Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                      04  செப்டம்பர் 2018  
                                                           பொதுக்காலம் 22ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
மனித இயல்பை மட்டும் உடைய ஒருவர் கடவுளின் ஆவிக்குரியவற்றை ஏற்றுக்கொள்வதில்லை.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் (2: 10b-16)

சகோதரர் சகோதரிகளே, தூய ஆவியாரே அனைத்தையும் துருவி ஆய்கிறார்; கடவுளின் ஆழ்ந்த எண்ணங்களையும் அறிகிறார். மனிதரின் உள்ளத்தில் இருப்பதை அவருள் இருக்கும் மனமேயன்றி வேறு எவரும் அறிய முடியாது அன்றோ! அவ்வாறே, கடவுள் உள்ளத்தில் இருப்பதை அவர்தம் ஆவியே அன்றி வேறு எவரும் அறியார்.

ஆனால், நாம் இவ்வுலக மனப்பாங்கைப் பெற்றுக் கொள்ளவில்லை. மாறாக, தூய ஆவியைக் கடவுளிடமிருந்து பெற்றுள்ளோம். இவ்வாறு கடவுள் நமக்கு அருளிய கொடைகளைக் கண்டுணர்ந்து கொள்கிறோம். ஆவிக்குரியவர்களுக்கு ஆவிக்கு உரியவற்றைப்பற்றி விளக்கிக் கூறும்போது நாங்கள் மனித ஞானத்தால் கற்றுக்கொண்ட சொற்களைப் பேசுவதில்லை; மாறாக, தூய ஆவியார் கற்றுத்தரும் சொற்களையே பேசுகிறோம். மனித இயல்பை மட்டும் உடைய ஒருவர் கடவுளின் ஆவிக்குரியவற்றை ஏற்றுக் கொள்வதில்லை. அவை அவருக்கு மடமையாய்த் தோன்றும். அவற்றை அவரால் அறிந்து கொள்ளவும் முடியாது. ஏனெனில் அவற்றைத் தூய ஆவியின் துணை கொண்டே ஆய்ந்துணர முடியும். ஆவிக்குரியவரோ அனைத்தையும் ஆய்ந்துணர்வார். எவரும் அவரை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது. "ஆண்டவருடைய மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரை கூறுபவர் யார்?" நாமோ கிறிஸ்துவின் மனத்தைக் கொண்டுள்ளோம்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 145: 8-9. 10-11. 12-13ab. 13cd-14 (பல்லவி: 17a)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்.

8 ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர்.
9 ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின் மீதும் இரக்கம் காட்டுபவர்.
-பல்லவி

10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.
11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள்.
-பல்லவி

12 மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்.
13யb உமது அரசு எல்லாக் காலங்களிலும் உள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது.
-பல்லவி

13உன ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்; தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர்.
14 தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கி விடுகின்றார்.
-பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(லூக் 7: 16)

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (4: 31-37)

அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள கப்பர்நாகும் ஊருக்குச் சென்று, ஓய்வு நாள்களில் மக்களுக்குக் கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து அவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் அதிகாரத்தோடு கற்பித்தார். தொழுகைக்கூடத்தில் தீய ஆவியான பேய் பிடித்திருந்த ஒருவர் இருந்தார்.

அவரைப் பிடித்திருந்த பேய், "ஐயோ! நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்" என்று உரத்த குரலில் கத்தியது.

"வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ" என்று இயேசு அதனை அதட்டினார்.

அப்பொழுது பேய் பிடித்தவரை அவர்கள் நடுவே விழச் செய்து, அவருக்கு ஒரு தீங்கும் இழைக்காமல் பேய் அவரை விட்டு வெளியேறிற்று.

எல்லாரும் திகைப்படைந்து, "எப்படிப் பேசுகிறார், பாருங்கள்! அதிகாரத் தோடும் வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார்; அவையும் போய்விடுகின்றனவே!" என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டனர்.

அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறமெங்கும் பரவியது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
தீய ஆவிகளின்மீது அதிகாரம் கொண்ட இயேசு!

இறைவாக்கினர் எலியாவைக் குறித்து யூதர்கள் மத்தியில் பழங்காலமாக புழக்கத்தில் இருக்கின்ற கதை இது.

