Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                        08  செப்டம்பர் 2018  
                                                           பொதுக்காலம் 22ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம்               மரியன்னையின் பிறப்புவிழ
=================================================================================
தூய கன்னி மரியாவின் பிறப்பு (ஆரோக்கிய அன்னை) விழா

இஸ்ரயேலை ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்.

இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 5: 2-5a

ஆண்டவர் கூறுவது: நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழிமரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும்.

ஆதலால், பேறுகால வேதனையில் இருப்பவள் பிள்ளை பெறும்வரை அவர் அவர்களைக் கைவிட்டுவிடுவார்; அதன் பின்னர் அவருடைய இனத்தாருள் எஞ்சியிருப்போர் இஸ்ரயேல் மக்களிடம் திரும்பி வருவார்கள். அவர் வரும்போது, ஆண்டவரின் வலிமையோடும் தம் கடவுளாகிய ஆண்டவரது பெயரின் மாட்சியோடும் விளங்கித் தம் மந்தையை மேய்ப்பார்; அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள்; ஏனெனில், உலகின் இறுதி எல்லைகள் வரை அப்போது அவர் மேன்மை பொருந்தியவராய் விளங்குவார்; அவரே அமைதியை அருள்வார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

அல்லது

ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 28-30

சகோதரர் சகோதரிகளே, கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கு ஏற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்பது நமக்குத் தெரியும். தம்மால் முன்பே தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் தம் மகனின் சாயலுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டுமெனக் கடவுள் முன்குறித்து வைத்தார்; அச்சகோதரர் சகோதரிகள் பலருள் தம் மகன் தலைப்பேறானவராய் இருக்க வேண்டும் என்றே இப்படிச் செய்தார். தாம் முன்குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார்; தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கிறார்; தமக்கு ஏற்புடையோர் ஆனோரைத் தம் மாட்சியில் பங்கு பெறச் செய்தார்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
 
பதிலுரைப் பாடல்திபா 13: 5. 6 (பல்லவி: எசா 61: 10a)
=================================================================================
பல்லவி: ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்.

5 நான் உமது பேரன்பில் நம்பிக்கை வைத்திருக்கின்றேன்; நீர் அளிக்கும் விடுதலையால் என் இதயம் களிகூரும். பல்லவி

6 நான் ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்; ஏனெனில், அவர் எனக்கு நன்மை பல செய்துள்ளார். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! புனித கன்னிமரியே, நீர் பேறுபெற்றவர்; புகழ் அனைத்திற்கும் மிக ஏற்றவரும் நீரே; ஏனெனில் என் இறைவன் இயேசு கிறிஸ்து நீதியின் ஆதவனாய் உம்மிடமிருந்து உதயமானார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-16, 18-23

தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்:

ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோபு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும்.

யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்; பெரேட்சின் மகன் எட்சரோன்; எட்சரோனின் மகன் இராம்.

இராமின் மகன் அம்மினதாபு; அம்மினதாபின் மகன் நகசோன்; நகசோனின் மகன் சல்மோன்.

சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு; போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது; ஓபேதின் மகன் ஈசாய்.

ஈசாயின் மகன் தாவீது அரசர். தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன்.

சாலமோனின் மகன் ரெகபயாம்; ரெகபயாமின் மகன் அபியாம்; அபியாமின் மகன் ஆசா.

ஆசாவின் மகன் யோசபாத்து; யோசபாத்தின் மகன் யோராம்; யோராமின் மகன் உசியா.

உசியாவின் மகன் யோத்தாம்; யோத்தாமின் மகன் ஆகாசு; ஆகாசின் மகன் எசேக்கியா.

எசேக்கியாவின் மகன் மனாசே; மனாசேயின் மகன் ஆமோன்; ஆமோனின் மகன் யோசியா.

யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும் அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள்.

பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல்.

செருபாபேலின் மகன் அபியூது; அபியூதின் மகன் எலியாக்கிம்; எலியாக்கிமின் மகன் அசோர்.

அசோரின் மகன் சாதோக்கு; சாதோக்கின் மகன் ஆக்கிம்; ஆக்கிமின் மகன் எலியூது.

எலியூதின் மகன் எலயாசர்; எலயாசரின் மகன் மாத்தான்; மாத்தானின் மகன் யாக்கோபு.

யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப் பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது.

அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.

அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, "யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார்.

அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்'' என்றார்.

"இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்'' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் `கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

அல்லத

குறுகிய வாசகம்

மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 18-23

இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப் பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.

அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, "யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்'' என்றார்.

"இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்'' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் `கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================


மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
அன்னை மரியின் பிறப்பு விழா.

தாய்மையின் தாய் பிறந்த தினம்.

எதைப் பற்றி வேண்டுமானாலும் திட்டவட்டமாக சொல்லிவிட முடியும். ஆனால் தாயின் அன்பை பற்றி முழுமையாக விவரிக்க வார்த்தைகளே கிடையாது. கடலின் ஆழம், கோபுர உயரம், மலையின் அகலம், இது அனைத்திற்கும் ஏதாவது ஒன்று ஈடு / நிகர் இருக்கும். ஆனால் தாயின் அன்பிற்கு நிகர் / ஈடு எதுவுமில்லை. தாய்மையின் மேன்மை குறித்து பலரும் பல கருத்துக்களை கூறியுள்ளனர். கவிஞர் திருவிக.
உலகெல்லாம் உதுப்பிடம் தாய்மை,
உதித்து தங்கி ஓங்குமிடம் தாய்மை,
கலையின் மூலம் கமழுமிடம் தாய்மை, என்று பாடியிருக்கிறார்.
வீரமாமுனிவர், உருவிலான் உருவாகி உலகில் ஓர் மகன் உதிப்ப,
கருவிலான் கருத்தாங்கி கன்னித்தாய் ஆயினயே என்று அன்னை மரியின் தாய்மையைப் பற்றி பாடுகிறார். இத்தகைய தாய்மையின் பிறப்பிடமான அன்னையின் பிறப்பு விழாவையே நாம் இன்று கொண்டாடுகிறோம். அன்னை மரியின் பிறப்பு விழா நாளான இன்று அவரின் மூன்று பண்புகள் வழி அவரைப் போல் வாழ அழைப்புவிடுக்கிறார்.

