Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                               02 ஜீன் 2018  
                                                           பொதுக்காலம் 8ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
வழுவாதபடி உங்களைக் காக்கவும் மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லவர் கடவுளே.

திருத்தூதர் யூதா எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 17, 20-25

அன்பார்ந்தவர்களே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருத்தூதர்கள் முன்னுரைத்த வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள்.

தூய்மைமிகு விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டு உங்கள் வாழ்வைக் கட்டி எழுப்புங்கள்; தூய ஆவியின் துணையுடன் வேண்டுதல் செய்யுங்கள்.

கடவுளது அன்பில் நிலைத்திருங்கள். என்றுமுள்ள நிலைவாழ்வைப் பெற நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தை எதிர்பார்த்திருங்கள்.

நம்பத் தயங்குவோருக்கு இரக்கம் காட்டுங்கள். வேறு சிலரை அழிவுத் தீயிலிருந்து பிடித்திழுத்துக் காப்பாற்றுங்கள். மற்றும் சிலருக்கு இரக்கம் காட்டும்போது எச்சரிக்கையாய் இருங்கள்; ஊனியல்பால் கறைப்பட்ட அவர்களது ஆடையையும் வெறுத்துத் தள்ளுங்கள்.

வழுவாதபடி உங்களைக் காக்கவும் தமது மாட்சித் திருமுன் மகிழ்ச்சியோடு உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்ல நம் மீட்பராகிய ஒரே கடவுளுக்கு, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய், மாட்சியும் மாண்பும் ஆற்றலும் ஆட்சியும் ஊழிக் காலந்தொட்டு இன்றும் என்றென்றும் உரியன. ஆமென்!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 63: 1. 2-3. 4-5 (பல்லவி: 1b)
=================================================================================
 பல்லவி: ஆண்டவரே, என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.

1 கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம்போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. பல்லவி

2 உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன். 3 ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. பல்லவி

4 என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன். 5 அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
கொலோ 3: 16ய,17c

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்?

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 27-33

அக்காலத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் மீண்டும் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு கோவிலில் நடந்துகொண்டிருந்தபோது தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் ஆகியோர் அவரிடம் வந்து, "எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இவற்றைச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்?" என்று கேட்டனர்.

இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, "நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்; நீங்கள் மறுமொழி கூறுங்கள். அப்போது எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என நான் உங்களுக்குச் சொல்வேன். திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா? அல்லது மனிதரிடமிருந்து வந்ததா? எனக்குப் பதில் சொல்லுங்கள்" என்றார்.

அவர்கள், "விண்ணகத்திலிருந்து வந்தது' என்போமானால், பின் ஏன் அவரை நம்பவில்லை' எனக் கேட்பார். எனவே மனிதரிடமிருந்து வந்தது' என்போமா?" என்று தங்களிடையே பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் மக்கள் அனைவரும் யோவானை ஓர் இறைவாக்கினராகக் கருதியதால் அவர்கள் அவர்களுக்கு அஞ்சினார்கள். எனவே, அவர்கள் இயேசுவிடம், "எங்களுக்குத் தெரியாது" என்று பதிலுரைத்தார்கள்.

இயேசுவும் அவர்களிடம், "எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்" என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
முரண்பாடான மனிதர்கள்

"தத்துவஞானி"யான முல்லா இருந்த ஊரில் வேறொரு தத்துவஞானியும் இருந்தார். மக்கள் முல்லாவைவிட அவரிடம்தான் அதிகமான மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார்கள். இது முல்லாவிற்கு அறவே பிடிக்கவில்லை. ஒருநாள் முல்லா அவரை எப்படியாவது வாறிவிடவேண்டும் என்று கங்கணம் கட்டித்திரிந்தார்.

ஒருநாள் முல்லா தெருவில் நடந்துசென்றுகொண்டிருந்தார். அவருக்கு முன்னால் அந்த தத்துவஞானியும் சென்றுகொண்டிருந்தார். அப்போது மழை நன்றாகப்பெய்துகொண்டிருந்தது. வேகமாகச் சென்ற முல்லா அந்தத் தத்துவஞானியிடம், "எதற்காக மழையில் இப்படி குடையோடு நடந்துசென்று கொண்டிருக்கிறீர்கள். மழை என்பது இறைவனின் கொடை. அதில் நனைய வேண்டுமேயொழிய, இப்படிக் குடையை வைத்து மறைத்து, கடவுளின் கொடையை/ மழையை வேண்டாமென்று சொல்லக்கூடாது" என்றார்

முல்லாவின் வார்த்தையில் ஏதோ உண்மை இருக்கிறது என்று நினைத்த அவர், தான் வைத்திருந்த குடையைத் தூக்கி எறிந்துவிட்டு, மழையில் நடக்கத் தொடங்கினார். முல்லாவோ வேகமாகச் சென்று, தன்னுடைய வீட்டுக்குள் ஓடி ஒளிந்தார். மழையில் நனைந்த அந்த தத்துவஞானிக்கு காய்ச்சல் கடுமையாகத் தாக்கியது. ஒருவாரகாலம் அவர் காய்ச்சலால் பெரிதும் துன்புற்றார்.

