Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                            04   ஜூன்  2018  
                                                           பொதுக்காலம் 9ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இறைப்பற்றுடன் வாழத் தேவையான எல்லாவற்றையும் நமக்கு அருளியுள்ளார்.

திருத்தூதர் பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-7

நம் கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவினால் விளைந்த ஏற்புடைமையின் அடிப்படையில் எங்களைப் போன்ற மதிப்புயர்ந்த நம்பிக்கையைப் பெற்றுள்ளோருக்கு, இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் திருத்தூதனுமான சீமோன் பேதுரு எழுதுவது: கடவுளையும் நமது ஆண்டவராகிய இயேசுவையும் நீங்கள் அறிவதன் வாயிலாக உங்களுக்கு அருளும் நலமும் பெருகுக! தம்முடைய மாட்சியாலும் ஆற்றலாலும் கடவுள் நம்மை அழைத்துள்ளார். அவரை அறிந்துகொள்வதன் மூலம் இறைப் பற்றுடன் வாழ்க்கை நடத்துவதற்குத் தேவையான எல்லாவற்றையும் அவர் தம் இறை வல்லமையால் நமக்கு அருளியுள்ளார். தீய நாட்டத்தால் சீரழிந்துள்ள உலகை விட்டு விலகியோடி இறைத் தன்மையில் பங்கு பெறுங்கள். இதற்கென்றே கடவுள் நமக்கு உயர் மதிப்புக்குரிய மேலான வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

ஆகையால் நீங்கள் உங்கள் நம்பிக்கையோடு நற்பண்பும், நற்பண்போடு அறிவும், அறிவோடு தன்னடக்கமும், தன்னடக்கத்தோடு மன உறுதியும், மன உறுதியோடு இறைப் பற்றும், இறைப் பற்றோடு சகோதர நேயமும், சகோதர நேயத்தோடு அன்பும் கொண்டு விளங்குமாறு முழு ஆர்வத்தோடு முயற்சி செய்யுங்கள்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 91: 1-2. 14-15ab. 15c-16 (பல்லவி: 2b)
=================================================================================
 பல்லவி: ஆண்டவரே, நீரே நான் நம்பியிருக்கும் இறைவன்.

1 உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர். 2 ஆண்டவரை நோக்கி, "நீரே என் புகலிடம்; என் அரண்; நான் நம்பியிருக்கும் இறைவன்' என்று உரைப்பார். பல்லவி

14 "அவர்கள் என்மீது அன்புகூர்ந்ததால், அவர்களை விடுவிப்பேன்; அவர்கள் என் பெயரை அறிந்துள்ளதால், அவர்களைப் பாதுகாப்பேன்; 15ab அவர்கள் என்னை நோக்கி மன்றாடும்போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன்; அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன். பல்லவி

15c அவர்களைத் தப்புவித்து அவர்களைப் பெருமைப்படுத்துவேன். 16 நீடிய ஆயுளால் அவர்களுக்கு நிறைவளிப்பேன்; என் மீட்பை அவர்களுக்கு வெளிப்படுத்துவேன். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
திவெ 1: 5ab

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவே நம்பிக்கைக்குரிய சாட்சி; இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர்; மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர். இவர் நம்மீது அன்புகூர்ந்தார்; தமது சாவு வாயிலாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
அன்பு மகனைப் பிடித்துக் கொன்று, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே எறிந்துவிட்டார்கள்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-12

அக்காலத்தில் இயேசு உவமைகள் வாயிலாகப் பேசத் தொடங்கினார்: "ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டுச் சுற்றிலும் வேலியடைத்து, பிழிவுக்குழி வெட்டி, ஒரு காவல் மாடமும் கட்டினார். பிறகு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். பருவ காலம் வந்ததும் அத்தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து திராட்சைப் பழங்களைப் பெற்று வருமாறு ஒரு பணியாளரை அவர் அனுப்பினார்.