1. தன் அன்னைக்கு தாய்மை பட்டமளித்தவர்.
2. கேள்விக்குறியை ஆச்சரியக் குறியாக மாற்றியவர்.
3. தாயாவதற்காக தரணி வந்தவர்.

1.தன் அன்னைக்கு தாய்மை பட்டமளித்தவர்.:
வீட்டின் மூத்த குழந்தைகள் மேல் பெற்றொருக்கு எப்பொழுதும் தனிப்பட்ட அக்கறை , பாசம், கவனம் இருக்கும். ஏனெனில் தம்பதியர்களாகிய அவர்களுக்கு பெற்றோர்கள் என்னும் பெரும் பேற்றினைத் தந்தது அந்த முதல் குழந்தை தான். அதிலும் நீண்ட வருடம் கழித்து பிறந்த குழந்தையாய் இருந்தால் சொல்லவே வேண்டாம். மொத்த பாசமும் அதன் மேல் தான் இருக்கும். இப்படிப்பட்ட நிலையில் மரியாள், அன்னா சுவக்கீன் என்னும் வயது முதிர்ந்த தன் பெற்றோருக்கு மகளாய்ப் பிறந்து, அவர்களின் புத்திர சோகத்தைத் தீர்க்கின்றார். இதுவரை பிறரால் மலடி என அழைக்கப்பட்டு வந்த அன்னாள், தாய் என்னும் உயரிய மதிப்பினைப் பெற காரணமாகிறார் அன்னை மரியாள். பிறரது ஏளனத்துக்கும் இகழ்ச்சிக்கும் தூற்றுதலுக்கும் உள்ளான அன்னாள், இன்று பிறரால் ஆச்சரியமாக மகிழ்வாக, விரும்பி பேசப்படும் ஒரு நபராக மாற காரணமாயிருக்கிறார் அன்னை மரியாள். எத்தனையோ பேருக்கு அன்னாள் தனது வாழ்நாளில் பிற பெண்களின் பிரசவ காலத்தில் உறுதுணையாய் இருந்திருப்பார். இன்று தான் அன்று செய்த நற்செயல்களுக்கான கைம்மாறை பெற காத்துக் கொண்டிருக்கும் ஒரு ஆளாக மாறி இருக்கின்றார். அன்னை மரியாள் பிறப்பின் போதே பலருடைய இன்னல்களைப் போக்கி இனிமையைக் கொண்டு வந்திருக்கிறார். நாம் அன்னை மரியாள் போல என்றாவது செயல்பட்டிருக்கிறோமா சிந்திப்போம். பிறரை மகிழ்விக்கும் ஒரு நபராக, பிறரின் மகிழ்விற்கு காரணமாக இருப்பவராக இருக்க முயல்வோம். பிறரின் இன்னல் நீக்கி இனிமை சேர்ப்பவர்களாவோம்.

ஆச்சரியக் குறியைக் கேள்விக் குறியாக்கியவர்.:
முதிர் வயதினருக்கு மகிழ்வே, தன் பிள்ளைகளின் பேரப்பிள்ளைகளின் உடன் இருப்பும் உறவும் தான். அவர்களது எதிர்காலமே, குழந்தைகளின் வாழ்வும் வளர்ச்சியும் தான். அவர்களது சிறு சிறு அசைவிலும், சொல்லிலும், செயலிலும் உலகத்தையும் தன்னையும் மறந்து மகிழ்வடைவர். அத்தகையதொரு எல்லையில்லா மகிழ்வை அன்னாள் சுவக்கீன் என்னும் தன் பெற்றோருக்கு கொடுக்கின்றார் அன்னை மரியாள். தங்களது வாழ்வு இப்படியே முடிந்து விடுமோ என்று எண்ணி ஏங்கியவர்களுக்கு புது வாழ்வாய் உதயமாய் பிறக்கின்றார். பெரியவர்களின் எதிர்கால வாழ்வு பற்றிய கேள்விக்குறியை ஆச்சரியக் குறியாக மாற்றி மகிழ்வு தருகின்றார். அன்னை மரியாள். நாம் என்றாவது கேள்விக்குறியாக இருப்பவர்களின் வாழ்வை ஆச்சரியக் குறியாக மாற்றி இருக்கின்றோமா? அதாவது, பிறரின் வாழ்விற்கு வளம் சேர்த்த நாட்கள் நேரங்கள் உண்டா? என சிந்திப்போம். குறைந்த பட்சம் ஆச்சரியக்குறியுடன் (மகிழ்வுடன் ) வாழ்பவர்களின் வாழ்வை கேள்விக்குறியாக ( குழப்பமாக ) மாற்றாதிருக்க முயல்வோம். பெரியவர்களோ சிறியவர்களோ அவர்களின் மகிழ்விற்கு மகிழ்வு சேர்க்கும் காரணிகளாக வாழ முயல்வோம்.

