Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     23 ஏப்ரல் 2018  
                                                       பாஸ்காக் காலம் 4ம் வாரம்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
வாழ்வுக்கு வழியான மன மாற்றத்தைப் பிற இனத்தவருக்கும் கடவுள் கொடுத்தார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 11: 1-18


அந்நாள்களில் பிற இனத்தவரும் கடவுளின் வார்த்தையை ஏற்றுக் கொண்டதைப்பற்றித் திருத்தூதர்களும் யூதேயாவிலுள்ள சகோதரர் சகோதரிகளும் கேள்விப்பட்டார்கள்.

பேதுரு எருசலேமுக்குத் திரும்பிவந்தபோது, விருத்தசேதனம் செய்துகொண்டவர்கள் அவரோடு வாதிட்டனர். "நீர் ஏன் விருத்தசேதனம் செய்துகொள்ளாதோரிடம் சென்று அவர்களுடன் உணவு உண்டீர்?" என்று குறை கூறினர்.

பேதுரு நடந்தவற்றை ஒன்றன்பின் ஒன்றாக விளக்கிக் கூறத் தொடங்கினார். "நான் யோப்பா நகரில் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது மெய்ம்மறந்த நிலையில் ஒரு காட்சி கண்டேன்.

பெரிய கப்பற்பாயைப் போன்ற ஒரு விரிப்பு நான்கு முனைகளிலும் கட்டப்பட்டு வானத்திலிருந்து இறக்கப்பட்டு என்னிடம் வந்தது. அதை நான் கவனமாக நோக்கியபோது, தரையில் நடப்பன, ஊர்வன, வானில் பறப்பன, காட்டு விலங்குகள் ஆகியவற்றைக் கண்டேன்.

"பேதுரு, எழுந்திடு! இவற்றைக் கொன்று சாப்பிடு" என்னும் ஒரு குரல் ஒலிப்பதையும் கேட்டேன்.

அதற்கு நான், "வேண்டவே வேண்டாம் ஆண்டவரே, தீட்டானதும் தூய்மையற்றதுமான எதுவும் ஒருபோதும் என் வாய்க்குள் சென்றதில்லையே" என்றேன்.

இரண்டாம் முறையும் வானிலிருந்து மறுமொழியாக, "தூய்மையானது எனக் கடவுள் கருதுவதைத் தீட்டாகக் கருதாதே" என்று அக்குரல் ஒலித்தது.

இப்படி மும்முறை நடந்தபின்பு யாவும் வானத்துக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டன. அந்நேரத்தில் செசரியாவிலிருந்து என்னிடம் அனுப்பப்பட்ட மூவர் நான் தங்கியிருந்த வீட்டின் முன் வந்து நின்றனர்.

தூய ஆவியார் என்னிடம், "தயக்கம் ஏதுமின்றி அவர்களோடு செல்" என்று கூறினார்.

உடனே நானும் இந்த ஆறு சகோதரர்களுமாக அந்த மனிதர் வீட்டுக்குச் சென்றோம்.

அவர் தம் வீட்டில் வானதூதர் வந்து நின்றதைக் கண்டதாகவும், அத்தூதர் பேதுரு என்னும் பெயர் கொண்ட சீமோனை வரவழையும்; நீரும் உம் வீட்டார் அனைவரும் மீட்புப் பெறுவதற்கான வார்த்தைகளை அவர் உம்மோடு பேசுவார் என்று தமக்குக் கூறியதாகவும் எங்களுக்கு அறிவித்தார்.

நான் பேசத்தொடங்கியதும் தூய ஆவி முதலில் நம்மீது இறங்கி வந்ததுபோல் அவர்கள் மீதும் இறங்கி வந்தது.

அப்போது, "யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார்; ஆனால் நீங்கள் தூய ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள்" என்ற ஆண்டவரின் வார்த்தைகளை நான் நினைவு கூர்ந்தேன். இப்போதும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொண்டபோது நமக்கு அருளப்பட்ட அதே கொடையைக் கடவுள் அவர்களுக்கும் கொடுத்தார் என்றால் கடவுளைத் தடுக்க நான் யார்?" என்றார்.

இவற்றைக் கேட்டு அவர்கள் அமைதி அடைந்தனர்; வாழ்வுக்கு வழியான மனமாற்றத்தைப் பிற இனத்தவருக்கும் கடவுள் கொடுத்தார் என்று கூறி அவரைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 42: 1-2; 43: 3. 4 (பல்லவி: 42: 2a)
=================================================================================
 பல்லவி: உயிருள்ள இறைவன்மீது என் நெஞ்சம் தாகம் கொண்டுள்ளது.

