Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                       10  செப்டம்பர் 2018  
                                                           பொதுக்காலம் 23ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-8

சகோதரர் சகோதரிகளே, உங்களிடையே பரத்தைமை உண்டெனக் கேள்விப்படுகிறேன். ஒருவன் தன் தந்தையின் மறு மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானாம். இத்தகைய பரத்தைமை பிற இனத்தாரிடையே கூடக் காணப்படவில்லை. இதை அறிந்தும் நீங்கள் இறுமாப்புடன் இருப்பது எப்படி? துயரமடைந்திருக்க வேண்டாமா? இப்படிச் செய்தவனை உங்கள் நடுவிலிருந்து தள்ளிவைத்திருக்க வேண்டாமா? நான் உடலால் உங்களோடு இல்லாவிடினும் உள்ளத்தால் உங்களோடு இருக்கிறேன். நான் உங்களோடு இருப்பதாக எண்ணி அச்செயலைச் செய்தவனுக்கு ஏற்கெனவே தீர்ப்பு அளித்துவிட்டேன்.

நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால் நீங்கள் கூடிவரும்போது நானும் உள்ளத்தால் உங்களோடு இருப்பேன். அப்போது நம் ஆண்டவர் இயேசுவின் வல்லமையோடு, அத்தகையவனைச் சாத்தானிடம் ஒப்புவிக்க வேண்டும். அவனது உடல் அழிவுற்றாலும் ஆண்டவரின் நாளில் அவன் மீட்படைவதற்காக இவ்வாறு செய்வோம். நீங்கள் பெருமை பாராட்டுவது நல்லதல்ல. சிறிதளவு புளிப்பு மாவு, பிசைந்த மாவு முழுவதையும் புளிக்க வைக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா? எனவே புளிப்புச் சத்துள்ள பழைய மாவைத் தூக்கி எறிந்துவிடுங்கள். அப்போது நீங்கள் புதிதாய்ப் பிசைந்த மாவாயிருப்பீர்கள்.

உண்மையில் நீங்கள் புளிப்பற்ற மாவாய்த்தான் இருக்கிறீர்கள். ஏனெனில் நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் பழைய புளிப்பு மாவைத் தவிர்க்க வேண்டும். தீமை, பரத்தைமை போன்ற புளிப்பு மாவோடு அல்ல, மாறாக நேர்மை, உண்மை போன்ற புளிப்பற்ற அப்பத்தோடு பாஸ்காவைக் கொண்டாடுவோமாக.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் -  திபா 5: 4-5a. 5b-6. 11 (பல்லவி: 8a)
=================================================================================
பல்லவி: ஆண்டவரே, உமது நீதியின் பாதையில் என்னை நடத்தும்.

4 நீர் பொல்லாங்கைப் பார்த்து மகிழும் இறைவன் இல்லை; உமது முன்னிலையில் தீமைக்கு இடமில்லை. 5a ஆணவமிக்கோர் உமது கண்முன் நிற்க மாட்டார். பல்லவி

5b தீங்கிழைக்கும் அனைவரையும் நீர் வெறுக்கின்றீர். 6 பொய் பேசுவோரை நீர் அழித்திடுவீர்; கொலை வெறியரையும் வஞ்சகரையும் அருவருக்கின்றீர். பல்லவி

11 ஆனால், உம்மிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் மகிழ்வர்; அவர்கள் எந்நாளும் களித்து ஆர்ப்பரிப்பர்; நீர் அவர்களைப் பாதுகாப்பீர்; உமது பெயரில் பற்றுடையோர் உம்மில் அக்களிப்பர். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
( யோவா 10: 27 )

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஓய்வு நாளில் இயேசு குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டேயிருந்தனர்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 6-11

ஓய்வு நாளில் இயேசு தொழுகைக்கூடத்திற்குள் சென்று கற்பித்தார். அங்கே வலக்கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசுவிடம் குற்றம் காணும் நோக்குடன், ஓய்வு நாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தனர்.

