Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                     30  செப்டம்பர் 2018  
                                         பொதுக்காலம் 26ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணைச் சிறப்பு!

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 11: 25-29

அந்நாள்களில் ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து மோசேயோடு பேசினார்; அவரில் இருந்த ஆவியில் கொஞ்சம் எடுத்து எழுபது மூப்பருக்கு அளித்தார்; ஆவி அவர்கள் மேல் இறங்கவே அவர்கள் இறைவாக்கு உரைத்தனர்; அதன் பின்னர் அவர்கள் அப்படிச் செய்யவில்லை.

இரண்டு மனிதர் பாளையத்திலேயே தங்கி விட்டனர்; ஒருவன் பெயர் எல்தாது, மற்றவன் பெயர் மேதாது. அவர்கள்மீதும் ஆவி இறங்கியது; பதிவு செய்யப்பட்டவர்களில் இவர்களும் உண்டு; ஆனால் அவர்கள் கூடாரத்துக்குச் சென்றிருக்கவில்லை.

ஆகவே அவர்கள் பாளையத்திலேயே இறைவாக்கு உரைத்தனர். ஓர் இளைஞன் ஓடி வந்து மோசேயிடம், "எல்தாதும் மேதாதும் பாளையத்தில் இறைவாக்கு உரைக்கின்றனர்" என்று சொன்னான்.

உடனே தேர்ந்தெடுக்கப்பட்டோரில் ஒருவரும் மோசேயின் ஊழியரும் நூனின் மைந்தருமான யோசுவா, "மோசே! என் தலைவரே! அவர்களைத் தடுத்து நிறுத்தும்" என்றார்.

ஆனால் மோசே அவரிடம், "என்னை முன்னிட்டு நீ பொறாமைப்படுகிறாயா? ஆண்டவரின் மக்கள் அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணைச் சிறப்பு!" என்றார். பின் மோசேயும் இஸ்ரயேலின் மூப்பரும் பாளையத்துக்குத் திரும்பினர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்( திபா 19: 7,9. 11-12. 13 (பல்லவி: 8a)
=================================================================================
பல்லவி: ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; இதயத்தை மகிழ்விக்கின்றன.

7 ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. 9 ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. பல்லவி

11 அவற்றால் அடியேன் எச்சரிக்கப்படுகின்றேன். அவற்றைக் கடைப்பிடிப்போருக்கு மிகுந்த பரிசுண்டு. 12 தம் தவறுகளை உணர்ந்து கொள்பவர் யார்தாம்? என் அறியாப் பிழைக்காக என்னை மன்னியும். பல்லவி

13 ஆணவமிக்கோரிடமிருந்து உம் அடியானைக் காத்தருளும். அவர்கள் என்னை ஆட்டிப் படைக்காதிருக்கட்டும்; அப்பொழுது, நான் மாசற்றிருப்பேன்; பெரும்பிழை எதையும் செய்யாதிருப்பேன். பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
உங்கள் செல்வம் மக்கிப் போயிற்று.

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6


செல்வர்களே, சற்றுக் கேளுங்கள். உங்களுக்கு வரப்போகும் இழிநிலையை நினைத்து அலறி அழுங்கள். உங்கள் செல்வம் மக்கிப் போயிற்று. உங்கள் ஆடைகள் பூச்சிகளினால் அரிக்கப்பட்டுவிட்டன. உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்துவிட்டன. அந்தத் துருவே உங்களுக்கு எதிர்ச் சான்றாக இருக்கும்; அது நெருப்புப் போல உங்கள் சதையை அழித்துவிடும். இந்த இறுதி நாள்களில் செல்வத்தைக் குவித்து வைத்திருக்கின்றீர்களே!

உங்கள் வயலில் அறுவடை செய்த வேலையாள்களுக்குரிய கூலியைப் பிடித்துக் கொண்டீர்கள்; அது கூக்குரலிடுகிறது. அறுவடை செய்தவர்களின் கூக்குரல் படைகளின் ஆண்டவருடைய செவிக்கு எட்டியுள்ளது. இவ்வுலகில் ஆடம்பரமாகவும் இன்பமாகவும் வாழ்ந்தீர்கள். கொல்லப்படும் நாளுக்காக உங்கள் உள்ளங்களைக் கொழுக்க வைத்தீர்கள். நேர்மையானவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துக் கொலை செய்தீர்கள். ஆனால் அவர் உங்களை எதிர்த்து நிற்கவில்லை.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 17: 17b,a

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தையே உண்மை. உண்மையினால் எங்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 38-48

அக்காலத்தில் யோவான் இயேசுவிடம், "போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்" என்றார்.

