Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   26  அக்டோபர் 2018  
                                                           பொதுக்காலம் 29ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவரும் ஒருவரே; திருமுழுக்கும் ஒன்றே.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-6

சகோதரர் சகோதரிகளே, ஆண்டவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்; நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள்.

முழுமனத் தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஒரே எதிர்நோக்குக் கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

ஒரே எதிர்நோக்கு இருப்பது போல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே; நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே; அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா 24: 1-2. 3-4ab. 5-6 (பல்லவி: 6)
=================================================================================
பல்லவி: கடவுள் முகத்தைத் தேடுவோரின் தலைமுறையினர் இவர்களே.

1 மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். 2 ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலைநாட்டினவரும் அவரே. பல்லவி

3 ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்? 4ab கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர். பல்லவி

5 இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். 6 அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே: யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 மத் 11: 25

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்கும் நீங்கள், இக்காலத்தை ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி?

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 54-59

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கிக் கூறியது: "மேற்கிலிருந்து மேகம் எழும்புவதை நீங்கள் பார்த்ததும் மழை வரும் என்கிறீர்கள்; அது அப்படியே நடக்கிறது. தெற்கிலிருந்து காற்று அடிக்கும்பொழுது மிகுந்த வெப்பம் உண்டாகும் என்கிறீர்கள்; அதுவும் நடக்கிறது.

வெளிவேடக்காரரே, நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்க அறிந்திருக்கும்போது, இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி? நேர்மையானது எதுவென நீங்கள் தீர்மானிக்காமல் இருப்பதேன்?

நீங்கள் உங்கள் எதிரியோடு ஆட்சியாளரிடம் போகும்போது, வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இல்லையேல் அவர் உங்களை நடுவரிடம் இழுத்துக்கொண்டு போக, நடுவர் உங்களை நீதிமன்ற அலுவலரிடம் ஒப்புவிப்பார்; நீதிமன்ற அலுவலர் உங்களைச் சிறையிலடைப்பார். கடைசிக் காசு வரை நீங்கள் திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
இறைவனின் குரலுக்கு நாம் செவிகொடுப்பது எப்போது?

கிறிஸ்தவர் ஒருவர் இருந்தார். அவர் பெயரளவுக்குதான் கிறிஸ்தவராக இருந்தாரே ஒழிய ஆலயத்திற்குச் செல்வதோ, திருவருட்சாதனங்களில் கலந்துகொள்வதோ கிடையாது.

அப்படிப்பட்டவர் படுத்த படுக்கையானார். எனவே அவருடைய குடும்பத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் பங்குத்தந்தையிடம் சென்று, விசயத்தைச் சொல்லி, அவருக்கு ஒப்புரவு அருட்சாதனம் வழங்கவும் நோயில் பூசுதல் கொடுக்கவும் கேட்டுக்கொண்டார்கள். அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, பங்குத்தந்தை அந்த மனிதருக்கு அருட்சாதனங்களை வழங்க வந்தார். ஆனால் அந்த மனிதரோ பங்குத்தந்தையை அருகில் கூட வரவிடவில்லை. அவரைத் தூசனமான வார்த்தைகளால் திட்டி, அவரை அங்கிருந்து போய்விடுமாறு கேட்டுக்கொண்டார். பங்குத்தந்தையும் அந்த மனிதரை விட்டு கொஞ்சம் தள்ளி வந்தார்.

அப்படி அவர் வரும்போது, "என்னுடைய வாழ்வில் எத்தனையோ முறை மனிதர்கள் விண்ணகத்திற்குச் செல்வதை என் கண்களால் பாத்திருக்கிறேன். முதன்முறையாக இப்போதுதான் ஒருவர் நரகம் செல்வதைப் பார்க்கப் போகிறேன்" என்றார். பங்குத்தந்தையின் இவ்வார்த்தைகள் படுக்கையில் கிடந்த அந்த மனிதரை ஏதோ செய்தது. அவர் தன்னுடைய கடந்த கால வாழ்வைக் குறித்து தீவிரமாக யோசிக்கத் தொடங்கினார். அவ்வாழ்க்கை அவருக்கே பிடிக்காமல் இருந்தது.

