Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   23  அக்டோபர் 2018  
                                                           பொதுக்காலம் 29ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 இயேசுவே நமக்கு அமைதி அருள்பவர். அவரே இரண்டு இனத்தவரையும் ஒன்றுபடுத்தினார்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 12-22

சகோதரர் சகோதரிகளே, ஒரு காலத்தில் நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்களாகவும், இஸ்ரயேலரின் சமுதாயத்துக்குப் புறம்பானவர்களாகவும், வாக்குறுதியைக் கொண்டிருந்த உடன்படிக்கைக்கு அன்னியர்களாகவும், எதிர்நோக்கு இல்லாதவர்களாகவும், கடவுள் நம்பிக்கையற்றவர்களாகவும் இவ்வுலகில் இருந்தீர்கள். ஒரு காலத்தில் தொலையில் இருந்த நீங்கள் இப்பொழுது இயேசு கிறிஸ்துவோடு இணைந்து, அவரது இரத்தத்தின் மூலம் அருகில் கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்.

ஏனெனில் அவரே நமக்கு அமைதி அருள்பவர். அவரே இரண்டு இனத்தவரையும் பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை, தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார்.

பல கட்டளைகளையும் விதிகளையும் கொண்ட யூதச் சட்டத்தை அழித்தார். இரு இனத்தவரையும் தம்மோடு இணைந்திருக்கும் புதியதொரு மனித இனமாகப் படைத்து அமைதி ஏற்படுத்தவே இவ்வாறு செய்தார். தாமே துன்புற்றுப் பகைமையை அழித்தார். சிலுவையின் வழியாக இரு இனத்தவரையும் ஓருடலாக்கிக் கடவுளோடு ஒப்புரவாக்க இப்படிச் செய்தார்.

அவர் வந்து, தொலையில் இருந்த உங்களுக்கும், அருகிலிருந்த அவர்களுக்கும் அமைதியை நற்செய்தியாக அறிவித்தார். அவர் வழியாகவே, இரு இனத்தவராகிய நாம் ஒரே தூய ஆவி மூலம் நம் தந்தையை அணுகும் பேறு பெற்றிருக்கிறோம்.

எனவே இனி நீங்கள் அன்னியர் அல்ல; வேற்று நாட்டினரும் அல்ல. இறைமக்கள் சமுதாயத்தின் உடன் குடிமக்கள்; கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள்.

கிறிஸ்துவின் உறவில் கட்டடம் முழுவதும் இசைவாகப் பொருந்தி, ஆண்டவருக்கென்று தூய கோவிலாக வளர்ச்சி பெறுகிறது. நீங்களும் அவரோடு இணைந்து தூய ஆவி வழியாகக் கடவுளின் உறைவிடமாகக் கட்டப்பட்டு வருகிறீர்கள்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா  85: 8ab-9. 10-11. 12-13 (பல்லவி: 8b)
=================================================================================
பல்லவி: ஆண்டவர் தம் மக்களுக்கு நிறைவாழ்வை வாக்களிக்கின்றார்.

8யb ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார். 9 அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். பல்லவி

10 பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். 11 மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். பல்லவி

12 நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும். 13 நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 ( லூக் 21: 36 )

அல்லேலூயா, அல்லேலூயா! மானிட மகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்காக எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள். அல்லேலூயா.

=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறுபெற்றவர்கள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 35-38

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: "உங்கள் இடையை வரிந்துகட்டிக்கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்துகொண்டிருக்கட்டும். திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள். தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறுபெற்றவர்கள்.

அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறு பெற்றவர்கள்".

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

பணியாளர் விழித்திருப்பது தான் அவருக்கு நலமானது.

ஒருவகையிலே எல்லாரும் பணியாளர்களே. பணியினிலே வேறுபாடு இருக்கிறதே ஒழிய, மண்ணுலகில் உள்ள மாந்தர்கள் எல்லாரும் யாருக்காவது ஒருவருக்கு பணி செய்து கொண்டேத் தான் இருக்கின்றார்கள். அந்த வகையிலே எல்லாருமே விழிப்பாய் இருப்பது தான் சிறப்பானது. அதுவே மானுடத்தை பேறுபெற்றதாக்கும்.

