Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                        11  செப்டம்பர் 2018  
                                                           பொதுக்காலம் 23ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் மற்றவருக்கு எதிராக வழக்குத் தொடரலாமா? அதுவும் நம்பிக்கை கொள்ளாத மக்கள் முன்னிலையிலா?

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 1-11

சகோதரர் சகோதரிகளே, உங்களுள் ஒருவருக்கு மற்றொருவரோடு வழக்கு இருப்பின், தீர்ப்புக்காக இறைமக்களிடத்தில் போகாமல் நம்பிக்கை கொள்ளாதோரிடம் செல்லத் துணிவதேன்? இறைமக்கள்தான் உலகுக்குத் தீர்ப்பு அளிப்பவர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? உலகுக்கே தீர்ப்பளிக்கப் போகும் நீங்கள் உங்களிடையே உள்ள சின்னஞ் சிறிய வழக்குகளைத் தீர்த்துக்கொள்ளத் தகுதியற்றவர்களாகி விட்டீர்களா? வானதூதர்களுக்கும் தீர்ப்பு அளிப்பது நாம்தான் என்பதும் உங்களுக்குத் தெரியாதா? அப்படியிருக்க அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் வழக்குகளை நீங்களே தீர்த்துக்கொள்ள முடியாதா? அத்தகைய வழக்குகளைத் தீர்க்கச் சபையினரால் புறக்கணிக்கப்பட்டோரை நடுவர்களாக அமர்த்துவது எப்படி? நீங்கள் வெட்கமடையவே இதைச் சொல்கிறேன்.

சகோதரர் சகோதரிகளிடையே உள்ள வழக்குகளைத் தீர்க்க உங்களுள் ஞானமுள்ளவர் ஒருவர்கூட இல்லையா? சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் மற்றவருக்கு எதிராக வழக்குத் தொடரலாமா? அதுவும் நம்பிக்கை கொள்ளாத மக்கள் முன்னிலையிலா? நீங்கள் ஒருவர்மீது மற்றவர் வழக்குத் தொடருவதே உங்களுக்கு ஒரு தோல்வியாகும். உங்களுக்கு இழைக்கப்பட்ட தீங்கை நீங்கள் பொறுத்துக்கொள்ளக் கூடாதா? உங்கள் உடைமைகளை வஞ்சித்துப் பறிக்கும்போது அதை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிடக் கூடாதா? ஆனால் நீங்களே ஒருவருக்கொருவர் தீங்கிழைக்கிறீர்கள்; வஞ்சித்துப் பறிக்கிறீர்கள்; அதுவும் சகோதரர் சகோதரிகளுக்கே இப்படிச் செய்கிறீர்கள். தீங்கிழைப்போருக்கு இறையாட்சியில் உரிமையில்லை என்று உங்களுக்குத் தெரியாதா? ஏமாந்து போகாதீர்கள்; பரத்தைமையில் ஈடுபடுவோர், சிலைகளை வழிபடுவோர், விபசாரம் செய்வோர், தகாத பாலுறவு கொள்வோர், ஒருபால் புணர்ச்சியில் ஈடுபடுவோர், திருடர், பேராசையுடையோர், குடிவெறியர், பழிதூற்றுவோர், கொள்ளை அடிப்போர் ஆகியோர் இறையாட்சியை உரிமையாக்கிக் கொள்வதில்லை. உங்களுள் சிலர் இவ்வாறுதான் இருந்தீர்கள். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயராலும் நம் கடவுளின் ஆவியாலும் கழுவப்பட்டுத் தூயவரானீர்கள்; கடவுளுக்கு ஏற்புடையவராகவும் இருக்கிறீர்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 149: 1-2. 3-4. 5-6a, 9b (பல்லவி: 4a)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள். 2 இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக! பல்லவி

3 நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக! 4 ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ் நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றியளித்து மேன்மைப்படுத்துவார். பல்லவி

5 அவருடைய அன்பர் மேன்மையடைந்து களிகூர்வராக! மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவராக! 6a அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்; 9b இத்தகைய மேன்மை ஆண்டவர்தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
( யோவா 15: 16 )

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார். பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 12-19

அந்நாள்களில் இயேசு வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார். விடிந்ததும் அவர் தம் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார்.

