Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                              01 ஜூன் 2018  
                                                           பொதுக்காலம் 8ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நீங்கள் கடவுளுடைய அருள்கொடைகளின் சீரிய பொறுப்பாளர்கள்.

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-13

அன்புக்குரியவர்களே, எல்லாவற்றிற்கும் முடிவு நெருங்கிவிட்டது. எனவே, இறைவனிடம் வேண்டுதல் செய்யுமாறு கட்டுப்பாட்டோடும் அறிவுத் தெளிவோடும் இருங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள். ஏனெனில், அன்பு திரளான பாவங்களையும் போக்கும், முணுமுணுக்காமல் ஒருவருக்கொருவர் விருந்தோம்புங்கள்.

நீங்கள் கடவுளுடைய பல்வகை அருள்கொடைகளின் சீரிய பொறுப்பாளர்கள். எனவே உங்களுள் ஒவ்வொருவரும் தாம் பெற்றுக்கொண்ட அருள்கொடையைப் பயன்படுத்தி, ஒருவருக்கொருவர் பணிபுரியுங்கள்.

ஒருவர் பேசும் கொடையைப் பெற்றிருந்தால், அவரது பேச்சு கடவுளுடைய வார்த்தைகளைப்போல் இருக்கட்டும்.

ஒருவர் பணி செய்யும் கொடையைப் பெற்றிருந்தால், கடவுள் அருளும் ஆற்றலைப் பெற்றவர்போல் பணி செய்யட்டும்; இவ்வாறு இயேசு கிறிஸ்துவின் வழியாகக் கடவுள் அனைத்திலும் பெருமை பெறுவார். அவருக்கே மாட்சியும் வல்லமையும் என்றென்றும் உரித்தாகுக! ஆமென்.

அன்புக்குரியவர்களே, துன்பத் தீயில் நீங்கள் சோதிக்கப்படும்போது, ஏதோ எதிர்பாராதது நேர்ந்துவிட்டதென வியக்காதீர்கள். மாறாக, கிறிஸ்துவின் துன்பங்களில் நீங்கள் இத்துணைப் பங்குகொள்கிறீர்கள் என எண்ணி மகிழுங்கள். அப்பொழுது கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படும் வேளையில் இன்னும் மகிழ்ந்து பேருவகை கொள்வீர்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 96: 10. 11-12. 13 (பல்லவி: 13A)
=================================================================================
 பல்லவி: மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க ஆண்டவர் வருகின்றார்.

10 வேற்றினத்தாரிடையே கூறுங்கள்; ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; பூவுலகு உறுதியாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். பல்லவி

11 விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும். 12 வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். பல்லவி

13 ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 15: 16

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
என் இல்லம் மக்கள் அனைவர்க்கும் உரிய இறைவேண்டலின் வீடு.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 11-26

அக்காலத்தில் இயேசு எருசலேமுக்குள் சென்று கோவிலில் நுழைந்தார். அவர் அனைத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு, ஏற்கெனவே மாலை வேளையாகி விட்டதால், பன்னிருவருடன் பெத்தானியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

மறுநாள் பெத்தானியாவை விட்டு அவர்கள் திரும்பியபொழுது இயேசுவுக்குப் பசி உண்டாயிற்று. இலையடர்ந்த ஓர் அத்தி மரத்தை அவர் தொலையிலிருந்து கண்டு, அதில் ஏதாவது கிடைக்குமா என்று அதன் அருகில் சென்றார். சென்றபோது இலைகளைத் தவிர வேறு எதையும் அவர் காணவில்லை. ஏனெனில் அது அத்திப் பழக்காலம் அல்ல. அவர் அதைப் பார்த்து, "இனி உன் கனியை யாரும் உண்ணவே கூடாது" என்றார்.

அவருடைய சீடர்கள் இதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். கோவிலுக்குள் சென்றதும் இயேசு அங்கு விற்பவர்களையும் வாங்குபவர்களையும் வெளியே துரத்தத் தொடங்கினார்; நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும் புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப்போட்டார். கோவில் வழியாக எந்தப் பொருளையும் எடுத்துச் செல்ல அவர் விடவில்லை. " `என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும்' என்று மறைநூலில் எழுதியுள்ளது" என்று அவர்களுக்குக் கற்பித்தார்; "ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள்" என்றார்.

தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் இதைக் கேட்டு, அவரை எப்படி ஒழித்து விடலாம் என்று வழி தேடினார்கள். எனினும் கூட்டத்தினர் அனைவரும் அவரது போதனையில் ஆழ்ந்து வியந்திருந்ததால் அவர்கள் அவருக்கு அஞ்சினார்கள்.

