Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                        22  செப்டம்பர் 2018  
                                                           பொதுக்காலம் 24ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
அழிவுக்குரியதாய் விதைக்கப்படுவது அழியாததாய் உயிர் பெற்று எழுகிறது.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 35-37, 42-49

சகோதரர் சகோதரிகளே, "இறந்தோர் எப்படி உயிருடன் எழுப்பப்படுவார்கள்? எத்தகைய உடலோடு வருவார்கள்?" என ஒருவர் கேட்கலாம். அறிவிலியே, நீ விதைக்கும் விதை மடிந்தாலொழிய உயிர் பெறாது. முளைத்த பயிராக நீ அதை விதைக்கவில்லை; மாறாக வெறும் கோதுமை மணியையோ மற்றெந்த விதையையோதான் விதைக்கிறாய். இறந்தோர் உயிர்த்தெழும்போதும் இவ்வாறே இருக்கும்.

அழிவுக்குரியதாய் விதைக்கப்படுவது அழியாததாய் உயிர் பெற்று எழுகிறது. மதிப்பற்றதாய் விதைக்கப்படுவது மாண்புக்குரியதாய் உயிர் பெற்று எழுகிறது. வலுவற்றதாய் விதைக்கப்படுவது வல்லமையுள்ளதாய் உயிர் பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடலாய் விதைக்கப்படுவது ஆவிக்குரிய உடலாய் உயிர் பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடல் உண்டு என்றால், ஆவிக்குரிய உடலும் உண்டு. மறைநூலில் எழுதியுள்ளபடி, முதல் மனிதராகிய ஆதாம் உயிர் பெற்று மனித இயல்புள்ளவர் ஆனார்; கடைசி ஆதாமோ உயிர் தரும் தூய ஆவியானார். தூய ஆவிக்குரியது முந்தியது அல்ல; மனித இயல்புக்குரியதே முந்தியது. தூய ஆவிக்குரியது பிந்தியது. முதல் மனிதர் களிமண்ணால் ஆனவர்; அவர் மண்ணிலிருந்து வந்தவர். இரண்டாம் மனிதரோ விண்ணிலிருந்து வந்தவர். மண்ணைச் சார்ந்த மனிதர் போலவே மண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர். விண்ணைச் சார்ந்த மனிதர் போலவே விண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர். எனவே நாம் மண்ணைச் சார்ந்தவரின் சாயலைக் கொண்டிருப்பது போல விண்ணைச் சார்ந்தவரின் சாயலையும் கொண்டிருப்போம்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - ( திபா 56: 9. 10-11. 12-13 (பல்லவி: 13b)
=================================================================================
பல்லவி: உமது முன்னிலையில் நான் நடக்க, என் அடிகள் சறுக்காமல் காத்தீர் அன்றோ!

9 நான் உம்மை நோக்கி மன்றாடும் நாளில் என் எதிரிகள் புறமுதுகிட்டு ஓடுவர்; அப்போது, கடவுள் என் பக்கம் இருக்கின்றார் என்பதை நான் உறுதியாய் அறிவேன். பல்லவி

10 கடவுளின் வாக்கை நான் புகழ்கின்றேன்; ஆண்டவரின் வாக்கை நான் புகழ்கின்றேன். 11 கடவுளையே நம்பியிருக்கின்றேன்; எதற்கும் அஞ்சேன்; மானிடர் எனக்கெதிராய் என்ன செய்ய முடியும்? பல்லவி

12 கடவுளே, நான் உமக்குச் செய்த பொருத்தனைகளை மறக்கவில்லை; உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன். 13 ஏனெனில், சாவினின்று என் உயிரை நீர் மீட்டருளினீர்; வாழ்வோரின் ஒளியில், கடவுளின் முன்னிலையில் நான் நடக்கும் பொருட்டு என் அடிகள் சறுக்காதபடி காத்தீர் அன்றோ! பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
( லூக் 8: 15 )

அல்லேலூயா, அல்லேலூயா! சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்கள் பேறுபெற்றோர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, பலன் தருகிறவர்களைக் குறிக்கும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 4-15

அக்காலத்தில் பெரும் திரளான மக்கள் எல்லா ஊர்களிலிருந்தும் இயேசுவிடம் கூடி வந்தபோது அவர் உவமை வாயிலாகக் கூறியது: "விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைத்தபோது சில விதைகள் வழியோரம் விழுந்து மிதிபட்டன; வானத்துப் பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன.

வேறு சில விதைகள் பாறைமீது விழுந்தன; அவை முளைத்தபின் ஈரமில்லாததால் கருகிப் போயின.

