Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   27  அக்டோபர் 2018  
                                                           பொதுக்காலம் 29ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 தலையாகிய கிறிஸ்துவைப் போன்று எல்லாவற்றிலும் நாம் வளர வேண்டும்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 7-16

சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து கொடுக்க விரும்பும் அளவுக்கேற்ப நம் ஒவ்வொருவருக்கும் அருள் அளிக்கப்பட்டுள்ளது.

ஆகையால்தான், 'அவர் உயரே ஏறிச் சென்றார்; அப்போது, சிறைப்பட்ட கைதிகளை இழுத்துச் சென்றார்; மனிதருக்குப் பரிசுகளை வழங்கினார்' என்று மறைநூல் கூறுகிறது. 'ஏறிச் சென்றார்' என்பதனால் அதன் முன்பு மண்ணுலகின் கீழான பகுதிகளுக்கு அவர் இறங்கினார் என்று விளங்குகிறது அல்லவா? கீழே இறங்கியவர்தான் எங்கும் நிறைந்திருக்கும்படி எல்லா வானுலகங்களுக்கும் மேலாக ஏறிச் சென்றவர்.

அவரே சிலரைத் திருத்தூதராகவும், சிலரை இறைவாக்கினராகவும், வேறு சிலரை நற்செய்தியாளர்களாகவும், ஆயர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார். திருத்தொண்டாற்ற இறைமக்களை ஆயத்தப்படுத்தவும், கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்பவும் இவர்களை அவர் ஏற்படுத்தினார்.

அதனால் நாம் எல்லாரும் இறைமகனைப்பற்றிய அறிவிலும் நம்பிக்கையிலும் ஒருமைப்பாட்டை அடைவோம். கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறுமளவுக்கு நாம் முதிர்ச்சியடைவோம். ஆகவே இனி நாம் குழந்தைகளைப்போல் இருக்கக் கூடாது. மனிதருடைய தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் தவறுக்கு வழிநடத்தும் ஏமாற்று வழிகளையும் நம்பி, அவர்களுடைய போதனைகள் என்னும் காற்றால் அடித்துச் செல்லப்பட்டு அங்குமிங்கும் அலைக்கழிக்கப்படக் கூடாது.

மாறாக, அன்பின் அடிப்படையில் உண்மை பேசி, தலையாகிய கிறிஸ்துவைப் போன்று எல்லாவற்றிலும் நாம் வளர வேண்டும். அவரால்தான் முழு உடலும் இசைவாய்ப் பொருந்தித் தன்னிடமுள்ள தசைநார்களால் இறுக்கிப் பிணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் உறுப்பும் தனக்கே குறிக்கப்பட்ட பணியைச் செய்வதால் உடல் வளர்ச்சி பெற்று, அன்பால் கட்டமைப்புப் பெற்று வளர்ச்சியடைகிறது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா 122: 1-2. 3-4a. 4b-5 (பல்லவி: 1a)
=================================================================================

பல்லவி: அகமகிழ்வுடன் ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.

1 "ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்", என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். 2 எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். பல்லவி

3 எருசலேம் செம்மையாக ஒன்றிணைத்துக் கட்டப்பட்ட நகர் ஆகும். 4ய ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர். பல்லவி

4b இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றிசெலுத்தச் செல்வார்கள். 5 அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 எசே 33: 11

அல்லேலூயா, அல்லேலூயா! தீயோர் சாகவேண்டும் என்பது என் விருப்பம் அன்று; ஆனால் அத்தீயோர் தம் வழிகளினின்று திரும்பி வாழவேண்டும், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மனம் மாறாவிட்டால், நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-9

அக்காலத்தில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக்கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர்.

அவர் அவர்களிடம் மறுமொழியாக, "இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன்.

மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்.

சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும் விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன்.

மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்" என்றார்.

மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: "ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை.

எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், "பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்திமரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?' என்றார்.

தொழிலாளர் மறுமொழியாக, "ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டு வையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எரு போடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்' என்று அவரிடம் கூறினார்."


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
பிறர் குற்றவாளி எனத் தீர்ப்பிடாது வாழ்வோம்

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவர், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் வாடகைக் காரில்தான் வெளியூருக்கு அடிக்கடி பயணம் செய்வார்.