👼🏿👼🏾⛪👼🏽👼🏼⛪👼🏻👼

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
விழித்திருக்கும் பணியாளர்கள் பேறுபெற்றவர்கள்!

யூரி காகரின், டிட்டோச் இவர்கள் இருவரும் ரஷ்யாவைச் சார்ந்த விண்வெளி வீரர்கள். இருவரும் விண்வெளியில் பறந்து சாதனை புரிவதற்காகத் தேர்வு செய்யப்படும் இறுதிக்கட்டத்தில் இருந்தார்கள்.

அப்போதைக்கு விண்வெளியில் ஒருவரைத்தான் அனுப்பமுடியும் என்றொரு நிலை இருந்ததால், அவர்களில் திறமை வாய்ந்த ஒருவரைத் தேர்ந்தெடுக்க சோதனை ஒன்று நடத்தப்பட்டது. அந்த சோதனையில் இருவரும் வயர்கள் இணைக்கப்பட்ட கட்டிலில் தனித்தனியாக தூங்க வைக்கப்பட்டார்கள். மறுநாள் காலையில், அவர்கள் இருவரிடமும் வயர்கள் இணைக்கப்பட்ட கட்டிலில் தூங்கிய அனுபவம் எவ்வாறு இருந்தது என்று கேட்கப்பட்டது.

டிட்டோச், இரவில் நன்றாகத் தூங்கிவிட்டதால், அவரால் எதையும் சொல்ல முடியவில்லை. ஆனால் யூரி காகரின் விழிப்போடு தூங்கினார். அதனால் தேர்வாளர்கள் கேட்ட கேள்விக்கு மிகச் சரியான பதிலைச் சொல்லி, விண்வெளியில் பறக்கக்கூடிய வாய்ப்பினைப் பெற்றார். விண்வெளியில் பறந்து வியக்கத்தக்க சாதனையையும் நிகழ்த்தினார்.

விழிப்போடு இருப்பதால் எத்தகைய நன்மை நமக்குக் கிடைக்கின்றது என்பதை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு ஆழமாக சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது. நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, தன்னுடைய சீடர்களிடத்தில் விழிப்பாய் இருக்கவேண்டும் என்று போதிக்கின்றார். "உங்கள் இடையை வரிந்து கட்டிக்கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்துக்கொண்டிருக்கட்டும். திருமண விருந்துக்குப் போயிருந்த தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள்" என்கின்றார்.

ஆண்டவருடைய இரண்டாம் வருகைக்கு ஒவ்வொருவரும் எப்படி இருக்கவேண்டும், எவ்வாறெல்லாம் ஆயத்தமாக இருக்கவேண்டும் என்பது பற்றி போதிக்கின்ற இயேசு, அதற்காக கையாளக்கூடிய ஓர் உவமைதான் தலைவர் பணியாளர் உவமையாகும். ஆண்டவருடைய வருகை எந்த நேரத்திலும் நடக்கலாம், இரவிலோ, பகலிலோ, சேவல் கூவும் வேளையிலோ அல்லது சாம வேளையிலோ எந்த நேரத்திலும் நடக்கலாம் அதற்காக நாம் ஒவ்வொருவரும் விழிப்பாகவும் ஆயத்தமாகவும் இருக்கவேண்டும். இதை உணத்துவதற்காகத்தான் இயேசு, திருமண விருந்திற்குச் சென்று, திரும்பி வருகின்ற தலைவர், அவருக்காகக் காத்திருக்கின்ற பணியாளர் உவமையைப் பற்றிப் பேசுகின்றார்.

அந்தக் காலத்தில் இன்றைக்கு இருப்பதுபோன்று போக்குவரத்து வசதிகள். ஆகவே, வெளியே செல்கின்ற ஒருவர் நினைத்த நேரத்திற்குத் திரும்பி வரமுடியாது. இரவு நெடுநேரமாகலாம். ஆகவே, அந்நேரம்வரை அந்த மனிதருக்குக் கீழ் பணிபுரியும் பணியாளர் காத்திருக்கவேண்டும். அவ்வாறு தலைவர் வருகின்றபோது அந்தத் தலைவருக்குக் கீழ் பணிசெய்யும் பணியாளர் காத்திருந்தார் என்றால், அவர் பேறுபெற்றவர் ஆவார், அது மட்டுமல்லாமல் தலைவர் அவருக்குப் பணிவிடை செய்வார் என்கின்றார் இயேசு.