மற்றும் சில விதைகள் முட்செடிகளின் நடுவே விழுந்தன; கூடவே வளர்ந்த முட்செடிகள் அவற்றை நெருக்கி விட்டன.

இன்னும் சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன. அவை வளர்ந்து நூறு மடங்கு விளைச்சலைக் கொடுத்தன." இவ்வாறு சொன்னபின், "கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" என்று உரக்கக் கூறினார்.

இந்த உவமையின் பொருள் என்ன என்று அவருடைய சீடர் அவரிடம் கேட்டனர்.

அதற்கு இயேசு கூறியது: "இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. மற்றவர்களுக்கு எல்லாம் உவமைகள் வாயிலாகவே கூறப்படுகின்றன. எனவே `அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் புரிந்து கொள்வதில்லை.'

இந்த உவமையின் பொருள் இதுவே: விதை, இறைவார்த்தை. வழியோரம் விழுந்த விதைகள், அவ்வார்த்தைகளைக் கேட்பவர்களுள் சிலரைக் குறிக்கும். அவர்கள் நம்பி மீட்புப் பெறாதவாறு அலகை வந்து அவ்வார்த்தையை அவர்கள் உள்ளத்திலிருந்து எடுத்துவிடுகிறது.

பாறைமீது விழுந்த விதைகள், அவ்வார்த்தையைக் கேட்கும்போது அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்பவர்களைக் குறிக்கும். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே அவ்வார்த்தையை நம்புவார்கள்: சோதனைக் காலத்தில் நம்பிக்கையை விட்டுவிடுவார்கள்.

முட்செடிகளுக்குள் விழுந்த விதைகள், வார்த்தையைக் கேட்டும் கவலை, செல்வம், வாழ்வில் வரும் இன்பங்கள் போன்றவற்றால் நெருக்கப்பட்டு முதிர்ச்சி அடையாதிருப்பவர்களைக் குறிக்கும்.

நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்களைக் குறிக்கும்."

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

சிந்தனை

விவசாயத்தை மையப்படுத்தி உவமையாக, வார்த்தையை கேட்டு வாழ்வாக்க வேண்டும் என்ற போதனையை கூறுகின்றார்.

இன்றைக்கு விவசாய நிலங்களை காண முடிவதில்லை. எல்லாவற்றையும் பட்டா போட்டு விற்று விடுகின்ற நிலை. விவசாய வேலை கௌரவம் இல்லாத தொழில் என்றாகி விட்டது. நீராதாரங்களை எல்லாம் கரை வீடுகளாக மாற்றி தொழில் செய்வோர் நிலத்தடி நீர் குறைய செய்கின்றதோடு போதிய மழையும் இல்லாது ஆக்கி வருகின்றனர். இலவசங்களை பெருக்குவதால் விவசாயத்திற்கான மானியங்களை குறைத்து உரங்களின் விலையேற்றத்தால் விவசாய பணியே செய்திட முடியாது என்ற நிலையை உருவாக்கி வருகின்றனர். மண்ணும் இன்று இயற்கை உரங்களை காணாது போவதால், அவையும் இன்று தன்மையிழந்து போகின்றது.

இப்படிப்பட்ட சூழலில் இறைவார்த்தையை கேட்டு கடைபிடிப்போர், இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் கொடுக்கப் போகிறார்கள். நாம் இதை எப்படி புரிந்து கொள்வது.

சீராக் 07 : 15 "கடும் உழைப்பையும் உழவுத் தொழிலையும் வெறுக்காதே. இவை உன்னத இறைவனால் ஏற்படுத்தப்பட்டவை."

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்!

அது ஒரு பழைமையான பங்கு ஆலயம். அந்தப் பங்காலத்தில் ஒவ்வொரு நாள் காலையிலும் நடைபெறுகின்ற திருப்பலில் முதியவர் ஒருவர் தவறாது கலந்துகொள்வார். இப்படி ஒவ்வொரு நாள் காலைத் திருப்பலியிலும் தவறாது கலந்துகொண்டு வருகின்ற முதியவரை அங்கிருந்த பங்குத்தந்தை கூர்ந்து கவனித்துக்கொண்டு வந்தார். அந்த முதியவர் ஆலயத்திற்கு வந்து ஓர் ஓரமாக அமர்ந்து, திருப்பலி கண்டுவிட்டு அப்படியே போய்விடுவார். யாரிடத்திலும் அவ்வளவாக அவர் பேசுவது கிடையாது. பங்குத்தந்தை திருப்பலிக்கு வந்துபோகின்ற ஒருசிலரிடம் அந்தப் பெரியவரைப் பற்றிக் கேட்டபோது, அவர்கள் "அந்த முதியவர் ஓர் ஓய்வுபெற்ற ஆசிரியர் என்றும் அவருடைய மனைவி, மகன் எல்லாம் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்றும் அவருக்குச் சொந்த பந்தங்கள் யாருமே கிடையாது" என்றும் சொன்னார்கள்.

