Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      07  செப்டம்பர் 2018  
                                                           பொதுக்காலம் 22ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
உள்ளங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் (4: 1-5)

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியர்கள், கடவுளின் மறை உண்மைகளை அறிவிக்கும் பொறுப்புடையவர்கள் எனக் கருத வேண்டும். பொறுப்பாளர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாய்க் காணப்பட வேண்டும் என எதிர்பார்க்கலாம் அன்றோ!

என்னைப் பொறுத்தமட்டில் எனக்கு எதிராக நீங்களோ மக்களின் நீதிமன்றமோ தீர்ப்பளித்தால் அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்பட மாட்டேன். எனக்கு நானே தீர்ப்பளித்துக் கொள்ளவும் மாட்டேன். எனக்கு எதிராகக் குற்றம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆயினும் நான் குற்றமற்றவனாகி விடமாட்டேன். எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் ஆண்டவர் ஒருவரே. எனவே, குறித்த காலம் வருமுன், அதாவது ஆண்டவரின் வருகைக்கு முன் யாருக்கும் தீர்ப்பளிக்க வேண்டாம். அவரே இருளில் மறைந்திருப்பவற்றை வெட்ட வெளிச்சமாக்குவார்; உள்ளங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார். அப்பொழுது ஒவ்வொருவரும் கடவுளிடமிருந்து பாராட்டுப் பெறுவர்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 37: 3-4. 5-6. 27-28. 39-40 (பல்லவி: 39a)
=================================================================================
பல்லவி: நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது.

3 ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்; நாட்டிலேயே குடியிரு; நம்பத்தக்கவராய் வாழ்.
4 ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்; உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார்.
-பல்லவி

5 உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார்.
6 உன் நேர்மையைக் கதிரொளி போலும், உன் நாணயத்தை நண்பகல் போலும் அவர் விளங்கச் செய்வார்.
-பல்லவி

27 தீமையினின்று விலகு; நல்லது செய்; எந்நாளும் நாட்டில் நிலைத்திருப்பாய்.
28 ஏனெனில், ஆண்டவர் நேர்மையை விரும்புகின்றார்; தம் அன்பரை அவர் கைவிடுவதில்லை; அவர்களை என்றும் பாதுகாப்பார். பொல்லாரின் மரபினரோ வேரறுக்கப்படுவர்.
-பல்லவி

39 நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது, நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு வலிமையும் அவரே.
40 ஆண்டவர் துணைநின்று அவர்களை விடுவிக்கின்றார்; பொல்லாரிடமிருந்து அவர்களை விடுவிக்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகுந்ததால், அவர்களை மீட்கின்றார்.
-பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(யோவா 8: 12)

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்க மாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மணமகன் பிரியவேண்டிய காலம் வரும்; அப்போது நோன்பு இருப்பார்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (5: 33-39)

அக்காலத்தில் பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவை நோக்கி, "யோவானுடைய சீடர்கள் அடிக்கடி நோன்பு இருந்து மன்றாடி வருகிறார்கள்; பரிசேயர்களின் சீடரும் அவ்வாறே செய்கின்றனர். உம்முடைய சீடரோ உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனரே!" என்றார்கள்.

இயேசு அவர்களை நோக்கி, "மணமகன் மணவிருந்தினர்களோடு இருக்கும் வரை அவர்களை நோன்பு இருக்கச் செய்யலாமா? ஆனால் மணமகன் அவர்களை விட்டுப் பிரிய வேண்டிய காலம் வரும்; அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்" என்றார்.

அவர் அவர்களுக்கு ஓர் உவமையையும் கூறினார்: "எவரும் புதிய ஆடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அதைப் பழைய ஆடையோடு ஒட்டுப் போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப் போட்டால் புதிய ஆடையும் கிழியும்; புதிய துண்டும் பழையதோடு பொருந்தாது. அதுபோலப் பழைய தோற்பைகளில் எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை; ஊற்றி வைத்தால் புதிய மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும். மதுவும் சிந்திப் போகும்; தோற்பைகளும் பாழாகும். புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைக்க வேண்டும். பழைய திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்ப மாட்டார்; ஏனெனில் `பழையதே நல்லது' என்பது அவர் கருத்து."

