Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                        18  செப்டம்பர் 2018  
                                                           பொதுக்காலம் 24ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 12-14. 27-31a

சகோதரர் சகோதரிகளே, உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாய் இருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம். உடல் ஒரே உறுப்பால் ஆனது அல்ல; பல உறுப்புகளால் ஆனது. நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்.

அவ்வாறே திருச்சபையிலும் கடவுள் முதலாவது திருத்தூதர்களையும், இரண்டாவது இறைவாக்கினர்களையும், மூன்றாவது போதகர்களையும், பின்னர் வல்ல செயல் செய்வோர்களையும், அதன்பின் பிணிதீர்க்கும் அருள்கொடை பெற்றவர்கள், துணை நிற்பவர்கள், தலைமையேற்று நடத்துபவர்கள், பல்வகை பரவசப் பேச்சுப் பேசுகிறவர்கள் ஆகியோரையும் ஏற்படுத்தினார். எல்லாருமே திருத்தூதர்களா? எல்லாருமே இறைவாக்கினர்களா? எல்லாருமே போதகர்களா? எல்லாருமே வல்ல செயல் செய்பவர்களா? இல்லை. எல்லாருமே பிணி தீர்க்கும் அருள்கொடையைப் பெற்றவர்களா? எல்லாருமே பரவசப் பேச்சுப் பேசுகிறவர்களா? எல்லாருமே விளக்கம் அளிப்பவர்களா? இல்லையே! எனவே நீங்கள் மேலான அருள் கொடையையே ஆர்வமாய் நாடுங்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா 100: 1-2. 3. 4. 5 (பல்லவி: 3c)
=================================================================================
பல்லவி: ஆண்டவரின் மக்கள் நாம், அவர் மேய்க்கும் ஆடுகள்!

1 அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! 2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! பல்லவி

3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! பல்லவி

4 நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப் பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! பல்லவி

5 ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(லூக் 7: 16 )

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 11-17

அக்காலத்தில் இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென்றார். அவருடைய சீடரும் பெருந்திரளான மக்களும் அவருடன் சென்றனர். அவர் அவ்வூர் வாயிலை நெருங்கி வந்தபோது, இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி வந்தனர். தாய்க்கு அவர் ஒரே மகன்; அத்தாயோ கைம்பெண். அவ்வூரைச் சேர்ந்த பெருந்திரளான மக்களும் அவரோடு இருந்தனர். அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவு கொண்டு, "அழாதீர்" என்றார்.

அருகில் சென்று பாடையைத் தொட்டார். அதைத் தூக்கிச் சென்றவர்கள் நின்றார்கள். அப்பொழுது அவர், "இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு" என்றார்.

இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார். அனைவரும் அச்சமுற்று, "நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்" என்று சொல்லிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

அவரைப் பற்றிய இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவியது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
பரிவுள்ள இறைமகன் இயேசு

சில ஆண்டுகளுக்கு முன்பாக திரையில் வந்து, மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் "Passion of Chirist. இப்படத்தை நடிகரும், இயக்குனருமான ஆஸ்கர் விருது பெற்ற "மெல் கிப்சன் என்பவர் இயக்கி இருந்தார்.

இந்தத் திரைப்படம் ஆண்டவர் இயேசுவின் கடைசி பனிரெண்டு மணி நேரங்களை படம் பிடித்துக் காட்டுகிறது. 126 நிமிடங்கள் ஓடும் இத்திரைப்படத்தின் வசனங்கள் பெரும்பாலும் அரமேயிக் மொழியிலும், இலத்தின் மொழியிலும் இருக்கும். இயேசு கிறிஸ்து யூதர்களிடமும், உரோமையர்களிடமும் எப்படியெல்லாம் துன்பங்களையும், பாடுகளையும் அனுபவித்தார் என்று இத்திரைப்படம் எடுத்துச் சொல்லும். இப்படத்தைப் பார்க்கின்றவர்கள் இரண்டு விதமான மனநிலைக்கு உள்ளாவார்கள். ஒன்று அவர்கள் பேரமைதிக்கு உள்ளாவர்கள் அல்லது கண்ணீர் விட்டு அழுவார்கள்.