ஆனால் அவர்கள் அவரைப் பிடித்து நையப்புடைத்து வெறுங்கையராய் அனுப்பினார்கள். மீண்டும் அவர் வேறொரு பணியாளரை அவர்களிடம் அனுப்ப, அவரையும் அவர்கள் தலையில் அடித்து அவமதித்தார்கள். அவர் மேலும் ஒருவரை அனுப்ப, அவரையும் கொலை செய்தார்கள்; அவர் வேறு பலரையும் அனுப்பினார். அவர்களுள் சிலரை நையப்புடைத்தார்கள்; சிலரைக் கொன்றார்கள்.

இன்னும் எஞ்சியிருந்தவர் ஒருவரே. அவர் அவருடைய அன்பு மகன். தம் மகனை அவர்கள் மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக்கொண்டு இறுதியாக அவரை அவர்களிடம் அனுப்பினார்.

அப்பொழுது அத்தோட்டத் தொழிலாளர்கள், "இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள் நாம் இவனைக் கொன்றுபோடுவோம். அப்போது சொத்து நமக்கு உரியதாகும்' என்று தங்களிடையே பேசிக் கொண்டார்கள். அவ்வாறே அவரைப் பிடித்துக் கொன்று திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே எறிந்துவிட்டார்கள். திராட்சைத் தோட்ட உரிமையாளர் என்ன செய்வார்? அவர் வந்து அத்தொழிலாளர்களை ஒழித்துவிட்டுத் திராட்சைத் தோட்டத்தை வேறு ஆள்களிடம் ஒப்படைப்பார். "கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் நிகழ்ந்துள்ள இது நம் கண்களுக்கு வியப்பாயிற்று' என்னும் மறைநூல் வாக்கை நீங்கள் வாசித்தது இல்லையா? என்று அவர் கேட்டார்.

தங்களைக் குறித்தே அவர் இந்த உவமையைச் சொன்னார் என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டு அவரைப் பிடிக்க வழி தேடினார்கள்; ஆனால் மக்கள் கூட்டத்துக்கு அஞ்சினார்கள்; ஆகவே அவரை விட்டு அகன்றார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.


சிந்தன

இன்றைக்கு மண்ணை பெற பறக்கும் மனிதர்கள் செய்கின்ற தவறையே நினைவுபடுத்துகின்றது.

ரியல் ஸ்டேட் என சொல்லிக் கொண்டு மண்ணை பெற கொலைகளையும் செய்யும் மனிதச் கூட்டத்தை இந்த சம்பவம் நினைவுபடுத்துகின்றது.

படுத்தால் ஆறடி நிலமே சொந்தம், அதும் பல நேரத்தில் புதைத்தப் பின்னர் அடையாளம் தெரியாத நிலைக்கு உட்படுத்தப்படுகின்றது.

மனிதமே மிருகமாய் மாறி இன்று நிலத்தை கையகப்படுத்துவற்கு நடந்து கொள்ளும் விதம் தன்னையே கேலி செய்வது போல ஆகின்றது.

கொடி கட்டி பறக்கின்றது இன்றைக்கு அந்த தொழில்.

இதனால் இன்றைக்கு நிலத்தின் விலையும் வழிமுறையின்றி ஏறியே நின்கின்றது.

நடுத்தர மக்களே இதிலே குறி வைக்கப்பட்டு, மன நிம்மதியை தொலைத்து நிற்பதோடு, உறவுகளையும், இழந்து நிற்கின்றார்கள்.

கடைசி வரை யாரோ என்ற பாடலின் வரிகளே உண்மையாகின்றது.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்திற்கு மூலைக்கல் ஆயிற்ற

ஓர் ஊரில் மதகுரு ஒருவர் இருந்தார். அவர் சிறந்த ஒரு போதகர். அவருடைய போதனையைக் கேட்க, பல இடங்களிலிருந்தும் மக்கள் வந்துபோவார்கள். ஒருநாள் கடவுளே மனித வடிவில் தோன்றி, அவருடைய போதனையைக் கேட்க வந்தார்.

மனித வடிவில் இருந்த கடவுள், மதகுரு போதனை செய்யும் இடத்திற்கு வந்தார். ஆனால் அவர் மிகவும் சாதாரண உடையில் வந்ததால், வரவேற்பறையில் இருந்தவர்கள் அவருக்கு உள்ளே செல்வதற்கு அனுமதி மறுத்தனர். அவர் நான் தான் கடவுள் என்றும், மதகுருவின் போதனையைக் கேட்பதற்குத் தான், இப்படி மனித வடிவில் வந்ததாகும் எடுத்துச் சொன்னார். ஆனால் அங்கிருந்தவர்களோ அவரைப் பைத்தியம் என்று சொல்லி, வெளியே தள்ளினார்கள்.