அவர்கள் முறையே பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், அவருடைய சகோதரர் அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதி எனப்பட்ட சீமோன், யாக்கோபின் மகன் யூதா, துரோகியாக மாறிய யூதாசு இஸ்காரியோத்து என்பவர்களே.

இயேசு அவர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள். அவர் சொல்வதைக் கேட்கவும் தங்கள் பிணிகள் நீங்கி நலமடையவும் அவர்கள் வந்திருந்தார்கள். தீய ஆவிகளால் தொல்லைக்கு உள்ளானவர்கள் குணமானார்கள். அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டு அனைவர் பிணியையும் போக்கியதால், அங்குத் திரண்டிருந்த மக்கள் யாவரும் அவரைத் தொட முயன்றனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.


சிந்தனை

தீர்மானங்களுக்கு முன்னர் நாம் செய்யும் செயல் என்ன? அமைதிப்படுத்திக் கொண்டு, கடவுளோடு உரையாடி, தீர்மானத்தின் தீர்வு கூறித்து தெளிவு பெறுவது என்பது ஏற்புடையச் செயல் என்பதை இறைவாக்கு வழியாக இறைமகன் தெளிவுபடுத்துகின்றார்.

அப்படியே தெரிவு செய்யப்பட்ட போதிலும் வெற்றியில்லையே, அவருக்கு தோல்வித் தானே. அவர் தெரிவு செய்தவர்கள் தானே உதறி விட்டார்கள். ஒடிப் போனார்கள். காட்டியும் கொடுத்தார்கள். உண்மைத் தான்.

தீhமானங்களை தெய்வீக ஒளியில் எடுக்க வேண்டும் என்பது தான் முக்கியமே ஒழிய, கண்டிப்பாக வெற்றித் தான் உறுதி என்று சொல்லிட முடியாது. இறைமகன் தேர்வில் தோல்வி என்று நாம் சொன்னாலும், நம்முடைய பார்வையிலே அது தோல்வியாக இருந்தாலும், அது தான் மீட்பின் திட்டமாக இருந்தது. அறைத்திட்டம் நிறைவேறியது என்பது தான் வெற்றி. நாமும் அவரது திட்டத்தை நிறைவேற்ற, நம்முடைய தீர்மானத்தை அவரது துணையோடு, அவரோடு கொண்ட உரையாடலில் ஏற்றுக் கொள்வது சிறப்புடையது.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
ஜெபிக்கும் இயேசு!

ஏராளமான புனிதர்களுடைய வாழ்க்கை வரலாற்றை வியக்கத்தக்க வகையில் எழுதியர் ஹென்றி கியோன் (Henri Gheon) என்பவர். அவர் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த புனித ஜெர்மைன் காசின் என்பவருடைய வாழ்க்கையில் நடந்ததாகச் சொல்கின்ற நிகழ்வு இது.

ஜெர்மைன் காசினின் குடும்பமோ சாதாரண ஏழைக் குடும்பம். அவருடைய பெற்றோரால் அவரைப் படிக்கவைக்க முடியாத நிலை. இதனால் அவர் ஆடு மேய்த்து குடும்பத்திற்கு ஒத்தாசை புரிந்து வந்தார். சில சமயங்களில் வீட்டில் உணவுகூட சமைத்திருக்க மாட்டார்கள் (பணம் இருந்தால்தானே உணவு சமைக்க முடியும்) அதனால் அவர் சாப்பிடாமலே ஆடு மேய்க்கக் கிளம்பிவிடுவார். போகும் இடத்தில் பசியெடுக்கும், தாகமெடுக்கும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக கடுங்குளிர் அவரை வாட்டி வதைக்கும். அப்போதெல்லாம் அவர் முழந்தாள் படியிட்டு ஜெபிக்கத் தொடங்கிவிடுவார், "இயேசுவே! இங்கு கடுமையாகக் குளிர் அடிக்கின்றது, பசியும் தாகமும் எடுக்கின்றது. இங்கு நிலவுகின்ற குளிரும் என்னுடைய பசியும் தாகமும் நீங்கும்படி செய்யும்".