அன்று அவர் வெளியூருக்குப் பயணம் செய்துவிட்டு தன்னுடைய வீட்டிற்குத் திரும்பியபோது தன்னுடைய அலைப்பேசி காணாமல் போனதை உணர்ந்தார். அவருக்குச் சந்தேகமெல்லாம் அந்த வாகன ஒட்டியின்மீதுதான். அவர்தான் தன்னுடைய அலைபேசியை எடுத்திருக்கவேண்டும் என்று உறுதிபட நம்பினார். எனவே அவர் அந்த வாடகை வாகன உரிமையாளருக்குத் தொலைப்பேசி செய்து பொரிந்து தள்ளினார்.

"வாகன ஒட்டித்தான் என்னுடைய அலைப்பேசியை எடுத்திருக்க வேண்டும். ஏனென்றால் அவருடைய முழியே சரியில்லை" என்று கத்தித் தீர்த்தார். அதற்கு அந்த வாடகை வாகனத்தின் உரிமையாளரோ, "ஒருவேளை நீங்கள் சொல்வது உண்மையாகும் பட்சத்தில் அந்த வாகன ஓட்டியை உடனடியாக வேலையிலிருந்து தூக்கிவிடுகிறேன். எனக்கு உண்மையான பணியாளர்கள்தான் வேண்டும்" என்று சொல்லிவிட்டு செய்வதறியாமல் திகைத்தார்.

அந்த அலுவலர் வாகன உரிமையாளரிடம பேசிவிட்டு, தன்னுடைய படுக்கையறைக்கு வந்து பார்த்தபோது, அங்கே அவருடைய அலைப்பேசி பத்திரமாகக் கிடந்தது. அலைப்பேசியை வீட்டிலே வைத்துவிட்டு வானக ஓட்டித்தான் அலைபேசியை எடுத்தார் என்று பொரிந்து தள்ளியது எவ்வளவு பெரிய மடத்தனம் என்பதை உணர்ந்தார். இருந்தாலும் இந்த உண்மையை வாகன உரிமையாருக்குத் தெரிவிக்காமல் அப்படியே அமைதி காத்தார்.

அடுத்த நாள் வெளியூர் செல்வதற்காக வழக்கமாக வரும் அந்த வாகன ஓட்டித்தான் வாகனத்தை எடுத்துக்கொண்டு வந்தார். இப்போது அவர் அந்த வாகன ஓட்டியின் முகத்தைப் பார்த்தபோது அவனுடைய முகம் பால் வடியும் முகம் போன்று இருந்தது. அப்போது அவர் அந்த வாகன ஓட்டியிடம், "காணமல் போனதாகச் சொல்லிய அலைப்பேசி என்னிடம்தான் இருந்திருக்கிறது. நான்தான் தேவை இல்லாமல் உன்னைச் சந்தேகப் பட்டுவிட்டேன்" என்று சொல்லி தன்னுடைய தவற்றிக்காக அவரிடம் மன்னிப்புக் கேட்டார்.

பெரும்பாலான நேரங்கில் தவறை நம்மிடம் வைத்துக்கொண்டு பிறர் குற்றவாளி, பொல்லாதவன் என்று தீர்ப்பிடுவது எவ்வளவு பெரிய அநீதி என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசுவிடம் ஒருசிலர் வந்து, "பலி செலுத்திக்கொண்டிருந்த கலிலேயரை பிலாத்து கொன்றான்" என்று செய்தியை அறிவித்தனர். அதற்கு இயேசு அவர்களிடம், "இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரைவிடயும் விட பாவிகள் என்று நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்" என்கிறார்.

இயேசு கிறிஸ்து இவ்வாறு சொல்வதன் வழியாக, நான் நல்லவன், அடுத்தவர்கள்கள் பாவிகள் என்று தீர்ப்பிடும் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் நாம் ஒவ்வொருவரும் மனமாறி இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழவேண்டும் என்பதை நமக்கு எடுத்துரைக்கிறார்.