தாயவதற்காக தரணி வந்தவர்:
நம் ஒவ்வொருவரின் பிறப்பிற்கும் ஒரு காரணம் உண்டு. அதுபோல நாம் வாழ்கிறோமா என்றால் அது யோசிக்க வேண்டிய ஒரு விசயம். ஆனால் அன்னை மரியாளின் பிறப்பிற்கு காரணம் அவர் இறைமகனின் தாயாக வேண்டும் என்ற ஒரு காரணமே. நான் மருத்துவராவேன் பொறியியலாளராவேன் விஞ்ஞானியாவேன் என்று சிறு வயதில் சொல்லித் திரியும் குழந்தை, காலப் போக்கில் அதை மறந்து விடும். ஒவ்வொரு முறையும் யார் அதன் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகிறார்களோ அவராக மாறவேண்டும் என முடிவு செய்யும். அதையே பிறரிடம் வெளிப்படுத்தவும் செய்யும். உதாரணத்திற்கு தன் அம்மா அப்பா போல,தன் உறவினர்கள் போல, தான் பார்க்கும் விளையாட்டு நிகழ்ச்சிகளின் கதை மாந்தர் போல என் தன் முடிவை மாற்றிக் கொண்டே இருக்கும். இறுதியில் தனக்கென்று ஒரு துறையை, வளர்ந்த பின் தேர்ந்தெடுத்து அதுவாக மாற முயற்சிக்கும். ஆனால் அன்னை மரியாள் அப்படியில்லை. சிறுவயது முதலே இறைவனின் தாயாகும் நிலைக்கு தன்னை தகுதிப்படுத்துகிறாள். அவர் அறியாமலேயே அப்பண்பு அவரை அந்நிலைக்கு உயர்த்துகிறது பிறக்கும் போதும் வளரும் போதும் வளர்ந்த பின்பும் என எல்லா நேரத்திலும் இறைவனின் தாயாகவே உருமாறுகிறார். நமது பிறப்பின் நோக்கம் என்ன? நமக்கென்று கொடுக்கப்பட்டுள்ள இறைத்திருவுளத்தை நாம் நிறைவேற்றுகின்றோமா? சிந்திப்போம். எனவே அன்னையின் பிறப்பு விழாவைக் கொண்டாடும் இந்நாளில் அன்னையைப் போல துன்புறும் மனிதர்களுக்கு தூய மகிழ்வைத் தருபவர்களாவோம். எதிர்காலத்தைப் பற்றிய ஏக்கங்களுடன் காத்திருப்பவர்களுக்கு விடைதரும் விழுதுகளாவோம். பிறப்பின் நோக்கத்தை உணர்ந்து செயல்படும் செயல் வீரர்களாகத்திகழ்வோம். அன்னையின் பண்பில் மிளிர்ந்து அவரைப் போல வாழ முயற்சிப்போம். இறையாசீர் என்ன்றும் நம்மோடும் நம் குடும்பத்தார் அனைவர் மீதும் இருப்பதாக ஆமென்.

மீக்கா; 5:2-5
உரோமையர்: 8: 28-3-
மத்தேயு : 1: 1-16,18-23

மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா ம. ஊ. ச.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
மரியாவின் பிறப்பு விழா

"நிலத்துக்கடியில் நிறைந்து கிடக்கும் நீர் கிணற்றில் தெரிவது போல், பசுவின் உடலில் வியாபித்திருக்கும் பால் மடிக்காம்பில் தெரிவதுபோல் தெய்வம் ஒவ்வொருவருக்கும் தாயில் தரிசனம் தருகிறது" வைதீக மதம்.

இன்று அன்னையாம் திருச்சபை அன்னை மரியாவின் பிறப்பு விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. எத்தனையோ தலைவர்களுடைய, எத்தனையோ மனிதர்களுடைய பிறப்பு விழாக்களைக் கொண்டாடுகின்றோம். ஆனால் அன்னையின் பிறப்புவிழாவோ மற்ற எல்லாப் பிறப்பு விழாக்களைவிடவும் தனித்துவமிக்கதாக இருக்கின்றது. ஏனென்றால் அன்னையானவள் நம் அருகிலிருப்பவள்; நமக்கு அடைக்கலம் தருபவள்; நமக்காகப் பரிந்து பேசுபவள். எனவே இப்படிப்பட்ட தாயின் பிறப்பு விழாவைக் கொண்டாவது என்பது நமக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம் என்றே சொல்லலாம்.

மரியாவின் பிறப்பைக் குறித்துச் சொல்லப்படும் ஒரு நிகழ்வு. மரியாவின் பெற்றோர்களான சுவக்கினுக்கும், அன்னாவுக்கும் நீண்ட நாட்கள் குழந்தையே இல்லை. இப்படிப்பட்ட தருணத்தில் மரியாவின் தந்தையாகிய சுவக்கின் பாலைவனத்திற்குச் சென்று, நீண்ட நாட்கள் கடுந்தவம் மேற்கொண்டார். ஒருநாள் கடவுள் அவருடைய ஜெபத்தை கனிவுடன் கண்ணோக்கினார். ஆம், கடவுள் அவரிடம் ஒரு வானதூதரை அனுப்பி, "நான் உன்னுடைய ஜெபத்திற்கு செவி சாய்த்திருக்கிறேன். ஆதலால் உனக்கொரு குழந்தை பிறக்கும்" என்று சொல்லப் பணித்தார். அதன்படியே மரியா, சுவக்கின், அன்னா தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். (இந்த நிகழ்வு திருச்சபையால் அங்கீகரிக்கப்படாத தூய யாக்கோபு நற்செய்தியில் வருகிறது).

