Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   28  செப்டம்பர் 2018  
                                                           பொதுக்காலம் 25ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலம் உண்டு.

சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம் 3: 1-11

ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரம் உண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலம் உண்டு: பிறப்புக்கு ஒரு காலம், இறப்புக்கு ஒரு காலம்; நடவுக்கு ஒரு காலம், அறுவடைக்கு ஒரு காலம்; கொல்லுதலுக்கு ஒரு காலம், குணப்படுத்துதலுக்கு ஒரு காலம்; இடித்தலுக்கு ஒரு காலம், கட்டுதலுக்கு ஒரு காலம்; அழுகைக்கு ஒரு காலம், சிரிப்புக்கு ஒரு காலம்; துயரப்படுதலுக்கு ஒரு காலம், துள்ளி மகிழ்தலுக்கு ஒரு காலம்; கற்களை எறிய ஒரு காலம், கற்களைச் சேர்க்க ஒரு காலம்; அரவணைக்க ஒரு காலம், அரவணையாதிருக்க ஒரு காலம்; தேடிச் சேர்ப்பதற்கு ஒரு காலம், இழப்பதற்கு ஒரு காலம்; காக்க ஒரு காலம். தூக்கியெறிய ஒரு காலம்; கிழிப்பதற்கு ஒரு காலம், தைப்பதற்கு ஒரு காலம்; பேசுவதற்கு ஒரு காலம், பேசாதிருப்பதற்கு ஒரு காலம்; அன்புக்கு ஒரு காலம், வெறுப்புக்கு ஒரு காலம்; போருக்கு ஒரு காலம், அமைதிக்கு ஒரு காலம்.

வருந்தி உழைப்பவர் தம் உழைப்பினால் அடையும் பயன் என்ன? மனிதர் பாடுபட்டு உழைப்பதற்கெனக் கடவுள் அவர்மீது சுமத்திய வேலைச் சுமையைக் கண்டேன்.

கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்; காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்திருக்கிறார். ஆயினும், கடவுள் தொடக்க முதல் இறுதிவரை செய்துவருவதைக் கண்டறிய மனிதரால் இயலாது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா 144: 1a,2a-உ. 3-4 (பல்லவி: 1a)
=================================================================================
பல்லவி: என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!

1a என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி! 2a-c என் கற்பாறையும் கோட்டையும் அவரே! எனக்குப் பாதுகாப்பாளரும் மீட்பரும் அவரே! என் கேடயமும் புகலிடமும் அவரே! பல்லவி

3 ஆண்டவரே! மனிதரை நீர் கவனிக்க அவர்கள் யார்? மானிடரை நீர் கருத்தில் கொள்ள அவர்கள் யார்? 4 மனிதர் சிறுமூச்சுக்கு ஒப்பானவர்; அவர்களின் வாழ்நாள்கள் மறையும் நிழலுக்கு நிகரானவை. பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(மாற் 10: 45)

அல்லேலூயா, அல்லேலூயா! மானிட மகன் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீர் கடவுளின் மெசியா. மானிட மகன் பலவாறு துன்பப்பட வேண்டும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 18-22

அக்காலத்தில் இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம் "நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?" என்று அவர் கேட்டார்.

அவர்கள் மறு மொழியாக, "சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர்" என்றார்கள்.

"ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று அவர்களிடம் அவர் கேட்டார்.

பேதுரு மறுமொழியாக, "நீர் கடவுளின் மெசியா" என்று உரைத்தார்.

இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார். மேலும் இயேசு, "மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்" என்று சொன்னார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
இயேசு தனித்து வேண்டிக்கொண்டிருந்தபோது சீடர்கள் மட்டும் அவர்களோடு இருந்தனர்

சிற்றூர் ஒன்றில் விவசாயி இருவர் இருந்தார். அவர் இறைவன்மீது ஆழமான பற்று கொண்டவர். ஒவ்வொரு நாளையும் ஜெபத்தோடு தொடங்குவார், அதேபோல் தூங்கும்போது இரவு ஜெபம் சொல்லிவிட்டுத்தான் தூங்கச் செல்வார்.

