Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                        08  செப்டம்பர் 2018  
                                                           பொதுக்காலம் 23ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்  
=================================================================================
பட்டினியோடும் தாகத்தோடும் ஆடையின்றியும் இருக்கிறோம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 6-15

சகோதரர் சகோதரிகளே, உங்கள் பொருட்டு என்னையும் அப்பொல்லோவையும் எடுத்துக்காட்டாகக் கொண்டு இவற்றைக் கூறினேன். ஏனெனில், "எழுதியுள்ளதற்கு மேல் போகாதே" என்பதன் பொருளை எங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள். ஒருவரை ஆதரித்தும் மற்றவரை எதிர்த்தும் செயல்படாதீர்கள்; இறுமாப்புக் கொள்ளாதீர்கள். நீங்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று சொன்னவர் யார்? உங்களிடம் உள்ள அனைத்தும் நீங்கள் பெற்றுக் கொண்டவைதானே? பெற்றுக்கொண்டும் பெற்றுக் கொள்ளாததுபோல் பெருமை பாராட்டுவது ஏன்? தேவையானவற்றை எல்லாம் ஏற்கெனவே பெற்றுவிட்டீர்களோ? ஏற்கெனவே செல்வர்களாகி விட்டீர்களோ? எங்களை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் ஆட்சி செலுத்துகிறீர்களோ? நீங்கள் ஆட்சி செலுத்த முடியுமென்றால் நல்லதுதான். அப்படியானால் நாங்களும் உங்களோடு சேர்ந்து ஆட்சி செலுத்தலாமே.

கடவுளின் திருத்தூதராகிய எங்களை அவர் எல்லாருக்கும் கடையராக்கினார்; நாங்கள் மரண தண்டனை பெற்றவர்கள் போல் ஆனோம். மனிதருக்கும் வானதூதருக்கும் உலகுக்கும் காட்சிப் பொருளானோம் எனக் கருதுகிறேன். நாங்கள் கிறிஸ்துவின் பொருட்டு மடையர்கள்; நீங்களோ கிறிஸ்துவோடு இணைந்த அறிவாளிகள். நாங்கள் வலுவற்றவர்கள்; நீங்களோ வலிமை மிக்கவர்கள். நீங்கள் மாண்புள்ளவர்கள்; நாங்களோ மதிப்பற்றவர்கள். இந்நேரம்வரை பட்டினியோடும் தாகத்தோடும் ஆடையின்றியும் இருக்கிறோம். அடிக்கப்படுகிறோம்; நாடோடிகளாய் இருக்கிறோம். எங்கள் கைகளால் பாடுபட்டு உழைக்கிறோம். பழிக்கப்படும்போது ஆசி கூறுகிறோம்; துன்புறுத்தப்படும்போது பொறுத்துக்கொள்கிறோம். அவமதிக்கப்படும்போதும் கனிவாகப் பேசுகிறோம். நாங்கள் உலகத்தின் குப்பை போல் ஆனோம். இதுவரை அனைத்திலும் கழிவுப் பொருட்கள் எனக் கருதப்பட்டுவருகிறோம். உங்களை வெட்கமடையச் செய்ய நான் இவற்றை எழுதவில்லை; நீங்கள் என் அன்பார்ந்த பிள்ளைகளென எண்ணி, உங்களுக்கு அறிவு புகட்டவே இவற்றை எழுதுகிறேன். கிறிஸ்துவைச் சார்ந்த உங்களுக்கு ஆசிரியர்கள் பல்லாயிரம் இருக்கலாம்; ஆனால் தந்தையர் பலர் இல்லை. நற்செய்தி வழியாக நான் உங்களைக் கிறிஸ்தவர்களாக ஈன்றெடுத்தேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா 145: 17-18. 19-20. 21 (பல்லவி: 18)
=================================================================================
பல்லவி: மன்றாடும் யாவருக்கும் ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.

