Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                        12  செப்டம்பர் 2018  
                                                           பொதுக்காலம் 23ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
மணமானோர் மணவிலக்குக்கு தேடக்கூடாது; மணமாகாதோர் திருமணம் செய்துகொள்ள வழி தேடக்கூடாது.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 7: 25-31

சகோதரர் சகோதரிகளே, மணமாகாதவர்களைக் குறித்துப் பார்ப்போம். இவர்களைப் பற்றிய ஆண்டவரின் கட்டளை எதுவும் என்னிடம் இல்லை. எனினும், ஆண்டவரின் இரக்கத்தால் நம்பிக்கைக்குரியவனாய் இருக்கும் நான் என் கருத்தைச் சொல்கிறேன். மணமாகாதோர் தாம் அழைக்கப்பட்ட நிலையிலேயே இருந்துவிடுவது நல்லது.

இப்போதுள்ள இடர் நிலையை முன்னிட்டு இவ்வாறு இருப்பதே நல்லதென எண்ணுகிறேன். மனைவியுடன் திருமணத்தால் இணைக்கப்பட்டு இருப்பவர்கள் மணவிலக்குக்கு வழி தேடக் கூடாது; மனைவியுடன் இணைக்கப்படாதவர்கள் திருமணம் செய்து கொள்ள வழி தேடக் கூடாது. நீங்கள் திருமணம் செய்து கொண்டால் அது பாவமல்ல. இளம் பெண்கள் திருமணம் செய்து கொண்டால் அதுவும் பாவமல்ல. ஆனால் திருமணம் செய்து கொள்வோர் இவ்வுலக வாழ்வில் இன்னலுறுவர். நீங்கள் அவ்வின்னல்களுக்கு உள்ளாகாதிருக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.

அன்பர்களே, நான் சொல்வது இதுவே: இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர்போல இருக்கட்டும். அழுபவர் அழாதவர் போலவும், மகிழ்ச்சியுறுவோர் மகிழ்ச்சியற்றவர் போலவும், பொருள்களை வாங்குவோர் அவை இல்லாதவர் போலவும் இருக்கட்டும். உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவர் போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடுநாள் இராது.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 45: 10-11. 13-14. 15-16 (பல்லவி: 10a)
=================================================================================
பல்லவி: கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக் கேளாய்!

10 கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக் கேள்! உன் இனத்தாரை மறந்துவிடு; பிறந்தகம் மறந்துவிடு. 11 உனது எழிலில் நாட்டங் கொள்வார் மன்னர்; உன் தலைவர் அவரே; அவரைப் பணிந்திடு! பல்லவி

13 அந்தப்புரத்தினிலே மாண்புமிகு இளவரசி தங்கமிழைத்த உடையணிந்து தோன்றிடுவாள். 14 பல வண்ணப் பட்டுடுத்தி மன்னரிடம் அவளை அழைத்து வருவர்; கன்னித் தோழியர் புடைசூழ அவள் அடியெடுத்து வந்திடுவாள். பல்லவி

15 மன்னவரின் மாளிகைக்குள் நுழையும்போது அவர்கள் மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர். 16 உம் தந்தையரின் அரியணையில் உம் மைந்தரே வீற்றிருப்பர்; அவர்களை நீர் உலகுக்கெல்லாம் இளவரசர் ஆக்கிடுவீர். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
லூக் 6: 23ab

அல்லேலூயா, அல்லேலூயா! துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஏழைகளே நீங்கள் பேறு பெற்றோர்; செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு!

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 20-26

அக்காலத்தில் இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை: ``ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே. இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் நிறைவு பெறுவீர்கள். இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள். மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர். அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்து வந்தனர்.

ஆனால் செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள். இப்போது உண்டு கொழுத்திருப்போரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் பட்டினி கிடப்பீர்கள். இப்போது சிரித்து இன்புறுவோரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் துயருற்று அழுவீர்கள். மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் அவர்களின் மூதாதையரும் போலி இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்தார்கள்."

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள்.

ஆங்கில அகராதியை முதல் முதலாகத் தொகுத்தளித்தவர் சாமுவேல் ஜான்சன் (1709 -1984) என்பவர். இவர் ஆங்கில இலக்கியத்திற்கும் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்திருக்கிறார். எளிய குடும்பத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அடுத்தவர் மட்டில் அன்பும், அக்கறையும் கொண்டவர்.

