Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                    25 ஏப்ரல் 2018  
                                                       பாஸ்காக் காலம் 4ம் வாரம்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 புனித மாற்கு நற்செய்தியாளர் விழா.

அன்பு முத்தம் கொடுத்து நீங்கள் ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள் 
1பேதுரு 5:5-14

5 இளைஞர்களே, நீங்கள் முதியவர்களுக்குப் பணிந்திருங்கள். ஒருவர் மற்றவரோடு பழகும்போது எல்லாரும் மனத்தாழ்மையை ஆடையாய் அணிந்திருங்கள். ஏனெனில், "செருக்குற்றோரைக் கடவுள் இகழ்ச்சியுடன் நோக்குவார்; தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்."

6 ஆகையால், கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துங்கள்; அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார்.

7 உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்.

8 அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது.

9 அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள். உலகெங்கிலுமுள்ள உங்கள் சகோதரர் சகோதரிகள் உங்களைப் போலவே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் அல்லவா?

10 எல்லா அருளும் நிறைந்த கடவுள், இயேசு கிறிஸ்துவுக்குள் என்றும் நிலைக்கும் தம் மாட்சியில் பங்குகொள்ள உங்களை அழைத்திருக்கிறார். சிறிது காலத் துன்பங்களுக்குப்பின் அவர் உங்களைப் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி நிலைநிறுத்துவார்.

11 அவரது வல்லமை என்றென்றைக்கும் உள்ளது. ஆமென்.

12 நம்பிக்கைக்குரிய சகோதரன் என நான் கருதும் சில்வான் வழியாகச் சுருக்கமாக உங்களுக்கு எழுதியுள்ளேன். உங்களை ஊக்குவிக்கவும் கடவுளுடைய மெய்யான அருளைப் பற்றிச் சான்று பகரவுமே எழுதினேன். இந்த அருளில் நிலைத்திருங்கள்.

13 உங்களைப் போலவே தேர்ந்துகொள்ளப்பட்ட பாபிலோன் சபையாரும், என் மகன் மாற்கும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர்.

14 அன்பு முத்தம் கொடுத்து நீங்கள் ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள். இயேசு கிறிஸ்துவோடு இணைந்து வாழும் உங்கள் அனைவருக்கும் அமைதி உரித்தாகுக!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 89: 1-2. 5-6. 15-16 (பல்லவி: 1a)
=================================================================================
 பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்.

1 ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன்.
2 உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப் போல் உறுதியானது.
-பல்லவி

5 ஆண்டவரே, வானங்கள் உம் வியத்தகு செயல்களைப் புகழ்கின்றன; தூயவர் குழுவினில் உமது உண்மை விளங்கும்.
6 வான்வெளியில் ஆண்டவருக்கு நிகரானவர் யார்? தெய்வ மைந்தர் குழுவில் ஆண்டவருக்கு இணையானவர் யார்?
-பல்லவி

15 விழாவின் பேரொலியை அறிந்த மக்கள் பேறுபெற்றோர்; ஆண்டவரே! உம் முகத்தின் ஒளியில் அவர்கள் நடப்பார்கள்.
16 அவர்கள் நாள் முழுவதும் உம் பெயரில் களிகூர்வார்கள்; உமது நீதியால் அவர்கள் மேன்மை அடைவார்கள்.
-பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 

அல்லேலூயா, அல்லேலூயா! நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகிறோம். அவர் கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார். அல்லேலூயா! 

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

புனித மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
16: 15-20

15 இயேசு அவர்களை நோக்கி, "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

16 நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்.

17 நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்;

18 பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்" என்று கூறினார்.

19 இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்.