17 ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. 18 தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். பல்லவி

19 அவர் தமக்கு அஞ்சி நடப்போரின் விருப்பத்தை நிறைவேற்றுவார்; அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து அவர்களைக் காப்பாற்றுவார். 20 ஆண்டவர் தம்மிடம் பற்றுக் கொள்ளும் அனைவரையும் பாதுகாக்கின்றார்; பொல்லார் அனைவரையும் அழிப்பார். பல்லவி

21 என் வாய் ஆண்டவரின் புகழை அறிவிப்பதாக! உடல் கொண்ட அனைத்தும் அவரது திருப்பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவதாக! பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 14: 6

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஓய்வு நாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-5

ஓர் ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கித் தின்றனர்.

பரிசேயருள் சிலர், "ஓய்வு நாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?" என்று கேட்டனர்.

அதற்கு இயேசு மறுமொழியாக, "தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாய் இருந்தபோது, தாவீது செய்ததைக் குறித்து நீங்கள் வாசித்தது இல்லையா? அவர் இறை இல்லத்திற்குள் சென்று, குருக்கள் மட்டுமே அன்றி வேறு எவரும் உண்ணக் கூடாத அர்ப்பண அப்பங்களை எடுத்துத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?" என்று கூறினார்.

மேலும் அவர்களிடம், "ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே" என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

சிந்தனை

ஒய்வு நாளில் எதை செய்வது முறை. அது கடவுளுக்கு அர்ப்பணமான நாள் என்பது வேதத்தின் வாக்கு.

அவருக்கு அர்ப்பணமான நாளில் அவரோடு இருப்பது, முழு பூசை கண்டு ஒப்புக் கொடுப்பது திருச்சபையின் கட்டளை.

சாஸ்திரங்களை சம்பிரதாயங்களை கடைபிடிப்பதில் நாம் காட்டும்; அக்கரை, ஏன் கட்டளைகளை கடைபிடிப்பதில் காட்டுவதில்லை என்பது தான் புரியாத புதிர்.

கட்டளைகளை கடைபிடிக்க ஆயிரம் காரணங்களை சொல்லி தப்பித்துக் கொள்ளும் நாம், சம்பிரதாயங்களை காசுக்கு பெறாதவற்றிக்கு மிகவும் அழுத்தம் கொடுப்பது ஏனோ. அறியாமையா? அகந்தையா? செருக்கா? வறட்டு கௌரவமா? மாற்கு 07: 09


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
அடுத்தவரிடம் குறை கண்டுபிடிக்கும் மனது அழுக்கான மனது

ஒரு நகரில் மெத்தப் படித்த மேதாவி ஒருவர் இருந்தார். அவர் எப்போதுமே அடுத்தவரிடம் குறை கண்டுபிடிப்பதையே தன்னுடைய குலத்தொழிலாக கொண்டு வாழ்ந்துவந்தார். மக்கள் ஒன்றை எவ்வளவு நேர்த்தியாக, நிறைவாகச் செய்திருந்தாலும் அதில் அவர் குறைகண்டுபிடிப்பார். இதனால் மக்களுக்கு அவர்மீதான ஒரு வெறுப்புணர்வே இருந்தது.

ஒருநாள் அவர் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் அகன்ற சாலை ஒன்றில் அவர் நடந்துசென்று கொண்டிருந்தார். அவருடைய முதுகில் பெரிய சுமை ஒன்று இருந்தது. அந்த சுமை எப்படிப்பட்டது, என் வந்தது என்று அவருக்கு விளங்கவேயில்லை. அவர் நடக்க நடக்க அவர் முதுகில் இருந்த சுமை அவரை அழுத்தத் தொடங்கியது.

ஒருகட்டத்தில் அவர் சத்தமாகக் கத்தத் தொடங்கினார், "கடவுளே எனக்கு எதற்கு இவ்வளவு பெரிய சுமை?. இதை நான் ஏன் சுமக்கவேண்டும்? என்று கேட்டார். அதற்கு வானத்திலிருந்து கடவுள், "இந்த சுமை வேறொன்றும் இல்லை. மற்றவர்களிடம் நீ கண்டுபிடித்த குறைதான் இப்படி சுமையாக இருக்கிறது. எல்லாரும் நல்லதையே பார்த்தபோது, நீ மட்டும் குறைகளையே பார்த்தாய். ஆதலால்தான் நீ கண்டுபிடித்த குறைகளை இப்போது நீ சுமந்துகொண்டு வருகிறாய்" என்றார்.

