Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   31  அக்டோபர் 2018  
                                                           பொதுக்காலம் 30ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 மனிதருக்காக அன்றிக் கடவுளுக்காகவே செய்வது போல நல்மனத்தோடு வேலை செய்யுங்கள்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6: 1-9

பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். ஆண்டவரின் அடியாருக்கு இதுவே ஏற்புடையது. "உன் தந்தையையும் தாயையும் மதித்து நட" என்பதே வாக்குறுதியை உள்ளடக்கிய முதலாவது கட்டளை. " இதனால் நீ நலம் பெறுவாய்; மண்ணுலகில் நீடூழி வாழ்வாய்" என்பதே அவ்வாக்குறுதி.

தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். மாறாக அவர்களை ஆண்டவருக்கேற்ற முறையில் கண்டித்துத் திருத்தி, அறிவு புகட்டி வளர்த்து வாருங்கள். அடிமைகளே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவது போல் இவ்வுலகில் உங்களுக்குத் தலைவர்களாக இருப்பவர்களுக்கு அச்சத்தோடும் நடுக்கத்தோடும், முழு மனத்தோடும் கீழ்ப்படியுங்கள். மனிதர்களுக்கு உகந்தவர்களாகுமாறு, வேலை செய்வதாகக் காட்டிக் கொள்பவர்களாய் இராமல் கிறிஸ்துவின் பணியாளராய்க் கடவுளின் திருவுளத்தை உளமார நிறைவேற்றுங்கள். மனிதருக்காக அன்றிக் கடவுளுக்காகவே செய்வது போல நல்மனத்தோடு வேலை செய்யுங்கள். அடிமையாயினும் உரிமைக் குடிமகனாயினும், நன்மை செய்யும் ஒவ்வொருவரும் ஆண்டவரிடமிருந்து நன்மையே பெறுவர். இது உங்களுக்குத் தெரியும் அன்றோ!

தலைவர்களே, நீங்களும் உங்கள் அடிமைகளிடம் அவ்வாறே நடந்து கொள்ளுங்கள். அவர்களை அச்சுறுத்துவதை விட்டுவிடுங்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் ஒரே தலைவர் விண்ணுலகில் உண்டு என்பதையும் அவர் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா  145: 10-11. 12-13ab. 13cd-14 (பல்லவி: 13c)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்.

10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். 11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி

12 மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள். 13ab உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. பல்லவி

13உன ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்; தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர். 14 தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கி விடுகின்றார். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 2 தெச 2: 14

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 22-30

அக்காலத்தில் இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக்கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார். அப்பொழுது ஒருவர் அவரிடம், " ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?" என்று கேட்டார். அதற்கு அவர் அவர்களிடம் கூறியது: " இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள்.

ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும். `வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும்' என்று கேட்பீர்கள். அவரோ, `நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது' எனப் பதில் கூறுவார்.

அப்பொழுது நீங்கள், 'நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே' என்று சொல்வீர்கள். ஆனாலும் அவர், `நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னை விட்டு அகன்று போங்கள்' என உங்களிடம் சொல்வார்.

ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது அழுது அங்கலாய்ப்பீர்கள். இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள். ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


சிந்தனை

இடுக்கமான வாயில் - விண்ணரசின் வாயில் - ஏன்?

வாயில் அகன்றது என்றால், ஓழுக்கக் கேட்டிற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருக்கும்.

சட்டங்களில் கூட ஒட்டைகளை பெரிதாக்கி தப்பிக் கொள்வோர் பலருண்டு.

வாய் கூட அகன்று திறந்தே இருக்கும் போது பாவங்கள் பெருகும். நீண்ட பேச்சில் பாவம் இராமற் போகாது.

இடுக்கமான வாயில் வழியே நுழைய பாடுபட வேண்டும் சிரத்தை இன்றி இலகுவாக்கிட இயலாது.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
இடுக்கமான வழியே இறையாட்சிக்கான வழி!