20 அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.)
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
நற்செய்தியாளரான தூய மாற்கு

இன்று திருச்சபையானது நற்செய்தியாளரும், மறைசாட்சியுமான தூய மாற்குவின் விழாவைக் கொண்டாடுக்கின்றது. ஆண்டவர் இயேசு பற்றிய நற்செய்தியை முதலாவதாக எழுதியவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் தூய மாற்கு. இவரது விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் இவரது வாழ்வு நமக்கு எத்தகைய பாடத்தைக் கற்றுத்தருகிறது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

முதலாவதாக யார் இந்த மாற்கு? என்பதை அறிந்துகொள்வோம். ஆண்டவர் இயேசுவின் தலைமைச் சீடரான தூய பேதுரு சிறையிலிருந்து அற்புதமாக வெளியே வந்து, எருசலேமில் இருந்த மரியாவின் வீட்டிற்குச் சென்றாரே, அந்த மரியாதான் மாற்குவின் தாய் (திப 12:12). இவர் பர்னபாவின் நெருங்கிய உறவினரும்கூட. இவர் ஆண்டவர் இயேசுவை தன்னுடைய வாழ்வில் சந்தித்தாரா? இல்லையா? என்பது பற்றிய மிகப்பெரிய கேள்வி எழுந்தாலும், இவர்தான் இயேசு கிறிஸ்து கைதுசெய்யப்பட்டு, பிலாத்துவிடம் இழுத்துச் சென்றபோது தன்னுடைய மேலாடையை விட்டுவிட்டு ஓடிச்சென்றவர் என்றும் ஒருசில விவிலிய அறிஞர்கள் கூறுவார்கள். இவர் திருத்தூதர் பணிகள் நூலில் 'யோவான்' என்றும் அழைக்கப்படுகின்றார் (திப 12:12)

இவர் ஆற்றிய நற்செய்திப் பணி என்ன? என்று சிந்தித்துப் பார்க்கும்போது, இவர் தூய பவுலின் சைப்ரஸ் நோக்கிய முதலாவது திருத்தூதுப் பயணத்தில் பர்னபாவோடு உடன்சென்றார் என்று அறிய முடிகிறது (திப 13:5). ஆனால் ஒருசில காரணங்களால் அவர் பெருகு என்ற இடத்தில் பவுலிடமிருந்து விலகிச் செல்கிறார். அதனால் பவுல் தன்னுடைய இரண்டாவது திருத்தூதுப் பயணத்தில் சீலாவை தன்னோடு அழைத்துச் சென்றதாக படிக்கின்றோம். மாற்கோ பர்னபாவோடு உடன்செல்கிறார். இது ஒருபுறம் இருந்தாலும், கிபி. 62 ல் பவுலடியார் உரோமைச் சிறையில் இருந்தபோது மாற்குதான் அவரோடு உடனிருந்து, அவருக்குப் பணிவிடை செய்கிறார், அவருக்குத் தூதுவராகப் பணியாற்றுகிறார் (கொலோ 4:10).

மாற்கு தூய பேதுருவோடும் பணியாற்றினார் என்பதை விவிலியம் நமக்கு எடுத்துக்கூறுகிறது. பேதுரு இவரை 'மாற்கு என்னுடைய அன்பு மகன்' என்று அழைக்கிறார் (1பேதுரு 5:13). பேதுரு போதித்ததை எல்லாம் மாற்குதான் பிழையில்லாமல் எழுதித் தந்தார் என்றும், அவரிடமிருந்துதான் மாற்கு ஆண்டவர் இயேசுவைப் பற்றி அறிந்திருப்பார் என்று பப்பியாஸ் என்பவர் கூறுவார்.

இந்த நேரத்தில் மாற்கு எழுதிய நற்செய்தி நூலையும் நாம் நினைவுகூர்ந்து பார்க்கவேண்டும். கிபி 64-70 வரை உள்ள காலகட்டத்தில் புறவினத்து மக்களுக்காக இந்நற்செய்தி நூலானது எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது. இதில் மாற்கு ஆழமாக வலியுறுத்திக்கூறும் உண்மை 'மானிடமகன் தொண்டு ஏற்க அல்ல, மாறாக தொண்டு ஆற்றவும், பலருடைய மீட்புக்காக தன்னுடைய உயிரையே தரவந்தார்" என்பதுதான் (மாற்கு 10:45). மேலும், அவர் இயேசு கிறிஸ்து பற்றிய நற்செய்தியை உலகமெங்கும் பரப்பவேண்டும் என்ற செய்தியை நமக்கு நினைவுபடுத்துகிறார் (இன்றைய நற்செய்தியில் அதைதான் நாம் வாசிக்கின்றோம்).

