Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     19 ஏப்ரல் 2018  
                                                       பாஸ்காக் காலம் 3ம் வாரம்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 நீர் முழுஉள்ளத்தோடு நம்பினால் தடையில்லை.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 8: 26-40

அந்நாள்களில் ஆண்டவரின் தூதர் பிலிப்பிடம், "நீ எழுந்து எருசலேமிலிருந்து காசாவுக்குச் செல்லும் வழியாகத் தெற்கு நோக்கிப் போ" என்றார். அது ஒரு பாலைநிலப் பாதை. பிலிப்பு அவ்வாறே புறப்பட்டுப் போனார்.

அப்போது எத்தியோப்பிய அரச அலுவலர் ஒருவர் எருசலேம் சென்று, கடவுளை வணங்கிவிட்டுத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தார். அவர் ஓர் அலி; எத்தியோப்பிய அரசியான கந்தகியின் நிதியமைச்சர். அவர் தமது தேரில் அமர்ந்து எசாயாவின் இறைவாக்கு நூலைப் படித்துக் கொண்டிருந்தார்.

தூய ஆவியார் பிலிப்பிடம், "நீ அந்தத் தேரை நெருங்கிச் சென்று அதனோடு கூடவே போ" என்றார்.

பிலிப்பு ஓடிச் சென்று, அவர் எசாயாவின் இறைவாக்கு நூலை வாசிப்பதைக் கேட்டு, "நீர் வாசிப்பதின் பொருள் உமக்குத் தெரிகின்றதா?" என்று கேட்டார்.

அதற்கு அவர், "யாராவது விளக்கிக்காட்டாவிட்டால் எவ்வாறு என்னால் தெரிந்துகொள்ள முடியும்?" என்று கூறித் தேரில் ஏறித் தன்னோடு அமருமாறு பிலிப்பை அழைத்தார்.

அவர் வாசித்துக்கொண்டிருந்த மறைநூல் பகுதி பின்வருமாறு: "அடிப்பதற்கு இழுத்துச்செல்லப்பட்ட ஆட்டுக் குட்டிபோலும், உரோமம் கத்தரிப்போன் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார். தாழ்வுற்ற நிலையில் அவருக்கு நீதி வழங்கப்படவில்லை. அவருடைய தலைமுறையைப்பற்றி எடுத்துரைப்பவன் யார்? ஏனெனில் அவருடைய உயிர்தான் எடுக்கப்பட்டுவிட்டதே!"

அவர் பிலிப்பிடம், "இறைவாக்கினர் யாரைக் குறித்து இதைக் கூறுகிறார்? தம்மைக் குறித்தா, அல்லது மற்றொருவரைக் குறித்தா? தயவு செய்து கூறுவீரா?" என்று கேட்டார்.

அப்போது பிலிப்பு, இந்த மறைநூல் பகுதியிலிருந்து தொடங்கி, இயேசுவைப்பற்றிய நற்செய்தியை அவருக்கு அறிவித்தார். அவர்கள் போய்க்கொண்டிருந்தபோது வழியில் தண்ணீர் இருந்த ஓர் இடத்துக்கு வந்தார்கள்.

அப்போது அவர், "இதோ, தண்ணீர் உள்ளதே, நான் திருமுழுக்குப் பெற ஏதாவது தடை உண்டா?" என்று கேட்டார். அதற்குப் பிலிப்பு, "நீர் முழு உள்ளத்தோடு நம்பினால் தடையில்லை" என்றார்.

உடனே அவர், "இயேசு கிறிஸ்து இறைமகன் என்று நம்புகிறேன்" என்றார்.

உடனே அமைச்சர் தேரை நிறுத்தக் கூறினார். பிலிப்பு, அமைச்சர் ஆகிய இருவரும் தண்ணீருக்குள் இறங்கினர். பிலிப்பு அவருக்குத் திருமுழுக்கு கொடுத்தார். அவர்கள் தண்ணீரிலிருந்து வெளியேறினவுடனேயே ஆண்டவரின் ஆவியார் பிலிப்புவை எடுத்துச் சென்றுவிட்டார். அமைச்சர் அதன்பின் அவரைக் காணவில்லை; அவர் மகிழ்ச்சியோடு தம் வழியே சென்றார்.