இவர் ஒவ்வொருநாளும் தன்னுடைய வேலையை முடித்துவிட்டு இரவு நேரத்தில் வீட்டுக்கு வரும்போது பாதையோரம் இருக்கின்ற பிச்சைக்காரர்களுக்கு காசு கொடுக்காமல் போகவே மாட்டார். அதோடு மட்டுமல்லாமல் தங்க இடமில்லாத வறியவர்களையும், எளியவர்களையும், பிச்சைக்காரர்களையும் அழைத்துவந்து, அவர்களுக்கு தன்னுடைய வீட்டில் தங்குவதற்கு இடமளிப்பார். இதனால் சில நேரங்களில் பிச்சைகாரார்களால் அவருடைய வீடு நிரம்பி வழியும்.

இதைப் பார்த்த சாமுவேல் ஜான்சனின் பணக்கார நண்பர் ஒருவர் அவரிடம், "எதற்காக நீங்கள் உங்களுடைய வீட்டில் பிச்சைக்காரார்களுக்கும், அனாதைகளுக்கும் இடமளித்து வருகிறீர்கள்" என்று கேட்டார். அதற்கு அவர், "ஒருவேளை நான் அவர்களுக்கு வீட்டில் தங்குவதற்கு இடமளிக்கவில்லை என்றால், அவர்கள் தெருக்களிலும், பாதையோரங்களிலும்தான் படுக்க நேரிடும். மேலும் என்னைத் தவிர வேறு யாரும் இவர்களுக்கு தங்குவதற்கு இடமளிப்பதாகத் தெரியவில்லை. அதனால்தான் நான் அவர்களுக்கு இடமளிக்கிறேன்" என்றார்.

சாமுவேல் ஜான்சனின் பேச்சைக் கேட்ட அந்த பணக்கார நண்பர், "எவ்வளவு வசதிகள் இருந்தும் நான் அவர்களுக்கு இடமளிக்கவில்லையே" என்று வருந்தினார்.

ஏழைகள் எளியவர்கள் எப்போதும் இரக்கமும், அடுத்தவர் மட்டில் அக்கறையும் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்றாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு பேறுபெற்றவர்கள் யாராரென்றும் கடவுளின் கோபத்திற்கு ஆளாகுபவர்கள் யாராரென்றும் பட்டியலிடுகிறார். அப்படி இயேசு பேறுபெற்றவர்கள் என்று பட்டியலிட்டவர்களில் முதலாவதாக வருபவர்கள் ஏழைகளே. எதற்காக இயேசு ஏழைகளைப் பேறுபெற்றவர்கள்? என்று அழைக்கிறார் என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

அதற்கு முன்னதாக இப்பகுதியை நாம் ஒத்தமை நற்செய்தியான மத்தேயு நற்செய்தியோடு ஒப்பிட்டுச் சிந்தித்துப் பார்ப்போமேயானால் நமக்கு ஒருசில உண்மைகள் புலப்படும்.

மத்தேயு நற்செய்தியில் இப்பகுதி மலைப்பொழிவு என அழைக்கப்படுகிறது. ஆனால் இங்கோ இப்பகுதி சமவெளிப்பொழிவு என அழைக்கப்படுகிறது. மத்தேயு நற்செய்தியில் இயேசு கூறுபவை மூன்றாம் நபரிடம் பேசுவது போன்று இருக்கும் (ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில், விண்ணரசு அவர்களுக்கு உரியது). ஆனால் இங்கோ இயேசு நேரடியாகப் பேசுவது போன்று இருக்கின்றது (ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றவர்கள்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே). மத்தேயு நற்செய்தியாளர் ஆன்மீக ஏழ்மையையும் (Spiritual Poverty), லூக்கா நற்செய்தியாளர் பொருளாதார ஏழ்மையையும் (Economical Poverty)பற்றிப் பேசுவதாக விவிலிய அறிஞர்கள் சொல்வார்கள். எப்படி இருந்தாலும் ஏழைகள் எப்போதும் இறைவனின் சிறப்புக் கவனத்திற்கு உரியவர்கள் என்பதை நாம் நமது மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது இயேசு ஏழைகளை எதற்காகப் பேறுபெற்றவர்கள் என்று அழைக்கிறார் என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம். பொதுவாகவே ஏழைகள் இரக்கமுள்ளவர்களாக, அடுத்தவர் மட்டில் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் கடவுள் மட்டில் ஆழ்ந்த நம்பிக்கையும், பற்றும் பற்றும் கொண்டிருப்பார்கள். இதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். மேலே சொல்லப்பட்ட நிகழ்வும் ஒரு சான்று. இன்னொரு நிகழ்வை உங்களோடு பகிர்ந்துகொள்ள விளைகிறேன்.

