Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   28  அக்டோபர் 2018  
                                                           பொதுக்காலம் 30ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் புனிதர்கள் சீமோன், யூதா - திருத்தூதர்கள் விழா
=================================================================================
 திருத்தூதர்களை அடித்தளமாகக் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 19-22

சகோதரர் சகோதரிகளே, இனி நீங்கள் அன்னியர் அல்ல; வேற்று நாட்டினரும் அல்ல. இறைமக்கள் சமுதாயத்தின் உடன் குடிமக்கள்; கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள். கிறிஸ்துவின் உறவில் கட்டடம் முழுவதும் இசைவாகப் பொருந்தி, ஆண்டவருக்கென்று தூய கோவிலாக வளர்ச்சி பெறுகிறது. நீங்களும் அவரோடு இணைந்து தூய ஆவி வழியாகக் கடவுளின் உறைவிடமாகக் கட்டப்பட்டு வருகிறீர்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா 19: 1-2. 3-4 (பல்லவி: 4a)
=================================================================================
 பல்லவி: படைப்புகளின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.

1 வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது. 2 ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப் பற்றிய அறிவை வழங்குகின்றது. பல்லவி

3 அவற்றிற்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை. 4 ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லை வரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! இறைவா, உம்மை வாழ்த்துகிறோம், ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம். திருத்தூதர்களின் அருளணியும் ஆண்டவரே, உம்மைப் போற்றிடுமே. அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார்.

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 12-19

அக்காலத்தில் இயேசு வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார். விடிந்ததும் அவர் தம் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார்.

அவர்கள் முறையே பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், அவருடைய சகோதரர் அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதி எனப்பட்ட சீமோன், யாக்கோபின் மகன் யூதா, துரோகியாக மாறிய யூதாசு இஸ்காரியோத்து என்பவர்களே.

இயேசு அவர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள். அவர் சொல்வதைக் கேட்கவும் தங்கள் பிணிகள் நீங்கி நலமடையவும் அவர்கள் வந்திருந்தார்கள். தீய ஆவிகளால் தொல்லைக்கு உள்ளானவர்கள் குணமானார்கள். அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டு அனைவர் பிணியையும் போக்கியதால், அங்குத் திரண்டிருந்த மக்கள் யாவரும் அவரைத் தொட முயன்றனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

திருத்தூதர்கள் அனைவரின் நேர்ச்சித் திருப்பலியிலும் மேற்கண்ட வாசகங்களைப் பயன்படுத்தலாம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
திருத்தூதர்களான தூய சீமோன், யூதா ததேயு விழா

நீங்கள் திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள். தூய பவுல் (எபே 2: 20).

இன்று திருச்சபையானது தூய சீமோன் மற்றும் யூதா ததேயு ஆகியோரின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. இவர்களது விழாவைக் கொண்டாடும் இந்த நல்லநாளில் இவர்களின் வாழ்வும் பணியும் நமக்கு என்ன செய்தியைத் தருகின்றது என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

முதலாவதாக திருத்தூதர் (தீவிரவாதியான) சீமோனைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம். விவிலியத்தில் இவரைப் பற்றி செய்தி திருதூதர்கள் அட்டவணையைத் தவிர்த்து வேறு எங்கும் காணகிடைக்கவில்லை. மாற்கு மற்றும் மத்தேயு நற்செய்தி நூல்களில் இவர் கனானியன் எனவும், லூக்கா நற்செய்தியில் தீவிரவாதி எனப்பட்ட சீமோன் எனவும் அழைக்கப்படுகின்றார்.

இயேசு வாழ்ந்த காலத்தில் யூதர்களை ஆண்டுவந்த ரோமானியர்களுக்கு எதிரான கலகம் அவ்வப்போது வெடித்துக்கொண்டே இருந்தது. இப்படி கலகம் செய்தவர்களை ரோமானியர்கள் " தீவிரவாதிகள்" என்று அழைத்தார்கள். இந்த " தீவிரவாதிகள்" தங்களை ஆண்டுவந்த ரோமானியர்களின் அதிகாரத்தை முறியடித்து, யூதர்களின் ஆட்சியை நிலைநிறுத்தப் பார்த்தார்கள். அதோடு மட்டுமல்லாமல் ரோமானியர்களின் கைக்கூலிகளாகச் செயல்பட்ட ஒருசில யூதர்களுக்கு எதிராகவும் இவர்கள் கிளர்ந்தெழுந்தார்கள். ஆனால் இத்தகைய " தீவிரவாதிகள்" ரோமானியர்களால் அழித்தொழிக்கப்பட்டார்கள் என்பதே உண்மை.

