|
|
01
செப்டம்பர் 2018 |
|
|
பொதுக்காலம்
21ம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து
வாசகம் (1: 26-31)
சகோதரர் சகோதரிகளே, நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப்
பாருங்கள். மனிதக் கணிப்பின்படி உங்களுள் ஞானிகள் எத்தனை பேர்?
வலியோர் எத்தனை பேர்? உயர்குடிமக்கள் எத்தனை பேர்? ஆனால் கடவுள்
ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுபவற்றைத்
தேர்ந்துகொண்டார்.
அவ்வாறே, வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத்
தேர்ந்துகொண்டார். உலகம் ஒரு பொருட்டாகக் கருதுபவற்றை அழித்துவிட
அது தாழ்ந்ததாகக் கருதுபவற்றையும் இகழ்ந்து தள்ளுபவற்றையும்
கடவுள் தேர்ந்தெடுத்தார். எவரும் கடவுள் முன் பெருமை பாராட்டாதபடி
அவர் இப்படிச் செய்தார். அவரால்தான் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம். அவரே நம்மை ஏற்புடைவராக்கித்
தூயவராக்கி மீட்கின்றார். எனவே மறைநூலில் எழுதியுள்ளவாறு,
"பெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை
பாராட்டட்டும்."
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 33: 12-13. 18-19. 20-21 (பல்லவி: 12b)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள்
பேறுபெற்றோர்.
12 ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது
உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.
13 வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்; மானிடர் அனைவரையும்
காண்கின்றார்.
-பல்லவி
18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக்
காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.
19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும்
வாழ்விக்கின்றார்.
-பல்லவி
20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும்
கேடயமும் ஆவார்.
21 நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்; ஏனெனில், அவரது
திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்.
-பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
(எபி 4: 12)
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல்
வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும்
சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய்
இருந்தீர். எனவே உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து
பங்கு கொள்ளும்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
(25: 14-30)
அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறிய உவமை: "விண்ணரசைப்
பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம். நெடும் பயணம்
செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம்
உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து
தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும் இன்னொருவருக்கு ஒரு
தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.
ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து
வேறு ஐந்து தாலந்து ஈட்டினார். அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர்
மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார். ஒரு தாலந்து பெற்றவரோ போய்
நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார்.
நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து
அவர்களிடம் கணக்குக் கேட்டார். ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி,
வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, "ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம்
ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்"
என்றார். அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், "நன்று, நம்பிக்கைக்குரிய
நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய்
இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம்
தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்" என்றார்.
இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, "ஐயா, நீர் என்னிடம்
இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து
ஈட்டியுள்ளேன்" என்றார். அவருடைய தலைவர் அவரிடம், "நன்று. நம்பிக்கைக்குரிய
நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய்
இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம்
தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்" என்றார்.
ஒரு தாலந்தைப் பெற்றுக்கொண்டவரும் அவரை அணுகி, "ஐயா, நீர் கடின
உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்;
நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன்.
உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில்
புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது" என்றார்.
அதற்கு அவருடைய தலைவர், "சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான்
விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத
இடத்திலும் போய்ச் சேகரிப்பவன் என்பது உனக்குத்
தெரிந்திருந்தது அல்லவா? அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக்
கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு
வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன்" என்று
கூறினார். "எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப்
பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள். ஏனெனில் உள்ளவர்
எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர்.
இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற
இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே
அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்" என்று அவர் கூறினார்."
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
வேர்வையின்றி வெற்றி ஏதுமில்லை
அந்த ஊரில் இருந்த துறவியைப் பார்ப்பதற்காக இளைஞன் ஒருவன் வந்தான்.
அவன் துறவியிடத்தில் வந்து,
"என்னிடம் உழைக்கும் எண்ணமெல்லாம்
இருக்குகிறது. ஆனால் தொழில் தொடங்குவதற்குப் போதிய மூலதனம் /பணம்
மட்டும்தான் இல்லை" என்று குறைபட்டுக்கொண்டான்.
