Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     24 ஏப்ரல் 2018  
                                                       பாஸ்காக் காலம் 4ம் வாரம்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 ஆண்டவராகிய இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 11: 19-26

அந்நாள்களில் ஸ்தேவானை முன்னிட்டு உண்டான துன்புறுத்தலால் மக்கள் பெனிசியா, சைப்பிரசு, அந்தியோக்கியா வரை சிதறிப்போயினர். அவர்கள் யூதருக்கு மட்டுமே இறைவார்த்தையை அறிவித்தார்கள்; வேறு எவருக்கும் அறிவிக்கவில்லை.

அவர்களுள் சைப்பிரசு, சிரேன் ஆகிய இடங்களைச் சேர்ந்த சிலர் இருந்தனர். அவர்கள் அந்தியோக்கியாவுக்கு வந்து அங்குள்ள கிரேக்கரை அணுகி ஆண்டவராகிய இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார்கள். ஆண்டவரின் கைவன்மையை அவர்கள் பெற்றிருந்தார்கள். பெருந்தொகையான மக்கள் நம்பிக்கை கொண்டு ஆண்டவரிடம் திரும்பினர். இந்தச் செய்தி எருசலேம் திருச்சபையினரின் காதில் விழவே அவர்கள் பர்னபாவை அந்தியோக்கியா வரை சென்றுவர அனுப்பி வைத்தார்கள்.

அவர் அங்குச் சென்றபோது, கடவுளின் அருள்செயலைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்; மேலும் உறுதியான உள்ளத்தோடு ஆண்டவரைச் சார்ந்திருக்குமாறு அனைவரையும் ஊக்கப்படுத்தினார். அவர் நல்லவர்; தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு நம்பிக்கை நிறைந்தவராய்ப் பெருந்திரளான மக்களை ஆண்டவரிடம் சேர்த்தார்.

பின்பு சவுலைத் தேடி அவர் தர்சு நகர் சென்றார்; அவரைக் கண்டு, அந்தியோக்கியாவுக்கு அழைத்துவந்தார். அவர்கள் ஓராண்டு முழுவதும் அந்தச் சபையாரோடு கூடவே இருந்து பெருந்திரளான மக்களுக்குக் கற்பித்து வந்தார்கள்.

அந்தியோக்கியாவில்தான் முதல் முறையாகச் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 87: 1-3. 4-5. 6-7a
=================================================================================
 பல்லவி: பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்!

அல்லது: அல்லேலூயா.

1 நகரின் அடித்தளம் திருமலைகளின்மீது அமைந்துள்ளது.
2யாக்கோபின் உறைவிடங்கள் அனைத்தையும் விட ஆண்டவர் சீயோன் நகர வாயில்களை விரும்புகின்றார்.
3 கடவுளின் நகரே! உன்னைப்பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன.
-பல்லவி

4 எகிப்தையும் பாபிலோனையும் என்னை அறிந்தவைகளாகக் கொள்வேன்; பெலிஸ்தியர், தீர் மற்றும் எத்தியோப்பியா நாட்டினரைக் குறித்து, "இவர்கள் இங்கேயே பிறந்தவர்கள்" என்று கூறப்படும்.
5 "இங்கேதான் எல்லாரும் பிறந்தனர்; உன்னதர்தாமே அதை நிலைநாட்டியுள்ளார்!' என்று சீயோனைப் பற்றிச் சொல்லப்படும்.
-பல்லவி

6 மக்களினங்களின் பெயர்களைப் பதிவு செய்யும்போது, "இவர் இங்கேதான் பிறந்தார்" என ஆண்டவர் எழுதுவார்.
7ய ஆடல் வல்லாருடன் பாடுவோரும் சேர்ந்து "எங்கள் நலன்களின் ஊற்று உன்னிடமே உள்ளது" என்பர்.
-பல்லவி



=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின் தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்.