இறைவாக்கினர் எலியா நெருப்புத் தேரில் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்போது, சாத்தான் கடவுளிடத்தில் வந்து முறையிட்டான், "எல்லாரும் இறந்தபின்தானே விண்ணகம் வருவார்கள், இவர் மட்டும் இறவாமலே விண்ணகம் வருகிறாரே. ஏன் இவருக்கு மட்டும் இந்த சிறப்புச் சலுகை?". அதற்குக் கடவுள் சாத்தானிடம், "இறைவாக்கினர் எலியா மற்ற மனிதர்களைப் போன்று கிடையாது. அவர் மற்ற எல்லாவறையும் விட வித்தியாசமானவர். அவருடைய வல்லமையைப் பற்றி உனக்குத் தெரியவில்லை. அதனால்தான் நீ இப்படியெல்லாம் பேசுகிறாய்" என்றார்.

"அப்படியா! அவருடைய வல்லமை என்னவென்றுதான் பார்ப்போமே. என்னோடு அவரை சண்டையிட அனுமதியுங்கள். ஒருவேளை அவருக்கும் எனக்கும் நடக்கும் சண்டையில் அவர் ஜெயித்துவிட்டால், நீங்கள் சொல்வதை நான் ஒத்துக்கொள்கின்றேன், இல்லையென்றால் அவர் எல்லா மனிதரையும் போன்று இறந்தபின்புதான் விண்ணகத்திற்கு வரவேண்டும்" என்றான் சாத்தான். கடவுளும் அதற்குச் சரியென்று சொல்ல, இருவருக்கும் இடையே சண்டை தொடங்கியது.

இருவருக்கும் இடையே பயங்கரச் சண்டை நடந்தது. சண்டையின் முடிவில் இறைவாக்கினர் எலியா வெற்றிபெற்றார். சாத்தானோ தோல்வி முகத்தோடு கடவுள் சொன்னதை ஒத்துக்கொண்டு அங்கிருந்து ஓடிப்போனது.

இக்கதையின் மூலம் இறைவாக்கினர் எலியா சாத்தான்மீது அதிகாரம் கொண்டிருந்தார் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். ஓர் இறைவாக்கினரே சாத்தான் மீது அதிகாரம் கொண்டிருக்கும்போது இறைவாக்கினர்களுக்கு எல்லாம் பெரிய இறைவாக்கினராகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்து சாத்தான் மீது அதிகாரம் கொண்டிருக்க மாட்டாரா? நிச்சயம் கொண்டிருப்பார். அதற்கு எடுத்துக்காட்டாய் இருப்பதுதான் இன்றைய நற்செய்தி வாசகம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, தீய ஆவி பிடித்திருந்த ஒருவரிடமிருந்து தீய ஆவியை விரட்டியடிக்கின்றார். அவர் இவ்வாறு செய்வதைப் பார்த்துவிட்டு, தொழுகைக்கூடத்தில் குழுமி இருந்த மக்கள், "எப்படிப் பேசுகிறார், பாருங்கள்! அதிகாரத்தோடும் வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார்; அவையும் போய்விடுகின்றனவே" என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்கிறார்கள்.

மக்கள் வியந்து பேசக்கூடக்கூடிய அளவுக்கு இயேசு கொண்டிருந்த அதிகாரம் என்ன, அந்த அதிகாரத்தினால் அவர் என்னென்ன அற்புதங்களைச் செய்தார் என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

முதலில் இயேசு கொண்டிருந்த அதிகாரம் யூதத் தலைவர்கள் கொண்டிருந்த அதிகாரம் போன்றது அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். யூதத் தலைவர்கள் அதிகாரம் கொண்டிருந்தார்கள். அந்த அதிக்காரத்தினால் மக்களை அடக்கி ஆண்டார்கள். ஆனால், இயேசு தன்னுடைய அதிகாரத்தை மக்களை அடக்கி ஆள்வதற்குப் பயன்படுத்தவில்லை. மாறாக, மக்களுக்கு நல்லது செய்யப் பயன்படுத்தினார்.