மக்கள் அந்தப் பெரியவரைப் பற்றிச் சொன்னதை அப்படியே கேட்டுக்கொண்ட பங்குத்தந்தை, அதன்பிறகு அந்தப் பெரியவரிடத்தில் அடிக்கடிப் பேசுவதும் அவருடைய இல்லத்திற்குச் சென்று உறவாடுவதுமாக இருந்தார். பெரியவரிடத்தில் பங்குத்தந்தை பேசிப் பழகிய பின்பு, மக்கள் அவரைக் குறித்துச் சொன்னது எல்லாம் உண்மைதான் என அறிந்துகொண்டார்.

இப்படியே நாட்கள் போய்க்கொண்டிருக்க திருப்பலிக்கு தவறானது வந்துகொண்டிருந்த அந்தப் பெரியவர் ஓரிரு நாட்கள் வரவே இல்லை. அந்தப் பெரியவருக்கு என்ன ஆயிற்றோ என்று பார்ப்பதற்காக பங்குதந்தை, பங்கில் இருந்த ஒருசிலரைக் கூட்டிக்கொண்டு அந்த பெரியவருடைய வீட்டிற்குப் போனார். அங்கே அவர் செத்துக்கிடந்தார். அவருடைய உடலிருந்து துர்நாற்றம் அடிக்கத் தொடங்கியது. உடனே பங்குத்தந்தை, தன்னோடு வந்தவர்களிடம், "இந்தப் பெரியவரை குரிப்பாட்டி, ஆலயத்திற்கு எடுத்துக்கொண்டு போய் திருப்பலி நிறைவேற்றி, நல்லடக்கம் செய்வது நல்லது" என்றார். அவரோடு இருந்தவர்களும் அதுதான் முறையானது என்று சொல்ல, அந்த முதியவருடைய உடல் குளிப்பாட்டப்பட்டு, ஆலயத்திற்குக் கொண்டுவரப்பட்டு, அவருக்காக் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. திருப்பலி முடிந்ததும் பங்குத்தந்தை பங்கு மக்கள் ஒருசிலரோடு சேர்ந்து அவருடைய உடலை நல்லடக்கம் செய்ய கல்லறைக்கு எடுத்துக்கொண்டு போனார்கள். கல்லறையில் அந்தப் பெரியவரின் உடலை வைத்துவிட்டு, பங்குத்தந்தை அடக்க ஜெபத்தை சொல்லும்போது ஒருவர் விம்மி விம்மி அழுவது அவருடைய காதில் விழுந்தது. அவர் யாரென்று பங்குத்தந்தை திரும்பிப் பார்த்தார். அந்த மனிதரோ இராணுவ உடையில் இருந்தார். பார்ப்பதற்கு இராணுவத்தில் மிக முக்கியமான பதவியில் இருப்பது போன்று தெரிந்தது. ஆனாலும் பங்குத் தந்தை எதுவும் பேசமால் ஜெபத்தைச் சொல்லி முடித்தார்.

அடக்க ஜெபம் எல்லாம் முடிந்தபிறகு, பங்குத்தந்தையோடு வந்தவர்கள் அப்படியே கலைந்து சென்றார்கள். அப்போதும்கூட இராணுவ உடையில் இருந்த அந்த புதிய மனிதர் அழுவதை நிறுத்தவில்லை. இது பங்குத்தந்தைக்கு வியப்பைத் தந்தது. உடனே பங்குத்தந்தை அந்த புதிய மனிதரிடத்தில் சென்று, "நீங்கள் யார்? இந்தப் பெரியவர் உங்களுக்கு என்ன உறவு?... இதற்கு முன்பாக நான் உங்களைப் பார்த்ததே இல்லையே" என்றார். அதற்கு அந்த மனிதர், "நான் இவருடைய மாணவர். இவர் எனக்கு சிறுவயதில் மறைக்கல்வி சொல்லித் தந்தார். சிறுவயதில் நான் மிகவும் சேட்டைக்காரனாக இருந்தேன். அப்போது இவர்தான் எனக்குப் புத்திமதி சொல்லி, என்னை நல்வழிப்படுத்தினார். இன்றைக்கு நான் இராணுவத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறேன். அதற்குக் காரணம் எனக்குப் பாடம் கற்றுக்கொடுத்த இந்த ஆசிரியர்தான்" என்று கண்ணீர் மல்கச் தன் கதையைச் சொன்னார். இதைக் கேட்டு பங்குத்தந்தைக்கே கண்களிலிருந்து கண்ணீர் வரத்தொடங்கியது.

