Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   24  அக்டோபர் 2018  
                                                           பொதுக்காலம் 29ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 கிறிஸ்துவைப் பற்றிய மறைபொருளை நான் புரிந்துகொண்டேன்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 2-12

சகோதரர் சகோதரிகளே, உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன். அந்த மறைபொருள் எனக்கு இறைவெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது. அதைப் பற்றி நான் ஏற்கெனவே சுருக்கமாக உங்களுக்கு எழுதியிருக்கிறேன். அதை நீங்கள் வாசிக்கும்போது, கிறிஸ்துவைப் பற்றிய மறைபொருளை நான் புரிந்துகொண்டேன் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். அந்த மறைபொருள் மற்ற தலைமுறைகளில் வாழ்ந்த மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

ஆனால், இப்போது தூய ஆவி வழியாகத் தூய திருத்தூதருக்கும் இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நற்செய்தியின் வழியாக பிற இனத்தாரும், கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும் ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள். கடவுள் வல்லமையோடு என்னுள் செயல்பட்டு எனக்கு அளித்த அவரது அருள்கொடைக்கு ஏற்ப, அந்த நற்செய்தியின் தொண்டன் ஆனேன்.

கிறிஸ்துவின் அளவற்ற செல்வத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தாருக்கு அறிவிக்கவும், எல்லாவற்றையும் படைத்த கடவுளுக்குள் ஊழிகாலமாக மறைந்திருந்த இந்த மறைபொருளின் திட்டம் இன்னதென யாவருக்கும் தெளிவுபடுத்தவும், இறைமக்கள் அனைவருள்ளும் மிகவும் கடையனாகிய எனக்கு இந்த அருள் வழங்கப்பட்டுள்ளது. அதன்மூலம் பல வகையில் விளங்கும் கடவுளின் ஞானத்தை ஆட்சிபுரிவோர், வான்வெளியில் அதிகாரம் செலுத்துவோர் ஆகியோருக்கு இப்போது திருச்சபை வழியாக வெளிப்படுத்த முடிகிறது. இவ்வாறு கடவுள் ஊழிகாலமாகக் கொண்டிருந்த திட்டத்தை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாய் நிறைவேற்றினார். கிறிஸ்துவின் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாகக் கடவுளை உறுதியான நம்பிக்கையோடு அணுகும் உரிமையும் துணிவும் நமக்குக் கிடைத்துள்ளது.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (எசா 12: 2-3. 4bcd. 5-6 (பல்லவி: 3)
=================================================================================
பல்லவி: மீட்பளிக்கும் ஊற்றிலிருந்து அகமகிழ்வோடு முகந்து கொள்வீர்.

2 இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே. 3 மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள். பல்லவி

4bஉன ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். பல்லவி

5 ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்து கொள்வதாக. 6 சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். பல்லவி


=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
(மத் 24: 42a,44)

அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 39-48

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: "எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்."

அப்பொழுது பேதுரு, "ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா?" என்று கேட்டார். அதற்கு ஆண்டவர் கூறியது: "தம் ஊழியருக்கு வேளாவேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப் பொறுப்பாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர். அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன்.

ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக் காலந்தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும் மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில் அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார்.

தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும், ஆயத்தமின்றியும் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடுவான். ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல், அடிவாங்க வேண்டிய முறையில் செயல்படுபவன் அவரது விருப்பத்தை அறியாமல், செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
பிரமாணிக்கமுள்ள பொறுப்பாளராவோம்!

ஓர் ஊரில் வைர வியாபாரி ஒருவர் இருந்தார். அவர் பல இடங்களிலிருந்தும் வைரக் கற்களை வாங்கி, அதனை நல்ல விலைக்கு விற்றுவந்தார்.