இப்படத்தைப் பார்த்துவிட்டு ஒருவர் சொன்னார், "நீங்கள் கிறிஸ்துவைப் பற்றி முழுமையாக அறிந்தவர்களோ, அறியாதவர்களோ, அவரை அன்பு செய்கிறீர்களோ இல்லையோ ஆனால் இப்படத்தைப் பார்த்த பிறகு ஒருவர் கிறிஸ்து நம்மை எந்தளவுக்கு அன்புசெய்திருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்வார்" என்று. ஆம், இயேசு கிறிஸ்து நம்மீது/ இந்த மானிட சமூதாயத்தின் மீது வைத்திருக்கும் அன்பு பெரியது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு நயீன் என்னும் ஊருக்குள் சென்றபோது அங்கே இளைஞன் ஒருவனைப் பாடையில் வைத்து சிலர் தூக்கிக்கொண்டு வருகிறார்கள். அந்த இளைஞன் அவ்வூரில் இருந்த ஒரு விதவையின் மகன், அந்த விதவைக்கு இவன்தான் ஒரே ஒரு மகன். இதையெல்லாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பார்த்துவிட்டு, அந்த இளைஞனை உயிர்ப்பிக்கின்றார். இயேசுவின் இந்த அற்புதச் செயலுக்கு அடிப்படையான காரணமாக இருந்தது இயேசு அந்த இளைஞன்மீதும் அவன் தாயின்மீதும் கொண்ட பரிவுதான். இயேசுவின் உள்ளத்தில் இருந்த பரிவென்னும் நற்குணமே அனாதையாய், ஆதரவற்றிருந்த நயீன் நகர கைம்பெண்ணின் மகனை உபிர்பிக்கச் செய்தது.

இன்றைக்கு நம்மிடத்தில் இயேசுவிடம் விளங்கிய பரிவும், அன்பும், எளியவர்கள் மட்டில் இரங்கும் இரக்ககுணமும் இருக்கிறதா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பரிவைக் குறித்துப் பேசும்போது வெ. இறையன்பு என்ற எழுத்தாளர் இவ்வாறு குறிப்பிடுவார், "பரிவு என்பது உணர்வு; பரிதாபம் என்பது உணர்ச்சி. பரிவு ஆழமானது; பரிதாபம் என்பது மேம்போக்கானது" என்று. இது முற்றிலும் உண்மை. பெரும்பாலானவர்கள் அடிபட்டோ, அல்லது வேதனையில் தவிக்கின்ற ஒருவரைப் பார்த்து பரிதாபப்பட்டுத் தான் போவார்கள். ஆனால் ஆண்டவர் இயேசு அப்படியில்லை. அவர், தன்னுடைய ஒரே மகனை இழந்து தவிக்கின்ற அந்த கைம்பெண்ணின் நிலையை உணருகிறார். அந்த உணர்வு பரிவாக மாறி இறந்துபோன இளைஞனை உயிர்பிக்கச் செய்கிறது. ஆகவே இயேசுவின் பரிவுதான் இறந்துபோன அந்த இளைஞனை உயிர்க்கச் செய்கிறது.

விவிலியமானது இறைவன்/ இயேசு எந்தளவுக்கு பரிவுள்ளவராக இருக்கிறார் என்பதை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. சீராக்கின் ஞானநூல் 5:5 "ஆண்டவரின் பரிவு எல்லையற்றது" என்று சொல்கிறது. புதிய ஏற்பாட்டில் இயேசு பரிவின் உருவாய் விளங்குகின்றார். குறிப்பாக ஆயனில்லாத ஆடுகள் போன்று இருந்தவர்கள் மீது பரிவுகொள்கிறார்; (மத் 15:32), பார்வையற்றவர்மீது பரிவு கொள்கிறார் ( மத் 20:34), சூம்பிய கையர்மீது பரிவு கொள்கிறார் (மாற் 1:41). இவ்வாறு இயேசு பரிவுக்கு மிகச் சிறந்த எடுத்துகாட்டாய் விளங்குக்கின்றார்.

