Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                            03  ஜூலை  2018  
                                                           பொதுக்காலம் 13ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் -  புனித தோமா - இந்தியாவின் திருத்தூதர் பெருவிழா
=================================================================================
மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 52: 7-10

நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும், நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும், சீயோனை நோக்கி, `உன் கடவுள் அரசாளுகின்றார்' என்று கூறவும் வருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன! இதோ, உன் சாமக் காவலர் குரல் எழுப்புகின்றனர்; அவர்கள் அக்களித்து ஒருங்கே ஆரவாரம் செய்கின்றனர்; ஆண்டவர் சீயோனுக்குத் திரும்பி வருவதை அவர்கள் தம் கண்களாலேயே காண்பர். எருசலேமின் பாழ் இடங்களே, ஒருங்கே ஆர்ப்பரித்துப் பாடுங்கள்; ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்; எருசலேமுக்கு மீட்பு வழங்கியுள்ளார். பிற இனத்தார் அனைவரின் கண்களும் காண ஆண்டவர் தம் தூய புயத்தினைத் திறந்து காட்டியுள்ளார்; மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 117: 1. 2 (பல்லவி: மாற் 16: 15)
=================================================================================
 பல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

1 பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! பல்லவி

2 ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. பல்லவி


இரண்டாம் வாசகம்

திருத்தூதர்களை அடித்தளமாகக் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 19-22


சகோதரர் சகோதரிகளே, இனி நீங்கள் அன்னியர் அல்ல; வேற்று நாட்டினரும் அல்ல. இறைமக்கள் சமுதாயத்தின் உடன் குடிமக்கள்; கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள்.

கிறிஸ்துவின் உறவில் கட்டடம் முழுவதும் இசைவாகப் பொருந்தி, ஆண்டவருக்கென்று தூய கோவிலாக வளர்ச்சி பெறுகிறது. நீங்களும் அவரோடு இணைந்து தூய ஆவி வழியாகக் கடவுளின் உறைவிடமாகக் கட்டப்பட்டு வருகிறீர்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 20: 29

அல்லேலூயா, அல்லேலூயா! நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 24-29

பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா,  இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை.

மற்றச் சீடர்கள் அவரிடம், "ஆண்டவரைக் கண்டோம்" என்றார்கள். தோமா அவர்களிடம், "அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்" என்றார். எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள்.

அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்தினார்.

பின்னர் அவர் தோமாவிடம், "இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்" என்றார்.

தோமா அவரைப் பார்த்து, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!" என்றார். இயேசு அவரிடம், "நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" என்றார்.

சிந்தனை

பெருவிழா நல்வாழ்த்துக்கள்.

தோமாவின் ஆசை நமக்கு ஒரு நல்ல பாடமே.

அவருடைய காயப்பட்ட தழும்புகளை நான் காண வேண்டும். என்ற ஆசை வெளிப்பாடு, காயங்களை, அதன் தழும்புகளை காணச் செய்தது. என் ஆண்டவரே, என் தேவனே என்று வழிபடச் செய்தது.

இன்றைக்கு காயப்பட்ட மனிதர்களில், கிறிஸ்துவை கண்டு வழிபட நம்மை அழைக்கின்றார் இயேசு. பயணிக்கின்ற திருஅவையில் பல இதயங்கள் காயத்தோடு பயணிக்கின்றனர். திருஅவையினால் காயப்பட்டவர்கள், திருஅவைக்காக காயப்பட்டவர்கள் என பல நூறு பேர் உண்டு. இவர்களை கண்டு இவர்களுக்கு நம்முடைய பணியினை செய்ய முன்வர விடுக்கப்படும் அழைப்பை ஏற்று அர்ப்பணிப்போம் நம்மை. பலியை அல்ல. இரக்கத்தையே விரும்பும் இறைவனுக்கு நாம் செலுத்தும் உன்னத பலியாகும்.

 

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
பயம் எதற்கு? பரமனின் துணை நமக்கிருக்க?

சிறுவன் ஒருவன் காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது மரத்தில் கண்ணை பறிக்கும் வகையில் பழங்கள் தொங்கிக் கொண்டிருந்தன.