அப்போது துறவி அவனிடத்தில்,
"உனக்கு நான் நூறு ரூபாய் தருகிறேன்,
அதற்கு ஈடாக நீ எனக்கு உன்னுடைய சுண்டு விரலைத் தருவாயா? என்று
கேட்க, அவன்,
"நூறு ரூபாய்க்கு சுண்டுவிரலா? என்றான். அவர் அவனிடத்தில்,
"உனக்கு நான் பத்தாயிரம் ரூபாய் தருகிறேன், அதற்கு பதிலாக நீ
எனக்கு உன்னுடைய வலக்கையைத் தரமுடியுமா? என்று கேட்டார். அவனோ
அவரிடத்தில்,
"வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு என்னுடைய வலக்கையா?"
என்று ஆச்சரியம் பொங்க அவரைப் பார்த்துக்கொண்டிருந்தான்..
தொடர்ந்து அவர் அவனிடத்தில்,
"உனக்கு நான் ஒரு லட்சம் ரூபாய்
தருகிறேன். அதற்கு பதிலாக உன்னுடைய இரண்டு கண்களையும் தா?" என்றார்.
"என்னது, வெறும் ஒரு லட்சம் ரூபாய்க்கு என்னுடைய இரண்டு கண்களுமா?.
அதுவெல்லாம் முடியவே முடியாது" என்றான்.
உடனே துறவி அவனிடத்தில்,
"பார்த்தாயா, உன்னிடத்தில் தொழில்
தொடங்க போதிய மூலதனம் இல்லை என்று சொன்னாய்?. ஆனால் இப்போது
உன்னுடைய உடல் விலை மதிப்பில்லாதது என்று சொல்கிறாய்.
அப்படியானால் நீ தொழில் தொடங்கத் தேவையான மூலதனம்
உன்னிடத்தில்தான் இருக்கிறது. நீதான் அதனைப் புரிந்துகொள்ளாமல்
இருக்கிறாய்" என்றார்.
இதைக் கேட்டதும் அந்த இளைஞன் புது ஒளிபெற்று, தன்னையும்,
தன்னுடைய உழைப்பையும் மட்டுமே நம்பி தொழில் தொடங்கினான்.
கடவுள் நமக்கு பல்வேறு வரங்களை கொடையாகத் தந்திருக்கிறார்.
நாம் அதனை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே
நம்முடைய வாழ்வு அடங்கியிருக்கிறது என்பதை இந்த கதையானது
நமக்கு எட்டுத்துக்கூறுகிறது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு விண்ணரசை தாலந்திற்கு
ஒப்பிடுகிறார். விண்ணரசை பல்வேறு காரியங்கள், நிகழ்வுகள்
வழியாக கற்பித்த ஆண்டவர் இயேசு விண்ணரசை தாலந்திற்கு
ஒப்பிடுகிறார். இயேசு கூறும் இந்த உவமை நமக்கு பல்வேறு
உண்மைகளை எடுத்துக் கூறுவதாக இருக்கிறது.
முதலாவதாக கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் திறமைகளைக்
கொடுத்திருக்கிறார் என்பதாகும். சிலர் சொல்லலாம்,
"கடவுள்
எனக்கு ஒரு திறமையும் கொடுக்கவில்லை, நான் திறமையற்றவன்,
ஒன்றுக்கும் இலாயக்கற்றவன்" என்று. இது உண்மையல்ல. கடவுள்
கொடுத்த திறமையை அறியாத மனிதர் வேண்டுமானால் இந்த உலகில்
இருக்கலாம். ஆனால் திறமையில்லாதவர் என்று யாரும் இருக்க
முடியாது.
அடுத்ததாக நற்செய்தியில் ஒருவருக்கு ஐந்து தாலந்தும்,
இன்னொருவருக்கு இரண்டு தாலந்தும், வேறொருவருக்கு ஒரு தாலந்தும்
கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை வைத்துக்கொண்டு கடவுள் மனிதர்களை
பாரபட்சமாகப் படைத்திருக்கிறார் என்று சொல்லக்கூடாது. மாறாக
கடவுள் படைப்பில் அனைவரும் தனித்தன்மையானவர்கள் என்பதைப்
புரிந்துகொள்ளவேண்டும்.
