Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                     03 ஏப்ரல் 2018  
                                                   பாஸ்கா எண்கிழமையில் செவ்வாய்
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
மனம் மாறுங்கள். ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 36-41

பெந்தக்கோஸ்து நாளில் பேதுரு யூதர்களை நோக்கிக் கூறியது: "நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவைக் கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக்கினார் என்பதை இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்."

அவர்கள் இதைக் கேட்டு உள்ளம் குத்தப்பட்டவர்களாய், பேதுருவையும் மற்றத் திருத்தூதர்களையும் பார்த்து, "சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்கள்.

அதற்குப் பேதுரு, அவர்களிடம், "நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள்.

ஏனென்றால் இந்த வாக்குறுதியானது உங்களுக்கும் உங்களது பிள்ளைகளுக்கும் தொலையிலுள்ள யாவருக்கும் ஆண்டவராகிய கடவுள் தம்மிடம் அழைக்கும் அனைவருக்கும் உரியது" என்றார்.

மேலும் அவர் வேறு பல சான்றுகளை எடுத்துக்கூறி, "நெறிகெட்ட இந்தத் தலைமுறையிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்" என்று அறிவுறுத்தினார். அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்கள் திருமுழுக்குப் பெற்றார்கள். அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவர்களோடு சேர்க்கப்பட்டனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 33: 4-5. 18-19. 20. 22 (பல்லவி: 5b)
=================================================================================
பல்லவி: ஆண்டவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.

அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!

4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. 5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. பல்லவி

18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். 19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். பல்லவி

20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். 22 உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள் மீது இருப்பதாக! பல்லவி

விரும்பினால், தொடர் பாடலைச் சொல்லலாம்.
(காண்க: பக்கம் 443)

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
திபா 118: 24

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 நான் ஆண்டவரைக் கண்டேன்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 11-18

அக்காலத்தில் மரியா கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தார்; அழுதுகொண்டே கல்லறைக்குள் குனிந்து பார்த்தார். அங்கே வெண்ணாடை அணிந்த இரு வானதூதரை அவர் கண்டார்.


இயேசுவின் உடலை வைத்திருந்த இடத்தில் ஒருவர் தலைமாட்டிலும் மற்றவர் கால்மாட்டிலுமாக அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் மரியாவிடம், "அம்மா, ஏன் அழுகிறீர்?" என்று கேட்டார்கள்.

அவர் அவர்களிடம், "என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ எனக்குத் தெரியவில்லை" என்றார்.

இப்படிச் சொல்லிவிட்டு அவர் திரும்பிப் பார்த்தபோது இயேசு நிற்பதைக் கண்டார். ஆனால் அங்கு நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்துகொள்ளவில்லை.

இயேசு அவரிடம், "ஏன் அம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?" என்று கேட்டார்.

மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம், "ஐயா, நீர் அவரைத் தூக்கிக்கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்" என்றார்.

இயேசு அவரிடம், "மரியா" என்றார்.

மரியா திரும்பிப் பார்த்து, "ரபூனி" என்றார்.

இந்த எபிரேயச் சொல்லுக்கு `போதகரே' என்பது பொருள்.

இயேசு அவரிடம், "என்னை இப்படிப் பற்றிக்கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், `என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளும் உங்கள் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்' எனச் சொல்" என்றார்.

மகதலா மரியா சீடரிடம் சென்று, "நான் ஆண்டவரைக் கண்டேன்" என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
அழுகையை ஆறுதலாய் மாற்றிய, உயிர்த்த ஆண்டவர் இயேசு!

தன் ஒரே ஒரு மகனை விபத்தில் பறிகொடுத்த பெண்ணொருத்தி, துக்கம் தாளாமல் அந்த மகனைத் தூக்கிக்கொண்டு, மலையடிவாரத்தில் இருந்த துறவியிடத்தில் கொண்டுசென்று, அவனை அவர் உயிர்பித்துத் தருமாறு கெஞ்சிக் கேட்டார். அந்த துறவியால் சிறுநேரத்திற்கு ஒன்றும் பேசமுடியவில்லை.

பிறகு ஏதோ சிந்தனை வயப்பட்டவரால், "அம்மா! இறந்துபோன உன் மகனை நான் உயிர்பித்துத் தருகின்றேன். ஆனால், அதற்கு முன்னதாக, நீ எனக்கு ஒரு காரியம் செய்யவேண்டும்" என்றார். "என்ன காரியம்?" என்று மிகவும் பணிவோடு கேட்டார் அந்தப் பெண்மணி. அதற்கு அந்தத் துறவி, "அது வேறொன்றுமில்லை... ஊரில் இறப்பு நேராத வீட்டில் கொஞ்சம் மாவு வாங்கி, அதில் ரொட்டி சுட்டு என்னிடத்தில் கொண்டு வருவாயா?" என்றார். "அவ்வளவுதானா சவாமி, இதோ கொண்டுவருகின்றேன்" என்றார்.