உடனே அவர் தன்னுடைய ஈனக்குரலில், "சுவாமி, நான் என்னுடைய பாவங்களை உணர்ந்துவிட்டன. இப்போது நான் நல்லதொரு பாவ சங்கீர்த்தனம் செய்து, நற்கருணையை உட்கொள்ள விரும்புகிறேன்" கத்தினார். மறுகணம் பங்குத்தந்தை அந்த மனிதருடைய தலைமாட்டில் வந்து நின்று, அவருக்கு ஒப்புரவு அருட்சாதனமும் நோயில் பூசுதலும் வழங்கினார். இதற்குப் பின்பு அந்த மனிதர் நிம்மதியாய் தன்னுடைய ஆவியை ஆண்டவரிடத்தில் ஒப்படைத்தார். அவர் இறக்கும்போது அவருடைய முகமானது "வானதூதரின் முகம் போன்று இருக்கின்றது" என்று மக்கள் பேசத் தொடங்கினார்கள்.

எப்படி கடைசி நிமிடத்தில் தன்னுடைய தவறுகளை உணர்ந்து, மனமாறிய நல்ல கள்வனைப் போன்று, இந்த மனிதர் தான் சாவதற்கு முன்பாக தன்னுடைய தவறுகளை உணர்ந்து, இறைவனுக்கு உகந்த அன்பு மகனாக மாறினாரோ அதுபோன்று நாம் ஒவ்வொருவரும் இறைவனின் ஒப்புயர்வற்ற அன்பை, அவருடைய பிரசன்னத்தை உணர்ந்து அவருக்கு உகந்த மக்களாக மாறவேண்டும் என்று இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு அழைப்புத் தருகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்து, "நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆராய்ந்து பார்க்க அறிந்திருக்கும்போது இக்காலத்தை ஆராய்ந்து பார்க்காமல் இருப்பது எப்படி?" என்று கேள்வி கேட்டு அவர்களைக் கடுமையாகச் சாடுகின்றார். மனிதர்களை இயேசு சொல்வதைப் போன்று வெளிவேடக்காரர்கள், சந்தர்ப்ப வாதிகள் என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், இயற்கையில் தோன்றுகின்ற ஒருசில அறிகுறிகளை வைத்துக்கொண்டு இவை இவை இப்போது நடக்கக்கூடியது என்று உறுதியாகச் சொல்லிவிடுகின்றோம். இப்படி உலகப் போக்கிலான காரியங்களை மிகத் துல்லியமாக எடுதியம்புகின்ற நாம், ஆன்மீகக் காரியங்களைப் பொறுத்தளவில் மட்டும் கண்டும் காணாமல் இருந்துவிடுகின்றோம். அதனால்தான் இயேசு யூதர்களைப் பார்த்து, நீங்கள் இயற்கையில் தோன்றுகின்ற அறிகுறிகளைப் பார்த்துவிட்டு இவை இவை இப்போது நடக்கப்போகிறது என்று சொல்கின்றீர்களே, மெசியா இப்போது வருவார், அவர் வருவதற்கான சூழல்கள் இவை இவைதான் என்று தெரிந்தபின்புகூட, ஏன் பாராமுகமாக இருக்கிறீர்கள் என்று அவர்களைக் கடிந்துகொள்கின்றார்.

மெசியாவின் வருகையைப் பற்றி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக செல்லப்பட்டுவிட்டது, அவருடைய வருகையின்போது நிகழும் அறிகுறிகளும் முன்கூட்டியே சொல்லப்பட்டுவிட்டது. அப்படியிருந்தபோதும் அவர்கள் மெசியாவாகிய இயேசு வந்தபோது, அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை (யோவா 1:11), மாறாக அவரை முற்றிலுமாகப் புறக்கணித்தார்கள். இயேசுவின் வார்த்தையை அவர்கள் புறக்கணித்ததால், கிபி. 70 ஆம் ஆண்டு, எருசலமே தரைமட்டமானது என்பது வரலாறு. ஆகவே, நாம் ஒவ்வொருவரும் இறைவனை நம்முடைய அகக் கண்களால் கண்டுணர்ந்து, அவருடைய வார்த்தைகளைக் கேட்டு, அதன்படி வாழ்வது மனமாறி வாழ்வதுதான் அவருக்கு ஏற்ற வாழ்வாகும்.

