Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   30  அக்டோபர் 2018  
                                                           பொதுக்காலம் 30ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 அருட்சாதனம் பற்றிய இம்மறைபொருள் பெரிது.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 21-33

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள். திருமணமான பெண்களே, ஆண்டவருக்குப் பணிந்திருப்பது போல உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள்.

ஏனெனில் கிறிஸ்து திருச்சபைக்குத் தலையாய் இருப்பது போலக் கணவர் மனைவிக்குத் தலையாய் இருக்கிறார். கிறிஸ்துவே திருச்சபையாகிய உடலின் மீட்பர். திருச்சபை கிறிஸ்துவுக்குப் பணிந்திருப்பது போல, மனைவியரும் தங்கள் கணவருக்கு அனைத்திலும் பணிந்திருக்க வேண்டும்.

திருமணமான ஆண்களே, கிறிஸ்து திருச்சபை மீது அன்பு செலுத்தியது போல நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள். ஏனெனில் கிறிஸ்து திருச்சபை மீது அன்பு செலுத்தி, அதற்காகத் தம்மையே ஒப்புவித்தார். வார்த்தையாலும் நீரினாலும் அதனைக் கழுவித் தூயதாக்குமாறு இவ்வாறு செய்தார். அத்திருச்சபை, கறைதிரையோ, வேறு எக்குறையோ இல்லாமல் தூய்மையும் மாசற்றதுமாய் மாட்சியுடன் தம்முன் விளங்குமாறு இப்படிச் செய்தார்.

அவ்வாறே கணவர்களும் மனைவியரைத் தம் சொந்த உடல் எனக் கருதி அன்பு செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள். தம் மனைவியின் மீது அன்பு கொள்கிறவர், தம்மீதே அன்பு கொள்கிறவர் ஆவார்.

தம்முடைய உடலை எவரும் வெறுப்பதில்லை. அதைப் பேணி வளர்க்கிறார். அவ்வாறே, கிறிஸ்துவும் திருச்சபையைப் பேணி வளர்த்து வருகிறார். ஏனெனில் நாம் அவரது உடலின் உறுப்புகள். "இதனால் கணவர் தம் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தம் மனைவியுடன் ஒன்றித்திருப்பார்; இருவரும் ஒரே உடலாயிருப்பர்" என மறைநூல் கூறுகிறது. இதில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது. இது திருச்சபைக்கும் கிறிஸ்துவுக்கும் பொருந்துவதாகக் கொள்கிறேன்.

எப்படியும், உங்களுள் ஒவ்வொருவரும் தம்மீது அன்புகொள்வது போலத் தம் மனைவியின்மீதும் அன்பு செலுத்த வேண்டும். மனைவியும் தம் கணவருக்கு அஞ்சி வாழ வேண்டும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா 128: 1-2. 3. 4-5 (பல்லவி: 1a)
=================================================================================
பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழி நடப்போர் பேறுபெற்றோர்!

1 ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! 2 உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர். பல்லவி

3 உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடி போல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். பல்லவி

4 ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். 5 ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக. பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 (மத் 11: 25 )

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
கடுகு விதை வளர்ந்து மரமாயிற்று.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 18-21

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தினரைப் பார்த்து, "இறையாட்சி எதற்கு ஒப்பாயிருக்கிறது? அதை நான் எதற்கு ஒப்பிடுவேன்? அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பாகும். ஒருவர் அதை எடுத்துத் தம் தோட்டத்தில் இட்டார். அது வளர்ந்து மரமாயிற்று. வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் தங்கின" என்று கூறினார்.

மீண்டும் அவர், "இறையாட்சியை எதற்கு ஒப்பிடுவேன்? அது புளிப்பு மாவுக்கு ஒப்பாகும். பெண் ஒருவர் அதை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது" என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

👼🏿👼🏾⛪👼🏽👼🏼⛪👼🏻👼

சிந்தனை

இறையாட்சியை ஒப்பீடுதல் - கடுகு விதை , புளிப்பு மாவு

மிக சிறியவையானாலும், நிறைந்த பலன் கொடுப்பதாகும்.
இறையாட்சியும் நிறைந்த பலன் கொடுப்பதாகவே அமைந்துள்ளது.
பலருக்கு வாழ்வு தந்துள்ளது என்பதுவே உண்மை.
வளப்படுத்துவோம். வாழ்வு பெறுவோம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
இறையாட்சியும் கடுகுவிதையும்!