நம்முடைய கையில் இருக்கும் ஒருவிரல் இன்னொரு விரலைப் போன்று
இல்லை. அப்பிடியிருக்கும்போது நம்மோடு வாழும் மனிதர்கள்
எல்லாரும் ஒரே திறமையோடு இருக்க வேண்டும் என்று சிந்திப்பது
மடமையாகும். மனிதர்கள் யாவரும் தனித்தனியானவர்கள் என்பதே
ஐந்து, இரண்டு, ஒரு தாலந்து குறித்துக்காட்டுகிறது.
நிறைவாக கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமையை, வாய்ப்பு
வசதிகளை நாம் எப்படிப் பயன்படுத்தப்போகிறோம் என்பதைப் பொறுத்தே
நம்முடைய வாழ்வு அடங்கியிருக்கிறது என்பதை இந்த உவமை அழகுற
எடுத்துக்கூறுகிறது. ஐந்து தாலந்து பெற்றவர் தன்னுடைய கடின
உழைப்பினால் மேலும் ஐந்து தாலந்தை கொண்டுவந்தார். இரண்டு
தாலந்து பெற்றவரோ தன்னுடைய கடின உழைப்பால் மேலும் இரண்டு
தாலந்து ஈட்டிவந்தார். அதனால் அவர்கள் இருவரும் உயர்ந்த
பொறுப்புகளில் அமர்த்தப்பட்டார்கள். ஆனால் ஒரு தாலந்து
பெற்றவரோ அதனைச் சரியாகப் பயன்படுத்தாததால் தலைவரின்
சினத்திற்கு ஆளாகின்றார்.
எனவே நாம் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளை,
வாய்ப்பு வசதிகளை சரியான முறையில் பயன்படுத்துவோம்.
அப்போதுதான் நம்மால் கடவுளின் ஆசிர்வாதத்தைப் பெற முடியும்.
நாம் நமது வாழ்வில் உயர்ந்த இலட்சியங்களை அடைய வேண்டுமென்றால்
அதற்கு அடிப்படையாக இருப்பது நமது கடின உழைப்புதான் .
ஒருமுறை டால்ஸ்டாய் என்ற அறிஞர் இவ்வாறு குறிப்பிட்டார்,
"தூக்கம் வரவில்லையா? கடுமையாக உழையுங்கள். வாழ்வில் மகிழ்ச்சி
இல்லையா? மிகமிகக் கடினமாக உழையுங்கள் என்று. இது நம்முடைய
வாழ்வு முன்னேற்றத்திற்க்கும் பொருந்தும். ஆகவே, இயேசுவின்
அன்புச் சீடர்களாகிய நாம் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும்
திறமைகளை, வாய்ப்பு வசதிகளை நல்ல முறையில் பயன்படுத்துவோம்.
அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
உயர்வுக்கு வழி உழைப்பே!
கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுவதற்காக சுய
முன்னேற்றப் பேச்சாளர் ஒருவர் அழைக்கப்பட்டிருந்தார்.
வரவேற்புரை முடிந்ததும், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள்
அவருக்கு நினைவுப் பரிசு தர வந்தனர். பேச்சாளர் வாங்க
மறுத்துவிட்டு, தன் உரையைத் தொடர்ந்தார்.
தன் உரையை முடித்துக்கொண்டதும் பேச்சாளர் நிகழ்ச்சியை ஏற்பாடு
செய்தவர்களை கூப்பிட்டுச் சொன்னார்,
"கடின உழைப்புக்கே வெகுமதி
என்று நான் பேச வந்திருக்கிறேன். உழைக்காமலேயே வெகுமதியைப்
பெறுவது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். அதனால் நீங்கள் தவறாக
நினைத்துக்கொள்ள வேண்டாம்".
ஆம். கடின உழைப்புக்குத்தான் வெகுமதி கிடைக்கும். அப்படி
உழைக்காதவருக்கு வெகுமதி என்பதே கிடையாது. அதனைப் பெறுவதற்கு
அவர் தகுதியுள்ளவரும் கிடையாது. நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர்
இயேசு விண்ணரசை தாலந்தை பெற்றுக்கொண்டவர்கள், அதற்குக்
கணக்குக் கொடுப்பதற்கு ஒப்பிடுகின்றார். ஆண்டவர் இயேசு
சொல்லக்கூடிய இந்த தாலந்து உவமை நமக்கு என்ன செய்தியைச்
சொல்கின்றது. இதிலிருந்து நாம் என்ன பாடத்தைக்
கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்ப்போம்.