மாலை வேளை ஆனதும் இயேசுவும் சீடர்களும் நகரத்திலிருந்து வெளியேறினார்கள். காலையில் அவர்கள் அவ்வழியே சென்றபோது அந்த அத்திமரம் வேரோடு பட்டுப்போயிருந்ததைக் கண்டார்கள். அப்போது பேதுரு நடந்ததை நினைவுகூர்ந்து அவரை நோக்கி, "ரபி, அதோ நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று" என்றார்.

அதற்கு இயேசு அவர்களைப் பார்த்து, "கடவுள்மீது நம்பிக்கை கொள்ளுங்கள். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: எவராவது இந்த மலையைப் பார்த்து, `பெயர்ந்து கடலில் விழு' எனத் தம் உள்ளத்தில் ஐயம் எதுவுமின்றி நம்பிக்கையுடன் கூறினால், அவர் சொன்னவாறே நடக்கும். ஆகவே உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்றுவிட்டீர்கள் என நம்புங்கள்; நீங்கள் கேட்டபடியே நடக்கும். நீங்கள் வேண்டுதல் செய்ய நிற்கும்போது யார் மேலாவது நீங்கள் மனத்தாங்கல் கொண்டிருந்தால், மன்னித்துவிடுங்கள். அப்போது உங்கள் விண்ணகத் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார். நீங்கள் மன்னிக்காவிட்டால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்" என்று கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
கனிதரும் வாழ்க்கை வாழ்வோம்

ஒருமுறை புத்தரிடம் இளைஞர் ஒருவர் வந்து, "இறப்புக்கு பின்னர் வாழ்வு உண்டா?" என்று கேட்டார். அதற்கு அவர், அருகே எரிந்துகொண்டிருந்த நெருப்பைச் சுட்டிக்காட்டி, "இங்கே எரிந்துகொண்டிருக்கும் நெருப்பு, எங்கிருந்து வந்தது?" என்று கேட்டார். அதற்கு அவர் பதிலொன்றும் தெரியாது அப்படியே நின்றார்.

பின்னர் புத்தர் அந்த நெருப்பை அணைத்துவிட்டு, "இப்போது இங்கே எரிந்துகொண்டிருந்த நெருப்பு எங்கே சென்றது?" என்று கேட்டார். அதற்கும் அவர் பதிலொன்றும் தெரியாது நின்றார். அப்போது புத்தர் அவரிடம், "நெருப்பு எங்கிருந்து வந்தது, அது எங்கே சென்றது என்று ஆராயந்துகொண்டிருப்பதை விட, அந்த நெருப்பை எப்படிப் பயன்படுத்துவது என்பதே அறிவுடைமை. அது போன்றுதான், "இறப்புக்குப் பின் வாழ்வு எங்கே செல்கிறது?, அது எங்கிருந்து வருகிறது? என்று ஆராய்வதை விட, நமக்குக் கொடுக்கப்பட்ட வாழ்வை எப்படிப் பயன்படுத்துவது என்பதே அறிவுடைமை" என்று அவர் பதிலளித்தார்.

அறிஞர் பெருமகனாகிய பெர்னாட்ஷா ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார், "இருபது வயது வரைக்கும் நம்முடைய தாய், "எங்கே செல்கிறாய்?" என்று கேட்கிறார். இருபது வயதிலிருந்து, நாற்பது வயதுவரை மனைவி நம்மிடம், எங்கே செல்கிறாய்?" என்று கேட்கிறாள். நாற்பது வயதுக்குப் பின், "மரணத்திற்குப் பின் இறுதியில் நாம் எங்கே செல்கிறோம்? என்று கேட்கிறோம் என்று வாழ்க்கையைப் பற்றி குறிப்பிடுவார்.

இறப்புக்குப் பின்னர், நாம் எங்கே செல்கிறோம்? என்று யோசித்துப் பார்த்துக்கொண்டிருப்பதை விடவும், நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதே நமது சிந்தனைக்கு உரியதாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு பசியாய் இருந்தபோது, ஒரு அத்திமரத்தில் கனியைத் தேடுகிறார். ஆனால் அதில் கனியில்லாததால், "இனி உன் கனியை யாரும் உண்ணக் கூடாது" என்று சபிக்கிறார். இயேசு சபிக்கக்கூடிய அத்திமரமானது இஸ்ரயேல் மக்களுக்கு (நமக்கும்) ஒப்பிடப்படுகின்றது. ஆண்டவர் இயேசு இஸ்ரயேல் மக்களிடம் வந்தபோது, அவர்கள் வாழ்வு கடவுளுக்குப் பிரியமானதாக இல்லாமல் இருந்ததால் அவர் அவர்களைச் சபிக்கின்றார்.