இயேசு ரோமானியர்களின் அதிகாரத்தை முறியடித்து, யூதர்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கையில்தான் தீவிரவாதியான சீமோன் இயேசுவின் குழுவில் சேர்ந்தார் (?). ஆனால் இயேசு நாட்டிற்காக தன்னுடைய உயிரைத் தர நினைத்த சீமோனை, நற்செய்திக்காக தன்னுடைய இன்னுயிரைத் தரச் செய்கிறார்.
திருத்தூதரான தூய சீமோன் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு தொடக்கத்தில் எகிப்து நாட்டிலும், அதன்பின்னர் பெர்சியா நாட்டில் நாட்டிலும் நற்செய்தி அறிவித்து அங்கேயே மறைசாட்சியாக உயிர்துறந்தார் என்று நம்பப்படுகின்றது. இவ்வாறு சீமோன் ஆண்டவர் இயேசுவுக்காக தன்னுடைய இன்னுயிரைத் துறந்து நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு நமக்கெல்லாம் முன்னுதாரணமாக இருக்கின்றார்.

திருத்தூதரான தூய சீமோனைக் குறித்து சிந்தித்துப் பார்த்த நாம், இப்போது திருத்தூதரான தூய யூதா ததேயுவைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

நற்செய்தி நூல்களின் தொடக்கத்தில் யூதா என்று அழைக்கப்படுகின்ற இவர், பின்னர் ஆண்டவர் இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் இஸ்காரியோத்திடமிருந்து வேறுபடுத்திக்காட்டுவதற்காக யூதா ததேயு என அழைக்கப்படுகின்றார் (லூக் 6:18). ததேயு என்றால் " துணிவு" என்று பொருள். விவிலியத்தில் இவரைக் குறித்தும் போதிய ஆதாரங்கள் கிடையாது. ஆண்டவர் இயேசுவின் இறுதி இராவுணவின்போது இவர் பேசிய, ஆண்டவரே, நீர் உம்மை உலகிற்கு வெளிப்படுத்தாமல் எங்களுக்கு வெளிப்படுத்தப் போவதாகச் சொல்கிறீரே, ஏன்? (யோவா 14:22) என்பதுதான் இவர் பேசிய ஒரே ஒரு வாக்கியமாக இருக்கின்றது.

ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு இவர் பெர்சியா நாட்டிற்குச் சென்று அங்கே நற்செய்தியை அறிவிக்கின்றபோது தீவிரவாதியான தூய சீமோனோடு கி.பி.65 ஆண்டு கொல்லப்பட்டார் என்று திருச்சபை மரபு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இவ்வாறு தூய ததேயுவும், சீமோனைப் போன்று ஆண்டவர் இயேசுவுக்காக தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார்.

தூய யூதா ததேயு கைவிடப்பட்டோர் மற்றும் அனாதைகளின் பாதுகாவலாராக இருக்கின்றார். இவர் இந்த மண்ணுலகில் வாழ்ந்தபோது கைவிடப்பட்டோர் மற்றும் அனாதைகளின் மீது அதிகமான அக்கறைகொண்டு வாழ்ந்திருக்கவேண்டும். அதனால்தான் அவர் அம்மக்களுக்கு எல்லாம் பாதுக்காவலராக இருக்கின்றார். இன்றைக்கு நாம் கைவிடப்பட்டோர் மீதும், அனாதைகளின் மீதும் அதிகமான அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இறுதித் தீர்ப்பின்போது இயேசு, நான் அந்நியனாய் இருந்தேன், என்னை ஏற்றுக்கொண்டாயா? என்றுதான் கேட்கின்றார். ஆகவே நாம் இப்படிப்பட்ட மக்கள்மீது அன்பும், அக்கறையும் கொண்டு வாழ்வோம்.

1969 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 20 ஆம் தேதி, முதல் மனிதன் நிலவில் காலடி வைத்தான். அன்றைய தினத்தில் அன்னை தெரசா வாழ்ந்து வந்த நிர்மல் இல்லத்தில் ஒரு பேச்சு வந்தது.