பின்பு பிலிப்பு ஆசோத்து என்னும் இடத்தில் காணப்பட்டார். செசரியா போய்ச் சேரும்வரை அவர் சென்ற நகரங்களிலெல்லாம் நற்செய்தியை அறிவித்தார்.



இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் -திபா 40: 6-7ய. 7b-8. 9. 10
=================================================================================
 திபா 66: 8-9. 16-17. 20 (பல்லவி: 1)

பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!
அல்லது: அல்லேலூயா.

8 மக்களினங்களே! நம் கடவுளைப் போற்றுங்கள்; அவரைப் புகழ்ந்துபாடும் ஒலி கேட்கச் செய்யுங்கள். 9 நம்மை உயிர்வாழச் செய்தவர் அவரே; அவர் நம் கால்களை இடற விடவில்லை. பல்லவி

16 கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன். 17 அவரிடம் மன்றாட என் வாய் திறந்தது; அவரை ஏத்திப் புகழ என் நா எழுந்தது. பல்லவி

20 என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள் போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி! பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 6: 51
அல்லேலூயா, அல்லேலூயா! "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்," என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 44-51

அக்காலத்தில் இயேசு யூதர்களைப் பார்த்துக் கூறியது: "என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். "கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத்தருவார்" என இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது.

தந்தைக்குச் செவிசாய்த்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர். கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக்கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார்.

உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர். வாழ்வு தரும் உணவு நானே. உங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர். உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே.

விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை:
பிலிப்புவின் போதனையை விளக்கத்தை கேட்டு, திருமுழுக்கு பெற்றார் எத்தியோப்பிய நிதியமைச்சர்.

போதனையின் விளக்கம் மக்களை கவர்ந்து, அவர்களை திருமுழுக்கு பெறச் செய்ய வேண்டும்.

எனவே தான் பவுல் கூறுவார், நற்செய்தி அறிவிப்பவர்களின் மலரடிகள் எத்துணை பேறுபெற்றது என்று.

இன்றும் அறிவிப்பவர்கள் அறிவித்துக் கொண்டேயிருக்கிறார்கள். பலபேர் விளக்கங்களை படித்து ஆய்வு செய்து முனைவராகும் வாய்ப்பு இன்று அதிகரித்துள்ளது.

ஆனால் இது உள்ளத்தை தொடுகின்றதா? இல்லை தலையோடு முடிந்து போகின்றதா?

கவர்ந்து ஈர்க்கச் செய்யப்பட வேண்டியது போதனைகள் இன்றைய காலத்தின் கட்டாயம். போதகர்களுக்காக செபிப்போம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
நல்லாயன் இயேசு

1792 ஆம் ஆண்டு மெக்லென் பெர்க்கின் இளவரசர் ஆரஞ்ச் நாட்டின் இளவரசரைச் சந்திக்கச் சென்றார். கப்பல்கள் கடலுக்குள் செல்லும் விழாவிற்கு அயல்நாட்டு இளவரசரை அழைத்துப் போனார் ஆரஞ்ச் நாட்டு இளவரசர்.

விழாவைக் குறிக்கும் விதமாக கப்பலில் இருந்தவர்கள் ஆடிப்பாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஓர் இளைஞன் கடலில் தவறி விழுந்துவிட்டான். அடுத்த வினாடியே ஆரஞ்சு நாட்டு இளவரசர் அவரைக் காப்பாற்ற கடலில் குதித்தார். இதைப் பார்த்து, இளவரசரையும் இளைஞனையும் மீட்க பலரும் குதித்தனர். இறுதியில் இளவரசரை மட்டுமே முடிந்தது.

