Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                        13  செப்டம்பர் 2018  
                                                           பொதுக்காலம் 23ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
நீங்கள் வலுவற்ற மனச்சான்றைக் காயப்படுத்திச் சகோதரர் சகோதரிகளுக்கு எதிராகப் பாவம் செய்தால், அது கிறிஸ்துவுக்கே எதிரான பாவம் ஆகும்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 8: 1b-7,11-13

சகோதரர் சகோதரிகளே, நம் அனைவருக்கும் அறிவு உண்டு. இது நமக்குத் தெரிந்ததே. இவ்வறிவு இறுமாப்படையச் செய்யும்; ஆனால் அன்பு உறவை வளர்க்கும். தமக்கு ஏதோ அறிவு இருக்கிறது என்று நினைக்கிறவர் அறியவேண்டிய முறையில் எதையும் அறிந்துகொள்ளவில்லை. கடவுளிடம் அன்பு செலுத்துகிறவரைக் கடவுள் அறிவார்.

இப்போது சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றை உண்பதைக் குறித்துப் பார்ப்போம்: "இவ்வுலகில் சிலை என்பது ஒன்றுமேயில்லை", "கடவுள் ஒருவரன்றி வேறு தெய்வங்கள் இல்லை" என்று நமக்குத் தெரியும்.

விண்ணிலும் மண்ணிலும் தெய்வங்கள் என்று சொல்லப்படுபவை பல இருக்கலாம்; தெய்வங்கள் பலவும் ஆண்டவர்கள் பலரும் உளர். ஆனால் நமக்குக் கடவுள் ஒருவரே; அவரே நம் தந்தை. அவரிடமிருந்தே அனைத்தும் வருகின்றன; அவருக்காக நாம் இருக்கின்றோம்.

அவ்வாறே, நமக்கு ஆண்டவரும் ஒருவரே; அவரே இயேசு கிறிஸ்து. அவர் வழியாகவே அனைத்தும் வருகின்றன; அவர் மூலமாகவே நாம் வாழ்கிறோம். ஆனால் இவ்வறிவு எல்லாரிடமும் இல்லை. இதுவரை சிலைகளை வழிபட்டுப் பழக்கப்பட்ட சிலர் அவற்றிற்குப் படைக்கப்பட்டவற்றைப் படையல் பொருள் என எண்ணி உண்கிறார்கள். அவர்களின் மனச்சான்று வலுவற்றதாய் இருப்பதால் அது கறைபடுகிறது.

இவ்வாறு இந்த "அறிவு" வலுவற்றவரின் அழிவுக்குக் காரணமாகிறது. அவர் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் அல்லவா? அவருக்காகவும் கிறிஸ்து இறந்தார் அல்லவா? இவ்வாறு நீங்கள் வலுவற்ற மனச்சான்றைக் காயப்படுத்திச் சகோதரர் சகோதரிகளுக்கு எதிராகப் பாவம் செய்தால், அது கிறிஸ்துவுக்கே எதிரான பாவம் ஆகும். ஆகையால் என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நான் உண்ணும் உணவு ஒரு தடைக் கல்லாக இருக்குமானால், இறைச்சியை ஒரு நாளும் உண்ண மாட்டேன். அவர் பாவத்தில் விழ நான் காரணமாய் இருக்க மாட்டேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா 139: 1-3. 13-14. 23-24 (பல்லவி: 24b)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, என்றும் உள்ள வழியில் என்னை நடத்தியருளும்.

1 ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்! 2 நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர். 3 நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்; என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே. பல்லவி

13 என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உரு தந்தவர் நீரே! 14 அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்; உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும். பல்லவி

23 இறைவா! நீர் என் உள்ளத்தை ஆய்ந்து அறியும்; என் எண்ணங்களை அறியுமாறு என்னைச் சோதித்துப் பாரும். 24 உம்மை வருத்தும் வழியில் நான் செல்கின்றேனோ என்று பாரும்; என்றுமுள வழியில் என்னை நடத்தியருளும். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
1 யோவா 4: 12

அல்லேலூயா, அல்லேலூயா! நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 27-38


அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்குக் கூறுகிறேன்: உங்கள் பகைவரிடம் அன்பு கூருங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். உங்கள் மேலுடையை எடுத்துக் கொள்பவர் உங்கள் அங்கியையும் எடுத்துக்கொள்ளப் பார்த்தால் அவரைத் தடுக்காதீர்கள். உங்களிடம் கேட்கும் எவருக்கும் கொடுங்கள். உங்களுடைய பொருள்களை எடுத்துக் கொள்வோரிடமிருந்து அவற்றைத் திருப்பிக் கேட்காதீர்கள்.

பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். உங்களிடம் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்தினால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் தங்களிடம் அன்பு செலுத்துவோரிடம் அன்பு செலுத்துகிறார்களே. உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் அவ்வாறு செய்கிறார்களே. திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என எதிர்பார்த்து நீங்கள் கடன் கொடுத்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? ஏனெனில், முழுவதையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்னும் நோக்குடன் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.

நீங்கள் உங்கள் பகைவரிடமும் அன்பு செலுத்துங்கள்; அவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள். அப்போது உங்கள் கைம்மாறு மிகுதியாய் இருக்கும். நீங்கள் உன்னத கடவுளின் மக்களாய் இருப்பீர்கள். ஏனெனில் அவர் நன்றிகெட்டோருக்கும் பொல்லாதோருக்கும் நன்மை செய்கிறார்.

உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள். பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள்.

மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள். கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்."

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

சிந்தனை

நிறைந்த போதனைகளை தாங்கி நிற்கும் இந்த பகுதியில் கைம்மாறு கருதாமல் வாழ அழைக்கின்றது. எந்த கைம்மாறையும் எதிர்பார்த்து எந்த நல்ல செயல்களையும் செய்ய வேண்டாம் என்பது செய்தியாக உள்ளது.

வாழும் காலத்தில் இன்று எல்லாமே எதிர்பார்த்து செய்யப்படும் காரியங்களாகவே உள்ளது.

எல்லாவற்றிலும் உள்நோக்கம் இருப்பதாகவே உள்ளது. என்ன கிடைக்கும் என்ற எண்ணமே தலை தூக்கி நிற்கும் எண்ணம். இதனால் அன்பு கூட கொச்சைப்படுத்தப்படுகின்றது. இதனால் தெய்வத்தின் ஆசீர் பெற்றுக் கொள்ள தடையாகின்றது. உணர்ந்து இலவசமாகவே தந்திட்ட தெய்வத்திற்கு சாட்சியாக இலவசமாக கொடுத்து வள்ளல் ஆவோம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
"மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்"

மிண்டி நார்டர் ஷா என்றொரு பெண்மணி இருந்தார். அவருக்கு பிரிட்கர் என்றொரு மகன் இருந்தான். ஒரே மகன் என்பதால் மிண்டி, பிரிட்கரை மிகவும் அன்பு செய்து வந்தார்.

2008 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதத்தில் ஒருநாள், பதினோரு வயது நிரம்பிய பிரிட்கர் சாலையோராமாக நடந்துபோய்க்கொண்டிருந்தான். அப்போது கிரைக் மில்லர் என்ற இளைஞன் சாலையில் நின்றுகொண்டு வாணவேடிக்கைகள் வெடித்து விளையாடிகொண்டிருந்தான். அந்த வழியாக போய்வந்த பெரியவர்கள் எல்லாம் கிரைக் மில்லரிடம், "இது பொது மக்கள் அதிகமாக நடமாகக் கூடிய பகுதி. அதனால் நீ தயதுசெய்து ஓர் ஒராமாகப் போய் வாணவேடிக்கைகளைப் போடு" என்று எவ்வளவோ புத்திமதி சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் அவன் கேட்காமல் சாலையில் நின்று வாணவேடிக்கைகளைப் போட்டுக் கொண்டிருந்தான்.

அப்போது எதிர்பாராத விதமாக ஒரு வாணவேடிக்கை வெடித்துச் சிதறி, சாலையோராமாகப் போய்க்கொண்டிருந்த பிரிட்கரின் வயிற்றுப்பகுதியைக் கிழித்து, அவனது முதுகுப் பகுதி வெந்துபோகச் செய்தது. இப்படிப்பட்ட ஒரு கோர சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, பிரிட்கரை அங்கிருந்தவர்கள் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள். மருத்துவமனையில் அவனுக்குச் சிகிச்சை அளித்தபோது அவனுடைய உயிரைக் காப்பாற்ற முடிந்ததேயொழிய அவனுடைய உடலில் ஏற்பட்ட காயங்களை ஆற்றவே முடியவில்லை. இதனால் பிரிட்கர் அந்தத் தீயக் காயங்களோடு வாழவேண்டும் என்ற கட்டாயத்திற்கு உள்ளானான்

