Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                    04 ஏப்ரல் 2018  
                                                      பாஸ்கா எண்கிழமை புதன்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
 
என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 3: 1-10

ஒரு நாள் இறைவேண்டல் செய்யும் நேரமாகிய பிற்பகல் மூன்று மணிக்குப் பேதுருவும் யோவானும் கோவிலுக்குச் சென்றனர்.

அப்பொழுது பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த ஒருவரைச் சிலர் சுமந்துகொண்டு வந்தனர். கோவிலுக்குள் செல்பவரிடம் பிச்சை கேட்பதற்காக அவரை நாள்தோறும் கோவிலின் `அழகுவாயில்' என்னுமிடத்தில் வைப்பர். அவர் கோவிலுக்குள் சென்றுகொண்டிருந்த பேதுருவையும் யோவானையும் கண்டு பிச்சை கேட்டார்.

பேதுருவும் யோவானும் அவரை உற்றுப் பார்த்து, "எங்களைப் பார்" என்று கூறினர். அவர், ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அவர்களை ஆவலுடன் நோக்கினார்.

பேதுரு அவரிடம், "வெள்ளியும் பொன்னும் என்னிடம் இல்லை; என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்" என்று கூறி, அவரது வலக்கையைப் பற்றிப்பிடித்துத் தூக்கிவிட்டார். உடனே அவரது காலடிகளும் கணுக்கால்களும் வலுவடைந்தன. அவர் குதித்தெழுந்து நடக்கத் தொடங்கினார்; துள்ளி நடந்து, கடவுளைப் போற்றியவாறே அவர்களோடு கோவிலுக்குள் சென்றார்.

அவர் நடப்பதையும் கடவுளைப் போற்றுவதையும் மக்களனைவரும் கண்டனர். அவர்கள் எல்லாரும் கோவிலின் அழகுவாயில் அருகே பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவர் இவரே என்று அறிந்துகொண்டனர்; நடந்ததைப் பார்த்துத் திகைப்பு மிகுந்தவராய் மெய்ம்மறந்து நின்றனர்.



இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் -திபா 105: 1-2. 3-4. 6-7. 8-9 (பல்லவி: 3b)
=================================================================================
 பல்லவி: ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக!

அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!

1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள். 2 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! பல்லவி

3 அவர் தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! 4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! பல்லவி

6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே! 7 அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. பல்லவி

8 அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார். 9 ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். பல்லவி

விரும்பினால் தொடர் பாடலைச் சொல்லலாம்.
(காண்க: பக்கம் 443)

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
திபா118: 24

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 அப்பத்தைப் பிட்டு சீடர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் இயேசுவை அடையாளம் கண்டுகொண்டார்கள்.

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 13-35

வாரத்தின் முதல் நாள் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வூரின் பெயர் எம்மாவு. அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக்கொண்டே சென்றார்கள்.

இப்படி அவர்கள் உரையாடிக்கொண்டும் வினவிக் கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கிவந்து அவர்களோடு நடந்து சென்றார். ஆனால் அவர் யார் என்று அறிந்து உணரமுடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன.

அவர் அவர்களை நோக்கி, "வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன?" என்று கேட்டார்.

அவர்கள் முக வாட்டத்தோடு நின்றார்கள். அவர்களுள் கிளயோப்பா என்னும் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக, "எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்கு மட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ!"என்றார்.

அதற்கு அவர் அவர்களிடம், "என்ன நிகழ்ந்தது?" என்று கேட்டார்.

அவர்கள் அவரிடம், "நாசரேத்து இயேசுவைப் பற்றியேதான் பேசுகின்றோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார். அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தலைமைக் குருக்களும் ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள். இவையெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள்கள் ஆகின்றன. ஆனால் இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்களை மலைப்புக்குள்ளாக்கினர்; அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார்கள்; அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள். எங்களோடு இருந்தவர்களுள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர். ஆனால் அவர்கள் இயேசுவைக் காணவில்லை" என்றார்கள்.