இயேசு அவர்களுடைய எண்ணங்களைஅறிந்து, கை சூம்பியவரை நோக்கி, "எழுந்து நடுவே நில்லும்!" என்றார். அவர் எழுந்து நின்றார். இயேசு அவர்களை நோக்கி, "உங்களிடம் ஒன்று கேட்கிறேன்: ஓய்வு நாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?" என்று கேட்டார்.

பிறகு அவர் சுற்றிலும் திரும்பி அவர்கள் யாவரையும் பார்த்துவிட்டு, "உமது கையை நீட்டும்!" என்று அவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்தார். அவருடைய கை நலமடைந்தது. அவர்களோ கோபவெறிகொண்டு இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவரோடு ஒருவர் கலந்து பேசினர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

சிந்தனை

குற்றம் காணும் நோக்கு நம்முடையதா? இதனால் விளைவது என்ன?

நாம் எல்லாருமே குற்றம் இழைப்பவர்கள் தானே. நம்முடைய குற்றங்களை மறைக்கவா நாம் பிறரது குற்றங்களை பார்க்கின்றோம்.

குற்றம் பார்த்தால் சுற்றம் போய் விடும். உறவு பாதிக்கத்தானே செய்யும்.

குற்றம் காணும் போது நன்மையும் விளையாது போகின்றது. இதனால் அறச்சினம் கொண்ட கிறிஸ்து கடிந்து கொண்டதை பார்க்கின்றோம்.

நல்லது செய்ய மனம் இருந்தால் போதாதா, நேரம் காலம் எல்லாமா அவசியம். நேரம் காலம் எல்லாம் பார்த்தால் நன்மை விளையுமா?

குற்றம் பார்த்து குற்றம் பார்த்து உறவினை உதறுவதை விடுத்து, நல்ல மனம் கொண்டு, நன்மை ஒன்றையே கருத்தாக கொண்டு வாழ்வதுமே மனிதத்தைச் சிறக்கச் செய்யும்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
மரபுகளுக்கு அல்ல, மனிதர்களுக்கு முக்கியத்தும் கொடுக்கும் இயேசு!

ஓர் ஊரில் முதியவர் ஒருவர் இருந்தார். அவர் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்டார். இந்நிலையில் ஊருக்கு வெளியே இருக்கும் புத்தமடத்திற்குச் சென்றால், அங்கு இருக்கும் துறவிகள் ஏதாவது தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் அங்கு சென்றார்.

முதியவர் புத்தமடத்திற்குச் சென்ற நேரத்தில் மடத்தின் தலைவர் தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அவருடைய தோற்றமோ மிகவும் எளிமையாக இருந்தது. முதியவர் அவரிடத்தில் சென்று தன்னுடைய கஷ்டத்தை எல்லாம் எடுத்துச் சொல்லி, கதறி அழுதார். அவருடைய அழுகையைப் பார்த்து மனமுருகிப் போன மடத்தின் தலைவர், "ஐயா பெரியவரே! உமக்குக் கொடுப்பதற்கு என்று என்னிடத்தில் பெரிதாக எதுவும் இல்லை. ஆனாலும் என்னால் முடிந்ததைத் தருகிறேன்" என்று சொல்லிவிட்டுப் போனவர், மரத்தாலான ஒரு சிறிய புத்தர் சிலையை எடுத்துக்கொண்டு வந்து, அதனை அவரிடத்தில் கொடுத்து, "இதைக் கொண்டுபோய் சந்தையில் விற்றால் உங்களுக்கு ஓரளவு பணம் கிடைக்கும். அதைக் கொண்டு நீங்கள் உங்கள் பசியாற்றிக்கொள்ளுங்கள்" என்று சொன்னார். பெரியவரும் அதை நன்றிப் பெருக்கோடு வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