அதற்கு இயேசு கூறியது: "தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேசமாட்டார். ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.

நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

என்மீது நம்பிக்கைகொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது.

உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குத் தள்ளப்படுவதை விட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.

உங்கள் கால் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டிவிடுங்கள். நீங்கள் இரு காலுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.

உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள், நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது. நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது."

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
இணைந்து செய்யப்படவேண்டிய இறையாட்சிப் பணி


சில ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவில் உள்ள ஒரு பிரபல பள்ளிக்கூடத்தில் இயங்கி வந்த சாரணர் இயக்க மாணவர்கள் (Scouts) பயிற்சிக்காக ஒரு கிராமத்தில் முகாமிட்டார்கள்.

அந்தக் கிராமத்தில் இரயில் பாதை ஒன்று இருந்தது. ஆனால், அதில் இரயில் போக்குவரத்து நின்று பல ஆண்டுகள் ஆகியிருந்தன. இதைக் கவனித்த பள்ளியின் சாரணர் இயக்கப் பொறுப்பாளர் மாணவர்களிடம், "அன்பு மாணவச் செல்வங்களே! இன்று உங்களுடைய பயிற்சியை இந்த இரயில் பாதையில் செய்ய இருக்கிறீர்கள். யார் இந்த இரயில் பாதையில் - தண்டவாளத்தில் - நீண்டதூரம் நடந்து செல்கிறீர்கள் என்று பார்ப்போம்" என்றார்.

அவரின் கட்டளைக்கிணங்க மாணவர்கள் ஒவ்வொருவராக இரயில் பாதையில் நடக்கத் தொடங்கினார்கள். ஆனால், யாராலும் அதில் நீண்டதூரம் நடக்க முடியவில்லை. எல்லாரும் இடறி இடறி விழுந்தார்கள். கடைசியில் இரண்டு மாணவர்கள் மட்டுமே இருந்தார்கள். ஒருவர் கருப்பினத்தைச் சார்ந்தவர், இன்னொருவர் வெள்ளையினத்தைச் சார்ந்தவர். இவர்கள் இருவராவது இரயில் பாதையில் நீண்டதூரம் நடக்கின்றார்களா? என்று எல்லோரும் மிகக்கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் இருவரும் செய்த செயல் எல்லாரையும் வியப்படைய வைத்தது. ஆம், அந்த இரண்டு மாணவர்களும் இரயில் பாதையில் நீண்ட தூரம் நடந்தார்கள். எந்தளவுக்கு என்றால், பள்ளியின் சாரணர் இயக்கப் பொறுப்பாளர் போதும் என்று சொல்கிற அளவுக்கு நடந்தார்கள். அது எப்படி அவர்கள் இருவரால் மட்டும் எளிதில் இடறிவிழக்கூடிய இரயில் பாதையில் நீண்ட தூரம் நடக்க முடிந்ததென்றால், அந்த மாணவர்கள் இருவரும் தங்களுடைய கைகளை கோர்த்துப் பிடித்துக்கொண்டு, எதிரெதிர் திசையில் நின்றுகொண்டு நடந்தார்கள். அதனால்தான் அவர்களால் இடறிவிழாமல் நீண்ட தூரம் நடக்க முடிந்தது.

சாரணர் இயக்கப் பொறுப்பாளர் அந்த மாணவர்கள் இருவரும் வித்தியாசமாக சிந்தித்து, செயல்பட்டதால் அவர்கள் இருவரையும் வெகுவாகப் பாராட்டினார். ஆம், இணைந்து செயல்படும்போது எப்படிப்பட்ட இலக்கையும் நாம் எளிதாய் அடையாலாம். இது அன்றாட வாழ்க்கைக்கு மட்டுமல்லாது, ஆண்டவரின் பணிக்கும் மிகவும் பொருந்தும். பொதுக்காலத்தின் இருபத்தி ஆறாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள், "இணைந்து செய்யப்படவேண்டிய இறையாட்சிப் பணி என்னும் சிந்தனையைத் தருகின்றன. நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் யோவான் ஆண்டவர் இயேசுவிடம், "போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்" என்கின்றார். இயேசு அவரிடம், "தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்ல செயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேசமாட்டார். ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கின்றார்" என்கின்றார். யோவான் ஆண்டவர் இயேசுவிடம் பேசிய வார்த்தைகளும் அதற்கு இயேசு அவருக்கு அளித்த பதிலும் நமது ஆழ்ந்த சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. ஏனென்றால் யோவானின் வார்த்தைகளில் தான் மட்டுமே வளரவேண்டும், அடுத்தவர் வளரக்கூடாது என்கின்ற தன்னலம் அதிகமாக வெளிப்படுகின்றது. அப்படிப்பட்ட மனநிலையோடு இருந்த யோவானைத்தான் ஆண்டவர் இயேசு திருத்தி, அவரை பொதுநல சிந்தனையோடு இணைந்து செயல்பட அழைக்கின்றார்.

