Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     14 ஏப்ரல் 2018  
                                                       பாஸ்காக் காலம் 2ம் வாரம்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி நிறைந்தவர்களுமான எழுவரைத் தெரிந்தெடுத்தார்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 6: 1-7

அந்நாள்களில் சீடர்களின் எண்ணிக்கை பெருகி வந்தது. அப்போது, கிரேக்க மொழி பேசுவோர் தங்களுடைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் முறையாகக் கவனிக்கப்படவில்லை என்று எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முணுமுணுத்தனர்.

எனவே பன்னிரு திருத்தூதரும் சீடர்களை ஒருங்கே வரவழைத்து, "நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டுப் பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறை அல்ல.

ஆதலால் அன்பர்களே, உங்களிடமிருந்து, நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்தவர்களுமான எழுவரைக் கவனமாய்த் தெரிந்தெடுங்கள். அவர்களை நாம் இந்தப் பணியில் நியமிப்போம். நாங்களோ இறைவேண்டலிலும், இறைவார்த்தைப் பணியிலும் உறுதியாய் நிலைத்திருப்போம்" என்று கூறினர்.

திரளாய்க் கூடியிருந்த சீடர் அனைவரும் இக் கருத்தை ஏற்றுக் கொண்டனர்.

அதன்படியே அவர்கள் நம்பிக்கையும் தூய ஆவியும் நிறைந்த ஸ்தேவான், பிலிப்பு, பிரக்கோர், நிக்கானோர், தீமோன், பர்மனா, யூதம் தழுவிய அந்தியோக்கிய நகரத்து நிக்கொலா என்பவர்களைத் தெரிந்தெடுத்து அவர்களைத் திருத்தூதர் முன்னால் நிறுத்தினார்கள்.

திருத்தூதர் தங்கள் கைகளை அவர்கள்மீது வைத்து இறைவனிடம் வேண்டினர்.

கடவுளது வார்த்தை மேன்மேலும் பரவி வந்தது. சீடர்களின் எண்ணிக்கை எருசலேம் நகரில் மிகுதியாகப் பெருகிக்கொண்டே சென்றது. குருக்களுள் பெருங்கூட்டத்தினரும் இவ்வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நம்பிக்கை கொண்டனர்.



இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் -திபா 33: 1-2. 4-5. 18-19 (பல்லவி: 22)
=================================================================================
 பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!
அல்லது: அல்லேலூயா.

1 நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே. 2 யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். பல்லவி

4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. 5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. பல்லவி

18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். 19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 அல்லேலூயா, அல்லேலூயா!  கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்; அனைத்தையும் படைத்தவர் அவரே; மானிடக்குலத்தின்மீது இரக்கம் கொண்டவரும் அவரே. அல்லேலூயா! 

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இயேசு கடல்மீது நடந்து வருவதைச் சீடர்கள் கண்டனர்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 16-21

மாலை வேளையானதும் இயேசுவின் சீடர்கள் கடற்கரைக்கு வந்து, படகேறி மறுகரையிலுள்ள கப்பர்நாகுமுக்குப் புறப்பட்டார்கள், ஏற்கெனவே இருட்டிவிட்டது. இயேசுவும் அவர்களிடம் அதுவரை வந்து சேரவில்லை.

அப்போது பெருங்காற்று வீசிற்று; கடல் பொங்கி எழுந்தது. அவர்கள் ஐந்து அல்லது ஆறு கிலோ மீட்டர் தொலை படகு ஓட்டியபின் இயேசு கடல்மீது நடந்து படகருகில் வருவதைக் கண்டு அஞ்சினார்கள்.

இயேசு அவர்களிடம், "நான்தான், அஞ்சாதீர்கள்" என்றார். அவர்கள் அவரைப் படகில் ஏற்றிக்கொள்ள விரும்பினார்கள்.