மரியாள் கருவில் உதிக்கும்போதே பாவக்கறையின்றி பிறந்தார். உலக மீட்பரும், ஆண்டவருமான இயேசு ஒரு பெண்ணின் வயிற்றில் உதிக்கவேண்டும் என்றால், அவள் பாவ மாசின்றி இருக்கவேண்டும். அதனால்தான் கடவுள் மரியாவை அமல உற்பவியாகத் தோன்றச் செய்தார். மரியாளின் இந்த அமல உற்பவம் கடவுள் தன்னுடைய மகன் இயேசுவின் பொருட்டு மரியாளுக்குக் கொடுத்த மிகப் பெரிய கொடை என்று சொன்னால் அது மிகையாது.

இந்த நல்ல நாளில் மரியாவின் பிறப்பு விழா நமக்கு என்ன செய்தியைத் தருகிறது என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம். தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம் 8:30 ல் கூறுவார், "தாம் முன்குறித்து வைத்தோரை கடவுள் அழைத்திருக்கிறார்; தாம் அழைத்தோரை தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கிறார்; தமக்கு ஏற்புடையோரைத் தம் மாட்சியில் பங்கு பெறச் செய்தார்" என்று. ஆம், தன்னுடைய மீட்புத் திட்டம் நிறைவேற வேண்டும் என்பதற்காக இறைவன் மரியாவைத் தேர்ந்தெடுக்கிறார்; அவரைப் பல்வேறு வரங்களால் அணிசெய்கிறார். இறைவன் மரியாவை அழைத்ததும் மரியா, "இதோ நான் ஆண்டவரின் அடிமை உமது சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்கிறார். ஆகவே இறைவனின் மீட்புத் திட்டம் நிறைவேற நம்மையே நாம் அன்னை மரியாவைப் போன்று இறைவனின் கரங்களில் ஒப்புக்கொடுக்க வேண்டும்.

அடுத்ததாக இறைவன் மரியாவை தன்னுடைய மீட்புத் திட்டத்தில் பங்குகொள்ளவேண்டும் என்று அழைத்ததற்குப் பிறகு, மரியா தான் ஆண்டவரின் தாய் என்ற ஆணவத்தில் வாழவில்லை, மாறாக அவள் தாழ்ச்சி நிறைந்தவளாகவே இருக்கிறாள். எந்தளவுக்கு என்றால் தன்னுடைய உறவுக்காரப் பெண்மணியாகிய எலிசபெத் பேறுகாலத்தில் இருக்கிறாள் என்பதை அறிந்து, உடனே அவளுக்கு உதவச் செய்கிறார். ஆண்டவரையே பெற்றெடுக்க இருக்கும் தான் பெரியவள் என்ற ஆணவத்தில் இருக்கவில்லை. இவ்வாறு மரியாள் தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தாழ்ச்சி நிறைந்தவளாகவே விளங்கினாள். அதனால்தான் கடவுள் அவரை மேலாக உயர்த்தினார்.

இறைவாக்கினர் மீக்கா எழுதிய இன்றைய முதல் வாசகத்தில், "எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களில் மிகச் சிறியதாய் இருக்கிறாய். ஆயினும் இஸ்ரேயலை என் சார்பாக ஆளப்போகிறவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்" என்று படிக்கின்றோம். யூதா ஆட்சிமையங்கள் அனைத்திலும் சிறியது. ஆனால் அந்த சிறிய மையத்திலிருந்துதான் இறைவன் தன்னுடைய மகனைத் தோன்றச் செய்தார். அதுபோன்றுதான் மரியா எளியவளாக, தாழ்ச்சி நிறைந்தவளாக இருந்ததால்தான் கடவுள் அவரை உயர்த்தினார். ஆகவே நாம் ஒவ்வொருவரும் மரியாவைப் போன்று தாழ்ச்சி நிறைந்தவர்களாக வாழ்வோம்.

நிறைவாக ஒரு நிகழ்வோடு நிறைவு செய்வோம். புவியீர்ப்பு விசையைக் கண்டு பிடித்த சர் ஐசக் நியூட்டன் அவர்களுடைய வாழ்வில் நடந்த நிகழ்வு.

நியூட்டன் பிறந்த ஒருசில ஆண்டுகளிலே அவருடைய தந்தையானவர் இறந்துபோனார். தாயும்கூட நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாய் கிடந்தார். ஆனால் அவர் தன்னுடைய மகனுக்காக இறைவனிடம் ஜெபிக்காத நாளில்லை.

பின்னாளில் நியூட்டன் வளர்ந்து பெரிய ஆளானபிறகு சொல்வார், "நான் இன்றைக்கு இவ்வளவு பெரிய மனிதாக வளர்வதற்குக் காரணம் என்னுடைய தாயின் ஜெபம்தான்" என்று. ஆம் தாயின் ஜெபம்தான் அவரை சிறந்த மனிதராக உயர்த்தியது. நமது தாயும் நமக்காக இறைவனிடம் பரிந்து பேசுகிறார். கானாவூர் நிகழ்வு இதற்குச் சான்று.

ஆகவே நமக்காக என்றும் இறைவனிடம் பரிந்துபேசும் அன்னை மரியாவை நமக்குத் தந்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். அவரைப் போன்று இறைத் திட்டம் நிறைவேற நம்மையே இறைவனின் கரங்களில் ஒப்புக்கொடுப்போம், தாழ்ச்சி நிறைந்தவர்களாய் வாழ்வோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம். - Fr Palay Mariaantonyraj, Palayamkottai. 2016




நமக்கு பொண்ணு பொறந்திருக்கு! - Fr YESU KARUNANIDHI ​

'நமக்கு பொண்ணு பொறந்திருக்கு!' - இந்த வார்த்தைகளுடன்தான் மரியாளின் பிறந்தநாள் விடிந்திருக்கும் நாசரேத் மக்களுக்கு.

