Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     20 ஏப்ரல் 2018  
                                                       பாஸ்காக் காலம் 3ம் வாரம்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 பிற இனத்தவருக்கு எனது பெயரை எடுத்துச்செல்ல நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட கருவியாய் சவுல் இருக்கிறார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 9: 1-20

அந்நாள்களில் சவுல் சீறியெழுந்து ஆண்டவரின் சீடர்களைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தி வந்தார். தலைமைக் குருவை அணுகி, இந்தப் புதிய நெறியைச் சார்ந்த ஆண், பெண் யாராய் இருந்தாலும் அவர்களைக் கைது செய்து எருசலேமுக்கு இழுத்துக்கொண்டு வரத் தமஸ்கு நகரிலுள்ள தொழுகைக் கூடங்களுக்குக் கடிதங்களைக் கேட்டு வாங்கினார்.

இவ்வாறு அவர் புறப்பட்டுச் சென்று தமஸ்குவை நெருங்கியபோது, திடீரென வானத்திலிருந்து தோன்றிய ஓர் ஒளி அவரைச் சூழ்ந்து வீசியது. அவர் தரையில் விழ, "சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?" என்று தம்மோடு பேசும் குரலொன்றைக் கேட்டார்.

அதற்கு அவர், "ஆண்டவரே நீர் யார்?" எனக் கேட்டார்.

ஆண்டவர், "நீ துன்புறுத்தும் இயேசு நானே. நீ எழுந்து நகருக்குள் செல்; நீ என்ன செய்யவேண்டும் என்பது அங்கே உனக்குச் சொல்லப்படும்" என்றார்.

அவரோடு பயணம் செய்தோர் இக்குரலைக் கேட்டனர். ஆனால் ஒருவரையும் காணாமல் வாயடைத்து நின்றனர். சவுல் தரையிலிருந்து எழுந்தார். தம் கண்கள் திறந்திருந்தும் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை. எனவே அவர்கள் அவருடைய கைகளைப் பிடித்து அவரைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றார்கள். அவர் மூன்று நாள் பார்வையற்றிருந்தார். அந்நாள்களில் அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை.

தமஸ்குவில் அனனியா என்னும் பெயருடைய சீடர் ஒருவர் இருந்தார். ஆண்டவர் அவருக்குத் தோன்றி, "அனனியா!" என அழைக்க, அவர், "ஆண்டவரே, இதோ அடியேன்" என்றார்.

அப்போது ஆண்டவர் அவரிடம், "நீ எழுந்து நேர்த் தெரு என்னும் சந்துக்குப் போய் யூதாவின் வீட்டில் சவுல் என்னும் பெயருடைய தர்சு நகரத்தவரைத் தேடு. அவர் இப்போது இறைவனிடம் வேண்டிக்கொண்டிருக்கிறார். அனனியா என்னும் பெயருடைய ஒருவர் வந்து தாம் மீண்டும் பார்வையடையுமாறு தம்மீது கைகளை வைப்பதாக அவர் காட்சி கண்டுள்ளார்" என்று கூறினார்.

அதற்கு அனனியா மறுமொழியாக, "ஆண்டவரே, இம்மனிதன் எருசலேமிலுள்ள இறைமக்களுக்கு என்னென்ன தீமைகள் செய்தான் என்பதைப் பற்றிப் பலர் கூறக் கேட்டிருக்கிறேன். உம் பெயரை அறிக்கையிடும் அனைவரையும் கைது செய்வதற்காகத் தலைமைக் குருக்களிடமிருந்து அதிகாரம் பெற்று இங்கே வந்திருக்கிறான்" என்றார்.

அதற்கு ஆண்டவர் அவரிடம், "நீ செல். அவர் பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச்செல்ல நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட கருவியாய் இருக்கிறார். என் பெயரின் பொருட்டு அவர் எத்துணை துன்புறவேண்டும் என்பதை நான் அவருக்கு எடுத்துக் காட்டுவேன்" என்றார்.

அனனியா அங்கிருந்து போய் அந்த வீட்டுக்குள் சென்று, கைகளை அவர்மீது வைத்து, "சகோதரர் சவுலே, நீர் வந்த வழியில் உமக்குத் தோன்றிய ஆண்டவராகிய இயேசு நீர் மீண்டும் பார்வை அடையவும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படவும் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளார்" என்றார்.