ஒருமுறை அவர் வியாபார விசயமாக வெளியே கிளம்பியபோது அவருக்குப் பயங்கரமாகக் காய்ச்சல் அடிக்கத் தொடங்கியது. எனவே அவர் தன்னுடைய மகனிடம் ஒரு பெரிய பணத்தைக் கொடுத்து, குறிப்பிட்ட இடத்தில் இருந்த நபரிடமிருந்து வைரக்கற்களை வாங்கிவரச் சொன்னார். இடையில் ஏதோ சிந்தனைவயப்பட்டவராய், தன்னுடைய மகனுக்குத் துணையாக தன்னிடம் வேலை பார்த்துவந்த ஒரு "நம்பமான" பணியாளரையும் அனுப்பி வைத்தார்.

வைர வியாபாரியின் மகனும் அவருடைய பணியாளரும் தங்களுடைய பயணத்தைத் தொடங்கினார்கள். அவர்கள் இருந்த இடத்திலிருந்து வைரக் கற்களை வாங்குவதற்கு இரண்டு நாட்கள் இரயிலில் பயணம் செய்யவேண்டி இருந்தது. இதற்கிடையில் வியாபாரியின் மகனோடு வந்த பணியாளருக்கு திடிரென ஒரு எண்ணம் தோன்றியது. முதலாளியின் மகனுடைய கையில் இருக்கும் பணத்தை தன் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் சம்பாதிக்க முடியாது. அதனால் அவன் அசதியில் தூங்குகின்றபோது, அவனிடமிருந்து பணத்தை எப்படியாது எடுத்துக்கொள்ளவேண்டும் என்று பணியாளர் திட்டம் போட்டார்.

இதற்குக்குப் பின்பு பணியாளரின் பேச்சும் அவனுடைய நடவடிக்கையும் வியாபாரின் மகனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, வியாபாரின் மகன் மிகவும் சூதானமாகவே நடக்கத் தொடங்கினான். முதல்நாள் இரவு வந்தது. பணத்தை எடுப்பதற்காக வேலையாள் சரியான நேரம் தேடிக்கொண்டிருந்தான். வியாபாரி மகன் வெளியே சென்ற சமயம் பார்த்து, வேகமாக அவனது பெட்டியைத் திறந்துபார்த்தான். திறந்து பார்த்த அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் அந்தப் பெட்டியில் பணம் இல்லை. இதனால் பொறுமையிழந்த அவன், அடுத்த இரவுக்குள் பணத்தை எப்படியாவது அவனிடமிருந்து எடுத்துவிட வேண்டும் என்று தீவிரமாக யோசிக்கத் தொடங்கினான்.

அடுத்த நாளும் வந்தது. அந்தப் பணியாளர் எதிர்பார்த்தது போன்றே, தக்க தருணம் அவனுக்குக் கிடைத்தது. ஆம், வியாபாரியின் மகன் சிறுநீர் கழிப்பதற்காக கழிவறைக்குச் சென்றபோர்த்து, பணியாள் மீண்டுமாக பெட்டியையும், அவன் கூடவே வைத்திருந்த பையையும் தேடிப்பார்த்தான். அப்போதும் அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு கட்டத்தில் பணியாளர் தன் ஆர்வத்தை அடக்கமுடியாமல், "தம்பி பணம் பத்திரமாக இருக்கின்றதா?" என்று கேட்டான். அதற்கு வியாபாரியின் மகன், "ஆமாம், பணம் பத்திரமாகத்தான் இருக்கின்றது" என்றான். தொடர்ந்து அந்தப் பணியாளர் வியாபாரியின் மகனிடம், "இவ்வளவு நேரமாக பணத்தை எங்கே வைத்திருந்தீர்கள்?" என்று கேட்டான். "அதுவா!.. நீ படுத்துத் தூங்கிய தலையணைக்கு அடியில்தான் வைத்திருந்தான்" என்றான் வியாபாரியின் மகன். இதைக் கேட்ட பணியாளருக்குத் தூக்கி வாரிப்போட்டது.

