Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                            04  ஜூலை  2018  
                                                           பொதுக்காலம் 13ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
நேர்மை வற்றாத ஆறாகப் பாய்ந்து வருக!

இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 5: 14-15, 21-24

நன்மையை நாடுங்கள், தீமையைத் தேடாதீர்கள்; அப்பொழுது நீங்கள் சொல்வது போல படைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருப்பார். தீமையை வெறுத்து நன்மையை நாடுங்கள்; நகர் வாயிலில் நீதியை நிலைநாட்டுங்கள்; அப்பொழுது ஒருவேளை படைகளின் கடவுளாகிய ஆண்டவர் யோசேப்பின் வீட்டாரில் எஞ்சியிருப்போர்க்கு இரக்கம் காட்டுவார்.

"உங்கள் திருவிழாக்களை நான் வெறுத்து அருவருக்கின்றேன்; உங்கள் வழிபாட்டுக் கூட்டங்களில் எனக்கு விருப்பமே இல்லை. எரிபலிகளையும் தானியப் படையல்களையும் எனக்கு நீங்கள் செலுத்தினாலும் நான் ஏற்க மாட்டேன்; கொழுத்த விலங்குகளை நல்லுறவுப் பலிகளாகச் செலுத்தும் போது நான் ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன்.

என் முன்னிலையில் நீங்கள் இரைச்சலிட்டுப் பாடும் பாடல்களை நிறுத்துங்கள், உங்கள் வீணைகளின் ஓசையை நான் கேட்க மாட்டேன். மாறாக, நீதி வெள்ளமெனப் பொங்கி வருக! நேர்மை வற்றாத ஆறாகப் பாய்ந்து வருக!


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 50: 7. 8-9. 10-11. 12-13. 16bc-17 (பல்லவி: 23b)
=================================================================================
 பல்லவி: தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுள் தரும் மீட்பைக் கண்டடைவர்.

7 என் மக்களே, கேளுங்கள்; நான் பேசுகின்றேன்; இஸ்ரயேலே! உனக்கு எதிராய்ச் சான்றுகூறப் போகின்றேன்; கடவுளாகிய நானே உன் இறைவன். பல்லவி

8 நீங்கள் கொண்டுவரும் பலிகளை முன்னிட்டு நான் உங்களைக் கண்டிக்கவில்லை; உங்கள் எரிபலிகள் எப்போதும் என் முன்னிலையில் உள்ளன. 9 உங்கள் வீட்டின் காளைகளையோ, உங்கள் தொழுவத்தின் ஆட்டுக் கிடாய்களையோ நான் ஏற்றுக்கொள்வதில்லை. பல்லவி

10 ஏனெனில், காட்டு விலங்குகளெல்லாம் என் உடைமைகள்; ஓராயிரம் குன்றுகளில் மேயும் கால்நடைகளும் என்னுடையவை. 11 குன்றத்துப் பறவை அனைத்தையும் நான் அறிவேன்; சமவெளியில் நடமாடும் யாவும் என்னுடையவை. பல்லவி

12 எனக்குப் பசியெடுத்தால் நான் உங்களைக் கேட்கப் போவதில்லை; ஏனெனில், உலகும் அதில் நிறைந்துள்ள யாவும் என்னுடையவையே. 13 எருதுகளின் இறைச்சியை நான் உண்பேனோ? ஆட்டுக் கிடாய்களின் குருதியைக் குடிப்பேனோ? பல்லவி

16bஉ என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி? என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை? 17 நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்; என் கட்டளைகளைத் தூக்கியெறிந்து விடுகின்றீர்கள். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யாக் 1: 18

அல்லேலூயா, அல்லேலூயா! தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகளாகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
குறித்த காலம் வருமுன்னே, எங்களை வதைக்கவா இங்கே வந்தீர்?

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 28-34

அக்காலத்தில் இயேசு கலிலேயாவின் மறு கரையை அடைந்து கதரேனர் வாழ்ந்த பகுதிக்கு வந்தபோது, பேய் பிடித்த இருவர் கல்லறைகளிலிருந்து வெளியேறி அவருக்கு எதிரே வந்துகொண்டிருந்தனர். அவ்வழியே யாரும் போகமுடியாத அளவுக்கு அவர்கள் மிகவும் கொடியவர்களாய் இருந்தார்கள்.