ஆனால் படகு உடனே அவர்கள் சேரவேண்டிய இடம் போய்ச் சேர்ந்துவிட்டது.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================

பணி பகிர்வு என்பது நீர்வாகத்திற்கு மிகவும் வளம் சேர்க்கக் கூடியது.
தற்போதைய திருத்தந்தை கர்தினார்மார் எட்டு பேரை தேர்ந்தெடுத்து, தன்னுடைய பணிக்கு உதவிட கேட்டு இருக்கின்றார். பலமுறை அவர்களது அமர்வு நடந்தேறியிருக்கின்றது. திருஅவையை முன்னெடுத்து செல்வதற்கு இது துணை செய்கின்றது என்பதனை உணர்கின்றோம்.
தன்னுடைய பணிகளை பகிர்ந்து திறம்பட செயல்பட முன்வருவதற்கு தைரியம் தேவையானது.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
துன்பத்தில் துணைவரும் இயேசு

ராபர்ட் லூயிஸ் ஸ்டீபென்சன் (Robert Louis Stephensen) என்ற பிரபல ஆங்கில எழுத்தாளர் சொல்லக்கூடிய கதை இது.

ஒரு சமயம் பயணிகள் கப்பலொன்று கடலில் போய்கொண்டிருந்தது. கப்பல் மிகவும் சொகுசாக இருந்ததால், பயணிகள் யாவரும் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் பயணம் செய்தார்கள். எல்லாமே நன்றாகப் போய்கொண்டிருந்த தருணத்தில் திடிரென்று கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு, கப்பல் நிலைதடுமாறத் தொடங்கியது. மக்களெல்லாம் எங்கே தாங்கள் இறந்து போய்விடுவோமோ என்ற பயத்தில் அலறினார்கள்.

இதற்கு மத்தியில் அந்தக் கப்பலில் பயணம் செய்த இளைஞன் ஒருவன் கப்பலில் இருந்த மாலுமியின் அறைக்கு சென்று, அவர் என்ன செய்துகொண்டிருக்கின்றார் என்று பார்த்தான். மாலுமியோ கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டுவிட்டதே, அதனை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்ற சிறு பதற்றம்கூட இல்லாமல் வழக்கம்போல் சந்தோசமாக கப்பலை ஓட்டிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த அந்த இளைஞனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. உடனே அவன் பயணிகள் இருக்கக் கூடிய இடத்திற்குச் வந்து, "மக்களே! இப்போது நான் மாலுமியின் அறையிலிருந்துதான் வருகிறேன். அவரிடத்தில் இந்த கடல் கொந்தளிப்பைக் குறித்த எந்தவொரு பதற்றமோ பயமோ இல்லை. மாறாக மகிழ்ச்சியாக இருக்கின்றார்... எனக்கு நம்பிக்கை இருக்கின்றது அவர் நம்மை இந்த கடல் கொந்தளிப்பிலிருந்து காப்பாற்றி விடுவார் என்று. ஆதலால், நீங்கள் பயங்கொள்ளாது துணிவோடு இருங்கள்" என்றான்.

அந்த இளைஞன் சொன்ன நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளைக் கேட்டு, மக்கள் பயத்தைத் தவிர்த்து அமைதி கொண்டார்கள். ஒருசில மணிநேரத்திற்கு பின்பு, அவர்கள் நம்பிய வண்ணமே மாலுமி, கப்பலை கடல் கொந்தளிப்பிலிருந்து மீட்டு கரை சேர்த்தார்.

மாலுமி நம்மைப் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை கப்பலில் பயணம் செய்தவர்களுக்கு நம்பிக்கை அளித்தது. நம்மை நம் ஆண்டவர் எல்லாத் தீமையிலிருந்தும் காத்துக்கொள்வார் என்ற நம்பிக்கை நமக்கிருந்தாலும் நாம் எதற்கும் அஞ்சி நடுங்கத் தேவையில்லை.

