Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                            05   ஜூன்  2018  
                                                           பொதுக்காலம் 9ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

திருத்தூதர் பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 12-15a,17-18

அன்புக்குரியவர்களே, கடவுளின் நாளை எதிர்பார்த்து அவர் வருகையை விரைவுபடுத்த வேண்டும். அந்நாளில் வானங்கள் எரிந்தழிந்து பஞ்சபூதங்கள் வெந்துருகிப் போகும். அவர் வாக்களித்தபடியே நீதி குடிகொண்டிருக்கும். புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே, அன்பார்ந்தவர்களே, இவற்றை எதிர்பார்த்திருக்கும் உங்களை அவர் மாசுமறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய்க் காணும் வகையில் முழு முயற்சி செய்யுங்கள். நம் ஆண்டவரின் பொறுமையை மீட்பு எனக் கருதுங்கள்.

அன்பார்ந்தவர்களே, நீங்கள் இவற்றையெல்லாம் ஏற்கெனவே அறிந்திருக்கிறீர்கள். கட்டுப்பாடற்றவர்களின் தவறான வழிகளால் கவர்ந்திழுக்கப்பட்டு, உங்கள் உறுதி நிலையினின்று விழுந்துவிடாதபடி கவனமாயிருங்கள். நம் ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் அருளிலும் அறிவிலும் வளர்ச்சி அடையுங்கள். அவருக்கே இன்றும் என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 90: 2. 3-4. 10. 14,16 (பல்லவி: 1)
=================================================================================
 பல்லவி: என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.

2 மலைகள் தோன்றுமுன்பே, நிலத்தையும் உலகையும் நீர் உருவாக்கும் முன்பே, ஊழி, ஊழிக்காலமாய் உள்ள இறைவன் நீரே! பல்லவி

3 மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; `மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்" என்கின்றீர். 4 ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. பல்லவி

10 எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகளே; வலிமை மிகுந்தோர்க்கு எண்பது; அவற்றில் பெருமைக்கு உரியன துன்பமும் துயரமுமே! அவை விரைவில் கடந்துவிடுகின்றன, நாங்களும் பறந்து விடுகின்றோம். பல்லவி

14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம். 16 உம் அடியார்மீது உம் செயலும் அவர்தம் மைந்தர்மீது உமது மாட்சியும் விளங்கச் செய்யும். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
எபே 1: 17-18 

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சிமிகு தந்தையுமானவர் நம் அகக் கண்களுக்கு ஒளி தருவாராக. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 13-17

அக்காலத்தில் பரிசேயர் இயேசுவை அவருடைய பேச்சில் சிக்க வைக்க ஏரோதியர் சிலரை அவரிடம் அனுப்பி வைத்தனர். அவர்கள் அவரிடம் வந்து, "போதகரே, நீர் உண்மையுள்ளவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்பக் கற்பிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும். சீசருக்கு வரி செலுத்துவது முறையா, இல்லையா? நாங்கள் செலுத்தட்டுமா, வேண்டாமா?" என்று கேட்டார்கள். அவர் அவர்களுடைய வெளிவேடத்தைப் புரிந்துகொண்டு, "ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? என்னிடம் ஒரு தெனாரியம் கொண்டு வாருங்கள். நான் பார்க்க வேண்டும்" என்றார். அவர்கள் அதைக் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களிடம், "இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?" என்று கேட்டார். அவர்கள் அவரிடம், "சீசருடையவை" என்றார்கள். அதற்கு இயேசு அவர்களை நோக்கி, "சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்" என்றார். அவர்கள் அவரைக் குறித்து வியப்படைந்தார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.


சிந்தன


குழப்பமின்றி வாழ வழி காட்டுகின்றது.

இன்றைக்கு தெளிவில்லாமல் பலர் குழப்பிக் கொள்வதைப் பார்க்கின்றோம்.

இதை எடுத்து அங்கு கொடுப்பது அதை எடுத்து இஙிகு கொடுப்பது என்ற குழப்பான மனநிலை பெற்றவர்க்கு இறைவாக்கு தெளிவினை தருகின்றது.