இதனைப் பார்த்த அவன் உடனே அதனை பறிக்க அந்த மரத்தின்மீது ஏறி, கிளையில் நகர்ந்து சென்றான். ஆனால் அந்த கிளையோ அவனது பாரம் தாங்காமல் முறியத் தொடங்கியது. அதனால் அவன் மற்றொரு கிளைக்கு நகர்ந்தான். பின் அவன் பயந்து கொண்டே கண்ணை மூடிக்கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்" என்று கத்தத் தொடங்கினான்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு துறவி, அவனைப் பார்த்து, அவனுக்கு உதவ முன் வந்தார். அதனால் அவர் அவன்மீது சிறிய கல்லைவிட்டு எறிந்தார். அவனோ கல்லை எறிந்ததும் அவர்மீது கடும்சினங்கொண்டு, முயற்சிசெய்து கீழே இறங்கி வந்தான். பின் அந்த துறவியைக் கண்டு கோபத்துடன் சரமாரியாகத் திட்டினான். "நான் உங்களிடம் உதவிதானே கேட்டேன், ஏன் அப்படி செய்தீர்கள்?" என்று கேட்டான்.

அதற்கு அந்த துறவி "நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்று சொன்னார். அவனோ திருதிருவென முழித்தான். பின்னர் அந்த துறவி அவனிடம் விளக்கினார். "நான் உன்னை பார்த்தபோது பயத்தில் உன் மூளை வேலை செய்யவில்லை. ஆகவே நான் உன் மூளைக்கு வேலை கொடுப்பதற்கு, கல்லை எறிந்தேன். நான் எறிந்ததும், நீ யோசிக்க ஆரம்பித்து, கீழே இறங்கிவிட்டாய். உன் பயத்தை போக்கவே நான் அவ்வாறு செய்தேன்" என்று கூறி சென்று விட்டார்.

சமயங்களில் நமக்கு பயம் வருகின்றபோது நாம் என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்று தெரியாமல் செய்கின்றோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்திலும் சீடர்கள் இயேசுவோடு கடலில் பயனனம் செய்கின்றபோது, திடிரென்று கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு, அலைகள் அவர்கள் பயணம் செய்த படகுக்கு மேல் எழுப்புகின்றபோது, படகில் ஓர் ஓரமாய் உறங்கிக்கொண்டிருந்த இயேசுவிடம் "ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம்" என்று கத்துகிறார்கள்.

சீடர்கள் எந்தளவுக்கு பயந்திருந்தார்கள் என்றால், இறைமகனாகிய இயேசு தங்களோடு இருக்கின்றார். அவர் எத்துணை பெரிய ஆபத்திலிருந்தும் தங்களைக் காப்பாற்றுவார் என்பதை அறியாத அளவுக்கு இருந்தார்கள். அதுதான் இங்கு மிகப்பெரிய வேடிக்கையாக இருக்கின்றது. இப்படி பயந்து நடுங்கியவர்களைப் பார்த்துத்தான் ஆண்டவர் இயேசு, "நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்? என்று கேட்டு, காற்றையும் கடலையும் கடிந்து கொள்கின்றார். உடனே அங்கு பேரமைதி உண்டாகின்றது.

மத்தேயு நற்செய்தியில் இடம்பெறுகின்ற இப்பகுதி நமக்கு ஒருசில உண்மைகளை மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது. அதில் முதலாவது. நாம் எத்தகைய சூழ்நிலையிலும் அஞ்சக்கூடாது என்பது ஆகும்.. ஏன் அஞ்சக்கூடாது என்றால், நம்மைப் படைத்த இறைவன் நம்மோடு இருக்கிறார் என்பதலாயே ஆகும். திருப்பாடல் 23:4ல் வாசிக்கின்றோம், "சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேரிட்டாலும் நேர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்" என்று. ஆம், நம்மைப் படைத்த இறைவன் நம்மோடு இருக்கின்றபோது நாம் ஏன் அஞ்சவேண்டும்?