இயேசுவின் வழியின் நடக்கும் நாமும் நம்மோடு வாழக்கூடியவர்கள்மீது பரிவுகொண்டு வாழ்கிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நம்மிடத்தில் அடிப்படை மனிதாபிமானம் இல்லாததுகூட நமக்கு வேதனை அளிப்பதாக இருக்கின்றது.

எட்வர்ட் பாக் என்ற அறிஞர் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார், "மனிதனால் உணவை உண்டு மட்டும் வாழ்ந்துவிட முடியாது. பணத்தை சம்பாதித்து அதன்மூலம் அதிகாரத்தையும், அந்தஸ்தையும் சேர்ப்பதால் வாழ்விற்குப் பயனில்லை. வாழ்வு இவற்றைவிட அடுத்தவருக்குச் சேவை புரிவதில் கிடக்கும் மாபெரும் மகிழ்ச்சியில் அடக்கியிருக்கிறது" என்று. ஆம், நாம் பரிவினால், அன்பு மிகுதியால் தேவையில் இருக்கின்ற ஒருவருக்குச் செய்யும் உதவி தரும் மகிழ்ச்சி அளவிட முடியாதது.

ஆகவே, நம்மோடு உடன் வாழ்வோரிடம் அன்பும், அக்கறையும், பரிவும் கொண்டு வாழ்வோம். இயேசுவைப் போன்று எல்லாருக்கும் இரங்குவோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.

ஒருவருக்கு ஒருவர் நன்மை செய்து பரிவு காட்டுங்கள் பவுல் (எபே 4:32)

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவுகொண்டு, "அழாதீர்" என்றார்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்து வாழ்ந்த மிகச் சிறந்த மறைப்பணியாளர் வில்லியம் பூத் (1829 1912) என்பவர். இவர் தொடங்கிய இரட்சணிய சேவை என்ற இயக்கமானது இன்றைக்கு பல்வேறு நாடுகளுக்குப் பரவி இவர் ஆற்றிய அன்புப் பணியை மக்களுக்குத் தொடர்ந்து செய்துகொண்டு வருகின்றது.

இப்படி இறைப்பணியோடு மக்கள் பணியையும் செய்துவந்த வில்லியம் பூத் இறந்தபோது நாடே கண்ணீர் விட்டு அழுதது. அவருடைய அடக்கச் சடங்கில் இங்கிலாந்து நாட்டு அரசி தொடங்கி, முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டு அவருக்கு மரியாதை செலுத்தினார்கள். அவர்களோடு சேர்ந்து, கிழிந்த துணியோடு ஒரு பெண்மணியும் மலர் வளையம் கொண்டு அவருக்கு மரியாதை செலுத்தினார். இதனைப் பார்த்துவிட்டு இங்கிலாந்து அரசி அந்தப் பெண்மணியிடம், "யாரம்மா நீ? நீ ஏன் இவருக்கு அஞ்சலி செலுத்துகிறாய்?" என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்மணி, "நான் என் குடும்பத்தாரால் கைவிடப்பட்ட ஓர் அனாதை. இவரோ என்னைப் போன்றவர்கள்மீது இரக்கம்கொண்டு எங்களுக்காகவே வாழ்ந்தவர். அதனால்தான் இவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்" என்றார். இதைக் கேட்ட அரசி வில்லியம் பூத்தை நினைத்துப் பெருமிதம் கொண்டார்.

வில்லியம் பூத் எல்லார்மீதும் அதிலும் குறிப்பாக ஏழை எளியவர், வறியவர்மீது உண்மையான இரக்கம் கொண்டு வாழ்ந்து வந்தார். அதனால்தான் அவர் இறப்பு சாதாரண மனிதர்களுக்கும் பேரிழப்பாக இருந்தது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசுவினுடைய பரிவுள்ளம் ஒரு சாதாரண, அதுவும் கணவனை இழந்த, கைம்பெண்ணின் மகனிடத்தில் வெளிப்படுகின்றது. இயேசுவின் பரிவுள்ளம் எப்படிப்பட்டதாக இருந்தது. அது எத்தகைய வல்ல செயலைச் செய்ய காரணமாக இருந்தது என்பதைக் குறித்து இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களோடு நயீன் என்னும் ஊருக்குச் சென்றுகொண்டிருக்கின்றார். அவர் ஊரின் நுழைவாயிலை நெருங்குகையில் இளைஞன் ஒருவனைப் பாடையில் வைத்து மக்கள் தூக்கிக் கொண்டு வருகிறார்கள். அந்த இளைஞனோ தாய்க்கு ஒரே மகன். அந்தத் தாயோ ஒரு கைம்பெண். உடனே ஆண்டவர் இயேசு பரிவுகொண்டு அந்த இளைஞனை உயிர்பெற்றழச் செய்கின்றார்.