அவரவருக்குரியதை அவரவருக்கு கொடுப்பது தான் நீதி.

இன்றைக்கு தங்களோடு உள்ள ஏழைகளுக்கு நான் ஏன் செய்ய வேண்டும் என குழப்பி, அவர்களால் என்ன கைம்மாறு செய்ய முடியும் என கேட்டு, மொத்தமாக கோயிலில் கொண்டு கொட்டுகிறார்கள். இதனால் தங்களது சமூக கடமையை நிறைவேற்றாது போகின்றார்கள். கோயிலின் சொத்து அளவுக்கு அதிகமாக அதிகமாக அங்கு அறமின்றிப் போகின்றது. அக்கிரமங்கள் நிறைகின்றது. எதுவுமே அளவுக்கு மிஞ்சும் போது அறம் நிலைப்பதில்லை என்பதுவே உண்மை.

மற்றும் சிலர் கோவிலுக்கு எதற்கு சாமிக்கு எதற்கு எனச் சொல்லி, ஏழைகளுக்கு செய்வது தான் தர்மம் எனச் சொல்லி, தங்களது ஆன்மீகத்தை மறப்பதும் உண்டு.

வெறுங்கையராய் ஆண்டவரை தேடச் செல்லாதே. சீராக் 35: 04

இரண்டையும் சீராக செய்ய தெரிந்தவரே வாழ்வில் வெற்றி பெற்றவர்களாவார்கள்.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்"

ஈசாப் கதை இது.

ஒரு நாள் ஒரு காட்டுப் பகுதியில் கழுதை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. கழுதையை கவனித்த ஓநாய் ஒன்று அதை அடித்துத் தின்னும் நோக்கத்துடன் அதன் மீது பாய்ந்தது. தனக்கு வந்த ஆபத்தைக் கண்டு பயந்தது கழுதை. ஓநாயை எதிர்த்து சண்டை போடுவது கஷ்டம். அதனால் மதிநுட்பத்தோடு நடந்துதான் நிலைமையைச் சமாளிக்க வேண்டும் என கழுதை தீர்மானித்தது.

ஓநாயின் பாய்ச்சலின் போது சற்று விலகிக்கொண்டு, "ஓநாயாரே, உம்முடைய வலிமையின் முன்னால் நான் எம்மாத்திரம். இன்று நான் உமக்கு இரையாகப் போவது உறுதி. இதை யாராலும் தடுக்க. முடியாது நானும் உமக்கு இரையாகத் தயாராக இருக்கிறேன். இருந்தாலும் அதற்கு முன்னால் நான் சொல்லக் கூடிய விஷயத்தைத் தயவுசெய்து கேட்கவேண்டும்" என வேண்டிக் கொண்டது. "நீ என்ன சொல்ல விரும்புகிறாய். சொல்வதை சீக்கிரம் சொல்". என உறுமியது ஓநாய். "ஓநாயாரே என் காலில் பெரிய முள் ஒன்று குத்தி விட்டது. முள்ளை எடுக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. காலில் முள் உள்ள நிலையில் நீ என்னை அடித்துச் சாப்பிட்டால் அந்த முள் உன் தொண்டையில் மாட்டிக் கொள்ளும். அது உமக்குக் கடுமையான வேதனையைத் தருவதுடன் உன் உயிரையும் வாங்கி விடும். அதற்கு தயவுகூர்ந்து முதலில் என் காலில் இருக்கும் முள்ளை எடுத்துவிடு. அதற்குப் பிறகு நீ என்னை அடித்துத் தின்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை," என கழுதை கூறிற்று.

ஏமாந்த ஓநாய் ஒத்துக் கொண்டது. பின்னர் கழுதை தனது பின்னங்கால்களைத் திருப்பிக் காண்பித்தது, ஓநாய் கழுதையின் பின்னங்கால்களில் முள் இருக்கிறதா என தேடும் வேலையில், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கழுதை தனது பின்னங் கால்களால் ஓநாயைப் பலமாக உதைத்தது. கழுதையின் உதை தாங்காமல் ஓநாய் துடிதுடித்து சரிந்தது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கழுதை வேகமாக ஓடி தப்பித்துக் கொண்டது.