ஒருசிலர் மற்றவரைப் பார்த்து, "உன் மண்டையில் களிமண்தான்
இருக்கின்றது, நீ ஒன்றுக்கும் உதவாதவன் என்று சொல்லக்
கேட்டிருப்போம். சமயங்களில் நாமும்கூட அப்படிப்பட்ட
வார்த்தைகளை பயன்படுத்தி இருப்போம். இங்கே நாம் ஓர் உண்மையை
உணர்ந்து கொள்ளவேண்டும். அது என்னவெனில், இந்த உலகத்தில்
பிறந்த யாரும் களிமண்ணோ, உதவக்கரையோ கிடையாது. எல்லாருக்கும்
திறமையோடுதான் படைக்கப்பட்டிருக்கிறார்கள். திறமையைப்
பயன்படுத்தாவர்கள் வேண்டுமானால் இருக்காலம். ஆனால்,
திறமையில்லாதவர் என்று யாருமே கிடையாது. ஆண்டவர் இயேசு
சொல்லக்கூடிய இந்த தாலந்து உவமையில் தலைவர் ஒருவருக்கு ஐந்து
தாலந்து என்றும் மற்றொருவருக்கு இரண்டு தாலந்து என்றும்
வேறொருவருக்கு ஒரு தாலந்து என்றும் கொடுத்தாரே ஒழிய,
யாருக்கும் தாலந்தைக் கொடுக்காமல் இல்லை. ஆகவே, கடவுள்
எல்லாருக்கும் திறமையை, தாலந்தைக் கொடுத்திருக்கின்றார் என்ற
உண்மையை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.
அடுத்ததாக கடவுள் ஏன் எல்லாருக்கும் சமமாகத் தாலந்தைத்
தரவில்லை, முதலில் வந்தவனுக்கு ஐந்து தாலந்தும் இரண்டாவது
வந்தவனுக்கு இரண்டு தாலந்தும் கடைசியில் வந்தவனுக்கு ஏன் ஒரு
தாலந்தும் கொடுத்தார்?. இது படைப்பிலே ஏற்றத்தாழ்வு
இருப்பதாகக் காட்டுகின்றதே என நாம் கேள்வி கேட்கலாம். உண்மை
அதுவல்ல, இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும்
தனிதன்மையானவர்கள் என்பதைக் குறித்துக் காட்டவே
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக தாலந்து கொடுக்கப்படுகின்றது.
ஆகையால், பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு காணும் போக்கை
விடுத்து, எல்லாரும் சமமானவர்கள், தனித்தன்மை வாய்ந்தவர்கள்
என்பதை உணர்வது நல்லது.
நிறைவாக இந்த உவமை எடுத்துச் சொல்லும் செய்தி மிகவும்
முக்கியமானது. அதுதான் ஒருவருடைய உயர்வும் அவருடைய தாழ்வும்
அவர் தனக்குக் கொடுக்கப்பட்ட தாலந்தை எப்படிப்
பயன்படுத்துகிறார் என்பதைப் பொறுத்து அமைகிறது என்பதாகும்.
உவமையில் வரும் முதல் இரண்டு மனிதர்கள் தங்களுக்குக்
கொடுக்கப்பட்ட தாலந்துகளை நல்லமுறையில் பயன்படுத்தி மேலும்
முறையே ஐந்து, இரண்டு என்று தாலந்துகளைப் பெருக்கிக்
கொண்டார்கள். அதனால் தலைவர் அவர்களுக்கு மிக உயர்ந்த
பொறுப்பினைக் கொடுக்கின்றார். ஆனால், கடைசியில் வந்த மனிதரோ
அதாவது ஒரு தாலந்து பெற்ற மனிதரோ தனக்குக் கொடுக்கப்பட்ட
தாலந்தை சரியாகப் பயன்படுத்தாமல், அதனை நிலத்தைத் தோண்டி
புதைத்து வைக்கின்றார் அதனால் அவர் தலைவருடைய கடுஞ்சினத்திற்கு
உள்ளாகிறார், கடுமையாகத் தண்டிக்கப்படுகின்றார். இவ்வாறு
முதலில் வரும் இரண்டு மனிதர்களுடைய உயர்வுக்கும் கடைசியில்
வந்த மனிதருடைய தாழ்வுக்கும் அவரவர் எவ்வாறு தாலந்தைப்
பயன்படுத்தினார் என்பதைப் பொறுத்து, அமைத்துவிடுகின்றது.
