|
|
29
அக்டோபர் 2018 |
|
|
பொதுக்காலம்
30ம் வாரம் |
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
கிறிஸ்து அன்புகூர்ந்தது போல,
நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய
திருமுகத்திலிருந்து வாசகம் 4: 32 - 5: 8
சகோதரர் சகோதரிகளே, ஒருவருக்கொருவர் நன்மை செய்து பரிவு
காட்டுங்கள்; கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்தது போல
நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள். ஆகவே நீங்கள் கடவுளின்
அன்பார்ந்த பிள்ளைகளாய் அவரைப்போல் ஆகுங்கள். கிறிஸ்து உங்களுக்காகத்
தம்மை நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாகக் கடவுளிடம் ஒப்படைத்து
உங்களிடம் அன்பு கூர்ந்ததுபோல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்.
பரத்தைமை, அனைத்து ஒழுக்கக் கேடுகள், பேராசை ஆகியவற்றின் பெயர்கூட
உங்களிடையே சொல்லப்படலாகாது. இதுவே இறைமக்களுக்கு ஏற்ற நடத்தை.
அவ்வாறே, வெட்கங்கெட்ட செயல், மடத்தனமான பேச்சு, பகடி பண்ணுதல்
ஆகியவை தகாதவை; நன்றி சொல்லுதலே தகும். ஏனெனில் பரத்தைமையில்
ஈடுபடுவோர், ஒழுக்கக் கேடாக நடப்போர், சிலை வழிபாடாகிய பேராசை
கொண்டோர் போன்ற எவரும் கிறிஸ்துவுக்கும் கடவுளுக்கும் உரிய அரசில்
உரிமைப்பேறு அடையார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். வீண்
வார்த்தைகளால் உங்களை யாரும் ஏமாற்ற விடாதீர்கள்.
ஏனெனில் மேற்கூறிய செயல்களால்தான் கீழ்ப்படியாத மக்கள்மீது கடவுளின்
சினம் வருகின்றது. எனவே அவர்களோடு நீங்கள் எதிலும் பங்குகொள்ள
வேண்டாம். ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு
இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக
வாழுங்கள்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
(திபா 1: 1-2. 3. 4, 6 (பல்லவி: எபே 5: 1)
=================================================================================
பல்லவி: நீங்கள் கடவுளின் பிள்ளைகளாய் அவரைப்போல் ஆகுங்கள்.
1 நற்பேறு பெற்றவர்
யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்;
பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;
2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்;
அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். பல்லவி
3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில்
கனிதந்து என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்;
தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். பல்லவி
4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச்
செல்லும் பதரைப் போல் ஆவர். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில்
கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
எசே 33: 11
அல்லேலூயா, அல்லேலூயா! தீயோர் சாகவேண்டும் என்பது என் விருப்பம்
அன்று; ஆனால் அத்தீயோர் தம் வழிகளினின்று திரும்பி வாழவேண்டும்,
என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
ஆபிரகாமின் மகளாகிய இவரை இந்தக் கட்டிலிருந்து
ஓய்வு நாளில் விடுவிப்பது முறையில்லையா?
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்
13: 10-17
அக்காலத்தில் ஓய்வு நாளில் இயேசு தொழுகைக்கூடம் ஒன்றில் கற்பித்துக்
கொண்டிருந்தார். பதினெட்டு ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து உடல்
நலம் குன்றிய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் சிறிதும்
நிமிர முடியாதவாறு கூன் விழுந்த நிலையில் இருந்தார்.
இயேசு அவரைக் கண்டு அருகே கூப்பிட்டு, "அம்மா, உமது
நோயிலிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்" என்று கூறி, தம்
கைகளை அவர்மீது வைத்தார். உடனே அவர் நிமிர்ந்து கடவுளைப்
போற்றிப் புகழ்ந்தார்.
