Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   27  செப்டம்பர் 2018  
                                                           பொதுக்காலம் 25ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
ஞாயிறு தோன்றுகின்றது; மறைகின்றது. பிறகு தன் இடத்திற்கு விரைந்து சென்று மீண்டும் தோன்றுகின்றது.

சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம் 1: 2-11

வீண், முற்றிலும் வீண், என்கிறார் சபையுரையாளர்; வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண். மனிதர் தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு உழைக்கின்றனர்; ஆனால், அவர்கள் உழைப்பினால் பெறும் பயன் என்ன? ஒரு தலைமுறை மறைகின்றது; மறு தலைமுறை தோன்றுகின்றது; உலகமோ மாறாது என்றும் நிலைத்திருக்கின்றது.

ஞாயிறு தோன்றுகின்றது; ஞாயிறும் மறைகின்றது. பிறகு தன் இடத்திற்கு விரைந்து சென்று மீண்டும் தோன்றுகின்றது. தெற்கு நோக்கிக் காற்று வீசுகின்றது; பிறகு வடக்கு நோக்கித் திரும்புகின்றது. இப்படிச் சுழன்று சுழன்று வீசித் தன் இடத்திற்குத் திரும்புகின்றது.

எல்லா ஆறுகளும் ஓடிக் கடலோடு கலக்கின்றன; எனினும், அவை ஒருபோதும் கடலை நிரப்புவதில்லை; மீண்டும் ஓடுவதற்காக உற்பத்தியான இடத்திற்கே திரும்புகின்றன. அனைத்தும் சலிப்பையே தருகின்றன; அதைச் சொற்களால் எடுத்துரைக்க இயலாது.

எவ்வளவு பார்த்தாலும் கண்ணின் ஆவல் தீர்வதில்லை; எவ்வளவு கேட்டாலும் காதின் வேட்கை தணிவதில்லை.

முன்பு இருந்ததே பின்பும் இருக்கும்; முன்பு நிகழ்ந்ததே பிறகும் நிகழும். புதியது என்று உலகில் எதுவுமே இல்லை. ஏதேனும் ஒன்றைப் பற்றி, "இதோ, இது புதியது' என்று சொல்லக் கூடுமா? இல்லை. அது ஏற்கெனவே, நமது காலத்திற்கு முன்பே, பல்லாயிரம் ஆண்டுகளாக இருப்பதாயிற்றே!

முற்காலத்தவரைப் பற்றிய நினைவு இப்போது யாருக்கும் இல்லை; அவ்வாறே, வரும் காலத்தவருக்கும் தமக்கு முந்திய காலத்தவரைப் பற்றிய நினைவு இருக்கப் போவதில்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 90: 3-4. 5-6. 12-13. 14, 17 (பல்லவி: 1)
=================================================================================
பல்லவி: என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.

3 மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; "மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்' என்கின்றீர். 4 ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்து போன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. பல்லவி

5 வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்; 6 அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்துபோகும். பல்லவி

12 எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம். 13 ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். பல்லவி

14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம். 17 எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 14: 6
அல்லேலூயா, அல்லேலூயா! வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ?

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 7-9

அக்காலத்தில் நிகழ்ந்தவற்றை எல்லாம் குறுநில மன்னன் ஏரோது கேள்வியுற்று மனம் குழம்பினான். ஏனெனில் சிலர், "இறந்த யோவான் உயிருடன் எழுப்பப்பட்டார்" என்றனர்.

வேறு சிலர், "எலியா தோன்றியிருக்கிறார்" என்றனர்.

மற்றும் சிலர், "முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார்" என்றனர்.

ஏரோது, "யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ? இவரைப் பற்றி இவ்வாறெல்லாம் கேள்விப்படுகிறேனே!" என்று சொல்லி இயேசுவைக் காண வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

இயேசுவை காண வாய்ப்பு தேடினான்.