நடந்ததை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த மடத்தில் இருந்த மற்ற துறவிகள், மடத்தின் தலைவரிடத்தில் வந்து, "யாரோ ஒருவருக்கு புத்த சிலையை எடுத்துக் கொடுத்திருக்கிறீர்களே? இந்த மடத்தின் தலைவராக இருந்துகொண்டு புத்த சிலையை எடுத்துக் கொடுத்திருப்பது எவ்வளவு பெரிய பாவம்?" என்று அவரிடத்தில் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டார்கள். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த மடத்தின் தலைவர், "முன்பொரு சமயம் டாங்கா என்ற துறவி, பயணி ஒருவர் குளிரால் நடுங்குகிறார் என்பதற்காக, அவருடைய குளிரைப் போக்குவதற்காக மடத்தில் இருந்த புத்த சிலையை எடுத்து எரித்ததைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?... நான் (உயிரற்ற) புத்த சிலையை எரிக்கவில்லை. அதை உயிருள்ள ஒரு மனிதனுடைய பசியைப் போக்குவதற்குத்தானே கொடுத்தேன்" என்றார்.

அதுவரைக்கும் சண்டை பிடிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் இருந்தவர்கள் அவர் இவ்வாறு சொன்னதைக் கேட்டு அமைதியானார்கள்.

உயிருள்ள ஒரு மனிதனுக்காக, உயிரற்ற புத்த சிலையை எடுத்துகொடுத்த அந்த புத்த மடத்தின் தலைவரது செயல் மரபுகளை விடவும் மனிதர்கள் மேலானவர்கள் என்பதை நமக்கு அழகாக எடுத்துக் கூறுகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தொழுகைக் கூடத்திற்குச் சென்று, அங்கு போதிக்கத் தொடங்குகின்றார். அவ்வாறு அவர் போதிக்கின்றபோது அங்கே கைசூம்பிய மனிதர் ஒருவர் இருக்கின்றார். அவருடைய நிலையைக் கண்டு, இயேசு அவருக்கு நலமாளிக்கின்றார். ஆண்டவர் இயேசு அந்த கைசூம்பிய மனிதரைக் குணப்படுத்திய நாளோ ஓய்வுநாள். இதனால் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்கள், ஓய்வுநாளில் இயேசு எப்படி குணப்படுத்தலாம் என்று முணுமுணுக்கிறார்கள். ஆண்டவர் இயேசுவோ, ஓய்வுநாள் நல்லது செய்யப் படைக்கப்பட்டிருக்கின்றது என்று சொல்லி அவர்களின் வாயை அடைக்கின்றார்.

ஆண்டவர் இயேசு செய்த இந்த வல்ல செயல் நமக்கு ஒருசில உண்மைகளை மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது. ஒன்று இயேசுவின் பரிவுள்ளம். விவிலிய அறிஞராக ஜெரோம், நற்செய்தியில் வரும் இந்த கைசூம்பிய மனிதர், செங்கல் சூளையில் வேலைசெய்தவர் என்றும் அவர் வேலை பார்க்கும் அவருடைய கை பாதிக்கப்பட்டது என்றும் அதனால் அவருடைய குடும்பம் மிகப் பெரிய நெருக்கடிச் சந்தித்து வந்தது என்றும் கூறுவார். இயேசு அந்த மனிதருடைய நிலையை அறிந்து, அவருக்கு நலம் தந்து அவரை முந்தைய நிலைக்குக் கொண்டு வருகின்றார். இவ்வாறு அவரைக் குணப்படுத்தியதன் மூலமாக அவருடைய குடும்பத்திற்குக் நல்ல வழி காட்டுகின்றார்.

