Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                            02  ஜூலை  2018  
                                                           பொதுக்காலம் 13ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 ஏழைகளின் தலைகளை மண்ணில் புழுதிபட மிதிக்கின்றார்கள்.

இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 2: 6-10, 13-16

ஆண்டவர் கூறுவது இதுவே: "இஸ்ரயேல் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்; ஏனெனில், அவர்கள் நேர்மையாளரை வெள்ளிக் காசுக்கும் வறியவரை இரு காலணிக்கும் விற்கின்றார்கள்.

ஏழைகளின் தலைகளை மண்ணில் புழுதிபட மிதிக்கின்றார்கள்; ஒடுக்கப்பட்டோரின் நெறியைக் கெடுக்கின்றார்கள்; மகனும் தந்தையும் ஒரே பெண்ணைக் கூடி, என் திருப்பெயரைக் களங்கப்படுத்துகிறார்கள். கடன்காரரிடமிருந்து பறித்த ஆடைகளை விரித்துப் போட்டு, எல்லாப் பலிபீடங்களின் முன்பும் கிடந்து கொண்டு அபராதம் விதித்துக் கிடைத்த மதுவினைத் தங்கள் கடவுளின் இல்லத்தில் குடிக்கின்றார்கள்.

நானோ கேதுரு மரத்தின் உயரமும் கருவாலி மரத்தின் வலிமையும் கொண்ட எமோரியரை அவர்கள் முன்பாக அழித்துவிட்டேன்; மேலே அவர்களுடைய கனிகளையும், கீழே அவர்களுடைய வேர்களையும் அழித்து விட்டேன்; மேலும், எகிப்து நாட்டிலிருந்து உங்களை அழைத்து வந்து, நாற்பது ஆண்டுகள் பாலைநிலத்தில் உங்களை வழிநடத்தி, எமோரியர் நாட்டை நீங்கள் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளச் செய்தேன். வைக்கோல் பொதி நிறைந்த வண்டி அழுந்துவது போல, உங்களையும் நீங்கள் இருக்கும் இடத்திலேயே அழுத்துவேன். விரைந்தோடுகிறவனும் தப்பமுடியாது; வலிமையுள்ளவனும் தன் வலிமையை இழந்து விடுவான்; வீரனாலும் தன்னுயிரைக் காத்துக் கொள்ள முடியாது. வில்லேந்தும் வீரன் எதிர்த்து நிற்கமாட்டான், விரைந்தோடுபவனும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளமாட்டான், குதிரை வீரனாலும் தன்னுயிரைக் காத்துக்கொள்ள முடியாது. அந்நாளில் வலிமை மிக்கவர்களுள் நெஞ்சுரம் கொண்டவன் கூடப் படைக்கலன்களைத் தூக்கி எறிந்து விட்டு ஓடுவான்" என்கிறார் ஆண்டவர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 50: 16bc-17. 18-19. 20-21. 22-23 (பல்லவி: 22a)
=================================================================================
பல்லவி: கடவுளை மறந்தோரே! இதைக் கண்டுணருங்கள்.

16bஉ என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி? என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை? 17 நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்; என் கட்டளைகளைத் தூக்கியெறிந்து விடுகின்றீர்கள். பல்லவி

18 திருடர்களைக் கண்டால் அவர்களோடு விருப்புடன் சேர்ந்து கொள்கின்றீர்கள்; கற்பு நெறி தவறியவர்களோடும் உங்களுக்கு உறவு உண்டு. 19 உங்கள் வாய் உரைப்பது தீமையே; உங்கள் நா புனைவதும் பொய்ம்மையே. பல்லவி

20 உங்கள் சகோதரரைப் பற்றி இழிவாகப் பேசுகின்றீர்கள்; உங்கள் தாயின் மக்களைப் பற்றி அவதூறு பேசுகின்றீர்கள். 21 இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும், நான் மௌனமாய் இருந்தேன்; நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக் கொண்டீர்கள்; ஆனால், இப்பொழுது உங்களைக் கண்டிக்கின்றேன்; உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன் ஒவ்வொன்றாய் எடுத்துரைக்கின்றேன். பல்லவி

22 கடவுளை மறந்தோரே! இதைக் கண்டுணருங்கள்; இல்லையேல், நான் உங்களைப் பீறிப் போடுவேன்; உங்களை விடுவிக்க யாரும் இரார். 23 நன்றிப் பலி செலுத்துவோர் என்னை மேன்மைப்படுத்துவர். தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளாம் நான் அருளும் மீட்பைக் கண்டடைவர். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
திபா 95: 8b,7b

அல்லேலூயா, அல்லேலூயா! இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
என்னைப் பின்பற்றி வாரும்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 18-22

அக்காலத்தில் இயேசு திரளான மக்கள் தம்மைச் சூழ்ந்திருப்பதைக் கண்டு, மறு கரைக்குச் செல்ல சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.