இடைவேளையின் போது மதகுரு வெளியே வந்தார். அவரிடம் சென்று, கடவுள், "நான்தான் கடவுள், உங்களுடைய போதனையைக் கேட்பதற்காகத் தான் இங்கே வந்திருக்கிறேன்" என்று எடுத்துச் சொன்னார். ஆனால் மதகுருவோ அங்கிருந்தவர்களிடம், "இங்கே ஒரு பைத்தியம் வந்திருக்கிறது, இந்தப் பைத்தியத்தை அடித்து, வெளியே தள்ளுங்கள்" என்று கட்டளையிட்டார். அவர்களும் அவரை நைய்யப் புடைத்து வெளியே இருந்த ஒரு மரத்தடியில் போட்டுவிட்டு வந்தார்கள்.

அன்றைய நிகழ்வுகள் எல்லாம் முடிந்தது. மதகுருவின் போதனையைக் கேட்க வந்திருந்தவர்கள் எல்லாரும் அவரவர் வீட்டுக்குச் சென்றிருந்தார்.

நள்ளிரவு நேரம். மதகுரு மெதுவாக எழுந்து, மரத்தடிக்குச் சென்றார். அங்கே கடவுள் உடம்பெல்லாம் காயங்களோடு கிடந்தார். சென்றவர் கடவுளின் காலில் விழுந்து, "கடவுளே! என்னை மன்னித்துக் கொள்ளுங்கள், தெரியாமல் தவறு செய்துவிட்டேன். காலையில் நீங்கள் இங்கு வந்தபோது, நீங்கள் கடவுள் என்று அறிந்துகொண்டேன். ஆனாலும் என்ன செய்ய!. மக்கள் கூட்டத்திடம் நீங்கள்தான் கடவுள் என்று சொன்னால், உங்களோடு சேர்த்து என்னையும் பைத்தியக்காரன் என்று சொல்லிவிடுவார்கள். அதனால்தான் நான் அப்படி நடந்துகொண்டேன்" என்றார்.

தொடர்ந்து மதகுரு கடவுளிடத்தில் சொன்னார், "இம்மக்கள் கூட்டத்திற்கு கடவுள் என்றால், பெரிய ஆளாக இருக்கவேண்டும், சாதாரண ஆளாக இருந்தால், அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்று முடித்தார்.

சாதாரண உருவில் வந்தால் கடவுளும் கண்டுகொள்ளப்படமாட்டார் என்பதை இந்த கதையானது வேதனையோடு பதிவுசெய்கிறது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கொடிய குத்தகைக்காரர்களின் உவமையைப் பற்றிப் பேசுகின்றார். நிலக்கிழார் ஒருவர் நன்றாக வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்ட திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்குக் கொடுத்துவிட்டு, நெடும்பயணம் செல்கிறார். குறிப்பிட்ட காலம் வந்ததும், தன்னுடைய பணியாளர்களை குத்தகைப் பணத்தை வசூலித்துக்கொண்டு வர அனுப்பியபோது, குத்தகைக்காரர்கள் அவர்களை அடித்துத் துன்புறுத்துகிறார்கள். தன்னுடைய மகனை அனுப்பினால் பணத்தைத் தருவார்கள் என்று நம்பி அனுப்பியபோது, அவர்கள் அவரைக் கொலைசெய்து வெளியே தள்ளுகிறார்கள். இதனால் கடுஞ்சினம் கொண்ட நிழக்கிழார் கொடிய குத்தகைக்கார்களை அடித்து விரட்டி, திராட்சைத் தோட்டத்தை வேறொரு குத்தகைக்காரரிடம் ஒப்படைக்கின்றார்.

