Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                     09  செப்டம்பர் 2018  
                                                   பொதுக்காலம் 23ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
காது கேளாதோரின் செவிகள் கேட்கும். வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 35: 4-7a

உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, "திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்; இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்; அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்."

அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளா தோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, கால் ஊனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்; பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்; வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும். கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்; தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் பதிலுரைப் பாடல் (திபா 146: 7. 8-9a. 9bc-10 (பல்லவி: 1)
=================================================================================

பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு. அல்லது: அல்லேலூயா._

7 ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். பல்லவி

8 ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். 9ய ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். பல்லவி

9bஉ அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். 10 சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
ஏழைகளாய் இருப்பவர்களை, கடவுள் தேர்ந்துகொள்ளவில்லையா?

திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-5

என் சகோதரர் சகோதரிகளே, மாட்சிமிக்க நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினிடம் நம்பிக்கை கொண்டுள்ள நீங்கள் ஆள்பார்த்துச் செயல்படாதீர்கள்.

பொன் மோதிரமும் பளபளப்பான ஆடையும் அணிந்த ஒருவரும் அழுக்குக் கந்தை அணிந்த ஏழை ஒருவரும் உங்கள் தொழுகைக்கூடத்தினுள் வருகிறார்கள் என வைத்துக்கொள்வோம்.

அப்பொழுது நீங்கள் பளபளப்பான ஆடை அணிந்தவர்மீது தனிக் கவனம் செலுத்தி அவரைப் பார்த்து, "தயவுசெய்து இங்கே அமருங்கள்" என்று சொல்கிறீர்கள்.

ஏழையிடமோ, "அங்கே போய் நில்" என்றோ அல்லது "என் கால்பக்கம் தரையில் உட்கார்" என்றோ சொல்கிறீர்கள்.

இவ்வாறு உங்களுக்குள்ளே வேறுபாடு காட்டி, தீய எண்ணத்தோடு மதிப்பிடுகிறீர்கள் அல்லவா?

என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, நான் சொல்வதைக் கேளுங்கள்: உலகின் பார்வையில் ஏழைகளாய் இருப்பவர்களை, நம்பிக்கையில் செல்வர்களாகவும் தம்மீது அன்பு செலுத்துபவருக்கு வாக்களிக்கப்பட்ட அரசை உரிமைப்பேறாகப் பெறுபவர்களாகவும் கடவுள் தேர்ந்துகொள்ளவில்லையா?

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(மத் 4: 23 )

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
காது கேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 31-37

அக்காலத்தில் இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார்.

காது கேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கை வைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர்.

இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்; பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி "எப்பத்தா' அதாவது "திறக்கப்படு' என்றார்.

உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார்.

இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள்.

அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய், "இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காது கேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!" என்று பேசிக்கொண்டார்கள்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
எல்லாருக்கும் இரங்கும் இறைவன்


ஒரு கற்பனைக் கதை. ஒருநாள் இரவு கலிலேயாக் கடலில் மூன்று மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது இயேசு கடல்மீது நடந்து சென்று, அவர்களுடைய படகருகே நின்றார். இயேசுதான் கடல்மீது நடந்து வருகின்றார் என்பதை அறிந்த அந்த மூன்று மீனவர்களும் இயேசுவைத் தங்களுடைய படகில் ஏற்றிக்கொண்டார்கள். அவர்கள் மீன்பிடித்துக்கொண்டே போகும்போது அவர்கள் இயேசுவோடு பலவற்றைக் குறித்து பேசிக்கொண்டே போனார்கள்.

ஓரிடத்தில் அந்த மூன்று பேரில் ஒருவர், "இயேசுவே! நான் நீண்ட நாட்களாக முதுகு வலியினால் அவதிப்படுகின்றேன். என்னுடைய முதுகு வலியைக் குணப்படுத்த உம்மால் முடியுமா?" என்று கேட்டார். அதற்கு இயேசு அவருடைய முதுகினைத் தொட, உடனே அவருடைய முதுகுவலி நீங்கியது. அவர் மிகவும் மகிழ்ந்துபோய் இயேசுவை வாயாரப் போற்றிப் புகழ்ந்தார்.

சிறுதுநேரம் கழித்து இரண்டாமவர் இயேசுவிடம், "இயேசுவே! நான் நீண்ட நாட்களாக பார்வைக் கோளாறினால் பெரிதும் அவதிப்படுகின்றேன். என்னுடைய பார்வைக் கோளாறை மாற்றி, எனக்கு நலம் தரமுடியுமா?" என்று கேட்டார். உடனே இயேசு அவருடைய கண்களைத் தொட, அவர் அந்த இரவினால் எல்லாவற்றையும் தெளிவாய் பார்க்கத் தொடங்கினார். அவர்கள் கடலில் மெதுவாகப் போய்கொண்டிருந்தார்கள்.

மூன்றாம் ஆள் மட்டும் எதுவும் பேசாமல் அமைதியாகவே வந்தார். அவருக்கு ஒரு கால் ஊனமாக இருந்தது. இரண்டு பேருக்கு நலம் தந்துவிட்டு, ஒருத்தருக்கு மட்டும் ஒன்றுமே செய்யாமல் விட்டுவிட்டால் நல்லதல்ல என்று நினைத்த இயேசு, மூன்றாவது மனிதனைத் தொட்டு குணப்படுத்த நினைத்தார். ஆனால் இயேசு அந்த மனிதரை நோக்கித் தம் கையை நீட்டி, குணப்படுத்த முயன்றபோது அந்த மனிதர், "ஐயா இயேசுவே! தயவுசெய்து என்னைத் தொட்டுக் குணப்படுத்திவிடாதீர்கள். ஏனென்றால், நான் உடல் ஊனமுற்றவருக்கான பென்சன் தொகையைப் பெற்று வருகின்றேன். ஒருவேளை, நீங்கள் என்னைத் தொட்டுக் குணப்படுத்திவிட்டால் என்னுடைய கால் சரியாகிவிடும். அப்புறம் எனக்குக் கிடைக்கக்கூடிய பென்சன் தொகையும் கிடைக்காமல் போய்விடும்" என்றார். இயேசு அந்த மனிதருக்கு என்ன பதிலளிப்பது என்று தெரியாமல் குழம்பிப் போனார்.