அப்போது அங்கிருந்தவர்கள் இளவரசரிடம், "ஏன் இந்த விஷப் பரீட்சை?" என்று கேட்டபோது அவர் சொன்னார், "என் சொந்த சகோதரன் விழுந்திருந்தால் நான் சும்மா இருந்திருப்பேனா? கடலில் குதித்து, அவனைக் காப்பாற்றி இருப்பேன் அல்லவா... கடலில் தவறி விழுந்த இளைஞனை என்னுடைய சொந்த சகோதரனாகவே பார்த்தேன். அதனால்தான் கடலில் குதித்து அவனைக் காப்பாற்ற முயன்றான். ஆனால், என்னால் அவனைக் காப்பாற்ற முடியவில்லை" என்றார். பின்னர் இறந்த இளைஞனின் குடும்பத்திற்கு பெரும் தொகையைக் கொடுத்து, குடும்பத்தாரிடம், "எந்த நேரத்தில் எதுவேண்டுமானாலும் கேளுங்கள், நான் உங்களுக்கு நிறைவேற்றித் தருகின்றேன்" என்றார் அந்த இரக்கமிக்க இளவரசர்.

"நல்ல ஆயன் நானே, நல்ல ஆயன் ஆடுகளுக்காக தம் உயிரையும் கொடுப்பார்" என்பார் இயேசு கிறிஸ்து. மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் இளவரசர் ஒரு நல்ல ஆயனுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டகத் திகழ்கின்றார். பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறை திருச்சபை நல்லாயன் ஞாயிராகக் கொண்டாடப் பணிக்கின்றது. இந்த நல்ல நாளில் ஆண்டவர் இயேசு எப்படி ஒரு நல்ல ஆயனாகத் திகழ்கின்றார், நல்லாயனின் மந்தையாகிய நாம் எப்படி இருக்கவேண்டும் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

தொடக்க காலத்தில் யூதர்கள் ஆடு மேய்க்கும் தொழிலைத்தான் பிரதானத் தொழிலாகச் செய்துவந்தார்கள். விவிலியத்தில் நாம் வாசிக்கின்ற ஆபேல், மோசே, தாவீது, இறைவாக்கினர் ஆமோஸ் இன்னும் ஒருசில முக்கியமான ஆளுமைகள் எல்லாம் ஆடு மேய்க்கும் தொழிலைச் செய்துவந்தார்கள் என்பது நம்முடைய கவனத்தில் கொள்ளவேண்டிய செய்தியாக இருக்கின்றது. இப்படி ஆடுமேய்த்தலை பிரதானத் தொழிலாகக் கொண்டிருந்த யூதர்கள் தாங்கள் வணங்கும் கடவுளை ஆயனாக பார்த்ததில் வியப்பேதும் இல்லை (திபா 23). இதனை நன்கு உணர்ந்த இயேசு கிறிஸ்து தன்னை ஓர் ஆயனாகவும், மக்களை மந்தையாகவும் உருவகமாகப் பேசுகின்றார். எனவே, இயேசு தன்னை ஒரு ஆயனாக, அதுவும் நல்ல ஆயனாகக் குறிப்பிடும் பட்சத்தில், அவர் எப்படி ஒரு நல்ல ஆயனாகத் திகழ்கின்றார், அவருடைய மந்தையாகிய நாம் எப்படி இருக்கவேண்டும் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

நல்ல ஆயனுக்கு உரிய முதன்மையான தகுதி ஆடுகளை அறிந்திருப்பதாகும். எதுவெல்லாம் தன்னுடைய ஆடுகள், அந்த ஆடுகளின் தேவை என்ன, அவற்றிற்கு என்ன பிரச்சனை என்பதை ஓர் ஆயன் முழுமையாக அறிந்திருக்கவேண்டும். ஆடுகளையும், அவற்றின் பிரச்னையையும் முழுமையாக அறியாத ஆயன் நல்ல ஆயானாக இருக்கமுடியாது என்பதுதான் உண்மை. இயேசு கிறிஸ்து தன்னுடைய பணிவாழ்வில் சீடர்களையும், மக்களையும் அழைக்கின்றபோது அவர்களுடைய பெயர் சொல்லிதான் அழைக்கின்றார். எடுத்துக்காட்டாக மத்தேயுவையும், நத்தனியேலையும், ஏன் சக்கேயுவையும் அழைக்கின்றபோது அவர் பெயர் சொல்லித்தான் அழைக்கின்றார். பழைய ஏற்பாட்டில் ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர்களையும், இறையடியார்களையும் அழைக்கின்றபோது எப்படி பெயர் சொல்லி அழைத்தாரோ, அதுபோன்று ஆண்டவர் இயேசுவும் மக்களைப் பெயர் சொல்லி அழைக்கின்றார்.