மாற்குவின் மறைசாட்சிய வாழ்வைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்க்குபோது, அவர் அலெக்ஸாண்ட்ரியா நகருக்குச் சென்று, அங்கே நற்செய்தி அறிவித்ததாகவும், அங்கே அவர் மறைசாட்சியாகவும் இறந்ததாகச் யூசிபுஸ் என்பவர் கூறுவார். ஒருசிலர் அவர் நீரோவின் ஆட்சிக்காலத்தில் மறைசாட்சியாக உயிர்துறந்ததாவும் சொல்வர். எப்படி இருந்தாலும் அவர் ஒரு மறைசாட்சியாக உயிர்துறந்தார் என்பது மட்டும் உண்மை.

தூய மாற்கின் வாழ்வை, வரலாறைக் குறித்துச் சிந்தித்துப் பார்த்த நாம், அவரது விழா நமக்கு என்ன செய்தியைத் தருகிறது என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களிடம், "நீங்கள் உலகெங்கும் சென்று, படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்" என்கிறார். இயேசுவின் இந்த வார்த்தைகளை மாற்கு ஏற்றுக்கொண்டு தொடக்கத்தில் தூய பவுலோடும், பர்னபாவோடும், அதன்பிறகு தூய பேதுருவோடும் நற்செய்திப் பணியாற்றுகிறார். இறுதியாக அலெக்ஸாண்ட்ரியா நகருக்குச் சென்று நற்செய்திப் பணியாற்றுக்கின்றார்.

தூய மாற்குவின் விழாவைக் கொண்டாடும் நாமும் கிறிஸ்து பற்றிய நற்செய்தியை உலக மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பதே இறைவார்த்தை நமக்குத் தரும் பாடமாக இருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்காட்லாந்தில் நற்செய்திப் பணியாற்றிய ஒரு வயதான குருவானவர் இருந்தார். அவருக்கு இருந்த ஒரே வருத்தம் 'இத்தனை ஆண்டுகள் பணிசெய்தும் ஒருவரையும் மனமாறச் செய்ய முடியவில்லையே' என்பதுதான்.

ஒருநாள் அவர், அந்நகரில் இருந்த மிக 'பிரபலமான மறைபோதகர்' என்று அறியப்பட்ட ஒரு குருவானவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வயதான குருவானவர், பிரபலமான குருவானவரிடம், "நான் இத்தனை ஆண்டுகள் நற்செய்திப்பணி செய்தும், ஒருமனிதரைக் கூட கிறிஸ்துவுக்குள் கொண்டுவர முடியவில்லையே!" என்று சொல்லி வருத்தப்பட்டார். அதற்கு அந்த பிரபலக் குருவானவர் சொன்னார், "நீங்கள் அப்படி ஒன்றும் நினைக்கவேண்டும். ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பாக, இந்த ஆலயத்தில் பணி செய்துகொண்டிருந்த ஒரு பிற மதத்தைச் சார்ந்த ஒரு பெண்மணியை உங்களுக்கு நினைவிருக்கிறதா? என்று கேட்டார். அதற்கு அந்த குருவானவர், "ஆம், எனக்கு ஞாபகம் இருக்கிறது. அவள் ஆலயப் பணிசெய்தாலும், திருப்பலியில் கலந்துகொள்ளமாட்டாள். ஆலயத்திற்கு வெளியே நின்றுவிட்டு, அப்படியே போய்விடுவாள்" என்றார்.