ஏரோது சக்கேயு பிலாத்து என பலர் அவரை காண வாய்ப்பு தேடினார்கள்.

இவர் நடிகர் என்றோ அரசியல் சாணக்கியர் என்றோ விளையாட்டில் வில்லர் என்றோ அல்ல கொள்கையும் கோட்பாடும் கவர்ந்ததால் தான்.

இன்றைக்கு நாம் காண விரும்பும் மனிதர்கள் எல்லாம் கொள்கையும் கோட்பாடும் கொண்ட மனிதர்களையா இல்லை பணத்திற்காக எதையும் செய்யும் அற்பர்களையா. இப்படி நாம் தேடியலையும் போது நாமும் அற்பர்களாகத் தானே இருப்போம் நம்மிடம் எப்படி உயர்ந்த லட்சியம் இருந்திட முடியும். காலத்தோடு மாற்றம் காண்போம். அற்பர்களாக வாழ்ந்து போவது அல்ல வாழ்க்கை அர்த்தமுள்ளதாக்கி தடம்பதித்து அர்ப்பணிப்பதுவே வாழ்க்கை. வாழ்க!

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
குற்றங்களை உணர்தலும், பாவ மன்னிப்புப் பெறுதலும்.

நகரத்தில் வளர்ந்த ஜானியும், மேரியும் விடுமுறைக்கு கிராமத்தில் இருந்த தங்களுடைய தாத்தா, பாட்டியின் வீட்டுக்கு வந்தார்கள். ஜானி மேரியைவிட இரண்டு வயது இளையவன். இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டைகள் வருவதுண்டு. ஆனாலும் அவற்றையெல்லாம் மறந்துவிட்டு சிறுது நேரத்தில் கூடிப் பேசிக்கொள்வார்கள்.

ஜானி, தன்னுடைய அப்பா தனக்கு வாங்கிக்கொடுத்த பொம்மைத் துப்பாக்கியை எப்போதும் கையோடு வைத்திருந்தான். ஒருநாள் பண்ணையில் அவன் அந்த பொம்மைத் துப்பாக்கி வைத்து விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அதிலிருந்து வெளிப்பட்ட ஒரு தோட்டா (ரப்பர் தோட்டா) அங்கே மேய்ந்துகொண்டிருந்த வாத்தின் மீது பட, அது அப்படியே இறந்துபோனது. ஒருநிமிடம் அவன் என்ன செய்தென்று தெரியாமல் விழித்தான். பிறகு யாரும் தெரியாமல் குழிதோண்டி புதைத்து வைத்துவிடலாம் என முடிவு செய்து அதன்படியே செய்தான். ஆனால் அவன் வாத்தை குழிதோண்டிப் புதைக்கும்போது அவனுடைய சகோதரி மேரி பார்த்துவிட்டாள். உடனே அவன் அவளிடம், "இதை யாரிடமும் சொல்லவேண்டாம்" என்று சத்தியம் வாங்கிக்கொண்டான். அவளும் அதற்குச் சரி என்றாள்.

நாட்கள் சென்றன. ஒருநாள் ஜானியும் மேரியும் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த அவர்களுடைய பாட்டி மேரியிடம், "என்னோடு பாத்திரங்களைக் கழுவ வா" என்று அழைத்தார். அதற்கு மேரி, "அதெல்லாம் என்னால் முடியாது, வேண்டுமானால் ஜானியை அழைத்துக்கொண்டு போ" என்று அடம்பிடித்தாள். ஜானியோ, "என்னால் எல்லாம் பாத்திரங்களைக் கழுவ வரமுடியாது" என்று சொன்னபோது, மேரி அவனைப் பார்த்து, "வாத்து" என்று இழுத்தாள். எங்கே தான் செய்த தவறைச் சொல்லிவிடுவாளோ என்று பயந்து அவன் பாத்திரங்களைக் கழுவச் சென்றான்.