விவிலியம் 'ஆண்களின்' நூலாக மட்டுமே இருந்ததால் என்னவோ, ஆண்களின் பிறப்பை மட்டுமே அது பதிவு செய்கிறது. விவிலியத்தில் சொல்லப்பட்டுள்ள பிறப்பு கதையாடல்களை மூன்று தலைப்புக்களின்கீழ் பிரிக்கலாம்: அ. அற்புதமான பிறப்பு, ஆ. அசாதாரணமான பிறப்பு, மற்றும் இ. சாதாரண பிறப்பு, ஆனால் அற்புதமான மீட்பு

அ. அற்புதமான பிறப்பு: ஈசாக்கு (தொநூ 21:1-8), இம்மானுவேல் என்னும் எசேக்கியா (எசா 7:14), சிம்சோன் (நீத 13), சாமுவேல் (1 சாமு 1:19-23), திருமுழுக்கு யோவான் (லூக் 1:5-25, 57-66) மற்றும் இயேசு (லூக் 1:26-38, 2:1-7) ஆகியோரின் பிறப்பு கதையாடல்கள் 'கன்னி அல்லது கருவுற இயலாதவர் கருவுறுதல்' என்னும் 'மாதிரிக் காட்சி' (type-scene) இலக்கியப் பண்பைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்த இலக்கியப் பண்பின் படி முதலில் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு வயது, மலட்டுத்தன்மை அல்லது கன்னிமை தடையாக இருக்கும் (ஆனால் எசேக்கியாவின் பிறப்பில் ஆகாசின் 'உள்ளத்தின் மலட்டுத்தன்மையான' நம்பிக்கையின்மை தடையாக இருக்கிறது). இரண்டவதாக, 'தடை நீங்கும்' என்ற வாக்குறுதி கிடைக்கும். மூன்றாவதாக, கருவுறுதலும், கதாநாயகனின் பிறப்பும் நடக்கும்.

ஆ. அசாதாரணமான பிறப்பு: ஏசா மற்றும் யாக்கோபு (தொநூ 25:19-26), யோசேப்பு (தொநூ 30:22-24), பெரேட்சு மற்றும் செராகு (தொநூ 39:27-30), ஓபேது (ரூத் 4:13-17) ஆகியோரின் பிறப்பு கதையாடல்கள் மேற்காணும் இலக்கிய பண்பைப் பெற்றிராவிட்டாலும், இவர்களின் பிறப்பு ஒரு அசாதரண முறையில்தான் நடந்தேறுகிறது.

இ. சாதாரண பிறப்பு, ஆனால் அற்புதமான மீட்பு: மோசேயின் பிறப்பு (விப 2:1-10) மிக சாதாரணமாக இருந்தாலும், அவர் எகிப்தின் பாரவோனின் கைகளிலிருந்து காப்பாற்றுப்படுதல் ஒரு அற்புதம் போல நடந்தேறுகிறது. இதில் விந்தை என்னவென்றால் பாரவோனின் வாளிலிருந்து மோசேயைத் தப்புவிக்கும் கடவுள் பாரவோனின் மகளின் மடியில் அவரை வளரச் செய்கின்றார்.

மரியாளின் பிறப்பு நிகழ்வு அல்லது கதையாடல் விவிலியத்தில் பதிவு செய்யப்படவில்லையென்றாலும், தொடக்கக் கிறித்தவர்களின் யாக்கோபின் முன்நற்செய்தி அல்லது முதல்நற்செய்தி (Protoevangelium of James) என்ற ஏற்றுக்கொள்ளப்படாத அல்லது ஐயத்துக்கிடமான நற்செய்தியிலும் (பிரிவு 5, எண் 2), இசுலாமியர்களின் திருக்குரானிலும் (3:33-36) பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாக்கோபின் முன்நற்செய்தியின்படி யோவாக்கீம்-அன்னா தம்பதியினர் தங்கள் முதிர்ந்த வயதில் மரியாளைப் பெற்றெடுக்கின்றனர். வானதூதர் ஒருவர் அன்னாவுக்கு மரியாளின் பிறப்பை முன்னறிவிக்க, அன்னாவும் தன் முதிர்வயதில் மரியாளைப் பெற்றெடுக்கின்றார். யோவாக்கீமுக்கும் இரண்டு தூதர்கள் வழியாக அன்னா கருவுற்றிருப்பதும், அதற்காக மாசற்ற பத்து இளம் ஆடுகளை அவர் காணிக்கையாகக் கொண்டு வர வேண்டும் என்பதும் தெரிவிக்கப்படுகிறது. 'மாசுமறுவற்ற ஆடுகளைக் காணிக்கையாக்குதல்' மரியாளின் மாசற்ற அமல உற்பவத்திற்கு உருவகமாக இருக்கிறது என்று நாம் எடுத்துக்கொள்ளலாம்.

திருக்குரானின்படி இம்ரான்-அன்னா தம்பதியினருக்கு மர்யாம் (மரியாள்) பிறக்கின்றார். மர்யாம் பிறந்தவுடன் தன் குழந்தைக்காக கடவுளுக்கு நன்றி செலுத்தும் அன்னா, அந்தக் குழந்தையின்மேல் சாத்தானின் நிழலே படாமல் இறைவன் காத்தருள வேண்டும் என்று மன்றாடுகின்றார்.