இரண்டு மூன்று வாரங்கள் கழித்து, அவர் உடல் தேற்றிபெற்று, மீண்டுமாக தெருவில் நடக்கத் தொடங்கினார். அப்போது முல்லா அவரது கண்ணில் பட, அவரைத் தன்னிடம் அழைத்தார். அன்றைக்கும் மழை நன்றாகப் பெய்துகொண்டிருந்தது. "மழை இறைவனின் கொடை, அதில் நடந்தால் இறைவனின் ஆசிர் கிடைக்கும்" என்றுசொல்லி தன்னை ஏமாற்றியதற்காக அந்த தத்துவஞானி பழிவாங்கப் போகிறார் என்று முல்லா உள்ளுக்குள் நினைத்துக்கொண்டார். இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், அவர் அவர் அருகே சென்றார்.

அப்போது தத்துவஞானி முல்லாவிடம், "முல்லா! மழை இறைவனின் கொடையல்லவா? அது நனைந்துசெல்லாமல், இப்படி மழையைப் பார்த்து ஒதுங்கிச் செல்கிறீர்களே?" என்று கேட்டார். அதற்கு முல்லா, "அப்படியில்லை, என்னதான் மழை இறைவனின் கொடையாக இருந்தாலும், அது நம்முடைய காலில் மிதிபடக்கூடாது அல்லவா, அதனால்தான் மழையைக் கண்டு விலகிச் செல்கிறேன்" என்று சொல்லி ஒப்பேத்தினார்.

தனக்கு ஒரு நீதி, அடுத்தவருக்கு என்றால் வேறு ஒரு நீதி என்று வாழும் வேடிக்கை மனிதர்களை இந்த நிகழ்வானது கடுமையாகப் பகடி செய்கிறது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு எருசலேம் திருக்கோவிலுக்குச் சென்றபோது, அங்கே மக்கள் வியாபாரம் செய்வதைப் பார்த்து, சாட்டை பிண்ணி அவர்களை விரட்டி அடிக்கின்றார். இதைப் பார்க்கும் தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள், "எந்த அதிகாரத்தில் நீர் இவற்றைச் செய்கிறீர்?" என்று கேட்கிறார்கள். அதற்கு இயேசு அவர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டு, அவர்களைத் திக்குமுக்காடச் செய்கிறார்.

இயேசு அவர்களிடம் கேட்ட கேள்வி இதுதான். "திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணிலிருந்து வந்ததா? அல்லது மண்ணிலிருந்து வந்ததா? என்பதே. அவர்களோ இயேசு கேட்ட கேள்வியால் வாயடைத்து நிற்கிறார்கள். ஏனென்றால் திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணிலிருந்து வந்தது என்று சொன்னால் "பின் ஏன் நம்பவில்லை? என்று கேட்பார். அதேவேளையில் மண்ணிலிருந்துதான் யோவானுக்கு திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் வந்தது என்றால், மக்கள் அவர்கள் சீறி எழுந்துவிடுவார்கள். இதையெல்லாம் உணர்ந்த அவர்கள் இயேசு கேட்ட கேள்விக்குத் தெரியாது என்று பதிலளிக்கிறார்கள். இயேசுவும் அவர்கள் கேட்ட கேள்விக்கு தெரியாது என்று பதிலளிக்கிறார்.

விதண்டாவாதத்திற்கு விதண்டாவாதமே தீர்வு என்பதுபோல், இயேசு யூதர்கள் கேட்ட கேள்விக்கு வித்தியாசமான பதிலளித்து அவர்களை வாயடைக்கின்றார். பல நேரங்கில் நமது பணிவாழ்விலும் இதுபோன்று விதண்டாவாதம் செய்யும் மக்களைச் சிந்திப்போம். அவர்களுக்கு நாம் சரியான பதில் தரவேண்டும் என்று தேவையில்லை, விதண்டாவாதத்தையே பரிசாகத் தரலாம்.

ஆண்டவர் இயேசு "நீங்கள் புறாக்களைப் போன்று, கள்ளம்கபடு இல்லாதவர்களாகவும், பாம்பைப் போன்று விவேகமுள்ளவர்களாகவும் இருங்கள்" என்பார் (மத் 10:16). ஆகவே, இயேசுவின் சீடர்களாகிய நாம் அவரைப் போன்று நமது பணிவாழ்வில் விவேகமுள்ள ஊழியர்களாக வாழ்வோம். இறையருள் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
"எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இவற்றைச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்?