அல்லது: அல்லேலூயா.

42:1 கலைமான் நீரேடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் கடவுளே! என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது. 2 என் நெஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது; எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப்போகின்றேன்? பல்லவி

43:3 உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும். அவை என்னை வழி நடத்தி, உமது திருமலைக்கும் உமது உறைவிடத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும். பல்லவி

4 அப்பொழுது, நான் கடவுளின் பீடம் செல்வேன்; என் மன மகிழ்ச்சியாகிய இறைவனிடம் செல்வேன்; கடவுளே! என் கடவுளே! யாழிசைத்து ஆர்ப்பரித்து உம்மைப் புகழ்ந்திடுவேன். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 யோவா 10: 14-15

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஆடுகளுக்கு வாயில் நானே.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-10


அக்காலத்தில் இயேசு கூறியது: "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: ஆட்டுக் கொட்டிலில் வாயில் வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக் குதிப்போர் திருடர் அல்லது கொள்ளையராய் இருப்பர். வாயில் வழியாக நுழைபவர் ஆடுகளின் ஆயர். அவருக்கே காவலர் வாயிலைத் திறந்துவிடுவார். ஆடுகளும் அவரது குரலுக்கே செவிசாய்க்கும். அவர் தம்முடைய சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே கூட்டிச் செல்வார். தம்முடைய சொந்த ஆடுகள் அனைத்தையும் வெளியே ஓட்டி வந்தபின் அவர் அவற்றிற்கு முன் செல்வார். ஆடுகளும் அவரைப் பின்தொடரும்.

ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியும். அறியாத ஒருவரை அவை பின்தொடரா. அவரை விட்டு அவை ஓடிப்போகும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியாது."

இயேசு அவர்களிடம் உவமையாக இவ்வாறு சொன்னார். ஆனால் அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

மீண்டும் இயேசு கூறியது: "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: ஆடுகளுக்கு வாயில் நானே. எனக்கு முன்பு வந்தவர் அனைவரும் திருடரும் கொள்ளையருமே. அவர்களுக்கு ஆடுகள் செவிசாய்க்கவில்லை. நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை. அவர்கள் உள்ளே போவர்; வெளியே வருவர்; மேய்ச்சல் நிலத்தைக் கண்டுகொள்வர். திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு வந்துள்ளேன்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாய்ப் பெறும்பொருட்டு வந்துள்ளேன்"

காலம் சென்ற ஐயா தென்கச்சி கோ. சாமிநாதன் அவர்கள் சொல்லக்கூடிய வேடிக்கைக் கதை இது.
அரசன் ஒருவன் இருந்தான். அவன் வித்தியாசமானவன். வித்தியாசமானவன் என்றால், வரி வசூலிப்பதில் வித்தியாசமானவன். எப்படி என்றால் மக்களிடத்தில் அவன் நேரடியாக வரிவசூலிக்காமல் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மரக்கால் நெல் கொடுத்து, அதற்கு ஈடாக ஒரு மரக்கால் நெல் தரவேண்டும் என்றான். ஒரு மரக்கால் நெல்லுக்கு ஒரு மரக்கால் அரிசியா என்று மக்களெல்லாம் புலம்பினார்கள். காரணம் ஒரு மரக்கால் நெல்லைக் குத்தினாலோ அல்லது அரைத்தாலோ பாதி மரக்கால் அரிசிதான் வரும். அந்தப் பாதியை நிரப்புவதற்கு வேறிடத்தில் பாதி மரக்கால் அரசி வாங்கவேண்டும். இப்படிப்பட்ட ஒரு நெடிக்கடியால் மக்கள் செய்வதறியாமல் திகைத்தார்கள். ஒருசிலர் நாட்டைக் காலிசெய்துகொண்டு வேறொரு நாட்டிற்குப் போனார்கள். நாட்டில் இருந்தவர்களோ, 'இவனுக்கு ஒரு சாவு வரமாட்டேன் என்கிறதே' என்று அரசனை சபித்துக் கொண்டிருந்தார்கள்.