இயேசு எல்லார்மீதும் இரங்கி, அவர்களைத் தொட்டு நலம்தர இருக்கின்றார். நாம்தான் அதற்குத் தயாராக இல்லை என்பதை இக்கதையானது வேதனையோடு பதிவு செய்கின்றது. பொதுக்காலத்தின் இருபத்து மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக் கேட்ட வாசகங்கள் "எல்லாருக்கும் இரங்கும் இறைவன் என்னும் சிந்தனையைத் தருகின்றன. நாம் அதைக் குறித்து சற்று ஆழமாக சிந்தித்துப் பார்ப்போம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தீர், சீதோன், தெக்கப்பொலி வழியாக கலிலேயக் கடலை வந்தடைகின்றார். அப்போது காதுகேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்து, அவரைக் குணப்படுத்துமாறு கேட்கின்றார்கள். இயேசு அவரைத் தனியே அழைத்துக்கொண்டு போய் குணப்படுத்துகின்றார். இயேசு செய்த இந்தப் புதுமை நமக்கு ஒருசில செய்திகளைச் சொல்கின்றன. அவை என்னவென்று இப்போது பார்ப்போம்.

முதலாவதாக, இயேசு கடந்து வந்த தீர், சீதோன், தெகக்ப்பொலி போன்ற இடங்கள் எல்லாம் யூதரல்லாத புறவினத்தார் வாழ்ந்து வந்த பகுதிகளாகும். அப்படியானால், இயேசு குணப்படுத்திய காதுகேளாதவரும், திக்கிப் பேசுபவருமானவர் ஒரு புறவினத்தார் என்பதுதான் உண்மை. இயேசு யூதருக்குத்தான் குணம்தருவேன், புறவினத்தாருக்கு குணம் தரமாட்டேன் என்று இருக்கவில்லை. அவர் எல்லாரையும் குணப்படுத்தினார், எல்லார்மீதும் இரங்கி, அவர்களுடைய துன்பத்தை இன்பமாக மாற்றினார்; அழுகையை ஆனந்தமாக மாற்றினார். இவ்வாறு அவர் எல்லாருக்கும் இரங்கும் இறைவனாக விளங்குகின்றார்.

தூய யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம், "மாட்சிமிக்க நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டுள்ள நீங்கள் ஆள்பார்த்து செயல்படாதீர்கள்" என்று. ஆம், இயேசு எல்லாரையும் தன்னுடைய உயிரெனப் பார்த்து, சமமாக நடத்தினார். ஆனால், அவருடைய வழியில் நடக்கும் நாம்தான் உயர்ந்தவர், தாழ்ந்தவர், பணக்காரர், ஏழை, படிக்காதவன், படிக்காதவன் என்று பேதம் பார்த்து, மனிதர்களைப் பிரிக்கின்றோம். இது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. இன்னும் ஒருசில நேரங்கில் நாம் மனிதர்களுடைய வெளி அடையாளங்களைப் பார்த்து, அவர்களை மதிப்பிடுகின்றோம். ஆடம்பரமாக உடை அணிந்திருந்தால் அவர்களை ஒருவிதமாகவும், சாதாரணமாக உடை அணிதிருந்தால் அவர்களை ஒருவிதமாகவும் நடத்துகின்றோம். இதுவும் கிறிஸ்துவின் கொள்கைக்கு எதிரானது என்பதுதான் நிதர்சனம்.

ஒருசமயம் அமெரிக்கத் துணை அதிபர் தாமஸ் ஜெபர்சன் (Thomas Jefferson) அவர்கள் பணியின் பொருட்டு, பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்துவிட்டு இரவு தங்குவதற்காக பால்டிமோர் என்னும் இடத்தில் இருந்த ஒரு விடுதியில் தங்குவதற்கு இடம் கேட்டார். அவர் அன்று முழுவதும் அங்கும் இங்கும் அலைந்து திரிந்ததால், அவருடைய ஆடைகள் எல்லாம் அழுக்குப் படிந்துபோய் இருந்தன. இதனால் விடுதியில் இருந்த விடுதிப் பொறுப்பாளர் அவரிடம் தங்குவதற்கு இடம் இல்லை என்று சொல்லி அனுப்பிவிட்டார். ஜெபர்சனும் அவரிடம் எதுவும் பேசாமல், அந்த விடுதிக்கு சற்றுத் தொலைவில் இருந்த ஒரு விடுதிக்குச் சென்று, தங்கினார்.

சிறுது நேரம் கழித்துத்தான் விடுதிப் பொறுப்பாளருக்குத் தெரிந்தது சற்று முன்பு அங்கு வந்தது அமெரிக்கத் துணை அதிபர் தாமஸ் ஜெபர்சன் என்று. உடனே அவர் தன்னுடைய உதவியாளரை ஜெபர்சனிடம் அனுப்பி, "விடுதியில் எந்தவிதமான அறையும் எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லச் சொன்னார். உதவியாளர் ஜெபர்சனிடம் சென்று விடுதிப் பொறுப்பாளர் சொன்ன செய்தியைச் சொன்னபோது, "சாதாரண மனிதர்களை மதிக்கத் தெரியாதவர்களுடைய விடுதியில் தங்குவதற்கு எனக்கு விருப்பமில்லை" என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டார்.