பெயர் சொல்லி அழைப்பது என்பது ஒரு மனிதரை முழுமையாக அறிவதற்குச் சமமாகும். அந்த வகையில் நம்மை முழுமையாக அறிந்திருப்பதால் இயேசு ஓர் நல்ல ஆயானாகத் திகழ்கின்றார்.

நல்லாயனாகிய இயேசு ஒவ்வொருவரையும் முழுமையாக அறிந்திருக்கின்றார் என்று சிந்தித்துப் பார்த்த நாம், நம்மை ஆளக்கூடியவர்கள், நம் தலைவர்கள், ஏன் நாம் நம்மோடு இருப்பவர்களை முழுமையாக அறிந்திருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இன்றைக்கு குடும்பத்தில் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை முழுமையாக அறிந்திருக்கவில்லை, கணவன் தன்னுடைய மனைவியையும், மனைவி தன்னுடைய கணவரையும் முழுமையாக அறிந்திருக்கவில்லை, அதனாலேயே குடும்பத்தில் அதிகமான குழப்பங்களும் பிரச்சனைகளும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஒரு தம்பதியினர் தங்களுக்குத் தெரிந்த இன்னொரு தம்பதியினரின் வீட்டுக்கு விருந்துக்குச் சென்றிருந்தனர். விருந்து மிகத் தடபுலாக நடைபெற்றது. விருந்து முடிந்ததும் மனைவியர் இருவரும் சற்று வெளியே சென்றுவிட்டனர். கணவன்மார்கள் இருவர் மட்டும் சாப்பிட்ட இடத்திலேயே நீண்ட நேரமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அப்போது ஒருவர் மற்றவரிடம், "நேற்று இரவு நானும் என் மனைவியும் ஓர் உயர்தர உணவகத்திற்குச் சென்றிருந்தோம். அந்த உணவகத்தில் உணவு அருமையாக இருந்தது. நீங்களும்கூட அந்த உணவகத்திற்குப் போகலாம், நிச்சயம் அருமையாக உணவு வகைகள், அற்புதமான உபசரிப்பு அங்கு கிடைக்கும்" என்றார். உடனே மற்றவர் அவரிடம், "அந்த உணகத்தின் பெயர் என்ன?" என்று கேட்டார். அவருக்குத் திடிரென்று உணவகத்தின் பெயர் ஞாபகம் வரவில்லை. உடனே அவர் அதனை மற்றவரிடம் வெளிகாட்டிக்கொள்ளாமல், "நீங்கள் ஒருவரை காதலிக்கின்றீர் என்றால், அவருக்கு என்ன பூவை பரிசாகக் கொடுப்பீர்கள்?... அந்தப் பூ சிவப்பாக இருக்கும், அதன் அடியில் முட்கள்கூட இருக்கும். அது என்ன பூ?" என்று கேட்டார். உடனே மற்றவர், "ரோஸ்" என்றார்.

"மிகச் சரியான பதில்" என்று சொல்லிவிட்டு அவர் கொஞ்சம் தள்ளி நின்று பேசிக்கொண்டிருந்த தன்னுடைய மனைவியைப் பார்த்து, "ரோஸ்! நேற்று நாம் சாப்பிடச் சென்ற உணவகத்தின் பெயர் என்ன?" என்று கேட்டார். இதைக் கேட்ட மற்றவருக்குத் தூக்கி வாரிப்போட்டது.

