர். ஒருபிரிவினர் பரிசேயர்கள், இன்னொரு பிரிவினர்தான் இந்த சதுசேயர்கள். இவர்கள் யூதச் சமூகத்தில் வசதி வாய்ப்போடு இருந்தார்கள். இவர்கள் விவிலியத்தில் இருக்கின்ற முதல் ஐந்து நூல்களைத்தான் வேத நூல்களாக ஏற்றுக்கொண்டார்கள். உயிர்ப்பிலோ, வானதூதர்களிலோ இவர்களுக்கு நம்பிக்கை கிடையாது. இப்படிப்பட்டவர்கள்தான் ஆண்டவர் இயேசுவிடம் வந்து உயிர்ப்பு தொடர்பாக கேள்வியைக் கேட்கின்றார்.

சதுசேயர்கள் கேட்ட கேள்விக்கு இயேசு, அவர்கள் நம்பி ஏற்றுக்கொண்ட ஐநூல்களுள் ஒன்றான விடுதலைப் பயண நூலிலிருந்து அவர்களுக்கு விடையளிக்கின்றார் மேசேக்கு புட்புதரில் ஆண்டவராகிய கடவுள் தோன்றியதை உதாரணமாகச் சொல்லும் இயேசு, அங்கு கடவுள் தன்னை ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் என்று குறிப்பிடுவதை மேற்கோடிட்டுக் காட்டுகின்றார். இதன்மூலம் இயேசு சதுசேயரிடம், கடவுள் இறந்தோரின் கடவுள் அல்ல, வாழ்வோரின் கடவுள்" என்ற உண்மையை வெளிப்படுத்தி, அவர்கள் கொண்டிருக்கின்ற கருத்து தவறானது என்பதை எடுத்தியம்புகின்றார்.

இயேசு சதுசேயர்களுக்கு அளிக்கின்ற பதிலிலிருந்து நமக்கு மேலும் ஒருசில உண்மைகள் வெளிப்படுத்தப்படுகின்றன. அவற்றில் முதன்மையானது இறந்து உயிர்த்தெழும்போது யாரும் திருமணம் செய்து கொள்வதில்லை என்பதாகும். ஆம், இந்த மண்ணகத்தில் திருமணமானது நடைபெறுகின்றது. நாம் உயிர்த்தெழும்போது அப்படி எதுவும் நடைபெறாது என்பது உண்மை.

அடுத்ததாக இறந்து நாம் உயிர்த்தெழும்போது வானதூதர்களை போன்று இருப்போம் என்ற உண்மையும் நமக்குச் சொல்லப்படுகின்றது. திருப்பாடல் 8:5 ல் மனிதர்கள் யாவரும் வானதூதர்களை விட சுற்றுக் குறைந்தவர்களாகப் படைக்கப்பட்டிருக்கின்றோம் என்ற செய்தியை வாசித்து அறிவோம். ஆனால், இறந்து நாம் உயிர்த்தெழும்போது வானதூதர்கள் போன்று ஆவோம் என்பது சொல்லப்படுவது சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது. அப்படியானால் நம்முடைய நிலையானது உயரும் என்பது உறுதி.

ஆண்டவர் இயேசு விண்ணேற்றம் அடைவதற்கு முன்பாக தன்னுடைய சீடர்களைப் பார்த்துச் சொல்வார் "இதோ உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கின்றேன்" என்று. ஆம், இயேசு இறைவன் - என்றைக்கும் நம்மோடு உடனிருக்கின்றார், நம்மை எல்லாவிதத்திலும் ஆசிர்வதிக்கின்றார். ஆகவே, இப்படிப்பட்ட உயிருள்ள இறைவனை நம்பி ஏற்றுகொள்வதே நம்முடைய வாழ்வு வளம்பெறுவதற்கான வழியாக இருக்கின்றது.

ஆகவே, நம் இறைவன் உயிருள்ள இறைவன் என்று நம்புவோம். நம்புவதோடு மட்டுமல்லாமல், அவருக்கு ஏற்ற வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================





=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!