இந்த நிகழ்வு நமக்குச் சொல்லும் செய்தி, நல்லது செய்பவர்களுக்கு நாம் உதவிக்கரம் நீட்டாவிட்டால் கூட பரவாயில்லை. அவர்களுக்கு உபத்திரம் செய்யாது இருப்பது நல்லது என்பதாகும். நற்செய்தியில் கைசூம்பிய மனிதர் பல ஆண்டுகளாக அவ்வாறு இருப்பதைக் கண்டபோதும் பரிசேயக்கூட்டம் அவருக்கு ஒரு நன்மையையும் செய்யவில்லை. எப்போது இயேசு அவரைக் குணப்படுத்தினாரோ அப்போதே அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கத் தொடங்குகின்றார்கள். அவர்கள் நன்மை செய்ய முன்வரவில்லை, ஆனால் நன்மை செய்பவர்களுக்கு முட்டுக்கட்டை போடத் தயாராக இருந்தார்கள். நாம் பரிசேயர்களைப் போன்று இல்லாமல், இயேசுவைப் போன்று இருப்பது நல்லது.

ஆகவே, நாம் இயேசுவைப் போன்று துன்புறுவோர்மீது அன்பும் அக்கறையும் கரிசனையும் கொண்டு வாழ்வோம். அடுத்தவருடைய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடாதிருப்போம். எப்போதும் இறைவழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
நன்மை செய்வதில் மனம் தளராதிருப்போம்.

வட கேரளாவில் உள்ள ஓர் அழகான ஊர்தான் பொன்னானி. இதில் அபூபக்கர் என்ற ஒரு மனிதர் வாழ்ந்து வருகிறார். இவர் ABSS (Aboobakkar Self service) என்ற ஓர் இயக்கத்தை நிறுவி, அதன்வழியாக ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்துகொண்டு வருகிறார்.

பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவருக்கு எந்த நோய்க்கு எந்த மாத்திரை தரவேண்டும், எப்படிப்பட்ட சிகிச்சை அளிக்கவேண்டும் என்பது எல்லாம் அத்துப்பிடி. தனது ஊருக்கு அருகாமையில் இருக்கும் மருத்துவமனைகளுக்குச் சென்று, அங்கே தேவைக்கு அதிகமாக இருக்கும் மருந்து மாத்திரைகளை எல்லாம் பெற்றுக்கொண்டு, அதை தன்னை நாடி வருகின்ற மக்களுக்கு இலவசமாகக் கொடுத்து வருகிறார். இவரிடமிருந்து மருந்து மாத்திரைகளைப் பெற ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்ப்பட்ட மக்கள் வந்துபோகிறார்கள். அதில் பெரும்பாலனவர்கள் ஏழைகள்.

இவர் கொடுத்த மருந்து மாத்திரைகளால் குணம் பெற்ற மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு மனிதர் ஆசிக் என்பவர். இவர் பரம ஏழை. சக்கரை நோயினால் பாதிக்கப்பட்ட இவருக்கு மருந்து, மாத்திரைகளை வாங்குவதற்குப் போதிய பணமில்லை. யாரோ ஒருவர் சொன்னதன் பேரில் ஆசிக், அபூபக்கர் நடந்திவரும் மருந்தகத்திற்கு வந்தார். சில மாதங்களிலே அவர் அபூபக்கர் கொடுத்த மருந்து மாத்திரைகளால் குணம் பெற்றார்.

இது போன்று ஏராளமான மக்கள் அபூபக்கர் கொடுக்கின்ற மருந்து மாத்திரைகளால் குணம் பெறுகிறார்கள். சில நேரங்களில் மக்கள் கேட்கின்ற மருந்து, மாத்திரைகள் தன்னிடம் இல்லாதபோது இவரே பணம்கொடுத்து, அதனை அவர்களுக்கு வாங்கித் தந்து உதவுகிறார். அதற்காக அவருக்கு ஆகும் செலவு அதிகம்.

