Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     26 ஏப்ரல் 2018  
                                                       பாஸ்காக் காலம் 4ம் வாரம்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 கடவுள் தாவீது வழிமரபிலிருந்தே இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 13-25

சகோதரர் சகோதரிகளே, பவுலும் அவரோடு இருந்தவர்களும் பாப்போவிலிருந்து கப்பலேறி, பம்பிலியாவிலுள்ள பெருகை நகருக்கு வந்தார்கள். அங்கே யோவான் அவர்களைவிட்டு அகன்று எருசலேமுக்குத் திரும்பினார். அவர்கள் பெருகையிலிருந்து புறப்பட்டுச் சென்று பிசிதியாவிலுள்ள அந்தி யோக்கியாவை அடைந்தார்கள். ஓய்வுநாளன்று அவர்கள் தொழுகைக் கூடத்திற்குச் சென்று அங்கு அமர்ந்திருந்தார்கள்.

திருச்சட்டமும் இறைவாக்கினர் நூல்களும் வாசித்து முடிந்தபின் தொழுகைக்கூடத் தலைவர்கள் அவர்களிடம் ஆள் அனுப்பி, "சகோதரரே, உங்களுள் யாராவது மக்களுக்கு அறிவுரை கூறுவதாயிருந்தால் கூறலாம்'' என்று கேட்டுக்கொண்டார்கள்.

அப்போது பவுல் எழுந்து கையால் சைகை காட்டிவிட்டுக் கூறியது: "இஸ்ரயேல் மக்களே, கடவுளுக்கு அஞ்சுவோரே, கேளுங்கள். இந்த இஸ்ரயேல் மக்களின் கடவுள் நம்முடைய மூதாதையரைத் தேர்ந்தெடுத்தார்; அவர்கள் எகிப்து நாட்டில் அன்னியர்களாகத் தங்கியிருந்தபோது அவர்களை ஒரு பெரிய மக்களினமாக்கினார்.

பின்பு அவர் தம் தோள்வலிமையைக் காட்டி அவர்களை அந்த நாட்டைவிட்டு வெளியே அழைத்துக்கொண்டு வந்தார்; நாற்பது ஆண்டு காலமாய்ப் பாலைநிலத்தில் அவர்களிடம் மிகுந்த பொறுமை காட்டினார். அவர் கானான் நாட்டின்மீது ஏழு மக்களினங்களை அழித்து அவர்கள் நாட்டை இவர்களுக்கு ஏறக்குறைய நானூற்றைம்பது ஆண்டுகள் உரிமைச் சொத்தாக அளித்தார்; அதன்பின்பு இறைவாக்கினர் சாமுவேலின் காலம் வரை அவர்களுக்கு நீதித் தலைவர்களை அளித்தார்.

பின்பு அவர்கள் தங்களுக்கு ஓர் அரசர் வேண்டும் என்று கேட்டார்கள். கடவுள் கீசு என்பவரின் மகனான சவுல் என்பவரை அவர்களுக்கு அரசராகக் கொடுத்தார். பென்யமின் குலத்தினராகிய அவர் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார்.

பின்பு கடவுள் அவரை நீக்கிவிட்டுத் தாவீதை அவர்களுக்கு அரசராக ஏற்படுத்தினார்; அவரைக் குறித்து "ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன்; என் விருப்பம் அனைத்தையும் அவன் நிறைவேற்றுவான்' என்று சான்று பகர்ந்தார். தாம் அளித்த வாக்குறுதியின்படி கடவுள் அவருடைய வழிமரபிலிருந்தே இஸ்ரயேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார்.

அவருடைய வருகைக்கு முன்பே யோவான், "மனம் மாறி திருமுழுக்குப் பெறுங்கள்' என்று இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பறைசாற்றி வந்தார்.

யோவான் தம் வாழ்க்கை என்னும் ஓட்டத்தை முடிக்கும் தறுவாயில், "நான் யார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவரல்ல நான். இதோ, எனக்குப்பின் ஒருவர் வருகிறார்; அவருடைய மிதியடிகளை அவிழ்க்கவும் எனக்குத் தகுதி இல்லை' என்று கூறினார்.''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 89: 1-2. 20-21. 24,26 (பல்லவி: 2a)
=================================================================================
 பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பை என்றென்றும் நான் அறிவிப்பேன்.

அல்லது: அல்லேலூயா.