இன்னொரு நாள் அவர்களுடைய தாத்தா ஜானியைப் பார்த்து, "இன்றைக்கும் நாம் இருவரும் மீன்பிடிக்கச் செல்வோம், மேரி இங்கே பாட்டிக்கு ஒத்தாசையாக இருக்கட்டும்" என்று சொன்னபோது, மேரி அவரிடம், "அதெல்லாம் முடியாது. நான் மீன்பிடிக்க உங்களோடு வருகிறேன். வேண்டுமானால் ஜானி இங்கே இருக்கட்டும்" என்றாள். இதைக் கேட்ட ஜானி, "நான்தான் மீன்பிடிக்கப் போவேன். மேரி இங்கே இருக்கட்டும்" என்றான். உடனே அவள் அவனைப் பார்த்து, "வாத்து" என்று இழுத்தாள். எங்கே தான் செய்த தவற்றை தன்னுடைய தாத்தாவிடம் சொல்லிவிடுவாளோ என்று பயந்து அவளையே மீன்பிடிக்கப் போகுமாறு கேட்டுக்கொண்டான்.

இப்படி ஒவ்வொரு முறையும் ஜானி தனக்குச் சாதகமாக வருவதையெல்லாம், தன்னுடைய சகோதரிக்குப் பயந்து, விட்டுக்கொடுத்துகொண்டே வந்தான்.

ஒருநாள் அவன் தான் செய்த தவற்றை தன்னுடைய பாட்டியிடம் சொல்லிவிடலாம் என்று முடிவு செய்து, அவ்வாறே செய்தான். அப்போது அவனுடைய பாட்டி அவனிடம், "நீ வாத்தைக் கொன்று புதைத்தது எனக்கு முன்னமே தெரியும், ஆனால் நீயேன் அதை இவ்வளவு நாட்கள் என்னிடம் சொல்லாமல் மறைத்துவைத்து மேரிக்கு அடிமையாக இருந்தாய்" என்று கேட்டார். அப்போதுதான் ஜானி தன்னுடைய தவற்றை உணர்ந்தான். அவன் தான் செய்த தவற்றை தன்னுடைய பாட்டியிடம் சொன்னபிறகு ஏதோ விடுதலை பெற்றவனாய் உணர்ந்தான்.

அடுத்த முறை பாட்டி மேரியை வேலை ஏவியபோது, அவள் ஜானியைப் பார்த்து, "வாத்து" என்று இழுத்தாள். அதற்கு அவன் அவளிடம், "வாத்து.... நேத்து. இன்றைக்கு அது என்னிடம் செல்லுபடியாகாது. நான் என்னுடைய தவற்றை பாட்டியிடம் அறிக்கையிட்டுவிட்டுவிடேன்" என்றான். மேரி தன்னுடைய மிரட்டல் பலிக்கவில்லையே என்று அமைதியாய் நின்றாள்.

தவறு செய்கிறவர் தன்னுடைய தவற்றை கடவுளிடம்/கடவுளின் பிரதிநிதியிடம் (குருவானவர்) அறிக்கையிடாதவரை அவர் அந்த தவற்றிற்கு அடிமைதான். என்றைக்கு அவர் தன்னுடைய தவற்றை அறிக்கையிடுகிறாரோ அன்றைக்குத் தான் அவர் முழு விடுதலை பெற்றவராகிறார் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவானைக் கொன்று புதைத்த ஏரோது மன்னன், "இயேசுதான் திருமுழுக்கு யோவான், திருமுழுக்கு யோவான் இயேசுவின் வடிவில் உயிருடன் எழுந்து வந்திருக்கிறார் என்று நினைத்துப் பயம்கொல்கிறான். அந்த பயத்தால் தினம் தினம் செத்து மடிகிறான்.