பனிரெண்டாம் வகுப்பு வரை இருக்கும் அந்த அரசு பள்ளியில், திறமையான ஆசிரியர் ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர் தன்னுடைய மாணவர்களுக்கு வாழ்க்கை குறித்த தெளிவினை கற்றுத் தர நினைத்தார். அதற்காக அவர் மாணவர்களுக்கு ஒரு தேர்வினை நடத்தினார்.

அந்தத் தேர்வினில் மாணவர்களுக்கு மூன்று கேள்விகளைக் கொடுத்து, பதில் எழுதித் தரச் சொன்னார். இதில் மிகக் கடினமான கேள்விகளுக்கு நூறு மதிப்பெண்களும் கொஞ்சம் கடினமான கேள்விகளுக்கு அறுபது மதிப்பெண்களும் தந்திருந்தார். மாணவர்கள், ஆசிரியர் தங்களுடைய கொடுத்த கேள்விகளை மிக மும்முரமாக எழுதினார்கள்.

தேர்வுக்கான நேரம் முடிந்ததும் ஆசிரியர் மாணவர்களிடமிருந்து தேர்வுத்தாள்களை வாங்கி, மதிப்பெண்கள் போடத் தொடங்கினார். அவ்வாறு அவர் மதிப்பெண்கள் போடும்போது தேர்வுத்தாள்களில் இருந்த விடைகளைப் பார்க்காமல், கடினமான கேள்விகளைத் தேர்வு செய்தவர்களுக்கு முதல் நிலையும் அடுத்தவர்களுக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையையும் கொடுத்தார்.

இதைப் பார்த்த மாணவர்கள் ஆசிரியரிடம், "என்ன நீங்கள்? பதில்களைப் பார்க்காமல் மதிப்பெண்கள் போடுகிறீர்களே?" என்று கேட்டார்கள். அதற்கு ஆசிரியர் அவர்களிடம், " உங்கள் பதிலுக்காக நான் இத்தேர்வை நடத்தவில்லை. உங்கள் இலக்குகளை நோக்கவே தேர்வு வைத்தேன்" என்றார். இப்படிச் சொல்லிவிட்டு தொடர்ந்து அவர்களிடம் இவ்வாறு சொன்னார், "கடினமாக நிலைகளைத் தேர்ந்துகொண்டு, அதனை அடைய கடினமாக உழைப்பவர்களே முதல் நிலையை அடைவர்" .

ஆம், யார் ஒருவர் எல்லாரும் தேர்ந்தெடுக்கின்ற பாதையை தேர்ந்தெடுக்காமல், கடினமான வழிகளைத் தேர்ந்தேடுக்கின்றாரோ, அவரே தன்னுடைய வாழ்வில் முதல் நிலையை அடைவார்.

நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு எருசலேம் நோக்கிப் போக்கிக்கொண்டிருக்கும்போது, அவரை வந்து சந்திக்கின்ற ஒருவர், " ஆண்டவரே, மீட்பு பெறுவோர் சிலர் மட்டும்தானா?" என்றொரு கேள்வியைக் கேட்கின்றார். அதற்கு இயேசு அவரிடம், "இடுக்கமான வாயில் வழயாக வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமல் போகும்" என்கின்றார்.

" மீட்பு பெறுவோர் சிலர் மட்டும்தானா?" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு இயேசு பொருத்தமான பதிலைத்தான் கூறினாரா? என்ற கேள்வி, இயேசு அந்த மனிதருக்கு அளித்த பதிலை மேலோட்டமாகப் பார்த்தால் தோன்றும். ஆனால், இயேசு அந்த மனிதருக்கு சரியான பதிலைத்தான் கூறினார் என்பது உண்மை.