1 ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன். 2 உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப்போல் உறுதியானது. பல்லவி

20 என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் திருத்தைலத்தால் அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன். 21 என் கை எப்பொழுதும் அவனோடு இருக்கும்; என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப்படுத்தும். பல்லவி

24 என் வாக்குப் பிறழாமையும் பேரன்பும் அவனோடு இருக்கும்; என் பெயரால் அவனது வலிமை உயர்த்தப்படும். 26 "நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை' என்று அவன் என்னை அழைப்பான். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 திவெ 1: 5ab

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு கிறிஸ்துவே, நீரே நம்பிக்கைக்குரிய சாட்சி; இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர்; நீர் எம்மீது அன்புகூர்ந்து உமது இரத்தத்தினால் பாவங்களிலிருந்து எங்களை விடுவித்தீர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நான் அனுப்புகிறவரை ஏற்றுக்கொள்பவர் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 16-20

அக்காலத்தில் சீடர்களின் பாதங்களைக் கழுவியபின் இயேசு அவர்களுக்குக் கூறியது: "பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல; தூது அனுப்பப் பட்டவரும் அவரை அனுப்பியவரைவிடப் பெரியவர் அல்ல என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

இவற்றை நீங்கள் அறிந்து அதன்படி நடப்பீர்கள் என்றால் நீங்கள் பேறுபெற்றவர்கள். உங்கள் அனைவரையும்பற்றி நான் பேசவில்லை. நான் தேர்ந்து கொண்டவர்கள் யாரென எனக்குத் தெரியும்.

எனினும், "என்னோடு உண்பவனே என்மேல் பாய்ந்தான்'' என்னும் மறைநூல் வாக்கு நிறைவேறியாக வேண்டும்.

அது நிறைவேறும்போது, "இருக்கிறவர் நானே' என்று நீங்கள் நம்புமாறு இப்போதே, அது நிறைவேறுமுன்பே, அதுபற்றி உங்களுக்குச் சொல்லி வைக்கிறேன். நான் அனுப்புகிறவரை ஏற்றுக்கொள்பவர் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.

என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பியவரையே ஏற்றுக்கொள்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல; தூது அனுப்பப்பட்டவரும் அவரை அனுப்பியவரைவிடப் பெரியவர் அல்ல"

அமெரிக்காவில் உள்ள பியோரியாவின் (Peoria) ஆயராக பல ஆண்டுகள் இருந்தவர் ஆயர் எட்மன்ட் டுன்னே (Edmund Dunne) என்பவர். அவர் ஆயர் பதவியை மட்டுமல்லாமல், பல முக்கியமான பதவிகளை வகித்தவர். பத்துக்கும் மேற்பட்ட மொழிகளைக் கற்றுத் தெரிந்த விற்பன்னர்.

அப்படிப்பட்டவர் ஒரு வயதான குருவானவரிடத்தில் அடிக்கடி ஒப்புரவு அருட்சாதனம் செய்துகொள்ளச் செல்வதுண்டு. அந்தக் குருவானாவரோ எட்மன்ட் டுன்னேயிடத்தில், "ஆயரே! நீங்கள் எவ்வளவு பெரிய ஆள், நீங்கள் போய் என்னிடத்தில் ஒப்புரவு அருட்சாதனம் செய்துகொள்ளலாமா?" என்று கேட்பார். அதற்கு ஆயர் அவரிடத்தில், "நான் உங்களிடத்தில் ஒப்புரவு அருட்சாதனத்தை பெற வருகின்றபோது என்னை ஓர் ஆயர், பெரிய பெரிய பதவிகளில் இருப்பவர் என்றெல்லாம் நினைக்கவேண்டாம், ஒரு சாதாரண பாவி என்றே எண்ணிக்கொள்ளுங்கள்" என்பார். இதைக் கேட்டு அந்த வயதான குருவானவர் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போவார்.

தான் பெரிய ஆள், பல உயர் பதவிகளில் எல்லாம் இருப்பவர் என்றெல்லாம் எண்ணாமல், ஒரு சாதாரண பாவியைப் போன்று உணர்வது, ஆயர் எட்மன்ட் டுன்னே அவர்களுடைய தாழ்ச்சியை நமக்கு எடுத்துக்காட்டுகின்றது.