அன்னையே உங்களால் நிலவில் சென்று பணிசெய்ய முடியுமா? என்று ஒரு சகோதரி அன்னையைப் பார்த்துக் கேட்டார். அதற்கு அன்னை அவர்கள், ஒருவேளை ஏழைகளும், அநாதைகளும், கைவிடப்பட்ட மக்களும் நிலவில் வாழ்ந்தால், அங்கே நான் பணிசெய்வேன் என்றார். என்ன ஓர் அழுத்தமான பதில். அன்னை எப்போதும் ஏழை, அனாதைகளைப் பற்றிதான் கவலைப்பட்டார். அதனால்தான் அவரால் இப்படி பதிலளிக்க முடிந்தது.

ஆகவே தூய சீமோன், யூத ததேயு ஆகியோரின் விழாவைக் கொண்டாடும் நாம், அவர்களைப் போன்று நாமும் நற்செய்தி அறிவிப்பதிலும், ஏழை எளியவர்மீது அக்கறைகொண்டு வாழ்வதில் கருத்தாய் இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 திருத்தூதர்களான சீமோன், யூதா ததேயு பெருவிழா

இன்று திருச்சபையானது திருத்தூதர்களான சீமோன் மற்றும் யூதா ததேயு ஆகிய இருவரின் விழாவைக் கொண்டாடுகிறது. இந்த நல்லநாளில் இவர்களின் சாட்சிய வாழ்வு நமக்கு எத்தகைய பாடத்தைக் கற்றுத்தருகிறது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

முதலாவதாக திருத்தூதர் சீமோனைக் குறித்துப் பாப்போம். இவர் கானான் ஊரைச் சேர்ந்தவர். இஸ்ரயேல் மக்களை அடிமைப்படுத்திக் கொண்டிருந்த உரோமை அரசாங்கத்தை முறியடிக்க, அவர்களுக்கு எதிராக கலகக்காரரைப் போன்று செயல்பட்டதால் தீவிரவாதி என அறியப்பட்டவர். மேலும் கானாவூர் திருமணத்தில் இவரே மணமகனாக இருந்தார் என்றும் திருச்சபை மரபு சொல்கிறது.
நற்செய்தி நூற்களில் இவரைப் பற்றி அதிகமாகக் கேள்விப்படாவிட்டாலும் லூக்கா நற்செய்தி 22:36-38 பகுதியில் ஆண்டவர் இயேசு, பணப்பை உள்ளவர் அதை எடுத்துக்கொள்ளட்டும்; வேறு பை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்: வாழ் இல்லாதவர் தம் மேலுடையை விற்று வாள் வாங்கிக்கொள்ளட்டும் என்று சொல்கிறபோது சீடர்கள், இதோ! இங்கே இரு வாள்கள் உள்ளன என்பார்கள். ஆனால் இதில் சீமோனின் குரலே அதிகமாக ஒலித்தது என்று விவிலிய அறிஞர்கள் கூறுவார்கள்.

ஆண்டவர் இயேசு உதிர்த்தெழுந்த பின்பு இவர் திருத்தூதர் யாக்கோபுவிற்குப் பிறகு எருசலேமில் ஆயராக இருந்தார் எனச் சொல்லப்படுகிறது. மேலும் இவர் எகிப்து, லிபியா போன்ற பகுதிகளில் நற்செய்தியை அறிவித்தார் எனவும், டிராஜன் என்பவனின் ஆட்சிகாலத்தில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார் எனவும் சொல்லப்படுகிறது. சீமோன் யூதாவின் பாடுகள் என்ற புத்தகத்தில் சுவானீர் என்ற இடத்தில் நற்செய்தியை அறிவிக்கின்றபோது அங்கே கயவர்கள் இவரை இரம்பத்தால் அறுத்துக் கொன்றார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

ஆக, இயேசுவுக்காக எப்படிப்பட்ட துன்பங்களையும், சோதனைகளையும் அனுபவித்தார் என்று இவருடைய வாழ்வானது நமக்கு எடுத்துக் கூறுகிறது.
அடுத்ததாக திருத்தூதர் யூதா ததேயுவைக் குறித்துப் பார்க்கின்றபோது இவர் இயேசுவின் நெருங்கிய உறவினர். இவருடைய பெற்றோர்கள் அல்பேயு மற்றும் மரியா. இயேசுவின் முகமும், இவருடைய முகமும் ஒன்றுபோல இருந்ததால்தான் யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுப்பதற்காக பணம் வாங்கினார் என்று சொல்லப்படுகின்றது.