சீன ஞானி அவாந்தி. ஒருமுறை அவரிடம் ஒருவர் ஓடிவந்தார். வந்தவர் அவரிடம், "அவாந்தி அவர்களே! நீர் மிகப்பெரிய ஞானி என்பதை நான் அறிவேன். இப்போது என்னுடைய சிக்கலுக்கு வழிசொல்லுங்கள்" என்றார். "என்ன சிக்கல்? சொல்லுங்கள். உங்களுடைய சிக்கலுக்கு நான் வழி சொல்கிறேன்" என்றார் அவாந்தி.

வந்தவரோ, "அது ஒன்றுமில்லை அவாந்தி அவர்களே! நேற்று இரவு நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது என் வாய் வழியே எலி ஒன்று என் வயிற்ருக்குள் வயிற்றுக்குள் புகுந்து இன்னும் ஓடிக்கொண்டிருக்கின்றது. இதுதான் எனக்கு வந்த சிக்கல். இந்தக் சிக்கலுக்கு சீக்கிரம் வழிசொல்லுங்கள்" என்றார். சிறிது நேரம் யோசித்த அவாந்தி, இது சிக்கல் அல்ல; நக்கல் என்று உணர்ந்தார். எனவே அவர் வந்தவரிடம், "இது ஒன்றும் பெரிய சிக்கல் இல்லை நண்பரே! உடனே ஒரு பூனையை விழுங்கி விடுங்கள். அது எலியைத் தேடிப்பிடித்து, கவ்விக் கொண்டு உங்கள் வாய்வழியே வெளியே வந்துவிடும். அப்படியில்லை என்றால், கொஞ்சம் எலி மருந்து சாப்பிடுங்கள்; வயிற்ருக்குள் இருக்கும் எலி அப்படியே செத்து விடும்" என்றார். இதைச் சற்றும் எதிர்பார்த்திராத அந்த மனிதர் வந்த வேகத்திலே ஓடிப் போனார்.

சமயங்களில் வில்லங்கமான பேச்சுக்கு வில்லங்கமாகத்தான் பதில் அளிக்கவேண்டும்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு எருசலேம் திருக்கோவிலை தூய்மைப்படுத்திய நிகழ்ச்சிக்குப் பின்பு, அவரைச் சந்திக்க வருகின்ற தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் மூப்பர்களும் இயேசுவிடம், "எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இவற்றைச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்?" என்று கேட்கின்றனர். இவர்கள் கேட்ட கேள்விக்கு இயேசு நேரடியாக, எருசலேம் திருக்கோவில் என் தந்தையுடைய இல்லம் எனவே என்னுடைய தந்தையின் இல்லத்தில் வியாபாரம் செய்தவர்களை விரட்டியடிக்க எனக்கு எல்லா அதிகாரமும் இருக்கின்றது என்று சொல்லியிருக்கலாம். ஆனால், இயேசு அப்படி பதில் சொல்லவில்லை. மாறாக இயேசு தன்னிடம் கேள்வி கேட்டவர்களிடம் பதில் கேள்வி கேட்டு அவர்களை வாயடைக்கச் செய்கின்றார்.

இயேசு தன்னிடம் கேள்வி கேட்டவர்களிடம் கேட்கும் பதில் கேள்வி இதுதான்: திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா? மனிதர்களிடமிருந்து வந்ததா?. இயேசு கேட்கும் கேள்விக்கு வந்தவர்கள் பதில் சொல்ல முடியாமல் பதற்றம் அடைகின்றார்கள். ஏனென்றால் அவர்கள் திருமுழுக்கு யோவானுக்கு திருமுழுக்கு அளிக்கின்ற அதிகாரம் மனிதர்களிடமிருந்து வந்தது என்று சொன்னால், சூழ்ந்து நிற்கின்ற மக்களுடைய எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டும். காரணம் மக்கள் திருமுழுக்கு யோவானை ஓர் இறைவாக்கினராக, இறையடியாராகப் பார்த்தார்கள். அதே நேரத்தில் அவர்கள், திருமுழுக்கு கொடுக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்தது என்று சொன்னால், பிறகு எதற்கு அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்று இயேசு கேட்பார் என்பதால், அவர்கள் "எங்களுக்குத் தெரியாது" என்று பதில் கூறுகின்றார்கள். அவர்கள் இவ்வாறு சொன்னதைத் தொடர்ந்து இயேசு அவர்களிடம், "எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கின்றேன் என்று நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்" என்கின்றார்.

தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் மூப்பர்களும் இயேசுவை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வருகின்றபோது, இயேசு தன்னுடைய அறிவாற்றலால், ஞானத்தால் வெற்றிகொண்டது நம்முடைய கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது.

பல நேரங்களில் நாமும்கூட இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளைச் சாதிக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலைகளில் நாம் எவ்வாறு ஞானத்தோடு நடந்துகொள்ளவேண்டும் என்று சிந்தித்துப் பார்ப்பது நம்முடைய கடமையாகும். ஞானத்தோடு நடப்பதும், அறிவாற்றலோடு பதிலளிப்பதும் தானாக நடந்து விடாது. அது தூய ஆவியாரின் துணையால் மட்டுமே நடக்கும். எப்போது நாம் தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப நடந்து, அவருடைய துணையைப் பெறுகின்றோமோ, அப்போது நாம் ஞானத்தோடும் அறிவாற்றலோடும் எதிர்வரும் பிரச்சனைகளை சமாளிக்கலாம் என்பது உண்மை.

மத்தேயு நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், "இப்படி அவர்கள் உங்களை ஒப்புவிக்கும்பொழுது, "என்ன பேசுவது? எப்படி பேசுவது? என நீங்கள் கவலைப்படவேண்டாம். நீங்கள் என்ன பேசவேண்டும்? என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். ஏனெனில் பேசுபவர் நீங்கள் அல்ல, மாறாக உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய் பேசுவார்" என்று (மத் 10: 19-20). ஆம், தூய ஆவியார்தான் நான் ஞானத்தோடும் அறிவாற்றலோடும் பேசுவதற்கான வலுவினைத் தருவார்.

ஆகவே, நாம் நம்முடைய வாழ்வில் தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழ்வோம். அதன்வழியாக அவர் தரக்கூடிய ஆற்றலையும், பிரச்சனை எதிர்கொள்கின்ற வல்லமையும் பெற்று, இறையருளை நிறைவாய் பெறுவோம்.


- மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
இயேசு கோவிலில் நடந்து கொண்டிருந்தபோது தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் ஆகியோர் அவரிடம் வந்து,'எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இவற்றைச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்?' என்று கேட்டனர் (மாற்கு 11:27-28)

இயேசு மக்களுக்கு அதிகாரத்தோடு போதித்தார். யூத சமயத் தலைவர்கள் கொண்டிருந்த அதிகாரத்திற்கும் இயேசுவிடம் தெரிந்த அதிகாரத்திற்குமிடையே வேறுபாடு இருந்தது. அவர்கள் சமயக் கொள்கைகளையும் வழக்குகளையும் விளக்கினர். ஆனால் இயேசுவோ, தம் சொந்த அதிகாரத்தின் அடிப்படையில் மக்களுக்குப் போதித்தார். அவரிடம் துலங்கிய அதிகாரம் கடவுள் தாமே அவருக்கு அளித்த அதிகாரம். எந்த மனித அதிகாரத்தையும் விஞ்சிய அதிகாரம் அது. பண்டைக் கால இறைவாக்கினரைப் போல இயேசுவும் தந்தை கடவுளின் பெயரால் மக்களுக்கு நல்ல செய்தி கூறினார் என்பது உண்மையே. எனவேதான் மக்களில் பலர் இயேசுவைத் தலைசிறந்த இறைவாக்கினராகக் கண்டார்கள். ஆனால், இயேசு தம் அதிகாரம் பற்றிப் பேசும்போது தம் தந்தையிடமிருந்தே அந்த அதிகாரத்தைப் பெற்றதாகக் கூறுகின்றார். இவ்வாறு இயேசு தமக்கும் தம்மை அனுப்பிய தந்தைக்கும் இடையே நிலவிய நெருங்கிய உறவை வெளிப்படுத்தினார்.

தந்தையோடு அவருக்குள்ள உறவின் நெருக்கம் காரணமாக, நாம் இயேசுவை இறைத்தன்மை கொண்டவராக நம்பி ஏற்கின்றோம். கடவுளின் அதிகாரம் இயேசுவில் துலங்குவதால் நாம் இயேசுவைக் கடவுள் எனவே போற்றுகின்றோம். அதே நேரத்தில் இயேசு உண்மையாகவே மனிதராகவும் இருக்கின்றார். இவ்வாறு அவர் நம்மில் ஒருவராக மாறியதால் நாம் அவரிடத்தில் நம் ஆழ்ந்த மனித இயல்பை அடையாளம் காண இயலும். அது நம்மில் முழுமையாக வெளிப்படும்போது நாமும் கடவுளருளால் இறைத்தன்மை பெற்ற மனிதராக மாறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!