யூதர்களைப் பொறுத்தளவில் மீட்பு என்பது தங்களுக்கு மட்டுமே உரித்தானது, சமாரியர்களுக்கோ, புறவினத்தாருக்கோ வேறு யாருக்கோ கிடையாது என்ற எண்ணம் அவர்களுக்கு அதிகமாகவே இருந்தது. அதனால்தான் அந்த மனிதர் அப்படியொரு கேள்வியைக் கேட்கின்றார். ஆனால் இயேசுவோ மீட்பு என்பது எல்லாருக்கும் உண்டு. அத்தகைய மீட்பினை வருந்தி முயல்கின்ற ஒவ்வொருவருமே பெற்றுக்கொள்வர் என்று மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றார்.

இயேசு கூறுகின்ற வார்த்தைகளிலிருந்து நாம் இரண்டு உண்மைகளை அறிந்துகொள்ளலாம். ஒன்று, கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாகிய, யூத இனத்தில் ஒருவர் பிறந்திருந்தாலும் அவர் இறையாட்சியின் விழுமியங்களான அன்பு, பொறுமை, தியாகம், துன்பங்களை ஏற்று வாழக்கூடிய பண்பு இவற்றையெல்லாம் தன்னுடைய வாழ்வில் கடைப்பிடித்து வாழாமல், தான்தோன்றித் தனமாக வாழ்ந்தார் என்றால், அவர் யூத இனத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் கூட மீட்பினைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதாகும். யூதர்கள் தாங்கள் அக்குலத்தில் பிறந்தாலே போதும், மீட்பினைப் பெற்றுக்கொள்வதற்கு தகுதி உடையவர்கள் ஆகின்றோம் என்ற நினைப்பில் இருந்தார்கள். அத்தகைய நினைப்பில் இருந்தவர்களுக்கு இயேசுவின் வார்த்தைகள் சாட்டையடி போல இறங்குகின்றது.

இயேசு கூறுகின்ற வார்த்தையிலிருந்து வெளிப்படுகின்ற இரண்டாவது உண்மை. ஒருவர் புறவினத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர் இறையாட்சியின் மதிப்பிடுகளின்படி நடந்தார் என்றால், அவர் புறவினத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் மீட்பினைப் பெற்றுக்கொள்வார்" என்பதாகும். " புறவினத்தார் அனைவரும் நாயினும் கீழானவர்கள், அவர்கள் மீட்பினைப் பெறுவதற்கு அருகதை அற்றவர்கள்" என்ற எண்ணத்தில் யூதர்கள் இருந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் இயேசு, புறவினத்தார் இறையாட்சியின் மதிப்பீடுகளின் படி நடந்தால் மீட்பினைப் பெற்றுக்கொள்வர் என்று மிகத் தெளிவாகக் கூறுகின்றார்.

ஆண்டவராக இறைவனைப் பொருத்தமட்டில் " எல்லாரும் மீட்பு பெறவேண்டும். அதுதான் அவருடைய விருப்பமும் திருவுளமும்" ஆகும். ஆனாலும் ஒவ்வொருவரும் அவருடைய செயல்களாலேயே மீட்படைவர் என்பது அவர் வகுத்த நியதி.

ஆகவே, நமது செயல்கள்களும் வாழ்வும் ஆண்டவருக்கு உகந்ததாக இருக்கச் செய்வோம். அதன்வழியாக மீட்பினையும் இறையருளையும் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

👼🏿👼🏾⛪👼🏽👼🏼⛪👼🏻👼


தூய ஃபோய்லன் (அக்டோபர் 31)

"ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்" (மத் 10:28)

வாழ்க்கை வரலாறு

அயர்லாந்தை விசுவாசத்தின் விளைநிலம் என்றும் பல மறைபோதகர்கள் பிறந்த மண் என்றும் சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால் அயர்லாந்தில் ஏராளமான மறைபோகதர்கள் தோன்றியிருக்கின்றார்கள். அவர்கள் அயர்லாந்தில் திருமறையைப் போதித்ததோடு மட்டுமல்லாமல், அயல்நாடுகளிலும் திருமறையைப் போதித்து, அதற்காகக் கொல்லப்பட்டார்கள். அப்படி அயர்லாந்தில் பிறந்து, அயல்நாட்டில் திருமறையைப் போதித்து இறந்தவர்தான் இன்று நாம் நினைவுகூரும் தூய ஃபோய்லன்