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
நம் சார்பாக இருக்கும் இயேசு!

புகழ்பெற்ற அறிஞரான பெஞ்சமின் ஜோவேட் (Benjamin Jowett) என்பவரிடம் மூதாட்டி ஒருத்தி வந்தார். அவர் பெஞ்சமின் ஜோவேட்டிடம், "எவ்வளவோ பெரிய அறிஞர் நீங்கள். அப்படிப்பட்ட நீங்கள், கடவுளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"என்று கேட்டார்.

பெஞ்சமின் ஜோவேட் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டுச் சொன்னார், "கடவுளைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பதை விடுங்கள். ஆனால், கடவுள் எப்போதும் நம்மைப் பற்றியேதான் நினைத்துக்கொண்டிருக்கின்றார்".

ஆம், கடவுள் எப்போதும் நம்மைப் பற்றியேதான் நினைத்துக்கொண்டு, நம் சார்பாகவே இருக்கின்றார். இதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது. கடவுள் எப்போதும் நம்மைப் பற்றியே தான் நினைத்துக்கொண்டுதான் இருக்கின்றார்; நம் சார்பாகத்தான் இருக்கின்றார் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இன்றைய நற்செய்தி வாசகம். அவர் எப்படி நம் சார்பாக இருக்கின்றார் என்பதைக் குறித்து இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

நற்செய்தி வாசகத்தில் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் இயேசுவிடம் வந்து, "யோவானுடைய சீடர்கள் அடிக்கடி நோன்பிருந்து மன்றாடி வருகிறார்கள்; பரிசேயர்களின் சீடரும் அவ்வாறே செய்கின்றனர். உம்முடைய சீடரோ உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனரே!"என்கின்றனர். இதைக் கேட்கும் இயேசு, அப்படியா சங்கதி, இருங்கள் அவர்களைக் கவனித்துக்கொள்கிறேன் என்று கம்பெடுத்துக்கொண்டு அடிக்கப் புறப்பட்டுவிட வில்லை. மாறாக அவர்கள் சார்பாக, அவர்களுக்கு அனுசரணையாக, "மணமகன் மனவிருந்தினர்களோடு இருக்கும் வரை அவர்களை நோன்பிருக்கச் செய்யலாமா? ஆனால் மணமகன் அவர்களை விட்டுப் பிரிய வேண்டிய காலம் வரும்; அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்"என்று பேசுகின்றார்.

இங்கே இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்கள் சார்பாக இருப்பதற்கு முதல்காரணம், அவர்கள் பரிசேயர்களின் சீடர்களைப் போன்றோ அல்லது யோவானின் சீடர்களைப் போன்று ஒறுத்தல் முயற்சி, கடுந்தவத்திற்குப் பழக்கப்பட்டவர்கள் அல்ல, அவர்கள் சாதாரண மனிதர்கள், படிப்பறிவில்லாத பாமர மக்கள். அதனால்தான் இயேசு அவர்கள் சார்பாக நின்று பேசுகின்றார்.

இயேசு தன்னுடைய சீடர்கள் சார்பாகப் பேசுவதற்கு இன்னொரு காரணம், பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் குற்றம் காண்பதையே தங்களுடைய குலத்தொழிலாக வைத்துச் செயல்பட்டவர்கள். சாதாரண மனிதர்களே விட்டுவைக்காதவர்கள், தங்களை எப்போதும் கேள்விக்கணையால் துளைத்துக்கொண்டிருக்கும் இயேசுவின் சீடர்களையா விட்டு வைப்பார்கள்? நிச்சயம் விட்டு வைக்கமாட்டார்கள். அதனால்தான் நல்ல மனதோடு அல்லாமல், குற்றம் காணும்நோக்குடன் வந்த பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களுக்கு எதிராகவும் தன்னுடைய சீடர்களுக்குச் சார்பாகவும் இயேசு இருக்கின்றார்.