இங்கே கடவுள் கொடுத்த திறமையை நாம் எவ்வளவு பயன்படுகின்றோம்
என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். கடவுள் அடுத்தவருக்கு
அதிகமாக திறமைகளைக் கொடுத்துவிட்டார், எனக்குப் பெரிய திறமை
எதுவும் கொடுக்கவில்லை என்று கடவுளை பழித்துப்
பேசிக்கொண்டிருக்கின்றோமா? அல்லது கடவுள் கொடுத்த திறமையினை
அது எப்படிப்பட்டத் திறமையாக இருந்தாலும் அதனைச் சரிவரப்
பயன்படுத்துகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
ஒன்று மட்டும் உறுதி, அது என்னவென்றால், உலக முடிவின்போது நாம்
பெற்றுக்கொண்ட தாலந்துக்கு கணக்குக் கொடுக்கவேண்டும். அது
மட்டும் உண்மை.
ஆகவே, இறைவன் நமக்குக் கொடுத்திருக்கின்ற திறமைகளை, தாலந்துகளை
நல்ல முறையில் பயன்படுத்துவோம், அதற்குக் கடினமாக உழைப்போம்.
சோம்பேறித்தனத்தை வேரறுப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்
பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3
=================================================================================
"உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும்...
இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்" (மத்தேயு
25:29)
-- பயன்படுத்தாத செல்வம் பாழாய்ப்போகும் என்னும் உண்மையை இயேசு
நமக்குக் கற்பிக்கிறார். வெவ்வேறு அளவில் தாலந்துகளைப் பெற்றவர்கள்
அவற்றைப் பயன்படுத்தி மேலும் செல்வம் ஈட்டினார்கள். ஆனால் ஒருவர்
மட்டும் தாலந்தைப் பயன்படுத்தாமல் நிலத்தில் புதைத்துவைத்தார்.
கடவுளிடமிருந்து நாம் பெறுகின்ற கொடைகள் பல. அவற்றை நாம் நன்முறையில்
பயன்படுத்தி நன்மை செய்ய முன்வரவேண்டும். கடவுள் நமக்குத் தருகின்ற
காலம் குறுகியது, நாம் பெற்றுள்ள கொடைகளும் சில இலட்சியங்களை
அடைய வேண்டும் என நம் உள்ளத்தில் எழுகின்ற ஆர்வங்களும் எல்லைகளுக்கு
உட்பட்டவை. இவற்றை அறிவோடு பயன்படுத்த வேண்டும். இதற்கு மாறாகச்
சிலர் தாம் பெற்ற கொடைகளை மனம்போன போக்கில் செலவழித்து வீணடிக்கிறார்கள்;
வேறு சிலரோ தம் கொடைகளைப் பத்திரமாகப் பொதிந்துவைத்து
யாருக்கும் பயன்படா வண்ணம் அழிந்துபட விட்டுவிடுகிறார்கள். இந்த
இரு போக்குகளுமே தவறானவை. எதிர்காலத்தைப் பற்றி யாதொரு கவலையும்
இல்லாமல் இருப்பதும் தவறு, எதிர்காலத்தில் என்ன நிகழ்ந்துவிடுமோ
என்னும் அச்சத்தால் வாழ்க்கையை வீணடிப்பதும் தவறு.
-- வாழ்க்கையில் நம்மைத் தேடி வருகின்ற சவால்களை நாம் துணிவோடு
சந்திக்க வேண்டும். நன்மை செய்வதில் ஈடுபாடு வேண்டும். இத்தகைய
துணிச்சலான செயல்பாடு இல்லாத இடத்தில் இலட்சியங்கள் படிப்படியாக
மடிந்துபோகும். எனவே, இயேசு அறிவிக்கின்ற நற்செய்தியை உள்வாங்கி
அதன்படி நடக்க விரும்புவோரிடத்தில் துணிந்து செயல்படுகின்ற மன
நிலை வளர வேண்டும். கடவுள் நமக்கு அளிக்கின்ற கொடைகளை நன்முறையில்
செலவிட்டு உலகம் உய்ந்திட நம்மை ஈடுபடுத்த வேண்டும் என்பதே இயேசு
நமக்கு விடுக்கின்ற அழைப்பு.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
-------------------------------------------------------- |
|