இன்றைக்குப் பலர் கடவுளைக் கண்டுணராமல், அவருடைய வார்த்தைக்குச் செவிமடுக்காமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் இஸ்ரயேல் மக்களுக்கு நேர்ந்த கதியை தங்களுடைய கண்முன்னால் இருத்தி சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

"காலத்தின் குரலினில் தேவா உன் காலடி ஓசை கேட்கிறது" என்கிறது திருவழிப் பாடல் ஒன்று. ஆகவே, நாம் காலத்தில் இறைவனின் பிரசன்னத்தைம் உணர்ந்து, அவருடைய வார்த்தைகளைக் கேட்டு, அதன்படி வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 நல்லுறவோடு வாழ்வோம்

அந்நகரில் வியாபாரி ஒருவர் இருந்தார். அவர் என்ன வியாபாரம் தொடங்கினாலும் அதில் தோல்விக்கு மேல் தோல்விகள் ஏற்பட்டன. இதனால் அவர் தற்கொலை செய்துகொண்டு தன்னுடைய உயிரையே மாயத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தார்.

இந்தவேளையில் அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் அவரின் இந்நிலையைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம், "நீ நம்மூரில் இருக்கும் அந்த துறவியைப் பார்த்துவிட்டு வா, நிச்சயம் உன்னுடைய வாழ்வில் ஒளிபிறக்கும் என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார். நண்பரின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் அந்த துறவியைப் போய் பார்த்தார்.

துறவியைச் சந்தித்த அந்த வியாபாரி தன்னுடைய வாழ்வில் நடந்த எல்லாவற்றையும் அவரிடம் கொட்டித் தீர்த்தார். பொறுமையாக அமர்ந்து எல்லாவற்றையும் கேட்ட துறவி அவரிடத்தில், "நீ காலத்திற்கு ஏற்ப, இடத்திற்கு ஏற்ப உன்னுடைய தொழிலை மாற்றியிருக்க வேண்டும். ஆனால் நீ அப்படிச் செய்யவில்லை. இனிமேலாவது மக்களுக்கு எல்லா நாளும் பயன்படுகின்ற, அந்த நாளில் வாங்கிவை அந்த நாளிலே தீர்ந்துபோகிற மாதிரியான பொருளை வாங்கி விற்பனை செய். நான் நெடும்பயணம் சென்றுவிட்டு, ஒருவருட காலம் கழித்து இங்கு திரும்பி வருவேன். அப்போது நான் உன்னைச் சந்திக்கிறேன்" என்று சொல்லிவிட்டு சென்றார்.

அந்த நாளில் வாங்கிவை அந்த நாளிலே தீர்ந்துபோகிற மாதிரியான பொருள் என்ன என்று வியாபாரி ஒருநிமிடம் யோசித்துப் பார்த்தார். பின்னர் அறிவொளி பெற்றவராய் காய்கறிதான் அந்த நாளில் வாங்கி, அந்த நாளிலே தீர்ந்து போகக்கூடியவை என முடிவுக்கு வந்து காய்கறி வியாபாரம் செய்யத் தொடங்கினார்.

அவர் காய்கறி வியாபாரம் செய்யத் துவங்கிய ஒரே வாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உணர்ந்தார். ஆம், காய்கறி வியாபாரம் அவருக்கு நல்ல பலனைத் தந்து. ஒரு வருடத்தில் அவர் இழந்த பணத்தை எல்லாம் திரும்பப் பெற்றார். இப்போது அவர் தன்னுடைய குடும்பத்தோடு மிகவும் சந்தோசமாக இருந்தார்.

நாட்கள் சென்றன. ஒருநாள் இவர் வியாபாரம் செய்துவந்த கடைக்கு எதிரில் புதிய ஆள் ஒருவர் பிரமாண்டமாக ஒரு மளிகைக் கடையை கட்டத் தொடங்கினார். இச்செய்தி அவருடைய உள்ளத்தில் இடியாய் இறங்கியது. எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது என்ற சந்தோசத்தில் இருந்த வியாபாரி இச்செய்தியைக் கேட்டதும் செய்வதறியாமல் திகைத்து நின்றார். ஒருவேளை அந்த புதிய ஆள் பிரமாண்டமாக கடையைக் கட்டி, வியாபாரம் செய்யத் தொடங்கினால், நம்முடைய கடைக்கு யாரும் வரமாட்டார்களே என்று பயந்து நடுங்கினான்.