மனிதர்களாகிய நாம் எப்படி புறத்தோற்றத்தை வைத்து மனிதர்களை மதிப்பிடுகின்றோம் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று. ஆனால், ஆண்டவர் இயேசு அப்படி இல்லை, அவர் ஆள்பார்த்து செயல்படவும் இல்லை, அவர் எல்லார்மீதும் இரங்கினார், எனவே, அவருடைய வழியில் நடக்கும் ஒவ்வொருவரும் சக மனிதர்களிடம் எந்தவொரு வேறுபாடும் பார்க்காமல், மனிதர்களை மனிதர்களாக, கடவுளின் அன்புப் பிள்ளைகளாகப் பார்க்கப் பழகுவோம்.

இயேசு எல்லார் மீதும் இரங்கும் அன்பு இறைவன் என்று மேலே பார்த்தோம். இயேசு காதுகேளாதவரும் திக்கிப் பேசுபவருமான மனிதரைக் குணப்படுத்திய நிகழ்வு நமக்குச் சொல்லும் இரண்டாவது செய்தி, இயேசு எல்லார்மீதும் இரங்கி, அவர்கள்மீது அன்பு கொண்டாலும் ஏழைகள், உடல் ஊனமுற்றோர், வறியவர்கள் இவர்கள்மீது தனிப்பட்ட அன்பு கொண்டிருக்கின்றார் என்பதாகும். இயேசு நற்செய்தியில் வரும் மனிதரைக் குணப்படுத்திய விதமே வித்தியாசமாக இருக்கின்றது. இயேசு அம்மனிதரை எல்லாருக்கும் முன்பாகக் குணப்படுத்தவில்லை, மாறாக தனியாக அழைத்துக்கொண்டு போய்க் குணப்படுத்துகின்றார். குணப்படுத்தும்போது இயேசு தன்னுடைய விரலை அவருடைய காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவருடைய நாவினைத் தொட்டு, வானத்தை அண்ணார்ந்து பார்த்து 'எப்பத்தா' என்கிறார். உடனே அவருடைய நாவுகள் கட்டவிழ்கின்றன, காதுகள் திறக்கப்படுகின்றன. இயேசு எளியவர், வறியவர், உடல் ஊனமுற்றவர் இவர்கள்பால் எந்தளவுக்கு தனிப்பட்ட அன்பு கொண்டிருந்தார் என்பதை இந்த நிகழ்வினை நாம் படிப்படியாக சிந்தித்துப் பார்த்தாலே புரிந்துவிடும்.

இயேசுவின் வழியில் நடக்கும் நாம், சமுதாயத்தில் புறந்தள்ளப்பட்ட இத்தகைய மக்கள்மீது தனிப்பட்ட அன்பு கொண்டிருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் உடல் ஊனமுற்ற, உடல் குறைபாடு உள்ள மனிதர்களைக் கண்டால், எள்ளி நகையாடுகின்றோம், அவர்களை ஏளனமாகப் பார்க்கின்றோம். இத்தகைய செயல்பாடுகள் எல்லாம் இயேசுவை அவமானப்படுத்துவதற்குச் சமமாகும். ஏனென்றால் அவர் எளியோரில் இருக்கின்றார் (மத் 25:40). ஆகவே, நாம் இயேசுவைப் போன்று எளியவர் மட்டில் தனிப்பட்ட அன்பு கொண்டு வாழக் கற்றுக்கொள்வோம்.

நிறைவாக இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குச் சொல்லும் செய்தி, இயேசு கிறிஸ்துவில் இறைவார்த்தை நிறைவு பெறுகின்றது என்பதாகும். இறைவாக்கினர் எசாயா புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகத்தில், "அந்நாளில் பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும்; காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக் குதிப்பர்" என்று வாசிக்கின்றோம். மேற்சொன்ன இறைவார்த்தை எல்லாம் இயேசுவில் நிறைவு பெறுகின்றன. இயேசு பார்வையற்றோருக்கு பார்வை தந்தார். காதுகேளாதோர் கேட்கச் செய்தார். இவ்வாறு அவர் இறைவார்த்தை எல்லாம் தன்னிலே நிறைவுறச் செய்து, இறையாட்சி இவ்வுலகில் வந்துவிட்டது என்று அறிக்கையிடுகின்றார்.

ஆண்டவர் இயேசு காதுகேளாத, திக்கிப்பேசும் அந்த மனிதரைக் குணப்படுத்திய பிறகு மக்கள் அனைவரும், "இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகின்றார்! என்று கூறுவதாக மாற்கு நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார். தொடக்க நூலில் ஆண்டவராகிய கடவுள் உலகைப் படைத்து முடித்தபிறகு எல்லாவற்றையும் நல்லதெனக் கண்டார் என்பதைப் போன்று இருக்கின்றது மாற்கு நற்செய்தியாளர் இயேசு எத்துணை நன்றாக யாற்றையும் செய்து வருகின்றார் என்று குறிப்பிடுவது. ஆம், இயேசு இருக்கும் இடத்தில் எல்லாமே நன்றாகத்தான் இருக்கும்.