தன் மனைவியின் பெயரைக்கூட அறிந்து வைத்திராத கணவனை என்னவென்று சொல்வது? இப்படித்தான் நிறையப் பேர் தங்களோடு இருப்பவர்களை, தங்களுடைய மக்களை முழுமையாக அறிந்துவைக்காமல் இருக்கின்றார்கள். ஆனால், நல்லானாகிய இயேசு நம்மை முழுமையாய் வைத்திருக்கின்றார்.

நல்லாயனுக்குரிய இரண்டாவது முக்கியமான தகுதி ஆடுகளின் தேவையை பூர்த்தி செய்வதாகும். திருப்பாடல் 23 ல் வாசிக்கின்றோம், "பசும்புல் வெளிமீது அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு அழைத்துச் செல்வார்; புத்துயிர் அளிப்பார்; நீதிவழி நடத்திடுவார்" என்று. ஆம், ஒரு நல்ல ஆயன் என்பவர் இப்படித்தான் தன்னுடைய மந்தையின் தேவையென்ன, அதன் அன்றாடப் பிரச்சனை என்ன என்பதை அறிந்து அவற்றினை நிவர்த்தி செய்யவேண்டும்.

இயேசு ஒரு நல்ல ஆயனைப் போன்று செயல்பட்டார் என்பதை நற்செய்தியில் வருகின்ற பல நிகழ்வுகள் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. மக்கள் ஆயனில்லா ஆடுகளைப் போன்று இருந்ததால் அவர்கள்மீது பரிவுகொண்டார் என்றும், அவர்களுக்குப் பலவற்றைப் போதித்து, மக்களிடமிருந்த நோயாளிகளைக் குணமாக்கினர் என்று நாம் வாசிக்கின்றோம் (மத் 14:14). அது மட்டுமல்லாமல், இயேசு மக்களின் அவலநிலையை கண்டு, தாமாகவேச் சென்று உதவி செய்தார் என்று நற்செய்தி நூல்கள் நமக்குச் சான்று பகர்கின்றன. இவையெல்லாம் இயேசு ஒரு நல்ல ஆயன் என்பதற்கு சான்றுகளாக இருக்கின்றன.

நல்லாயன் வழியில் நடக்கும் நாம் ஒவ்வொருவரும் நம்மோடு இருப்பவர்களின் தேவையை அறிந்து, அவற்றினை நிவர்த்தி செய்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நல்லாயனுக்கு உரிய மூன்றாவது முக்கியமான தகுதி ஆடுகளுக்காக உயிரைத் தருவதாகும். இயேசு சொல்கின்றார், "நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளைவிட்டு விட்டு ஓடிபோவார்" என்று. இது முற்றிலும் உண்மை. இயேசு மந்தையாகிய நமக்காக தன்னுடைய உயிரையே தந்தார். உயிரைத் தந்ததோடு மட்டுமல்லாமல், தன்னுடைய இறப்பினால் நமக்கு பாவத்திலிருந்தும், சாவிலிருந்தும் மீட்பைப் பெற்றுத் தருகின்றார் (முதல் வாசகம்). இதுதான் இயேசுவுக்கும் மற்ற ஆயர்களுக்கும் உள்ள வித்தியாசம். ஏனையோர் ஆடுகளைப் பற்றி அக்கறைகொள்ளவில்லை, அவற்றிற்காக உயிரையும் தரவில்லை. ஆனால், இயேசுவோ ஆடுகளுக்காக உயிரைத் தந்தார். அதுவும் தாமாகவே தந்தார். இவ்வாறு அவர் நல்ல ஆயனுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் ( 1 யோவான்) யோவான், "நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள" என்கின்றார். தந்தை நம்மீது அன்பு கொண்டதுபோன்றே மகனாகிய இயேசுவும் நம்மீது அன்புகொண்டார். அதன் வெளிப்பாடுதான் தன்னுடைய உயிரைத் தந்தது. இயேசு நம்மீது அன்புகொண்டது போன்று, நாமும் ஓருவர் மற்றவர் மீது அன்பு கொள்ளவேண்டும் என்பதுதான் நமக்கு முன்பாக இருக்கும் சவாலாக இருக்கின்றது.

