Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     17 ஏப்ரல் 2018  
                                                       பாஸ்காக் காலம் 3ம் வாரம்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 7: 51 - 8: 1a

அந்நாள்களில் ஸ்தேவான் மக்களையும் மூப்பரையும் மறைநூல் அறிஞரையும் நோக்கிக் கூறியது: "திமிர் பிடித்தவர்களே, இறைவார்த்தையைக் கேட்க மறுக்கும் செவியும் ஏற்க மறுக்கும் உள்ளமும் கொண்டவர்களே, உங்களுடைய மூதாதையரைப் போல நீங்களும் தூய ஆவியாரை எப்போதும் எதிர்க்கிறீர்கள்.

எந்த இறைவாக்கினரைத்தான் உங்கள் மூதாதையர் துன்புறுத்தாமல் இருந்தார்கள்? நேர்மையாளருடைய வருகையை முன்னறிவித்தோரையும் அவர்கள் கொலை செய்தார்கள். இப்போது நீங்கள் இயேசுவைக் காட்டிக் கொடுத்துக் கொன்றுவிட்டீர்கள். கடவுளின் தூதர்கள் வழியாய்த் தரப்பட்ட திருச்சட்டத்தை நீங்கள் பெற்றிருந்தும் அதனைக் கடைப்பிடிக்கவில்லை."

இவற்றைக் கேட்டவர்கள் உள்ளம் கொதித்தெழுந்து, அவரைப் பார்த்துப் பற்களை நறநறவெனக் கடித்தார்கள்.

அவரோ தூய ஆவியின் வல்லமையை நிறைவாய்ப் பெற்று, வானத்தை உற்றுநோக்கினார். அப்போது கடவுளின் மாட்சியையும் அவர் வலப்பக்கத்தில் இயேசு நிற்பதையும் கண்டு, "இதோ, வானம் திறந்திருப்பதையும், மானிட மகன் கடவுளது வலப்பக்கத்தில் நிற்பதையும் காண்கிறேன்"என்று கூறினார்.

ஆனால் அவர்கள் தங்கள் செவிகளை அடைத்துக்கொண்டு, பெருங் கூச்சலிட்டு, ஒருமிக்க அவர் மேல் பாய்ந்தார்கள். நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டுபோய் அவர்மேல் கல்லெறிந்தார்கள். சாட்சிகள் தங்கள் மேலுடைகளைச் சவுல் எனும் இளைஞரிடம் ஒப்படைத்தார்கள்.

அவர்கள் ஸ்தேவான்மீது கல்லெறிந்தபோது அவர், "ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்"என்று வேண்டிக்கொண்டார்.

பின்பு முழந்தாள்படியிட்டு, உரத்த குரலில், "ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள்மேல் சுமத்தாதேயும்" என்று சொல்லி உயிர்விட்டார். ஸ்தேவானைக் கொலை செய்வதற்குச் சவுலும் உடன்பட்டிருந்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் -திபா 31: 2cd-3. 5,6-7a. 16,20b (பல்லவி: 5a)
=================================================================================
 பல்லவி: உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்.
அல்லது: அல்லேலூயா.

2உன எனக்கு அடைக்கலம் தரும் கற்பாறையாய் இரும்; என்னைப் பாதுகாக்கும் வலிமைமிகு கோட்டையாய் இரும். 3 ஆம், என் கற்பாறையும் கோட்டையும் நீரே; உமது பெயரின் பொருட்டு எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும். பல்லவி

5 உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளினீர். 6 நானோ, பயனற்ற சிலைகளில் பற்றுடையோரை வெறுத்து, ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்கின்றேன். 7ய உமது பேரன்பில் நான் களிகூர்வேன்; அக்களிப்பேன். பல்லவி

16 உமது முகத்தின் ஒளி அடியேன் மீது வீசும்படி செய்யும்; உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும். 20b மனிதரின் சூழ்ச்சியினின்று அவர்களைக் காப்பாற்றி, உமது முன்னிலையின் மறைப்பினுள் வைத்துள்ளீர்! நாவுகள் கிளப்பும் பூசலினின்று அவர்களைப் பாதுகாத்து உமது கூடாரத்தினுள் வைத்துக் காக்கின்றீர்! பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 யோவா 6: 35
அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா
.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; என் தந்தையே.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 30-35

அக்காலத்தில் மக்கள் இயேசுவிடம், "நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்? அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்? எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே! "அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார்" என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா!"என்றனர்.

இயேசு அவர்களிடம், "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே. கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது"என்றார்.

அவர்கள், "ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்"என்று கேட்டுக்கொண்டார்கள்.

இயேசு அவர்களிடம், "வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது"என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை:

ஸ்தேவான் கொல்லப்பட்டார்.
சிலுவையில் கற்றப் பாடத்தை பின்பற்றினார்.
சவுல் உடந்தையாக இருந்தார்.
சிலுவையின் பாடம் நம்மை உறுதிப்படுத்தும், உண்மையாக இருக்கச் செய்யும், வல்லமையைத் தரும் என்பதற்கு ஸ்தேவானின் மரணம் சாட்சி சொல்லுகின்றது.
சிலுவை தரும் ஞானத்தை பாடமாக்கி, வாழ்விலே வல்லமையை பெற்றவர்களாக பயணப்பட முன்வருவோம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
வாழ்வு தரும் உணவு இயேசு

சார்லஸ் ஆலன் என்ற எழுத்தாளர் எழுதிய "Gods Psychiatry" என்ற புத்தகத்தில் இடம்பெறக் கூடிய ஒரு நிகழ்வு. இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற தருணம். போரில் பெற்றோரை, சொந்த பந்தங்களை இழந்த குழந்தைகள் யாவரும் ஒரு முகாமில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தனர். முகாமில் இருந்த குழந்தைகளுக்கு சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வந்தன. அப்படியிருந்தும் அந்தக் குழந்தைகள் மெலிந்தே காணப்பட்டார்கள். இதற்கான காரணத்தை அறியாது முகாமில் பராமரித்துப் பணியைச் செய்துவந்தவர்கள் குழம்பிப்போய் நின்றார்கள்.