ஆகவே, இயேசு எந்தவொரு வேறுபாடு காட்டாமல், எல்லார்மீதும் இரக்கம்கொண்டது போன்று, நாமும் நம்மோடு வாழக்கூடிய மனிதர்கள்மீது உண்மையான அன்பும் இரக்கமும் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
அவரைப் போல பார்க்க

எசாயா 35:4-7
யாக்கோபு 2:1-5
மாற்கு 7:31-37

சில வாரங்களுக்கு முன் கட்செவியில் ஆங்கிலத்தில் வலம் வந்த ஒரு தகவல். அதை அப்படியே தமிழில் மொழிபெயர்க்கிறேன்: 'ஒருநாள் மாலை நான் என் காரில் பயணம் செய்துகொண்டிருந்தேன். எனக்கு முன் ஒரு கார் சென்றுகொண்டிருந்தது. நான் அந்தக் காரை முந்துவதற்கு முயன்று பாதை தருமாறு ஹார்ன் அடித்தேன். ஆனால், அந்தக் கார் விலகுவதாகவும் இல்லை. வேகமாகச் செல்வதாகவும் இல்லை. பொறுமை இழந்த நான் இன்னும் தொடர்ந்து ஹார்ன் அடித்துக்கொண்டே அந்தக் காருக்கு மிக அருகில் சென்றேன். அப்போதுதான் அந்தக் காரின் பின் கண்ணாடியில் இருந்த ஸ்டிக்கர் என் கண்களில் பட்டது. 'நான் ஒரு மாற்றுத்திறனாளி. தயவுசெய்து கொஞ்சம் பொறுமையாக இருங்கள்!' அந்த ஸ்டிக்கர் வாசகம் என் கன்னத்தில் அறைவது போல இருந்தது. 'நான் ஏன் இன்று இவ்வளவு பொறுமை இழந்தேன்?' என யோசித்து, என் காரின் வேகத்தைக் குறைத்தேன். என் வாழ்வில் பொறுமையைக் கற்றுக்கொடுத்த அந்த ஸ்டிக்கர் காரின் பின்னால் மெதுவாக நானும் நகர்ந்தேன். இவர் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தார். ஆகையால் நான் பொறுமையைக் கற்றுக்கொண்டேன். என் முன்னால் இப்படி ஸ்டிக்கர் ஒட்டாமல் எத்தனை பேர் நடந்துகொண்டிருக்கிறார்கள்: 'நான் ஒரு அநாதை. கொஞ்சம் பொறுமையாக இருங்கள்,' 'நான் சாப்பிட்டு நான்கு நாள்கள் ஆகின்றன. கொஞ்சம் பொறுமையாக இருங்கள்,' 'நான் அகதியாக இங்கு இருக்கிறேன். கொஞ்சம் பொறுமையாக இருங்கள்,' 'நான் விவாகரத்து பெற்றவள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள்,' 'நான் ஒரு குழந்தை. கொஞ்சம் பொறுமையாக இருங்கள்,' 'நான் ஒரு சிறைக்கைதி. கொஞ்சம் பொறுமையாக இருங்கள்,' 'போன வாரம் என் வேலை போய்விட்டது. கொஞ்சம் பொறுமையாக இருங்கள்' - இப்படி நிறையபேர் ஸ்டிக்கர் இல்லாமல் என் கண்முன்னால் வந்து போகிறார்கள். ஸ்டிக்கரைக் கண்டதால் நான் பொறுமையாக இருந்தேன். காணாத ஸ்டிக்கர் முன்னாலும் நான் இனிமேல் பொறுமையாக இருப்பேன்.'

நிற்க.
நாம் அடுத்தவர்களைப் பார்க்கிறோம். அடுத்தவர்களை நாம் நினைப்பதுபோல பார்க்கிறோம். சிலவற்றிற்கு நாம் பாராமுகமாக இருக்கிறோம். சிலவற்றை ரொம்ப விரும்பி ஆழமாகப் பார்க்கிறோம். சிலவற்றை ஏனோ தானோ என்று மேலோட்டமாகப் பார்க்கிறோம். இதைத்தான் தூய பவுலும், 'ஏனெனில், இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல மங்கலாய்க் காண்கிறோம். ஆனால், அப்போது நேரில் காண்போம். இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன். அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல முழுமையாய் அறிவேன்' (1 கொரி 13:12). 'அன்பு' என்ற வார்த்தையை வைத்து மிக அழகான ஒரு பாடலை எழுதிவிட்டு, 'பார்த்தல்' அல்லது 'அறிதல்' பற்றி தூய பவுல் எழுதக் காரணம் என்ன? நாம் பார்க்கும் விதத்திலிருந்து கடவுள் பார்க்கும் விதத்திற்குக் கடந்து செல்ல விரும்புகிறார் பவுல். ஆக, நாம் குறைவாகப் பார்க்கிறோம் என்பதே நிதர்சனமான உண்மை.

இன்றைய இறைவாக்கு வழிபாடு கடவுள் பார்ப்பதுபோல நாம் மற்றவர்களைப் பார்க்க அழைக்கிறது. ஒன்றைப் பார்க்க வேண்டுமென்றால் நாம் அதைத் தெரிவு செய்ய வேண்டும். கூடை நிறைய கொய்யா பழங்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. நான் எதைத் தெரிவு செய்து நான் கையில் எடுக்கிறேனோ, அதைத்தான் நான் பார்க்கிறேன். மற்ற பழங்கள் என் கண்முன் இருந்தாலும் நான் அவற்றைப் பார்ப்பதில்லை. இதுதான் நம் குறைவான பார்வை. ஆனால், கடவுள் எல்லாரையும், எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பார்க்கிறார். இந்தப் பார்வை நமக்கு வரும்போது நம் தெரிதலும், புரிதலும் அகலமாகிறது.

இரண்டாம் வாசகத்திலிருந்து (காண். யாக் 2:1-5) நம் சிந்தனையைத் தொடங்குவோம்.