அப்பொழுது மறைநூல் அறிஞர் ஒருவர் வந்து, "போதகரே, நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்" என்றார்.

இயேசு அவரிடம், "நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை" என்றார்.

இயேசுவின் சீடருள் மற்றொருவர் அவரை நோக்கி, "ஐயா, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர அனுமதியும்" என்றார்.

இயேசு அவரைப் பார்த்து, நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்" என்றார்.

சிந்தனை

இறையாட்சி பணிவாழ்வு பாதுகாப்பை தேடிடாத ஒன்று.

வசதியான சூழலில் வாழ்வும், சுகபோகங்களுக்கு உட்பட்ட வாழ்வும் கிற்pஸ்தவம் காட்டும் வாழ்வல்ல.

அரசியல்வாதிகளைப் போல துப்பாக்கியேந்திய காவலர்கள், ஒரடுக்கு இரடுக்கு பாதுகாப்பு என்பது எல்லாம் கிறிஸ்தவத்திற்கு ஒவ்வாத செயலே.

மனிதர்களை நம்புவதைவிட கடவுளை நம்புவது மேலானது.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
என்னைப் பின்தொடர்ந்து வா

திருத்தூதரும், நற்செய்தியாளருமான யோவானின் சீடர் போலிகார்ப். இவர்  கிறிஸ்துவின்மீது கொண்ட விசுவாசத்திற்காக தன்னுடைய உயிரையே ஈந்தவர்.

கி.பி.155 ஆம் ஆண்டு துருக்கியில் உள்ள ஸ்மிர்னா என்னும் பகுதியில் நற்செய்தியை அறிவித்துக்கொண்டிருக்கும்போது ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டார். அப்போது ஆட்சியாளர்கள் இவரிடம், "இப்போது நீ கிறிஸ்துவை மறுதலித்தால் உன்னை நாங்கள் விடுதலைசெய்கிறோம்" என்றார்கள். அதற்கு அவர், "கடந்த 86 ஆண்டுகளாக வழிநடத்தி வரும் இறைவனை, எப்படி நான் மறுதலிப்பேன்" என்று சொல்லி மறுத்துவிட்டார்.

உடனே அவர்கள் அவரிடம், "நீ கிறிஸ்துவை மறுதலிக்காவிட்டால், உன்னை நாங்கள் கொடிய விலங்குகளுக்கு இரையாக்குவோம்" என்று பயமுறுத்திப் பார்த்தார். அதற்கு அவர், "நீங்கள் என்னைக் கொடிய விலங்குகளுக்கு இரையாக்கினாலும், நான் ஒருபோதும் கிறிஸ்துவை மறுதலிக்க மாட்டேன்" என்று கிறிஸ்தவ விசுவாசத்தில் மிக உறுதியாக இருந்தார்.

பின்னர் அவர்கள் அவரிடம், "இதுதான் கடைசி வாய்ப்பு, இப்போதாவது நீ கிறிஸ்துவை மறுதலி, இல்லையென்றால் நாங்கள் உன்னை எரியும் நெருப்பில் போட்டு கொன்றுபோடுவோம்" என்று அச்சுறுத்தினார்கள். அப்போதும் அவர் அவரிடம், "நீங்கள் என்னை இந்த நெருப்பில் போட்டு, கொல்லப் பார்க்கிறீர்கள். ஆனால் அணையா நெருப்பு ஒன்று இருக்கிறது. அதிலிருந்து தீயோராகிய நீங்கள் தப்பவே முடியாது" என்று சொல்லி, கிறிஸ்தவ விசுவாசத்தில் மிக உறுதியாக இருந்தார்.

இறுதியாக ஆட்சியாளர்கள் போலிகார்பை எரியும் நெருப்பில் போட்டு கொன்றனர். அவரோ கிறிஸ்துவுக்காக உயிர் துறப்பது பாக்கியமானதொரு காரியம்" என்று சொல்லி உயிர்துறந்தார்.

கிறிஸ்துவுக்காக எதையும், ஏன் தன்னுடைய உயிரையும் தர முன்வந்த தூய போலிகார்பின் விசுவாசம் நமகெல்லாம் எடுத்துக்காட்டாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் மறைநூல் அறிஞர் ஒருவர் இயேசுவிடம் வந்து, "போதகரே, நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்" என்கிறார். அதற்கு இயேசு, "நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை" என்கிறார். அதாவது தன்னைப் பின்பற்றி வருவது/ வாழ்வதுசாதாரண காரியமல்ல, அது சவால்கள் நிறைந்தது என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார்.