காரணத்தை அறிந்துகொள்வதற்கு அங்கு ஒரு மருத்துவர் வரவழைக்கப்பட்டார். அவர் அங்கிருந்த குழந்தைகளை ஆய்வு செய்து பார்த்தார். கடைசியில் பிரச்சனை இதுதான் என்பதை அறிந்து, அந்தக் குழந்தைகள் தூங்கச் செல்வதற்கு முன்பாக அவர்களுடைய கையில் ஒரு ரொட்டித் துண்டைக் கொடுத்து தூங்க வைத்தார். இதனை அவர் ஒருசில நாட்கள் தொடர்ந்து செய்துவந்தார். அப்படிச் செய்து வந்ததன் பயனாக, குழந்தைகள் யாவரும் நல்ல உடல் நலம் பெற்றார்கள்.

இதைப் பார்த்து அங்கிருந்தவர்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் மருத்துவரிடம், "என்ன செய்தீர்கள், குழந்தைகள் யாவரும் நல்ல உடல் சுகத்தோடு இருக்கின்றார்களே?" என்று கேட்டார்கள். அதற்கு மருத்துவர் அவர்களிடம், "இந்த குழந்தைகள், மறுநாள் தங்களுக்கு உணவு கிடைக்குமோ என்ற பயத்தில்தான் இத்தனைநாளும் நல்ல உணவு வழங்கப்பட்டபோதும் மெலிந்தே காணப்பட்டார்கள். எப்போது அவர்களுடைய கையில் தூங்கச் செல்வதற்கு முன்பாக ஒரு ரொட்டித் துண்டு கொடுக்கப்பட்டதோ, அப்போது அவர்கள், அடுத்த நாளுக்கான உணவு நமக்குக் கிடைத்துவிட்டது அதனால் உணவைக் குறித்து கவலைப் படவேண்டாம் என்ற நம்பிக்கையோடு தூங்கினார்கள். அதனால்தான் அவர்கள் நல்ல உடல் சுகத்தோடு இருக்கின்றார்கள்" என்றார்.

சாதாரண உணவே முகாமில் இருந்த குழந்தைகளுக்கு உடல் வலிமையைத் தந்தது என்றால், வாழ்வுதரக்கூடிய உணவாகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒருவருக்கு எத்துனை வல்லமையைத் தருவார் என்பதை நாம் கற்பனை செய்து பார்த்துக்கொள்ளலாம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது. என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது" என்கின்றார். இயேசுவின் இவ்வார்த்தைகள் அவ்வளவு அர்த்தம் நிறைந்த வார்த்தைகள். இவை ஆழமாக சிந்திக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன. சாதாரண உணவு நமது உடலுக்குத்தான் வலிமையைத் தரும், ஆன்மாவிற்கு வலிமை தராது. ஆன்மாவிற்கு வலிமை தரக்கூடிய, அதனை அழியாமல் காக்கக்கூடிய ஒரே உணவு நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துதான். அதனால் இயேசுவை உண்மையான உணவு என்று சொல்லலாம்.

அடுத்ததாக, நாம் அனுதினமும் உட்கொள்ளக்கூடிய உணவு போன்றவர் கிடையாது நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. அவர் இறை உணவு. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட அப்பங்கள் ஆண்டவரின் உணவு, இறை உணவு என்ற அழைக்கப்பட்டன (லேவி 21: 21 22). இயேசு தன்னை ஆண்டவருக்காக அர்ப்பணித்தவர்; ஆண்டவர். இதை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது இயேசுவை ஆண்டவரின் உணவு என்று சொல்வதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இருக்காது.

நிறைவாக, இயேசு மண்ணக உணவு கிடையாது. விண்ணக உணவு; வாழ்வுதரக்கூடிய உணவு. அந்த விண்ணக உணவை உட்கொள்ளக்கூடிய நாம் வாழ்வடைவோம் என்பது உறுதி. அதனால்தான் அவர் கூறுகின்றார், "வாழ்வுதரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது" என்று. இயேசுவின் திருவுடலை மட்டுமே உட்கொண்டு ஏழு ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ்ந்தவர் தூய சியன்னா கத்ரீனம்மாள், அவரைப் போன்று பலர் இயேசுவின் திருவுடலை மட்டுமே உட்கொண்டு பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கின்றார்கள். அவர்கள் அப்படி வாழ்ந்ததற்கு ஆண்டவர் இயேசுவின் மீது அவர்கள் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கையைக் காரணமாகச் சொல்லலாம். நாமும் இயேசுவிடத்தில் நம்பிக்கை கொண்டு, அவருடைய உடலை உட்கொண்டோம் என்றால் வாழ்வடைவோம் என்பது உறுதி.

பல நேரங்களில் நமக்கு இயேசுவின் காலத்தில் இருந்த யூதர்கள் போன்று அவர் மீதும் அவருடைய வார்த்தைகளின் நம்பிக்கை இருப்பது கிடையாது. அதனால்தான் அவருடைய திருவுடலை உணவாக உட்கொள்கின்ற போதும் அழிந்துபோகின்றோம்.

ஆகவே, வாழ்வு தரக்கூடிய உணவாகிய இயேசுவில் நம்பிக்கை கொள்வோம். அதன்வழியாக இறையருளை, நிலைவாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

'
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!