இயேசு சொல்லக்கூடிய இந்த உவமையை ஆண்டவருடைய இரண்டாம் வருகையோடு இணைத்துச் சிந்தித்துப் பார்க்கின்றபோது, நாம் இரண்டு உண்மைகளை அறிந்துகொள்ளலாம். ஒன்று விழித்திருக்கும் பணியாளர் பேறுபெற்ற பணியாளர் ஆவார் என்பதும் இரண்டு, விழித்திருக்கும் பணியாளருக்கு இறைவன் தக்க கைம்மாறு தருவார் என்பதும் ஆகும். இந்த இரண்டையும் சிறுது ஆழமாக சிந்தித்துப் பார்ப்போம்.

முதலாவதாக விழித்திருக்கும் பணியாளர் எந்த வகையில் பேறுபெற்ற பணியாளர் ஆவார் என்று பார்க்கின்றபோது, அந்தப் பணியாளர்மீது தலைவருக்கு உயர்வான மதிப்பு ஏற்படும். அதனால் அவர் அவரை, "நன்று நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளனே, நீ சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தாய். எனவே, பெரிய பொறுப்புகளில் உன்னை நான் அமர்த்துவேன்" என்று சொல்லி அவரைப் பெரிய பொறுப்புகளில் அமர்த்துவார்.

இரண்டாவதாக, விழித்திருக்கும் பணியாளருக்குத் தலைவர் வந்து பணிவிடை செய்வார் என்பது மிக உயர்ந்த பேறு. பணியாளர்களை விலங்கினும் கீழாக நடத்துகின்ற சூழலில், ஒரு தலைவர் அவரிடத்தில் பணிபுரிகின்ற பணியாளருக்குப் பணிவிடை செய்வார் என்றால், அதனை வார்த்தைகளில் எப்படிச் சொல்வது? ஆனாலும் எவர் ஒருவர் தன்னுடைய கடமைகளில் மிகப் பொறுப்போடும் விழிப்போடும் இருக்கின்றாரோ, அப்படிப்பட்டவருக்கு இறைவன் மறுவுலக வாழ்வில் தக்க கைம்மாறு தருவார் என்பது உறுதி. இதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.

ஆண்டவருடைய இரண்டாம் வருகையைப் பற்றி சிந்திக்கின்ற நாம், ஆண்டவருடைய வருகைக்காக நாம் விழிப்போடும் ஆயத்தமாகவும் இருக்கின்றோமா? அல்லது வெந்ததைத் தின்று, விதி வந்தால் சாவோம் என்ற மனநிலையில் இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்ப்போம்.

தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்களே பேறுபெற்றவர்கள் ஆகின்றார்கள். ஆகவே, நாம் ஆண்டவருடைய வருகைக்காக விழிப்போடும் ஆயத்தமாகவும் காத்திருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.



காபிஸ்றனோ நகர தூய ஜான் (அக்டோபர் 23)


இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர்கள் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலைவீசிக் கொண்டிருந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, "என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" என்றார். (மத் 4: 18-19)


வாழ்க்கை வரலாறு

ஜான் இத்தாலியில் உள்ள காபிஸ்றனோ என்ற நகரில் 1386 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் வளர்ந்து பெரியவராகியபோது, வழக்குரைஞராகவும் அதன்பின்னர் பெருகியாவின் ஆளுநராகவும் உயர்ந்தார்.