இயேசு ஓய்வு நாளில் குணமாக்கியதைக் கண்ட தொழுகைக்கூடத் தலைவர்
கோபம்கொண்டு, மக்கள் கூட்டத்தினரைப் பார்த்து, " வேலை செய்ய ஆறு
நாள்கள் உண்டே அந்நாள்களில் வந்து குணம் பெற்றுக் கொள்ளுங்கள்;
ஓய்வு நாளில் வேண்டாம்" என்றார்.
ஆண்டவரோ அவரைப் பார்த்து, " வெளிவேடக்காரரே, நீங்கள் ஒவ்வொருவரும்
ஓய்வு நாளில் தம் மாட்டையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டு
போய்த் தண்ணீர் காட்டுவது இல்லையோ? பாருங்கள், ஆபிரகாமின் மகளாகிய
இவரைப் பதினெட்டு ஆண்டுகளாகச் சாத்தான் கட்டி வைத்திருந்தான்.
இந்தக் கட்டிலிருந்து இவரை ஓய்வு நாளில் விடுவிப்பது
முறையில்லையா?" என்று கேட்டார். அவர் இவற்றைச் சொன்னபோது, அவரை
எதிர்த்த அனைவரும் வெட்கப்பட்டனர். திரண்டிருந்த மக்கள் எல்லாரும்
அவர் செய்த மாட்சிக்குரிய செயல்கள் அனைத்தையும் குறித்து மகிழ்ச்சி
அடைந்தனர்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை
நிமிர முடியாதவாறு இன்று நம்மை வருத்திக் கொண்டுள்ள தீமையெது.
நாமும் இன்று தலைநிமிர்ந்து நிற்க முடியாத நிலையுண்டு.
தீமையை அகற்றினோம் என்றால் நம்மாலும் தலை நிமிர்ந்து நின்றிட
முடியும். வரம் கேட்போம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
நோயாளிகளை கவனித்துக் கொண்டாயா?
ஒருமுறை புனித தொன் போஸ்கோ (1815 1888) இத்தாலியிலிருந்து
பிரான்சு நாட்டிற்கு பணியின் நிமித்தமாக சென்றபோது, அங்கே ஓர்
இரவு தங்க நேர்ந்தது. எனவே தொன் போஸ்கோ அருகாமையில் இருந்த ஒரு
பங்குத் தந்தையின் இல்லத்திற்குச் சென்று, அங்கே இருந்த பங்குத்
தந்தையிடம், " இந்த ஒருநாள் இரவு மட்டும் இங்கே தங்கிக்கொள்ள அனுமதி
தாருங்கள்" என்று கேட்டார். அதற்கு பங்குத் தந்தையும்,
" தாராளமாய் இங்கே தங்கிக்கொள்ளுங்கள்" என்று சொல்லி ஓர் அறையை
அவருக்குக் கொடுத்தார்.
தொன் போஸ்கோ பிரான்சுக்கு சென்றிருந்த நேரம் சரியான குளிர்காலம்.
குளிர் என்றால் அப்படி ஒரு குளிர். அவர் தனக்குக் கொடுக்கப்பட்ட
அறையில் தூங்க நினைத்தபோது அவரால் சரியாகத் தூங்க முடியவில்லை.
ஏனென்றால் அதில் ஹீட்டர் சாதனம் அதாவது அறையை குளிருக்கு
வெதுவெதுப்பாக வைத்திருக்கும் கருவி பொருத்தப்பட்டிருக்கவில்லை.
தங்க வந்த இடத்தில் இதை எல்லாம் எதிர்பார்க்க முடியுமா? என்று
நினைத்துக்கொண்டு தொன் போஸ்கோ அந்த கடுங்குளிரிலும், உடல் சரியில்லாத
நிலையிலும் அந்த அறையில் கஷ்டங்களைப் பொறுத்துக்கொண்டு அப்படியே
தூங்கிவிட்டார்.
அடுத்த நாள் காலை தொன்போஸ்கோ தனக்கு தங்க இடம்கொடுத்த பங்குத்
தந்தைக்கு நன்றி சொல்லிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுச்
சென்றார். அங்கே இருந்த பங்குத் தந்தைக்கு ஒரு வழக்கம் இருந்தது.