இவரைப் பற்றியும் நற்செய்தி நூலில் அதிகமான செய்திகள் காணக் கிடைக்கவில்லை. யோவான் நற்செய்தி 14:21-23 பகுதியில் இவர் ஆண்டவர் இயேசுவிடம், ஆண்டவரே! நீர் உலகிற்கு உம்மை வெளிப்படுத்தாமல், எங்களுக்கு வெளிப்படுத்தப் போவதாகச் சொல்கிறீரே? என்று கேட்பதற்கு இயேசு, என்மீது அன்புகொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார், என் தந்தையும் அவர்மீது அன்புகொள்வார். நாங்கள் அவரிடம் வந்து, அவருடன் குடிகொள்வோம் என்பார். இந்த ஒருபகுதியில்தான் நாம் யூதாவை குறித்து வாசிக்கின்றோம்.
இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு இவர் மெசபத்தோமியா, அர்மேனியா போன்ற பகுதிகளில் நற்செய்தி அறிவித்தார் என்று சொல்லப்படுகின்றது. மேலும் திருத்தூதர் சீமோனோடு சுவானீர் என்ற பகுதியிலே நற்செய்தி அறிவிக்கின்றபோது கி.பி.68 ஆம் ஆண்டு அம்பு எய்து கொல்லப்பட்டார் எனவும் சொல்லப்படுகின்றது.
இவர் கைவிப்பட்டோர், அனாதைகள் போன்றோருக்குப் பாதுகாவலராக இருக்கின்றார். ஆண்டவர் இயேசு தூய பிரிஜித்துக்கு காட்சிகொடுத்தபோது அவர் யூதாவிடம் உதவிவேண்டி மன்றாடினால் நிச்சயம் கிடைக்கும் என்று சொன்னதாகச் சொல்லப்படுகின்றது.

சீமோன், யூதா ததேயு என்ற இவரின் வாழ்வையும் குறித்தும் வாசித்த நாம், அவர்கள் இருவருமே இயேசுவுக்காக எப்படிப்பட்ட துன்பங்களையும் தாங்கிக்கொண்டார்கள் என்று அறிகின்றோம். திருமுழுக்குப் பெற்ற நாம் ஒவ்வோருமே இயேசுவுக்கு சான்று பகர்ந்து வாழவேண்டும் என்றே திருச்சபையானது நமக்கு அழைப்புத்தருகிறது. எனவே நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் நற்செய்தி உலகமெங்கும் அறிவிக்கும் நற்செய்திப் பணியாளர்கள் ஆவோம். அத்தோடு இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு பனிரெண்டு சீடர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பாக தனியாக இறைவனின் மன்றாடினார் என்று படிக்கின்றோம். இந்தப் பகுதியில் மட்டுமல்லாது இயேசு தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஜெபித்தார் என்று விவிலியமானது நமக்குக் கற்றுத் தருகின்றது. எனவே நாம் ஒவ்வொருவரும் ஜெபிக்கின்ற மக்களாகவும் வாழ்வோம்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக ஆப்ரிக்கா கண்டத்தில் நற்செய்திப் பணியாற்றிய ஜோசப் லிவிங்ஸ்டன் என்பவர் ஒருகட்டத்தில் அங்கே இருக்கும் ஒருசில மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பைச் சந்தித்தார். அவ்வேளையில் அவர் இயேசுவே உம்முடைய பணியைச் செய்யும் எனக்கு ஏன் இப்படி தொடர்ந்து துன்பங்கள் வருகின்றன என்று இயேசுவை நோக்கி மன்றாடினார். அப்போது ஒரு தூண்டுதலின் பேரில் மத் 28:18 ல் வரக்கூடிய விண்ணிலும், மண்ணிலும் எனக்கு எல்லா அதிகாரமும் அருளப்பட்டிருக்கிறது என்னும் வசனத்தை வாசித்தார். அது அவருக்கு மிகப்பெரிய ஆறுதலைத் தந்தது. இயேசு விண்ணிலும், மண்ணிலும் எல்லா அதிகாரமும் கொண்டு செயல்படும்போது நான் எதற்கு யாருக்கும் பயப்படவேண்டும் ஆறுதல் அடைந்தார். அதன்பிறகு தொடர்ந்து இறைப்பணியை துணிவுடன் செய்த்துவந்தார்.