மரியாளின் பிறப்பு மேலே நாம் கண்ட மூன்று விவிலியப் பண்புகளையுமே கொண்டிருக்கிறது. பெற்றோர்களின் வயது தடையாக இருக்க, அந்தத் தடையைத் தகர்த்து, இறைவனின் வாக்குறுதியின் கனியாகப் பிறக்கின்றார் மரியாள். மற்றொரு பக்கம், மரியாளின் பிறப்பு சாதாரணமாகத் தெரிந்தாலும், அவர் அற்புதமான முறையில் பாவத்தின் நிழல் படாமல் பாதுகாக்கப்படுகின்றார்.

இந்தப் பெண் குழந்தையின் பிறப்பு நமக்குச் சொல்வது என்ன?

ஷேக்ஸ்பியர் தன் 'பன்னிரண்டாம் இரவு' (பகுதி 2, காட்சி 5) நாடகத்தில் மூன்று வகையான பிறப்பை அல்லது மனிதர்களைப் பற்றிச் சொல்கின்றார்:

'சிலர் பிறக்கும்போதே மேன்மையானவர்களாய்ப் பிறக்கின்றனர்,

சிலரின் மேல் மேன்மை திணிக்கப்படுகிறது,

சிலர் மேன்மையை தாங்களாகவே அடைகின்றனர்!'

சிம்சோன், சாமுவேல் போன்றோர் பிறக்கும்போதே மேன்மையானவர்களாய்ப் பிறக்கின்றனர். மோசே, எசேக்கியா, திருமுழுக்கு யோவான் மற்றும் இயேசுவின் மேல் மேன்மை திணிக்கப்படுகிறது. மரியாள் தானாகவே மேன்மையை அடைகின்றார்.

இதை அப்படியே சதுரங்க ஆட்டத்தின் உருவகமாக சொல்ல வேண்டுமென்றால், மேன்மையாகவே பிறப்பவர்கள் சதுரங்க ஆட்டத்தின் யானை, குதிரை, மந்திரி, இராணி போன்றவர்கள். இவர்கள் கட்டத்தின் எங்கும் தாங்களாகவே பாதையை அமைத்துக் கொண்டு செல்லலாம். மேன்மை தங்கள்மேல் திணிக்கப்படுபவர்கள் சதுரங்கத்தில் இராஜா போன்றவர்கள். இப்படி ஒரு கட்டம், அப்படி ஒரு கட்டம் என்றுதான் இவர்களால் நகர முடியும். ஆனால், இவர்கள் இல்லையென்றால் ஆட்டம் முடிந்துவிடும். மேன்மையை தாங்களாகவே அடைபவர்கள் சிப்பாய்கள் போன்றவர்கள். ஒவ்வொரு கட்டமாகத்தான் இவர்கள் முன்னேறிச் செல்ல முடியும். ஆனால், இப்படி முன்னேறும் அவர்கள் கட்டத்தின் அடுத்த முனையைத் தொட்டுவிட்டார்கள் என்றால் இவர்களைப்போல பலசாலிகள் சதுரங்க ஆட்டத்தில் வேறு யாரும் இல்லை.

தன் பிறப்பு, வளர்ப்பு, திருமணம், தாய்மை, இயேசுவோடு உடனிருப்பு, திருத்தூதர்களுக்குத் துணை என்று ஒவ்வொரு கட்டமாக நகர்ந்த மரியாள், விண்ணிற்கும், மண்ணிற்கும் அரசியாய் இன்று மேன்மையடைந்து நிற்கின்றார்.

நம் பிறப்பு ஒரு வரலாற்று விபத்து அல்ல. 'நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம்திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றவதற்கு முன்பே கடவுள் தம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்' (எபே 1:4). மரியாளைத் தெரிந்து கொண்ட கடவுள் நம்மையும் தெரிந்து கொண்டுள்ளார். நம் அழைப்பு நிலையில் நாம் நம் பிறப்பின் மேன்மையை அடைதலே நம் பிறப்பின் நோக்கம்.

நம் மேன்மையைக் காணும் கடவுள் நம்மைக் கரங்களில் ஏந்தியவாறு சொல்வார்:

'நமக்கு பையன் பொறந்திருக்கு!'

'நமக்கு பொண்ணு பொறந்திருக்கு!'



September 8 - The Nativity of the Blessed Virgin Mary.

Today's Feast is one of the only three birthdays honored in the liturgical year (the others being that of St. John the Baptist and that of Jesus Christ Himself, all three born without original sin, though only Mary and Jesus were free from sin at the moments of their conceptions). We know little about Mary's birth and youth, most of our information coming from the apocryphal Gospel of the Nativity of Mary (translated from the Hebrew by St. Jerome, A.D. 340-420), the Protoevangelium of St. James (dated to ca. A.D. 125), and the visions of various mystics through the years.

There are no specific traditions today, aside from those offered on all Marian Feasts, such as a recitation of the Little Crown of the Blessed Virgin Mary or the Litany of Loreto (You can download this Litany, in Microsoft Word .doc format, in English or in Latin). Having a birthday cake for Mary is a lovely idea, though!

As to prayer, this one to Maria Bambina (the Baby Mary) is most apt:
Hail, Infant Mary, full of grace, the Lord is with thee, blessed art thou forever, and blessed are thy holy parents Joachim and Anne, of whom thou wast miraculously born. Mother of God, intercede for us.

We fly to thy patronage, holy and amiable Child Mary, despise not our prayers in our necessities, but deliver us from all dangers, glorious and blessed Virgin.


Pray for us, holy Child Mary.

That we may be made worthy of the promises of Christ.