அடுத்ததாக, இந்தப் பகுதி நமக்குச் சுட்டிக்காட்டக்கூடிய உண்மை யாதெனில், அனுதினமும் நாம் சந்திக்கின்ற சவால்கள், பிரச்சனைகள், கஷ்ட நஷ்டங்கள் யாரும் நம்மைப் படைத்து, பராமரித்து வருகின்ற இறைவனைவிடப் பெரியவை கிடையாது என்பதாகும். பல நேரங்களில் நாம் நினைப்பதுண்டு நாம் சந்திக்கின்ற பிரச்னையை உலகத்தில் இருக்கின்ற யாரும் சந்திப்பது கிடையாது, சந்திக்கப் போவதும் கிடையாது என்று. அப்படிக் கிடையாது. இயேசு சந்திக்காத பிரச்சனைகளா? படாத அவமானங்களா?. ஆகவே, நம்மை வாட்டி வதைக்கும் பிரச்சனைகளை எல்லாம், அவற்றைவிட பெரியவரான நம் இறைவன் அடக்கி ஆண்டு, நம்மைக் காத்திடுவார் என்ற உண்மையை உணர்ந்தவர்களாய் வாழவேண்டும்.

நிறைவாக இப்பகுதியிலிருந்து நாம் அறிந்துகொள்ளவேண்டிய உண்மை, இயேசுவுக்கு எல்லாமே கட்டுப்பட்டவை என்பதாகும். நற்செய்தியில் இயேசு கிறிஸ்து காற்றையும் கடலையும் கடிந்துகொல்வதைப் பார்த்துவிட்டு, காற்றும் கடலும் இவருக்கு அடிபணிகின்றனவே இவர் யாரோ என்று பேசிக்கொள்கின்றார்கள். பவுலடியார் கொலோசேயாருக்கு எழுதிய மடலில் சொல்வது போல, இயேசுவுக்கு விண்ணில்லுள்ளவை, மண்ணிலுள்ளவை என அனைத்தும் கட்டுப்பட்டன. அப்படிப்பட்டவர் நம்மோடு இருக்கின்றபோது நாம் எதற்கு அஞ்சவேண்டும்.

ஆகவே, இயேசுவின் உடனிருப்பை நம் வாழ்வில் உணர்வோம்; எல்லாவிதமான அச்ச உணர்விலிருந்தும் விடுபடுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
அச்சம் எதற்கு?, ஆண்டவர் துணை நமக்கிருக்க

நான்கு வயது சிறுவன் ஒருவன் ஐஸ்கிரீம் பார்லருக்குச் சென்று, தனக்குப் பிடித்த ஐஸ்கிரீம் ஒன்றை வாங்கி, வரும் வழியில் அதை சாப்பிட்டுக்கொண்டே வந்தான். அப்போது எதிர்திசையில் ஓடிவந்த சேட்டைக்கார சிறுவர்கள் ஒருசிலர், அவன் வைத்திருந்த ஐஸ்கிரீமைத் தட்டிவிட்டு, அதைக் கண்டுகொள்ளாதவர்கள் போல் ஓடிப்போனார்கள்.

தான் சாப்பிட்டுக்கொண்டு வந்த ஐஸ்கிரீம் இப்படிக் கீழே விழுந்துவிட்டதே என்று அழுது அடம்பிடித்தான் அந்தச் சிறுவன்.

இதைத் தூரத்திலிருந்து கவனித்துக்கொண்டிருந்த பெண்மணி ஒருத்தி, அவனிடத்தில் வந்து, "தம்பி இதை நினைத்து நீ அழவேண்டாம். நான் உனக்கு ஒரு காரியம் சொல்வேன். எனக்காக அதை நீ செய்வாயா?" என்று கேட்டாள். சிறுவனும் சரி என்றான்.

பின்னர் அந்தப் பெண்மணி சிறுவனைப் பார்த்து, "இப்போது நீ கீழே கிடக்கின்ற ஐஸ்கிரீமில் குதித்துக் குதித்து விளையாடு" என்றாள். அவனும் ஐஸ்கிரீமில் குதித்துக் குதித்து விளையாடத் தொடங்கினான். இந்த அனுபவம் அவனுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. ஐஸ்கிரீம் அவன் கால் முழுவதும்பட்டு, அவனுக்கு ஒருவிதமான சிலிர்ப்பையும், குளிர்ச்சியையும் தந்தது.