பட்டிமன்றப் பேச்சாளர் திண்டுக்கல் ஐ. லியோனி ஒருமுறை பட்டிமன்றத்தில் பேசுவதற்காக வாகனத்தில் போய்க்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வாகனம் விபத்துக்குள்ளானது. வாகனத்தில் இருந்த ஓட்டுநரும், லியோனியும் பலத்த காயத்தோடு அடிப்பட்டுக் கிடக்கிறார்கள். அப்போது அந்த வழியாக எத்தனையோ மனிதர்கள் கடந்து போனார்கள். ஆனால் யாருமே அவர்களைக் கண்டுகொள்ளவில்லை.

காட்டு வேலைக்குச் சென்ற ஒரு சாதாரண மூதாட்டிதான் அவர்கள்மீது இரக்கம்கொண்டு அவர்களுக்கு தன்னிடம் இருந்த கேழ்வரகுக் கஞ்சியைக் கொடுத்தார். பின்னர் அவர்கள் தெளிவு பெற்றதும் பக்கத்தில் இருந்த வீடுகளில் இருந்தவர்களை அழைத்துவந்து, அவர்களுடைய உதவியுடன் லியோனியையும், ஓட்டுநரையும் மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்து ஆவணசெய்தார். ஏறக்குறைய இயேசு கூறும் நல்ல சமாரியன் உவமை போன்றுதான் இருக்கிறது. இருந்தாலும் மற்றவர்களுக்கு இல்லாத அக்கறை ஏழைகளுக்கு இருக்கிறது என்பதை இதிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம்.

எனவேதான் இயேசு அவர்களை பேறுபெற்றவர்கள் என்று பாராட்டுகிறார். ஆகவே நாமும் ஏழைகளைப் போன்று அடுத்தவர் மட்டில் அன்பும், அக்கறையும் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் விண்ணக மகிமையைப் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு!

ஒரு சமயம் ஒரு முற்றும் துறந்த முனிவரும் கடவுளை நம்பாக ஒரு செல்வந்தரும் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது செல்வந்தர், "ஐயனே! கடவுளுக்காக நீங்கள் உங்கள் வாழ்க்கையையே துறந்துவிட்டீர்களே!. எவ்வளவு பெரிய ஆள் நீங்கள்?" என்றார். அதற்கு அந்தத் துறவி, "ஆமாம்! நான் கடவுளுக்காக என் வாழ்க்கையையே துறந்து துறவியாகிவிட்டேன். ஆனால் நீரோ என்னைவிடப் பெரிய துறவியாகி விட்டீர்!" என்றார்.

அதைக் கேட்ட செல்வந்தர் திடுக்கிட்டார். "உங்களைவிட நான் பெரிய துறவியா? எப்படி?" என்று குழப்பத்துடன் கேட்டார் செல்வந்தார். "ஐயா! நானாவது கடவுளுக்காக என் வாழ்க்கையைத்தான் துறந்தேன். நீரோ உம் சுகபோக வாழ்க்கைக்காக எல்லாம் வல்ல கடவுளையே துறந்துவிட்டீர். அப்படியானால் என்னைவிட நீர்தானே பெரிய துறவி" என்றார் அந்த முற்றும் துறந்த துறவி. அதைக் கேட்ட நாத்திக செல்வந்தரால் எதுவும் பேச முடியவில்லை.

தம்மைப் படைத்த கடவுளையே மறப்பவர்கள் செல்வந்தர்கள். அப்படிப்பட்டவர்களால் எப்படி இறைவனின் அரசை உரித்தாக்கிக் கொள்ளமுடியும்?.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசுவினுடைய சமவெளிப் பொழிவைக் குறித்து வாசிக்கின்றோம். இது மத்தேயு நற்செய்தியில் வரக்கூடிய மலைப்பொழிவை விடவும் சற்று வித்தியாசமானது. மத்தேயு நற்செய்தியில் வரக்கூடிய மழைப்பொழிவு மூன்றாம் நபருக்குச் சொல்லப்படுவது போல் இருக்கும். ஆனால் லூக்கா நற்செய்தியில் இடம்பெறுகின்ற சமவெளிப் பொழிவோ இயேசு நேரடியாகப் பேசுவது போன்று இருக்கும். இப்போது ஆண்டவர் இயேசு சொல்லக்கூடிய "செல்வர்களே ஐயோ உங்களுக்குக் கேடு என்பதை எடுத்துச் சிந்தித்துப் பார்ப்போம்.

