Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     11 ஏப்ரல் 2018  
                                                       பாஸ்காக் காலம் 2ம் வாரம்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 
நீங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்த மனிதர்கள், அதோ! கோவிலில் நின்று மக்களுக்குக் கற்பிக்கின்றனர்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 17-26

அந்நாள்களில் தலைமைக் குருவும் அவரைச் சேர்ந்த சதுசேயக் கட்சியினர் அனைவரும் பொறாமையால் நிறைந்து திருத்தூதரைக் கைது செய்து பொதுச் சிறையில் காவலில் வைத்தனர்.

ஆனால் இரவில் ஆண்டவரின் தூதர் சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து அவர்களை வெளியே அழைத்துச் சென்று, "நீங்கள் போய்க் கோவிலில் நின்று வாழ்வு பற்றிய வார்த்தைகளை யெல்லாம் மக்களுக்கு எடுத்துக் கூறுங்கள்'' என்றார்.

இதைக் கேட்ட அவர்கள் பொழுது விடிந்ததும் கோவிலுக்குச் சென்று கற்பித்தார்கள். தலைமைக் குருவும் அவரைச் சேர்ந்தவர்களும் அனைத்து இஸ்ரயேல் மக்களின் ஆட்சிப் பேரவையாகிய தலைமைச் சங்கத்தைக் கூட்டித் திருத்தூதர்களைச் சிறையிலிருந்து கொண்டுவருமாறு ஆள் அனுப்பினார்கள். அந்த ஏவலர்கள் அங்கு வந்தபோது சிறையில் அவர்களைக் காணவில்லை.

எனவே அவர்கள் திரும்பி வந்து, "நாங்கள் சிறைச்சாலை உறுதியாய்ப் பூட்டப்பட்டிருப்பதையும், காவலர் வாயிலருகில் நின்றுகொண்டு இருப்பதையும் கண்டோம். ஆனால் கதவைத் திறந்தபோது உள்ளே எவரையும் காணவில்லை'' என்று அறிவித்தார்கள்.

இவ்வார்த்தைகளைக் கேட்ட கோவில் காவல் தலைவரும், தலைமைக் குருக்களும் அவர்களுக்கு என்னதான் நேர்ந்திருக்கும் என்று மனங்குழம்பி நின்றனர்.

அப்பொழுது ஒருவர் வந்து, "நீங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்த மனிதர்கள், அதோ! கோவிலில் நின்று மக்களுக்குக் கற்பிக்கின்றனர்'' என்று அவர்களிடம் அறிவித்தார்.

உடனே காவல் தலைவர் ஏவலர்களுடன் கோவிலுக்குச் சென்று அவர்களை அழைத்துச் சென்றார். மக்கள் கல்லெறிவார்கள் என்று அவர் அஞ்சியதால் வன்முறை எதுவும் கையாளவில்லை.



இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 6a)
=================================================================================
 பல்லவி: ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்.

அல்லது: அல்லேலூயா.

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி

3 என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். 4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். பல்லவி

5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. 6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். பல்லவி

7 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர். 8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 யோவா 3: 16
அல்லேலூயா, அல்லேலூயா! தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.  அல்லேலூயா! 

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தம் மகன் வழியாக உலகை மீட்கவே, கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 16-21

அக்காலத்தில் இயேசு நிக்கதேமிடம் கூறியது: தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.

உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர்.

ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை. ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது. தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை.

உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"தன் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்

பிரபல ஆங்கில எழுத்தாளரான ஸ்பர்கியோன் (Spurgeon) சொல்லக்கூடிய ஓர் உண்மைச் சம்பவம். கணவன், மனைவி, அவர்களுடைய நான்கு பிள்ளைகள் என்று சந்தோசமாக வாழ்ந்து வந்த குடும்பம், நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது செய்வதறியாது திகைத்தது. பிள்ளைகள் உணவுகேட்டு அழுதபோது அந்தக் கணவனும் மனைவியும் "இவர்களுக்கு எப்படி உணவுக்கு கொடுப்பது?" என்று குழம்பிப் போய் நின்றார்கள்.

அப்புறம் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, குடும்பத்தில் உள்ள எல்லாரும் உயிர்பிழைக்கவேண்டும் என்றால், ஏதாவது ஒரு குழந்தையை அடிமையாக விற்பதைத் தவிர வேறு வழியில்லை என்று முடிவுசெய்தார்கள். எந்தக் குழந்தையை அடிமையாக விற்பதற்கு என்று அவர்கள் யோசிக்கும்போது தலைப்பிள்ளையை விற்பது கூடாத காரியம் என்றும்; இரண்டாவது பிள்ளை தந்தையைப் போன்று இருக்கிறான் அதனால் அவனை விற்கக்கூடாது என்றும்; மூன்றாவது பிள்ளை தாயைப் போன்று இருக்கின்றது அதனால் அதனையும் விற்கக்கூடாது என்றும்; நான்காவது பிள்ளை குடும்பத்தின் செல்லப்பிள்ளை, கடைக்குட்டி அதனால் அதனையும் விற்கக்கூடாது என்றும்; இப்படியாக எந்தக் குழந்தையையும் விற்கவேண்டாம், எல்லாரும் தற்கொலை செய்து இறந்துபோய்விடுவோம் என்று முடிவு செய்து, அதன்படியே செய்தார்கள்.