நெல்லை நண்பர்கள் கழகத்தைப் பற்றி எப்போதாவது, எங்கேயாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தமிழ்நாட்டில் எத்தனையோ கழகங்கள் இருப்பதனால்  நெல்லை நண்பர்கள் கழகத்தைப் பற்றி நீங்கள் தெரிந்திருப்பதற்கு அவ்வளவாக வாழ்ப்பில்லை.

இந்தக் கழகமானது 1961 ஆம் ஆண்டு, டி.ஜான் என்பவரால் தொடங்கப்பட்டது. இந்த கழகம் வளர்வதற்கு டி.ஜான் தன்னுடைய வாழ்வின் பெரும்பகுதியைச் செலவழித்தார். இதன்மூலம் கூடைப் பந்து, கபடி, கைப்பந்து, கால்பந்து போன்ற பல்வேறு விளையாட்டுகளில் திறமையுள்ள பல விளையாட்டு வீரர்களை உருவாக்கினார். இன்றைக்கு இவர் உருவாக்கிய  நெல்லை நண்பர்கள் கழகத்திலிருந்து பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கானோர் இந்தியன் இரயில்வே, தமிழ்நாடு காவல்படை, வங்கிகள் மற்றும் மத்தியக் கணக்காய்வகம் போன்ற பல அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்புப் பெற்றுள்ளனர். இன்னும் பெற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.

டி.ஜான் என்ற சாதாரண ஒரு மனிதரால் தொடங்கப்பட்ட  நெல்லை நண்பர்கள் கழகம் இன்றைக்கு பலரும் வேலைவாய்ப்பினை பெறுவதற்குக் காரணமாக இருக்கின்றது என்பதை நினைத்துப் பார்க்கின்றபோது, மிகவும் பெருமையாக இருக்கின்றது. ஆம், உலகில் தோன்றிய மாற்றங்கள், வளர்ச்சிகள் எல்லாம் எங்கோ இருந்த யாரோ ஒரு சாதாரண மனிதரால் தொடங்கப்பட்டதுதானே!

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு இறையாட்சியை கடுகுவிதைக்கு ஒப்பிடுகின்றார். இறையாட்சி என்பது எவ்வளவு பெரியது. அதனைப் போய் இயேசு கடுகுவிதைக்கு ஒப்பிடுகின்றாரே? என்று நாம் நினைக்கலாம். ஆனால், கடுகுவிதையானது அளவில் சிறியதாக இருந்தாலும் அவர் வளர்ந்து பெரியதாகின்றபோது, வானத்துப் பறவைகள் எல்லாம் அதில் தாங்கும். அந்தளவுக்கு அது பெரியதாகும். இறையாட்சிக்கான விதையானது நாசரேத்து என்ற குக்கிராமத்தில் விதைக்கப்பட்டாலும் அது வளரும்போது உலக மக்களையெல்லாம் உள்ளடக்கியதாக இருக்கும். இப்படி இறையாட்சியும் கடுகுவிதையும் ஒத்த இயல்பினைக் கொண்டதாக இருப்பதால்தான் என்னவோ, ஆண்டவர் இயேசு இறையாட்சியை கடுகுவிதைக்கு ஒப்பிடுகின்றார்.

இந்த உவமையின் வழியாக இயேசு கிறிஸ்து நமக்குச் சொல்கின்ற செய்தி என்ன என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசு கிறிஸ்து இந்த உவமையின் வழியாக நமக்குச் சொல்லும் முதன்மையான செய்தி, எவரையும் அவருடைய உருவத்தை வைத்து எடைபோட்டுவிடக்கூடாது என்பதாகும். இன்றைக்குப் பலர், ஏன் நாமும்கூட மனிதர்களுடைய வெளித்தோற்றத்தை வைத்து, குறைத்து மதிப்பிடுகின்றோம். ஆனால் அவர்களால் ஆகுகின்ற செயல் நம்முடைய கண்களுக்குத் தெரிவதில்லை. ஈசாவுக்கு எட்டுப் புதல்வர்கள் இருக்க, அவர்களில் பெரியவர்களும் பலசாலிகளும் ஓரங்கட்டப்பட்டு, கடையவனாகிய தாவீதுதான் இஸ்ரயேலின் அரசராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார். ஆகையால், ஒருவருடைய வெளித்தோற்றத்தை வைத்து இவர் சிறியவர், வறியவர், ஒன்றுக்கும் உதவாதவர் என்று மதிப்பிடுவது எந்தவிதத்திலும் நியாயமில்லை.