இயேசுவின் அதிகாரம் எத்தகையது என்பதை அறிந்த நாம், எவற்றில் எல்லாம் அவர் அதிகாரம் கொண்டிருந்தார் என்று பார்ப்போம். முதலாவது இயேசு தன்னுடைய வார்த்தையில் அதிகாரம் கொண்டிருந்தார். வார்த்தையில் அதிகாரம் கொண்டிருந்தார் என்று சொல்லும்போது, அவர் ஒரு வார்த்தை சொன்னதும் நோயாளிகள் குணம்பெற்றனர்; பார்வையற்றவர்கள் நலம் பெற்றனர்; நடக்க முடியாதவர் எழுந்து நடந்தனர். "இரையாதே அமைதியாயிரு" என்று சொன்னதும் காற்றும் கடலும் அமைதியாயின. அந்தளவுக்கு இயேசு தன்னுடைய வார்த்தையில் அதிகாரம் கொண்டிருந்தார். அதனால் இயேசுவின் போதனையையைக் கேட்ட மக்கள் "என்னவொரு அதிகாரம் கொண்ட போதனையாக இருக்கின்றது" என்று பேசுகிறார்கள். மேலும் இயேசு, மறைநூல் அறிஞர்களைப் போன்றோ, பரிசேயர்களைப் போன்றோ அவர்கள் அப்படிச் சொன்னார்கள், இவர்கள் இப்படிச் சொன்னார்கள் என்று போதிக்கவில்லை, நான் உங்களுக்குச் சொல்கின்றேன் என்று போதித்தார். இவ்வாறு இயேசு தன்னுடைய வார்த்தையில் அதிகாரம் கொண்டவர் என்பதை நிரூபித்துக் காட்டினார்.

இயேசு தன்னுடைய வார்த்தையில் மட்டும் அதிகாரம் கொண்டிருக்கவில்லை, தீய ஆவியின்மீதும் அதிகாரம் கொண்டிருந்தார். அதனால்தான் இயேசு, "வாயை மூடு. இவரைவிட்டு வெளியே போ" என்று சொன்னதும், அது வெளியே போகிறது. தூய யோவான் எழுதிய முதல் திருமுகம் 3:8 ல் இவ்வாறு வாசிப்போம், "அலகையின் செயல்களைத் தொலைக்கவே இறைமகன் தோன்றினார்" என்று. ஆம், இயேசு அலகையை ஒழிக்கவே இந்த உலகத்தில் தோன்றினார்.

ஆகவே, இயேசு அலகையின்மீது கொண்டிருக்கின்றார் என்பதையும் அலகையின்மீது மட்டுமல்ல, இந்த அகிலத்தின்மீதும் அதிகாரம் கொண்டிருக்கின்றார் என்பதை உணர்வோம். அவருடைய கரங்களில் நம்மையே ஒப்படைப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
இறைவன் புரியும் அற்புதம்

பத்துக் கட்டளைகள் (Ten Commendments), அரசருக்கெல்லாம் அரசர் (The King of Kings) என்ற இரண்டு ஆங்கிலப் படங்களைத் தயாரித்தவர் Cecil B. De Mille என்பவர். அவர் மரணப் படுக்கையில் கிடந்தபோது தன்னுடைய வாழ்க்கையில் நடந்ததாக நாட்குறிப்பில் எழுதிய ஒரு நிகழ்ச்சி.

ஒருநாள் அவர் ஓர் ஆற்றங்கரையோரம் இருந்த ஒரு மரத்திற்குக் கீழே படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது கருநிறத்தில் இருந்த ஒரு வண்டானது அங்கும், இங்கும் அலைந்துகொண்டிருப்பதைக் கண்டார். அது ஆற்றின் நீர்பரப்பில் மூழ்குவதும், எழுவதும் பின்னர் அவ்விடத்திலிருந்து மேலே பறப்பதுமாக இருந்தது. ஒரு கட்டத்தில் அந்த வண்டானது மேலே பறந்தபோது வெப்ப மிகுதியால் அப்படியே கருகிக் கீழே விழுந்தது. அது கோடைகாலம்.

எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த செசில் இந்த வண்டின் வாழ்வு அவ்வளவுதான் என்று நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் சிறுது நேரத்தில் அங்கே ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது. ஆம், கருகிக் கீழே விழுந்த வண்டிலிருந்து ஒரு சிறிய வண்ணத்துப் பூச்சி உடலெல்லாம் வண்ணம் பூசியது போல் மேலே எழுந்து வந்தது. இதைப் பார்த்த அவருக்கு ஆச்சரியம் தாங்க முடியில்லை. ஒரு சாதாரண வண்டிலேயே கடவுள் இவ்வளவு அற்புதங்களை நிகழ்த்துகிறார் என்றால் மனிதர்களில் எவ்வளவு அற்புதங்களை நிகழ்த்தியிருப்பார் என்று அவர் சிந்திக்கத் தொடங்கினார்.