பிள்ளைகள்மீது இருந்த மேலான அன்பால், அந்தக் கணவனும் மனைவியும் இப்படியொரு ஒரு முடிவை தேர்ந்துகொண்டது மிகவும் வருத்தத்திற்கு உரிய காரியமாக இருந்தாலும், அதை விடுத்து அவர்களுக்கு வேறு வழியில்லை.

ஆண்டவராகிய கடவுளும் இந்த உலகின்மீது - தன் மக்கள்மீது - அளவுகடந்த அன்பு வைத்திருக்கின்றார். அந்த அன்பின் வெளிப்பாடாக தன் ஒரே மகனாகிய இயேசுவை இந்த உலகத்திற்குக் கையளித்து தன் எல்லையில்லா அன்பை வெளிப்படுத்துகின்றார்.

நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசுவுக்கும் யூதத் தலைவர்களுள் ஒருவரும் பரிசேயருமான நிக்கதேமுக்கும் இடையே நடைபெறக் கூடிய உரையாடலில் இயேசு நிக்கதேமைப் பார்த்துச் சொல்கின்றார், "தன் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார் என்று. இயேசு சொல்கின்ற இவ்வார்த்தைகளிலிருந்து நாம் மூன்று முக்கியமான உண்மைகளை அறிந்து கொள்ளலாம். அதில் முதலாவது, கடவுள் இந்த உலகின்மீது கொண்ட பேரன்பாகும். ஆதிப் பெற்றோர்கள் பாவம் செய்து, தன்னோடு உள்ள உறவை முறித்துக்கொண்டாலும் ஆண்டவராகிய கடவுள், அவர்களும் அவர்களது சந்ததியினரும் அழிந்து போகட்டும் என்று விட்டுவிடவில்லை. அவர்களை வழிநடத்த இறைவாக்கினர்களையும் பல்வேறு தலைவர்களையும் அனுப்பி வைக்கின்றார்கள். அதைவிடவும் தன்னுடைய உடனிருப்பை எப்போதும் அவர்களுக்கு வெளிப்படுத்துகின்றார். இதன்மூலம் கடவுள் தன்னுடைய மேலான அன்பை வெளிப்படுத்துகின்றார்.

இயேசு நிக்கதோமுக்குச் சொன்ன வார்த்தைகளிலிருந்து வெளிப்படுகின்ற இரண்டாவது உண்மை கடவுள் தன்னுடைய ஒரே மகனை இந்த உலகிற்கு அனுப்பினார் என்பதாகும். இந்த உலகத்தில் யாரும் நல்லவர் ஒருவருக்காகத் தம் உயிரைத் தரலாம், பாவிகளுக்காக யாரும் உயிரைத் தருவதில்லை. ஆனால், ஆண்டவராகிய கடவுளோ நாம் பாவிகளாக இருந்தபோதும் தன் ஒரே மகனை நமக்காக அனுப்பி நம்மைப் பாவத்திலிருந்து மீட்கின்றார். இதன்மூலம் கடவுள் நம்மீது கொண்ட அளவில்லா அன்பை வெளிப்படுத்துகின்றார்.

இயேசு சொல்லக்கூடிய வார்த்தைகளிருந்து வெளிப்படுகின்ற மூன்றாவது உண்மை தன்மீது நம்பிக்கை கொள்கின்ற யாவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறுவர் என்பதாகும். வழியும் உண்மையும் வாழ்வும் நானே என்பார் இயேசு கிறிஸ்து. அந்த விதத்தில் இயேசுவிடம் நாம் நம்பிக்கை கொண்டு வாழ்கின்றபோது, அதனால் நாம் அழியாத, நிலைவாழ்வினை அடைவோம் என்பது உண்மையாகின்றது. நாம் இயேசுவிடம் நம்பிக்கை வைத்து வாழ்கின்றோமா? என்பது சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்றாக இருக்கின்றது. பல நேரங்களில் நாம் இயேசுவின் காலத்தில் இருந்த யூதர்கள் எப்படி இயேசுவிடம் நம்பிக்கை இல்லாமல், அவரை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தார்களோ, அதுபோன்றுதான் நாமும் இயேசுவிடத்தில் நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றோம். நம்பிக்கை இல்லாது இருக்கின்றபோது, அவர் தருகின்ற ஆசிரைப் பெற்றுக்கொள்ளாமலே போகிறோம் என்பது உண்மையாக இருக்கின்றது.

ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், கடவுள் நம்மீது வைத்திருக்கும் பேரன்பை எண்ணிப் பார்த்து அவர் மகன் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

'
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!