அவர் ஆற்றிவரும் இந்த தன்னலமில்லாத, இலவச சேவைக்கு வெகுமதி ஏதாவது கிடைக்கிறதா? என்று அவரிடம் கேட்டால், அவர், "மக்கள் என்னிடம் மருந்து மாத்திரைகளை வாங்குகின்றபோது உதிர்க்கின்ற கள்ளமில்லா புன்னகைதான் எனக்கு வெகுமதி. மேலும் அவர்கள் என்னை தங்களுடைய குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த மகிழ்ச்சி போதும் என்கிறார்.

எந்த ஒரு பிரதிபலனையும் பாராத ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்துவரும் அபூபக்கர், எப்போதும் நாம் நன்மைகளைச் செய்யும் மக்களாக வாழவேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்குகின்றார்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு ஓய்வுநாளின்போது தொழுகைக் கூடத்திற்குச் செல்கிறார். அங்கே கை சூம்பிய ஒருவரைப் பார்க்கிறார். அது ஓய்வுநாள் என்றெல்லாம் பாராது; மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள் ஆகியோரின் எதிர்ப்பையும் கண்டுகொள்ளாது கைசூம்பிய அம்மனிதரைக் குணப்படுத்துகிறார். இதன்மூலம் நன்மை செய்வதற்கு நேரம் காலம் எதுவும் தேவையில்லை என்பதை நிரூபிக்கிறார். ஆனால் பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் இயேசு ஓய்வுநாள் சட்டத்தை மீறியதற்காக அவரை எப்படி ஒழிக்கலாம் என்று திட்டம் தீட்டுகிறார்கள்.

இந்த நிகழ்வு நமக்கு ஒருசில உண்மைகளைத் தெளிவாக விளக்குகின்றது. முதலாவதாக மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்களின் பிற்போக்குத் தன்மை. அவர்கள் எந்தளவுக்குப் பிற்போக்குத்தனமானவர்களாக இருந்தார்கள் என்றால் ஓய்வுநாளில் எந்த வேலையும் செய்யக்கூடாது என்று நினைத்தார்கள், அதையே மக்களுக்கும் கற்பித்து வந்தார்கள். சட்டங்களை நுணுக்கமாகக் கடைப்பிடிக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு ஓய்வுநாளில் நன்மை செய்ய முன்வந்த இயேசுவுக்கும் முட்டுக்கட்டை போட்டார்கள். ஆனால் இயேசுவோ தனக்கு வந்த எதிர்ப்புகளை எல்லாம் கண்டுகொள்ளாது நன்மையானதைச் செய்வதில் உறுதியாக இருந்தார்.

இந்த நிகழ்வு நமக்கு உணர்த்தும் இரண்டாவது உண்மை நாம் எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் நன்மைசெய்வதில் மட்டும் உறுதியாக இருக்கவேண்டும் என்பதாகும். இயேசு நன்மை செய்வதற்கு நேரமும் காலமும் பார்க்கவில்லை. தனக்கு வந்த எதிர்ப்புகளைக் கூடப் பார்க்கவில்லை. மாறாக எப்போதும் நன்மை செய்வதில் உறுதியாக இருந்தார் (திப 10:38).

இயேசுவின் வழியில் நடக்கும் நாம் எத்தகைய மனநிலையோடு இருக்கிறோம் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இந்த நேரத்தில்தான் நன்மை செய்ய வேண்டும், அந்த நேரத்தில்தான அதைச் செய்யவேண்டும் என்று சகுனம் பார்த்துக் கொண்டிருக்கிறோமா? அல்லது இயேசுவைப் போன்று நன்மையான காரியங்களைச் செய்பவர்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

"பெருமைக்கும் ஏனைய சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல் என்பான் அய்யன் வள்ளுவன். ஆம், நம்முடைய வாழும், தாழ்வும் நாம் செய்யும் செயல்களைப் பொறுத்ததே என்பதே இதன் பொருளாகும். ஆகவே நல்லது செய்ய முன்வருவோம். நல்லது செய்வோருக்கு முட்டுக்கட்டையாக இல்லாதிருப்போம். இயேசுவின் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!