இயேசு தன்னுடைய சீடர்கள் சார்பாக நின்று பேசக்கூடிய அதே வேளையில் அவர்கள் எப்போதும் நோன்பிருப்பார்கள், அவர்கள் நோன்பிருப்பதன் அவசியத்தையும் அவர்களுக்கு அவர் எடுத்துச் சொல்கின்றார். தங்களை பக்தி மான்கள், நேர்மையாளர்கள் எனக் காட்டிக்கொள்ள விரும்பி பரிசேயக் கூட்டம் நோன்பிருந்தது. ஆனால் தன்னுடைய சீடர்கள் அப்படி நோன்பிருக்க மாட்டார்கள். மாறாக, தன்னுடைய இரண்டாம் வருகைக்காக நோன்பிருப்பார்கள் என்பதை அவர்களுக்கு எடுத்துச் சொல்கின்றார். இவ்வாறு இயேசு தன்னுடைய சீடர்கள்மீது குற்றம் சுமத்தும் நோக்குடன் வந்த பரிசேயயர்களையும் மறைநூல் அறிஞர்களையும் வாயடைக்கச் செய்கின்றார்.

படைப்பில் இருக்கின்ற சாதாரண உயிரினங்களையே கண்ணின் கருவிழி போல பராமரிக்கும் இறைவன் இயேசு தன்னுடைய மக்களை அதுவும் தன்னுடைய சீடர்களைக் காத்திடாது விடுவாரோ. நிச்சயமாகக் காப்பார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் கூறுவார், "கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக்கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்?"(உரோ 8:35) என்று. ஆம், கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மை ஒன்றும் பிரிக்க முடியாது. அவருடைய அன்பும் அருட்காவலும் அவருக்கு உரியவர்களுக்கு வாழ்நாள் முழுக்க தொடர்ந்து கிடைக்கும் என்பதே உண்மை.

ஆகவே, இயேசுவின் வழி நடப்பவர்களாகட்டும் அவருடைய சீடர்களாகட்டும் பகைவர்களைக் கண்டோ, அல்லது இன்னல் இக்கட்டுகளைக் கண்டோ பயப்படத் தேவையில்லை. காரணம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம் அருகே நின்று, நம் சார்பாகச் செயல்படுகின்றார். ஆகையால் நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவருடைய கைகளில் நம்மையே நாம் ஒப்படைத்துவிடுவதுதான். அவருடைய கையில் நம்மை நாம் ஒப்படைக்கும்போது நமக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை.

எனவே, நம் சார்பாகச் செயல்படும் இயேசுவின் கைகளில் நம்மையே நாம் ஒப்படைத்துவிட்டு, அவர் வழியில் நாம் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
உண்மையான நோன்பு எது?

ஒரு காலத்தில் ஓர் அடர்ந்த வனத்தில் ஜஜாலி எனும் துறவி வாழ்ந்து வந்தார். அந்த துறவி மிகவும் எளிமையான ஒரு வாழ்க்கைமுறையைக் கடைப்பிடித்து வந்தார். நெடுங்காலமாக தவமிருந்து நிறைய ஆன்மீக அறிவைப் பெற்றார். ஆயினும் இதனால் அவர் தற்பெருமை கொள்ள ஆரம்பித்தார். "இந்த உலகத்திலே நான் தான் சிறந்த ஞானி. என்னுடைய தவோபலத்தால்/ நோன்பால் நான் அளவற்ற ஆன்மீக அறிவைப் பெற்றுவிட்டேன். என்னைவிட சிறந்தவன் யாருமே இல்லை"என சத்தமாக சூளுரைத்தார்.