இயேசு கூறும் இந்த உவமையில் நிலக்கிழாரின் மகனையே அதாவது இயேசு கிறிஸ்துவையே அவர்கள் புறக்கணிக்கிறார்கள். ஆனாலும் கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்திற்கு மூலைக்கல் ஆனதுபோல, யாரை வேண்டாமென்று அவர்கள் புறக்கணித்தார்களோ அவரே நமது மீட்பிற்கு காரணமாகின்றார்.

இயேசுவை யூதர்கள் புறக்கணித்தற்குக் காரணம் அவர்களது தீச்செயல் வெளிப்பட்டுவிடும் என்பதற்காகத் தான். யோவான் நற்செய்தியில் வாசிக்கின்றோம், "ஒளியான அவர் உலகிற்கு வந்தார், ஆனால் உலகு அவரை அறிந்துகொள்ளவில்லை (யோவான் 1:10)என்று. நாம் நேரிய வழியில் நடக்கும்போது ஒளியான இறைவனைக் குறித்து பயப்படத் தேவையில்லை.

ஆகவே, நம்மைத் தேடிவரும் இறைவனை நாம் ஏற்றுக்கொள்வோம், அவருக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
பொறுப்புள்ள மாந்தர்களாய் வாழ்வோம்!

நகரில் ஒரு ஒரு பெரிய நிறுவனம் இருந்தது. அந்த நிறுவனம் தன்னுடைய அலுவலர்களின் வங்கி இருப்பு, குடும்பத்துடன் விடுமுறைக்குச் சென்ற இடங்களின் பட்டியல், குடும்பத்தினருக்கு வாங்கித் தந்த பரிசுகளின் விபரங்கள் ஆகியவற்றைப் பெற்றன.

உடனே அலுவலர்கள், "ஏன் இவற்றையெல்லாம் பெறுகிறீர்கள்?" என்று காரணத்தைக் கேட்டனர். அதற்கு நிர்வாகம் சொன்னது, "எங்கள் அலுவலர்கள் அர்த்தமுள்ள, ஆனந்தமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்களா என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவே நாங்க இப்படிச் செய்கிறோம்" என்றது.

அந்த நிறுவனம் எப்படி தன்னுடைய அலுவலகர்கள் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்களா? என்பதை ஆராய்ந்து பார்க்க பல்வேறு ஆவணங்களைக் கேட்டதோ, அதுபோன்றுதான் இறைவனும் நாம் இந்த மண்ணக வாழ்க்கையை எப்படி வாழ்ந்திருக்கின்றோம் என்று கணக்குக் கேட்பார். நாம் அதற்குத் தயாராக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கொடிய குத்தகைக்காரர் உவமையைப் பற்றிப் பேசுகின்றார். இந்த உவமை இயேசு சொல்லக்கூடிய மற்ற எல்லா உவமைகளை விடவும் இஸ்ரயேல் மக்களைப் பற்றி நேரடியாகப் பேசுகின்றது. இயேசு சொல்லக்கூடிய இந்த உவமை நமக்கு மூன்று முக்கியமான செய்திகளை எடுத்துச் சொல்கின்றது. அவை என்னென்ன என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

இந்த உவமை சொல்லக்கூடிய முதன்மையான செய்தி தந்தைக் கடவுளின் பராமரிப்பு ஆகும். உவமையில் வரக்கூடிய திராட்சைத் தோட்ட உரிமையாளார் எப்படி திராட்சைத் தோட்டத்தை நன்றாக சீரமைத்து, சுற்றிலும் பிழிவுக்குழி வெட்டி, காவல்மாடம் அமைத்துப் பராமரித்து வந்தாரோ, அதுபோன்று ஆண்டவராகிய கடவுளும் எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரயேல் மக்களை மீட்டுக்கொண்டு வந்து, அவர்களை செங்கடலைக் கால்நனையாமல் கடக்கச் செய்து, பாலும் தேனும் பொழியக்கூடிய கானான் தேசத்தை வழங்கி அவர்களை மகிழ்வுடன் இருக்கச் செய்தார். மட்டுமல்லாமல் அவர்களை வழிநடத்துவதற்கு என்று நீதித்தலைவர்களையும், இறைவாக்கினர்களையும் அரசர்களையும் ஏற்படுத்தினார். இப்படியெல்லாம் இறைவன் இஸ்ரயேல் மக்களை வழிநடத்தி அவர்களுக்கு தந்தையைப் போன்று காப்பாற்றி வந்தார்.