அப்போது அவருக்கு, தன்னுடைய வாழ்வில் ஒளியேற்றி வைத்த அந்த துறவியின் ஞாபம் வரவே அவரிடத்தில் சென்று, என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டார். அதற்கு அந்த துறவி, "இதைப் பற்றி நீ ஒன்றும் கவலைப்படாதே, நீ செய்யவேண்டியதெல்லாம் உன்னுடைய வியாபாரம் இருக்கவேண்டும் என்று ஜெபிக்கிறாயே, அதுபோன்று அந்த மனிதருடைய வியாபாரமும் நன்றாக இருக்கவேண்டும் என்று ஜெபி. அதோடு மட்டுமல்லாமல், எப்போதெல்லாம் நீ அவரைச் சந்திக்கிறாயோ அப்போதெல்லாம் அவரைப் பார்த்து புன்னகை செய். அதுபோதும் என்றார்.

அந்த புதிய ஆளுக்காக - தனக்கு போட்டியாக வந்தவருக்காக - ஜெபிப்பதா? என்று தொடக்கத்தில் யோசித்த அந்த காய்கறி வியாபாரி பின்னர் தன்னுடைய மனதை மாற்றிக்கொண்டு அவருக்காக ஜெபித்தார். அவரை எப்போதெல்லாம் சந்தித்தாரோ அப்போதெல்லாம் அவரைப் பார்த்து புன்சிரிப்பு செய்தார். இப்படி பல நாட்கள் நடந்தன.

ஒருநாள் அந்த புதிய மனிதர் காய்கறி வியாபாரியின் கடைக்குச் சென்று, "நீ என்னுடைய மளிகைக் கடைக்கு காய்கறிகளைக் கொள்முதல் (வாங்கித் தருவாயா?) செய்வாயா?" என்று கேட்டார். இதனைச் சற்றும் எதிர்பாராத அந்த காய்கறி வியாபாரி அவர் சொன்னதற்கு சரி என்று ஒத்துக்கொண்டார். அதன்பின்னர் இரண்டு கடைகாரர்களும் நல்ல நண்பர்களாய் இருந்தார்கள். காய்கறி வியாபாரியின் வியாபாரமோ இன்னும் அமோகமாக விளங்கியது. அந்த நகரிலே அவருடைய காய்கறிக் கடைதான் பெரிய கடையாக விளங்கியது.

அடுத்தவரைப் எதிரியாகப் பார்க்காமல், நல்லுறவோடு இருக்கும்போது எப்படி காய்கறி வியாபாரியின் வாணிபம் சிறப்பாக மாறியதோ அதுபோன்று நம்முடைய வாழ்வும் சிறக்கும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தியில் இயேசு, "நீங்கள் உங்கள் எதிரியோடு ஆட்சியாளரிடம் போகும்போது, வழியிலே உங்கள் வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சி எடுங்கள். இல்லையென்றால் அவர்கள் உங்களை நடுவரிடம் இழுத்துக்கொண்டுப்போவார்...." என்கிறார். இங்கே இயேசு சொல்லும் செய்தி நாம் நல்லுறவோடு இருக்கவேண்டும் என்பதுதான்.

ஆகயால் நம்மிடம் இருக்கும் பகைமையை, பிரிவினையை வேரறுத்து, நல்லுறவோடு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

"உறவோடு வாழும் உள்ளங்கள் நடுவில் தெய்வம் தரிசனம்".