ஒருவர் பேசுகின்ற அல்லது போதிக்கின்ற போதனைகள் இன்றைக்கல்ல என்றைக்காவது ஒருநாள் பலனைத் தரும் என்னும் உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.

நற்செய்தி ஆண்டவர் இயேசு விதைப்பவன் உவமையைச் சொல்லிவிட்டு, "கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" என்கின்றார். இயேசுவின் வார்த்தைகள், அவருடைய போதனைகள் வல்லமை நிறைந்தவை. இதை உணர்ந்து யாராரெல்லாம் அவருடைய போதனைக்குச் செவிமடுத்து, அதன்படி நடக்கின்றார்களோ அவர்கள் முப்பது மடங்காக, அறுபது மடங்காக, நூறு மடங்காகப் பலன்தருவார்கள். அதைவிடுத்து, இயேசுவின் போதனைக்கு செவி மடுக்காமல், ஒருவேளை செவி மடுத்தாலும் அதற்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை என்றால், நாம் ஒருபயனையும் பெற முடியாது.

ஆகவே, வல்லமையுள்ள இயேசுவின் போதனைக்கு செவிமடுத்து, அதனை வாழ்வாக்க முயற்சிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
நற்பலன் கொடுக்கும் நல்ல நிலமாவோம்.

நம்முடைய இந்தியத் திருநாட்டின் தேசத் தந்தையாகப் போற்றப்படும் காந்தியடிகள் தான் எழுதிய "சத்திய சோதனை" என்ற தன்னுடைய வாழ்க்கைக் குறிப்பில் குறிப்பிடும் நிகழ்ச்சி.

தென் ஆப்ரிக்காவில் அவர் வழக்குரைஞராகப் பணியாற்றிக்கொண்டிருந்தபோது ஒருநாள் அவர் ஒரு துறவற மடத்திற்குச் செல்ல நேர்ந்தது. அப்போது அங்கே இருந்த துறவிகளின் வாழ்க்கை முறை அவருக்கு மிகப்பெரிய வியப்பைத் தந்தது. ஏனென்றால் அவர்கள் ஒவ்வொரு நாளும் அதிகாலை இரண்டு மணிகெல்லாம் எழுந்து, வழிபாடு எல்லாவற்றையும் முடித்துவிட்டு, துறவற மடத்தில் இருந்த தோட்டத்தில் வேலை செய்யத் தொடங்கினார்கள. அவர்கள் வேலை செய்வதைக்கூட அவ்வளவு அர்ப்பணிப்போடும், நேர்த்தியோடும் செய்தார்கள்.

உணவாக அவர்கள் காய்கறிகளைத் தவிர வேறு எதையும் உட்கொள்ளவில்லை. எல்லாம் அவர்கள் உழைப்பில் வந்ததுதான். துறவு மடத்தில் அப்படி ஓர் அமைதி நிலவியது. ஒருவருக்குக்கொருவர் வாஞ்சையோடும், உள்ளன்போடும் பழகினார்கள். அவர்கள் இறைமனிதர்கள் என்பதை தங்களுடைய வாழ்க்கையால் எடுத்துரைத்தார்கள்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னால் காந்தியடிகள் இவ்வாறு எழுதுகிறார். "நான் கனவு காணும் அரசாங்கத்தில்/ இராஜ்யத்தில் மக்கள் இப்படித்தான் இருக்க வேண்டும். இப்படிதான் ஒருவர் மற்றவர்மீது வாஞ்சையோடும், உள்ளன்போடும் இருக்கவேண்டும்" என்று.

