Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     18 ஏப்ரல் 2018  
                                                       பாஸ்காக் காலம் 3ம் வாரம்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 தாங்கள் சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்து வந்தனர்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 8: 1b-8

அந்த நாள்களில் எருசலேம் திருச்சபை பெரும் இன்னலுக்கு உள்ளாகியது. திருத்தூதர்களைத் தவிர மற்ற அனைவரும் யூதேயா, சமாரியாவின் நாட்டுப் புறமெங்கும் சிதறடிக்கப்பட்டுப் போயினர். இறைப்பற்று உள்ள மக்கள் ஸ்தேவானை அடக்கம் செய்து, அவருக்காக மாரடித்துப் பெரிதும் புலம்பினர். சவுல் வீடுவீடாய் நுழைந்து ஆண்களையும் பெண்களையும் இழுத்துக் கொண்டுபோய், அவர்களைச் சிறையிலடைக்கச் செய்தார். இவ்வாறு அவர் திருச்சபையை அழித்துவந்தார்.

சிதறிய மக்கள் தாங்கள் சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்து வந்தனர். பிலிப்பு சமாரியா நகர் சென்று அங்குள்ள மக்களுக்கு மெசியாவைப்பற்றி அறிவித்தார்.

பிலிப்பு சொன்னவற்றைக் கேட்டும் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டும் வந்த திரளான மக்கள் ஒருமனத்தோடு அவருக்குச் செவிசாய்த்தனர். ஏனெனில் பலரைப் பிடித்திருந்த தீய ஆவிகள் அவர்களிடமிருந்து உரத்த குரலுடன் கூச்சலிட்டுக்கொண்டே வெளியேறின.

முடக்குவாதமுற்றோர், கால் ஊனமுற்றோர் பலரும் குணம் பெற்றனர். இதனால் அந்நகரில் பெரும் மகிழ்ச்சி உண்டாயிற்று.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 66: 1-3a. 4-5. 6-7a (பல்லவி: 1)
=================================================================================
 பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!
அல்லது: அல்லேலூயா.

1 அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! 2 அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். 3ய கடவுளை நோக்கி "உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை' என்று சொல்லுங்கள். பல்லவி

4 "அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்" என்று சொல்லுங்கள். 5 வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுதற்கு உரியவை. பல்லவி

6 கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். ஆங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம். 7a அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 6: 35
அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறவேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 35-40

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கி: "வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.

ஆனால், நான் உங்களுக்குச் சொன்னவாறே நீங்கள் என்னைக் கண்டிருந்தும் நம்பவில்லை. தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் என்னிடம் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன்.

ஏனெனில் என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன். அவர் என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் அழிய விடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச்செய்ய வேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம்.

மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன்" என்று கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


சிந்தனை:

ஸ்தேவான் இறப்புக்குப் பின்னர், சபை சிதறடிக்கப்பட்டது.

பல இடங்களுக்கு அலைந்து திரிய நேர்ந்தது.

கந்தமாலில் ஏற்றபட்ட சூழலே அன்று நேர்ந்தது.

ஆனால் சபை மகிழ்ந்தது என்று எழுதப்பட்டுள்ளது.

காரணம் சென்றவிடமெல்லாம் நன்மை செய்ததோடு நற்செய்தியை அறிவித்து கொண்டேயிருந்தனர்.

அது அவர்களுக்கு மகிழ்வினைத் தந்தது.

துன்பமான நேரங்களையும், மகிழ்வின் நாட்களாக அமைத்துத் தர இறைவன் வல்லவரே என்பதனை உணர்வோம்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறவேண்டும் என்பதே தந்தையின் திருவுளம்"

மறைபோதகர் ஒருவர் இருந்தார். அவர் கிறிஸ்துவைக் குறித்து சிறிதளவேனும் அறியாத மக்களுக்கு மத்தியில் மறைபோதகப் பணியைச் செய்துவந்தார். என்னதான் அவர் கிறிஸ்துவைக் குறித்து மக்களுக்குப் போதித்து வந்தாலும், மக்கள் இயேசுவின் மீது நம்பிக்கை கொள்வதற்குத் தயங்கினார்கள்.

ஒரு சமயம் அவர் அருகாமையில் இருந்த ஊர்களுக்கு நற்செய்தி அறிவிக்க கால்நடையாகப் புறப்பட்டுச் சென்றார். அவர் போகிற வழியில் ஒருசிலரைச் சந்தித்தார். அவர்களும் அவர் செல்லக்கூடிய ஊருக்குப் புதிது போன்று இருந்தார்கள். கிறிஸ்தவை அறியாதவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் தொடர்ந்து போய்கொண்டிருக்கும்போது ஓரிடத்தில் இரண்டு பாதைகள் பிரிந்து சென்றன எந்தப் பாதையில் சென்றால் ஊருக்குச் செல்லமுடியும் என்பது அவர்களுக்குக் குழப்பமாக இருந்தது. இதற்கு மத்தியில் அந்த இரண்டு பாதைகளும் சந்தித்துக் கொள்ளக்கூடிய இடத்தில் கல்லறை ஒன்று இருந்தது. அந்தக் கல்லறையானது அங்கிருந்த மக்களால் "மகான்" என்று கருதப்பட்ட ஒருவருடைய கல்லறை.