இவ்வாறு அவர் முழந்தாள் படியிட்டு ஜெபித்த பின்பு அங்கிருக்கும் குளிர் மறைந்து, இதமான சூழல் ஏற்படும். அவருக்கு இருந்த பசியும் தாகமும் காணாமல் போய்விடும். இவ்வாறு அவர் வலிமை பெற்று, தன்னுடைய வேலையைத் தொடந்து செய்வார்.

புனித ஜெர்மைன் காசினின் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வு ஜெபம் சாதாரண ஒரு சடங்கு கிடையாது. ஒரு வலுக்குறைந்தவர்களை வலுவுள்ளவர்களாக மாற்றி, அவர்களுடைய வாழ்விற்கு புது வழியைக் காட்டும் என்பதை அழகாக எடுத்துச் சொல்கின்றது.

நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு வேண்டுவதற்காக ஒரு மலைக்குச் சென்று, அங்கு இரவெல்லாம் இறைவனிடத்தில் தன்னுடைய நேரத்தைச் செலவழித்தார் என்று வாசிக்கின்றோம். இயேசு கிறிஸ்து சாதாரணமானவர் அல்ல, அவர் இறைமகன், தமதிருத்துவத்தின் இரண்டாம் ஆள். அப்படியிருந்தபோதும் அவர் இறைவனிடத்தில் வேண்டுவதற்கு தன்னுடைய நேரத்தைச் செலவழித்தார் என்பது, ஜெபம் அவருடைய வாழ்வில் எந்தளவுக்கு இன்றியமையாததாக இருந்திருக்கின்றது என்பதை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றது. ஆண்டவர் இயேசு தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏன் முக்கியமான நிகழ்வின் முன்பாகவும் ஜெபித்தார் என்று நற்செய்தி நூல் நமக்குச் சான்று பகர்கின்றது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கிறிஸ்து இரவெல்லாம் இறைவனிடத்தில் ஜெபித்துவிட்டு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்கின்றார். திருத்தூதர்கள்தான் தனக்குப் பின்பு, தான் உருவாக்க இருக்கும் திருச்சபையை கட்டி வழிநடத்தப் போகிறவர்கள். ஆகவே அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கவேண்டும்? யாராரைத் தேர்ந்தெடுத்தால் திருச்சபை வளம்பெறும் என்பதை எல்லாம் உணர்ந்து, அவர் இறைவனிடத்தில் வேண்டுகின்றார். அவர் வேண்டியவாறே பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்கின்றார். இயேசுவைப் போன்று நமது வாழ்விலும் நாம் எந்தவொரு செயலைத் தொடங்கினாலும் அதனை ஜெபம் செய்து தொடங்கினால் அதில் நிரம்ப ஆசிர்வாதம் உண்டு என்பது உறுதி.

இன்றைய நற்செய்தியில் வாசகத்தில் நாம் வாசிக்கக்கூடிய இன்னொரு செய்தி, ஆண்டவர் இயேசு ஜெபம் செய்து சீடர்களைத் தேர்ந்தெடுத்த பின்பு மக்கள் மத்தியில் சென்று, அவர்களிடத்தில் பணி செய்தார் என்பதாகும். நம்முடைய ஜெபம் நம்மை பணிவாழ்விற்கு உந்தித் தள்ளவேண்டும் என்பதை இது நமக்கு ஆழமாக எடுத்துச் சொல்கின்றது. ஆண்டவர் இயேசு மலையில் இருந்து ஜெபித்து, அப்படியே அங்கு இருந்துவிடவில்லை. அவர் மலையிலிருந்து இறங்கி, சமவெளிக்குப் பகுதிக்கு அதாவது மக்கள் இருக்கக்கூடிய பகுதிக்கு வந்து, அவர்களுக்குக் மத்தியில் பணி செய்கின்றார்; பலருடைய பிணியைக் குணமாக்கி, நலம் தருகின்றார்.