இயேசு அவர்களை நோக்கி, "அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே! மெசியா தாம் மாட்சியடைவதற்குமுன் இத்துன்பங்களைப் படவேண்டுமல்லவா!" என்றார்.

மேலும் மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார். அவர்கள் தாங்கள் போகவேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள்.

அவரோ அதற்கு அப்பால் போகிறவர்போலக் காட்டிக்கொண்டார். அவர்கள் அவரிடம், "எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று" என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார்.

அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார்.

அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார்.

அப்போது, அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி, "வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?" என்று பேசிக்கொண்டார்கள். அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள்.

அங்கிருந்தவர்கள், "ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார்" என்று சொன்னார்கள்.

அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக்கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை:
"எங்களோடு தங்கும்" என்று அழைக்கும் அன்பர்கள் அற்புதத்தை பார்த்தனர். உள்ளம் திறந்தது.

நாமும் அழைத்தால், அத்தகைய அற்புதத்தை காணலாம்.

நீர் எங்கே தங்கியிருக்கின்றீர் என்று சீடர்கள் கேட்ட போது, வந்து பாருங்கள் என்று அழைப்பு கொடுத்தார்.

நாம் அழைத்து அவர் நம்மோடு தங்கினாலும், அவர் அழைத்து நாம் சென்று பார்த்து அவரோடு நாம் தங்கினாலும் அதிசயங்களையும், அற்புதங்களையும் கண்டு, நம்முடைய கண்களும் திறக்கப்படும்.

அழைப்போம். அழைப்பின் குரல் கேட்போம்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினரான இயேசு!

ஈசாப் கதை இது. வேடன் ஒருவன் நரியைத் துரத்திக்கொண்டு ஓடிவந்தான். அதுவோ பயந்து போய் ஒரு குடிசைக்குள் புகுந்துகொண்டது. குடிசைக்குள் விவசாயி ஒருவன் இருந்தான். அது அவனிடம், "ஐயா! தயவுசெய்து, என்னைக் காட்டிக் கொடுத்துவிடாதீர்கள்" என்று கெஞ்சியது. விவசாயியும் அதற்குச் சரியென்று ஒத்துக்கொண்டான்.

சிறிது நேரத்தில் அங்கு வேடன் ஒருவன் ஓடி வந்தான். வந்தவன் குடிசையில் இருந்த விவசாயியிடம், "ஐயா! பெரியவரே! இந்தப் பக்கமாக ஏதாவது நரி கிரி வந்ததா?" என்று கேட்டான். அவனோ, "அப்படி எதுவும் இந்தப் பக்கம் வரவில்லையே" என்று சொல்லிக்கொண்டு, "நரி உள்ளேதான் இருக்கின்றது" என்று சைகையால் காட்டிக் கொடுத்தான். பரபரப்பாய் வந்த வேடனோ கேட்டுப்போன வேகத்தில், கவனச் சிதைவாக இவனது சைகை மொழியைக் கவனிக்காமல் போய்விட்டான்.

வேடன் மறைந்ததும் குடிசையை விட்டு மெல்ல வெளியே வந்தது நரி. வந்ததும் விறுவிறுவென்று தன் வலைக்குள் கிளம்பிவிட்டது. நரியை தடுத்து நிறுத்திக் கேட்டான் விவசாயி, "ஏ நரியே! உன் உயிரையே நான் காப்பாற்றியிருக்கிறேன் அல்லவா? அதற்காக ஒரு நன்றிகூடச் சொல்லாமல் போகிறாயே... நன்றிகெட்ட நரியே!" என்று. அதற்கு அந்த நரி, "அட இரட்டை மொழி மனிதப் பதரே! உனக்கா நான் நன்றி சொல்லவேண்டும்? உன் பேச்சைப்போல் உன் செய்கையும் இல்லையே... இப்படிச் சொல் வேறு செயல் வேறு என்று வாழ்ந்தால், உன்னைச் சொறி நாயும் மதிக்காது" என்று சொல்லிவிட்டு வேகமாக ஓடியது.