அந்த பிரபலக் குருவானவர் தொடர்ந்தார், "அந்த பெண்மணி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் தான் கேட்கும் மறையுரையை, வீட்டுக்கு வந்து தன்னுடைய குடிகாரச் சகோதரனுக்குச் சொல்வாள். இப்படி பல நாட்கள் அந்தப் பெண்மணி ஆலயத்தில் கேட்கும் மறையுரையை தன்னுடைய சகோதரனுக்குச் சொன்னதன் பேரில், குடிகாரனாக, முரடனாக இருந்தவன் மனம்மாறி கிறிஸ்தவ மதத்தைத் தழுவினான். அந்தக் குடிகார சகோதரன் வேறுயாரும் கிடையாது, நான்தான்" என்றான்.

இதைக் கேட்டதும் அந்த வயதான குருவானவர் கண்ணீர்விட்டு அழுதார். தன்னால் ஒருவன் மனமாறி இருக்கிறானே என்று மன நிம்மதி கொண்டார்.

நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்து பற்றிய நற்செய்தியை நம்மைச் சூழ்ந்து வாழும் மக்களுக்கு, நாம் சந்திக்கும் மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அது உடனடியாகப் பலன் தராவிட்டலும், நிச்சயம் ஒருநாள் நமக்குப் பலன்தரும். ஆகவே, தூய மாற்குவின் விழாவைக் கொண்டாடும் நாம் அவரைப் போற்று கிறிஸ்து பற்றிய நற்செய்தியை உலக மக்களுக்கு அறிவிப்போம். கிறிஸ்துவின் அன்புச் சீடர்கள் ஆவோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

Fr.Maria Antonyraj, Palayamkottai.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இருளில் இராதபடி நான் ஒளியாக உலகிற்கு வந்தேன்.

உலகில் தோன்றிய தலைசிறந்த மேதைகளில் ஒருவர் பெஞ்சமின் பிராங்க்ளின். ஒரு சமயம் அவர் பிலடெல்பியாவின் தெருக்களில் வெளிச்சம் நிரப்ப, உள்ளூர் நிர்வாகத்திடம், விளக்குகள் அமைக்க வேண்டினார். ஆனால் அந்த நிர்வாகமோ அவர் சொன்னதைப் பொருட்படுத்தவே இல்லை. இதனால் பொறுமை இழந்த அவர், தன் வீட்டு வாசலில் பிரமாண்டமான ஒரு விளக்கை அமைத்தார். அந்த விளக்கைப் பார்த்த உள்ளூர் மக்கள், நிர்வாகத்திடம் சென்று, விளக்கை அமைக்குமாறு கேட்டுக்கொண்டனர். அவர்களுடைய இந்த வற்புறுத்தலில் பேரில் ஒருவழியாக உள்ளூர் நிர்வாகம் அங்கு விளக்குகள் அமைத்தது.

நகரில் வெளிச்சம் கிடைக்க பெஞ்சமின் பிராங்க்ளின் தன்னுடைய வீட்டு வாசலில் விளக்கை அமைத்தார். அதனால் உள்ளூர் நிர்வாகம் தானாகவே நகர் முழுக்க விளக்குகளை அமைத்தது. ஆண்டவர் இயேசுவோ இந்த உலகம் முழுமைக்கு ஒளி கிடைக்க தாமே உலகின் ஒளியாகத் திகழ்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இருளில் இராதபடி நான் ஒளியாக உலகிற்கு வந்தேன்" என்கின்றார். இயேசுவின் இவ்வார்த்தைகள் ஆழமாக சிந்திக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன. இயேசு கூறுகின்ற இவ்வார்த்தைகளில் இரண்டு உண்மைகள் அடங்கி இருக்கின்றன. ஒன்று இயேசு யார் என்பது தொடர்பானது. இன்னொன்று அவரிடம் நம்பிக்கை கொள்வோருக்கு கிடைக்கக்கூடிய ஆசிர்வாதம் தொடர்பானதாக இருக்கின்றது.