இயேசுவின் இச்செயலை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். கிறிஸ்தவ வாழ்வு அல்லது மனித வாழ்வு என்பது ஜெபத்திற்குள்ளோ அல்லது சாத்திர சம்பிரதாயங்களுக்கு உள்ளோ முடங்கிவிடக்கூடிய ஒன்று அல்ல, அது மக்கள் பணிக்கு நம்மை உந்தித் தள்ளவேண்டும். மக்கள் பனியில்லாத வழிபாடும் ஜெபமும் ஒன்றுமில்லை என்றுதான் சொல்லவேண்டும். அதனால் தூய யாக்கோபு தன்னுடைய திருமுகத்தில் கூறுகின்றார், "செயல்வடிவம் பெறாத எந்த நம்பிக்கையும் தன்னிலே உயிரற்றது" என்று. ஆம், இதுதான் உண்மை. நாம் செய்யும் ஜெபம் நம்மை செயலுக்கு உந்தித் தள்ளவேண்டும். அதேநேரத்தில் நாம் செயல்படுவதற்கான வலுவினை ஜெபம் தரக்கூடியதாய் இருக்கவேண்டும். அப்படிப்பட்ட வாழ்க்கையே இயேசு விரும்பும் வாழ்வு.

ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், அவரைப் போன்று ஜெப மற்றும் செயல்வீரர்களாக மாறுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
இறைவேண்டல் (ஜெபம்) வாழ்விற்கான ஆற்றல்.

ஒரு பிரபலமான பங்கில் இருந்த கிறிஸ்தவர் ஒருவர் கோவிலுக்குப் போகாமல், ஜெபம் செய்யாமல் வாழ்ந்து வந்தார். அவர், கடவுளைத் தான் நேரடியாக வணங்கிவிட்டுச் சென்றுவிடலாமே, எதற்காக கோவில், குரு எல்லாம் என்று, தான் சந்தித்த மக்களிடம் சொல்லிவந்தார்.

இச்செய்தி பங்குத் தந்தையின் காதுகளை எட்டியது. உடனே பங்குத்தந்தை அந்த கிறிஸ்தவருக்கு ஜெபம், கோவில் பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் அவருடைய இல்லத்திற்கு வந்தார். இல்லத்திற்கு வந்ததும் குருவானவர் அவரிடம், "நாம் இருவரும் கொஞ்ச நேரம் வெளியே போய்விட்டு வருவோமா? என்று கேட்டார். பங்குத்தந்தையின் வருகையை சிறிதும் எதிர்பாராத அந்த கிறிஸ்தவர் குருவானவர் ஏதாவது கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது என்ற குழப்பத்தில் இருந்தார். ஆனால் குருவானவர் அதைப் பற்றி எதுவும் பேசவில்லை.

அவர்கள் இருவரும் நீண்ட தூரம் நடந்து சென்றார்கள். அப்போது அவர்கள் போகிற வழியில் பெண்ணொருத்தி பெரிய அடுப்பில் தன்னுடைய வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினர்களுக்கு உணவு சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது குருவானவர் அந்த கிறிஸ்தவரை அடுப்பிற்க்குப் பக்கத்தில் அழைத்துச் சென்றார். பின்னர் கொழுந்துவிட்டு எரிகின்ற அந்த அடுப்பிலிருந்து ஒரு துண்டு கங்கினை எடுத்து ஓரமாக வைத்தார். சிறுது நேரம் குருவும், அந்த கிறிஸ்தவரையும் கங்கினையே உற்று நோக்கினார்கள். அந்த கங்கானது சிறுது நேரத்தில் சாம்பலாகிப் போனது.

பின்னர் குருவானவர் அந்த கிறிஸ்தவரை அழைத்து, தனியே எடுத்து வைக்கப்பட்ட ஒரு துண்டுக் கங்கு விரைவிலே சாம்பலானது. ஆனால் அடுப்பிலே இருக்கும் கங்கு இன்னும் அணையாமல் நெருப்பாகவே இருக்கிறது. இது போன்றுதான் நீயும் ஜெபம் வேண்டாம், கோவில் வேண்டாம் என்று தனித்து வாழ்ந்தாய் என்றால் விரைவிலே நீ அழிந்து போய்விடுவாய். மாறாக நெருப்பு என்னும் ஜெபத்தோடு நீ இணைத்திருந்தாய் என்றால் நீண்ட நாட்கள் அணையாது வாழ்வாய். ஆதலால் ஜெபத்தில் இணைந்திர" என்றார்.