நம்முடைய சமூக மற்றும் அன்றாட வாழ்வில் எத்தனையோ மனிதர்களைத் தீர்ப்பிடுகின்றோம். "அவர் அப்படி, இவர் பாவி" என்று பலவாறாகத் தீர்ப்பிடுகின்றோம். ஆனால் நாம் சரியானவர்களா? என்று நாம் ஒருபோதும் சிந்தித்துப் பார்ப்பது இல்லை. அதனால்தான் இயேசு கூறுகிறார், "உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்? அல்லது அவரிடம், "உங்கள் கண்ணிலிருந்து துரும்பை எடுக்கட்டுமா? என்று எப்படிக் கேட்கலாம்? இதோ உங்கள் கண்ணில்தான் மரக்கட்டை இருக்கிறதே. வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள்" என்று (மத் 7: 3-5).

ஆகவே நாம் பிறரைக் குற்றவாளி என்று தீர்ப்பிடும் போக்கை நம்முடைய வாழ்விலிருந்து அகற்றுவோம். இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம்.

நற்செய்தியில் இயேசு கிறிஸ்து உணர்த்தும் இன்னொரு செய்தி "மனம்மாறாவிட்டால் அழிவு உறுதி என்று சொன்ன இயேசு, நாம் மனம்மாறவேண்டும் என்பதற்காக கடவுள் பொறுமையோடு காத்திருக்கிறார் என்பதையும் நமக்குச் சுட்டிக்காட்டுகிறார். இறைவனின் விருப்பமெல்லாம் நாம் மனம்திரும்பி கனிதரும் வாழ்க்கை வாழவேண்டும் என்பதுதான்.

பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகம் 3:9 ல் வாசிக்கின்றோம், "யாரும் அழிந்துபோகாமல், எல்லாரும் மனம்மாறவேண்டும் என்றே கடவுள் விரும்புகிறார்" என்று.

ஆகவே, நாம் பிறரைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பிடும் போக்கிலிருந்து விலகுவோம், நல்வழியில் நடப்போம். அதன்வழியாக மன்னிப்பதில் தாராள மனம்கொண்ட இறைவனின் அருளை நிறைவாய் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குவோம்!


ஒரு காலத்தில் நம்முடைய இந்திய நாட்டில், ஏகநாதர் என்றொரு ஞானி இருந்தார். அவர் எப்போதும் மகிழ்ச்சியாகவும் திடகாத்திரமாகவும் இருப்பார். அவர் இவ்வாறு இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட இளைஞன் ஒருவன் அவரை அணுகி வந்து, "ஐயா! நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவும் திடகாத்திரமாகவும் இருக்கிறீர்களே, இதனுடைய இரகசியம் என்ன?" என்று கேட்டான். அதற்கு அந்த ஞானி, "தம்பி! அதற்கென்று ஒரு இரகசியத்தைக் கடைப்பிடிக்கின்றேன். அந்த இரகசியத்தை உன்னிடத்தில் சொன்னால், அதனைத் தாங்கிக்கொள்வதற்கான மனவலிமை உன்னிடத்தில் இருக்காது" என்றார்.

"அதெல்லாம் தாங்கிக்கொள்வேன். நீங்கள் அந்த இரகசியத்தை மட்டும் என்னிடத்தில் சொல்லுங்கள்" என்று ஞானியை அவசரப்படுத்தினான் இளைஞன். "சரி, நீ கேட்டுக்கொண்டதால் சொல்கிறேன்.... இன்றிலிருந்து ஏழாவது நாள் நீ இறந்துபோவாய்" என்றார் அவர். இதைக் கேட்டதும் அவனுக்கு தூக்கிவாரிப் போட்டது. "என்னடா இவர், மகிழ்ச்சியாகவும் திடகாத்திரமாகவும் வாழ்வதற்கான இரகசியத்தைக் கேட்டால், ஏழாம் இறந்துபோய்விடுவேன் என்று சொல்கிறாரே என்று மனதிற்குள் நினைத்தவனாய் அவரைவிட்டு அகன்று சென்றான்.

இதற்குப் பின்பு அவன் ஆறு நாட்கள் கழித்து ஏழாம் நாள், அதாவது அவன் இறக்கப்போவதாகச் சொன்ன நாளில், ஞானியை வந்து சந்தித்தான். அப்போது ஞானி அந்த இளைஞனைப் பார்த்து, "தம்பி! ஆறுநாட்களும் எப்படிப் போயிற்று?" என்று கேட்டார். இளைஞனோ, "சுவாமி! இந்த ஆறு நாட்களிலும் ஒருநொடியைக் கூட விரயம் செய்யாமல் வாழ்ந்தேன். எல்லாரையும் அன்பு செய்தேன்; என்னால் முடிந்த மட்டும் பிறருக்கு உதவி செய்தேன்; யாரிடத்திலும் எரிச்சலோ கோபமோ கொள்ளவில்லை. இவை எல்லாவற்றிற்கும் மேல், இந்நாள்வரைக்கும் யாராரிடத்தில் எல்லாம் சண்டை போட்டு என்னுடைய உறவை முறித்திருந்தேனோ, அவர்களோடெல்லாம் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டேன்" என்றான்.