அப்போது அசரீரியாக ஒரு குரல் கேட்டது. அந்த குரல், "அவ்வாறு தற்பெருமை கொள்ளலாகாது ஜஜாலி. ஊருக்குள் துலாதரன் எனும் வணிகன் இருக்கிறான். அறிவிலும் செயலிலும் உம்மை விட சிறந்தவன் அவன். எனினும் அவன் கூட இவ்வாறு தற்பெருமை கொண்டதில்லை."என்றது.

ஜஜாலி வியப்படைந்தார். துலாதரன் என்பவர் யார்? அவர் தம்மை விட சிறந்தவனாக இருப்பது எப்படி? என ஆராய்ந்து அறிந்து கொள்ள ஆவல் கொண்டார். உடனே ஜஜாலி ஊருக்குள் சென்று துலாதரனைப் பற்றி விசாரித்தார். நெடுநேர தேடலுக்குப் பின்னர், வாரணாசியின் சந்தை ஒன்றில் அவரைக் கண்டார். துலாதரன் ஜஜாலியைக் கண்டவுடன் பணிவுடன் எழுந்து கைக்கூப்பி வணங்கினார். "துறவியாரே, உங்களின் வருகையால் நான் மிகவும் அக மகிழ்கிறேன்."என்று சொன்னார்.

ஜஜாலியும் தன் வருகைக்கான காரணத்தைக் கூறினார். வனத்தில் அசரீரியாக எழுந்த குரல் சொன்னதையும் துலாதரனிடம் கூறினார். துலாதரனும் புன்னகைத்தபடி, "துறவியாரே, தங்களைப் பற்றியும் தங்களின் வாழ்க்கையைப் பற்றியும் நான் நன்கு அறிந்திருக்கிறேன். உங்களின் துறவற வாழ்க்கை எனக்கொரு சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது"என சொன்னார். துலாதரனும் சில நேரம் பேசினார். அவரின் அறிவாற்றல் மிகுந்த பேச்சு ஜஜாலியை வியப்பில் ஆழ்த்தியது.

ஒரு வணிகனுக்கு இவ்வளவு ஞானமா? எப்பொழுதும் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஒருவன் எவ்வாறு இவ்வளவு ஞானத்தைப் பெற்றிருப்பான்? என்று சிந்திக்கலானார். "துலாதரா, உமக்கு எவ்வாறு இவ்வளவு ஞானம் கிடைத்தது?"என கேட்டார். அதற்கு அவர் "துறவியாரே, நான் ஒரு வணிகன் தான். அன்றாடம் பண்டங்களை வாங்குதல் மற்றும் விற்றல் என செய்துவருகிறேன். ஆனால் என்னுடைய ஒவ்வொரு செயல்களிலும் எந்தவொரு உயிரும் துன்புறுத்தப்படுவதில்லை; என்னால் இயன்றவரை மற்றவர்களுக்கு நன்மைகள் செய்கிறேன். தவறியும் மற்றவர்களுக்கு கேடு விளைவிக்க நினைத்ததில்லை. யாரிடமும் கடுமையாக நடந்து கொண்டதில்லை. நான் யாரையும் இதுவரை வெறுத்து ஒதுக்கியதுமில்லை."எனக் கூறினார்.

"இதுவே, நல்லொழுக்கம் என சான்றோர்கள் கூறுவது. இதனாலே ஒருவன் பக்குவநிலை அடைந்து ஞானமடைகின்றான். இதைவிட புண்ணிய செயல் பிரிதில்லை."எனவும் துலாதரன் தொடர்ந்தார். பிறகு துலாதரன் நிறைய நல்ல விஷயங்களை எடுத்துக் கூறினார்.