இயேசுவின் சீடராக வாழ்வது என்பது நமக்கு பேரையும், புகழையும் தருவதுதான். ஆனால் அதைவிட சீடத்துவ வாழ்வு சவால்கள் நிறைந்தது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

நற்செய்தியில் மற்றொரு சீடர் இயேசுவை அணுகி, "ஐயா, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர அனுமதியும்" என்று சொல்கிறபோது, இயேசு அவரிடம், "நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப் பற்றி கவலைவேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்" என்கிறார். இங்கே இயேசு கிறிஸ்து தன்னைப் பின்பற்றி வருபவர்கள் எல்லாவற்றையும் (உறவுகள், பணம் பதவி அத்தனையும்) உதறித் தள்ளிவிட்டு வரவேண்டும்  என்கிறார்.

இயேசுவின் சீடர்களாக வாழ அழைக்கப்பட்டிருக்கும் நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் சீடராக வாழ்வது என்பது எத்தனை உயர்வானது என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். அதேவேளையில் இயேசுவுக்காக எல்லாத் துன்பங்களையும் நாம் துணிவோடு தாங்கிக் கொள்ளவேண்டும். இயேசு கிறிஸ்து இறைமகனாக இருந்தும், ஒரு சாதாரண மனிதரைப் போன்று வாழ்ந்தார் என்று சொன்னால், அவருடைய சீடர்களாக வாழ அழைக்கப்பட்டிருக்கும் நாம் ஒவ்வொருவரும் இயேசுவைப் போன்று எளிய வாழ்வு வாழவேண்டும்.

"சிலுவையே முன்னால், உலகமே பின்னால்" என்பார்கள். நாம் இந்த உலகத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இயேசுவுக்கு முன்னுரிமை தந்து, அவருடைய உண்மைச் சீடர்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
"நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப் பற்றிக் கவலைப்படவேண்டாம்"

அரண்மனையை ஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன், அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான். அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, நிச்சயமாக அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான். திடீரென அவனுக்குள் ஓர் எண்ணம், அந்த மாதிரி எண்ணுகிற அளவுக்குத் தனக்குள் ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி யோசித்தபோதே, அவனுக்குள் நடுக்கம் ஏற்பட்டது. இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அரண்மனை வாசலை அடைந்தான்.

வாயிற்காவலனிடம், "ராஜாவைப் பார்க்க வேண்டும்" என்றான். அந்தக் காவலன், அரசரிடம் அனுமதி வாங்கி வந்தான். உள்ளே வந்த பிச்சைக்காரனிடம், "என்னைப் பார்க்கவேண்டும் என்றாயாமே?" என்றார் அரசர். "ஆமாம்! நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள எனக்கும் ஆசை. ஆனால், என்னிடம் ராஜ உடைகள் இல்லை. என்னை அதிகப்பிரசங்கி என நினைக்காவிட்டால், உங்களது பழைய ஆடையை அளித்து உதவினால், அதனை அணிந்துகொண்டு விருந்துக்கு வருவேன்"என்றான் மிகவும் பவ்யமாக. அதே நேரம், மன்னர் என்ன சொல்வாரோ என நடுங்கியபடி, அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால் மன்னர், அவனுக்கு ராஜ உடை ஒன்றை வழங்கினார். அந்த உடையை உடுத்திக் கொண்டவன், கண்ணாடி முன் நின்று கவனித்தான்; தோற்றத்தில் கம்பீரம் மிளிர்வதைக் கண்டு வியந்தான்!

அப்போது மன்னர் அவனிடம், "விருந்தில் கலந்துகொள்வதற்குத் தகுதி உடையவனாகி விட்டாய். அதைவிட, முக்கியமான ஒன்று, இனி உனக்கு வேறெந்த உடையும் தேவைப்படாது. உன் ஆயுள் முழுவதும் இந்த உடை அப்படியே இருக்கும். துவைக்கவோ தூய்மைப்படுத்தவோ அவசியம் இருக்காது" என்றார். கண்ணீர் மல்க, மன்னருக்கு நன்றிகூறி விட்டுக் கிளம்ப யத்தனித்தவன். அப்போது மூலையில் கிடந்த தனது பழைய ஆடைகளைக் கவனித்தான். அவனது மனம் சற்றே சலனப்பட்டது. 'ஒருவேளை, அரசர் கூறியது தவறாக இருந்து, இந்த உடைகள் கிழிந்து விட்டால் அப்போது நமக்குப் பழைய உடைகள் தேவைப்படுமே?' என யோசித்தவன், சட்டெனச் சென்று தன் பழைய உடைகளை வாரிக்கொண்டான்.