புனித யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 22-30


அக்காலத்தில் எருசலேமில் கோவில் அர்ப்பண விழா நடந்துகொண்டிருந்தது. அப்போது குளிர்காலம். கோவிலின் சாலமோன் மண்டபத்தில் இயேசு நடந்துகொண்டிருந்தார்.

யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, "இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும்? நீர் மெசியாவானால் அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடும்'' என்று கேட்டார்கள்.

இயேசு மறுமொழியாக, "நான் உங்களிடம் சொன்னேன்; நீங்கள்தான் நம்பவில்லை. என் தந்தையின் பெயரால் நான் செய்யும் செயல்களே எனக்குச் சான்றாக அமைகின்றன. ஆனால் நீங்கள் நம்பாமல் இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் என் மந்தையைச் சேர்ந்தவர்கள் அல்ல. என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ளமாட்டார். அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ள இயலாது. நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
நல்லாயனின் நல்லாடுகள் ஆவோம்!

ஒரு நகரில் கல்வியாளர் ஒருவர் இருந்தார். அவர் எல்லோரிடமும் அநாகரீகமாகவும் அகம்பாகமாகவும் நடந்து வந்தார். அதனால் யாரும் அவரிடத்தில் நெருங்கிப் பழகுவதில்லை.

ஒரு விழாவில், அந்தக் கல்வியாளரைக் காட்டி அவருக்கு நெருக்கமான ஒருவர், "இவர் போல் நூலகத்தில் புத்தகங்களை அடுக்குபவர் யாரும் கிடையாது. இவர் மிகச் சிறந்த நூலகர்" என்றார். இது கல்வியாளரின் உள்ளத்தில் கர்வத்தை வளர்த்தது. அவரைப் பார்த்து இன்னொருவர், "இவர் நூலகத்தில் புத்தகங்களை அடுக்கி வைத்து என்ன பயன்? ஒரு நாளாவது அந்த நூல்களில் சொல்லியுள்ளபடி நடந்ததில்லையே" என்று குறைபட்டுக் கொண்டார். அதற்கு அந்தக் கல்வியாளருக்கு நெருக்கமானவர், "நான் இவர் நூல்களை அடுக்கி வைக்கிறார் என்றேனே தவிர படித்து வைத்திருக்கின்றார் எனச் சொல்லவில்லையே" என்றார்.

இதைக் கேட்டு அந்தக் கல்வியாளருக்கு பெருத்த அவமானமாய் போய்விட்டது. ஆமாம், பல நூல்களை வாங்கிக் குவித்தும், அந்த நூல்களில் சொல்லியுள்ளபடி நடக்கவில்லை என்றால் அதனால் என்ன பயன்?... அனுதினமும் இறைவார்த்தையைக் கேட்டும் அதன்படி நடக்கவில்லை என்றால், அதனால் ஆகக்கூடிய பலன்தான் என்ன? இயேசுவின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கவில்லை என்னும்போது அதனால் ஒரு பயனும் ஆகாது, நாம் ஒருபோதும் இயேசுவின் சீடராக, அவருடைய மந்தையாக மாற முடியாது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, தான் எப்படி நல்லாயனாக இருக்கிறேன் என்பதையும், தன் ஆடுகள் எப்படி இருக்கவேண்டும் என்பதையும் மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றார். நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