நிறைய மனிதர்கள் இறைவனிடம் நீண்ட நேரம் ஜெபிப்பார்கள்; இறைவனோடு நெருங்கிய (?) உறவில் இருப்பார்கள். ஆனால் தங்கள் அயலாரோடும், சக மனிதர்களோடும் மிகப்பெரிய பிரச்சனையில் இருப்பார்கள். ஆனால் காந்தியடிகள் குறிப்பிடும் நிகழ்வில் வரும் துறவிகள் இறையன்புக்கும், பிறரன்பும், ஏன் முன்மாதிரியான வாழ்வுக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகிறார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு விதைப்பவர் உவமையைப் பற்றிப் பேசுகின்றார். நிறைய நேரம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தைப் பகுதியாக இருந்தாலும், இவ்வுவமையை ஒவ்வொருமுறையும் வாசிக்கின்றபோதும் ஒவ்வொருவரு விதமான அர்த்தத்தைத் தருகிறது. இதுதான் இறைவார்த்தையின் தனிச் சிறப்பும்கூட. இன்றைய நாளில் நாம் படிக்கக் கேட்ட இறைவாத்தை நமக்கு  என்ன  செய்தியைத் தருகிறது என சிந்தித்துப் பார்ப்போம்.

விதைப்பவர் என்னும் இறைவன் இறைவார்த்தை என்னும் விதையை நம்முடைய உள்ளம் என்னும் நிலத்தில் விதைக்கிறார். விதைக்கப்பட்ட இறைவார்த்தைக்கு நாம் எவ்வாறு பதிலளிக்கிறோம் என்பதைத் தான் இந்த உவமையானது அழகுபட விளக்குகிறது.

இறைவனுடைய வார்த்தையைப் பொருத்தமட்டில் ஒரு குறையுமில்லை அது உயிருள்ளது; ஆற்றல் வாய்ந்தது; இருப்பக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்கு குத்தி ஊடுருவுகிறது" (எபி 4:12). ஆனால் அதைக் கேட்டு நடக்கும் மக்களாகிய நம்மிடத்தில் குறையிருக்கிறது.

சில மனிதர்கள் வழியோரத்தில் விழுந்த விதைகளைப் போன்று இறைவார்த்தையைக் கேட்டு, அதை அப்படியே காற்றில் பறக்கவிட்டு தங்களுடைய மனம்போன போக்கில் வாழத் தொடங்கிவிடுகிறார்கள். இப்படிப்பட்ட மக்களுக்கு இறைவார்த்தையால் ஒருபலனுமில்லை. அவர்கள் ஒருபோதும் பலன் தரப்போவதில்லை.

இன்னும் ஒரு மனிதர்கள் பாறை நிலத்தில் விழுந்த விதைபோன்று இறைவார்த்தையை மேம்போக்காகக் கேட்கிறார்கள். ஆனால் அவர்களுக்கும் இறைவார்த்தை ஒரு பலனையும் தருவதில்லை. காரணம் அவர்கள் இறைவார்த்தையில் வேரூன்றி தங்களுடைய வாழ்வை அமைத்துக் கொள்வதில்லை. சில காலம் இறைவார்த்தையைக் கேட்பார்கள். அதன்பிறகு அவர்கள் இறைவார்த்தையை அப்படியே போட்டுவிட்டு, தங்களுடைய மனம்போன போக்கில் வாழத் தொடங்கிவிடுகிறார்கள்.

வேறு சில மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இறைவார்த்தையும் முக்கியம், அதே நேரத்தில் உலக வாழ்க்கையும் முக்கியம். ஆற்றிலே ஒரு கால், சேற்றிலே ஒரு கால் என்று வாழ்வார்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் இரண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்வார்கள். இரண்டுக்கும் அவர்கள் ஒத்துப் போகமுடியாது. ஆண்டவர் இயேசு சொல்வார், "நீங்கள் இரு தலைவர்களுக்கு பணிவிடை செய்ய முடியாது" (மத் 6:24) என்று. உலக காரியத்திற்கும், இறைவார்த்தைகும் முக்கியத்துவம் தருபவர்கள் முழுமையான பலன்தரப் போவதில்லை.

நிறைவாக ஒரு சில மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இறைவார்த்தையைக் கேட்பார்கள், அதன்படி தங்களுடைய வாழ்வை அமைத்துக் கொள்வார்கள். அவர்களுக்கு ஜெபமும், வாழ்வும் ஒன்றாய் இருக்கும். அப்படிப்பட்ட மக்கள்தான் நல்ல நிலத்தில் விழுந்த விதைகள். நாம் அவர்களைப் போன்று வாழ்கின்றபோது நம்மால் நூறு மடங்கு பலன்தர முடியும்.

எனவே இறைவார்த்தையைக் கேட்டு, அதை அப்படியே காற்றில் பறக்கவிடும் மக்களாக அல்லாமல், இறைவார்த்தையை வாழ்வில் கடைப்பிடித்து வாழ்வோம். அதன்மூலம் நூறுமடங்கு பலன் தந்து, இறைவனின் அருளை நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
==================================================================================================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!