அது என்னவென்றால் அன்றைய நாளில் என்னென்ன நடந்ததோ அதையெல்லாம்
நாட்குறிப்பில் எழுதி வைத்துக்கொள்வார். தொன் போஸ்கோ அங்கே வந்து
போனதையும் அவர் தன்னுடைய நாட்குறிப்பில் எழுதி
வைத்துக்கொண்டார்.
நாட்கள் நகர்ந்தன. அந்த குருவானவர் அதே இடத்தில் நீண்ட நாட்கள்
பங்குக் குருவாக இருந்தார். ஒருநாள் அவர் செய்தித்தாளை படித்தபோது
ஒரு செய்தியைப் படித்தார். அந்த செய்தி இதுதான் "தந்தை
தொன்போஸ்கோ, திருந்தந்தை பதினோறாம் பத்திநாதரால் புனிதராக உயர்த்தப்பட்டிருக்கிறார்
(1934, ஏப்ரல்1)" .
இதைப் படித்ததும் அந்த குருவானவருக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சி
ஏற்பாட்டாலும், இன்னொரு விதத்தில் வருத்தமும் ஏற்பட்டது. ஏனென்றால்
தொன் போஸ்கோ பங்குத் தந்தை இல்லத்தில் தங்க வந்த நாளில் ஹீட்டர்
சாதனம் பொருத்தப்பட்ட அறையிருந்தும் அவர் அதைக் கொடுக்காமல்,
ஹீட்டர் சாதனம் பொருத்தப்படாத சாதாரண அறையைக்
கொடுத்திருந்தார். தன்னை நாடிவந்த தொன் போஸ்கோவை சரியான கவனிக்கவில்லையே
என்று அவர் எண்ணி வருந்தினார்.
நம்மை நாடிவரும் மக்களை அல்லது நம்மோடு இருக்கும் மக்களை, அவர்களை
தேவைகளை அறிந்தபின்னும் எப்படி பாராமுகத்தோடு நடந்துகொள்கிறோம்
என்பதை இந்த நிகழ்வு எடுத்துக்கூறுகிறது. அந்த பங்குத்தந்தை
தொன்போஸ்கோவிற்கு தங்க இடமளித்ததே பெரிது என நினைக்கலாம். ஆனால்
அவர் நல்ல அறை இருந்தபோதும், சாதாரண அறையைக் கொடுத்ததுதான் நமது
சிந்தனைக்கு உரியதாக இருக்கின்றது.
ஆனால் இதற்கு மாறாக இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு
பதினெட்டு ஆண்டுகளாக சாத்தானின் பிடியில் இருந்து, நோய்வாய்ப்பட்டுக்
கிடந்த கூன்விழுந்த பெண்மணியை குணப்படுத்திய நிகழ்வு இருக்கின்றது.
வழக்கமாக தன்னை நாடிவந்து, தங்களுடைய நோய்நீங்க வேண்டுபவர்களது
நோயை மட்டும் குணப்படுத்தும் இயேசு (ஒருசில நிகழ்வுகள் விதி விளக்காக
இருக்கலாம்) இந்த இடத்தில் தாமாக முன்வந்து நோயுற்றிருக்கும்
அந்த பெண்மணிக்கு குணம்தருகிறார். அதாவது நாம் கேளாமலே நமது
தேவைகளை அறிந்து, அவற்றைப் பூர்த்தி செய்யும் இறைவனாக இருக்கிறார்
என்பதை இப்பகுதி நமக்கு மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகிறது.
ஆனால் இயேசு தாமாகவே முன்வந்து உதவிசெய்வதைப் பார்த்த
தொழுகைக்கூடத் தலைவர், " வேலை செய்ய ஆறு நாட்கள் உண்டே; அந்நாட்களில்
வந்து குணம் பெற்றுக் கொள்ளுங்கள்; ஓய்வுநாளில் வேண்டாம்" என்கிறார்.