அவர்கள், "இறைமகனே, உமக்கு இங்கு என்ன வேலை? குறித்த காலம் வருமுன்னே எங்களை வதைக்கவா இங்கே வந்தீர்?" என்று கத்தினார்கள். அவர்களிடமிருந்து சற்றுத் தொலையில் பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்துகொண்டிருந்தன. பேய்கள் அவரிடம், "நீர் எங்களை ஓட்டுவதாயிருந்தால் அப்பன்றிக் கூட்டத்திற்குள் எங்களை அனுப்பும்" என்று வேண்டின.

அவர் அவற்றிடம், "போங்கள்" என்றார். அவை வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. உடனே அக்கூட்டம் முழுவதும் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து நீரில் வீழ்ந்து மடிந்தது. பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் ஓடிப்போனார்கள்.

அவர்கள் நகருக்குள் சென்று, பேய் பிடித்தவர்களைப் பற்றிய செய்தியையும், நடந்த அனைத்தையுமே அறிவித்தார்கள். உடனே நகரினர் அனைவரும் இயேசுவுக்கு எதிர் கொண்டு வந்து, அவரைக் கண்டு, தங்கள் பகுதியை விட்டு அகலுமாறு வேண்டிக்கொண்டனர்.

சிந்தனை

பிற உயிர்களைவிட மனிதன் மாண்புள்ளவன். அவனுடைய நலமும் மிகவே முக்கியமானது.

இன்றைய காலத்தில் போலி மருந்து, போலி உணவு என மனசாட்சியை மழுங்கடித்து மனிதனின் உயிர் மீது விளையாண்டு வரும் மனிதர்களை என்னவென்று சொல்லுவது.

பிற உயிர்கள் கூட தன் இனம் அழிவதை விரும்புவதில்லை. மனிதர்கள் துணிச்சலாக செய்து வருவது சிறந்த படைப்பாகிய மனிதத்திற்கே அவமானகரமானது.

மனிதர்களில் கடவுளின் சாயல் மங்காது பார்த்துக் கொள்வது ஒவ்வொரு மனிதனின் கடமையுமும் பொறுப்புமாகும். இதை விடுத்து இழிவான காரியங்களை செய்வோரை சழூகம் ஒரங்கட்ட வேண்டும்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
இயேசுவை யாரென அறியாதவர்கள் நாம்!

ஒருவன் அம்பானியைப் போல மிகப்பெரிய தொழிலதிபராக வேண்டும் என்று ஆசைபட்டு, தன் சக்திக்கு மீறிய வியாபாரம் ஒன்றை துவங்கினான்; அதில் கஷ்டப்பட்டு உழைக்கவும் செய்தான். ஆனால், சரியாக திட்டமிட தெரியாததால், அம்பானி ஆவதற்கு பதிலாக, ஆண்டியாகி போனான். ஏகப்பட்ட கடன் வட்டிகட்ட முடியவில்லை. குடும்ப சக்கரம் சுழலாமல் தடைப்பட்டது. குடும்பம் ஏழ்மையில் தவித்தது. இதனால், வியாபாரத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள், தினமும் வந்து அழுத்தம் கொடுத்ததால், அவன் நிம்மதி சுத்தமாக போய் விட்டது. அடுத்து என்ன செய்வது என்ற கவலை அவனை அரித்து தின்றது. இதற்கு மேலும், தாக்கு பிடிக்கவே முடியாது என்று தோன்றிற்று.

ஒருநாள் இரவு வீட்டுக்கு செல்ல விருப்பமில்லாமல் ஆற்றங்கரைக்கு சென்று அமர்ந்தான். அவன் மனம் முழுவதும் கடன் சுமையைப் பற்றியே சிந்தித்து கொண்டிருந்தது. அப்போது, இருட்டில் அவன் கைக்கு எட்டுகிற தொலைவில் ஒரு சிறிய கூழாங்கற் குவியல் தட்டுப்பட்டது. அதை எடுத்து ஆற்றில் ஓடி கொண்டிருந்த தண்ணீருக்குள் வீசியெறிந்தான். இவ்வாறு அவன் மனம் கவலையில் உழன்று துடிக்க, கூழாங்கற்களை தண்ணீருக்குள் விட்டெறிந்து கொண்டே இருந்தது கை. இரவு முழுவதும் தூங்காமல் கண்விழித்தபடியே, சிந்தனையில் தவித்து கொண்டிருந்தான்.