சமயங்களில் நமக்கு வரும் பிரச்சனகளை மிகுந்த மதிநுட்பத்தோடு நடந்து எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்லும் இந்தக் கதை நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் பரிசேயர்கள் சிலர், இயேசுவை எப்படியாவது சிக்கலில் மாட்டிவிட வேண்டும் என்பதற்காக எரோதியரை அனுப்பி வைக்கின்றனர். அவர்கள் இயேசுவிடம் வந்து, "போதகரே, சீசருக்கு வரிசெலுத்துவது முறையா? இல்லையா?" என்றொரு கேள்வியைக் கேட்கின்றார்கள். எரோதியர் இயேசுவிடம் கேட்கின்ற கேள்வியானது மிகவும் சூழ்ச்சிகரமானது. ஏனென்றால், உரோமையர்களிடம் அடிமைகளாக இருந்த யூதர்கள், அவர்களுக்கு வரிசெலுத்துவதை அறவே வெறுத்தார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இயேசு, யூதர்கள் உரோமையர்களுக்கு வரிசெலுத்துவது முறையில்லை என்று சொன்னால், உரோமையர்களுடைய சினத்தை இயேசுவின்மீது திருப்பிவிடலாம் என்றும், அதே நேரத்தில் யூதர்கள் உரோமையர்களுக்கு வரிசெலுத்துவது முறைதான் என்று சொன்னால், யூதர்களை இயேசுவின் பக்கம் திருப்பி விடலாம் என்றும் மிகவும் தந்திரமாக இயேசுவிடத்தில் கேள்வியைக் கேட்கின்றார்கள்.

இயேசு அவர்களுடைய சூழ்ச்சியை உணர்ந்தவராய், தெனாரியம் ஒன்றைக் கேட்டு வாங்கி, "இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?" என்று கேட்கின்றார். அவர்களோ, "சீசருடையவை" என்று சொல்ல, இயேசு அவர்களிடம், "சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்" என்று மிக மதிநுட்பத்தோடு விடையளித்து அவர்களை வாயடைக்கச் செய்கின்றார்.

இயேசு எரோதியருக்குச் சொல்லக்கூடிய பதிலை நேரடியாகப் பார்த்தால், தெனாரியத்தில் சீசருடைய உருவமும் எழுத்தும் பொறிக்கப் பட்டிருப்பதால் அதனை சீசருக்குக் கொடுங்கள் என்று அவர் சொல்வது போன்று இருக்கும். ஆனால், சீசர் மட்டுமல்ல, உலகில் இருக்கின்ற அனைவர்மீதும் கடவுளுடைய உருவம் பொறிக்கப்பட்டிருக்கின்றது அல்லது ஒவ்வொருவரும் கடவுளின் உருவத்தையும் சாயலையும் தாங்கி இருக்கிறார்கள். ஆகவே, அனைவரும் கடவுளுக்குச் சொந்தமானவர்கள். உங்களை நீங்கள் கடவுளுக்குக் கொடுங்கள் என்பதாக இருக்கின்றது.

ஆம், நாம் ஒவ்வொருவரும் கடவுளுக்குச் சொந்தமானவர்களாக, கடவுளின் சாயலைத் தாங்கியவர்களாக இருக்கின்றபோது, அது எனக்கு, இது உனக்கு என்று சொந்தம் கொண்டாடுவதில் என்ன இருக்கின்றது.