துலாதரனின் அகன்ற அறிவாற்றலும் பக்குவநிலையும் ஜஜாலியின் மனக்கண்ணைத் திறந்தன. ஜஜாலியின் ஆணவமும் தற்பெருமையும் ஒழிந்துபோக அவர் துலாதரனை கைக்கூப்பி வணங்கினார். இருவரும் சிறந்த நண்பர்களாகி நிறைய கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

உண்மையான தவம்/நோன்பு ஒருவரிடத்தில் அன்பையும், பிறர்மீது கரிசனையையும் வளர்க்கவேண்டுமே ஒழிய ஆணவத்தையும், அகங்காரத்தையும் வளர்க்கக்கூடாது என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவானின் சீடர்கள் இயேசுவிடம் வந்து, "நாங்களும் பரிசேயர்களும் நோன்பிருக்க உம்முடைய சீடர்கள் மட்டும் ஏன் நோன்பிருப்பதில்லை"என்று கேட்கின்றனர். அதற்கு இயேசு அவர்களிடம், "மணமகன் மனவீட்டாரோடு இருக்கும்போது அவர்கள் நோன்பிருப்பதில்லை, மாறாக அவர் அவர்களைவிட்டுப் பிரியும் காலம் வரும், அப்போது அவர்கள் நோன்பிருப்பார்கள்"என்கிறார். அதாவது நோன்பிருக்க ஒரு காலமுண்டு அதை அந்தந்த நேரத்தில் செய்தால்போதும் என்பதுதான் இயேசுவின் பதிலாக இருக்கின்றது.

இங்கே நாம் ஒரு காரியத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். ஒருவர் நோன்பிருப்பதும், இருக்காததும் அவரவர் விருப்பம். அதை மற்றவர்கள் மீது திணிக்கக்கூடாது. திருமுழுக்கு யோவானின் சீடர்கள் நோன்பிருந்தார்கள் என்றால், அவர்கள் அவர்களுடைய விருப்பப்படி செய்திருக்கலாம். அதற்காக இயேசுவின் சீடர்கள் நோன்பிருக்கவில்லை என்று கேட்பது வேடிக்கையாக இருக்கிறது. பல நேரங்களில் நாமும் பிறர்மீது நம்முடைய கருத்துகளை, எண்ணங்களை திணிக்கிறோம். இது ஒருவிதத்தில் வன்முறைதான்.

ஆகவே, நோன்பிருப்பது/ இருக்காதது ஒருவருடைய தனிப்பட்ட விருப்பம் என உணர்ந்துகொள்வோம். மேலும் நாம் மேற்கொள்ளும் நோன்பு நம்மில் பிறர்மீதான அக்கறையை வளர்க்கிறதா? என்று சிந்தித்துப் பார்ப்போம். இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
"பழைய திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்பமாட்டார். ஏனெனில் 'பழையதே நல்லது' என்பது அவர் கருத்து" (லூக்கா 5:39)

கடவுளாட்சியைப் பல உவமைகள் வழியாக விளக்கினார் இயேசு. அவர் கூறிய உவமைகளில் திருமணம், மணமகன், திருமண விருந்து போன்ற உருவகங்கள் இறையாட்சியின் பண்புகள் யாவை என எடுத்துக் கூறப் பயன்பட்டன. இயேசு தம்மை மணமகனுக்கு ஒப்பிடுகிறார். கடவுள் நம்மோடு பகிர்ந்துகொள்கின்ற புதிய வாழ்வை மணவிருந்தாக உருவகிக்கிறார். விருந்துக்குச் செல்வோர் அங்கு பரிமாறப்படுகின்ற சுவையான உணவை உண்டு மகிழ்வர்; குடிப்பதற்கு வழங்கப்படுகின்ற திராட்சை மதுவைப் பருகி ஆனந்தம் கொள்வர். இயேசு வாழ்ந்த பாலஸ்தீன நாட்டில் நல்ல தரமான திராட்சைச் செடிகள் வளர்ந்தன. அவற்றிலிருந்து பெறப்பட்ட பழங்களிலிருந்து சுவையான திராட்சை மது தயாரிக்கப்பட்டது. திருமண விருந்துகளின்போதும் பிற கொண்டாட்டங்களிலும் திராட்சை மது அருந்துவது வழக்கமாக இருந்தது. ஆக, விழாவுக்குச் செல்வோர் நோன்பிருப்பதை நிறுத்திவிட்டு உண்டு குடித்து மகிழ்வது இயல்பு. இயேசு விருந்துகளில் கலந்துகொண்டார்; ஏன், சாதாரண மக்களோடும் தாழ்த்தப்பட்டவர்களோடும் பாவிகள் என்று கருதப்பட்டவர்களோடும் ஒரே பந்தியில் அமர்ந்து அவர் உணவு அருந்தினார்; திராட்சை மது குடித்தார். இது பரிசேயருக்குப் பிடிக்கவில்லை. இயேசுவும் அவர்தம் சீடர்களும் நோன்பிருக்கவில்லை என்பது பரிசேயரின் குற்றச்சாட்டு. ஆனால் இயேசுவோ பரிசேயரின் வெளிவேடத்தைக் கடிந்துகொள்கின்றார். அவர்கள் பழைமையில் ஊறிப்போய், புதிதாக மலர்ந்திருக்கின்ற காலத்தில் புகுவதற்கு இன்னும் தயாராக இல்லை என அவர்களுக்குச் சுட்டிக்காட்டுகிறார்.

