Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   29  செப்டம்பர் 2018  
                                                           பொதுக்காலம் 25ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
பல கோடி பேர் அவர்முன் நின்றார்கள்.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 9-10, 13-14

நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அரியணைகள் அமைக்கப்பட்டன; தொன்மை வாய்ந்தவர் அங்கு அமர்ந்தார்; அவருடைய ஆடை வெண்பனி போலவும், அவரது தலைமுடி தூய பஞ்சு போலவும் இருந்தன; அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும் அதன் சக்கரங்கள் எரி நெருப்பாயும் இருந்தன.

அவர் முன்னிலையிலிருந்து நெருப்பாலான ஓடை தோன்றிப் பாய்ந்தோடி வந்தது; பல்லாயிரம் பேர் அவருக்குப் பணி புரிந்தார்கள்; பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்; நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமர்ந்தது; நூல்கள் திறந்து வைக்கப்பட்டன.

இரவில் நான் கண்ட காட்சியாவது; வானத்தின் மேகங்களின் மீது மானிடமகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார்.

ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்குக் கொடுக்கப் பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றும் உள்ளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்துபோகாது.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

👼🏿👼🏾⛪👼🏽👼🏼⛪👼🏻👼
அல்லது
👼🏿👼🏾⛪👼🏽👼🏼⛪👼🏻👼


மிக்கேலும் அவருடைய தூதர்களும் அரக்கப் பாம்போடு போர் தொடுத்தார்கள்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 12: 7-12a

விண்ணகத்தில் போர் மூண்டது. மிக்கேலும் அவருடைய தூதர்களும் அரக்கப் பாம்போடு போர் தொடுத்தார்கள்; அரக்கப் பாம்பும் அதன் தூதர்களும் அவர்களை எதிர்த்துப் போரிட்டார்கள். அரக்கப் பாம்பு தோல்வியுற்றது.

விண்ணகத்தில் அதற்கும் அதன் தூதர்களுக்கும் இடமே இல்லாது போயிற்று. அப்பெரிய அரக்கப் பாம்பு வெளியே தள்ளப்பட்டது. அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்பெற்ற அதுவே தொடக்கத்தில் தோன்றிய பாம்பு. உலகு முழுவதையும் ஏமாற்றிய அது மண்ணுலகுக்குத் தள்ளப்பட்டது; அதன் தூதர்களும் அதனுடன் வெளியே தள்ளப்பட்டார்கள்.

பின்பு விண்ணகத்தில் ஒலித்த பெரியதொரு குரலைக் கேட்டேன். அது சொன்னது: "இதோ, மீட்பு, வல்லமை, நம் கடவுளின் ஆட்சி, அவருடைய மெசியாவின் அதிகாரம் ஆகிய அனைத்தும் வந்துவிட்டன. நம் சகோதரர் சகோதரிகள் மீது குற்றம் சுமத்தியவன், நம் கடவுள் திருமுன் அல்லும் பகலும் அவர்கள் மீது குற்றம் சாட்டியவன் வெளியே தள்ளப்பட்டான். ஆட்டுக்குட்டி சிந்திய இரத்தத்தாலும் தாங்கள் பகர்ந்த சான்றாலும் அவர்கள் அவனை வென்றார்கள். அவர்கள் தங்கள் உயிர்மீது ஆசை வைக்கவில்லை; இறக்கவும் தயங்கவில்லை. இதன் பொருட்டு விண்ணுலகே, அதில் குடியிருப்போரே, மகிழ்ந்து கொண்டாடுங்கள்."

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா 138: 1-2a. 2b-3. 4-5 (பல்லவி: 1c)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே! தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.

1 ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன். 2a உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள்பணிவேன். பல்லவி

2b உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர். 3 நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். பல்லவி

4 ஆண்டவரே! நீர் திருவாய் மலர்ந்த சொற்களைப் பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு உம்மைப் போற்றுவர். 5 ஆண்டவரே! உம் வழிகளை அவர்கள் புகழ்ந்து பாடுவர்; ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது! பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(திபா 103: 21)

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் படைகளே! அவர் திருவுளப்படி நடக்கும் அவர்தம் பணியாளரே! அவரைப் போற்றுங்கள். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 47-51

அக்காலத்தில் நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, "இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்" என்று அவரைக் குறித்துக் கூறினார். நத்தனியேல், "என்னை உமக்கு எப்படித் தெரியும்?" என்று அவரிடம் கேட்டார்.

இயேசு, "பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின் கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்" என்று பதிலளித்தார்.

நத்தனியேல் அவரைப் பார்த்து, "ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்" என்றார்.

அதற்கு இயேசு, "உம்மை அத்தி மரத்தின் கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதை விடப் பெரியவற்றைக் காண்பீர்" என்றார். மேலும் "வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன் மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று அவரிடம் கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்"

இயேசுவின் சிறுவயதில் அதாவது அவருக்கு பதினைந்து வயது நடக்கும்போது அவருடைய வாழ்வில் நடந்ததாகச் சொல்லப்படுகின்ற நிகழ்வு.

இயேசுவுக்கு பைடஸ் என்ற நண்பன் ஒருவன் இருந்தான். ஒருநாள் இயேசு அவனிடத்தில், "என் அன்பு நண்பா பைடஸ்! எதிர்காலத்தில் நீ என்னவாகப் போகிறாய்?" என்று கேட்டார். அதற்கு பைடஸ், "நான் மிகப்பெரிய தச்சராகப் போகிறேன். தச்சரான பின்பு அரசர் உட்கார்வதற்கு ஏற்றாற்போல் அழகு வேலைப்பாடு நிறைந்த அரியணை ஒன்றைச் செய்வேன். அதில் அரசர் அமர்ந்துகொண்டு எல்லா மக்களுக்கும் கொடைகளை வாரி வாரி வழங்குவார்" என்றான். இயேசுவும், "உன் எண்ணம் போல் வாழ்க்கை அமையப்பட்டும்" என்று சொல்லி ஆசிர்வதித்து விட்டு, அவனிடமிருந்து விடைபெற்றார்.