அப்படிப்பட்டவர் ஒரு நாள் தன்னுடைய தோட்டத்தில் விளைந்திருந்த காய்கறிகளை தனது மாட்டுவண்டியில் ஏற்றுக்கொண்டுபோய் சந்தையில் விற்றுவிட்டு, வீட்டுக்குத் தேவையான பொருட்களை வண்டியில் ஏற்றுக்கொண்டு காட்டுப்பாதை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஓரிடத்திற்கு வந்ததும் வண்டியிலிருந்து வித்தியாசமான ஒரு சத்தம் கேட்டது. அது என்ன சத்தம்? அச்சத்தம் எங்கிருந்து வருகிறது? என்று அவர் இறங்கிப் பார்த்தார். அப்போதுதான் தெரிந்தது வண்டியில் உள்ள அச்சில் விரிசல் ஏற்பட்டிருக்கின்றது என்று.

"இந்த நட்டநடுக் காட்டுக்குள், அதுவும் இந்த அந்தி மங்கும் வேளையில் இப்படி வண்டியின் அச்சில் விரிசல் ஏற்பட்டுவிட்டதே. இப்போது நான் என்ன செய்வேன்" என்று யோசிக்கத் தொடங்கினார். பிறகு ஏதோ சிந்தனை வயப்பட்டவராய், வண்டியின் அச்சில் சிறிதுதானே விரிசல் ஏற்பட்டிருக்கின்றது. இதை வைத்துக்கொண்டு எப்பாடு பட்டாவது வண்டியை வீட்டுக்கு ஒட்டிக்கொண்டு போவோம்" என்று முடிவு செய்தார். அவர் இவ்வாறு முடிவுசெய்துவிட்டு, வழியில் வண்டிக்கு எந்தவொரு இடைஞ்சலும் ஏற்படாது இருக்க இறைவனை பிரார்த்திக்க நினைத்தார்.

வழக்கமாக அவர் ஜெபிக்கும்போது, தன்னோடு வைத்திருக்கும் ஜெபப் புத்தகத்தின் உதவியுடன்தான் ஜெபிப்பார். ஜெபப் புத்தகம் இல்லாமல் அவர் ஒருபோதும் ஜெபித்தது கிடையாது. அன்றைக்குப் பார்த்து அவர் ஜெபப் புத்தகத்தை மறந்து வீட்டிலேயே வைத்துவிட்டு வந்திருந்தார். நேரம் வேறு ஆகிக்கொண்டிருக்கின்றது, இறைவனிடம் ஜெபிக்க கையில் ஜெபப்புத்தகம் வேறு இல்லை, என்ன செய்வது என்று யோசித்துப் பார்த்த அவர், இறைவனுக்குத்தான் எல்லா ஜெபங்களும் தெரியுமே, நாம் நம் மனதில் உதிக்கின்ற வார்த்தைகளை அவரிடத்தில் எடுத்துச் சொல்வோம். அவர் அதனை ஜெபமாக எடுத்துக்கொள்ளட்டும்" என்று தன்னுடைய மனதில் தோன்றிய வார்த்தைகளை இறைவனிடத்தில் எடுத்துச் சொன்னார்.

அப்போது இறைவன் அவருக்கு முன்பாகத் தோன்றி, "மகனே! உன்னுடைய உள்ளக் குமுறல்களை நான் கேட்டேன், இந்நாள்வரை நீ என்னை நோக்கி எழுப்பிய ஜெபங்களுள், இன்றைக்கு நீ எழுப்பிய ஜெபம்தான் மிகவும் ஆர்மார்த்தமாகவும் என்னுடைய உள்ளத்தைக் கரைப்பாகவும் இருந்தது. ஆதலால், நீ வேண்டிக் கொண்டது போன்று, நீ வீடு போய் சேர்கின்ற வரைக்கும் உனது வண்டியின் அச்சு உடைந்துபோகாமல் நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு மறைந்து போனார். இறைவன் சொன்னதை நம்பி அந்த விவசாயி தன்னுடைய வண்டியை வீட்டுக்கு ஓட்டிக்கொண்டு போனார். ஆச்சரியம் என்னவென்றால், வண்டி வீடு போய் சேர்கிற வரைக்கும் அதற்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை.