இதற்குப் பின்பு வியாபாரியின் மகன், தன்னுடைய தந்தை தனக்குச் சொன்ன அந்த குறிப்பிட்ட மனிதர் இருக்கும் இடத்தை அடைந்து, அவரிடம் உரிய பணத்தைக் கொடுத்து, வைரக் கற்களை வாங்கிக்கொண்டு மிகக் கவனமாக வீடு திரும்பினான். வீட்டுக்கு வந்ததும் நடந்தது அனைத்தும் அவன் தன்னுடைய தந்தையிடம் சொல்ல, அவர் அந்த விசுவாசமில்லாத பணியாளரை வேலையை விட்டே நீக்கினார்.

கதையில் வரும் விசுவாசமில்லாத பணியாளரைப் போன்று நாமும் நம்முடைய வாழ்விலும் ஏராளமான பொறுப்பற்ற, விசுவாசமில்லாத பணியாளர்களைப் பார்க்கலாம். இத்தகைய பின்னணியில் இன்றைய நற்செய்தி வாசகத்தை சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

நற்செய்தி வாசகத்தில் இயேசு கிறிஸ்து நம்பிக்கைக்குரிய பணியாளர் யார்? பிரமாணிக்க மில்லாத பணியாளர் யார்? என்பதற்கான தெளிவான விளக்கத்தைத் தருகின்றார். ஆண்டவருடைய இரண்டாம் வருகை தொடர்பாகப் பேசுகின்ற இயேசு, அவருடைய வருகையின்போது நம்பிக்கைக்குரிய பணியாளரைப் போன்று நமக்குக் கொடுப்பட்ட பணிகளை நல்லவிதமாய் செய்து, ஆயத்தமாய் இருந்தால், ஆசிர்வாதமும் அதைவிடுத்து ஆண்டவர் வரக் காலம் தாழ்த்துவார் என சொல்லிக்கொண்டு எப்படியும் வாழ்வோருக்குக் கிடைக்கின்ற தண்டனையையும் பற்றி பேசுகின்றார். இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டிருன்கின்றது. அந்தப் பொறுப்பினை உணர்ந்து அதற்கேற்ற வாழ்வதுதான் பேறுபெற்ற நிலையாகும். ஆனால், நாம் இந்தக் காலக்கட்டத்தில் மக்கள் கடவுளை மறந்து, மனம்போன போக்கில் பொறுப்பற்ற வாழ்வதைப் பார்க்கமுடிகின்றது. இவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் செயல்களுக்கே ஏற்ப வெகுமதியைப் பெறுவதை உறுதி.

ஆகவே, இறைவன் நமக்குக் கொடுத்திருக்கின்ற பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராக இருப்போம். இறைவன் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற விழிப்போடு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

👼🏿👼🏾⛪👼🏽👼🏼⛪👼🏻👼


தூய அந்தோனி மரிய கிளாரட் (அக்டோபர் 24)

நிகழ்வு

ஒரு முறை அந்தோனி மரிய கிளாரட் பக்கத்து பங்கிற்கு போதிப்பதற்காகச் சென்றுகொண்டிருந்தார். அது இரவு நேரம் வேறு. அப்போது முகமூடி அணிந்த கொள்ளையர்கள் மூவர் அவரை இடைமறித்து, "கையில் இருக்கும் பணத்தைக் கொடுத்துவிடு, இல்லையென்றால் உன்னுடைய உயிர் உன்னிடத்தில் இருக்காது" என்று மிரட்டினார்கள். அதற்கு அவர், "என்னிடத்தில் கொஞ்சம்கூட பணம் கிடையாது. நான் இப்போது போதிப்பதற்காக பக்கத்து பங்கிற்குப் போகிறேன். போதிக்கின்ற இடத்தில் ஏதாவது பணம் தருவார்கள். அதை வேண்டுமானால் உங்களிடத்தில் அப்படியே தந்துவிடுகிறேன்" என்றார். அப்போது கொள்ளையர்களில் ஒருவன், "நாங்கள் உன்னை அப்படியே விட்டுவிட நீ போய் காவல்துறையிடம் சொல்லிவிட்டால், பிறகு நாங்கள் கம்பி எண்ணவேண்டிய சூழ்நிலைதான் வரும். ஆதலால் நாங்கள் உன்னை விடமாட்டோம்" என்றான். அந்தோனி மரிய கிளாரடோ, "தயவு செய்து என்னை நம்புங்கள், நான் நிச்சயமாக காவல்துறையிடம் எல்லாம் செல்லமாட்டேன். என்னுடைய போதனை முடிந்தவுடன் சாப்பிடாமல் கூட உங்களிடத்தில் வந்துவிடுகிறேன்" என்றார். அவர் சொன்னதைக் கேட்டு, அவர்கள் அவரை போதிக்க வழிவிட்டார்கள்.