சொல்வதும் ஒன்றும் செய்வது ஒன்றுமாய் வாழக்கூடிய மனிதப் பதர்களை நெற்றிப்பொட்டில் அறைந்தார்போல் இருக்கின்றது ஈசோப்பின் இந்தக் கதை.

நற்செய்தி வாசத்தில் இயேசுவின் சீடர்கள் இருவர் எம்மாவுஸ் நோக்கிப் பயணப்படுகின்றார்கள். அப்போது இயேசு அவர்களுக்கு முன்பாக ஒரு வழிபோக்கரைப் போல் தோன்றி, "வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன?" என்று கேட்கின்றார். அதற்கு அவர்கள் அவரிடம், "நாசரேத்து இயேசுவைப் பற்றியேதான் பேசுகின்றோம்" என்று சொல்லிவிட்டு, "அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார்" என்பார்கள். இவ்வார்த்தைகள் நம்முடைய சிந்தனைக்குரியவையாக இருக்கின்றன.

இந்த உலகத்தில் இருக்கின்ற பலர் சொல்வது போன்று செய்வது கிடையாது. சொல்வது ஒன்று, செய்வது வேறொன்று என்றுதான் நிறையப் பேர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இயேசுவின் காலத்தில் வாழ்ந்து வந்த பரிசேயர்கள், மறைநூல்கள் இவர்களுக்கு எதிராக இயேசு வைக்கக்கூடிய முதன்மையான குற்றச்சாட்டே அவர்கள் சொல்வது போன்று செய்வதில்லை என்பதுதான் (மத் 23:4). இந்தப் பின்னணியில்தான் எம்மாவுஸ் நோக்கிப் பயணப்படும் சீடர்கள் இயேசுவைக் குறித்துச் சொல்கின்ற, "அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார்" என்ற வார்த்தைகளை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இயேசு, இன்றைய அரசியல்வாதிகளைப் போன்றோ அல்லது கட்சித் தலைவர்களைப் போன்றோ (பொய்யான) வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு அதனை நிறைவேற்றாமல் இல்லை. அவர் சொன்னார் அதை நிறைவேற்றவும் செய்தார். ஏழைகளுக்கு நற்செய்தி, சிறைப்பட்டோருக்கு விடுதலை, ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வு, பார்வையற்றோருக்குப் பார்வை என்று முழக்கமிட்டார். அதனை நிறைவேற்றவும் செய்தார். அது மட்டுமல்லாமல் "இக்கோவிலை இடித்துவிடுங்கள், இதனை மூன்றுநாளில் எழுப்பிவிடுவேன்" (யோவான் 2: 13-15) என்றார். தான் சொன்னது போன்று மூன்றாம் நாளில் உயிர்த்தெழவும் செய்தார். இவ்வாறு இயேசு சொல்வீரராக மட்டுமல்லாமல், செயல்வீரராகவும் விளங்கினார். இவற்றின் அடிப்படையில் நாம் பார்க்கின்றபோது, எம்மாவுஸ் நோக்கி பயணப்பட்ட சீடர்கள் இருவரின் கூற்று பொய்யில்லை, நூற்றுக்கு நூறு உண்மை எனச் சொல்லலாம்.

இயேசுவின் வழியில் நடக்கும் நாம் சொல்லிலும் செயலில் வல்லவர்களாக விளங்குகின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். வாக்கு மாறாது இருத்தல், சொன்ன சொல் காப்பாற்றுதல் போன்ற பண்புகள் எல்லாம் இன்றைக்கு அரிதாகப் போய்விட்டன. அதனால்தான் ஒருவர் ஒருவர்மீது இன்றைக்கு நம்பிக்கை ஏற்படுவதில்லை. நாம் அடுத்தவருக்குக் கொடுக்கின்ற வாக்குறுதிகளைக் காப்பாற்றுகின்றபோது, அடுத்தவருக்கு நம்மீது தானாகவே நம்பிக்கை ஏற்படும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது.

ஆகவே, நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இயேசுவைப் போன்று சொல்லிலும் செயலிலும் வல்லவர்களாக விளங்குவோம், கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


- மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

'
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!