மக்களுடைய சாபத்தினாலோ என்னவோ, அரசன் மரணப்படுக்கையில் விழுந்தான். ஆனால், அவனைப் பார்க்க மக்கள் யாருமே வரவில்லை. இதனைக் கண்டு அரசன் மிகவும் பயந்துபோனான். உடனே அரசன் இளவரசனைக் கூப்பிட்டு, "மகனே! மக்கள் என்மீது கடுங்கோபத்தில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நீ ஏதாவது செய்து எனக்கு நல்ல பெயர் வாங்கித் தரவேண்டும். செய்வாயா?" என்றான். இளவரசனும் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு, நாட்டை ஆளக்கூடிய பொறுப்பினை ஏற்றான்.
அவன் அரசனாகப் பொறுப்பேற்றதும் செய்த முதல் காரியம், அரசாங்கம் தரக்கூடிய ஒரு மரக்கால் உமிக்கு, ஒரு மரக்கால் அரிசி தரவேண்டும் என்று ஆணை பிறபித்ததுதன். இந்த அரசாணையைப் பார்த்துவிட்டு மக்களெல்லாம், 'இது என்ன கொடுமை' என்று புலம்பித் தள்ளினார்கள். அதே நேரத்தில், 'இவனுக்கு இவன் அப்பன் போலிருக்கே' என்று அவனைப் புகழ்ந்து தள்ளினார்கள். இப்படி ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை என்று தந்தையும் மகனும் நாட்டை ஆண்டதால், நாட்டு மக்கள் இரத்தக் கண்ணீர் வடித்தார்கள்.

இது வெறும் கதை மட்டும் கிடையாது. இன்றைக்கும் நம் நாட்டில் இதுபோன்ற அட்டுழியங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இப்படி நம்மை ஆளக்கூடிய தலைவர்கள், ஆட்சியாளர்கள் நம்மை கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கின்ற சூழலில், நாம் வாழ்வு பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு இந்த மண்ணகத்திற்கு வந்த நல்லாயன் இயேசு கிறிஸ்துவைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னை நல்ல ஆயனாக, ஆடுகளுக்கு வாயிலாக சுட்டிக்காட்டுகின்றார். இயேசு எப்படி நல்லாயனாக, ஆடுகளுக்கு வாயிலாக விளங்குகின்றார் என்பதை இப்போது பார்ப்போம். இயேசு கூறுவார், "நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை" என்று. ஆம், இயேசு ஒரு நல்ல ஆயன் என்பதை நிரூபிக்கக்கூடிய விதமாய் அமைவது அவர் தருகின்ற பாதுகாப்புதான். இயேசுவின் வழியாக அல்லது இயேசுவோடு நடப்பவருக்கு ஆபத்துக் கிடையாது. ஏனென்றால் அவர் உலக முடிவு வரை நம்மோடு இருப்பவர்; எதிரிகளிடமிருந்தும் பகைவர்களிடமிருந்தும் நம்மைக் காப்பாற்றக்கூடியவர். ஆதலால், இயேசு ஒரு நல்ல ஆயனாகச் சொல்லலாம்.

இயேசுவை நல்ல ஆயனாகச் சொல்வதற்குக் அடுத்த காரணம் அவர் தன்னுடைய ஆடுகளாகிய நமக்கு என்றும் உணவளிப்பார் என்பதுதான். திருப்பாடல் 145:15 ல் வாசிக்கின்றோம், "எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன; தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர்" என்று. இயேசு ஆடுகளாக நமக்கு என்றும் உணவளிக்கின்றார் என்பதால் அவர் நல்ல ஆயனாகத் திழ்கின்றார். இயேசு ஒரு நல்ல ஆயன் என்று சொல்வதற்கு மூன்றாவது காரணம் அவர் ஆடுகளாகிய நமக்கு உயிர் தந்தார் என்பதால்தான். இந்த உலகத்தில் எத்தனையோ தலைவர்கள் வந்திருக்கின்றார்கள், அவர்கள் மக்களுக்காக உயிர் தந்திருக்கின்றார்களா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான். ஆனால், இயேசு நமக்காக உயிர் தந்திருக்கின்றார். அதனாலேயே அவரை நல்ல ஆயன் என்று சொல்லலாம்.
ஆகவே, நம்மை எல்லாவித ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றும், எல்லா நேரமும் உணவு கொடுக்கும், உயிர்தரும் நல்ல ஆயனின் வழியில் நடந்து, அவருக்கு உகந்த மக்களாவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.Antony

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
==================================================================================================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

"
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!