அந்தோனி மரிய கிளாரட் தன்னுடைய போதனையை முடித்தவுடன், பங்கிலிருந்தவர்கள் பரிசாகக் கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு, அந்த கொள்ளையர்களிடம் திரும்பி வந்தார். அவர்கள் மூவரும் அங்கேயே இருந்தார்கள். அந்தோனி மரிய கிளாரட் திரும்பி வருவதைப் பார்த்துவிட்டு அவர்கள் ஆச்சரியப்பட்டு நின்றார்கள். அவர்கள் அவரிடமிருந்த நேர்மையைக் கண்டு வியந்து, இப்படிப்பட்ட மனிதரிடமா நாம் கொள்ளையடிக்க நினைத்தோம் என்று தங்களுடைய தவற்றை உணர்ந்து அவரிடத்தில் மன்னிப்புக் கேட்டார்கள். அது மட்டுமல்லாமல் அவர்கள் அந்தோனி மரிய கிளாரட்டிடம் "இனிமேலும் இப்படித் திருட்டுத் தொழிலில் ஈடுபடமாட்டோம்" என்று சொல்லி திருந்தி நல்ல மனிதர்களாக வாழ்ந்து வந்தார்கள்.

வாழ்க்கை வரலாறு

அந்தோனி மரிய கிளாரட் 1807 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 23 ஆம் நாள் காடலோனியா என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை துணிகளை நெய்து விற்பனை செய்யும் ஒரு வியாபாரி. ஆதலால் இவரும் தந்தையின் தொழிலையே செய்துவந்தார். சிறுது காலத்திற்குப் பிறகு அந்தோனி மரிய கிளாரட்டின் தந்தை அவரை பார்சிலோனா என்ற இடத்திற்கு கல்வி கற்க அனுப்பிவைத்தார். அங்கே அவர் சிறந்த முறையில் கல்வி கற்று வந்தார். அவர் படித்துக்கொண்டிருக்கும் போதே குருவாக மாறி, நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எனவே அவர் சேசு சபையில் சேர்ந்து குருத்துவப் படிப்பு படித்து வந்தார். அப்போது அவருக்கு ஸ்பெயின் நாட்டிற்குச் சென்று நற்செய்தி அறிவிக்கவேண்டும் என எண்ணம் அடிக்கடி வந்தது. ஆனால் அவருடைய உடல் நலம் அதற்கு ஒத்துழைக்காததால் அவர் குருவாக மாறி சொந்த நாட்டிலே நற்செய்திப் பணி செய்துவந்தார்.