அடுத்ததாக, இந்த உவமையின் வழியாக இயேசு நமக்குச் சொல்லும் செய்தி, சமூக மாற்றத்திற்காகவும் இறையாட்சி இம்மண்ணில் மலர்ந்திடவும் நாம் பெரிய அளவில் எதையும் செய்யவேண்டியதில்லை, மாறாக சிறிய அளவில் ஏதாவது செய்தால்கூட, கடவுள் அதனை பெரிய அளவில் மாற்றித் தந்திடுவார் என்பதாகும்.  உலங்கெங்கும் நற்செய்தி அறிவித்திடணும் சமுதாயத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று சொன்னால், பலர்  அவ்வளவு பெரிய காரியத்தை, தனியொரு மனிதனால் எப்படிச் செய்திட முடியும்? என்று மலைப்பதைப் பார்க்க முடிகின்றது. எதார்த்தம் என்னவென்றால், நாம் நம்முடைய பணிகளை, அது சிறிய அளவில் இருந்தாலும் தொடர்ந்து செய்துகொண்டே இருந்தால், இன்றைக்கு அல்ல என்றைக்காவது ஒரு நாள் பலன்தந்தே ஆகும்.

தொடக்கத்தில் சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் டி.ஜான் பலருக்கும் வேலை வாய்ப்பினை பெற்றுத்தருவும் அவர்களுடைய திறமைகளை வளர்த்தெடுக்கவும் நினைத்தார். அதற்காக அவர் சிறிய அளவில்  நெல்லை நண்பர்கள் கழகத்தை ஆரம்பித்தார். இன்றைக்கு அது பெரிய ஆலமரம் போன்று வளர்ந்து, பலருக்கும் நனமைகளைத் தருகின்றதல்லவா? அத்போன்று இன்றைக்கு சிறிய அளவில் நாம் தொடங்குகின்ற இறையாட்சிப் பணி அல்லது சமூக மாற்றுப் பணி என்றைக்காவது ஒருநாள் அதற்கான பலனைத் தந்தே ஆகும்.

நிறைவாக இந்த உவமையின் வழியாக ஆண்டவர் இயேசு நமக்குச் சொல்கின்ற செய்தி " நாம் எதைச் செய்தாலும் அதை தொடர்ந்து செய்யவேண்டும்" என்பதாகும். கடுகுவிதையானது, தான் சிறிய விதையாக இருக்கின்றேனே, நான் எப்படி பெரிய மரமாக மாறப்போகிறேன் என்று தன்னுடைய வளர்ச்சியை நிறுத்திக் கொள்வதில்லை. மாறாக அது தொடர்ந்து வளர்கின்றது. இறுதியில் வானத்துப் பறவைகள் தங்கக்கூடிய அளவுக்கு பெரிய மரமாக மாறுகின்றது. நாமும்கூட, இந்தப் பணி எப்படி பலன்தரப்போகிறது என்று முடங்கிவிடாமல், தொடர்ந்து மனதளராது உழைத்தோம் என்றால், அதற்கான பலனை பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி.

ஆகவே, நாம் சிறியவர்களாக, பார்வைக்கு எளியவர்களாக இருந்தாலும் தொடர்ந்து இறையாட்சிப் பணியை, சமூக மாற்றுப் பணிகளைச் செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

👼🏿👼🏾⛪👼🏽👼🏼⛪👼🏻👼

தூய அல்போன்சுஸ் ரொட்ரிக்குஸ் (அக்டோபர் 30)