"ஜெபம் என்பது சிறகு போன்றது, அது நம் ஆன்மாவை ஆண்டவரிடத்தில் கொண்டு சேர்க்க வல்லது" என்பார் தூய அம்புரோசியார். இது உண்மையிலும் உண்மையிலும் ஒரு கருத்து. மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் விவசாயி நம்பிக்கையோடு ஆண்டவரிடத்தில் ஜெபித்தார். ஆண்டவரும் அவருடைய குரலுக்கு செவிமடுத்து, அவரை வீட்டிக்குப் பத்திரமாய் கொண்டுபோய் சேர்த்தார்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, தனித்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார் என்று வாசிக்கின்றோம். இயேசு இறைமகனாக இருந்தபோதும் அவர் இறைவனோடு ஜெபிப்பதற்கு நேரம் ஒதுக்கினார் என்று வாசிக்கின்றபோது, அவர் ஜெபத்திற்கு எந்தளவுக்கு முக்கியத்தும் தந்து வாழ்ந்திருக்கின்றார் என்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகின்றது. கீழே வருகின்ற குறிப்புகள் (லூக்கா நற்செய்தியில் மட்டும்) அவர் எந்தளவுக்கு தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஜெபித்திருக்கின்றார் என்பதை எடுத்துச் சொல்கின்றது. ( லூக் 3:21, 5:16, 6:12, 9:20, 9:29, 11:1, 22:41, 23:34). இயேசுவின் வழி நடக்கின்ற நாம் ஜெபிக்கின்ற மனிதர்களாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

"அன்றாட ஜெபம் செய்கிறீர்களா?" என்று ஒருசிலரிடத்தில் நாம் கேட்கின்றபோது அவர்கள் சொல்லக்கூடிய பதில், "அதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது" என்பதாக இருக்கின்றது. இப்படிச் சொல்பவர்களை நாம் என்னவென்று சொல்வது?. ஜெபம் நம்முடைய வாழ்விற்கான ஆற்றலின் ஊற்று, அதை நாம் செய்யாமல் இருந்தால், நம்முடைய வாழ்விற்கான ஆற்றலை நாம் எங்கிருந்து பெற முடியும்?

ஆகவே, நாம் இயேசுவைப் போன்று ஜெபிக்கின்ற மக்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
நான் யாரென மக்கள் சொல்கிறார்கள்?

முன்பொரு காலத்தில் எல்லோராலும் நன்கு மதிக்கப்பட்ட நான்சென் என்ற ஞானியை அப்போதிருந்த மாமன்னன் மாலிண்ட் தனது அரசவைக்கு அழைத்தான். தூதுவன் நான்சென்னிடம் சென்று, "குரு நான்சென் அவர்களே!, அரசர் உங்களை காண விரும்புகிறார். நான் உங்களை அழைப்பதற்காக வந்திருக்கிறேன்." என்றான்.
நான்சென், "நீ விரும்பினால் நான் வருகிறேன், ஆனால் நான்சென் என்று யாரும் இங்கு இல்லை. அது வெறும் ஒரு பெயர்தான், ஒரு தற்காலிக குறியீடு." என்றார். தூதுவன் அரசரிடம் சென்று, "நான்சென் ஒரு வித்தியாசமான மனிதர், அவர் வருவதாக ஒத்துக் கொண்டார், ஆனால் நான்சென் என்று யாரும் இல்லை" என்று அவர் கூறியதைக் கூறினான். மாமன்னன் ஆச்சரியமடைந்தான்.

நான்சென் வருவதாக கூறிய நேரத்தில் தேரில் அழைத்து வரப்பட்டார். மன்னன் வாசலில் நின்று அவரை, "குரு நான்சென் அவர்களே, வாருங்கள், வாருங்கள்!" என வரவேற்றான். இதைக் கேட்டவுடன், துறவி சிரித்தார். "நான்சென்னாக நான்
உன்னுடைய வரவேற்பை ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் நினைவில் கொள், நான்சென் என்ற பெயருடைய யாரும் இங்கு இல்லை" என்றார்.

அரசன், "நீங்கள் வித்தியாசமாக பேசுகிறீர்கள், நீங்கள், நீங்கள் இல்லை என்றால் யார் என்னுடைய அழைப்பை ஏற்றுக் கொண்டது? யார் என்னுடைய வரவேற்புக்கு பதில் சொல்வது?" என்று கேட்டான். நான்சென் பின்னே திரும்பி பார்த்து கேட்டார், "நான் வந்த ரதம் அதுதானே? "ஆம், அதுவேதான்". "தயவுசெய்து குதிரைகளை கழற்றி விடுங்கள்" என்றார். அது செய்யப்பட்டது.

குதிரைகளை காட்டி, "அது ரதமா?" என்று கேட்டார் நான்சென். அரசர், "குதிரைகளை எப்படி ரதம் என்று அழைக்க முடியும்?" என்று கேட்டார். துறவி கூறியதின் பேரில் குதிரைகளை கட்டும் நுகத்தடி கழற்றப்பட்டது. "அந்த நுகத்தடிதான் ரதமா?" என்று துறவி கேட்டார். "அது எப்படி? அவை நுகத்தடிகள், அது ரதமல்ல".

