Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                        30  ஜூலை 2018  
                                                           பொதுக்காலம் 17ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
தீய மக்கள், எதற்கும் பயன்படாத இந்தக் கச்சையைப் போல் ஆவார்கள்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 13: 1-11

ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே: "நீ உனக்காக நார்ப் பட்டாலான ஒரு கச்சையை வாங்கி அதை உன் இடையில் கட்டிக்கொள். அதைத் தண்ணீரில் நனைக்காதே." ஆண்டவர் சொற்படி நான் கச்சையை வாங்கி அதை என் இடையில் கட்டிக்கொண்டேன்.

எனக்கு ஆண்டவர் வாக்கு இரண்டாம் முறை அருளப்பட்டது: "நீ வாங்கி உன் இடையில் கட்டிக்கொண்டுள்ள கச்சையை எடுத்துக்கொள்: எழுந்து பேராத்து ஆற்றுக்குச் செல். அங்கு அதனைப் பாறை இடுக்கில் மறைத்து வை." ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டபடி நான் சென்று பேராத்தில் அதனை மறைத்து வைத்தேன்.

பல நாள்களுக்குப் பின்னர் ஆண்டவர் என்னிடம் கூறியது: "எழுந்து பேராத்துக்குச் சென்று நான் உன்னிடம் மறைத்து வைக்கக் கட்டளையிட்ட கச்சையை அங்கிருந்து எடுத்துவா." அவ்வாறே நான் பேராத்திற்குச் சென்று, அங்கு மறைத்து வைத்திருந்த இடத்திலிருந்து கச்சையைத் தோண்டி எடுத்தேன். அந்தக் கச்சையோ எதற்கும் பயன்படாத அளவில் இற்றுப் போயிருந்தது.

அப்போது ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: "ஆண்டவர் கூறுவது இதுவே: இவ்வாறே யூதா, எருசலேமின் ஆணவத்தை அழிப்பேன். என் சொற்களுக்குச் செவிகொடுக்க மறுத்து, தங்கள் இதயப் பிடிவாதத்தின்படி நடந்து, வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றிற்கு ஊழியம் செய்து வழிபட்டுவரும் இத்தீய மக்கள் எதற்கும் பயன்படாத இந்தக் கச்சையைப் போல் ஆவார்கள். கச்சை ஒருவரது இடையோடு ஒட்டியிருப்பதுபோல இஸ்ரயேல், யூதா வீட்டார் யாவரும் என்னோடு ஒன்றித்திருக்கச் செய்தேன். அவர்கள் எனக்கு மக்களாகவும் பெயராகவும் புகழாகவும் மாட்சியாகவும் இருக்கச் செய்தேன். அவர்களோ எனக்குச் செவிசாய்க்கவில்லை" என்கிறார் ஆண்டவர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - இச 32: 18-19, 20-21 (பல்லவி: 18a)
=================================================================================
பல்லவி: உன்னை ஈன்ற பாறையைப் புறக்கணித்தாய்.

18 `உன்னை ஈன்ற பாறையைப் புறக்கணித்தாய்; உன்னை உருவாக்கிய கடவுளை மறந்துவிட்டாய்'. 19 தம் மைந்தரும் தம் மகளிரும் தமக்குச் சினமூட்டியதை, ஆண்டவர் கண்டு அவர்களை இகழ்ந்து ஒதுக்கினார். பல்லவி

20 அவர் உரைத்தார்: எனது முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக் கொள்வேன்; அவர்களது முடிவு என்னவென்று நான் கவனித்துக் கொள்வேன்; ஏனெனில், அவர்கள் கேடுகெட்ட தலைமுறையினர்; நேர்மை அறவே அற்ற பிள்ளைகள். பல்லவி

21 இல்லாத தெய்வத்தால் எனக்கு எரிச்சலூட்டினர்; அவர்களின் சிலைகளால் எனக்கு சினமூட்டினர்; ஒன்றுமில்லாத இனத்தால் அவர்களுக்கு எரிச்சலூட்டுவேன்; மதிகெட்ட வேற்றினத்தால் அவர்களுக்குச் சினமூட்டுவேன். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(யாக் 1: 18)
அல்லேலூயா, அல்லேலூயா! தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகள் ஆகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
கடுகு விதை வளர்ந்து வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 31-35

அக்காலத்தில் இயேசு மக்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: "ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும் விடச் சிறியது. ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்."

அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: "பெண் ஒருவர் புளிப்பு மாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்பு மாவுக்கு ஒப்பாகும்." இவற்றை எல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை. "நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன்" என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

👼🏿👼🏾⛪👼🏽👼🏼⛪👼🏻👼

சிந்தனை

சிறியதும் அழகானது. சிறிய மந்தையே அஞ்சாதீர்கள்.

சிறிய நிலையில் நாம் வாழ்ந்தாலும் நம்மைக் கொண்டு படைத்தவரால், அற்புதங்களை செய்திட முடியும். இரண்டு மீணையும், ஐந்து அப்பங்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவு கொடுத்து, மீதியான அப்பங்களை 12 கூடைகளில் எடுத்ததாக விவிலியம் கூறுகின்றது.

சிறிய விதை பல பறவைக்ள வந்து தங்கி இளைப்பாற செய்கின்றது.

நம்மாலும் முடியும். பலர் வாழ்வு பெறச் செய்திட முடியும்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
இறையாட்சியில் கடுகுவிதைகள்போல் ஆவோம்!

ஓர் ஊரில் விவசாயி ஒருவர் இருந்தார். அவர் தன்னுடைய தோட்டத்தில் தக்காளியை விதைத்திருந்தார். அது அமோகமாக விளைந்திருந்தது.

இப்படிப்பட்ட சமயத்தில் ஒருநாள் அவர் பத்துவயதே ஆன தன்னுடைய தம்பி பையனோடு தக்காளித் தோட்டத்தைப் பார்வையிடச் சென்றார். அந்தச் சிறுவன் போகிற வழியெங்கும் மிகவும் துடுக்குத்தனமாக அவரோடு பேசிக்கொண்டே சென்றான். அதைக்கேட்டு அவர் சிரித்துக்கொண்டே வந்தார். சிறிதுநேர நடை பயணத்திற்குப் பின்னர் அவர்கள் இருவரும் தக்காளித் தோட்டத்தை அடைந்தார்கள்.

தக்காளித் தோட்டத்தை அடைந்ததும் சிறுவன், தோட்டமெங்கும் காய்த்துக் கணித்திருந்த தக்காளிப் பழங்களைக் கண்டு வியந்துபோய் நின்றான், "பெரியப்பா! இந்த தோட்டத்திலுள்ள தக்காளிப் பழங்கள் எல்லாம் உங்களுக்குத்தானா?" என்று கேட்டான் அவன். "ஆமாம், அதிலென்ன சந்தேகம்?" என்று கேட்டார் அவர். "இல்ல பெரியப்பா! இந்த தோட்டத்தில் இருக்கின்ற தக்காளிப் பழங்கள் எல்லாம் உங்களுக்கத்தான் என்றால் எனக்கென்று எதுவும் இல்லையா?" என்றான். உடனே அவர் அருகிலிருந்த செடியிலிருந்து ஒரு தக்காளிப் பழத்தைப் பறித்துக்கொண்டு, இந்தத் தக்காளிப் பழம் உனக்கு. இப்போது உனக்கு பத்து வயதாகின்றது, உனக்குக் இருபது வயது ஆகுமட்டும் இதனை வைத்துக்கொண்டு இந்த தோட்டத்தில் நீ என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இருபது வயது ஆகின்றபோது உன்னால் எவ்வளவு நிலத்திற்கு தக்காளிகளைப் பயிரிட முடியுமோ, அவ்வளவு நிலம் உனக்குச் சொந்தம்" என்றார். சிறுவன் தானே சாதாரண ஒரு தக்காளிப் பழத்தை வைத்து என்ன செய்துவிடப் போகின்றான் என்று விளையாட்டாக விட்டுவிட்டார்.