ரொம்ப ப்ராக்டிக்கலான ஒரு நிகழ்வைப் பதிவு செய்கிறார் திருத்தூதர் யாக்கோபு. தொடக்க கிறிஸ்தவர்களின் சபை கூட்டம் நடக்கிறது. கூட்டம் தொடங்கி நடந்துகொண்டிருக்கிறது. அப்போது பணக்காரர் ஒருவர் குதிரை வண்டியில் வந்து இறங்குகிறார். பளபளப்பான ஆடை, கண்களைப் பறிக்கும் மோதிரம், காலில் அழகிய செருப்பு, நேர்த்தியான தலைசீவல், பத்து அடிக்கு முன்னால் பாய்ந்து வரும் பெர்ஃப்யூம் வாசனை என வாசலில் வந்து நிற்கிறார். எல்லாருடைய கண்களும் வாசலை நோக்கி திரும்புகின்றனர். கூட்டத்தில் உள்ள எல்லாரும், 'இங்க வாங்க, இங்க வாங்க, இங்க உட்காருங்க' என உபசரிக்கிறார்கள். உபசரிப்பு முடிந்து கூட்டம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்க, பாதி ஆடை, நகக்கண்களில் வேலை செய்த அழுக்கு, பிய்ந்து சணல் கயிறால் கட்டிய செருப்பு, சீவாத தலைமுடி, வியர்வை நாற்றம் என ஒருவர் வாசலில் வந்து நிற்கின்றார். அப்போதும் எல்லாருடைய கண்களும் வாசலை நோக்கித் திரும்புகின்றனர். ஆனால், இப்போது, 'அடேய். அங்கே நில்!' 'டே நீ வராத!' 'இங்க வா, கால்பக்கம் உட்கார்' என்று ஆளாளுக்குக் கத்துகிறார்கள். சிலர் அவரை விரட்டிவிடவும் நினைக்கின்றனர். இந்த நிகழ்வைப் பதிவு செய்கின்ற யாக்கோபு, 'நீங்கள் ஆள்பார்த்து செயல்படுகிறீர்கள்' என்று தன் திருச்சபையாரைக் கடிந்துகொள்கிறார். மேலும், இந்த வேறுபாட்டிற்குக் காரணம் அவர்களின் தீய எண்ணத்தோடு உள்ள மதிப்பிடுதல் என்றும் சொல்கிறார். அத்தோடு, 'உலகின் பார்வையில் ஏழைகளாய் இருப்பவர்களை, நம்பிக்கையில் செல்வர்களாகவும், உரிமைப்பேறு பெறுபவர்களாகவும் கடவுள் தேர்ந்துகொள்ளவில்லையா?' எனவும் கேட்கின்றார். என்ன தீய எண்ணம்? எதற்காக பணக்காரர் கவனிக்கப்படுகிறார்? அவரை வைத்து ஆளுநரிடம் எதாவது சிபாரிசு பெறலாம் அல்லது அவர் சபைக்கு ஏதாவது செய்வார் அல்லது அவரிடம் நாம் 'நல்ல பிள்ளையாக' இருந்தால் நாளை அவரை வைத்து நாம் ஏதாவது காரியம் சாதித்துக் கொள்ளலாம் - இந்த மூன்றிலுமே நன்றாகக் கவனித்தால் பணக்காரரை மற்றவர்கள் பயன்படுத்துகிறார்களே தவிர அன்பு செய்வதில்லை. இது ஒரு தவறான அணுகுமுறை. இதை உற்சாகப்படுத்துவது இந்த பணக்காரருக்கும் ஆபத்தானது. ஏழையை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. அவரே அடுத்தவர்களைச் சார்ந்துதான் இருக்கிறார். இதில் அவரிடம் என்ன கிடைக்கும்? ஆக, 'இவரிடம் எனக்கு என்ன கிடைக்கும்!' என்ற அடிப்படையில் உறவு கொள்வது தவறு என்பதும் இந்தப் பகுதியின் மறைமுகப்பாடம்.

உலகின் பார்வை வேறு. கடவுளின் பார்வை வேறு. உலகின் பார்வை கடவுளின் வெளித்தோற்றத்தை மையமாக வைத்து இருக்கிறது. அவர் எந்த நிறத்தில், எந்த உருவில், எந்த அளவில், எந்த உறுப்புக்கள் எப்படி, எந்த ஆடை, எந்த அணிகலன், எந்த சிகையழகு கொண்டிருக்கிறார் என்பதை மையமாக வைத்து இருக்கிறது. ஆனால், கடவுளின் பார்வை இந்த எதில்மேலும் இல்லாமல் அவரின் அகத்தை மையப்படுத்தியதாக இருக்கிறது. கடவுள் அப்படி உள்ளத்தைப் பார்ப்பதால்தான் அவரால் 'பாரபட்சம்' இன்றி எல்லாரையும் அன்பு செய்ய முடிகிறது. ஆக, 'ஆள்பார்த்து செயல்படாதீர்கள்!' அல்லது 'பாரபட்சம் காட்டாதீர்கள்!' 'முகத்தாட்சண்யம் பார்க்காதீர்கள்!' என்றால், ஒவ்வொரு நபரையும் ஒரே அளவுகோல் கொண்டு அளப்பது என்பதுதான் இதன் அர்த்தம். 'பாரபட்சம் பார்த்தல்' என்பது நமக்கு நாமே உருவாக்கிக்கொள்ளும் ஒரு ஊனம் அல்லது தடை. இதை வெற்றிகொள்ள இயேசுவிடம் இருக்கும் பார்வை நமக்கும் தேவை. 'ஏழை-பணக்காரர்' பேதம் நாமாக உருவாக்கி வைத்திருக்கும் ஒரு பிறழ்வு. இயற்கை சிலரை பணக்காரராகவும், மற்றவரை ஏழையராகவும் படைக்கவில்லைதானே! ஆக, இயற்கையில் நாம் ஏற்படுத்தியுள்ள காயத்தை நாம்தான் நம் பார்வையால் குணமாக்க வேண்டும்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 35:4-7) மெசியாவின் வருகையின்போது காணப்படும் சில அறிகுறிகளைப் பட்டியலிடுகின்றார் இறைவாக்கினர் எசாயா. எசாயா 34ல் கடவுள் பழிதீர்ப்பார் என்ற அழிவின் செய்தியையும், 38ல் அசீரியாவின் போர் அறிவிப்பையும் சொல்லி கலக்கம் மற்றும் பயம் உண்டாக்கும் எசாயா, 37ல் நம்பிக்கையின், புத்துணர்ச்சியின், மாற்றத்தின் செய்தியைச் சொல்கின்றார். கலக்கமும், நம்பிக்கையும் கலந்ததே வாழ்க்கை என்பதை இப்படிச் சொல்கிறார்போல! மெசியாவின் அறிகுறிகளில் ஒன்று, 'பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்' என்பதாகும். மேலும், பார்வையுள்ளவர்கள் இன்னும் அதிகம் காண்பார்கள். எப்படி? 'பாலைநிலத்தில் நீரூற்றுகள் எழுவதையும், வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடுவதையும், கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆவதையும், தாகமுற்ற தரை நீரூற்றுக்களால் நிறைந்திருப்பதையும் காண்பார்கள்.' அதாவது, இதுவரை பார்க்காததை அவர்கள் பார்ப்பார்கள். இறைவன் அவர்கள் பார்வையை அகலமாக்குகிறார். இதுவே, மெசியா கொண்டுவரும் விடுதலையாகவும் இருக்கிறது.