துறவி கூற கூற, ஒவ்வொரு பாகமாக கழற்றப்பட்டது, ஒவ்வொரு பாகமாக கழற்றப்பட, பட அரசரின் பதில் "இது ரதமல்ல" என்பதாக இருந்தது. கடைசியில் ஒன்றும் மிச்சமில்லை. துறவி, "எங்கே உனது ரதம்? ஒவ்வொரு பாகம் எடுத்துச் செல்லப்பட்டபோதும் இது ரதமல்ல என்று நீயே கூறினாய். ஆகவே இப்போது சொல், உனது ரதம் எங்கே?" என்று கேட்டார். அரசரிடம் ஒரு நிலைமாற்றம் நிகழ்ந்தது.
துறவி தொடர்ந்தார், "நான் சொல்வதை புரிந்து கொண்டாயா? ரதம் என்பது ஒரு கூட்டுமுயற்சி. சில குறிப்பிட்ட விஷயங்கள் சேர்ந்த சேகரிப்பு. ரதம் என்பது தனித்து இருப்பதல்ல. இப்போது உள்ளே பார். எங்கே உனது ஆணவம்?, எங்கே உனது " நான் ? நீ எங்கேயும் "நானை" கண்டுபிடிக்க முடியாது. அது பல சக்திகள் ஒன்று
சேர்ந்த ஒருமித்த ஒரு வெளிப்பாடு. அவ்வளவுதான். ஒவ்வொரு உறுப்பையும் எண்ணிப்பார், உன்னுடைய ஒவ்வொரு பார்வையை பற்றியும் நினைத்துப்பார், பின் ஒவ்வொன்றாக வெளியேற்று, இறுதியில் ஒன்றுமற்றது தான் இருக்கும். (ஓஷோ சொல்லக்கூடிய கதை இது)

நான், நான் என்று அலைபவர்கள் "நான்" என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்லப்படும் கதை.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களைப் பார்த்து, "நான் யாரென மக்கள் சொல்கிறார்கள்?, நான் யார் என நீங்கள் சொல்கிறீர்கள்?" என்று கேட்கிறார். இயேசுவின் இந்த கேள்வி ஆணவத்தில் எழுந்த கேள்வி அல்ல. இயேசு தாழ்ச்சியே உருவானவர்), மாறாக தான் பணிபுரிந்த இடங்களில் இருந்த மக்கள், தன்னோடு இருந்த சீடர்கள் தன்னை எப்படிப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதற்காக கேட்கப்பட்ட கேள்வி. இயேசுவின் கேள்விக்கு சீடர்கள் அளித்த பதிலைப் பார்த்துவிட்டு சற்று அதிருப்திகொள்கிறார். பின்னர் அவர்களுக்கு தான் யார் என்பதை வெளிப்படுத்துகிறார்.

யூதர்கள் (சீடர்களும் இதில் அடங்கும்) மெசியா என்பவர் எல்லா மக்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஓர் அரசராக பார்த்தார்கள். ஆனால் ஆண்டவர் இயேசுவின் பார்வை இதற்கு முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. அவர் மெசியா என்பவர் மக்களுக்காக, அவர்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாக துன்புறக்கூடியவராகப் பார்த்தார். மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாக தன்னுடைய உயிரையே பலியாகத் தந்தார். எனவே நம் இயேசுவைப் பற்றிய/ மெசியாவைப் பற்றிய தெளிவான பார்வையைக் கொண்டு வாழ்வோம்.

இறையியலாளரான மோல்ட் மோர்கன் கூறுவார், "மெசியாவைப் பற்றிய பார்வைக்கும் நமது வாழ்வுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது" என்று. எப்படி என்றால் நாம் மெசியாவை அதிகாரம் செலுத்துபவராகப் பார்த்தால், நாமும் பிறர்மீதும் அதிகாரம் செலுத்துகின்றவர்களாவோம். மாறாக மெசியாவைத் துன்புறும் ஊழியராக, பிறருக்காகத் தன்னுடைய வாழ்வையே அர்ப்பணிப்பவராகப் பார்த்தால், நாமும் பிறருக்காகத் துன்புறத் தயாராவோம்.

எனவே இயேசுவே மெசியா என உணர்வோம். அவரைத் துன்புறும் ஊழியராக உணர்ந்துகொள்வோம். பிறருக்காக, பிறர் வாழ்வு நலமடைய துன்புறும் மக்களாவோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!