வீடு, வாசல் இல்லாத அவனால் பழைய துணிகளை எங்கேயும் வைக்க முடியவில்லை. அதனால் அவன் அதனைக் கையோடு சுமந்தே திரிந்தான். மன்னர் அளித்த இரவு விருந்தையும் அவனால் மகிழ்ச்சியாக ஏற்க முடியவில்லை. அடிக்கடி கீழே விழுந்துவிடும் பழைய துணிகளைச் சேகரிக்கும் மும்முரத்தில், பரிமாறப்பட்ட பதார்த்தங்களைச் சரிவர ருசிக்க முடியவில்லை. எல்லாம் அவனுக்குப் புரிந்தது. இதற்கிடையில் அரசர் கொடுத்த ஆடை அழுக்காகவோ, கிழியவோ இல்லை என்பது விளங்கியது. ஆனாலும், அந்த யாசகனுக்குப் பழைய உடைகளை தூக்கி எறிவதற்கு மனமில்லாமல் இருந்தான். இதனைப் பார்த்த மக்கள் அவனைக் 'கந்தல் பொதி கிழவன்' என்றே அழைக்கத் தொடங்கினர்.

நாட்கள் நகர்ந்தன. திடிரென்று ஒருநாள் அவன் நோயில் விழுந்து படுத்த படுக்கையானான். இறக்கும் தருணத்தில் இருந்த அவனைப் பார்க்க, அரசர் வந்தார். அவனது தலைமாட்டில் இருந்த கந்தல் மூட்டையைப் பார்த்து, அரசரின் முகம் சோகமாவதைக் கண்டான். அப்போது அவனுக்கு முன்பு அரசர் சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது. என்ன செய்வது பழைய துணியின்மீது இருந்த மோகம் அவனை, புதிய, கிழியாத அரச உடையை அணிய விடாமலே செய்துவிட்டது.

க(ந)டந்ததை நினைத்தோ அல்லது பழசை நினைத்து வருந்திக்கொண்டிருக்கின்ற யாரும் புதிய வாழ்க்கையை முறையாக வாழ முடியாது என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த கதை நமது சிந்தனைக்குரியது.

நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் சீடர்களில் ஒருவர் ஆண்டவர் இயேசுவிடம் வந்து, "(நான் உம்மைப் பின்பற்றி வருவேன். ஆனால்)  முதலில் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர அனுமதியும்" என்கின்றார். அதற்கு இயேசு அவரிடம், "நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப் பற்றிக் கவலைப் படவேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்" என்கின்றார். இயேசுவின் வார்த்தைகளை மேலோட்டமாகப் பார்த்தால் சற்று நெருடலாக இருப்பது போல் தோன்றலாம். ஆனால் உண்மை வேறொன்றாக இருக்கின்றது.

ஒருசில விவிலிய அறிஞர்கள், நற்செய்தியில் வரக்கூடிய அந்த சீடருடைய தந்தை இறக்கவில்லை, மாறாக அவர் வயது முதிர்ந்த நிலையில்தான் இருந்தார். ஆகவே, அத்தகைய நிலையில் இருக்கின்ற ஒருவருக்காக எவ்வளவோ உயர்ந்த அழைப்பினை உதறித்தள்ளிவிட்டு போவது நல்லதல்ல என்ற பொருளில் இயேசு அவரிடத்தில் கூறியதாகச் சொல்வார்கள். மேலும் இஸ்ரயேல் சமூகத்தில் இறந்தோரை நல்லடக்கம் செய்வதென்று ஒருசிலர் இருந்தார்கள் அவர்களிடத்தில் அந்தப் பொறுப்பினை ஒப்படைத்து முன்வைத்த காலை பின்வைக்காமல் தொடர்ந்து தன்னைப் பின்தொடர்ந்து வரவேண்டும் என்றும் இயேசு அவரிடத்தில் கூறியிருக்கலாம் என்றும் சொல்வார்கள்.

ஆம், சீடத்துவ வாழ்க்கை என்பது பின்னோக்கிய பயணம் அல்ல, அது முன்னோக்கிய பயணம். அத்தகைய பயணத்திற்கு யாராரெல்லாம் தயாராகுகிறார்களோ அவர்களே, இயேசுவின் சீடர்களாக மாறுவதற்குத் தகுதி உடையவர்கள்.

ஆகவே, கடந்ததை - நடந்ததை - அப்படியே மறந்துவிட்டு, முன்வைத்த காலைப் பின்வைக்காமல், தொடர்ந்து இயேசுவின் பின்னால் பயணப்படுவோம், இயேசுவின் உண்மைச் சீடர்களாவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!