நற்செய்தி வாசத்தில் ஆண்டவர் இயேசு, தனது சீடர்களுடைய பாதங்களைக் கழுவிவிட்டு சொல்வார், "பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல; தூது அனுப்பப்பட்டவரும் அவரை அனுப்பியவரைவிடப் பெரியவர் அல்ல" என்று. இயேசுவின் இவ்வார்த்தைகள் ஆழமான அர்த்தத்தைத் தருவதாக இருக்கின்றன. பல நேரங்களில் இறைப்பணியைச் செய்யக்கூடிய இறையடியார்கள் தாங்கள் இறைவனைவிடப் பெரியவர்கள் என்பது போன்ற மமதையில் வாழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. எடுத்துக்காட்டிற்கு, ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களை பணித்தளத்திற்கு அனுப்பி வைப்பார். சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்த பணிகளைச் செய்துவிட்டு வந்து அவரிடம், "போதகரே, நாங்கள் பேய்களை ஓட்டினோம், பிணிகளைப் போக்கினோம்" என்று தம்பட்டம் அடிப்பார்கள். அப்போது இயேசு அவர்களிடம், "உங்களால் பேய்களை ஓட்ட முடிந்தது என்பதை நினைத்துப் பெருமை கொள்ளாதீர்கள், மாறாக உங்களுடைய பெயர்கள் விண்ணகத்தில் பொறிக்கப்பட்டுள்ளன என்பதை நினைத்து மட்டும் பெருமை கொள்ளுங்கள்" என்பார். ஆம், சீடர்கள் யாவரும் தங்களால்தான் பேய்கள் ஓடின என்ற மனதையில் இருக்கின்றபோது, இயேசு அவர்களிடத்தில் உண்மையானது எதுவோ அதைச் சொல்லி அவர்களை தாழ்ச்சியோடு இருக்கப் பணிக்கின்றார்.

நாமும் கூட ஒருசில நன்மைகளைச் செய்துவிட்டு, நாம் இறைவனைவிடப் பெரியவர்கள் என்பது போல் நினைத்துகொண்டு வானுக்கும் மண்ணுக்கும் குதிப்பதுண்டு. இறைவனுடைய அருளால்தான் எல்லாம் நடந்தேறின, இறைவன் தான் விரும்பியதைச் செய்ய, நம்மை ஒரு கருவியாகத்தான் பயன்படுத்தி இருக்கின்றார் என்று நினைப்போர் ஒருபோதும் பெருமை கொள்வது கிடையாது, அவர்கள் எப்போதும் தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தினராகவே வாழ்வார்கள்; எல்லாப் புகழும் இறைவனுக்கே என்றுதான் வாழ்வார்கள்.

தாழ்ச்சி என்பது நம்மை ஒடுக்கிக்கொள்வது கிடையாது, மாறாக இறைவனுக்கு முன்பாக நான் ஒன்றுமில்லை என்று உணர்வது. யாராரெல்லாம் இப்படி இறைவனுக்கு முன்பாகத் தான் ஒன்றுமில்லை என்று வாழ்கின்றார்களோ அவர்கள் இறைவனால் மேலும் மேலும் ஆசிர்வதிக்கப்படுவார்கள் என்பது உண்மையாக இருக்கின்றது. கல்கத்தாவின் சேரிப் பகுதிகளில் கவனிப்பாரற்றுக் கிடந்த ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்டவர்கள் இவர்களுடைய மேம்பாட்டிற்காக தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்த அன்னைத் தெரசா அடிக்கடி சொல்லக்கூடிய வார்த்தைகள், "இறைவனின் கையில் நான் ஒரு சிறு எழுதுகோள்" என்பதாகும். எவ்வளவு அற்புதமான வார்த்தைகள் இவை. மக்களால் அதிகமாக அன்பு செய்யப்பட்ட அன்னைத் தெரசா இவ்வளவு தாழ்ச்சியோடு இருந்ததனால்தான் என்னவோ, இறைவன் அவரைப் பல மடங்கு உயர்த்தினார். நாமும்கூட தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தினராய் வாழ்கின்றபோது இறைவனால் மேலும் மேலும் உயர்த்தப்படுவோம் என்பது உண்மை.

நற்செய்தியில் இயேசு தொடர்ந்து சொல்லக்கூடிய வார்த்தைகள், "இவற்றை நீங்கள் அறிந்து அதன்படி நடப்பீர்கள் என்றால் நீங்கள் பேறுபெற்றவர்கள்" என்பதாகும். எவற்றின் படி என்றால், "பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல" என்ற உண்மையை உணர்ந்து, அதற்கேற்றாற்போல் வாழ்தல். அப்படி வாழ்ந்தோம் என்றால், நாம் உண்மையில் பேறுபெற்றவர்கள்.

ஆகவே, இறைவன் ஒருவரே எல்லாவற்றிற்கும் மேலானவர், நாம் அனைவரும் அவருடைய கைகளில் சிறிய கருவி என்பதை உணர்ந்தவர்களாய், தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தினராய் வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

'
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!