ஃபோய்லனுக்கு புர்செய் (Fursey) உல்டன் (Ultan) என்ற சகோதரர்கள் இருவர் இருந்தனர். இவர்கள் இருவரோடு சேர்ந்து ஃபோய்லன் தொடக்கத்தில் இங்கிலாந்தில் உள்ள யுர்மௌத் என்ற பகுதியில் நற்செய்திப் பணியைச் செய்து வந்தார். இதற்கிடையில் ஃபோய்லனின் சகோதரர் புர்செய் பிரான்ஸ் நாட்டிற்கு நற்செய்திப் பணி அறிவிக்கச் சென்றார். இங்கிலாந்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்ததாலும் பிரான்சு நாட்டில் நற்செய்தி அறிவிக்கப்படவேண்டிய தேவை அதிகமாக இருந்ததாலும், ஒருசில மாதங்களுக்குப் பின் ஃபோய்லனும் தன்னோடு இருந்த உல்டன் என்ற சகோதரரைக் கூட்டிக்கொண்டு, தன்னுடைய இன்னொரு சகோதரர் புர்செய் இருந்த பகுதிக்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றார்.

ஃபோய்லன் பிரான்சு நாட்டிற்குச் சென்றதும் முதலில் அங்கு ஒரு துறவற மடத்தை நிறுவினார். அந்த துறவற மடத்தின் தலைவராக உயர்ந்த ஃபோய்லன், துறவற மடத்தில் வந்து சேர்ந்தவர்களுக்கு நல்லமுறையில் பயிற்சிகள் கொடுத்து, அவர்களையும் துறவிகளாக உயர்த்தினார் ஃபோய்லன் ஆண்டவர் இயேசுவின் உளப்பாங்கைக் கொண்டவராய், தான் இருந்த பகுதியைச் சுற்றி இருந்த ஊர்கள், சிற்றூர்களில் நற்செய்தியை அறிவித்து வந்தார்.

ஒருசமயம் ஃபோய்லன் தன்னோடு இருந்த சகோதர குருக்களோடு பக்கத்து ஊர்களில் நற்செய்தியை அறிவித்துத் திரும்பும்போது, முகம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், அவர்மீதும் அவரோடு அந்த சகோதரக் குருக்கள் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தி அவரைக் கொன்றுபோட்டார்கள். இவ்வாறு ஃபோய்லன் ஆண்டவர் இயேசுவுக்காக இரத்தம் சிந்தித்து நிறைவு செய்வோம்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்


தூய ஃபோய்லனின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

இயேசுவின் மனநிலையைக் கொண்டு பணிசெய்வோம்


தூய ஃபோய்லனின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கும்போது அவரிடத்தில் இருந்த நற்செய்தியை அறிவிக்கின்ற தாகமும் ஆண்டவர் இயேசுவின் மனநிலையோடு அவர் செயல்பட்ட விதமும்தான் நம்முடைய வியப்புக்குரியதாக இருக்கின்றது. நாம் நம்முடைய வாழ்வில் எதைச் செய்தாலும் இயேசுவின் மனநிலையோடு, அவருடைய உளப்பாங்கோடு செயல்படுகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இளைஞன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஓவியம் வரைவதில் அதிக நாட்டம் இருந்தது. அதனால் அவர் நகரில் இருந்த ஓர் ஓவியரைச் சந்தித்து, மிகச் சிறந்த ஓவியராகவே வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தைச் சொன்னான். ஓவியரும் அவனைத் தன்னுடைய மாணவனாக ஏற்றுக்கொண்டு அவனுக்கு நல்லவிதமாய் பயிற்சிகள் கொடுத்தார்.