" புழுதியினின்று அவர் ஏழைகளை உயர்த்துகிறார்; குப்பையினின்று வறியவரைத் தூக்கிவிடுகின்றார்; உயர்குடியினரோடு அவர்களை அமர்த்துகிறார்! மாண்புறு அரியணையை அவர்களுக்கு உரிமையாக்குகின்றார்! உலகின் அடித்தளங்கள் ஆண்டவருக்கு உரியவை! அவற்றின்மேல் அவர் உலகை நிறுவினார்" (1 சாமு 1:8)

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் அல்போன்சுஸ் ரொட்ரிக்குஸ், ஸ்பெயின் நாட்டில் உள்ள செகோவியா என்ற ஊரில் 1533 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் வளரும்போதே கிறிஸ்தவ விசுவாசத்தில் மேலோங்கி வளர்ந்து வந்தார். தன்னுடைய பிழைப்பிற்காக இவர் துணி வியாபாரம் செய்துவந்தார்.

இவருக்கு 26 வயது நடக்கும்போது அருட்சாதனம் நடைபெற்றது. இறைவன் இவருக்கு மூன்று பிள்ளைகளைக் கொடுத்து ஆசிர்வதித்தார். இப்படி இவருடைய இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாகப் போய்க்கொண்டிருக்கும்போது இவருடைய துணி வியாபாரம் நொடிந்துபோனது, இவருடைய பிள்ளைகளும் ஒருவர் பின் ஒருவராக இறக்கத் தொடங்கினார்கள். இதைப் பார்த்து அதிர்ந்து போன அல்போன்சுஸ் ரொட்ரிக்குஸ் செய்வதறியாது திகைத்தார். பின்னர் ஏதோ சிந்தனை வயப்பட்டவராய், இறைவன் தன்னை தன்னுடைய பணிக்கென அழைக்கின்றாரோ என உணர்ந்து, துறவற சபையில் சேர முயன்றார். ஆனால் இவருக்கு போதிய கல்வியறிவு இல்லாததால், யாருமே இவரை தங்களுடைய சபையில் சேர்த்துக்கொள்ள முன்வரவில்லை. கடைசியில் இவரை சேசு சபையினர் தங்களுடைய சபையில் ஒரு சகோதரராக இருந்து பணிசெய்ய சொல்ல, இவரும் அதற்குச் சம்மதம் தெரிவித்து, அந்த சபையில் இணைந்தார். அப்போது இவருக்கு வயது 50.

இதற்குப் பின்பு அல்போன்சுஸ் ரொட்ரிக்குஸ் ஒருசில பயிற்சிகளுக்குப் பின்பு மஜோர்காவில் உள்ள ஒரு சேசு சபை கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு இவர் வாயில்காவலராக (Door-Keeper) இருந்து பணிசெய்யத் தொடங்கினார். தனக்குக் கொடுக்கப்பட்டது மிகவும் சாதாரண வேலையாக இருந்தாலும் அல்போன்சுஸ் ரொட்ரிக்குஸ் அதனை மிகவும் தாழ்ச்சியான உள்ளத்தோடு செய்து வந்தார். இதைவிடவும் இவர் இயேசுவிடமும் அன்னை மரியாவிடமும் மிகுந்த பக்திகொண்டு விளங்கினார். அல்போன்சுஸ் ரொட்ரிக்குசின் இத்தகைய வாழ்வைப் பார்த்துவிட்டு அவருடைய சபைத் தலைவர் அவரை, " அல்போன்சுஸ் ரொட்ரிக்குஸ் ஒரு சாதாரண மனிதர் அல்ல, மனிதர் உலகில் இருக்கின்ற ஒரு வானதூதர்" என்று புகழ்ந்தார். அந்தளவுக்கு அல்போன்சுஸ் ரொட்ரிக்குசின் வாழ்வு இருந்தது.

இப்படி எளிமைக்கும் தாழ்ச்சிக்கும் பக்திக்கும் இலக்கணமாக விளங்கிய அல்போன்சுஸ் ரொட்ரிக்குஸ் 1617 ஆம் ஆண்டு இறந்தார். இவர் இறக்கும்போது இயேசுவின் பெயரையும் மரியாவின் பெயரையும் உச்சரித்துக்கொண்டே இறந்தார். இவருக்கு 1888 ஆம் ஆண்டு திருத்தந்தை பதிமூன்றாம் சிங்கராயரால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம

தூய அல்போன்சுஸ் ரொட்ரிக்குசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு பணிசெய்வோம்.