பல நேரங்களில் நாமும்கூட ஒரு தவற்றைச் செய்துவிட்டு, அதை நினைத்து தினம் தினம் வருந்துகிறோம், உள்ளம் குத்துண்டவர்களாய் வாழ்கிறோம். இந்த நேரத்தில்தான் நாம் ஒப்புறவு அருளடையாளத்தை உணர்ந்துகொள்ள வேண்டும். நாம் செய்த தவற்றை நினைத்து தினம் தினம் வருந்தாமல், அதை கடவுளிடம் அறிக்கையிட்டு விடுதலை பெறவேண்டும் என்பதற்குத் தான் திருச்சபை பாவ சங்கீர்த்தனம் என்னும் ஒப்புரவு அருசாதனத்தை வழங்கியிருக்கிறது.

எனவே நாம் தவறு செய்கிறபோது அதனை கடவுளிடம்/ கடவுளின் பிரதிநிதியான குருவானவரிடம் அறிக்கையிடுவோம். முழுமன விடுதலை பெற்ற இறையருள் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
அவன் இயேசுவைக் காண வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்!

ஓர் ஊரில் மிகவும் ஆச்சாரியமான குடும்பம் (புலால் உண்ணுதல், மது அருந்துதல் போன்றவை தடைசெய்யப்பட்ட குடும்பம்) ஒன்று இருந்தது. அதில் அண்ணன் தம்பி இருவர் இருந்தனர். இதில் இளையவன் மிகவும் சாதுவானவன்; புலால் மது எதையும் நாடாதவன். ஆனால் மூத்தவன் அப்படியில்லை. அவன் பயங்கர புலால் விரும்பி குடிகாரனும் கூட. இப்படி புலாலுக்கும் மதுவுக்கும் அடிமையான மூத்தவன், ஒருசமயம் பெற்றோர் தனக்கு கொடுத்த பணம் பத்தவில்லை என்று, இளையவனுக்கு பெற்றோர் ஆசை ஆசையாய் கொடுத்த தங்கச் சங்கிலியை எடுத்துக்கொண்டு போய், அதை வைத்துக் குடித்து காசை கறியாக்கினான்.

இதற்கிடையில் இளையவன், தன்னுடைய பெற்றோர் தனக்கு ஆசை ஆசை ஆசையாய் போட்ட தங்கச் சங்கிலி எங்கே என்று கேட்டால் அவர்களிடத்தில் என்ன பதில் சொல்வது என நினைத்து நினைத்து வேதனை அடைந்து வந்தான். ஒரு கட்டத்தில் அவன், எதற்காக நாம் இதை நினைத்து வீணாக மனவேதனை அடையவேண்டும், பேசாமல் நம் தாயிடத்திலே சொல்வது நல்லது என்று முடிவுசெய்துகொண்டு, நடந்த அனைத்தையும் அவன் தன் தாயிடத்தில் போய் சொன்னான். உடனே அவனுடைய தாய் அவனிடம், "என் அன்பு மகனே! நடந்த தவற்றை நீ ஒத்துக்கொண்டது மிகவும் மகிழ்ச்சிகரமான ஒரு விஷயம். இப்போது நீ உன் தந்தையிடத்தில் சென்று, நடந்த அனைத்தையும் அவரிடத்தில் சொல்லி, மன்னிப்புக் கேட்டுவிடு" என்றார்.

அவனுக்குப் பயம். இதையெல்லாம் போய் தந்தையிடத்தில் சொன்னால் அவர் என்ன செய்வாரோ எனப் பயந்த அவன், ஒரு பேப்பரில் நடந்த அனைத்தையும் எழுதி, அதனை அவருடைய அறையில் போட்டுவிட்டு வந்துவிட்டான். மறுநாள் காலை, தந்தை அவனைக் கூப்பிட்டார். தனக்குப் பயங்கரமாக அடிவிழப் போகிறது என்று பயந்துகொண்டே சென்ற அந்தச் சிறுவனை தந்தையானவர் கட்டியணைத்து கண்ணீர் சொரிந்து சொன்னார். "மகனே நீ உன் தவற்றை ஒத்துக்கொண்டாயே அதுபோதும்". தந்தை இவ்வாறு சொன்னதைக் கேட்டு மகனும் கண்ணீர் விட்டு அழுதான்.