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் கடுமையான பயிற்சிக்குப் பின், ஒருநாள் ஓவியர் தன்னிடம் பயிற்சி பெற்ற அந்த இளைஞனைக் கூப்பிட்டு, " இன்று நான் உனக்கு ஒரு போட்டி வைக்கப்போகிறேன், இந்தப் போட்டியில் நீ வெற்றிபெற்றுவிட்டாய் எனில், உன்னை நான் கைதேர்ந்த ஓவியராக அறிவிப்பேன்" என்றார். இளைஞன் அதற்குச் சரியென்று சொல்லி, போட்டிக்குத் தயாரானான்.

பின்னர் ஓவியர் அவனிடம், " நீ என்னை ஓர் ஓவியமாக வரைந்து தா" என்றார். இதைக் கேட்ட அவன் ஒரு நிமிடம் மிரண்டு போனான். " அவன் அவரை ஓவியமாக வரைய எவ்வளவோ முயற்சித்துப் பார்த்தான், அவரிடமிருந்த தூரிகையைக் கொண்டுகூட அவரை ஓவியமாக வரைய முயற்சித்துப் பார்த்தான். அப்படியும் அவனால் முடியாமல் போக, அவன் தன்னுடைய தோல்வியை ஒத்துக்கொண்டான். அப்போது ஓவியர் அவனிடம், " என்னை நீ ஓவியமாக வரையவேண்டும் என்றால், என்னுடைய எண்ணங்களையும் உள்வாங்கி, நானாகவே மாறவேண்டும். அப்போது உன்னால் என்னை ஓவியமாக வரையமுடியும்" என்றார்.

ஆம், இது நற்செய்திப் பணியைச் செய்வோருக்கும் பொருந்தும். நாம் இயேசுவின் நற்செய்திப் பணியைச் செய்கின்றோம் என்றால், அவருடைய உளப்பாங்கையும் மனநிலையும் நாம் பெறவேண்டும். அப்போதுதான் நாமும் அத்தகைய பணியைச் சிறப்பாகச் செய்ய முடியும்.

ஆகவே, தூய ஃபோய்லலின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம் , இயேசுவின் உளப்பாங்கைப் பெற்று, இயேசுவுக்கு பணிசெய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 மீட்புப் பெறுவோர் யார்?

எபநேசர் வூட்டன் என்ற மறைபோதகர் லிட்போர்ட் ப்ரூக் என்ற இடத்தில் இருந்த ஒரு பெரிய மைதானத்தில் போதித்துக் கொண்டிருந்தார். அவருடைய போதனை பாவம், புண்ணியம், மீட்பு, கடவுளின் இரக்கம், தண்டனை போன்ற பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கி இருந்தது. அவருடைய போதனையைக் கேட்ட மக்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள். ஒருசிலர் பரவச நிலையில் இருந்தார்கள்.

அப்பொழுது கூட்டத்திலிருந்து ஒரு இளைஞர் எழுந்து எபநேசர் வூட்டனிடம், " ஐயா! நான் மீட்புப் பெற என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டார். இதைக் கேட்ட போதகர், " இது மிகவும் தாமதம். மிகவும் தாமதம்" என்றார்.

" ஏன் ஐயா! இந்த கேள்வியை நான் முன்கூட்டியே கேட்டிருக்க வேண்டுமா? அல்லது நான் மீட்புப் பெறவே முடியாதா? என்று மீண்டுமாக அவர் அவரிடம் கேள்வியைக் கேட்டார். அதற்கு எபநேசர் வூட்டன், " அப்படியில்லை, கடவுளின் மீட்புத் திட்டம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தொடங்கிவிட்டது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் சிந்திய தன்னுடைய விலைமதிக்கப்பெறாத இரத்ததினால் நம் அனைவரையும் மீட்டுக்கொண்டார். தன்னுடைய கடைசி மூச்சை விட்டபோதே நம்முடைய மீட்பு உறுதியாகிவிட்டது. ஆகையால் நீ இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல் கேள்வியைக் கேட்டதால்தான் " மிகவும் தாமதம். மிகவும் தாமதம் என்றேன்" என்றார்.