Let us Pray: O almighty and merciful God, Who through the cooperation of the Holy Ghost, didst prepare the body and soul of the Immaculate Infant Mary that she might be the worthy Mother of Thy Son, and didst preserve her from all stain, grant that we who venerate with all our hearts her most holy childhood, may be freed, through her merits and intercession, from all uncleanness of mind and body, and be able to imitate her perfect humility, obedience and charity. Through Christ Our Lord. Amen.
There is also this marvelous prayer in honour of Our Lady's Nativity, written by St. Anselm:
Vouchsafe that I may praise thee, O sacred Virgin; give me strength against thine enemies, and against the enemy of the whole human race. Give me strength humbly to pray to thee. Give me strength to praise thee in prayer with all my powers, through the merits of thy most sacred nativity, which for the entire Christian world was a birth of joy, the hope and solace of its life.

When thou wast born, O most holy Virgin, then was the world made light.

Happy is thy stock, holy thy root, and blessed thy fruit, for thou alone as a virgin, filled with the Holy Spirit, didst merit to conceive thy God, as a virgin to bear Thy God, as a virgin to bring Him forth, and after His birth to remain a virgin.

Have mercy therefore upon me a sinner, and give me aid, O Lady, so that just as thy nativity, glorious from the seed of Abraham, sprung from the tribe of Juda, illustrious from the stock of David, didst announce joy to the entire world, so may it fill me with true joy and cleanse me from every sin.

Pray for me, O Virgin most prudent, that the gladsome joys of thy most helpful nativity may put a cloak over all my sins.

O holy Mother of God, flowering as the lily, pray to thy sweet Son for me, a wretched sinner. Amen


--------------------------------------------------------

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
அன்னை மரியாளின் பிறப்பு விழா - 2015

இன்று திருச்சபையானது நமது அன்னையும், பாதுகாவலியுமான தூய மரியாளுடைய பிறப்பு விழாவைக் கொண்டாடுகிறது. இறைவனின் தாய், திருச்சபையின் தாய், மீட்பரின் தாய் என்று பல்வேறு சிறப்புப் பெயர்களோடு அழைக்கப்படக்கூடிய நமது அன்னையின் பிறந்த நாள் விழாவை நாம் கொண்டாடுவது என்பது, நமக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.

தூய அகுஸ்தினார் இவ்விழாவைப் பற்றிக் கூறும்போது பின்வருமாறு எழுதுவார். நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பெருவிழா வந்துவிட்டது. ஆம், மரியாளின் பிறப்புவிழாதான் நாம் ஆவலுடன் எதிர்பார்த்த அந்தப் பெருவிழா. மரியாள் மண்ணில் தோன்றிய விண்மலர். அவருடைய வருகையால்தான் முதல் பெற்றோரிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட தூசிபடிந்த மனித இயல்பு மாற்றம் பெற்று, மேன்மை அடைந்தது. ஆம், மரியாள் மீட்பரை உலகிற்கு கொண்டு வந்த நற்கருணைப் பேழையாக இருந்ததனால்தான் நாம் நமது பாவங்களிலிருந்து கழுவப்பட்டு தூயவர்களாக இருக்கிறோம்; புதுவாழ்வை அடைந்தவர்களாக இருக்கிறோம்.

மரியாளின் பிறப்பு விழா நமக்கு என்ன செய்தியைத் தருகிறது என்று சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னால், இவ்விழாவின் வரலாற்றுப் பின்னணியை சற்று அறிந்துகொள்வோம்.

மரியாளின் பெற்றோர்களான சுவக்கீனும், அன்னாளும் பல ஆண்டுகளாகக் குழந்தைப் பேறு இல்லாது முதுமை அடைந்திருந்தனர். இந்த வேளையில் வானதூதர் அவர்களுக்குத் தோன்றி, குழந்தை ஒன்று அருளப்படும் என்று சொன்னார். அதுபோல பத்தாம் மாதத்தில் மரியாள் அவர்களுக்குக் குழந்தையாகப் பிறந்தார். கடவுள் தங்களுக்கு முதிர்ந்த வயதில் குழந்தைப்பேறு தந்து ஆசிர்வதித்தால், அவருடைய பெறோர்கள் அவரை மூன்று வயதில் கோவிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தனர் என்று திருச்சபை மரபு சொல்கிறது.

மரியாளின் பிறப்பு விழா ஏன் செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி கொண்டாடப்படுகிறது என்பதற்கான ஒரு மரபுக் கதை உண்டு. முன்பொரு காலத்தில் வாழ்ந்த ஒரு துறவி, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி இனிமையான ஓர் இசையைக் கேட்டு, மகிழ்ந்து ஆச்சர்யப்பட்டார். ஆனால் அந்த இசை அவருக்கு எங்கிருந்து வருகிறது என்பதுதான் தெரியாமல் இருந்தது. எனவே பல ஆண்டுகள் கடவுளிடம் அதை வெளிப்படுத்தும்படி வேண்டினார். இறுதியாக கடவுளும் ஒரு நாள், அதே செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி அவருக்கு அந்த உண்மையை வெளிப்படுத்தப்போவதாக கூறினார். அந்தத் துறவியும் அதற்குச் சரி என்று ஒத்துக்கொண்டார்.