இயேசுவின் சீடர்களாக, அவரது வழியைப் பின்தொடர்ந்து செல்லக்கூடிய நம்மிடமும் இறைவன் கனியை/ பலனை எதிர்ப்பார்க்கின்றார். உண்மையில் நாம் கனிதரும் மக்களாக வாழ்கிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். யோவான் நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், "நீங்கள் மிகுந்த கனிதந்து என்னுடைய சீடராக இருப்பதே என்னுடைய தந்தைக்கு மாட்சியளிக்கிறது" என்று (யோவான் 15:8). ஆகவே, நாம் ஒவ்வொருவரும் மிகுந்த கனிதந்து இயேசுவின் சீடர்களாக இருக்கவேண்டும்.

அடுத்ததாக எது கனிதரும் வாழ்க்கை? என்று சிந்தித்துப் பார்க்கும்போது, அது நம்முடைய நற்செயல்கள், நன்மையான காரியங்கள் நிறைந்த வாழ்க்கையைச் சுட்டிக்காட்டுகிறது. மத்தேயு நற்செய்தி 5: 16 ல் ஆண்டவர் இயேசு கூறுவார், "உங்கள் நற்செயல்களைக் கண்டு, உங்கள் விண்ணகத் தந்தையைப் போன்றி புகழ்வார்கள்" என்று. ஆகவே நாம் கனிதரும் வாழ்க்கை வாழுகின்றபோது இறைவனுக்குப் பெருமைசேர்ப்பவர்களாக இருக்கின்றோம்.

ஆனால் நடைமுறை வாழ்க்கையில் நாம் கனிதரும் மக்களாக இருந்து, இறைவனுக்கு மகிமையும், பெருமையும் சேர்க்கும் மக்களாக இருக்கிறோமா? என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருகின்றது. பலர் கடவுள் தங்களுக்குக் கொடுத்த வாழ்க்கையை, கடவுளுக்குப் பெருமையும், மகிமையும் சேர்க்கப் பயன்படுத்தாமல், தங்களுடைய ஆசைகள், விருப்பங்கள் நிறைவேறவே பயன்படுத்துகிறார்கள். இதனால் சுயவிருப்பம் நிறைவேறுகிறதே ஒழிய, இறைவிருப்பம் நிறைவேற வில்லை.

வாழ்க்கை என்பது எடுப்பது மட்டுமல்ல கொடுப்பதும்தான்; பெறுவது மட்டுமல்ல தருவதும்தான்; அனுபவிப்பது மட்டுமல்ல அளிப்பதுதான்" என்பார் வெ. இறையன்பு. ஆகவே கடவுள் நமக்குக் கொடுத்த வாழ்வென்னும் கொடையை நமக்காகப் பயன்படுத்தாமல், பிறருக்காக, கடவுளின் திருவுளம் நிறைவேற்றப் பயன்படுத்துவோம்; கனிதரும் வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வோம்!

ஆற்றங்கரையோரத்தில் அமர்ந்து போதித்துக் கொண்டிருந்த ஞானியிடம் பெரியவர் ஒருவர் வந்தார். வந்தவரிடம் ஞானி, ஐயா உங்கள் வயதென்ன? என்று கேட்டார். அதற்கு அந்தப் பெரியவர், எனக்கு ஏழு வயது ஆகிறது என்றார்.

இதைக் கேட்டு அந்த ஞானியும் அவருடைய சீடர்களும் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். வயதில் மூத்தவராக இருக்கின்றார், ஆனால் ஏழு வயது என்று சொல்கிறாரே, ஒருவேளை நாம் கேட்ட கேள்வியை இவர் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையோ என்று ஞானி அதே கேள்வியை மீண்டும் அந்தப் பெரியவரிடத்தில் கேட்டார். அப்போதும் அவர், எனக்கு ஏழு வயதாகிறது என்றார்.

ஞானிக்கு ஒன்றும் புரிவுபடவில்லை. எனவே அவர் தன்னுடைய சந்தேகத்தை அடக்க முடியாதவராய் அந்த பெரியவரிடத்தில், ஐயா! உங்களைப் பார்த்தால் எழுபது வயதுக்குள் மேல் இருப்பவர் போல் தெரிகிறது. ஆனால் உங்களுடைய வயது வெறும் ஏழு என்று சொல்கிறீர்களே, ஏன் இப்படி என்று கேட்டார். அதற்கு அந்தப் பெரியவர், சுவாமி! இப்போது என்னுடைய உண்மையான வயது 75. ஆனால் என்னுடைய வாழ்க்கையை நான் அர்த்தமுள்ள வகையில் வாழத் தொடங்கி வெறும் ஏழு ஆண்டுகள்தான் ஆகின்றன. அதனால்தான் அப்படிச் சொன்னேன் என்றார்.