கடவுளின் கைவண்ணமும், அற்புதமும் எங்கும் நிறைந்து இருக்கிறது. அது படைப்புப் பொருட்களில் மட்டுமல்ல, படைப்பில் மணிமகுடமாக இருக்கும் மனிதரிடத்திலும் அதிகமாக விளங்குகின்றது. இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு ஆற்றும் அற்புதம்/ புதுமை/ அரும் அடையாளம் ஒன்றைத்தான் வாசிக்கின்றோம். இயேசு செய்யும் இந்த அரும் அடையாளம் நமக்கு என்ன செய்தியைத் தருகிறது என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

நற்செய்தியில் இயேசு ஓய்வுநாளின் போது தொழுகைக்கூடத்திற்குச் சென்று, அங்கே கற்பித்துக் கொண்டிருக்கிறார். அப்போது பேய்பிடித்த ஒருவர் இயேசுவிடம், "ஐயோ! நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்?" என்று கத்தத் தொடங்குகிறது. உடனே இயேசு அந்த பேயைப் பார்த்து, "வாயை மூடு, இவரைவிட்டு வெளியே போ" என்று அதட்டுகிறார். உடனே பேய் அவரைவிட்டு வெளியே போகிறது.

மனிதரிடத்தில் இருந்த தீய ஆவியை இயேசு விரட்டி அடிக்கிறார் என்றால் அவர் எத்தகைய வல்லமைக் கொண்டிருந்திருப்பார் என்பதை நாம் இங்கே புரிந்துகொள்ளவேண்டும். மத்தேயு நற்செய்தி 28:18 ல் வாசிக்கின்றோம், "விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு (இயேசுவுக்கு) அருளப்பட்டிருக்கிறது" என்று. ஆம், இயேசு தனக்குக் கொடுப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு வாழ்வளித்தார். பாவத்தின் பிடியிலும், சாவின் பிடியிலும் இருந்த மக்களுக்கு விடுதலை அளித்தார்.

அடுத்ததாக இயேசு புரியும் இந்த அற்புதச் செயல் "மெசியா இந்த உலகிற்கு வந்துவிட்டார் என்பதை நமக்கு எடுத்துரைக்கிறது. எசாயாப் புத்தகம் 35:5 ல் வாசிக்கின்றோம், "அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்; பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்; வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும். கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்; தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்; குள்ளநரி தங்கும் வளைகள் எங்கும் கோரையும் நாணலும் முளைத்து நிற்கும்" என்று. ஆம், மெசியா இந்த உலகிற்கு வருகின்றபோது இதுவும் இதுபோன்ற செயல்களும் நடைபெறும்.

இயேசு பேய்பிடித்த மனிதனைக் குணப்படுத்தியதன் வழியாக இந்த உலகில் மெசியாவின் வருகை நிகழ்ந்துவிட்டது என்பதை அறிவிக்கின்றார்.

இயேசுவின் சீடர்களாகிய நாமும் அவர்விட்டுச் சென்ற பணியைத் தொடங்குவதுதான் சிறப்பான ஒரு காரியமாக இருக்கும். மாற்கு நற்செய்தி 3:14 ல் வாசிக்கின்றோம், "தம்மோடு இருக்கவும், நற்செய்தியை அறிவிக்கவும், பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும்" அவர் சீடர்களைத் தேர்ந்தெடுத்தார் என்று. ஆம், நாம் ஒவ்வொருவரும் சமுகத்தில் இருக்கும் பல்வேறுவகைப்பட்ட பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கிறோம். அதனைப் பயன்படுத்தி நாம் பேய்களை ஒட்டவேண்டும்.

எனவே, இயேசுவின் சீடர்களாகிய நாம் இயேசுவுக்கு இருக்கும் வல்லமையை உணர்ந்து கொண்டு, நாமும் அவரிடமிருந்து பெற்ற வல்லமையின் வழியாக சமூகத்தில் இருக்கும் பல்வேறுபட்ட பேய்களை ஓட்டுவோம். இறைவனுக்கு உகந்த நல்ல வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================
"பின்பு இயேசு கலிலேயாவிலுள்ள கப்பர்நாகும் ஊருக்குச் சென்று, ஓய்வு நாள்களில் மக்களுக்குக் கற்பித்து வந்தார்" (லூக்கா 4:31)