குறிக்கப்பட்ட அந்தநாள் வந்தது. அப்போது கடவுள், விண்ணகத்தில் வானதூதர்கள் அன்னை மரியாளுக்குப் பிறந்தநாள் விழா எடுத்துக் கொண்டாடுவதையும், அதிலே அந்த குறிப்பிட்ட இசை வாசிக்கப்படுவதையும் காட்டினார். இதைப் பார்த்து வியந்துபோன அந்தத் துறவி, அந்த இனிமையான இசை அன்னையின் பிறப்பு விழாவின்போது வானதூதர்கள் எழுப்பக்கூடியது என்பதை உணர்ந்து கொண்டார். பின்னர் நாமும் நமது அன்னைக்கு இந்த உலகத்தில் விழா எடுக்க வேண்டும் என்று திருத்தந்தையிடம் சென்று சொன்னார். அப்பொழுது திருத்தந்தையாக இருந்த 14ம் ஆசீர்வாதப்பர் உலகத் திருச்சபை அன்னையின் பிறப்பு விழாவினைச் செப்டெம்பர் 8 ஆம் தேதி கொண்டாட வேண்டும் என்று அறிவித்தார். அதன்படி அன்னையின் திருவிழா ஓவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இன்று இவ்விழாவிலே நாம் படிக்கக்கேட்ட முதல் வாசகத்தில் ஆண்டவர் கூறுகிறார், பெத்லகேமே! யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதாக இருக்கின்றாய். ஆயினும் என் சார்பாக உன்னை ஆளப்போகிறவர் உன்னிடமிருந்தே தோன்றுவார் என்று. நாம் பிறப்பால், சூழ்நிலையால் சிறியவர்களாக, கடையவர்களாக இருந்தாலும், கடவுளின் திட்டத்தின்படி நடகின்றபோது கடவுள் நம்மை மேலும், மேலும் ஆசிர்வதிப்பார் என்பதே உண்மை. அதற்கு அன்னை மரியாளின் வாழ்க்கையே மிகப்பெரிய சான்றாக இருக்கிறது.

அன்னை மரியாள் இறைவனின் திட்டத்தின்படி நடந்ததால் அவரைக் கடவுள் இறைவனின் தாயாகின்ற அளவுக்கு உயர்த்துகிறார். லூக் 1:53 ல் வாசிக்கின்றோம், தாழ்நிலையில் இருப்போரை கடவுள் உயர்த்துகின்றார் என்று. நாம் தாழ்நிலையில் இருந்தபோதும் இறைவனின் விருப்பத்தின்படி நடக்கும்போது இறைவன் நம்மை உயர்த்துவார் என்பதை உணர்ந்து வாழ்வோம்.

அடுத்ததாக அன்னையின் பிறப்புவிழாவை இன்று கொண்டாடும் என்று சொன்னால் நாம் நமது அன்னையை, தாய், தந்தையை பாதுகாத்து, பராமரிப்பது நமது கடமை என்பதை உணர்ந்து செயல்பட அழைக்கப்படுகிறோம். இயேசு, தான் சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தபோதுகூட, தன் அன்னை நம் அன்னை ஒருபோதும் கைவிடப்பட்டவராக ஆகிவிடக்கூடாது என்பதற்காக அவரை தனது அன்புச் சீடரிடம் ஒப்படைத்து, பராமரிக்கச் சொல்கிறார். இதுதான் இயேசு அன்னை மரியாள்மீது கொண்ட உயர்ந்த அன்பாக இருக்கிறது. நாமும் நமது அன்னையை, தாய்தந்தையை சிறப்பாகப் பராமரிக்கவேண்டும் என்பதே இயேசு நமக்குச் சொல்லக்கூடிய போதனையாக இருக்கிறது.

பழைய பாடல் ஒன்று தாயின் மடிதான் உலகம். அவள் தாழைப் பணிந்திடுவோம் என்று. ஆம், அன்னைக்கு பணிந்து நாம் சேவை செய்கிறபோது அது ஆண்டவனுக்கே செய்யக்கூடியதாக இருக்கிறது.

ஒரு காலத்தில் பயாசித் என்ற இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் ஆன்மீக உண்மைகளை அறிந்துகொள்வதற்காக வீட்டில் இருக்கக்கூடிய தன்னுடைய தாயை விட்டுவிட்டு காடு, மலை என்று பல ஆண்டுகள் சுற்றித் திரிந்தான். ஆனால் அவனால் ஆன்மீக உண்மைகளை அறிந்துகொள்ள முடியவில்லை. இறுதியில் சோர்ந்துபோய் வீடு திரும்பினான்.

அப்போது அவனுடைய தாய் வீட்டில், கடவுளே! என்னுடைய மகனை பார்த்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அவன் எங்கிருந்தாலும் நல்லா இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டிருந்தார். இதைக் கேட்ட மகன், தன் தாயின் அன்பை நினைத்து கண்ணீர் விட்டு அழுதான். அதன் பின்னர் தாயின் காலடியில் இருந்து அவருக்கு சேவை செய்துவந்தான்.

ஒருநாள் இரவு திடிரென்று தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த அவனுடைய தாய் தண்ணீர் தண்ணீர் என்று கதறினாள். அந்த நேரத்தில் வீட்டில் தண்ணீர் ஏதும் இல்லாததால் எங்கெல்லாமோ அலைந்து திரிந்து தண்ணீர் கொண்டு வந்தான். அந்தத் தண்ணீரைக் குடித்த அந்தத் தாய் அவனை நிறைவாய் ஆசிர்வதித்தார். அப்போது அவன் இத்தனை ஆண்டுகள் தேடிப்பெறாத ஆன்மீக உண்மைகளை அறிந்துகொண்டான். பிற்காலத்தில் அவன் மிகப்பெரிய ஞானியானான்.

தாயே நமது வாழ்வில் எல்லா நலனுக்கும், ஆசிருக்கும் ஊற்று என்பதை இந்நிகழ்வு நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

எனவே அன்னையின் பிறப்புவிழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் அன்னையின் வழி நடப்போம். அவரைப் போன்று இறைத்திருவுளம் நிறைவேற்றுவோம். அத்தோடு நம் தாய், தந்தையரைப் பேணி வளர்ப்போம். இறையருள் பெறுவோம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
================================================================================

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!