எண்ணிக்கை நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில்கூட இதை ஒத்த கருத்தினைத்தான் நாம் படிக்கின்றோம். ஆண்டவராகிய கடவுள் மோசேயிடமிருந்த ஆவியில் கொஞ்சம் எடுத்து எழுபது மூப்பருக்கு அளிக்கின்றார். அவர்கள் அனைவரும் இறைவாக்கு உரைக்கத் தொடங்குகின்றார்கள். இதற்கிடையில் பாளையத்திலே தங்கிவிட்ட எல்தாது, மேதாது ஆகிய இருவர்மீதும் ஆவி இறங்கி வர அவர்களும் இறைவாக்கு உரைக்கத் தொடங்குகின்றார்கள். இதை அறிந்த யோசுவா மோசேயிடம், "மோசே! என் தலைவரே! அவர்களைத் தடுத்து நிறுத்தும்" என்கிறார். அதற்கு மோசே யோசுவாவிடம், "நீ பொறாமைப்படுகின்றாயா? ஆண்டவரின் மக்கள் அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணைச் சிறப்பு" என்கின்றார்.

நற்செய்தி வாசகமும் முதல் வாசகமும் நமக்கு ஒருசில சிந்தனைகளை வழங்குகின்றன. நாம் அதனைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

கடவுளின் அருள் எல்லார்மீது பொழியப்படுகின்றது. இதுதான் இன்றைய இறைவார்த்தை நமக்கு உணர்த்தும் முதன்மையான செய்தியாக இருக்கின்றது. எப்படி என்றால், நற்செய்தி வாசகத்தில் சீடர்கள் குழுவில் இல்லாத ஒருவர் பேயை ஓட்டுகின்றார், முதல் வாசகத்திலோ கூடாரத்தில் இல்லாமல், பாளையத்தில் இருக்கின்ற இருவர்மீது ஆவி இறங்கி வந்து, இறைவாக்கு உரைக்கின்றார்கள். அப்படியானால் இறைவனின் அருள் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல், எல்லார்மீதும் பொழியப்படுகின்றது என்பதுதான் உண்மையாகின்றது. எப்படி மழை எல்லார்மீது பொழியப்படுகின்றதோ, அது போன்று ஆண்டவரின் அருளும் எல்லார்மீதும் பொழியப்படுகின்றது. இந்த உண்மையை உணர்ந்துகொண்டு வாழ்வதுதான் கடவுளுக்கு உகந்த ஒரு செயலாகும்.

ஒருவர்மீது பொழியப்பட்டிருக்கும் கடவுளின் ஆசிருக்காக அவர்மீது பொறாமைப்படக்கூடாது. இது இன்றைய இறைவார்த்தை நமக்குச் சொல்லும் இரண்டாவது செய்தியாக இருக்கின்றது. நற்செய்தியில் யோவான் இயேசுவிடம் வந்து, அவருடைய பெயரால் பேயை ஒட்டுகின்றவரை தடுத்து நிறுத்தச் சொல்கின்றார், முதல் வாசகத்திலோ யோசுவா மோசேயிடம் வந்து, பாளையத்தில் இறைவாக்கு உரைத்துக்கொண்டிருந்த எல்தாது, மேதாது ஆகிய இருவரையும் தடுத்து நிறுத்தச் சொல்கின்றார். யோவான், யோசுவா ஆகிய இருவரின் செயலிலும் வெளிப்படுவது பொறாமையும், சுயநலமும்தானே தானே தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?. அவர்கள் இருவருடைய உள்மனத்திற்குள் தங்களைத் தவிர வேறு யாரும் பேய் ஓட்டவோ அல்லது இறைவாக்கு உரைக்கவோ கூடாது என்கிற சுயநலம் இருந்திருக்கவேண்டும். அது மட்டுமல்லாமல், அவன் இப்படி பேய் ஒட்டுகின்றானே, அவர்கள் இப்படி இறைவாக்கு உரைக்கின்றார்களே என்ற பொறாமையும் இருந்திருக்கவேண்டும். அதனால்தான் அவர்கள் அப்படி நடந்துகொள்கின்றார்கள்.