இஸ்ரயேல் சமூகத்தில் கைம்பெண்களின் நிலை மிகக் கொடியது. அவர்கள் எல்லாருடைய இகழ்ச்சிக்கும் அதே நேரத்தில் ஒடுக்குமுறைக்கும் உள்ளாவார்கள். இத்தகைய கைம்பெண்களுக்கு ஆறுதலாக இருப்பவர்கள் அவர்களுடைய பிள்ளைகள் மட்டுமே. அவர்களுடைய பிள்ளைகள் அவர்களுக்கு இல்லாமல் போனால், அவர்களுடைய நிலை எப்படி இருக்கும் என்பதை நாம் கற்பனை செய்துபார்த்துக்கொள்ளலாம். ஆண்டவர் இயேசு நயீன் கைம்பெண்ணின் துன்பத்தைத் தன்னுடைய துன்பமாகவே பார்க்கின்றார். அதனால்தான் அவர் பரிவுகொண்டு இறந்துபோன அந்த இளைஞனை உயிர்பிக்கின்றார்.

ஆண்டவர் இயேசு செய்த இந்த அற்புதச் செயல் இறைவாக்கினர் எலியாவின் வாழ்வில் நடந்த நிகழ்வோடு ஒத்துப் போகின்றது. (1 அர 17: 8-24). இறைவாக்கினர் எலியா சாரிபாத்தைச் சார்ந்த ஒரு கைம்பெண்ணினுடைய வீட்டில் தங்கியிருக்கின்றார். அந்தப் பெண்மணிக்கு ஒரு ஒரே மகன் இருந்தான். அவன் திடிரென்று இறந்துவிட, இறைவாக்கினர் எலியா அந்தக் கைம்பெண்ணின் மகனுக்காக ஆண்டவரிடத்தில் உருக்கமாக மன்றாடுகின்றார். இறுதியில் இறந்துபோன அந்த கைம்பெண்ணின் மகன் உயிர்பெற்று எழுகின்றார். இறைவாக்கினர் எலியா எப்படி இறந்துபோன கைம்பெண்ணின் மகனை உயிர்பெற்றெழச் செய்தாரோ அதுபோன்று ஆண்டவர் இயேசுவும் நயீன் நகரக் கைம்பெண்ணின் மகனை உயிர் பெற்று எழச் செய்கின்றார். ஆனால் இயேசு கிறிஸ்து இறைவாக்கினர் எலியாவைப் போன்று இறைவனிடத்தில் மன்றாடவில்லை. மாறாக, "இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு" என்று சொல்கின்றார். அவனும் எழுந்து உட்காருகின்றான்.

ஆண்டவர் இயேசு அந்த இளைஞனுக்கு உயிர்தந்ததைத் தொடர்ந்து அங்கிருந்த மக்கள், "நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்" என்று சொல்லி கடவுளைப் போற்றி புகழத் தொடங்குகிறார்கள். ஆம், இயேசு செய்த வல்ல செயல் கடவுள் நம்மட்டில் உண்மையான பரிவுகொண்டு, நம்மைத் தேடி வந்திருக்கிறார் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது. நாமும் இயேசுவைப் போன்று பரிவுள்ளதோடு இருப்பது அவருக்கு உகந்த மக்களாக நம்மை மாறச் செய்கின்றது.

ஆகவே, நாம் இயேசுவைப் போன்று ஒருவர் மற்றவரிடம் பரிவுள்ளம் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!