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3 29ம் வாரம், வெள்ளி, பொதுக்காலம்
(அக்டோபர் 26, 2018)
=================================================================================
ஒரே மனம் ஒரே இனமென

எபேசியர் 4:1-6
லூக்கா 12:54-59

இன்றைய சூழலில் நாம் எங்கு பார்த்தாலும் போட்டியும் பொறாமையம், பழிவாங்கும் நோக்கும் குழி பறித்திடும் எண்ணமும்தான் அதிகமாய் காணப்படுகிறது. இத்தகைய உலகத்தில் இறைவனின் மக்கள் என்று தங்களையே அழைத்துக்கொள்வோரின் நிலைப்பாடும் வாழ்க்கை முறையும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது நாமறிந்ததே. இந்த உலகில் உள்ள பிரச்சனைகளோடு நாமும் ஒரு பிரச்சனையை சேர்த்து உருவாக்குபவர்களாகவோ, இருக்கும் பிரச்சனைகளுக்கும் நமக்கும் ஒரு தொடர்பும் இல்லாதது போல் செல்பவர்களாகவும் நாம் இருந்தோமெனில், 'வெளிவேடக்காரர்களே' என்று கிறிஸ்து சாடும் அந்த வார்த்தைகள் நமக்கும் சால பொருந்தும்.

சில நேரங்களில் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் சில உரையாடல்களை காணும்போது, ஒரு சிலரின் வாக்குவாதங்கள் நமக்கு ஒரு கூற்றை மிக தெளிவாக உணர்த்துகிறது - நாம் உறங்குபவர்களை எழுப்பிவிடலாம், உறங்குவதை போல் நடிப்பவர்களை எழுப்பவே முடியாது. தங்களை சுற்றி நடப்பதற்கு காரணமும் அதன் தீர்வும் என்னவென்று மிகத்தெளிவாக தெரிந்தும், தங்களுக்கு பிடித்தவர்கள், "தங்கள் ஆட்கள்" என்ற சில காரணங்களால் இதை உணராதவாறே பேசிக்கொண்டு இருப்பார்கள்.

இன்று நற்செய்தியில் கிறிஸ்து பரிசேயர்களை வெகுவாய் கடிந்துகொள்கிறார், காரணம் அவர்கள் சரியானது எது என்று அத்தனை தெளிவாய் அறிந்திருந்தும் அதை தேர்ந்துகொள்ளாமல் இருந்தததே. நாம் மேல்கூறிய அந்த முகநூல் நண்பர்களை போல! இன்று உலகிலும் நம் நாடுகளிலும் நமது சமுதாயத்திலும் உள்ள பிரச்சனைகளில் பெரும்பான்மை, ஒற்றுமையின்மை என்ற கோணத்திலே காணும்போது நமக்கு இன்னும் தெளிவாய் விளங்கும். தன்னலமிக்க சிந்தனைகள், அடுத்தவரை குறித்த முற்சாய்வு எண்ணங்கள், முன்னேற்றம் என்ற ஒரு நிலைக்காக எதையும் யாரையும் தியாகம் செய்யும் மனநிலை, அடுத்தவரை ஏமாற்றவும் பயன்படுத்தவும் அவர்களிடமிருந்து முடிந்தவரை சுரண்டிடவும் தயாராக இருக்கும் இழிநிலை... இவை எல்லாமே வெளிவேடக்காரர்களின் அடையாளம்தான். தமக்கென்று ஒரு சட்டம் அடுத்தவருக்கோ வேறு சட்டம் என்று வேடமிட்டு வாழ்பவர்கள் இவர்கள். இறையாட்சியில் இவர்கள் நுழைவதென்பது எத்தனை அரிது. இவர்களை தீர்ப்பிடுவதற்கு முன், ஒருவேளை நானும் இந்த வரிசையில் இருக்கிறேனா என்று என்னையே நான் கேட்டுக்கொள்ள வேண்டும்.

விழித்துகொள்வோம், அழைப்பை உணர்வோம், ஒருமனப்படுவோம், ஒரு மக்களாய், ஒரே உள்ளம், ஒரே மனம், ஒரே இனம், ஒரே மனிதம், என்று ஒரே இறைவனால் இணைக்கப்பட்டவர்களாவோம்; இந்த உலகிற்கு அன்பினால் பாடம் புகட்டுவோம், சாட்சியமாவோம். நம் ஆழ்மன சிந்தனைகளிலிருந்து இந்த மாற்றத்தை தொடங்குவோம்.

(Rev. Father: Antony Christy SDB)


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!