திடீரென்று பார்த்தால் கிழக்கே கதிரவன், தன் கதிர்களை பரப்ப துவங்கினான். விடிந்த பின், அவன் மிகுந்த அதிர்ச்சியடைந்தான். ஏனெனில், அங்கிருந்த கற்குவியலில் இப்போது ஒரேயொரு கல் மட்டுமே மிஞ்சியிருந்தது. அத்தனை கற்களையும் ஆற்றுக்குள் எறிந்திருப்பது, அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது. கடைசியாக இருந்த கல்லையும் ஆற்றுக்குள் வீசப்போனவனுக்கு ஒரு சந்தேகம் முளைவிட்டது. விடிந்து விட்டதால், நன்றாக சூரிய வெளிச்சம் பரவியிருந்தது. இதனால், அந்த கல்லை அவனால் நன்றாக பார்க்க முடிந்தது. அதை திருப்பித் திருப்பி பார்த்தவன் அதிர்ச்சி அடைந்தான். காரணம், அது சாதாரண கூழாங்கல் அல்ல, விலை உயர்ந்த வைரக்கல். இரவு முழுவதும் இந்த வைரக்கற்களை, கூழாங்கற்கள் என்று எண்ணி ஆற்றுக்குள் விட்டெறிந்ததை எண்ணி நொந்து போனான்.

வைரக்கல்லை கூழாங்கல் என நினைத்த அந்த மனிதனைப் போல்தான், நற்செய்தி வாசகத்தில் வரும் நகரத்தவர் இயேசு யாரேனத் தெரியாமல், அவரைத் தங்களுடைய பகுதியிலிருந்து அகலுமாறு கேட்டுக்கொள்கின்றார்கள். இது எவ்வளவு வேதனையான விசயம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கலிலேயாவின் மறுகரையை அடைந்து, அங்கிருந்து கதரேனர் வாழுகின்ற பகுதிக்குச் செல்கின்றபோது, அங்கே பேய்பிடித்து, மிகவும் கொடிய நிலையில் இருந்த இருவரை எதிர்கொள்கின்றார். இந்த இருவரும் மனிதத் தோற்றமே இல்லாமல் இருந்தார்கள் என்பதுதான் உண்மை. எனவே இத்தகைய நிலையில் இருந்தவர்களை, அவர்களிடமிருந்த தீய ஆவியினை ஓட்டி, அவர்களை மனித மாண்புள்ளவர்களாக மாற்றுகின்றார். இதைத் தொடர்ந்து தீய ஆவி பிடித்திருந்த அந்த இருவருக்கும் நடந்ததைக் கேள்விப்பட்டு நகரத்தவர் அங்கே வருகின்றனர். அவர்கள் இயேசுவிடம் வந்து, தங்களுடைய பகுதியிலிருந்து அகலுமாறு கேட்டுக் கொள்கின்றார்கள்.

இங்கே நகரத்தவர் பேய்பிடித்து மிகவும் கொடிய நிலையில் இருந்த இருவர் நல்ல நிலையில் இருக்கின்றார்களே என்பதை நினைத்து மகிழ்ச்சியடையாமல், தங்களுடைய பன்றிகள் அழிந்து போயிற்றே என்று கவலை கொள்வதும் அதன்பொருட்டு இயேசுவை தங்களுடைய பகுதியிலிருந்து அகலுமாறு சொல்வதும் மிகவும் வேதனையான ஒரு விசயமாக இருக்கின்றது.

இந்த நற்செய்திப் பகுதி நமக்கு இரண்டு உண்மைகளை மிகத் தெளிவாக விளக்குகின்றது. ஒன்று பலர் மனிதர்களுக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவத்தை விடவும் பொருட்களுக்கும் பணத்திற்கும்தான் அதிகமான முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதாகும். இரண்டு வாழ்க்கையில் எது முக்கியமோ அதை விட்டுவிட்டு, சாதாரண காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகும்.

இயேசு வல்லமை மிகுந்தவர், இறைமகன். அப்படியிருந்தபோதும் அவருடைய முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளாமல், நகரத்தவர் தங்களுடைய பகுதியிலிருந்து அவரை அனுப்பியதை என்னவென்று சொல்வது?. இதைத்தான் யோவான் நற்செய்தியாளர் இப்படிச் சொல்கின்றார், அவர் தமக்குரியவர்களிடம் வந்தார், அவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்று (யோவா 1:11). நாமும்கூட பல நேரங்களில் இயேசுவை யாரென அறியாமல், அவரை உதறித்தள்ளுவது வருத்தத்திற்கு உரிய காரியம்தான்.

ஆகவே, நாம் இயேசுவை யாரென முதலில் அறிவோம். அவரை நம்முடைய வாழ்வில் வரவேற்போம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!