உடனே தூக்கத்திலிருந்து அவர் விழித்தெழுந்தார்; அறிவொளி பெற்றார். அன்றிலிருந்து அவர் மக்களிடம் இருக்கும் நிறைகளை மட்டுமே கண்டார்.

பிறரிடம் குறைகாண்போரது வாழ்க்கை பரிதாபத்திற்கு உரியது என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் வயல்வழியாக நடந்து சென்றுகொண்டிருக்கும்போது சீடர்கள் பசியில் கதிர்களைக் கொய்து உண்ணத் தொடங்குகிறார்கள். இதைப் பார்த்த பரிசேயர்கள் இயேசுவிடம், "உம்முடைய சீடர்கள் ஓய்வுநாள் சட்டத்தை மீறிவிட்டார்கள்" என்று குறைசொல்கிறார்கள். அதற்கு இயேசுவின் பதில்தான் நமது சிந்தனைக்கு உரியதாக இருக்கின்றது.

கதிர்களைக் கொய்து தின்னுதல் என்பது குற்றம் கிடையாது (இச 23:24-25). ஆனால் சீடர்கள் கதிர்களைக் கொய்து, கசக்குதால்தான் மிகப்பெரிய குற்றமாக பரிசேயர்களுடைய கண்களுக்குத் தெரிகிறது. அதனால்தான் அவர்கள் இயேசுவின் சீடர்கள் ஓய்வுநாள் சட்டத்தை மீறியதாக குறைகூறுகிறார்கள், குற்றம் சாட்டுகிறார்கள்.

பரிசேயர்களின் குற்றச்சாட்டுக்கு இயேசு, அவர்கள் ஏற்றுக்கொண்ட மறைநூலிலிருந்தே விளக்கம் தருகிறார். தாவீதும், அவருடைய சகாக்களும் பசியாய் இருந்தபோது குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அர்ப்பண அப்பங்களை உண்ணுகிறார்கள் (1 சாமு 21:1-6) என்ற இந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டி ஆண்டவர் இயேசு அவர்களிடம், "ஓய்வுநாளும் மானிட மகனுகுக் கட்டுப்பட்டதே" என்கிறார். மேலும் மத்தேயு நற்செய்தி 9:13ல் "பலிகளை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்" என்று சொல்லி இக்கருத்துக்கு இன்னும் வலுவூட்டுகிறார்.

பல நேரங்களில் நாம் சட்டத்தைக் கடைபிடிக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு இரக்கமே இல்லாமல் நடந்துகொள்வது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. சட்டங்களும், சம்பிரதாயங்களும் யாருக்காக? மனிதர்களுக்குத் தானே. மனிதர்களுக்கு முக்கியத்துவம் தராமல், சட்டத்தைத் தூக்கிப் பிடித்தல் எந்தவிதத்தில் நியாயம்?.

சில ஆண்டுகளுக்கு முன்பாக உத்தரப் பிரதேசம் மாநிலம் தாதரி நகருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் மாட்டு மாமிசம் சாப்பிட்டார்கள் என்று கூறி முகமது அக்லாக் என்பவரும் அவருடைய மகனும் கொல்லப்பட்டார்கள். ஒரு மாட்டை கொன்று சாப்பிட்டதற்காக இரண்டு உயிர்களைக் கொன்ற இந்த நிகழ்வு உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது எதைக் காட்டுகிறது?. மனிதர்களைவிட சம்பிரதாயங்களும், அதற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் சாதியமும் அல்லவா பெரிது என்று காட்டுகிறது. மனிதர்கள் இல்லாமல், சட்டமும், சம்பிரதாயங்களும் வீணிலும், வீண்.

எனவே சட்டங்களை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்காமல், அந்த சட்டங்கள் குறித்துக் காட்டும் மானுட நேயத்தை நம்மில் வளர்ப்போம்.