ஆகவே, நாம் ஒவ்வொருவரும் கடவுளுக்குச் சொந்தமானவர்கள் என்ற உணர்வோடு அவருக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================





=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
"இயேசு ஏரோதியரை நோக்கி, "சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்" என்றார்" (மாற்கு 12:17)

சீசருக்கு வரிசெலுத்துவது முறையா, இல்லையா என்னும் கேள்வியை இயேசுவிடம் கேட்டவர்கள் அவரைப் "பேச்சில் சிக்கவைக்க" முயன்றனர். அவர்களுடைய உள்ளத்தில் நேர்மை இல்லை. ஆனால் இயேசு அவர்களுடைய வெளிவேடத்தைப் புரிந்துகொள்கிறார். அவர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலும் அளிக்கிறார். "சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுப்பதே முறை" என்று இயேசு கூறியதைப் புரிந்துகொள்வதில் ஒரு சிக்கல் உள்ளது. சிலர் "சீசர்" என்றால் இவ்வுலக ஆட்சியாளர்களையும் நாட்டுத் தலைவர்களையும் குறிக்கும் என்று பொருள்கொண்டு, இவ்வுலகு சார்ந்த காரியங்களுக்கும் கடவுள் சார்ந்த காரியங்களுக்கும் இடையே உறவு கிடையாது என்றும், அவற்றிற்கிடையே நிலவுகின்ற வேறுபாட்டை நாம் போக்க இயலாது என்றும் முடிவுசெய்கின்றனர். இவர்கள் உலகு சார்ந்த காரியங்களாக அரசியல், சமூக அமைப்பு, கலாச்சாரப் பாணிகள் போன்றவற்றைக் கருதுவர். இவற்றிற்கும் கடவுளுக்கும் தொடர்பு இல்லை எனவும், சமயக் கருத்துக்களின் அடிப்படையில் உலக அமைப்பை மாற்றியமைக்க முயல்வது முறையற்றது எனவும் வாதாடுவர். ஆனால் இயேசு இப்பொருளில் பேசவில்லை. அவர் "சீசருக்கு உரியது" எனக் குறிப்பிட்டது அவரிடம் காட்டப்பட்ட தெனாரியம் என்னும் வெள்ளி நாணயத்தை. அதில் சீசரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. யாருடைய உருவம் நாணயத்தில் உள்ளதோ அவரே அந்நாணயத்தை உருவாக்கியவர் என்னும் முறையில் அதற்கு உரிமையாளர் என இயேசு முடிவுசெய்கிறார். எனவே, சீசருக்கு வரிசெலுத்துவது சீசருக்கு உரியதைத் திருப்பிக் கொடுப்பதே ஆகும். இதைக் கூறியபின் இயேசு "கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்குக் கொடுங்கள்" என்றார்.

இங்கே இயேசு ஆழ்ந்ததோர் உண்மையை அறிவிக்கிறார். சீசரின் உருவம் இருந்தது நாணயத்தில்; ஆனால் கடவுளின் "உருவமும் சாயலும்" இருப்பது மனிதரில். ஏனென்றால் கடவுள் மனிதரைத் தம் சாயலிலும் உருவிலும் உருவாக்கினார்; அவர்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார் (காண்க: தொநூ 1:27). எனவே, மனிதர் கடவுளுக்குச் சொந்தமானவர்கள். அவர்கள் கடவுள் ஒருவருக்கே பணிந்து நடக்கக் கடமைப்பட்டவர்கள். இவ்வுலக அதிகாரம் மனிதரை அடிமைப்படுத்துவதும் அடக்கியாளுவதும் தவறு. இந்த உண்மையை இயேசு அழகாக எடுத்துரைத்தார். இன்று நாம் மனிதரில் கடவுளின் சாயலலைக் காண்பது அவர்களுடைய மாண்பை நாம் மதிப்பதில் அடங்கும். மனிதர் மனிதரை அடிமைகளாவோ தங்கள் சொத்தாகவோ கருதுவது முறையன்று. நாம் அனைவரும் கடவுளுக்கு உரியவர்கள் என்னும் முறையில் கடவுளையே நம் கதியாக ஏற்றிட வேண்டும். அப்போது பிறருடைய மாண்பினைப் போற்றி ஏற்றிட நாம் முன்வருவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!