ஒரு நல்ல ஆயன் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று இதுவரை சிந்தித்துப் பார்த்த நாம், ஆடுகளாக நம் எப்படி இருக்கவேண்டும் என்றும் சிந்தித்துப் பார்க்க அழைக்கப்படுகின்றோம்.

இயேசு கூறுவார், "என் ஆடுகள் என் குரலுக்கு செவிகொடுக்கும்". ஆம், ஆடுகளாகிய நாம் ஆயனின் குரலுக்கு செவிமடுத்து, அதற்கேற்ப வாழவேண்டும். அப்போதுதான் வாழ்வினைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆயனின் குரலுக்குச் செவிகொடுக்காத ஆடுகள் அழிவுக்குச் செல்வது போன்று, ஆண்டவரின் குரலுக்கு செவிகொடுத்து, அதன்படி வாழவில்லை என்றால், நாம் அழிவது உறுதி.

ஆகவே, நல்லாயன் ஞாயிரைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில், இயேசுவை நல்லாயன் என்பதை உணர்வோம். ஆயனின் குரலுக்கு செவிமடுத்து வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வுதரும் உணவு நானே!

1540 ஆம் ஆண்டு, மே மாதம் 24 ஆம் நாள், ஸ்பெயின் நாட்டில் உள்ள டோரேஹர்மோசா என்னும் இடத்தில் பிறந்தவர் பாஸ்கல் பைலோன் என்ற புனிதர். குடும்பச் சூழல் காரணமாக படிக்கச் செல்லாமல், ஆடு மேய்க்கச் சென்றவர். அப்படியிருந்தபோதும் நற்கருணை ஆண்டவரிடத்தில் அளவுகடந்த பக்திகொண்டு வாழ்ந்து வந்தார்.

ஒருமுறை அவர் மலையின் உச்சிப்பகுதியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஆலயத்தில் திருப்பலிக்காக மணி ஒலித்தது. திருப்பலிக்குச் செல்ல ஆவல் கொண்டார். "திருப்பலிக்குச் செல்வதாக இருந்தால், இந்த ஆடுகளை என்ன செய்வது? என்று யோசித்தார். பின்னர் திருப்பலியில் பங்கேற்கும் ஆர்வத்தால், "ஆண்டவரே நான் உம்மை பார்க்க வேண்டும்" என்று செபித்தார். உடனே அந்த இடம் முழுவதும் ஓர் அற்புதமான ஒளி தோன்றியது. ஒளியில் மத்தியில் தங்க நிறத்தில் ஒரு பாத்திரமும் அதன்மீது நற்கருணையும் இருப்பதையும் கண்டார். அவருக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. இறைவன் நம்முடைய வேண்டுதலுக்குச் செவி சாய்த்துவிட்டார் என்ற மகிழ்ச்சியில், முழந்தாளிட்டு நற்கருணை ஆண்டவரை ஆராதித்து நற்கருணையை பெற்றுக்கொண்டார். இவ்வாறு பாஸ்கல் பைலோன் பலமுறை அற்புதமான முறையில் நற்கருணையைப் பெற்றார்.