அதைவிடவும் பிறரிடம் குறை கண்டுபிடிக்கும் எண்ணத்தை அடியோடு தவிர்ப்போம். "அன்பு குறைந்திருக்கும்போது குற்றங்கள் பெரிதாகத் தெரிகின்றன" என்பார் கார்லைல் என்ற அறிஞர். ஆம், நம்மிடத்தில் அன்பு குறைந்தால் பிறரிடம் இருக்கும் குறைகள் பெரிதாகத் தெரியும். மாறாக நம்மிடம் அன்பு பெருகினால், குற்றம் காணும் மனப்பான்மை குறையும்.

ஆகவே, குறைகாணும் போக்கைத் தவிர்ப்போம். சட்டங்களைக் கண்டு, மானுட நேயம் காப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
"ஓய்வுநாளில் செய்யக்கூடாததை நீங்கள் செய்வதேன்?"

சிரிய மன்னன் அந்தியோக்குஸ் எருசலேமிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் இருந்த யூதர்களைக் கொன்றொழிக்கத் திட்டம் தீட்டினான். அவனுடைய இந்த திட்டத்தை அறிந்து யூதர்கள் எல்லாம் காடுகளிலும் மலைகளிலும் போய் ஒழிந்துகொண்டார்கள். மறைந்திருக்கும் யூதர்களை அழிப்பது என்பது எவ்வளவு எளிதான காரியமல்ல, அவர்கள் எப்படியும் நம்மைத் தாக்கக்கூடும் என நினைத்த மன்னன், அவர்களை என்ன திட்டம் தீட்டி வீழ்த்தலாம் என தீவிரமாக யோசித்தான். கடைசியில் ஓய்வுநாளைக் கையில் எடுத்து, அன்றைய நாளில் அவர்களிடத்தில் சென்றால், அவர்கள் ஓய்வுநாளில் ஒன்றும் செய்யக்கூடாது என்று நம்மை எதிர்த்து நிற்கமாட்டார்கள். அப்படியே அவர்களை எளிதாக வீழ்த்திவிடலாம் என்று வியூகம் வகுத்தான்.

அதனடிப்படையில் அவன் தன்னுடைய படையைத் திரட்டிக் கொண்டு மலைகளிலும் காடுகளிலும் ஒதுங்கி இருந்த யூதர்களைத் தேடித் புறப்பட்டான். அங்கு அவர்களைக் கண்டதும் அவர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றுபோட்டான். ஏனென்றால் ஓய்வுநாளில் சண்டை போடவோ எதுவுமே செய்யக்கூடாது என்று யூதர்கள் இருந்ததால், சிரிய மன்னனுக்கும் அவனுடைய படைவீரர்களுக்கும் மிகவும் வசதியாகப் போய்விட்டது. இவ்வாறு அவன் ஆயிரக்கணக்கான யூதர்களைக் கொன்றொழித்தான்.

தங்கள் உயிர்போனாலும் பராவாயில்லை, ஓய்வுநாள் சட்டத்தை மீறக்கூடாது என்று இருந்த யூதர்களை நினைக்கின்றபோது நமக்கெல்லாம் வியப்பாக இருந்தாலும் அதுதான் நிதர்சன உண்மை. இப்படி யூதர்கள் அதிலும் குறிப்பாக பரிசேயக் கூட்டம் ஓய்வுநாள், ஓய்வுநாள் என்று ஓய்வுநாள் சட்டத்தைத் தூக்கிப் பிடித்ததால், ஓய்வுநாளில் மக்கள் செய்த பிழையைக்கூட அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவும் அவருடைய சீடர்களும் வயல்வழியே நடந்துசெல்கிறார்கள். அதுவோ ஓய்வுநாள். சீடர்கள் பசி மிகுதியால் கதிர்களைக் கொய்து உண்ணத் தொடங்குகிறார்கள். இதனைப் பார்க்கும் பரிசேயர்கள், "ஓய்வுநாளில் செய்யக்கூடாதை செய்வதேன்?" என்று முணுமுணுக்கத் தொடங்குகின்றார்கள். இயேசு இவ்வாறு முணுமுணுத்த பரிசேயர்களுக்கு என்ன பதிலளித்தார் என்று சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னதாக, பரிசேயர்கள் நினைப்பது போன்று ஓய்வுநாள் சட்டம் அவ்வளவு முக்கியமானதா? என்று சிந்தித்துப் பார்ப்போம்.