ஆம், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் சிந்திய தன்னுடைய விலை மதிக்கப்பெறாத இரத்தத்தினால் நம் அனைவரையும் மீட்டுக் கொண்டார் என்பதை எபநேசர் வூட்டன் என்ற மறைபோதகரின் வார்த்தைகள் நமக்கு எடுத்துக் கூறுகின்றன.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசுவிடம் ஒருவர், " மீட்பு பெறுவோர் சிலர் மட்டும்தானா?" என்றதொரு கேள்வியைக் கேட்கின்றார். அவர் இப்படிப்பட்ட ஒரு கேள்வியைக் கேட்பதற்குக் காரணம், மீட்பு யூதர்களுக்கு மட்டுமே உரித்தானது. புறவினத்தாருக்கோ அல்லது வேற்று இனத்தாருக்கோ கிடையாது என்ற எண்ணம் யூதர்களிடம் அதிகமாக இருந்தது. அதனால்தான் அந்த மனிதர் இயேசுவிடம் இப்படிப்பட்ட ஒரு கேள்வியைக் கேட்கிறார்.

ஆனால் இறைவன் தரும் மீட்பு எல்லாருக்கும் பொதுவானது என்பதை இறைவார்த்தை நமக்குத் தெளிவாக எடுத்துக்கூறுகிறது. தூய பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகம் 2:4 ல் வாசிக்கின்றோம், " எல்லா மனிதரும் மீட்புப் பெறவும், உண்மையை அறிந்துனரவும் வேண்டுமென அவர் (கடவுள்) விரும்புகிறார்" என்று. ஆகையில் மீட்பு ஒரு சிலருக்கு மட்டும்தான் என்பது பொருளற்றதாகிவிடுகின்றது.

இயேசுவிடம் கேள்விகேட்ட அம்மனிதற்கு இயேசு தரும் பதில்தான் நமது சிந்தனைக்கு உரியதாக இருக்கின்றது. இயேசு கூறுகிறார். " இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும்" என்கிறார். அதாவது இறைவனின் மீட்பு திட்டம் ஏற்கனவே தொடங்கிவிட்டது. அந்த மீட்பினைப் பெற நாம் இடுக்கமான வாயில் வழியாக நுழையவேண்டும் என்கிறார்.

இடுக்கமான வாயில் என்றால் என்ன? என்பது நமது அடுத்த சிந்தனையாக இருக்கின்றது. இடுக்கமான வாயில் என்பது வேறொன்றுமில்லை அது இயேசு வழி நடந்த பாடுகளின் வழி. அவ்வழியில் ஏராளமான துன்பங்கள், வேதனைகள், சவால்கள் இருக்கும். அந்த துன்பங்களைத் தாங்கிக்கொண்டு தொடர்ந்து நடக்கின்ற ஒருவர்தான் இறைவன் தரும் மீட்பினைப் பெற முடியும் என்பதுதான் இயேசுவின் தெளிவான பதிலாக இருக்கின்றது.

" தெய்வத்தின்மீது பாரத்தைப் போட்டுவிட்டு அதே நேரத்தில் துரும்பைக்கூட எடுத்துப் போடாத சோம்பேறியாக இருப்பவர்களை வெற்றி (மீட்பு) ஒருபோதும் தழுவுவதில்லை. தெய்வத்தை நம்புங்கள். தெய்வம் கொடுத்த உங்கள் கையையும் காலையும் நம்புங்கள் வெற்றி (மீட்பு) நிச்சயம் என்பார் வாலி. ஆம். கடவுள் நாம் மீட்பை, வெற்றியைப் பெற எல்லா வழிகளையும் சொல்லிக் கொடுத்திருக்கிறார். இதை வைத்துக்கொண்டு நாம் மீட்பு பெறுவதும், பெறாததும் நம்முடைய கையில்தான் இருக்கின்றது.