உடனே அவருடைய கண்களிலிருந்து செதில்கள் போன்றவை விழவே, அவர் மீண்டும் பார்வையடைந்தார். பார்வையடைந்ததும் அவர் எழுந்து திருமுழுக்குப் பெற்றார்.

பின்பு சவுல் உணவு அருந்தி வலிமை பெற்றார். சில நாள்களாக சவுல் தமஸ்குவில் சீடர்களுடன் தங்கியிருந்தார். உடனடியாக அவர் இயேசுவே இறைமகன் என்று தொழுகைக் கூடங்களில் பறைசாற்றத் தொடங்கினார்.



இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 117: 1. 2 (பல்லவி: மாற் 16: 15)
=================================================================================
 
பல்லவி: உலகெங்கும் சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.
அல்லது: அல்லேலூயா.

1 பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! பல்லவி

2 ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. அல்லேலூயா! பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 
யோவா 6: 56
அல்லேலூயா, அல்லேலூயா! "எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்," என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா
.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 52-59

அக்காலத்தில் "நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?" என்ற வாக்குவாதம் யூதர்களிடையே எழுந்தது.

இயேசு அவர்களிடம், "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்."

இயேசு கப்பர்நாகுமில் உள்ள தொழுகைக்கூடத்தில் இவ்வாறு கற்பித்தார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை:

"ஏன் என்னை துன்புறுத்துகின்றாய்?"
பிறருக்குரியதை பறிக்கும் போது,
பிறருக்கெதிராக சதி செய்யும் போது,
பிறரை பழிக்கும் போது,
பிறரை பற்றி வதந்தியை பரப்பும் போது,
பிறரை பழிவாங்க துடிக்கும் போது,. . .
கிறிஸ்து இன்றும் துன்புறுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கின்றார்.
பாடுகள் ஓயவில்லை, தொடருகின்றன.
கசையடியும், முள் முடியும் தொடர்கதையாகின்றது.
உலகம் இருக்கும் வரை இது தொடரும் என்றாலும், நான் பிலாத்துவாக, ஏரோதுவாக, தலைமை சங்க உறுப்பினராக, சவுலாக இருக்கின்றேனா?
"நீ துன்புறுத்தும் கிறிஸ்துவே நான்" என்ற குரல் கேட்கவில்லையா?

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"எனது சதையை உண்டு, என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார்"

தென் தமிழகத்திலுள்ள மார்த்தாண்டம் மறைமாவட்டத்தைச் சார்ந்தவர் பெனடிக்ட் பீட்டர் ராஜன் என்ற குருவானவர். 52 வயது நிரம்பிய இந்தக் குருவானார் செய்த செயல் மக்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டது.
அவர் செய்த செயல் இதுதான். கேரள மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சார்ந்த மொய்தீன் என்ற இஸ்லாமியருக்கு இரண்டு கிட்னிகளுமே செயலிழந்து, அவருடைய எதிர்கால வாழ்வே கேள்விக்குள்ளாக்கப்பட்டு இருந்தது. இதை அறிந்த பெனடிக்ட் பீட்டர் ராஜன் என்ற அந்த குருவானவர் தன்னுடைய கிட்னிகளுள் ஒன்றை மொய்தீனுக்கு பொருத்தக் கொடுத்து, அவரை சாவிலிருந்து காப்பாற்றினார். 20. 02. 2018 அன்று, கேரளா மாநிலம், ஆழப்புழாவில் இருக்கக்கூடிய லேக் ஷோர் மருத்துவமனையில் நடைபெற்ற அறுவைச் சிகிச்சையின் போதுதான் அருட்தந்தை பெனடிக்ட் பீட்டர் ராஜனிடமிருந்து, மொய்தீனுக்கு கிட்னி பொருத்தப்பட்டது.