ஆறுநாள் வேலை பார்த்துக் களைத்திருக்கும் மக்கள், ஏழாம் நாள் ஓய்ந்திருக்கவேண்டும் என்பதற்காகக் கொடுக்கப்பட்டதுதான் இந்த ஓய்வுநாள் என்பதாகும். ஆனால் பரிசேயக் கூட்டமோ ஓய்வுநாளில் எந்தவொரு வேலையும் செய்யக்கூடாது என்பது போல் திரித்து, அதனைத் தங்களுடைய வசதிக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொண்டார்கள். நற்செய்தியில் இயேசுவின் சீடர்கள் ஆண்டவரின் திருச்சட்டத்தை மீறவில்லை, மாறாக மனிதர்கள்/ பரிசேயக்கூட்டம் தேவையில்லாமல் உருவாக்கிய ஓய்வுநாள் சட்டத்தைத்தான் மீறினார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இத்தகைய பின்னணியில் நாம் ஆண்டவர் இயேசு பரிசேயர்களுக்கு அளிக்கின்ற பதிலை சிந்தித்துப் பார்ப்பது நல்லது. பரிசேயர்கள் இயேசுவிடம், "ஓய்வுநாளில் செய்யக்கூடாதைச் செய்வதேன் என்று சொன்னதும், இயேசு, "தாவீது அரசரும் அவரோடு இருந்தவர்களும் குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அர்ப்பண அப்பங்களை உண்டார்கள் அல்லவா" என்கின்றார். (2 சாமு 21:6 ; லேவி 24:5-9) இப்படிச் சொல்லிவிட்டு, "ஓய்வுநாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே" என்கின்றார்.

இயேசு கூறுகின்ற இவ்வார்த்தைகளில் இரண்டு உண்மைகள் அடங்கி இருக்கின்றன. ஒன்று மனிதர்கள் உண்டாக்கிய ஓய்வுநாள் சட்டத்தை விடவும் மனிதர்களுடைய தேவைகளுக்கு முதன்மையான இடம் கொடுக்கவேண்டும் என்பதாகும். மனிதர்களுடைய நலனுக்காகத்தான் ஓய்வுநாள் உண்டாக்கப்பட்டது என்றாலும் மனிதர்களுடைய தேவைகளுக்கு முன்னுரிமை தரவேண்டும். அதை ஆண்டவர் இயேசு இங்கே அழகாக எடுத்துரைக்கின்றார்.

அடுத்ததாக இந்த ஓய்வுநாள் சட்டங்கள் எல்லாம் மனிதர்களைத் தான் தன்னுடையே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமே ஒழிய ஆண்டவரை அல்ல. ஏனென்றால், ஆண்டவர் ஓய்வுநாள் சட்டத்தை விட மேலானவர். ஓய்வுநாள் என்றாலும் எருசலேம் திருக்கோவிலில் ஆலயத் திருப்பணிகளை மேற்கொள்ளக்கூடிய குருக்கள், லேவியர்களுக்கு ஆலய வழிபாட்டுக் காரியங்களைச் செய்ய விதிவிலக்கு உண்டு. ஆனால் ஆண்டவர் இயேசுவோ அவர்களை விட மேலானவர். அப்படியானால் ஆண்டவர் இயேசுவைப் பொறுத்தளவில் ஓய்வுநாள் சட்டங்கள் எல்லாம் அவருக்குக் கீழேதான். இந்த உண்மையை உணராமல்தான் பரிசேயர்கள், இயேசுவும் அவருடைய சீடர்களும் ஓய்வுநாள் சட்டத்தை மீறியதாக முணுமுணுக்கிறார்கள்.

ஆகையால், இயேசுவின் வழி நடக்கும் நாம், சட்டங்களை விட மனிதர்கள் முக்கியம் என உணர்வோம். மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாம் நம்மாலான உதவிகளைச் செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!