இளைஞன் சொன்ன எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த ஞானி, "இப்போது சொன்னாய் அல்லவா, இதன்படி வாழ்ந்தாய் என்றால் நீ நூறு ஆண்டுகளுக்கு மேல் மகிழ்ச்சியாகவும் திடகாத்திரமாகவும் இருப்பாய்" என்றார். இளைஞன் ஒன்றும் புரியாமல் முழித்தான். "சுவாமி! ஏழு நாட்களில் இறந்துபோய்விடுவேன் என்று சொன்னீர்கள். இப்போது நூறு ஆண்டுகள் மகிழ்ச்சியாகவும் திடகாத்திரமாகவும் வாழ்வேன் என்று சொல்கிறீர்களே, ஒன்றும் புரியவில்லையே" என்றான். "நீ மகிழ்ச்சியாகவும் திடகாத்திரமாகவும் வாழ்வதற்கான இரகசியத்தை அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே அப்படிச் சொன்னேன். நீ இறக்கமாட்டாய். கடந்த ஆறு நாட்களில் நீ எப்படி அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்தாயோ, அதுபோன்று வாழ். அப்போது நீ பல ஆண்டுகள் மகிழ்ச்சியாகவும் திடகாத்திரமாகவும் வாழ்வாய்" என்றார்.

"அர்த்தமுள்ள/ பயனுள்ள வாழ்க்கை வாழ்வதுதான் மகிழ்ச்சியாகவும் திடகாத்திரமான வாழ்க்கை வாழ்வதற்கான இரகசியம் என்பதை உணர்ந்தவாய் இளைஞன் தன் இல்லம் திரும்பினான்.

கடவுள் கொடுத்த இந்த வாழ்வை, நாம் ஒவ்வொருவரும் அர்த்தமுள்ளதாக மாற்றவேண்டும். அப்படி மாற்றுகின்றபோது அது நமக்கு மகிழ்ச்சியையும் திடத்தையும் தரும் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, அத்திமர உவமையைச் சொல்கிறார். ஒருவர் தன்னுடைய தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டுவைத்து, அதை நல்லமுறையில் பராமரித்து, குறிப்பிட்ட காலத்தில் கனியைத் தேடுகின்றார். ஆனால் அதில் கனி இல்லாததைக் கண்டு, தன்னுடைய தோட்டத் தொழிலாளரைக் கூப்பிட்டு, "பாரும் இந்த மரத்தில் மூன்று ஆண்டுகளாகக் கனிகளைத் தேடுகிறேன். ஆனால் இது எந்தவொரு கனியையும் கொடுப்பதாகத் தெரியவில்லை. அதனால் இதனை வெட்டி எறிந்துவிடுங்கள்" என்கிறார். தோட்டத் தொழிலாளரோ, "இந்த ஆண்டு இதை விட்டுவிப்போம், இதற்கு நன்றாகக் கொத்தி எருபோடுவோம். அடுத்த ஆண்டும் இது பலன் கொடுக்கவில்லை என்றால், பேசாமல் வெட்டி எறிந்துவிடுவோம்" என்கின்றார்.

ஆண்டவர் இயேசு சொல்லக்கூடிய இந்த அத்திமர உவமையானது, நாம் ஒவ்வொருவரும் கனிகொடுக்கும் வாழ்க்கை/ அர்த்தமுள்ள வாழ்க்கை வாழவேண்டும் என்ற உண்மையை நமக்குத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றது. கனி கொடுப்பதில் காலதாமதம் ஆனால்கூட எப்படியாவது கனிகொடுக்கவேண்டும். இல்லையென்றால் நாம் காய்க்காத அத்திமரத்தைப் போன்று வெட்டி எறியப்படுவோம். ஒரு மரம் வளர எப்படி எல்லாவிதமான வாய்ப்பு வசதிகள் ஏற்படுத்தித் தரப்படுகின்றனவோ, அது போன்று, நாம் நல்லவிதமாய் வளர இறைவன் நமக்கு நல்லவிதமான சூழலை, அருமையான பெற்றோரை, இன்னும் பலவற்றை ஏற்படுத்தித் தருகின்றார். அப்படியிருந்தும் நாம் கனிகொடுக்கவில்லை என்றால், அதை என்னவென்று சொல்வது?