அந்தோனி மரிய கிளாரட் நற்கருணையின் மீதும், அன்னை மரியாவின் மீதும் ஆழமான பக்தி கொண்டு வாழ்ந்துவந்தார்; அன்னை மரியாவைப் பற்றி நிறைய எழுதினார். ஒரு பதிப்பகம் ஏற்படுத்தி, அதன்மூலமாக நிறைய புத்தகங்கள் எழுதி வெளியிட்டு நற்செய்தி அறிவித்து வந்தார். அந்தோனி மரிய கிளாரட் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் எழுதிய புத்தகங்கள் 150 க்கும் மேல் இருக்கும். 1849 ஆம் ஆண்டு கிளரிசியன் என்ற சபையை ஏற்படுத்தி, அச்சபையின் வழியாக நற்செய்தி அறிவிப்புப் பணியை இன்னும் துரிதப்படுத்தினார். இவர் ஆற்றிவந்த பணிகளைப் பார்த்து திருச்சபை அவரை கியூபா நாட்டின் தலைநகரான சந்தியாகு என்ற நகரின் ஆயராக திருநிலைப்படுத்தியது. அப்பொறுப்பை இவர் மிகவும் தாழ்மையோடு ஏற்றுக்கொண்டார்.

அந்தோனி மரிய கிளாரட் ஆயராக உயர்ந்த பிறகு இறைமக்களின் ஆன்மீக மற்றும் சமூக வாழ்வில் நிறைய மாற்றங்களைக் கொண்டுவந்தார். குறிப்பாக ஒழுங்கு படுத்தப்படாத 8000 க்கும் மேற்பட்ட திருமணங்களை முறைப்படுத்தினார். அது மட்டுமல்லாமல் ஆயராக பணியாற்றிய இடத்தில் மக்கள் அனைவரும் ஏழைகளாக இருந்தார்கள். எனவே, இவர் கல்விக்கூடங்களை நிறுவி அவர்களுக்கு கல்வியறிவு புகட்டினார்; வியசாயிகள் வாழ்வுபெற புதிய புதிய விவசாய உக்திகளைப் பயன்படுத்தி அவர்களுடைய வாழ்விலும் ஒளியேற்றி வைத்தார். இப்படிப்பட்ட தருணத்தில் ஸ்பெயின் நாட்டில் இருந்த இரண்டாம் இசபெல்லா தன்னுடைய அரண்மனையில் ஆன்மீக ஆலோசக இருக்கவேண்டும் என்று கிளாரட்டைக் கேட்டுக்கொண்டார். அவருடைய அழைப்புக்கு இணங்கி, அந்தோனி மரிய கிளாரட் அங்கு சென்று பணிசெய்தார். 1870 ஆம் ஆண்டு முதலாம் வத்திக்கான் சங்கம் கூடியபோது இவர் திருத்தந்தையின் வலுவாவரத்தைக் குறித்துப் பேசி திருச்சபைக்கு பக்கபலமாக இருந்தார். இப்படி பல்வேறு பணிகளைச் செய்துவந்த அந்தோனி மரிய கிளாரட் 1870 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

இவர் அடிக்கடி சொல்கின்ற வசனம், "நான் போய் நற்செய்தி அறிவிக்காத இடத்தில் என்னுடைய புத்தகம் சென்று நற்செய்திப் பணியை அறிவிக்கும்" என்பதாகும்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்


தூய அந்தோனி மரிய கிளாரட்டின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

ன்னை மரியாவிடம் பக்தி


அந்தோனி மரிய கிளாரட் அன்னை மரியாவிடம் ஆழமான, அசைக்க முடியாத பக்தி கொண்டு வாழ்ந்துவந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த பக்தி அவரை பல்வேறு இடர்களிலிருந்தும் பிரச்சனைகளிலிருந்தும் காப்பாற்றியது.

இவர் குருமானவராகப் படித்துக்கொண்டிருக்கும்போது தெரியாமல் கிணற்றுக்குள் விழுந்து, மூழ்கத் தொடங்கினார். அப்போது இவர் "மரியே என்னைக் காப்பாற்றும் என்று கத்தத் தொடங்கினார். இவருடைய சத்தத்தைக் கேட்டு அவ்வழியாக வந்த வழிபோக்கர் ஒருவர் கிணற்றுக்குள்ளே விழுந்து, இவரைக் காப்பாற்றினார். தன்னைக் காப்பாற்றிய வழிபோக்கர் அன்னை மரியா அனுப்பி வைத்த மனிதர் என்றே அவர் நம்பினார்.