நற்கருணை என்பது ஒரு சாதாரண அப்பத் துண்டா அல்லது உணவோ கிடையாது, அது விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உயிருள்ள உணவு. அந்த உணவை நம்பிக்கையோடு உட்கொள்கின்றபோது வாழ்வையும் ஏராளமான ஆசிர்வாதங்களையும் பெற்றுக்கொள்கின்றோம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "வாழ்வுதரும் உணவு நானே, உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர். உண்போரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே... இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்" என்கின்றார். இயேசுவின் இவ்வார்த்தைகள் ஆழமாக சிந்திக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றது. மனிதர்களாக நாம் பசிக்காக, உடல் ஆரோக்கியத்திற்காக உணவு உட்கொள்கின்றோம். அந்த உணவெல்லாம் நமது அப்போதைய தேவையை போக்குமே ஒழிய, அவற்றால் நமக்கு வாழ்வு கிடைத்துவிடாது. ஆனால், இயேசு என்னும் விண்ணகத்திலிருந்து இறங்கி உணவினை உட்கொள்கின்றபோது நிலைவாழ்வினைப் பெறுவது என்பது உறுதி. ஏனென்றால், இயேசுவின் வார்த்தைகள் மனிதர்களுடைய வார்த்தைகளைப் போன்று காலத்துக்குக் காலம், நேரத்திற்கு நேரம் மாறுபடக்கூடிய வார்த்தைகள் கிடையாது, அவை உண்மையான என்றைக்குமே மாறாத வார்த்தைகள்.

விண்ணக உணவாகிய நற்கருணையில் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்த தூய அல்போன்ஸ் லிகோரி ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார், "ஆண்டவர் இயேசு கிறிஸ்து, இந்த உலகத்தை விட்டுப் போகக்கூடிய தருணத்தில், தாம் மிகவும் நேசித்தவர்கள் திக்கற்றவர்களாய் போய்விடக் கூடாது என்பதற்காகவும் அவர்களோடு என்றுமே உடனிருக்கவேண்டும் என்பதற்காகவும் நற்கருணையை ஏற்படுத்தினார்" என்று. ஆம், இயேசு கிறிஸ்து நம்மோடு என்றும் இருப்பதற்காகவே நற்கருணையை ஏற்படுத்தினார். அந்த நற்கருணையை, விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உயிருள்ள உணவை நம்பிக்கையோடு உட்கொள்கின்ற வாழ்வடைவோம் என்பது திண்ணம்.

அடுத்ததாக, ஆண்டவரின் திருவுடலையும் திரு இரத்தத்தையும் அனுதினமும் நாம் உட்கொள்ளும்போதும் இறந்துபோய்விடுகின்றோமே? இதற்கு காரணமென்ன? என்று கேள்வி எழலாம். இதற்கான பதிலை தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்வார், "எவராவது தகுதியற்ற நிலையில் இந்த அப்பத்தை உண்டால் அல்லது கிண்ணத்தில் பருகினால், அவர் ஆண்டவரின் உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகின்றார். எனவே ஒவ்வொருவரும் தம்மையே சோதித்தறிந்த பின்பே இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்தில் பருக வேண்டும். ஏனெனில், ஆண்டவருடைய உடல் என உணராமல் உண்டு பருகுபவர் தம்மீது தண்டனைத் தீர்ப்பையே வருவித்துக் கொள்கின்றார் (1 கொரி 11: 27- 29).


எப்போதெல்லாம் தகுதியற்ற நிலையில் ஆண்டவரின் திருவிருந்தில் பங்குகொள்கின்றோமோ அப்போதெல்லாம் நாம் நம்மீது தண்டனைத் தீர்ப்பினை வருவித்துக்கொள்கின்றோம். அதனாலேயே நாம் நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ளாமலே போய்விடுகின்றோம்.

ஆகவே, நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் செய்யவேண்டியது, இயேசுவின் திருவுடலை உட்கொள்வதொடு மட்டுமல்லாமல், அவருடைய போதனைக்கேற்றார் போல் வாழவேண்டும்; அவருடைய விழுமியத்தை நாம் கடைப்பிடித்து வாழ்வேண்டும்.

எனவே, இயேசுவின் திருவுடலை அனுதினமும் உட்கொள்ளக்கூடிய நாம், அதனுடைய வல்லமையை உணர்ந்து உட்கொள்வோம். மட்டுமல்லாமல், ஆண்டவருடைய விழுங்கியங்களை நம்முடைய வாழ்வாக்க முயல்வோம், அதன்வழியாக இறையருளை, நிலைவாழ்வை நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!