ஆம், வாழ்க்கையை அர்த்தமுள்ள வகையில் வாழ்கின்ற காலங்களே நம்முடைய உண்மையான வயதாகும்.

நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு எருசலேமை அடைந்து, அதன்பின்னர் பெத்தானியாவிற்குச் சென்று திரும்பி வருகின்றபோது அவருக்குப் பசி எடுக்கின்றது. எனவே அவர் இளையடர்ந்த ஓர் அத்திமரத்தைப் பார்க்கின்றார். அதில் கனியேதும் இல்லாதது கண்டு, அவர் அம்மரத்தை சபிக்கின்றார். இத்தனைக்கும் அது பருவ காலம் இல்லை. பிறகு எதற்கு இயேசு அம்மரத்தைச் சபித்தார். இதுதான் நம்முடைய சிந்தனைக்கு உரியதாக இருக்கின்றது.

விவிலிய அறிஞர்கள் இந்தப் பகுதியைக் குறித்து விளக்கம் அளிக்கின்றபோது, நற்செய்தியில் இடம்பெறுகின்ற அத்திமரம், இஸ்ரயேல் மக்களைக் குறிக்கின்றது என்றும், இஸ்ரயேல் மக்களை இறைவன் பல்வேறு விதங்களில் வழிநடத்தியபோதும் அவர்கள் எந்தவொரு பலனையும் கொடுக்காமல் தான்தோன்றித் தனமாக இருந்ததால், இறைவன் அவர்களுக்குத் தண்டனையைத் தரப்போகிறார் என்பதைக் குறித்துக் காட்டும் விதமாக இயேசு இந்த அத்திமரத்தை சபித்தார் என்றும் விளக்கம் தருவார்கள். இயேசு சபித்ததால் அத்திமரம் எப்படி கருகிப் போனதோ, அது போன்று இறைவனின் அன்பை உணராமல், அவருக்கு ஏற்ற வாழ்க்கை வாழாமல், அதனால் இறைவனின் தண்டனைக்குத் தீர்ப்புக்கு உள்ளான எருசலேம் கி.பி. 70 ஆம் ஆண்டு உரோமையர்களால் அழிக்கப்பட்டது என்பது வரலாறு.

காய்க்காத அத்திமரம் நமக்குச் சொல்லக்கூடிய செய்தி ஒன்றே ஒன்றுதான். அது வேறொன்றுமில்லை, பலன் கொடுக்காத அல்லது கனிகொடாத வாழ்க்கை வாழ்வோரை பரமன் தண்டிப்பார் என்பதாகும். இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், நாம் ஒவ்வொருவரும் மிகுந்த கனிதரவேண்டும். அப்படிப்பட்ட வாழ்க்கையே இறைவனுக்கு ஏற்ற வாழ்க்கை ஆகும்.

யோவான் நற்செய்தியில் ஆண்டவர் இயேசு சொல்வார், என்னிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார்; கனிதரும் கொடிகள் அனைத்தையும் மிகுந்த கனிதருமாறு அவர் கழித்துவிடுவார்... நீங்கள் மிகுந்த கனிதந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சியளிக்கிறது என்று (யோவா 15: 2,8). ஆம், நாம் ஒவ்வொருவரும் மிகுந்த கனி தரவேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் இறைவனுடைய தண்டனைத் தீர்ப்பை நம்மீது வருவித்துக் கொள்கின்றோம் என்பதே உண்மை.

நம்முடைய வாழ்வை சிறுது நாம் அலசிப் பார்க்கவேண்டும். அனுதினமும் இறைவார்த்தையைக் கேட்கின்றோம்; திருப்பலியில் கலந்துகொள்கின்றோம். அப்படியானால் நாம் எவ்வளவு பலன் கொடுக்க வேண்டும்?. ஆனால், நாம் ஆதியில் இருந்ததுபோல் இப்போது எப்போதும் இருந்தால் என்ன செய்வது?.

இங்கே இன்னொரு செய்தியையும் நாம் நம்முடைய கவனத்தில் கொள்ளவேண்டும். அது என்னவெனில், அத்திமரம் எல்லா காலத்திலும் கனிகொடாது, பருவ காலத்தில் மட்டும்தான் கணிகொடும். ஆனால் நாம் அப்படியிருக்கக்கூடாது, எல்லாக் காலத்திலும் கனிகொடுக்கவேண்டும். அதுதான் உண்மையான கிறிஸ்துவ வாழ்க்கை அல்லது சீடத்துவ வாழ்க்கை.

ஆகவே, எல்லாக் காலத்திலும் பலன் தரக் கூடிய மக்களாவோம், நம்மிடத்தில் இருக்கின்ற சோம்பல், அசட்டைத் தனம் போன்றவற்றிருக்கு முற்றுப்புள்ளி வைப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.




=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!