இந்த உவமை சொல்லக்கூடிய இரண்டாவது செய்தி, இஸ்ரயேல் மக்களின் அவர்களுடைய தலைவர்களின் பொறுப்பற்ற தன்மை. இயேசு சொல்கின்ற இந்த உவமையில் வருகின்ற கொடிய குத்தகைக்காரர்கள்தான் இஸ்ரயேல் மக்களும் அவர்களுடைய தலைவர்களும். ஆண்டவராகிய கடவுள் அவர்களை நல்லமுறையில் பராமரித்து, உரிய காலத்தில் அவர்களிடமிருந்து பலனை எதிர்பார்த்தார். ஆனால், அவர்களோ அவர்களிடம் அனுப்பப்பட்ட இறைவாக்கினர்களைக் கொடுமைப்படுத்தினார்கள்; இறையடியார்களை பலவாறாக சித்திரவதைப் படுத்தினார்கள். இதைவிடக் கொடுமை தந்தைக் கடவுளின் ஒரே மகனாகிய ஆண்டவர் இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றார்கள். இப்படி தக்க காலத்தில் உரிய பலனைக் கொடுக்காமல், இறைவாக்கினர்களையும் இறையடியார்களையும் கடைசியில் இயேசு கிறிஸ்துவைவையும் கொன்றுபோட்டது கண்டிக்கத்தக்கது.

உவமை சொல்லக்கூடிய மூன்றாவது செய்தி, இறைவனின் தண்டனைத் தீர்ப்பு ஆகும். திராட்சைத் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்துக்கொண்டவர்கள் தக்க காலத்தில் உரிய குத்தகைப் பணத்தைக் கொடுக்க மறுத்ததோடு மட்டுமல்லாமல், பணியாளர்களையும் துன்புறுத்தியதால் திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளர் அந்தக் கொடியவர்களுக்கு உரிய தண்டனை கொடுத்துவிட்டு, திராட்சைத் தோட்டத்தை கவனிக்கின்ற பொறுப்பினை வேறு ஆட்களிடம் கொடுத்தது போல, ஆண்டவராகிய கடவுளும் நாம் பொறுப்பற்றவர்களாக இருக்கின்றபோது அதற்கேற்ப தண்டனையைத் தருவார் என்பதுதான் உண்மையாக இருக்கின்றது.

இறைவன் நம்மைப் பலவிதங்களில் பாதுகாத்து, பராமரித்து வருகின்றார். அப்படிப்பட்டச் சூழ்நிலையில் எல்லா வாய்ப்பு வசதிகளையும் ஆண்டு அனுபவித்துக் கொண்டு பொறுப்பற்றவர்களாக இருப்பது என்பதும், கடமை உணர்வில்லாமல் இருப்பது என்பதும் கண்டிக்கப்படவேண்டிய காரியமாகும்.

யோவான் நற்செய்தி 15: 8 ல் வாசிப்பதுபோல், நாம் அனைவரும் மிகுந்த கனிதந்து, இயேசுவுக்கு சீடராக இருக்கவேண்டும், அதுதான் இறைவனுக்கு ஏற்ற ஒரு காரியமாகும். அதை விடுத்து கனிதராமல், பொறுப்பில்லாமல் இருந்தோம் என்றால் உண்மையில் நாம் இறைவனின் தண்டனைத் தீர்ப்புக்கும் அவருடைய கோபத்திற்கும் உள்ளாவோம் என்பதுதான் உண்மையாக இருக்கின்றது.

ஒரு சாதாரண வணிகரோ அல்லது விவசாயி தொழிலில் போட்டதற்கான பலனை எதிர்பார்க்கின்றார். அப்படியிருக்கும் இருக்கும்போது நம்மைப் படித்துப் பாராமரித்து, பாதுகாத்து வருகின்ற இறைவன் நம்மிடமிருந்து உரிய பலனை எதிர்பார்க்க மாட்டாரா என்ன?.

ஆகவே, நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் உண்மையுள்ளவராகவும் கடமையுணர்வு உள்ளவர்களாகவும் மிகுந்த கனிதரக்கூடியவர்களாகவும் இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!