இதைக் கேட்டதும் அந்த கிறிஸ்தவர் தன்னுடைய தவற்றை உணர்ந்துகொண்டு அன்றிலிருந்து கோவிலுக்கு வழக்கமாக வந்து, ஜெபத்தில் கடவுளோடு இணைந்திருந்தார். ஜெபம்தான் நம்முடைய வாழ்விற்கான உற்று, ஆற்றல், எல்லாம் என்பதை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தனியாக ஒரு மலைக்குச் சென்று, அங்கே இரவெல்லாம் இறைவனிடம் ஜெபித்தார் என்று வாசிக்கின்றோம். இயேசு இறைமகன், மூவொரு கடவுளில் இரண்டாமாளாகிய சுதன். அப்படியிருந்தும் அவர் தந்தைக் கடவுளிடம் ஜெபித்தார் என்றால், நாமெல்லாம் எந்தளவுக்குச் ஜெபிக்கவேண்டும் என்பதை இங்கே நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

இயேசு தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஜெபித்தார். தன்னுடைய பணியைத் தொடங்கும்போது ஜெபித்தார்; சீடர்களைத் தேர்ந்தெடுக்கும்போது ஜெபித்தார்; கெத்சமணி தோட்டத்தில் ஜெபித்தார்; தன்னுடைய இறுதி மூச்சை விடும்போது ஜெபித்தார். இவ்வாறு அவர் தந்தைக் கடவுளோடு ஜெபத்தில் இணைத்திருந்தார். அந்த ஜெபம்தான் அவருக்கு எல்லாவிதமான ஆசிர்வதத்தையும் தந்தது. ஆகவே, நாம் ஒவ்வொருவரும் இறைவனிடம் ஜெபிக்க வேண்டும். அதுவும் நம்பிக்கையோடு ஜெபிக்கவேண்டும். அப்போதுதான் நாம் இறைவனிடமிருந்து எல்லா ஆசிர்வாதங்களையும் பெறமுடியும்.

ஆபிரகாம் லிங்கன் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார், "நான் என்னுடைய வாழ்விற்கான எல்லா ஆற்றலையும் ஜெபத்திலிருந்துதான் பெறுகிறேன்" என்று. இது உண்மை. ஜெபம் செய்யாமல், நம்மால் ஒன்றும் செய்யமுடியாது.

நற்செய்தி வாசகம் உணர்த்தும் இன்னொரு உண்மை. உண்மையான இயேசுவின் சீடன் என்பவன் ஜெபத்தில் மட்டும் தன்னுடைய காலத்தைக் கழிக்கக் கூடாது. மாறாக அவன் செயல்வீரனாக இருக்கவேண்டும். இயேசு மலையிலிருந்து ஜெபித்து, சீடர்களைத் தேர்ந்துகொண்ட பிறகு, அவர் அப்படியே மலையில் நிற்கவில்லை. மாறாக சமவெளிக்கு வருகிறார். சமவெளி என்பது மக்கள் இருக்கும் பகுதி. மக்கள் மத்தியில் தன்னுடைய பணியை ஆற்ற முன்வருகிறார்.

இயேசுவின் சீடர்களாக இருக்கும் நாம் ஜெபிக்க வேண்டும். அதே நேரத்தில் செயல்வீரர்களாக இருக்கவேண்டும். ஜெபம் மட்டும் இருந்து செயல் இல்லையென்றால் நமது வாழ்வு அடித்தளமற்றதாகிவிடும். அதேநேரத்தில் செயல் இருந்து ஜெபம் இல்லையென்றால் அது உயிரற்றதாகிவிடும்.

ஆகவே இயேசுவின் சீடர்களாக வாழ அழைக்கப்பட்டிருக்கும் நாம் இயேசுவைப் போன்று ஜெபத்திலும், செயலிலும் இணைத்திருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!