முதலில் ஆண்டவர் இயேசு எப்படி ஒரு நல்ல ஆயராகத் திகழ்கின்றார் என்பதைக் குறித்து பார்ப்போம். நற்செய்தியில் இயேசு கூறுகின்றார், எனக்கு (ஆடுகளைத்) அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கின்றேன்" என்று. ஒரு நல்ல ஆயனுக்கு உரிய முதன்மையான தகுதியே தன் ஆடுகளை அறிந்திருப்பதுதான். அந்த விதத்தில் பார்க்கும்போது நல்லாயனாகிய இயேசு ஆடுகளாகிய நம்மை முழுமையாக அறிந்து வைத்திருக்கின்றார். அடுத்ததாக இயேசு நம்மை முற்றிலுமாக அறிந்து வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், நமக்கு நிலைவாழ்வினைத் தருபவராக இருக்கின்றார். இந்த உலகத்தில் யாரும் நிலைவாழ்வு தருவதாக வாக்குறுதி தந்ததுமில்லை, நிலைவாழ்வினைத் தரப்போவதுமில்லை. ஆனால், நல்லாயனாகிய இயேசு நமக்கு நிலைவாழ்வு தரக்கூடியவர். இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கின்றபோது இயேசுவை ஒரு நல்ல ஆயனாகச் சொல்லலாம்.

நல்லாயன் இயேசுவைக் குறித்து சிந்தித்துப் பார்த்த நாம், ஆடுகளாகிய நாம் எப்படி இருக்கவேண்டும் என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம். நற்செய்தியில் இயேசு கூறுவது போல, ஆடுகளுக்கு உரிய முதன்மையான தகுதி ஆயனின் குரல் நடப்பதாகும். எப்போதெல்லாம் ஆடுகள் ஆயனின் குரல்கேட்டு நடக்கின்றதோ, அப்போதெல்லாம் அவை பாதுகாப்பாக, வளமையாக இருக்கின்றன. அதை விடுத்து ஆயனின் குரலுக்கு செவிமடுக்காமல், தான்தோன்றித் தனமாக இருக்கின்றதோ அப்போது அவை சிக்கலில் மாட்டிக்கொண்டு தவியாய் தவிக்கின்றன. இவை மனிதர்களுக்கும் பொருந்தும். நல்லாயனாகிய இயேசுவின் குரலுக்கு நாம் செவி மடுத்து வாழ்கின்றபோது ஆசிர்வாதிக்கப்பட்டவர்களாய், பாதுகாக்கப்பட்டவர்களாய் இருப்போம். அதை விடுத்து இயேசுவின் குரலுக்கு செவிமடுக்காமல், தான்தோன்றித்தனமாக வாழ்கின்றபோது நாம் ஆபத்தின் பிடியில் இருக்கின்றோம் என்பதுதான் உண்மை.

ஆடுகளுக்கு உரிய இரண்டாவது தகுதி, ஆயனைப் பின்தொடர்ந்து நடப்பதாகும். ஆடுகள் ஆயனைப் பின்தொடர்ந்து நடக்கின்றபோது அவை ஆபத்துக்குள் விழுவது இல்லை. அது போன்றுதான் நாமும் நல்லாயனைப் பின்தொடர்ந்து நடப்போமெனில் நாமும் ஆபத்துக்குள் விழாது இருப்போம்.

ஆயனைப் பின்தொடர்ந்து நடத்தல் என்று சொல்கின்றபோது இயேசுவின் வழியில் நாமும் நடக்கவேண்டும் என்றுதான் பொருள் எடுத்துக்கொள்ளவேண்டும். இயேசு இந்த மண்ணுலகில் வாழ்ந்த காலத்தில் பிறரன்புக்கு மன்னிப்பிற்கு, இரக்கத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கினார். நல்லாயனாகிய இயேசுவைப் பின்பற்றி நடக்கக்கூடிய நாமும் அன்பிற்கு, இரக்கத்திற்கு, மன்னிப்பிற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழவேண்டும். அப்படியில்லை என்றால் நாம் இயேசுவின் மந்தை என்று சொல்லிக்கொள்வதில் எந்தவொரு அர்த்தமுமில்லை.

ஆகவே, நம்மை முழுமையாக அறிந்து, நமக்கு நிலைவாழ்வினைத் தரும் நல்லாயன் இயேசுவின் மந்தையாக விளங்க, அவர் குரல் கேட்டு, அவரைப் பின்பற்றி நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

'
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!