இதைதான் தூய அகுஸ்தினார் வேறு வார்த்தைகளில் கூறுவார், " உன் துணையின்றி உன்னைப் படைத்த கடவுள், உன் துணையின்றி உன்னை மீட்க மாட்டார்" என்று. எனவே நாம் மீட்பை பெற நம்மாலான கடமைகளை நாம் செய்யவேண்டும்.

பல நேரங்கில் நாம் குறுக்கு வழியில் எதையாவது அடைய நினைக்கிறோம் அல்லது எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் வாழ நினைக்கின்றோம். " உளிதாங்கும் கற்கள்தானே மண்மீது சிலையாகும், வலிதாங்கும் உள்ளம்தானே நிலையான சுகம் காணும் என்பான் கவிஞன் ஒருவன்.

எனவே இறைவன் தரும் மீட்பினைப் பெற நாம் இடுக்கமான/சவால்கள் நிறைந்த பாதையில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
மீட்பிற்கான எளிதான வழி எது?

எபேசியர் 6:1-9
லூக்கா 13:22-30

அனைவரும் மீட்படைவார்களா? யார் மீட்படைவர், யார் மீட்படையார்? இந்த கேள்விகள் தொன்று தொட்டே இருந்து வருகின்றன என தோன்றுகிறது. கிறிஸ்துவிடமே இந்த கேள்வியை பலவிதங்களில் சீடர்கள் எழுப்புவதை நாம் நற்செய்தியில் அவ்வப்போது காணுகின்றோம். ஆனால் ஒருமுறை கூட கிறிஸ்து ஆம், இல்லை என்று இதற்கு பதில் சொல்லவில்லை; இவர்கள் மீட்படைவர், இவர்கள் மீட்படையார் என்று சுட்டிக்காட்டவில்லை! மாறாக அவர்களை ஆழ்ந்து சிந்திக்கவும், அகன்று நோக்கவும், தூண்டக்கூடிய ஒரு விளக்கத்தை அவர்களுக்கு தருகிறார்.

ஒருமுறை ஊசியின் காதும் ஒட்டகமும் குறித்து ஒரு உவமையை கூறுகிறார். மற்றொரு முறை மனிதருக்கு இவை முடியாதவையாக இருக்கலாம் ஆனால் கடவுளுக்கு முடியாதது என்று ஏதும் இல்லை என்று கூறுவார். இன்று அதே கேள்விக்கு பதிலளிக்கும் அவர், இந்த குழுவையோ, அந்த சபையையோ, ஏதோவொரு குறிப்பிட்ட நிலையையோ சார்ந்தவர்கள் என்றே ஒரு காரணத்தினாலேயே ஒருவர் மீட்படைந்துவிட இயலாது! யாராக இருப்பினும், எந்த நிலையில் இருப்பினும், அந்நிலையில் அவர்கள் வாழும் வாழ்க்கை முறையை பொறுத்தே ஒருவர் மீட்புக்கு உரியவராகவோ மீட்புக்கு தூரமானவராகவோ உருவாகிறார், வளர்கிறார்.

பவுலடிகளார் அந்த வாழ்க்கை முறையை விளக்கும்போது ஒரே ஒரு வழியை நம் கண் முன் நிறுத்துகிறார்: இறைவனுக்கு உகந்ததை, இறைவனின் திருவுளத்தை செய்யுங்கள் என்பதே அது! மீட்படைய எந்த ஒரு குறுக்கு வழியோ, எளிதான வழியோ இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இருப்பது ஒரு வழியே! இறைவழியே! இன்று, இந்த நேரம், இந்த சூழலில் இறைவன் என்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்று எனக்குள்ளாக தெளிந்து தேர்ந்து நான் செயல்படும்போது, இறைவனுக்குரியவராய், மீட்புக்குரியவராய் நான் வளர்கிறேன்!

(Rev. Father: Antony Christy SDB)
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!