நாமும்கூட பல நேரங்களில் அடுத்தவன் நம்மை விட இப்படி வளர்ந்துவிட்டானே, உயர்ந்துவிட்டானே என்று பொறாமைப் படுகின்றோம். நாம் பொறாமைப் படுவதனால் அடுத்தவனுக்கு எதிராக சூழ்ச்சி செய்யத் தொடங்குகின்றோம். இதில் வேதனை என்னவென்றால் பொறாமைப்பட்டவனே அதில் வீழ்ந்து அழிந்து போகின்றான். சவுல் தாவீதின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்பட்டான். கடைசியில் அந்தப் பொறாமைத் தீயில் விழுந்து சவுல் இறந்து போனான்.

பொறாமை என்பது எவ்வளவு கொடியது என்பதை விளக்குவதற்கு ஒரு நிகழ்வு.

பழங்காலத்தில் கிரேக்க நாட்டில் மிக வேகமாக ஓடக்கூடிய வீரன் ஒருவன் இருந்தான். அவனுடைய திறமையைப் பார்த்து வியந்து போன சிற்பி ஒருவன் மக்கள் எல்லாரும் கூடி வரக்கூடிய சந்தைவெளியில் அவனுக்கு உயரமான சிலை ஒன்றை வடித்து வந்தான். இது அந்த வீரனோடு ஓடக்கூடிய சக வீரனின் உள்ளத்தில் பொறாமைத் தீயை வளர்த்தது. எனவே, அந்த சக வீரன் இரவில் யாருக்கும் தெரியாமல் சிலையை உடைக்க தீர்மானித்தான். அதன்படி அவன் இரவு நேரத்தில் அந்த சிலைக்கு அடியில் நின்றுகொண்டு அதை சுத்தியலால் அடித்து உடைக்கத் தொடங்கினான். அவன் வேக வேகமாக சிலையை அடித்து உடைக்கத் தொடங்கியதால், ஒருகட்டத்தில் மொத்த சிலையும் அவன்மேல் விழுந்து அவனைக் கொன்றுபோட்டது.

பொறாமைப்படுவோருக்கு அந்தப் பொறாமையே அழிவைக் கொண்டு வந்துவிடும் என்னும் உண்மையை இந்த நிகழ்வானது வேதனையோடு பதிவு செய்கின்றது. பொறாமை மிகக்கொடியது என்பதால்தான் திருச்சபை அதனை ஏழு தலையாய பாவங்களில் ஒன்றாகப் பட்டியலிடுகின்றது மற்றவை பினவருபவன ஆணவம், கோபம், பேராசை, சிலை வழிபாடு, கட்டுப்பாடற்ற பாலுணர்வு, பெருந்தீனி.

ஆகவே, நாம் ஒருவன் நம்மைவிட வாழ்க்கையில் உயர்ந்துவிட்டால் அவன்மீது பொறாமைப்படாமல், அவனைப் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்ளவேண்டும்.

இறைவன் எல்லாருக்கும் தன்னுடைய ஆசிரைப் பொழிகின்றார். எனவே, இறைவனின் ஆசிரைப் பெற்றிருக்கும் நாம் ஒருவர் மற்றவர்மீது பொறாமைப்படக்கூடாது என்று சிந்தித்த நாம், இதை ஒட்டி வரக்கூடிய இன்றைய இரண்டாம் வாசகம் தருகின்ற செய்தியையும் நம்முடைய சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம். இரண்டாம் வாசகத்தில் யாக்கோபு, "செல்வர்களே, உங்களுக்கு வரப்போகும் இழிநிலையை நினைத்து அலறி அழுங்கள். உங்கள் செல்வம் மக்கிப்போயிற்று" என்று செல்வந்தர்களுக்கு எதிரான தனது கண்டனக் குரலைப் பதிவுசெய்கிறார். செல்வந்தர்கள் கடவுள் தங்களுக்கு கிடைத்த ஆசிர்வாதத்தை ஏழைகளோடு பகர முன்வரவில்லை. அதனால்தான் அவர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு சாபம். ஆகவே, கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் கொடையை, பிறரோடு பகிர்ந்து கொள்ள முன்வரவேண்டும். இதை இன்றைய இறைவார்த்தை நமக்குச் சொல்லும் மூன்றாவது செய்தியாக எடுத்துக்கொள்ளலாம்.

எனவே, நாம் கடவுள் தன்னுடைய ஆசிரை எல்லார்மீதும் பொழிந்திருக்கின்றார் என்கின்ற உண்மையை உணர்ந்துகொள்வோம். பிறரைப் பொறாமைக் கண்கொண்டு பார்க்காதிருப்போம், நாம் பெற்ற ஆசிரை பிறரோடு பகிர்ந்து கொள்வோம், இறையாட்சிப் பணியானது தனித்து செய்யப்படவேண்டிய ஒன்றல்ல, அது இணைந்து செய்யப்பட வேண்டியது என்பதை உணர்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!