மெசியாவின் வருகையில் முதலில் ஒரு உற்சாகம் தரப்படுகிறது - 'திடம் கொள்ளுங்கள்!' 'அச்சம் தவிருங்கள்!' தொடர்ந்து, மானிடமும், இயற்கையும் புத்துயிர் பெறுவதாக முன்னுரைக்கப்படுகிறது. 'பார்வையற்றோர் பார்வை பெறுவர், காதுகேளாதோர் கேட்பர், காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர், வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்' என்னும் இந்த வாக்கியத்தை மனித உடல்குறைபாடுகளில் இருந்து இறைவன் தரும் விடுதலை என நேரிடையாகவும் எடுத்துக்கொள்ளலாம், அல்லது இவைகள் யாவும் அடிமைத்தனத்தின் அடையாளங்கள் என உருவகமாகவும் எடுத்துக்கொள்ளலாம். பார்வை, செவித்திறன், இயக்கம், பேசும்திறன் - இந்த நான்கும்தான் முதல் ஏற்பாட்டு காலத்தில் மனித உணர்வுகள் என்று கருதப்பட்டவை. இந்த நான்கில் குறைபாடு உள்ளவர்கள் நிறைவு காண்பார்கள் என்கிறார் இறைவன். மேலும், இஸ்ராயேல் மக்கள் அசீரியாவிலும், பாபிலோனியாவிலும் அடிமைப்பட்டுக் கிடந்தபோது இந்த நான்கு திறன்களும் இழந்தவர்களாய் இருந்தனர். ஆக, இறைவன் தரும் விடுதலையை அனுபவிக்கும்போது இந்த நான்கு திறன்களும் அவர்களிடம் திரும்ப வரும்.

இந்த முதல் வாசகம் நமக்குத் தரும் செய்தி என்ன? மாற்றம் ஒன்றே மாறாதது. 'இந்த நிலையும் மாறிப்போகும்!' என்றால், 'நாம் இன்று பார்க்கும் நிலையும் மாறலாம்,' 'நாமும் நம் பார்வையை மாற்றிக்கொள்ளலாம்' என்ற வாழ்க்கைத் தத்துவத்தைப் போதிக்கிறது இது. அச்சம், ஊனம், வறட்சி இந்த மூன்றும் நம் உடலில் இருந்தாலும், உள்ளத்தில் இருந்தாலும், இவை நாம் பார்க்கும் பார்வையை மறைத்தாலும், நமக்குப் பார்வை மாற்றம் சாத்தியமே;.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மாற் 7:31-37). அப்பம் பலுகுதல் தொடங்கி (6:30-34), மாற்கு நற்செய்தியாளர் தொடர்ந்து இயேசு செய்த பல புதுமைகளை பதிவு செய்கிறார்: கடல்மீது நடத்தல் (6:45-52), கெனசரேத்தில் பலர் நலம்பெறுதல் (6:53-55), கானானியப் பெண்ணின் மகள் நலம் பெறுதல் (7:24-30), காதுகேளாதவர் நலம் பெறுதல் (7:31-37), பார்வையற்றவர் நலம் பெறுதல் (8:22-26) - இப்படியாகத் தொடரும் இயேசுவின் புதுமைகள் பேதுருவின் 'மெசியா அறிக்கை'யில் (8:29) முழுமை பெறுகின்றன. இந்தப் புதுமைகள் நடக்கும்போதெல்லாம் இயேசுவின் சீடர்கள் அவரை நம்ப இயலாமல் தவிக்கின்றனர். இவர்களின் மனப்போராட்டம்தான் காதுகேளாதவர், பார்வையற்றவர் என்ற உருவகங்களால் முன்வைக்கப்படுகிறது. 'இன்னுமா உணராமலும், புரிந்து கொள்ளாமலும் இருக்கிறீர்கள்? உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று? கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா? காதிருந்தும் நீங்கள் கேட்பதில்லையா?' (8:17-18) என்று தன் சீடர்களின் கடின உள்ளத்தைக் கடிந்து கொள்கின்றார்.

ஆக, இன்று நாம் நற்செய்தியில் வாசிக்கும் 'காதுகேளாதவர் நலம் பெறுதல்' முதலில் புதுமை என்றும், பின் உருவகம் என்றும் சிந்திப்போம்.