இதற்குப் பிறகு பைடஸ், ஜார்ப்பா என்ற நகருக்குக் தன்னுடைய குடும்பத்தோடு குடிபெயர்ந்தான். அங்கே அவன் தச்சுத் தொழிலைச் செய்து நல்ல நிலைக்கு வந்தான். இவ்வாறு ஆண்டுகளுக்கு ஓடிக்கொண்டிருக்கும்போது ஒருநாள் பைடசை சிலர் சிலுவை செய்யக் கூப்பிட்டார்கள். அவன் இயேசுவுக்குத்தான் சிலுவை செய்யப்போகிறோம் என்பது தெரியாமல் மிகவும் பாரமான சிலுவையைச் செய்து தந்தான். அவன் சிலுவையைச் செய்துகொடுத்த பின்பு, அந்தச் சிலுவையில் யாரை அறையப் போகிறார்கள் என்று வேடிக்கை பார்த்தான். அவ்வாறு அவன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்போது அந்தச் சிலுவையில் தன்னுடைய பால்ய நண்பன் இயேசு அறையப் படுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான்.

உடனே அவன் சிலுவையடி மட்டும் இயேசுவைப் பின்தொடர்ந்து சென்றான். சிலுவையடியில் நின்றுகொண்டு இயேசுவிடத்தில் அவன், "உமக்குத்தான் சிலுவை செய்ய என்னை அழைக்கிறார்கள் என்று முன்பே எனக்குத் தெரிந்திருந்தால், நான் இதற்குச் சம்மதித்திருக்க மாட்டேனே. கடைசியில் நான் செய்த சிலுவையிலே நீர் அறையப்படும் நிலை வந்துவிட்டதே" என்று கதறி அழுதான். அதற்கு இயேசு அவனிடம், "நீ பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பாக என்னிடத்தில் என்ன சொன்னாய்... அரசர் அமரக்கூடிய அரியணை ஒன்றைச் செய்வேன், அதிலிருந்து அரசர் மக்களுக்கு கொடைகளை வாரி வாரி வழங்குவார் என்று சொன்னாய் அல்லவா. நீ செய்த இந்தச் சிலுவைதான் அரியணை. இதில் தொங்கிக்கொண்டிருக்கின்ற நான்தான் அரசன். இந்தச் சிலுவையிலிருந்துதான் நான் மக்களுக்கு கொடைகளை வாரி வாரி வழங்கப் போகிறேன்" என்றார்.

இவ்வாறு சொல்லிவிட்டு தொடர்ந்து இயேசு பைடஸிடம் சொன்னார், "நீ செய்த சிலுவையில் என்னை அறைந்துவிட்டார்களே என்று மனம் வருந்தாதே. இதுதான் இறைவனின் திருவுளம். இந்த இறைத்திருவுளத்தில் நீயும் பங்கெடுத்திருக்கின்றாயே, அதை நினைத்து மகிழ்ச்சி கொள்".

மானிட மகனாகிய இயேசு, மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட்டு, பலவாறு துன்புறுத்தப்பட்டு, கொலை செய்யப்படவேண்டும், மூன்றாம் நாளில் உயிர்த்தெழ வேண்டும். இது இறைத்திருவுளம். இதனை இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களிடத்தில் சொன்னபோது அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் புரிந்துகொள்ள முடியாதவாறு அது அவர்களுக்கு மறைவாய் இருந்தது. அதைவிட கொடுமை, தங்களுக்குப் புரியவில்லையே, ஏதாவது விளக்கம் கேட்கலாமே என்று யாரும் முன்வரவில்லை.

சீடர்களின் இந்த நிலைக்கு முக்கியமான காரணம், அவர்கள் மெசியாவைக் குறித்துக் கொண்டிருந்த பார்வைதான். மெசியா என்றால், பெரிய அரசராக இருப்பார். அவர் எல்லா நாட்டையும் கைப்பற்றி தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஆட்சி செலுத்துவார் என்று அவர்கள் நினைத்தார்கள். அவர்கள் அவ்வாறு நினைத்ததைத் தவறு என்று சொல்ல முடியாது. ஏனென்றால் யூதர்கள் அனைவரும் மெசியாவைக் குறித்து அப்படித்தான் நினைத்தார்கள். ஆனால் இயேசுவின் பார்வையோ அதற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. அவரைப் பொறுத்தளவில் மெசியா என்றால், மக்களுக்காகத் துன்புறும் ஓர் ஊழியர் என்பதாகவே இருந்தது. அதனைத்தான் அவர் பல தடவை தன்னுடைய சீடர்களுக்கு எடுத்துச் சொன்னார். அப்படியிருந்தும் அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதுதான் வேதனையான ஒரு விஷயம்.

இயேசு இந்த உலகத்திற்கு வாழ்வினைக் கொடுக்க வந்தார். அதுவும் தன்னுடைய பாடுகளின் வழியாக. ஆகவே, நாம் செய்ய வேண்டியதெல்லாம் இறைத் திருவுளத்தை உணர்ந்துகொள்வதும் அதற்கேற்ப நடப்பதும் தான். நம்முடைய விருப்பத்திற்கு ஏற்ப அவரை வளைப்பது கூடாத காரியம். மாறாக அவருடைய திருவுளத்திற்கு ஏற்ப நாம் பணிந்து போவதோ அவருக்கு ஏற்புடைய காரியம்.

ஆகவே, இறைத்திருவுளத்திற்கு நாம் பணிந்து நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!