போன அந்தப் பெண்மணி முதல் நாள் வரவில்லை, இரண்டாம் நாளும் வரவில்லை, மூன்றாம் நாள் மிகவும் சோகமாக வந்தார். வந்தவர் துறவியிடம், "சுவாமி, ஊரில் இருக்கின்ற எல்லா வீடுகளிலும் ஏறி இறங்கிவிட்டேன்... இறப்பு இல்லாத வீடு என்று எதுவுமில்லை. அதனால்தான் என்னால் ரொட்டி சுட மாவு வாங்கமுடியவில்லை" என்றார். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த அந்தத் துறவி பேசத்தொடங்கினார். "அம்மா! இந்த ஊரில் மட்டுமல்ல, உலகத்தில் இறப்பு இல்லாத வீடு என்று எதுவுமில்லை, எல்லாவீட்டிலும் இறப்பு நேர்ந்துகொண்டிருக்கின்றது. அதற்காக அவர்கள் அதையே நினைத்து வருந்திக்கொண்டிருக்கவில்லை. மாறாக அவற்றையெல்லாம் மறந்துவிட்டு, புதிய வாழ்க்கை வாழத் தொடங்கிவிட்டார்கள். நீயும் உன்னுடைய மகன் இறந்ததை நினைத்தே வருந்திக்கொண்டிருக்காமல், அதனை மறந்துவிட்டு புதிய வாழ்க்கை வாழக் கற்றுக்கொள்".

துறவி சொன்ன அறிவுரையைக் கேட்ட பின்பு, மகனை இழந்த அந்தத் தாய் ஓரளவுக்கு ஆறுதல் அடைந்தார்.

நற்செய்தி வாசகத்தில், கல்லறைக்கு வந்த மகதலா மரியா, அங்கு இயேசுவின் உடல் இல்லாததைக் கண்டு, "என் ஆண்டவரின் உடலை யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்" என்று அழுது புலம்புகின்றார். அப்படிப்பட்ட மகதலா மரியாவுக்கு முன்பாக உயிர்த்த ஆண்டவர் இயேசு தோன்றி, அவரை ஆறுதல் படுத்துகின்றார். எப்படி மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் தன் ஒரே மகனை இழந்து வந்த பெண்மணிக்கு அந்த துறவி ஆறுதல் சொன்னாரோ, அது போன்று நற்செய்தியில் இயேசு மகதலா மரியாவுக்கு தன்னை வெளிப்படுத்தி ஆறுதல் சொல்கின்றார்.

உயிர்த்த ஆண்டவர் இயேசு மகதலா மரியாவுக்குத் தோன்றி அவரை எப்படி ஆறுதல் படுத்துகின்றார், அவரிடத்தில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வருகின்றார் என்று சிந்தித்துப் பார்ப்பது நமது கடமையாகும்.

முதலாவதாக இயேசு, உணர்ச்சி மிகுந்து அழுதுகொண்டிருந்த மகதலா மரியாவை, சிந்தித்துச் செயல்படச் செய்கின்றார். எப்படி என்றால், கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட உடலைக் காணவில்லை என்று அழுதுகொண்டிருந்த மகதலா மரியாவைப் பார்த்து, இயேசு மரியா என்று கூப்பிட்டு அவரை உணர்ச்சி நிலையிலிருந்து சிந்தனை நிலைக்கு மாற்றுகின்றார். இரண்டாவதாக இயேசு, அறியாமை நிலையிருந்த மகதலா மரியாவை அறிவு நிலைக்கு மாற்றுகின்றார். எப்படி என்றால், கல்லறைக்கு வெளியே நின்றுகொண்டிருந்த இயேசுவை முதலில் தோட்டக்காரார் என்றுதான் அவர் நினைக்கின்றார். ஆனால், அப்படி நினைத்துக்கொண்டிருந்தவரிடம் இயேசு, தான் தோட்டக்காரர் அல்ல, உயிர்த்த இயேசு என்பதை வெளிப்படுத்துகின்றார்.

மூன்றாவதாக, இயேசு மகதலா மரியாவிடத்தில் கொண்டு வந்த மாற்றம் அவநம்பிக்கையிலிருந்து நம்பிக்கைக்குக் கொண்டு வந்ததாகும். அவர், கல்லறையில் இயேசுவின் உடலைக் காணாது அவரை யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டார்களோ என்றுதான் நினைத்தாரே ஒழிய, இயேசு உயிர்த்திருப்பார் என்று நம்பவில்லை. அப்படிப்பட்ட அவநம்பிக்கை நிலையிருந்த மகதலா மரியாவை இயேசு தன் உயிர்ப்பின் வழியாக நம்பிக்கை கொள்ளச் செய்கின்றார். இறுதியாக இயேசு, மகதலா மரியாவிடம் கொண்டு வந்த மாற்றம், சுயத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த அவரை அடுத்தவரைப் பற்றி சிந்திக்க அழைத்ததாகவும். "என்னை இப்படிப் பற்றிக் கொள்ளாதே. நீ என் சகோதரர்களிடம் சென்று .... எனச் சொல்" என்ற இயேசுவின் வார்த்தைகளின் மூலமாக இதை அறிந்துகொள்ளலாம். இயேசு மரியாவிடம் இப்படிப்பட்ட மாற்றங்களைக் கொண்டு வந்ததும் அவர் புதிய பெண்ணாக மாறி, ஆண்டவரின் உயிர்ப்புக்கு சான்று பகர்கின்றார்.

மகதலா மரியாவைப் போன்று உணர்ச்சி நிலையிலும், அறியாமையிலும், அவநம்பிக்கையிலும் சுயத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கின்ற நம்மிடத்தில் இயேசு மாற்றத்தைக் கொண்டுவர விரும்புகின்றார். எப்போது என்றால் நாம் அவரை நாடிச் செல்கின்றபோது.

ஆகவே, அழுகையில் இருப்போருக்கு ஆறுதல்தரும் ஆண்டவர் இயேசுவை நாடிச் செல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

'
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!