இதைக் கேட்ட இயேசு கிறிஸ்து, " வெளிவேடக்காரரே, நீங்கள் ஒவ்வொருவரும்
ஓய்வுநாளில் தம் மாட்டையோ, கழுதையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய்த்
தண்ணீர் காட்டுவது இல்லையோ? பாருங்கள். ஆபிரகாமின் மகளாகிய இவரைப்
பதினெட்டு ஆண்டுகளாக சாத்தான் கட்டி வைத்திருந்தான். இந்தக் கட்டிலிருந்து
இவரை ஒவிநாளில் விடுவிப்பது முறையில்லையா? என்கிறார். அதாவது
நன்மை செய்ய நேரம், காலம் தேவையிள்ளில் என்பதுதான் இயேசுகூற
விரும்பும் செய்தியாக இருகின்றது.
ஆகவே, நாம் நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும் மக்களின் அல்லது
தேவையில் இருப்போரின் உணர்வுகளை குறிப்பால் அறிந்து உதவிட முன்வருவோம்.
உதவி செய்ய முன்வருவோருக்குத் தடையாதிருப்போம். அதன்வழியாக் இறையருள்
நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
தளரா நம்பிக்கையுடன் வாழ்வோம்!
ஒரு நாளல்ல, இரண்டு நாட்களல்ல எழுபத்திரெண்டு நாட்கள் தன்னந்தனியாக,
ஆபத்து நிறைந்த அட்லாண்டிக் கடலில், ஓர் ஓட்டைப் படகில் எங்கே
போகிறோம் என்பதுகூடத் தெரியாமல் அலைந்து பிழைத்த மனிதரை உங்களுக்குத்
தெரியுமா?. ஸ்டீபன் கல்லகன் என்பவர்தான் அந்த மனிதர்.
1982 ஆம் ஆண்டில் ஒருநாள், ஸ்டீபன் கல்லகன் அட்லாண்டிக் பெருங்கடலில்
தனியாக உல்லாசப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, அவரது படகானது ஒரு
பாறையில் மோதி உடைந்து போனது. இதனால் அவர் வேறொரு, சிறிய, ஒரு
ஆள் மட்டுமே அமரக்கூடிய படகில் ஏறி தப்பிக்கத் தொடங்கினார். உண்ண
உணவு கிடையாது, காற்று அடிக்கும் பக்கமெல்லாம் படகு போனது.
குளிரும் இராத்திரிகள், தன்னந்தனியான பகல்கள் என்று நாட்கள்,
மாதங்கள் கழிந்தன. இதற்கு மத்தியில் அவர் சென்றுகொண்டிருந்த
படகுகூட ஓட்டையாகி, தண்ணீர் உள்ளே வரத் தொடங்கியது. இதனால் அவர்
உள்ளே வந்த தண்ணீரை மொண்டு மொண்டு வெளியே ஊற்றத் தொடங்கினார்.
குடிப்பதற்கு கடல் தண்ணீரையும் உணவிற்கு கடலில் எப்போதாவது
கையில் கிடைக்கும் மீன்களையுமே பயன்படுத்தினார்.
இப்படி அவருடைய நாட்கள் கடலில், ஓர் ஓட்டைப் படகில் கழிய, ஒருநாள்
கடலில் சென்றுகொண்டிருந்த கப்பல் ஒன்று, அவரைத் தற்செயலாய் கண்டுபிடித்து
கரைசேர்த்தது.
இன்றுவரை சாதனையாகவே கருதப்படும் இந்த நிகழ்விற்குப் பிறகு
ஸ்டீபன் கல்லகனிடம் ஒருவர், " எப்படி உங்களால் இந்த எழுபத்தி
இரண்டு நாட்களும் வாழ முடிந்தது?" என்று கேட்டதற்கு அவர்,
"எப்படியும் கரை சேர்ந்துவிடுவோம் என்ற நம்பிக்கையால்தான் என்னால்
வாழ முடிந்தது" என்று உறுதியாகச் சொன்னார்.