அந்தக் கல்லறையைச் சுட்டிக்காட்டி, "இந்தக் கல்லறையில் துயில்கொள்ளும் மகானிடத்தில் கேட்போம், எந்த வழியில் சென்றால் ஊருக்குச் செல்லலாம் என்று" என்றார். இதைக் கேட்ட அந்த மனிதர்கள், "கல்லறையில் அடக்கம் செய்ய ஒருவரிடம் போய் வழியைக் கேட்டால், அவர் எப்படி வழியைச் சொல்வார். வேண்டுமானால் அருகாமையில் ஒரு குடிசை இருக்கின்றது, அங்குள்ளவர்களிடம் ஊருக்குச் செல்வதற்கான வழியைக் கேட்போம்" என்றார். அதற்கு அந்த மறைபோதகர், "இறந்த உங்கள் மகானால் வழி சொல்ல முடியாதா? அப்படியானால் உங்களுடைய கடவுள்கள், மகான்கள் அனைவரும் என்றைக்குமே இறந்து போனவர்கள்தானா?" இப்படிச் சொல்லிவிட்டு, அவர் அவர்களிடத்தில் தொடர்ந்து சொன்னார், "இன்றும் உயிரோடு வாழ்ந்துகொண்டிருக்கின்ற ஆண்டவர் இயேசுவிடத்தில் நீங்கள் நம்பிக்கை கொண்டால், அவர் உங்களுக்கு வழியையும் வாழ்வையும் ஏன் எல்லாவற்றையும் தருவார்" என்றார். அவர் இவ்வாறு சொன்னதைக் கேட்டு, அந்த நேரத்திலே அவர்கள் அனைவரும் இயேசுவை உண்மையான கடவுள் என நம்பி, ஏற்றுக்கொண்டார்கள்.

ஆம், இயேசுவை உண்மையான கடவுள் என்று நம்பி ஏற்றுக்கொள்வோர் தங்களுடைய வாழ்வில் எல்லாவிதமான ஆசிர்வாதங்களைப் பெறுவர்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தந்தைக் கடவுளின் திருவுளம் எவை எவை என எடுத்துச் சொல்கின்றார். அப்படிச் சொல்லும்போது அவர் இரண்டு உண்மைகளை மிகத் தெளிவாக விளக்குகின்றார். ஒன்று தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட எவரும் அழிந்துபோகக் கூடாது என்பதாகும். இன்னொன்று தன்மீது நம்பிக்கை கொள்வோர் நிலை வாழ்வைப் பெறுவர் என்பதாகும்.

எல்லாரும் அதிலும் குறிப்பாக பாவிகள் யாவரும் அழிந்துபோக வேண்டும் என்பது கடவுளுடைய திருவுளம் அல்ல, அவர்கள் வாழ்வடைய வேண்டும் என்பதே கடவுளுடைய விரும்பம். அதற்காக ஆண்டவராகிய கடவுள் தன் ஒரே மகனை இந்த உலகிற்கு அனுப்பி வைத்தார். இயேசுவும் மக்களுக்கு இறைவனுடைய அன்பையும் இரக்கத்தையும் போதித்து அவர்கள் அழிந்து போகாதவாறு காப்பாற்றினார். இவ்வாறு இயேசு இறைவனுடைய திருவுளம் தன்வழியாக நிறைவேறக் காரணமாக இருந்தார்.

அடுத்ததாக இறைவனின் திருவுளமாக இயேசு கிறிஸ்து சொல்வது, தன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறுவர் என்பதாகும். இயேசுவின் மீது நம்பிக்கை வைப்பது என்பது அவரை இந்த உலகிற்கு அனுப்பி வைத்த ஆண்டவராகிய கடவுள்மீது நம்பிக்கை வைப்பது, அதோடு மட்டுமல்லாம் அவருடைய போதனைகளின் மீது நம்பிக்கை வைத்து அதன்படி தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்வது. யாராரெல்லாம் இயேசுவின் மீது அவருடைய போதனையின் மீது நம்பிக்கை வைத்து வாழ்கின்றார்களோ அவர்கள் நிலைவாழ்வைப் பெறுவார்கள் என்பது யாராலும் மறக்க முடியாத உண்மை. எத்தனையோ புனிதர்கள், இறையடியார்கள் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து அவருடைய போதனையை வாழ்வாக்கினார்கள். அதனால் அவர்கள் இந்த மண்ணுலகத்தை விட்டு போன பிறகும் கூட அவர்களுடைய புகழ் இன்றைக்கும் அழியாமல் இருக்கின்றது. நாமும் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்து வாழ்கின்றபோது நாமும் நிலைவாழ்வினைப் பெற்றுக்கொள்வோம் என்பது உண்மையாகின்றது.

ஆகவே, நாம் ஆண்டவரின் திருவுளம் எது என்பதை உணர்ந்து நாம் அவருக்கு உரிய மக்களாகுவோம், அவருடைய திருமகன் இயேசுவின்மீது ஆழமான நம்பிக்கை வைத்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

'
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!