ஆண்டவர் இயேசுவைப் போன்றே, தியாக உள்ளத்தோடு தனது இரண்டு கிட்னிகளுள் ஒன்றை தியாகமாகக் கொடுத்து ஒரு இஸ்லாமிய சகோதருக்கு வாழ்வு கொடுத்த அருட்தந்தை பெனடிக்ட் பீட்டர் ராஜன் நமக்கெல்லாம் ஒரு முன்மாதிரி.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார்" என்பார். இயேசுவின் இவ்வார்த்தைகளுக்கு ஆகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பவர்தான் அருட்தந்தை பெனடிக்ட் பீட்டர் ராஜன் என்ற அந்தக் குருவானார். ஒருவருடைய "சதையை உண்டுஇ அவருடைய இரத்தத்தைக் குடிப்பதனால் அதாவது ஒருவருடைய உடலை உண்பதனால் வாழ்வடைந்து முடியுமா? எனக் கேள்வி எழலாம். அருட்தந்தை பெனடிக்ட் பீட்டர் ராஜன் அவர்களுடைய உடலின் ஒரு பாகமான கிட்னி, மொய்தீன் என்பவருக்குப் பொருத்தப்பட்டதாதால்தான் அவர் உயிர் பிழைத்தார், இன்றைக்கும் அவர் உயிரோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றார். அந்த வகையில் பார்க்கும்போது இயேசுவின் உடலை உண்டு, அவருடைய இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வை கொண்டுள்ளார் என உறுதியாகச் சொல்லலாம்.

இயேசுவின் உடலை உண்டு, அவருடைய இரத்தத்தைக் குடிப்பதனால் மேலும் என்னென்ன ஆசிர்வாதங்களை நாம் பெற்றுக்கொள்ளலாம் என்பதை நற்செய்தியில் அவர் மிக அழகாக எடுத்துக் கூறுகின்றார். அப்படி நாம் பெறக்கூடிய முதலாவது நன்மை, அவரோடு இணைந்திருப்போம் என்பதாகும். நாம் எந்தவிதமான உணவை உட்கொள்கின்றோமோ அதைப் போன்றே ஆகின்றோம் என்று இன்றைய அறிவியல் நமக்கு எடுத்துச் சொல்கின்றது. அந்த விதத்தில் நாம் பார்க்கும்போது, நாம் இயேசுவை உட்கொள்கின்றபோது அவரை போன்று ஆகுகின்றோம், அவரோடு என்றும் இணைந்திருக்கின்றோம் என்பது உண்மையாகின்றது. அவரோடு இணைந்திருப்பதால் எத்தகைய ஆசிர்வாதங்களைப் பெறமுடியும் என்பதை நாம் யோவான் நற்செய்தி 15:5 ல் வரக்கூடிய "ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கணிதருவார்" என்ற வார்த்தைகளிருந்து நாம் புரிந்துகொள்ளலாம். ஆகவே, இயேசுவின் உடலை உண்டு, அவருடைய இரத்தத்தைக் குடிப்பதால் அவரோடு நாம் இணைந்திருந்து அதனால் நாம் ஏராளமான நன்மைகளைப் பெற முடியும் என்பது உறுதி.

இயேசுவின் உடலை உண்பதனால் நாம் பெறக்கூடிய இரண்டாவது நன்மை வாழ்வு என்பதாகும். இயேசு கூறுகின்றார், "வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்" என்று. ஆம், சாதாரண உணவே நமக்கு உடல் நலத்தையும் ஆரோக்கியத்தையும் தருகின்றபோது, இயேசு என்னும் விண்ணக உணவினை நாம் உட்கொள்கின்றபோது நாம் வாழ்வடையாமல் போவோமா? நிச்சயமாக வாழ்வடைவோம் என்பதுதான் உண்மை.

இயேசுவின் உடலை உட்கொள்ளும்போது அவருடைய விழுமியங்களை, அவருடைய படிப்பினை நம் வாழ்வாக்குகின்றோம். அப்படி வாழ்வாக்கும்போது நாம் நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்கின்றோம். இதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை. பல புனிதர்கள் இயேசுவின் உடலை உட்கொண்டு, மறு கிறிஸ்துகளாக வாழ்ந்தார்கள். அதனால்தான் அவர்கள் இன்றைக்கும் நம்முடைய மனங்களில் சிம்மாசனம் போட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். நாமும் இயேசுவின் இயேசுவின் உடலை உட்கொண்டு அவருடைய விழுமியங்களையும் படிப்பினைகளையும் வாழ்வாக்குகின்றது நாமும் நிலைவாழ்வை அடைவோம் என்பது திண்ணம்.

திருமணத்தைக் குறித்து பேசும்போது இயேசு, "இனி அவர்கள் இருவர் அல்ல, ஒருவர் என்பர்" (மாற்கு 10: 8). இயேசுவின் உடலை உட்கொள்ளும்போது நாமும் அவரோடு ஒன்றாகி, அவரைப் போன்று வாழ்வோம் என்பது உறுதி. ஆகவே, இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் நம்பிக்கையோடு உட்கொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

'
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!