மேலும், திராட்சை மது எவ்வளவு பழையதாக இருக்கிறதோ அவ்வளவு தரத்திலும் சுவையிலும் சிறந்ததாக இருக்கும் என்னும் அனுபவ உண்மை வழியாக இயேசு கடவுளாட்சி பற்றிய ஆழ்ந்த கருத்தினை எடுத்துரைக்கிறார். பரிசேயரும் பிறரும் பழைய திராட்சை மதுவே நல்லது என்பதில் ஓரளவு உண்மை உள்ளது என இயேசு ஒப்புக்கொள்கின்றார். ஏனென்றால் சில பொருள்கள் பழையவை ஆகும்போது நல்ல குணமுடையவையாக மாறக் கூடும். ஆனால் பழைய பொருள்கள் எல்லாமே நல்லவையாக இருப்பதில்லை. பழைய கந்தைத் துணி உடுப்பதற்கு ஏற்றதாக இருப்பதில்லை. வாடிப்போன பழைய காய்கறிகள் சமையலுக்கு நல்லவை அல்ல. அதுபோலவே இயேசுவும் பரியேரின் பழைய போக்குகள் கைவிடப்பட வேண்டும் என்கிறார். இயேசு கொணர்கின்ற புதிய பார்வையும் கண்ணோட்டமும் சிந்தனைப் பாணியும் பழைமையில் ஊறிய பரிசேயருக்கு அபத்தமாகப் பட்டன. அவர்கள் பழையதே போதும், அதுவே நல்லது என ஊறிப்போன போக்கிலேயே நிலைத்துநிற்க விரும்பினார்கள்; சட்டத்தின் பிடியில் மக்களை அமுக்கிவைக்கப் பார்த்தார்கள். ஆனால் இயேசுவோ ஒரு புதிய பார்வையைக் கொணர்ந்தார். இயேசு கொணர்ந்த புதிய பார்வை யாது? கடவுள் எல்லா மனிதரையும் அன்புசெய்கின்றார்; பாவிகளைத் தேடிச் செல்கின்றார்; எந்த மனிதருக்குமே அவர் தம் அன்பையும் இரக்கத்தையும் அளித்திட மறுப்பதில்லை; மனம் திரும்பி அவரைத் தேடிச்செல்வோரை அவர் இருகரம் விரித்து வரவேற்கக் காத்திருக்கிறார். - இதுவே இயேசு கொணர்ந்த புதிய பார்வை; புதிய செய்தி (காண்க: லூக் 5:31-32). இப்புதிய பார்வையையும் புதிய அணுகுமுறையையும் நாம் ஏற்று நம் வாழ்வோடு இணைக்கும்போது பழைய பார்வையும் பழைய அணுகுமுறையும் தாமாகவே மறைந்து போகும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!