நட்ட நடுக்கடலில், தன்னந்தனியாக, அன்னம் தண்ணீரில்லாமல் எழுபத்தி
இரண்டு நாட்கள் ஸ்டீபன் கல்லகனால் வாழ முடிந்ததற்கு அவருடைய நம்பிக்கைதான்
காரணமாக இருந்தது என்பதை அறிகின்றது
"நம்பிக்கை எத்துணை வல்லமை என்பதை நம்மால் உணர முடிகின்றது.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, பதினெட்டு ஆண்டுகளாக கூன்
விழுந்த நிலையில் இருந்த ஒரு பெண்ணை தொழுகைக்கூடத்தில் வைத்து,
அதுவும் ஓய்வுநாள் குணப்படுத்துகின்றார். இயேசு இந்தப் பெண்மணியை
எப்படிக் குணப்படுத்தினார் என்று சிந்தித்துப் பார்ப்பதற்கு
முன்னர், கூன் விழுந்த பெண்மணியின் நம்பிக்கை எத்தகையது என்பதைக்
குறித்து சிந்தித்துப் பார்ப்பது நல்லது.
கூன் விழுந்த பெண்மணி பதினெட்டு ஆண்டுகளாக அதே நிலையில் இருக்கின்றார்
என்று நற்செய்தி வாசகமானது நமக்கு எடுத்துச் சொல்கின்றது. இப்படி
பதினெட்டு ஆண்டுகளாகக் கூன்விழுந்த நிலையில் இருந்தாலும் அவர்
இறைவனைச் சபித்துக்கொண்டு, தொழுகைக் கூடத்திற்கு வராமல் இருக்கவில்லை.
தொடர்ந்து தொழுகைக்கூடத்திற்கு வந்து நம்பிக்கையோடு இறைவனைத்
தொழுகின்றார். இப்படிப்பட்ட தளரா நம்பிக்கைதான் ஆண்டவர் இயேசுவை
அவர்பால் பரிவுகொள்ளச் செய்தது. இன்றைக்குப் பலர் தங்களுடைய
வாழ்வில் ஏதாவது ஒரு கெடுதல் நடந்துவிட்டது என்றால், இறைவனைச்
சபித்துவிட்டு ஆலயத்திற்கு வராமலே இருப்பதைப் பார்க்கின்றோம்.
இவர்களுக்கு மத்தியில் நற்செய்தியில் வருகின்ற இந்த கூன்
விழுந்த பெண்மணி இறைவனிடம் தளராத நம்பிக்கை கொண்டு வாழவேண்டும்
என்பதற்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாக இருக்கின்றார்.
இத்தகைய சூழ்நிலையில் தொழுகைக்கூடத்திற்கு வருகின்ற இயேசு, பதினெட்டு
ஆண்டுகளாகக் கூன்விழுந்த நிலையில் இருந்த அந்தப் பெண்மணியைப்
பார்த்து, அவர்மீது பரிவுகொண்டு அவரைக் குணப்படுத்துகின்றார்.
இறைவனிடத்தில் யாராரெல்லாம் தளரா நம்பிக்கையுடன் வாழ்கிறார்களோ
அவர்களுக்கு இறைவன் நன்மைகளைச் செய்வதுதானே வழக்கம்!. நற்செய்தியில்
வருகின்ற இந்தப் பெண்மணி அப்படித்தான் இறைவன் தனக்கு நிச்சயம்
சுகம் தருவார் என்ற தளரா நம்பிக்கையுடன் இருந்தார், அதனால் குணம்
பெற்றார். நாமும் இறைவனிடம் அத்தகைய நம்பிக்கையோடு வாழ்கின்றபோது,
இறைவனிடமிருந்து ஆசிரைப் பெறுவது உறுதி.
நற்செய்தி வாசகம் இந்த பெண்மணியைக் குறித்து இன்னொரு
செய்தியையும் பதிவு செய்கின்றது. அது என்னவென்றால், குணப்பெற்ற
அவர், அப்படியே இருந்துவிடாமல் ஆண்டவரைப் போற்றிப் புகழ்கின்றார்.