இந்நிகழ்விற்குப் பிறகு பிரிட்கரின் தாயான மிண்டிக்கு அறிமுகமான பலர், அவரிடத்தில் வந்து, பிரிட்கரின் அந்த நிலைக்குக் காரணமான கிரைக் மில்லர்மீது வழக்குப் பதிவு செய்து, அவனுக்குக் கடுமையான தண்டனை வாங்கிக் கொடுக்குமாறு வற்புறுத்தினார்கள். அதற்கு பிரிட்கரின் தாயாரோ, "நானும் என்னுடைய மகனும் கிரைக் மில்லரை என்றைக்கோ மன்னித்துவிட்டோம். இப்போது நாங்கள் செய்துகொண்டிருப்பதெல்லாம் அவனுக்காக இறைவனிடம் வேண்டுவதுதான்" என்றார். இதைக் கேட்டு அவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். இது நடந்து சில மாதங்கள் கழித்து, பிரிட்கரின் தாயார் அவனிடத்தில் கேட்டார், "என் அன்பு மகனே! உன்னுடைய இந்த நிலைக்கு காரணமான கிரைக் மில்லருக்கு தண்டனை கொடுக்கவேண்டும் என்று சொன்னால், நீ அவனுக்கு என்ன தண்டனை கொடுப்பாய்?" பிரிட்கர் அதற்கு மிகவும் பொறுமையாகச் சொன்னான், "அவ்வாறு எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தால் நான் கிரைக் மில்லரிடம், "நீ ஊர் ஊராகச் சென்று வெடிபொருட்களின் தீமையைக் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்து எனச் சொல்வேன்". மகன் இவ்வாறு சொன்னதைக் கேட்டு அவனுடைய தாய் அவனை நினைத்து பெருமிதம் கொண்டார்.

இவ்வாறு பிரிட்கரும் அவனுடைய தாயான மிண்டியும் மிகப்பெரிய குற்றவாளியான கிரைக் மில்லரை மன்னித்து ஏற்றுக்கொண்டதால், அவன் குற்ற உணர்ச்சி மிகுதியால் தற்கொலை செய்யும் எண்ணத்தையே விடுத்தான்.

மன்னிப்புக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக விளங்கும் பிரிட்கரிடமிருந்தும் அவனுடைய தாயிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியை ஏராளம் இருக்கின்றன.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மக்களுக்கும் தன் சீடர்களுக்கும் பல அறிவுரைகளைக் கூறுகின்றார். அவற்றில் ஒன்றுதான் "மன்னியுங்கள். மன்னிப்புப் பெறுவீர்கள்" என்பதாகும். ஆண்டவர் இயேசு சொல்வது போன்று, நமக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நம்மால் பிரிட்கரைப் போன்று அவருடைய தாயாரைப் போன்று மன்னிக்க முடியுமா?. சற்றுக் கடினமான காரியமாக இருந்தாலும் இயலாத காரியமல்ல. ஏனென்றால் மன்னிக்கச் சொல்லும் நம் ஆண்டவர் இயேசுவே தன்னைச் சிலுவையில் அறைந்து கொல்ல முயன்ற பகைவர்களை மன்னித்தார். ஆகையால், மன்னிப்பது கடினமான காரியமாக இருந்தாலும் மன்னித்து வாழ்கின்றபோது நாம் இயேசுவைப் போன்று இறைவனைப் போன்று ஆகின்றோம் என்பது உறுதி.

இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, "உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்" என்பார். எப்போது நாம் தந்தையைப் போன்று இரக்கமுள்ளவர்களாய் இருக்க முடியுமென்றால், நாம் நமக்கெதிராகத் தீமை செய்பவர்களை நாம் மன்னித்து வாழ்கின்றபோதுதான்.

ஓர் அறிஞர் சொல்வார், "வாழ்க்கை மகிழ்வாகி விடும், மன்னிப்புக் கேட்பதற்கும் கொடுப்பதற்கும் நாம் கற்றுக்கொண்டால்". எவ்வளவு அருமையான வார்த்தைகள் இவை. நாம் மன்னித்து வாழ்கின்றபோது நமது வாழ்க்கை மிகவும் அழகாகிவிடும்.

ஆகவே, நாம் நம் விண்ணகத் தந்தையைப் போன்று மன்னித்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!