தூய அல்போன்சுஸ் ரொட்ரிக்குசின் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கின்றபோது நமக்கு நினைவுக்கு வருவது அவருடைய தாழ்ச்சியான வாழ்வுதான். அவர் தனக்குக் கொடுக்கப்பட்ட மிகச் சாதாரண வேலையைக் கூட தாழ்ச்சியான உள்ளத்தோடுதான் செய்தார். அவரைப் போன்று நாம் தாழ்ச்சியான உள்ளத்தோடு பணிசெய்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

விவேகானந்தரின் வாழ்வில் நடைபெற்ற நிகழ்வு இது. ஒருசமயம் அவர் தன்னுடைய சீடர்களுக்கும் நண்பர்களுக்கும் விருந்தொன்று ஏற்பாடு செய்தார். விருந்திற்கு அழைக்கப்பட்ட எல்லாருமே வந்திருந்தார்கள். விருந்திற்கு வந்திருந்த அனைவருக்கும் விவேகானந்தர்தான் பணிவிடை செய்தார். இதைப் பார்த்துவிட்டு அவருடைய சீடர்கள் அவரிடம், "ஒரு குரு சீடர்களுக்கு பணிவிடை செய்வதா?" என்று சொல்லி அவரைத் தடுத்தனர். அதற்கு அவர் அவர்களிடம், " இயேசுவைக் குறித்து கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? அவர் தன்னுடைய சீடர்களின் பாதங்களையே கழுவினார். அவரைப் போன்று நான் உங்களுடைய பாதங்களையா கழுவினேன். பணிவிடைதானே செய்தேன்" என்றார்.

இப்படிச் சொல்லிவிட்டு அவர் தொடர்ந்து அவர்களிடம், " ஒருவேளை இப்படிப்பட்ட மகானுடைய காலடிகளைக் கழுவ எனக்கொரு வாய்ப்புக் கிடைத்தால், நான் என்னுடைய இரத்தத்தால்கூட கழுவுவேன்" என்றார். இதைக் கேட்டு அவருடைய சீடர்கள் ஆச்சரியப்பட்டு நின்றார்கள்.

ஆம் ஒவ்வொருவரும் தாழ்ச்சியோடு பணி செய்யவேண்டும், அதுதான் உயர்வுக்கான வழி.

ஆகவே, தூய அல்போன்சுஸ் ரொட்ரிக்குசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று தாழ்ச்சியான உள்ளத்தோடு பணிசெய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
சிறிய முயற்சி பெரிய வெற்றி

ஓர் ஊர். அந்த ஊரில் ஓர் அரசன். கஞ்சத்தனத்துக்குப் பெயர் பெற்றவன்.

ஒருமுறை அந்த ஊரில் பெரும் உணவுப்பஞ்சம் வந்தது. மக்கள் யாவரும் பட்டினியால் தவித்தார்கள். அரசனின் உணவுக் களஞ்சியம் நிறைய பலவிதமான தானியங்கள் நிறைந்து இருந்தன. ஆனால், இருப்பவர்கள் நெஞ்சில் ஈரம் சுரந்தால்தானே கொடுப்பதற்கு எண்ணம் வரும்? பசியால் வாடிய மக்கள் பலவாறு கெஞ்சிக்கேட்டபோதும், அரசன் ஒரு தானியம்கூடக் கொடுக்க முடியாது என்று கூறி விட்டான். (அந்த அரசனுக்குப் பல மனைவிகள்; ஏராளமான பிள்ளைகள்; கணக்கிலடங்காத பேரப்பிள்ளைகள். அவர்களின் பல தலைமுறைக்கு அவன் பொருள் சேகரித்து வைத்திருந்தான். அவர்களுக்காகவே இப்போது தானியங்களையும் தர மறுத்தான்.