ஜெபம் எந்தளவுக்கு ஜோசப் லிவிங்ஸ்டன் என்ற அந்த நற்செய்திப் பணியாளருக்கு ஆற்றலைத் தந்தது என்பதை இந்த நிகழ்ச்சி மூலமாக அறிந்துகொள்கின்றோம்.
திருத்தூதர்களான தூய சீமோன், யூதா இவர்களின் விழாவைக் கொண்டாடும் நாம் இவர்களைப் போன்று இயேசுவுக்கு சான்று பகர்வோம். அதற்கு ஜெபத்தை நமது ஆயுதமாகக் கொண்டு வாழ்வோம். இறையருள் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
 திருத்தூதர்களான சீமோன்-யூதா ததேயு திருவிழா.
இந்த இரண்டு திருத்தூதர்களும் ஒன்றாக மறைசாட்சியம் தழுவியதால் திருஅவை இருவரின் திருநாளையும் ஒரே நாளில் கொண்டாடுகின்றது.
உரோமையில் நான் பணி செய்யும் பங்கின் திருவிழாவும் நாளைதான். என் பங்கின் பாதுகாவலர் யூதா ததேயு.
யார் இந்த யூதா ததேயு?
யூதா இஸ்காரியோத்து என்ற சீடரிடமிருந்து இவரைப் பிரித்துக் காட்டவே யூதா ததேயு என அவர் அழைக்கப்படுகின்றார். 'ததேயு' என்றால் அரமேயத்தில் 'இதயம்' அல்லது 'இதயத்திற்கு நெருக்கமானவர்' என்பது பொருள்.
இவரை இயேசுவின் சகோதரர் என்றும், இவரின் திருமணம்தான் கானாவில் நடந்தது என்றும், இந்தத் திருமணத்திற்குதான் இயேசுவும், அவர் தாயும், அவரின் சீடர்களும் அழைப்பு பெற்றிருந்தார்கள் என்றும் சொல்கிறது பாரம்பரியம்.
இவரின் உருவங்களில் ஐந்து கூறுகள் இருக்கும்:
1. உச்சந்தலையில் நெருப்பு நாக்கு - இவரின் பெந்தகோஸ்தே அனுபவத்தின் அடையாளம்.
2. கையில் நீண்ட தடி - இவரின் மறைபரப்புப் பணியின் அடையாளம்.
3. கைகளில் விரித்துப் பிடித்திருக்கும் இயேசுவின் முகம் பதிந்த துணி - இதைக் கொண்டு எடேசா மன்னனுக்கு உடல் நலம் தந்தார். மேலும், இது வெரோணிக்கா இயேசுவின் முகத்தைத் துடைத்த துணி என்றும் சிலர் சொல்கின்றனர்.
4. கையிடுக்கில் இருக்கும் தோற்சுருள் - இவர் எழுதிய திருமுகம் (புதிய ஏற்பாட்டு நூலில் இருக்கிறது)
5. கோடரி - இவரின் மறைசாட்சியத்தின் அடையாளம்
நம்பிக்கை இழந்தவர்கள், கைவிடப்பட்டவர்கள், கைவிட்டவர்களின் பாதுகாவலராக இருக்கிறார் யூதா ததேயு. இவர்கள் இந்தப் புனிதரை நாடக் காரணம் இவர் 'ததேயு', அதாவது 'நெருக்கமானவர்' - இயேசுவின் இதயத்திற்கு நெருக்கமானவர்.
காலத்தால், இடத்தால் நாம் இயேசுவைவிட்டு தூரமாக இருந்தாலும், கைவிடப்பட்டவர்கள், நம்பிக்கை இழந்தவர்களுக்கு நம் நேரம், ஆற்றல், அரவணைப்பு கொடுத்தால் நாமும் 'ததேயுக்களே' - 'நெருக்கமானவர்களே!'
(படத்தில் காண்பது எங்கள் ஆலயத்தில் வீற்றிருக்கும் யூதா ததேயு திருவுருவம்)
 - Fr Yesu MDU
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
GOSPEL READING: LUKE 6:12-16    Fr. Theo sdb
Jesus had a group of disciples who followed him always. They were with him wherever he went and listened to his teaching and served him. Whenever Jesus wanted them to go ahead prepare for his coming they went earlier on to prepare for his coming. The seventy two whom he sent probably belonged to this group. There was a sizable number of people who were his disciples.
From among the disciples he chose the twelve apostles. They were for a special purpose. Their choice was preceded by a night-long prayer. Choosing them as apostles was something special. He discerned the will of God and prayed for them as well. When he came down after prayer he named them. This was not so for the disciples. The apostles had a special character.
சீடர்கள் அநேகர் இருந்தார்கள். ஆனால் திருத்தூதர்கள் என்பது இயேசு தேர்ந்தெடுப்பது. அவரது பணி புதிய இஸ்ராயேலை உருவாக்கி அவர்களை இறைவனிடம் ஒப்படைப்பதே.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!