அந்தோனி மரிய கிளாரட்டைப் போன்று நாம் அன்னை மரியாவிடம் ஆழமான விசுவாசம், பக்தி கொண்டு வாழ்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். "மாதாவின் பிள்ளை அவலமாய் சாவதில்லை" என்பார்கள். நாம் அன்னை மரியாவிடம் பக்தி கொண்டு வாழும்போது அவர் நம்மை எல்லா இடர்களிலிருந்தும் காப்பாற்றுவார் என்பது உறுதி.

எனவே, அந்தோனி மரிய கிளாரட்டின் விழாவைக் கொண்டாடும் இன்று அவரைப் போன்று அன்னையிடம் பக்தி கொண்டுவாழ்வோம், ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் எடுத்துரைப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 விழிப்பாய் இருங்கள், ஆயத்தமாய் இருங்கள்.

முன்பொரு காலத்தில் நடைபெற்ற நிகழ்வு இது. புதிதாக மனம்மாறிய கிறிஸ்தவர் ஒருவர் மிக அண்மையில் நெருங்கி வரக்கூடிய கிறிஸ்து பிறப்பு பெருவிழாவிற்கு என்ன செய்யவேண்டும்?, அதற்கு எப்படி தயாரிக்கவேண்டும்? என்ற பரபரப்பில் இருந்தார்.

எனவே அவர் தனக்கு கிறிஸ்தவ நெறியைப் போதித்த குருவானவரை அணுகிச் சென்று, "கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை நான் எப்படி சிறப்பாகக் கொண்டாடுவது?, அதற்கான வழிமுறைகள் என்ன?" என்று கேட்டார். அதற்கு குருவானவர், "எப்போதும் விழிப்பாய் இருங்கள்..." என்று சொன்னதுதான் தாமதம், அவர் குருவானவர் சொல்ல வந்தததை முழுமையாகக் கேட்காமலே, "விழிப்பாய் இருப்பதுதான், கிறிஸ்து பிறப்பு பெருவிழாவைக் கொண்டாடுவதற்கான வழி நினைத்துக்கொண்டு, அங்கிருந்து புறப்பட்டார்.

அவர் ஒவ்வொருநாளும் தன்னுடைய தோட்டத்து வேலைகள் எல்லாவற்றையும் முடித்துவிட்டு, இரவெல்லாம் விழித்திருக்க தொடங்கினார். ஆனால் அந்தோ பரிதாபம். அவர் விழித்திருக்க முயன்றபோதெல்லாம் அவருக்கு அதிகமாக தூக்கம்வர, அப்படியே அவர் தூங்கிப்போனார். இது ஒவ்வொருநாளும் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

தன்னால் குருவானவர் சொன்னதுபோன்று விழித்திருக்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்ட அவர் ஒருநாள் குருவானவரை அணுகிச் சென்று, தன்னுடைய தோல்வியை ஒத்துக்கொண்டார். "அன்புத் தந்தையே, நான் நீங்கள் சொன்னதுபோன்று ஒவ்வொருநாளும் விழித்திருக்க முற்படுவேன். ஆனால் அது முடியாமல் தூங்கிப் போகிறேன்" என்றார்.

அதற்கு குருவானவர், "நான் சொல்லவந்ததை நீ சரியாக புரிந்துகொள்ளாததால்தான் இப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்பட்டது. நான் விழிப்பாய் இருங்கள் என்று சொன்னனே ஒழியே, தூங்காமல் இருங்கள் சொல்லவில்லை. விழிப்பாய் இருந்து மெசியாவாக ஆண்டவர் எப்படிப்பட்டவர், அவர் எத்தகைய குணநலன்களைக் கொண்டவர் என்பதை பற்றி தியானியுங்கள் என்று சொல்லவந்தேன். அதற்குள் நீங்கள் முந்திக்கொண்டு போய்விட்டீர்கள்" என்று விளக்கம் தந்தார்.