ஆகவே, கடவுள் இந்த வாழ்க்கையை ஏனோதானோ என்று வாழாமல், அர்த்தமுள்ளவிதமாய் வாழ்வோம். மிகுந்த கணிதருவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  சனிக்கிழமை, 29ம் வாரம், பொதுக்காலம்
                                                         (அக்டோபர் 27, 2018)
=================================================================================
முதிர்ச்சி நோக்கி பயணிக்க

எபேசியர் 4:7-16
லூக்கா 13:1-9

தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் கத்தோலிக்கருக்கும், கத்தோலிக்கரல்லாத கிறிஸ்தவருக்கும் இடையேயான சண்டைக்கும் சச்சரவுக்கும் தீனி போடக்கூடிய ஒரு பகுதி இன்றைய முதல் வாசகம்! ஒருவரை ஒருவர் பார்த்து தந்திரமென்றும், சூழ்ச்சியென்றும், தவறுக்கு வழிநடத்தும் ஏமாற்று போதனை என்றும் தூற்றி கொண்டிருக்கும் சிறுபிள்ளைத்தனம் தொடர்ந்து வந்து கொண்டுதானே இருக்கிறது? ஆனால் இன்று நம்மை முதிர்ச்சியை நோக்கி பயணிக்க அழைக்கிறார் பவுலடிகளார். கிறிஸ்துவுக்கு உரிய நிறைவை நோக்கி வளர நம்மை அழைக்கிறார். கிறிஸ்துவுக்குரிய நிறைவு என்பது, உண்மையும் அன்புமே என்று நமக்கு அறிவுறுத்துகிறது இன்றைய வார்த்தை.

உண்மை என்பது இருப்பது... அதை யாராலும் கற்பனையிலும் தன் திறமையிலும் வளர்த்திட முடியாது, இருப்பதை மூடி மறைக்கவும் முடியாது. தாமாக உருவாக்கினால், எனது மனசாட்சியே எனக்கு அதை உணர்த்திவிடும்; உள்ளதை எவ்வளவு தான் மறைத்தாலும் அது இல்லாமல் போய்விடாது! நாம் உண்மையை உணர்ந்து ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களாய் வளர்வதே நலம்.

அன்பு என்பது கடவுளின் உருவம்... அந்த உருவிலே தான் நாம் படைக்கப்பட்டிருக்கிறோம், அந்த அன்பே நம்மை கடவுளின் பிள்ளைகளாக்குகிறது. அன்பே அடிப்படை உண்மை, எல்லா உண்மைக்கும் ஊற்று அதுவே. அன்பிலே வளர்வோம், அன்பிலே முதிர்ச்சி அடைவோம். இறைவன் மீதான அன்பிலே, நம் சகோதர சகோதரிகள் மீதான அன்பினிலே வளர உண்மையான முயற்சியெடுப்போம்.

இன்னும் எத்தனை நாட்கள் தான் ஒருவரை ஒருவர் இழிவுபடுத்தி பேசிக்கொண்டு, இறைவனின் ஒரே உடலை துண்டு துண்டாக கூறுபோடப் போகிறோம்? இன்னும் எவ்வளவு காலம் தான் அடுத்தவரின் அழிவில் இன்பம் காண போகிறோம்? இன்னும் ஒருவரை ஒருவர் தீர்ப்பிட்டு, அடுத்தவர் வீழ்ந்தால் மகிழ்ச்சிகொண்டு, அடுத்தவரை பகைவராகவே கருதிக்கொண்டு வாழ்வது சரியாகுமா? கிறிஸ்துவுக்கு உரியதாகுமா?

வளருவோம்! முதிர்ச்சியை நோக்கி, கிறிஸ்துவின் நிறைவை நோக்கி, உண்மையை, அன்பை நோக்கி வளர்வோம், கனி தருவோம், இறைவனுக்குரியவர்களாவோம்!

(Rev. Father: Antony Christy SDB)


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!