மனம் வருந்திய மக்கள் வேறு வழியின்றி, அவ்வூர் கோயிலின் தலைமைச் சாமியாரிடம் சென்று கண்ணீரும் கம்பலையுமாகத் தங்கள் நிலையைக் கூறினார்கள். சாமியார் மிகவும் நல்லவர்; எவ்விதமான தீய பழக்கங்களோ, சுயநலமான எண்ணங்களோ இல்லாதவர். சாமியார் மனம் இரங்கினார். மக்களின் பசியைத் தீர்க்க அவர் முடிவு செய்தார். அரசனிடம் சென்றார். பசியால் வாடும் மக்களின் அவல நிலையைக் கூறி, அவர்களின் பசிதீர்க்குமளவாவது தானியங்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு அரசன் தீர்மானமாக மறுத்து விட்டான்.

சாமியார் விடவில்லை. "அரசே, உனது குடிமக்கள் பசித்திருக்க, நீயும் உன் குடும்பத்தினரும் வயிறுபுடைக்க உணவு உண்பது பெரும் பாவத்தைத்தான் கொண்டுவரும். வீணாகப் பெரும் பாவத்தைச் சேர்த்து வைக்காதே" என்று கூறினார்.

அரசன் சற்றுப் பயந்துபோனான். "துறவியே, உங்களுக்கென்ன? நீங்கள் வெறும் இலைகளையும், வேர்களையும் தின்றே காலத்தை ஓட்டி விடுவீர்கள். எனது குடும்பத்தினர்கள் பெருவயிறு படைத்தவர்கள். நாள் முழுவதும் தின்றுகொண்டே இருப்பார்கள். மக்களுக்குக் கொடுத்துவிட்டால், பின்னர் எனது குடும்பத்தினர் சாப்பிட உணவுக்கு எங்கே போவது?" என்று கேட்டான்.

சாமியார் பொறுமையுடன் கூறினார், "அரசே, கலங்காதே. நீ அதிகமாக ஒன்றும் கொடுக்க வேண்டாம். இன்றிலிருந்து சரியாக ஒரு மாதம் முடியும்வரை மட்டும் தானியங்களை வழங்கு. இன்று ஒரே ஒரு தானியத்தை மட்டும் கொடு. நாளை அதன் இரு மடங்கு, அதாவது இரண்டு தானியங்களை மட்டும் கொடு. மறுநாள், அதன் இருமடங்கு, அதாவது நான்கு தானியங்களை மட்டும் கொடு. இவ்வாறாக தினமும், அதற்கு முந்திய நாளில் கொடுத்ததின் இரு மடங்கு தானியங்களை மட்டும் உன் குடி மக்களுக்கு வழங்கு. இவ்வாறாக, நீ இந்த முப்பது நாளில் செய்யும் தானம் உனக்குப் பெரும் புண்ணியத்தைத் தேடித் தரும்".

அரசன் தனக்கு விளங்கிய வகையில் சற்றே சிந்தித்துப்பார்த்தான். முப்பது நாளில் அவ்வளவு அதிகமான தானியங்கள் அவனது களஞ்சியத்தை விட்டுப்போகாது என்பது திண்ணம். முதல் நாளில் கொடுப்பது ஒரே ஒரு தானியம். மறு நாளில், இரண்டு மட்டுமே. நினைத்தபோதே அரசனுக்குச் சிரிப்புத் தாங்கவில்லை. "எனது குடி மக்களைப்போலவே, இந்தச் சாமியாரும் சுத்த முட்டாளாகவே இருக்கிறார். சரி. அவர் கூறியபடியே கொடுத்துத் தொலைப்போம்" என்று எண்ணி, அவர் கூறியபடியே தானியங்களை வழங்குமாறு தனது களஞ்சிய நிர்வாகிகளுக்குக் கட்டளையிட்டார்.

அடுத்த ஒரு மாதத்தில் அவனது களஞ்சியம் கிட்டத்தட்டக் காலியாகி விட்டது. ஆம் அவனது குடிமக்களுக்கு சில நாட்களிலே வயிறு நிறைய உணவு கிடைத்தது. சாமியார் செய்த தவத்தின் பலனாக, ஒரு மாதம் முடியுமுன்னரே நல்ல மழை பெய்து நிலம் செழித்தது.