அப்போது அந்த பெண்மணி சிறுவனிடம், "இந்த அனுபவம் எப்படி இருக்கிறது?" என்று கேட்டாள். அவன், "மிகவும் நன்றாக இருக்கிறது" என்று ஆச்சரியத்தோடு பேசினான். பின்னர் அவள் சிறுவனிடம், "வாழ்க்கையில் நமக்கு வரும் எந்தக் கஷ்டத்தையும் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அதை நாம் சந்தோசமாக மாற்றியமைத்துக் கொள்ளவேண்டும்" என்று ஆறுதல்மொழி பேசி அவனை வீட்டிற்கு அனுப்பி வைத்தாள்.

வாழ்க்கையில் நமக்கு வரும் துன்பங்கள், இடர்கள் யாவற்றையும் பெரிதாக எடுத்துக் கொண்டால், நமது வாழ்வே பாழ்பட்டுப்போய்விடும். மாறாக நமக்கு வரும் இடர்களையும், துன்பத்தையும் சந்தோசமாக மாற்றிக்கொள்ளக் கூடிய வித்தை நமக்குத் தெரிந்தால், நமது வாழ்வில் என்றும் பெருமகிழ்ச்சிதான்.

நற்செய்தி வாசகத்தில் இயேசுவும், அவருடைய சீடர்களும் கடலிலே போய்கொண்டிருக்கும்போது, கடல் கொந்தளிப்பு ஏற்படுகிறது; படகுக்கு மேல் அலைகள் எழும்புகின்றன. இதைக் கண்டு சீடர்கள் திகிலுறுகிறார்கள். "ஆண்டவரே நாங்கள் சாகப் போகிறோமே, உமக்குக் கவலை இல்லையா?" என்று அலறுகிறார்கள். அதற்கு இயேசு, "நம்பிக்கை குற்றியவர்களே! ஏன் அஞ்சுகிறீர்கள்?" என்று சொல்லி காற்றையும், கடலையும் கடிந்துகொள்கிறார். உடனே பேரமைதி உண்டாகிறது.

இந்த நிகழ்வில் சீடர்கள், இயேசு தங்களோடு இருக்கிறார் என்ற உண்மைகூட உணர்ந்துகொள்ளாமல் அலறுகிறார்கள். இது மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது. எல்லா அதிகாரமும், ஆற்றலும் கொண்ட இறைமகனாகிய இயேசு தங்களோடு இருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்துகொள்ளாத சீடர்களைப் போன்றுதான், நாமும் பலநேரங்களில் இருக்கின்றோம்; அவரது பிரசன்னத்தை சந்தேகம் கொள்கிறோம். ஆனால் ஆண்டவர் இயேசுவோ என்றுமே நம்மோடு உடனிருக்கிறார்.

வாழ்க்கையில் நமக்கு வரும் பிரச்சனைகள், துன்பங்கள் யாவும், நாம் நம்பி வாழும் ஆண்டவர் இயேசுவைவிட பெரியவை அல்ல என்று உணர்ந்து வாழ்ந்தோம் என்றால், நமக்கு வரும் துன்பங்களை நாம் எளிதாக வெற்றிகொள்ள முடியும்.

எசாயா புத்தகம் 43:2 ல் வாசிக்கின்றோம், "நீர் நிலைகள் வழியாக நீ செல்லும்போது நாம் உன்னோடு இருப்பேன்; ஆறுகளைக் கடந்துபோகும்போது அவை உன்னை மூழ்கடிக்கமாட்டா; தீயில் நடந்தாலும் சுட்டெரிக்கப்பட மாட்டாய்; நெருப்பு உன்மேல் பற்றி எரியாது" என்று. ஆக, நம்மைக் காத்து வழிநடத்தும் இறைவன் நம்மோடு இருக்கும்போது நாம் எதற்கு பயப்படவேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.