நாம் இறைவனிடமிருந்து நன்மைகளை பெற்றோம் என்றால் (ஏராளமாகப்
பெற்றிருப்போம்) அதற்கு நன்றியுள்ளவர்களாகவும் இறைவனைப் போற்றக்கூடியவர்களாக வும் இருக்க வேண்டும். அதுதான் நல்ல மனிதருக்கு அடையாளம். இறைவனிடமிருந்து
ஏராளமான நன்மைகளைப் பெற்றும், அதனை மறந்து வாழ்வது எந்தவிதத்திலும்
ஏற்றதாக இராது.
ஆகவே, நாம் நற்செய்தியில் வரும் அந்தப் பெண்மணியைப் போன்று இறைவனிடம்
தளரா நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்
பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
3 30ம் வாரம், திங்கள், ஆண்டின்
பொதுக்காலம்
(அக்டோபர் 29, 2018)
=================================================================================
நீங்கள் ஒளியாய் இருக்கிறீர்கள்
எபேசியர் 4:32-5:8
லூக்கா 13:10-17
'நீங்கள் ஒளியாய் இருக்கிறீர்கள்', என்று இன்றைய முதல்
வாசகத்திலே நம்மை பார்த்து அறிவுறுத்துகிறார் பவுலடிகளார்.
ஒளியாய் இருப்பதென்றால் என்ன என்பதையும் தெளிவாய்
உணர்த்துகிறார்... கிறிஸ்துவோ அதை நடைமுறையாய் வாழ்ந்து
காட்டுகிறார்.
தனிப்பட்ட வாழ்வில் தூய்மை ஒருவரை இருளின் மத்தியிலே
ஒளிரச்செய்கிறது. இன்று உலகம் தவறு செய்வதை குறித்து அஞ்சுவதை
விட தவறு செய்து சிக்கிக்கொள்வதை குறித்தே அஞ்சுகிறது. வெறும்
மற்றவர் பார்வைக்கும் உலகத்தின் புகழுக்கும் வாழப்படுவது
தூய்மையானது!
மனித உறவுகளில் உண்மை ஒருவரை இறைச்சாயல் பெறச்செய்கிறது. தான்
என்ற அகங்காரமோ, தனக்கு என்ற சுயநலமோ, தனது என்ற பயன்படுத்தும்
மனநிலையோ இல்லாமல் வளரும் உறவுகளில் இறைவனே வாழ்கிறார். ஒருவரை
கண்டவுடனேயே அவர்களது தேவை நமது கண்களுக்கு படவேண்டும் தவிர
அவர்களது பலகீனம் அல்ல.
ஆன்மீகத்தில் ஊன்றிய அடையாளம் ஒருவரை இறைவனுக்குரியவர்
ஆக்குகிறது. இறைவனின் உருவையும் சாயலையும் தாங்கியவர் என்ற
உணர்வு மிகுந்தவராக இறைவனுக்கு உரியவற்றையே செய்யும் வாழ்க்கை
முறை அடுத்தவரோடு ஒப்பிட்டு அல்ல இறைவனின் சித்தம் என்னை
எதற்கு அழைக்கிறது என்ற தெளிவோடு நடக்கவே என்னை அழைக்கிறது.
சுருங்க கூறின், தனிப்பட்ட தூய்மை, உறவில் உண்மை, இறையுணர்வு
என்னும் இவை என்னை இறைவனின் சாயலாகவே மாற்றுகிறது! நாம்
அவரைப்போலவே மாற அழைக்கப்படுகிறோம், ஏனெனில் நாம் அவரது
பிள்ளைகளாவோம். கடவுளை போல் மாற நாம் என்ன செய்ய வேண்டும்
என்பதை கிறிஸ்துவே வாழ்ந்து காட்டியுள்ளார். ஒளியான அவரது
வழியில் நடப்போம், ஒளியாய் வாழ்வோம்!
(Rev. Father: Antony Christy SDB)
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
4
=================================================================================
|
|