இன்றைய நற்செய்தியை புதுமை என்ற கோணத்தில் பார்த்தால், 'எங்கே?' 'என்ன?' 'எதற்காக?' என்ற மூன்று கேள்விகளை வைத்து மூன்று உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

அ. எங்கே?
சீதோன் வட எல்லையில் இருக்கிறது. கலிலேயாக் கடல் தென்கிழக்கில் உள்ளது. இயேசு இதற்கு இடையே உள்ள தீர் பகுதியில் இருக்கிறார். தீர் பகுதியில் இருந்து கீழே வராமல் சீதோன் நோக்கி மேலே செல்கின்றார். இப்படி மேலும், கீழும் மாற்கு இயேசுவை அலைக்கழிக்கிறார். தெக்கப்போலி என்றால் 'பத்து நகரங்கள்' (டெக்கா, போலிஸ்) என்பது பொருள். இந்த நகரங்கள் யோர்தானை ஒட்டிய பகுதியிலிருந்து தமாஸ்கு வரை பரவிக்கிடந்தன. இது அதிகமாக புறவினத்தார்கள் வாழ்ந்த குடியேற்றப் பகுதி. 'தெக்கப்போலி' (7:31) என்று குறிப்பிட்டு மாற்கு எழுதுவது இயேசு புறவினத்தாரோடு தம்மை ஒன்றித்துக்கொண்டதையே காட்டுகிறது.

ஆ. என்ன?
காதுகேளாதவரும், வாய்திக்கிப் பேசுபவருமான ஒருவரை சிலர் இயேசுவிடம் கொண்டுவருகின்றனர். புதுமை காணப்போகிறவர் வழக்கமாக மற்றவர்களால் அழைத்து வரப்படுவது மாற்கு நற்செய்தியாளரின் ஸ்டைல் (காண். 2:1-12). அழைத்துவந்தவர்கள் யார் என்று நமக்குத் தெரியாது. ஆனால் அழைத்துவரப்பட்டவர் ஒரு யூதராக இருக்கலாம். ஏனெனில் புறவினத்தாராக இருந்தால் அவர் புறவினத்தார் என்று மாற்கு குறிப்பிட்டிருப்பார் (காண். 7:26). மேலும், 'கைவைத்துக் குணமாக்குமாறு' (7:32) இயேசுவை வேண்டுகின்றனர். 'கைவைத்து மன்றாடுதல்' யூத ஸ்டைல். ஆனால், இதில் யாரும் இயேசுவின்மேல் நம்பிக்கையை வெளிப்படையாக அறிக்கையிட்டதாக இன்னும் சொல்லப்படவில்லை.

காதுகேளாமையும், வாய்பேசாத அல்லது திக்கிப்பேசும் நிலையும் வழக்கமாக சேர்ந்தே இருக்கும் என்பது அறிவியல் மற்றும் மருத்துவ உண்மை. வார்த்தைகளை அவர்கள் கேட்க முடியாததால் அவைகளை உச்சரிக்கவும் அவர்களால் முடிவதில்லை. இந்த மனிதர் பிறவியிலேயே காதுகேளாதவர் அல்லர். அவர் முன்னால் கேட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. ஆகையால்தான், அவர் திக்கிப்பேசுபவராக இருக்கிறார்.

கானானியப் பெண்ணின் மகளை தூரத்திலிருந்து குணமாக்கிய இயேசு இவரிடம் வித்தியாசமாக நடந்து கொள்கிறார். கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, அவரின் காதுகளில் விரலை இடவும், உமிழ்நீரால் அவரின் நாக்கைத் தொடவும் செய்கின்றார். தொடுதலும், உமிழ்நீர் பயன்படுத்துவதும் வழக்கமாக மருத்துவர்கள் பயன்படுத்தும் செயல்கள்தாம். இதே போன்ற செயலை இயேசு பார்வையற்றவருக்கு நலம் தரும்போதும் (8:22-26) செய்கின்றார். கானானியப் பெண்ணை நாய்க்குட்டி என்று சொன்னது எப்படி நம்மை முகம் சுளிக்க வைக்கிறதோ, அதுபோல இயேசுவின் இந்த உமிழ்நீர் செயலும் நம்மை முகம் சுளிக்க வைக்கிறது.

வானத்தை அன்னாந்து பார்க்கும் இயேசு, தன் தந்தையின் துணையை அழைத்தவராய், 'எப்பத்தா' என்று அரமேயத்தில் சொல்கிறார். அதை மாற்கு தன் இறைமக்களுக்கு 'திறக்கப்படு' என்று மொழிபெயர்க்கின்றார். உடனே, அவரின் நா கட்டவிழ்கின்றது.

இ. எதற்காக?
புதுமை முடிந்த அந்த மனிதரின் நா கட்டவிழ்ந்தவுடன் இயேசு செய்யும் வேடிக்கை என்னவென்றால், '(இதைப்பற்றி யாரிடமும்) நீ பேசக்கூடாது!' என்கிறார். அவரும் இயேசுவின் கட்டளைக்கு நேர்மாறாக எல்லாரிடமும் சொல்கின்றார்.

இயேசுவின் இந்தப் புதுமை மக்களிடம் ஒரு நம்பிக்கை அறிக்கையைத் தூண்டுகிறது: 'இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காதுகேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!' என்று பேசிக்கொள்கின்றனர். இயேசுவின் புதுமையின் நோக்கம் இதுதான். மக்களிடம் நம்பிக்கையைத் தூண்டி எழுப்புவது. இதில் விநோதம் அல்லது முரண்பாடு என்னவென்றால், இயேசுவின் அருகில் இருப்போர் அவரை நம்ப மறுக்கின்றனர். ஆனால், தூரத்தில் இருப்பவர்கள் நம்புகின்றனர்.

இப்போது இந்த நிகழ்வை ஒரு உருவகமாகப் பார்ப்போம்.