இப்படி நடந்த தவற்றை ஒத்துக்கொண்டு அதற்காகக் கண்ணீர் சிந்தியவர்தான் பின்னாளில் நம் இந்திய தேசத்தின் தந்தையாக உயர்ந்த காந்தியடிகள் அவர்கள். காந்தியடிகள் தவற்றுக்காக மனம் வருந்தினார், பின்னாளில் அதுபோன்று தவறு நடவாதவாறு பார்த்துக்கொண்டு தேசத் தந்தையாக உயர்ந்தார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஒருவரைக் குறித்துப் படிக்கின்றோம். அவர் வேறு யாருமல்ல ஏரோது அரசன்தான். அவன் ஆண்டவர் இயேசு செய்துவந்த செயல்களையும் அவரைக் குறித்து மக்கள் பலவாறாக பேசுவதையும் கேள்விப்பட்டு, "யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ? இவரைப் பற்றி இவ்வாறெல்லாம் கேள்விப்படுகிறேனே! என்று குற்ற உணர்ச்சி மிகுதியால் அவரைக் காண வாய்ப்புத் தேடுகின்றான்.

ஏரோது மன்னன் தன்னுடைய சகோதரனின் மனைவியோடு வாழ்ந்து வந்ததை, திருமுழுக்கு யோவான் கண்டித்ததால், அவருடைய சாவுக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றான். இவ்வளவு பெரிய தவற்றைச் செய்தபிறகும்கூட ஏரோது மன்னன் எந்தவொரு குற்றவுணர்ச்சியும் இல்லாமல், அந்தக் குற்றத்திற்காக மனம் வருந்தாமல், குற்றத்திலிருந்து திருந்தி நடக்காமல், தொடர்ந்து அந்த குற்றத்திலே, பாவத்திலே விழுந்து கிடக்கின்றான். இவனை என்னவென்று சொல்வது?.

ஏரோது மன்னனைப் போன்று பலர் தாங்கள் வாழ்கின்ற வாழ்க்கை தவறான வாழ்க்கை என்று தெரிந்த பிறகும் கூட, அதற்காக மனம் வருந்தாமல், அதிலிருந்து வெளியே வராமல் அப்படியே சீழ்பிடித்து சாவதைப் பார்க்க முடிகின்றது. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இத்தகைய போக்கினை விரும்பவில்லை. தவறு செய்கின்ற ஒருவர் அதற்காக மனம் வருந்தி அதிலிருந்து வெளியே வருவதுதான் இயேசு விரும்புகிறார். பாவிப் பெண்ணும் சரி, சக்கேயும் சரி தாங்கள் வாழ்ந்த வாழ்க்கை பாவமான வாழ்க்கை என்று உணர்ந்ததும் அதற்காக மனம்வருந்தி, அதிலிருந்து வெளியே வர, இயேசுவை காண வந்தார்கள். புது வாழ்வினைப் பெற்றுக்கொண்டார்கள். நாமும்கூட செய்த தவற்றினை நினைத்து அப்படியே மனம் புளுங்கிக்கொண்டிருக்காமல் அதனை இறைவனிடத்தில், அவருடைய அடியார்களாகிய குருக்களிடத்தில் எடுத்துச் சொல்லி, நல்ல ஒப்புரவு அருட்சாதனம் செய்து, குற்றத்திலிருந்து வெளியே வந்து, திருந்தி நடப்பதே சிறப்பான ஒரு செயலாகும்.

ஆகவே, செய்த தவற்றினை நினைத்து குற்றவுணர்ச்சியோடு இராமல், இறைவனிடத்தில் அதனை எடுத்துச் சொல்லி, மனம்வருந்துவோம், வாழ்வுக்கான வழியைத் தேடுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!