குருவானவரின் வார்த்தைகளால் தெளிவுபற்ற அந்த மனிதர் தன்னுடைய வீட்டிற்க்குச் சென்று, விவிலியத்தை எடுத்து கிறிஸ்து பிறப்பு பற்றிய பகுதிகளை வாசிக்கத் தொடங்கினார். விழிப்பாய் இருப்பது என்பது தூங்காமல் இருப்பது அல்ல, மாறாக இறைவனுடைய வருகைக்காக நம்மையே தகுந்த விதத்தில் தயாரிப்பது என்று உணர்ந்துகொண்டார்.

சில நாட்களில் கிறிஸ்து பிறப்பு பெருவிழா வந்தபோது, தூய வாழ்வு வாழ்ந்து, தன்னையே தயாரித்து வந்த மனிதருக்கு கிறிஸ்து பிறப்புப் பெருவிழா பெருமகிழ்ச்சியைத் தந்தது. கிறிஸ்துவின் (இரண்டாம்) வருகைக்காக எப்போதும் நாம் தூய வாழ்வு வாழ்ந்து தயாராக இருக்கவேண்டும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "நீங்கள் ஆயத்தமாய் (விழிப்பாய்) இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்" என்கிறார். நாம் எப்படி இறைவனின் வருகைக்காக ஆயத்தமாக - விழிப்பாய் இருப்பது என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். விழிப்பாய் இருப்பது என்று சொன்னால் மேலே சொல்லப்பட்ட கதையில் வரும் விவசாயியைப் போன்று தூங்காமல் இருப்பது அல்ல, மாறாக கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் பொறுப்புகளைச் செய்து எப்போதும் தயார் நிலையில் இருப்பது. வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால் நாம் எப்போதும் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வது.

ஒருசிலர் நினைக்கலாம் இளமைப் பருவத்தில் எப்படியும் வாழ்க்கை வாழ்ந்துவிட்டு, முதிய வயதில் இறைவனைத் தேடிக்கொள்ளலாம் என்று. இது ஒரு தவறான அணுகுமுறையாகும். ஏனென்றால் திருடனின் வருகை எப்போது நிகழும் என்று யாருக்குமே தெரியாது. அதுபோன்றுதான் நமது மரணம் அல்லது இயேசுவின் வருகை எப்போது நிகழும் என்று யாருக்கும் தெரியாது. ஆகையால் நாம் எப்போது வேண்டுமானாலும் கிறிஸ்துவின் வருகை நிகழும் என்ற எண்ணத்தில் தூய வாழ்க்கை வாழ முயற்சி எடுப்போம்.

பெரும்பாலான நேரங்களில் நாம் எந்த ஒரு காரியத்தையும் நாளை பார்த்துக்கொள்ளலாம், பிறகு செய்துகொள்ளலாம் என்று தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கிறோம். இப்படித் தள்ளிப்போடுவதால் அந்த காரியத்தை முடிக்க முடியாமலே போய்விடுகிறது. இதுதான் இயேசுவின் வருகைக்கும் பொருந்தும். இயேசு நாளைவருவார் அல்லது அவர் வரக் காலம் தாழ்த்துவார் என்ற எண்ணத்தில் வாழ்ந்தோம் என்றால், திடிரென்று அவருடைய வருகை நிகழ்வும்போது நாம் மாட்டிக்கொள்வோம். மாறாக எப்போதும் நாம் தூய வாழ்க்கை வாழும்போது இறைவனின் வருகை நிகழ்வும்போது கிறிஸ்துவால் அதற்காக வெகுமதியைப் பெறுவோம்.

ஆகவே இயேசுவின் வருகை எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்ற எண்ணத்தில் எப்போதும் தூய வாழக்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!