அ. சீதோன் என்னும் புறவினத்துப் பகுதி இயேசுவுக்குத் தூரமாக இருப்பவர்கள். இயேசுவை நம்பவும், ஏற்றுக்கொள்ளவும் தூரம் ஒரு தடை அல்ல. இது திருத்தூதர்களின் நற்செய்திப்பணிக்கு மிகவும் தேவையாக இருந்தது. தூரம் கூடினாலும் இயேசு அருகில் வர முடியும்.

ஆ. காதுகேளாத தன்மை சீடர்களின் கண்டுகொள்ளாத்தனத்தையும், திக்கிப்பேசும் குணம் அவர்களின் அரைகுறை நம்பிக்கையையும் குறிக்கின்றது.

இ. 'எப்பத்தா' - திறக்கப்படு. இயேசுவின் திருமுழுக்கின்போதும், உருமாற்றத்தின்போதும் வானம் திறக்கப்பட்டு, தந்தையின் குரலொலி இயேசுவே இறைமகன் என்று சான்றுபகர்கின்றது. அதுபோல, இப்போது திறக்கப்படும் இவரின் காதுகளும் சான்றுபகரும்.

ஈ. 'தனியே அழைத்துச் செல்லுதல்' - இயேசுவால் நலம்பெறும் நிகழ்வு ஒரு தனிப்பட்ட வாழ்க்கை அனுபவம். ஒவ்வொருவரும் இயேசுவைத் தனியாய்ச் சந்தித்தால் மட்டுமே நலம்பெற முடியும்.

உ. 'எத்துணை நன்றாகச் செய்கிறார்' என்னும் மக்களின் வாழ்த்தொலி இயேசுவை ஒரு புதிய படைப்பின் கடவுளாக முன்வைக்கின்றது. முதல் ஏற்பாட்டில் ஒவ்வொரு படைப்புச் செயலின் முடிவிலும் கடவுள் 'அனைத்தையும் நன்றாகக் காண்கிறார்!' (தொநூ 1:31). மேலும் மக்களின் இரண்டாம் வாழ்த்தொலி இயேசுவை எசாயா இறைவாக்குரைத்த (35:5-6) மெசியாவாக மக்களுக்கு அறிமுகம் செய்கிறது.

இன்றைய நற்செய்தியில் நான் அதிகம் வியப்பது இயேசு அந்த நபருக்காக எடுத்துக்கொள்ளும் நேரமும், காட்டும் பொறுமையும்தான். நாம் யார் காதுக்குள்ளேயாவது கையை விடுவோமா? நம் எச்சிலைத் தொட்டு இன்னொருவர் வாயின் எச்சிலில் தொடுவோமா? ஒருவேளை நாம் அன்புசெய்பவர்களிடம் இப்படிச் செய்வோம். ஆனால், முன்பின் தெரியாத, உடல்நலக்குறைவு உள்ள, அழுக்கான ஒருவரிடம் செய்ய நம்மால் இயலுமா? என்னால் இயலாது. இயேசு அவரை மற்றவர்களைப் பார்ப்பதுபோல பார்க்கிறார். இயேசுவின் பார்வையில் அவருடைய அம்மா, அப்பா, நண்பர், திருத்தூதர், தெரிந்தவர், தெரியாதவர், நல்லவர், கெட்டவர், உடல் நலம் உடையவர், உடல் நலமற்றவர், குறையில்லாதவர், குறையுள்ளவர் என எல்லாருமே ஒன்றுதான். மேலும், தான் பார்ப்பதுபோல மற்றவர்கள் பார்க்கமாட்டர்கள் என்று நினைக்கின்ற இயேசு அந்த மனிதரின் மதிப்பை மனத்தில்கொண்டு அவரை மற்றவர்களின் பார்வையிலிருந்து தனியே அழைத்துச் செல்கின்றார். இது இயேசுவின் பரிவின் அடையாளம். தனியே குறையுடன் அழைத்துச் சென்ற நபரை நிறைவாக்கி அனுப்புகின்றார் இயேசு. இதைக் கண்ட கூட்டத்தினர், 'இவர் அனைத்தையும் எத்துணை நன்றாகச் செய்கின்றார்!' என வியந்து மகிழ்கின்றனர். இதுதான் மக்கள் பெற்ற புதிய பார்வை. இதுவரை இயேசுவிடம் விண்ணப்பத்தோடு வந்தவர்கள் இப்போது வியப்போடு வருகிறார்கள். நம் வாழ்க்கையில் வியப்புக்கள் கூடினால் விண்ணப்பங்கள் குறைந்துவிடும். எடுத்துக்காட்டாக, 'எனக்கு உடல்நிலை சரியில்லை. நல்ல உடல்நலம்தா' என கடவுளிடம் விண்ணப்பம் செய்வதற்குப் பதிலாக, 'அடடே, எனக்கு உடல்நிலை சரியில்லையே!' என்று வியந்தால் விண்ணப்பத்திற்கான தேவை குறைந்துவிடுகிறதே.

இறுதியாக,
நாம் சந்திக்கும் அனைவரும் தங்கள் உள்ளத்தில் ஒரு லேபிள் அல்லது ஸ்டிக்கர் கொண்டிருக்கின்றனர். அந்த ஸ்டிக்கரை நாம் பார்க்க ஆரம்பித்தால், அவர்களிடம் பாரபட்சம் காட்ட மாட்டோம், குறைகளை நிறைவு செய்வோம், மற்றும் நலமற்றதை நலமாக்குவோம். அவரின் பார்வை அடையாளங்களைக் கடந்த பார்வை. அடையாளங்கள், நிறைகள், குறைகள், இருப்பு, இல்லாமை என அனைத்தும் நிலையற்றவை என உணர்ந்த அவர், நிலையானதை நிறைவாகப் பார்த்தார். அவரின் பார்வை நம் பார்வை ஆனால், நாமும் பொறுமை காட்ட முடியும்.

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
Teaching Faculty
Saint Paul's Seminary
Tiruchirappalli - 620 001


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================



 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!