நாம் செய்யக்கூடிய ஒரு சிறு முயற்சி மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த கதை நமக்கு நினைவுபடுத்துகிறது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு இறையாட்சியை கடுகுவிதை மற்றும் புளிப்பு மாவுக்கு ஒப்பிடுகின்றார். கடுகுவிதையாக இருக்கட்டும், புளிப்பு மாவாக இருக்கட்டும் இரண்டுமே அளவில் சிறியதுதான். ஆனால் அவை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இயேசு அறிவித்த இறையாட்சியும் நாசரேத்திலுள்ள தொழுகைக்கூடத்தில் தொடங்கப்பட்டு, இன்றைக்கு உலகின் கடை எல்லை வரை பறந்து விரிந்து நிற்கிறது.

ஆகவே, நாம் செய்யும் சிறிதளவு நன்மையானாலும் அது இந்த உலகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எனவே நாம் அனுதினமும் சிறு சிறு நன்மைகளைச் செய்திடுவோம். அதன்வழியாக இவ்வுலகில் பெரிய மாற்றங்கள் ஏற்படக் காரணமாக இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

" விதையில் மரம் இருப்பதைப் போன்று உங்களில் பிரபஞ்சம் இருப்பதை அறியவேண்டும். ஓஷோ.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3     30ம் வாரம், செவ்வாய், ஆண்டின் பொதுக்காலம்
(அக்டோபர் 30, 2018)
=================================================================================
கிறிஸ்துவில் வாழ்வதே உண்மை வாழ்வு

எபேசியர் 5:21-33
லூக்கா 13:18-21

ஒருமுறை இளம் தம்பதியினரிடம் திருமண வாழ்வில் தம்பதியர் இடையே இருக்க வேண்டிய நற்குணங்களை பற்றியும், மனநிலைகளை பற்றியும் பேசிக்கொண்டிருந்தேன். இன்றைய முதல் வாசகத்தின் பகுதியை விளக்கியபோது, ஒரு சில சமயங்களில் மிகவும் காரசாரமான விவாதங்கள் எழுந்தன. அதில் ஏற்றுக்கொள்ள கடினமான சிலவற்றை பற்றி பேசும்போது ஒருவர், "இதையெல்லாம் பவுலடிகளார் கூறுவது ஒரு விதத்திலே வினோதமாக இருக்கிறது! அவரே திருமணமாகாதவர் அல்லவா" என்றார். உடனே வேறொருவர், "ஆம் அதை பவுலடிகளார் கூறுவதும் நீங்கள் விளக்குவதும் ஏற்றுக்கொள்ள கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது" என்றார். அரங்கம் முழுவதும் சிரிப்பொலியால் நிரம்பிற்று.

அதை சற்று ஒதுக்கி விட்டு சிந்திப்போம்... பவுலடிகளார் கூறும் கருத்துக்களை முன் நிறுத்தி, யார் யாருக்கு அடங்கி நடக்க வேண்டும் என்ற பெரியதொரு விவாதமே நடத்தலாம். ஆனால் அது அல்ல இங்கு நமது நோக்கம். அடங்கி நடப்பதா, அடங்கிப்போவதா என்பது அல்ல; ஆனால் எப்படிப்பட்ட வாழ்வு உண்மையான கிறிஸ்தவ வாழ்வு என்று சிந்திப்பதே இன்றைய வார்த்தையின் உண்மை அழைப்பு.

தலைவராக வாழ்கிறேனா, தொண்டராக வாழ்கிறேனா, திருத்தூதராகவோ ஊழியராகவோ, ஊரறிந்தவராகவோ அல்லது யாருமறியாத எளிமையானவராகவோ... இவை ஏதும் உண்மையானதன்று. உண்மையான கிறிஸ்தவ வாழ்வு என்பது எந்நிலையிலும், கிறிஸ்துவுக்குள் வாழ்வதே என்பதை நாம் உணரவேண்டும். கிறிஸ்துவுக்குள் வாழ்ந்தால், நான் சிறு கடுகாய் இருந்தாலும் போதும், பெரும் மரமாய் ஓங்கிடுவேன்; சிறு அளவு புளிப்பு மாவாய் இருந்தாலும் போதும், பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்திவிடுவேன். கிறிஸ்துவுக்குள் நான் வாழ்கிறேனா என்பது மட்டுமே இங்கு உண்மை கேள்வி... இல்லையெனின் அதிகாரம், ஆணவம், அகங்காரம் என்று பலவும் சூழ்ந்து என்னை அழித்து விடும்.

(Rev. Father: Antony Christy SDB)



=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!