எனவே, "உலக முடிவுவர எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்" என்று சொன்ன இயேசுவின் வாக்குறுதியை நம் நினைவில்கொண்டு, வாழ்வில் துன்பங்கள் வந்தாலும், தொடர்ந்து நடப்போம் அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
புனித தோமா - இந்தியாவின் திருத்தூதர் பெருவிழா


ஒரு கப்பலிலே மக்கள் எல்லோரும் பயணம் செய்துகொண்டிருந்தனர். ஆட்டம், பாட்டம் என்று அந்தக் கப்பலே குதூகலத்தால் நிரம்பி இருந்தது. அப்போது திடிரென்று குழந்தை ஒன்று தவறி கடலுக்குள் விழுந்துவிட்டது. இதைப் பார்த்த கப்பல் மாலுமி உடனே கடலுக்குள் பாய்ந்து, குழந்தையை மீட்டுக்கொண்டு வந்தார்.

உறவினர்களோடு மும்முரமாகப் பேசிக்கொண்டிருந்த அந்தக் குழந்தையின் தாய், தன்னுடைய குழந்தை கடலுக்குள் விழுந்து, காப்பாற்றப் பட்டதைக் கேள்விப்பட்டு பதறிப்போய் ஓடி வந்தாள். அங்கே குழந்தை பத்திரமாக இருப்பதை கண்டு மகிழ்ந்தாள்.

சிறுது நேரத்தில் மக்கள் கூட்டத்தைப் பார்த்து, "என் குழந்தையை யார் காப்பாற்றினார்" என்று சத்தமாகக் கேட்டாள். குழந்தையைக் காப்பாற்றிய தன்னை நிச்சயம் பாராட்டுவார் என்று நினைத்துக்கொண்டிருந்த மாலுமி, "நான்தான்" என்றார். உடனே அந்தப் பெண், "என்னுடைய குழந்தை போட்டிருந்த கொலுசைக் காணவில்லை. அதை எடுத்தீர்களா?" என்று சந்தேகத்தோடு கேட்டாள். இதைச் சற்றும் எதிர்பாராத, மாலுமி திகைத்துப்போய் நின்றார்.

ஆபத்தில் உதவியவர்களையே சந்தேகப்படும் மனிதர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள் என்று இக்கதையானது நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

இன்றைக்கு நாம் விழாக் கொண்டாடும் தூய தோமா சந்தேகப் பேர்வழியாகவே அறியப்பட்டவர். ஆனாலும் உயிர்த்த ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவை சந்தித்த பிறகு அவர் இயேசுவுக்காக தன்னுடைய உயிரையும் கொடுக்கத் துணிகிறார்.

நற்செய்தி வாசகத்திலே இயேசு கிறிஸ்து உயிர்த்துவிட்டதை சீடர்கள் அவரிடத்திலே சொன்னபோது அதனை நம்ப மறுத்து, "அவருடைய கைகளில் ஏற்பட்ட காயங்களில் என் விரலையும், அவருடைய விலாவில் ஏற்பட்ட காயங்களில் என் கையையும் விட்டாலன்றி நம்ப மாட்டேன்" என்கிறார். இறுதியில் இயேசு அவருக்குத் தோன்றியபோது, "ஆண்டவரே! என் தேவனே" என்று தன்னுடைய நம்பிக்கை அறிக்கையை வெளிப்படுத்துகிறார்.

பல நேரங்களில் நாமும் கடவுளை நம்பாதவர்களாக, ஏன் நம்மோடு வாழும் மனிதர்களைக்கூட நம்பாத மக்களாகவே இருக்கிறோம். இதனால் நாம் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். குடும்பத்தில் கணவன் மனைவியின் மீதும், மனைவி கணவன் மீதும் சந்தேகம் கொள்வதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் ஏராளம். ஆதலால் சந்தேகம் என்னும் சாபக்கேட்டை நம்மிடமிருந்து அகற்றுவோம்.

தூய தோமையாரைப் போன்று நாமும் இயேசுவுக்காக உயிர்கொடுப்போம் (யோவா11:16). தூய தோமையார் கடல் கடந்து நம்முடைய நாட்டிற்கு வந்து, நற்செய்தியை அறிவித்தது போன்று, நாமும் உலகெங்கும் சென்று நற்செய்தி அறிவிப்போம். இறைவனின் அருள் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!