முதலில் இயேசு யார் என்பது தொடர்பாக சொல்லப்படுவதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம். இயேசு கூறுகின்றார், "நான் ஒளியாக உலகிற்கு வந்தேன்" என்று. இந்த உலகம் இருளில் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. இருள் என்று சொல்கின்றபோது அதில் பாவம், சாவு போன்ற பல்வேறு காரியங்கள் அடங்கும். இப்படி இருளின் பிடியில் சிக்கத் தவித்துக் கொண்டிருந்த மக்களை மீட்பதற்காகத்தான் ஆண்டவர் இயேசு இந்த உலகிற்கு ஒளியாக வந்தார். அதனால்தான் இறைவாக்கினர் எசாயா, மெசியாவின் வருகையைக் குறித்துச் சொல்கின்றபோது, "காரிருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் இருந்தோர்மீது சுடரொளி வீசிற்று" என்று (எசா 9:2). இயேசுகூட தன்னைக் குறித்துச் சொல்கின்றபோது, "நானே உலகின் ஒளி" (யோவா 8:12) என்கின்றார். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கின்றபோது இயேசுவை உலகின் ஒளி என்று உறுதியாகச் சொல்லலாம்.

அடுத்ததாக, இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளக்கூடியவர் பெற்றுக்கூடிய ஆசிர்வாதம் தொடர்பாக சொல்லப்படுவதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம். இயேசு கூறுகின்றார், "என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இருளில் இராதபடி நான் ஒளியாக உலகிற்கு வந்தேன்" என்று. இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளக்கூடியவர் ஒருபோதும் இருளில் இருக்கமாட்டார், மாறாக அவர் எப்போதும் ஒளியிலே இருப்பார் என்பதுதான் இங்கே சொல்லப்படுகின்ற செய்தியாக இருக்கின்றது. இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளக்கூடியவர் எப்போதும் ஒளியிலேதான் இருப்பார். காரணம் திருப்பாடல் 119:105 ல் நாம் வாசிப்பது போல, இயேசுவில் நம்பிக்கை கொண்டோருடைய காலடிக்கு அவருடைய வாக்கு விளக்காக இருக்கின்றது அவர்களுடைய பாதைக்கு அது ஒளியாக இருக்கின்றது. ஆதலால், இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளக்கூடியவர்களுக்கு, அவருடைய வாக்கு ஒளியாக இருப்பதனால், அவர்கள் ஒருபோதும் இருளில் இடறி விழமாட்டார்கள் என்பது உண்மையாகின்றது.

அடுத்ததாக, இருளில் யாராரெல்லாம் விழுகின்றார்கள் என்று பார்த்தோமேயானால், அவர்கள் யாவரும் இயேசுவின் நம்பிக்கை இல்லாதவர்களாகவே, அவருடைய ஒளியை வெறுப்பவர்களகவே இருப்பார்கள். அவர்கள் ஒளியை வெறுப்பதற்குக் காரணம் தங்களுடைய தீச்செயல் யாவும் வெளியாகிவிடும் என்பதாலேயே.

நாம் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு, அதன்மூலம் அவர் தருகின்ற ஒளியில் நடப்பவர்களாக இருக்கின்றோமா? அல்லது அவர்மீது நம்பிக்கை வைக்காமல், இருளின் பாதையில் நடப்பவர்களாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இன்றைய நற்செய்தியின் இறுதியில் ஆண்டவர் இயேசு சொல்லக்கூடிய செய்தி: நான் கூறும் வார்த்தைகளைக் கேட்டும் அவற்றைக் கடைப்பிடியாதவருக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்குபவன் நானல்ல... என் வார்த்தையே தீர்ப்பளிக்கும்" என்று. ஆம், இயேசுவின் மீது நம்பிக்கை வைக்காமலும், அவர் சொன்ன சொல்லின்படி நடவாமலும் இருக்கின்றபோது, ஒருநாள் தண்டனைத் தீர்ப்பைப் பெறுவோம் என்பது உறுதி.

ஆகவே, இயேசுவிடமிருந்து தண்டனையை அல்ல, ஆசிரைப் பெற, அவர்மீது நம்பிக்கை வைத்து, அவருடைய வார்த்தைகளின் நடக்க முயற்சிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

'
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!