ஆண்டவர் இயேசு செல்வர்களுக்கு எதிராக இப்படியோர் கண்டனக் குரலைப் பதிவு செய்கின்றார் என்றால் அதில் அர்த்தமில்லாமல். இயேசு வாழ்ந்து வந்த யூத சமூகத்தில் ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு அதிகமாகவே இருந்தது. பணக்காரர்கள் மிகவும் வசதியோடு வாழ்ந்து வந்தார்கள். இதற்கு நேர் எதிராக ஏழைகள் மிகவும் வறிய நிலையில் வாழ்ந்துவந்தார்கள். சமூகத்தில் இப்படியோர் ஏற்றத்தாழ்வு இருந்தபோதும் அதனைப் போக்க பணக்காரர்கள் எந்தவொரு முயற்சியும் செய்யாதத்தைக் கண்டுதான் இயேசு அவர்களுக்கு எதிராகத் தன்னுடைய கண்டனக் குரலைப் பதிவு செய்கின்றார்.

இயேசு செல்வந்தர்களை இப்படிக் கடினமாகப் பேசுவதற்கு, அவர்கள் செய்த முதல் தவறு, அவர்கள் கடவுளை மறந்து வாழ்ந்து வந்ததுதான். நம்மிடத்தில்தான் எல்லா வசதி வாய்ப்பும் இருக்கின்றதே. அப்புறம் எதற்கு நாம் கடவுளை நினைத்துப் பார்க்கவேண்டும் என்று செல்வந்தர்கள் இருந்தார்கள். எடுத்துக்காட்டாக இயேசு சொல்லக்கூடிய அறிவற்ற செல்வந்தன் உவமையில் வரக்கூடிய செல்வந்தனோ, தன்னுடைய நிலம் நன்றாக விளைந்திருக்கின்றதே, அதற்காக இறைவனுக்கு செலுத்தவேண்டுமே என்றெல்லாம் நினைக்கவில்லை. மாறாகத் தன்னுடைய களஞ்சியத்தை இடித்துப் பெரிதாக்கவேண்டும் என்றுதான் நினைத்தான். அதனாலேயே அவன் அழிவைச் சந்தித்தான். அனைத்தையும் கொடுத்து, ஆசிர்வதித்த ஆண்டவனை மறந்து வாழ்பவனுக்கு அகிலத்தில் இடமேது?.

பணக்காரர்கள் செய்த இரண்டாவது தவறு, அவர்கள் சக மனிதர்களை மறந்து வாழ்ந்து வந்ததாகும். இறைவன்தான் தங்களுக்கு ஏராளமாகத் தந்திருக்கின்றாரே, அதில் சிறிதளவாவது ஏழைகளுக்குத் தரவேண்டும் என்று அவர்கள் சிறிதளவேனும் நினைக்கவில்லை. அதனாலும் அவர்கள் இயேசுவின் கடுஞ்சொல்லுக்கு உள்ளாகின்றார்கள். இயேசு சொல்லக்கூடிய பணக்காரன் ஏழை இலாசர் உவமையில் வரும் பணக்காரன் அனுதினமும் அறுசுவை உணவை உண்டு, ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து வந்தான். ஆனால், அவன் தன் வாசல்படியில் நோயுற்றுக் கிடந்த ஏழை இலாசரைக் கண்டுகொள்ளவில்லை. அதனால்தான் அவன் இறந்தபிறகு நரகத்திற்கும் வாழ்நாள் எல்லாம் துன்பத்தை அனுபவித்த இலாசர் விண்ணகத்திற்கும் செல்கின்றார். சக மனிதனை அன்பு செய்யாமல் சர்வேசுரனை எப்படி அடைய முடியும்?.

பணக்காரர்கள் செய்துவந்த மூன்றாவது தவறு அவர்கள் உண்மை, நீதி, இரக்கம், அன்பு போன்ற பண்புகளை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதுதான். இவர்கள் ஆண்டவனையும் அடுத்தவரையும் மதித்திருந்தால்தான்தானே அன்புக்கும் இன்ன பிறவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள். இவர்கள்தான் எப்போதும் பணம் பணம் என்று வாழ்ந்தவர்கள் ஆயிற்றே!. அப்புறம் எப்படி ஆண்டவரையோ அடுத்தவரையோ நினைத்துப் பார்த்திருப்பார்கள்?.

இயேசு செல்வர்களுக்கு எதிரானவர் அல்ல, செல்வத்தினால் வரும் தீமைக்குத்தான் எதிராக இருக்கின்றார். செல்வர்கள் தங்களிடம் இருப்பதை பிறரோடு பகிர்ந்து வாழ்கின்றபோது அவர்களும் ஆண்டவரின் அரசில் இடம்பிடிப்பார்கள் என்பது உறுதி.

ஆகவே, இறைவன் நமக்குக் கொடுத்திருக்கும் ஆசிர்வாதங்களை, செல்வத்தை பிறரோடு பகிர்ந்து வாழ்வோம், தன்னலத்தை விடுத்து பொதுநலத்தை நாடுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!