நாசரேத்திலிருந்து இயேசு கப்பர்நாகும் என்னும் ஊருக்குச் செல்கிறார். கலிலேயாக் கடலின் வட மேற்குப் பகுதியில் அமைந்த ஊர் கப்பர்நாகும். அங்கே மீன்பிடித்தல் மும்முரமாக நடந்துவந்தது. அவ்வூரில் இருந்த தொழுகைக் கூடத்திற்கு இயேசு செல்கிறார். மக்களுக்கு மீட்பளிக்க வந்த இயேசுவின் பணி நோயாளருக்கு நலம் வழங்கும் பணியாகத் தொடங்குகிறது. தொழுகைக் கூடத்தில் ஓய்வு நாளன்று இயேசு போதித்துக்கொண்டிருக்கையில் பேய்பிடித்த ஒரு மனிதர் உரத்த குரலில் கத்துகிறார். இயேசு அந்த மனிதரைப் பிடித்திருந்த பேயை அதட்டி வெளியேறச் செய்கிறார். அந்த மனிதரும் குணமடைகிறார். இயேசு புரிந்த முதல் புதுமையாக மாற்கு, லூக்கா ஆகிய இருவரும் இந்நிகழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளனர் (காண்க: லூக் 4:33-37; மாற் 1:21-28). இதன் பொருள் என்ன? பாலைநிலத்தில் இயேசுவைச் சோதித்த அலகை உலக அரசுகள் மீது தனக்கு அதிகாரம் இருப்பதாகவும் அந்த அதிகாரத்தை இயேசுவுக்குக் கொடுப்பதாகவும் கூறி, "நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையவையாகும்" என்றது (லூக் 4:5-7). "நீர் இறைமகன் என்றால் இந்தக் கல்லை அப்பமாகும்படி கட்டளையிடும்" என அலகை கேட்டது. ஆனால் இயேசு அலகையின் சோதனையை முறியடித்து, தமக்குக் கடவுள் அளித்த அதிகாரம் உண்டென நிலைநாட்டினார். கப்பர்நாகும் ஊரில் பேய் இயேசு "கடவுளுக்கு அர்ப்பணமானவர்" எனத் தனக்குத் தெரியும் என்று கூறுகிறது (லூக் 4:34). நற்செய்தி நூல்களில் "அலகை" ("சாத்தான்") என்பது கடவுளை எதிர்த்து நிற்கின்ற தீய சக்தியாக விளக்கப்படுகிறது. "பேய்கள்" என்பவை அலகைக்குக் கீழ் பணிபுரிகின்ற, தாழ் நிலை ஊழியர்களாகக் காட்டப்படுகின்றன. இயேசு அலகையின் ஆட்சியை ஒழிக்க வந்தார் என்னும் உண்மையை நற்செய்தி நூல்கள் அறிவிக்கின்றன.

கடவுளின் ஆட்சியை நிலைநாட்ட வந்த இயேசு அலகையின் ஆட்சியை முறியடிப்பார். எனவே, இயேசுவுக்கும் அலகைக்கும் இடையே நிகழ்கின்ற போர் இயேசுவின் பணித் தொடக்கத்திலிருந்தே நடந்தது. பேய்பிடித்திருந்த மனிதர் குணமடைந்ததும் மக்களுக்கு ஒரே அதிர்ச்சி. அவர்கள் "திகைப்படைந்தனர்" (லூக் 4:36). "எப்படிப் பேசுகிறார், பாருங்கள்!" என்று கூறி அவர்கள் தங்கள் வியப்பை வெளிப்படுத்துகின்றனர் (லூக் 4:36). ஆனால் அவர்கள் இயேசுவிடத்தில் "நம்பிக்கை கொண்டதாக" லூக்கா குறிப்பிடவில்லை. இயேசு புரிந்த இப்புதுமையில் இரு முக்கிய கருத்துக்கள் வெளிப்படுகின்றன. முதலில், இயேசு "அதிகாரத்தோடு" போதிக்கவும், கடவுளிடமிருந்த பெற்ற அதிகாரத்தோடு பேய்களை முறியடிக்கவும் செய்கிறார். எனவே, இயேசுவின் போதனையும் அவர் புரியும் புதுமையும் கடவுளின் சக்தியை மக்களுக்கு வெளிப்படுத்துகின்றன. இரண்டாவது, கடவுளின் சக்தி இயேசு வழியாக வெளிப்பட்டதைக் கண்டபோதிலும் மக்கள் வியப்படைகிறார்களே தவிர இயேசுவை நம்பி ஏற்க முன்வரவில்லை. நாமும் இயேசுவிடத்தில் கடவுளின் சக்தி துலங்குவதைக் கண்டு வியப்படைவதோடு நின்றுவிடாமல் அவரே நமக்கு நலமளிக்கின்ற "மருத்துவர்" என்றும் நம்மைத் தீய சக்திகளிடமிருந்து "மீட்பவர்" என்றும் ஏற்று, அவரிடத்தில் "நம்பிக்கை கொள்ள" அழைக்கப்படுகிறோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================

--------------------------------------------------------

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!