நற்செய்தி வாசகத்தில், சீடர்கள் கடலில் பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள். அப்போது பெருங்காற்று வீசுகின்றது. கடல் பொங்கி எழுகின்றது. இதற்கிடையில் ஆண்டவர் இயேசு கடலில் நடந்து வருகின்றார். அவர் இயேசுதான் என்பதை அறியாத சீடர்கள் அவரைக் கண்டு அஞ்சுகிறார்கள். இயேசுவோ, "நான்தான், அஞ்சாதீர்கள்" என்று சொல்லி அவர்களுடைய அச்சத்தைப் போக்குகிறார்.

யோவான் நற்செய்தியில் இடம்பெறுகின்ற இந்த நிகழ்வு, ஒத்தமை நற்செய்தி நூல்களில் இடம்பெறக்கூடிய இதே நிகழ்வோடு சற்று மாறுபடுகின்றது. மத்தேயு நற்செய்தியிலோ, ஆண்டவர் இயேசு கடலில் நடந்து வருவதைப் பார்த்துவிட்டு, பேதுருவும் நடப்பதாக இருக்கும், மாற்கு நற்செய்தியிலோ ஆண்டவர் இயேசு காற்றையும் கடலையும் அடக்கினார் என்று இருக்கும். எப்படி இருந்தாலும் இந்த நிகழ்வு நமக்கு ஒருசில உண்மைகளை மிகத் தெளிவாக விளக்குகின்றது. அவை என்னென்ன என்று இப்போது பார்ப்போம்.

இந்த நிகழ்வு நமக்கு உணர்ந்துகின்ற முதலாவது உண்மை, இறைவன் நம் துன்ப நேரத்தில் (எல்லா நேரத்திலும்தான்) துணையிருப்பார் என்பதாகும். சீடர்களை படகில் முன்கூட்டியே அனுப்பிய இயேசு, அவர்களுக்கு ஒரு துன்பம் என்றதும் அவர்களைக் காப்பற்றுவதற்காக விரைந்து வருகின்றார். இதிலிருந்து நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மீது எத்துனை அன்பு கொண்டிருக்கின்றார் என்பதைப் புரிந்துகொள்ளலாம். அடுத்ததாக இந்த நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கும் உண்மை இயேசு நமக்காக ஜெபிக்கின்றார் என்பதாகும். சீடர்களை முன்கூட்டியே அனுப்பிய இயேசு, தனிமையில் இறைவனிடத்தில் ஜெபித்தார் என்று நற்செய்தி நூல்கள் நமக்கு சான்று பகர்கின்றன. யாருக்காக ஜெபித்தார் என்று நாம் சிந்தித்துப் பார்த்தோமென்றால் நமக்காகத்தான் ஜெபித்தார் என்று பதில் வரும் (எபி 7:25). ஆகையால், நமக்காக எப்போதும் ஜெபிக்க ஆண்டவர் இயேசு இருக்கும்போது நாம் எதற்கும் அஞ்சத் தேவையில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

நிறைவாக இந்த நிகழ்வு எடுத்துச் சொல்லக்கூடிய உண்மை, இறைவன் நமக்கு உதவி செய்யக் காலம் தாழ்த்தினாலும், அவர் உதவி செய்யாமல் இருக்கமாட்டார் என்பதாகும். பெருங்காற்று வீசி, கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டபோது, சீடர்கள் இயேசு இல்லாமல் கலங்கி இருக்கலாம். ஆனாலும் இயேசு அவர்களுக்கு உதவி செய்ய விரைந்து வருகின்றார். இயேசு காலம் தாழ்த்தக்கூடிய தருணத்தை, நாம் நாமாகவே அந்த பிரச்சனை எதிர்கொள்ள கற்றுத் தருகின்றார் என்றும் நாம் எடுத்துக் கொள்ளலாம்.

ஆகவே, துன்பத்தில் துணையிருக்கும், எப்போதும் நமக்கு உதவி செய்ய வரும் இறைவன்மீது நம்பிக்கை வைப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

'
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!