அவனோ மிகவும் மூளைக்காரன். தன்னுடைய பெரியப்பா கொடுத்த சிறிய தக்காளிப் பழத்தைப் பிழிந்து, அதிலிருந்து விதைகளை எடுத்துக் காய வைத்தான். பின்னர் அதனை பெரியாப்பாவின் தோட்டத்தில் ஒரு மூலையில் தூவினான். நாள் தவறாமல் தண்ணீர் ஊற்றிப் பராமரித்து வந்தான். இரண்டு மூன்று மாதங்களிலே அவை நன்றாக காய்த்துக் கனிந்தன. அவன் அந்தப் பழங்களை எல்லாம் பறித்து, பிழிந்து விதையாக்கி மீண்டுமாக நிலத்தில் விதைத்தான். இப்போது தக்காளி விளையும் பரப்பளவு கொஞ்சம் கூடியது. அவன் முன்பைவிடவும் கடினமாக உழைத்து, தக்காளிப் பழங்களை அதிகளவில் அறுவடை செய்து, அவற்றை விதையாக்கிப் பயிரிட்டான். இதனால் ஐந்து ஆண்டுகளில் அவனுடைய பெரியப்பாவின் நிலத்தில் பாதிக்கும் மேல் தக்காளியைப் பயிரிடத் தொடங்கினான். இதைப் பார்த்துப் பயந்து போன அவனுடைய பெரியப்பா, அவனிடம் வந்து, "தம்பி! உன்னைத் தவறாக எடைபோட்டு தேவையில்லாமல் வாக்குறுதி கொடுத்துவிட்டான். போகிற போக்கைப் பார்த்தால், என்னுடைய நிலம் முழுவதையும் உனக்குச் சொந்தமாக்கிக் கொள்வாய் போல, அதனால் இப்போதே என்னுடைய வாக்குறுதியைத் திரும்பப் பெறுகின்றேன்" என்றார்.

சிறியவன் தானே, என்ன பெரிதாகச் செய்துவிடுவான் என்று தான் அந்த விவசாயி நினைத்தார். ஆனால், அவருடைய நினைப்பை எல்லாம் தவிடுபொடியாக்கிது அவனுடைய செயல்பாடு.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு விண்ணரசை கடுகு விதைக்கு ஒப்பிடுகின்றார். கடுகு விதை அளவில் மிகச் சிறியது. ஆனால், அது வளர்ந்து பெரிய மரமாகின்றபோது வானத்துப் பறவையில் அனைத்தும் அதில் தங்கும் அளவுக்கு பெரியதாக இருக்கும். அது போன்றுதான் விண்ணரசு/ இறையாட்சி இருக்கும் என்கின்றார் இயேசு.

இயேசு இறையாட்சியைக் கடுகு விதைக்கு ஒப்பிடுவதில் நிறைய ஆழமான உண்மைகள் இருக்கின்றன. அதில் முதலாவது கடுகுவிதையின் வளர்ச்சி கண்களுக்குத் தெரியாது. சாதாரண ஒரு சிறிய விதைதான், ஆனால் அது பனிரெண்டு அடி வரைக்கும் வளரக்கூடிய பெரிய மரமாகிவிடும். ஆண்டவர் இயேசு தோற்றுவித்த இறையாட்சியும் நாசரேத்து என்ற ஒரு சிறிய கிராமத்தில் தொடங்கினாலும், ஒருநாள் அது உலகமெங்கும் வியாபித்திருக்கும்.

அடுத்ததாக, கடுகு விதை வளர்ந்து மரமாகின்றபோது வானத்துப் பறவைகள் எல்லாம் அதில் தங்குகின்றன. அது போன்றுதான் இறையாட்சியும் ஒரு குறிப்பிட்ட இனத்தாருக்கோ, குலத்தாருக்கோ சொந்தமானது கிடையாது, அது எல்லா மக்களுக்கும் சொந்தமானது. எல்லாரும் இறையாட்சியில் உரிமைக் குடிமக்கள் என்கின்ற உண்மையை ஆண்டவர் இயேசு மிக அழகாக எடுத்துரைக்கின்றார்.

நிறைவாக இந்த உவமையின் வாயிலாக இயேசு சொல்லும் செய்தி இறையாட்சி என்பது ஆண்டவர் தொடங்கியது. எனவே தொடங்கிய காரணத்தை ஆண்டவர் நிறைவேற்றியே தீருவார் என்பதாகும். ஆகவே, மனிதர்களாகிய நாம் ஆண்டவரின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடாமல், அவரோடு இணைந்து செயல்படுவதே மிகவும் சாலச் சிறந்த ஒன்றாகும்.

ஆகவே, இறைவன் ஆட்சியில் எல்லாருக்கும் பங்கு உண்டு என்பதை உணர்வோம், எவரையும் குறைவாக எடைபோடாதிருப்போம். இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================





=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!