இந்த காலக்கட்டத்தில் பெருகியாவிற்கும் மலடேஸ்டாவிற்கும் (Maletesta) இடையே கடுமையான போர் மூண்டது. போரில் பெருகியாவிற்கு கடுமையான தோல்வி ஏற்பட்டது. இதனால் ஜானும் அவரோடு சேர்த்து பலரும் கைதுசெய்யப்பட்டு எதிரி நாட்டு சிறையில் வைப்பப்பட்டார்கள். சிறையில் இருந்த நாட்களில் ஜான் தன்னுடைய வாழ்வை சுய ஆய்வுக்கு உட்படுத்திப் பார்த்தார். அப்போது அவருக்கு ஒரு யோசனை பிறந்தது. அதுதான் ஆளுநர் பதவியை விட்டுவிட்டு, துறவற வாழ்க்கை வாழ்வது.

சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு தன்னுடைய சொந்த நாட்டிற்குத் திரும்பிவந்த ஜான், செய்த முதல் காரியம் பிரானசிஸ்கன் சபையில் சேர்ந்ததுதான். சபையில் சேர்ந்து 1420 ஆம் ஆண்டு, அதாவது தன்னுடைய 34 வது வயதில் ஜான் குருவாக அருட்பொழிவு செய்யப்பட்டார். இதற்குப் பின்பு அவர் ஐரோப்பாக் கண்டத்தின் பல பகுதிகளுக்கும் சென்று, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கினார். அவர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டு பலரும் மனம்மாறி கிறிஸ்தவ மதத்திற்கு வந்தார்கள்.

ஏற்கனவே வழக்குரைஞராக இருந்து பணியாற்றிய அனுபவம் ஜானுக்கு இருந்ததால் கிறிஸ்தவர்களிடையே இருந்த பல பிரச்சனைகளை சுமூகமாகத் தீர்த்து வைத்து, அவர்களிடம் ஒற்றுமையும் விசுவாசமும் மேலோங்கி வளர பாடுபட்டார். இவை எல்லாவற்றுக்கும் மேலாக கிறிஸ்தவ நாடுகளை இஸ்லாமியப் படை எடுப்பிலிருந்து காப்பாற்றினார். 1453 ஆம் ஆண்டு இஸ்லாமியப் படை, கான்ஸ்டாண்டிநோபிளைக் கைப்பற்றியது. அந்தப் படை தொடர்ந்து முன்னேறிவந்து ஐரோப்பாக் கண்டத்தைக் கைப்பற்ற முயன்றபோது ஜான், ஹங்கேரி நாட்டுப் படையைத் தயார்செய்து, தங்களை நோக்கிப் படையெடுத்து வந்தவர்களை விரட்டியடித்தார். இவ்வாறு கிறிஸ்தவ நாடுகளை ஜான் தன்னுடைய சாதூர்யத்தால் காப்பாற்றினார்.

இப்படி ஜான் திருச்சபைக்கு அளப்பெரிய பணியைச் செய்து வந்தார். 1456 ஆம் ஆண்டு, அவர் இருந்த பகுதியில் பயங்கரக் கொள்ளைநோய் ஏற்பட்டது. அந்தக் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணிசெய்யும் போது, ஜான் அந்தக் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டு, அதே ஆண்டு அக்டோபர் 23 ஆம் நாள் இறையடி சேர்ந்தார். இவருக்கு 1690 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.


கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

காபிஸ்றனோ நகர தூய ஜானின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

ஆண்டவரைத் தேடினால் வாழ்வடைவோம்


காபிஸ்றனோ நகர தூய ஜானின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது, நமக்கு மேலே சொல்லப்பட்ட தலைப்புதான் நினைவுக்கு வந்துபோகின்றது. ஜான் ஒருகாலத்தில் வழக்குரைஞராகவும் அதன்பின்னர் ஆளுநராகவும் இருந்தார். அப்போதெல்லாம் அவருக்கு நிம்மதி கிடைக்கவில்லை, எப்போது அவர் ஆண்டவரைத் தேடி, அவருடைய வழிகளில் நடந்தாரோ அப்போது அவருடைய வாழ்வில் நிறைவான மகிழ்ச்சியைக் கண்டடைந்தார். நாம் நமது வாழ்வில் ஆண்டவரைத் தேடிச் செல்கின்றோமா? அவர் தருகின்ற ஆறுதலில் மகிழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பிரான்சு நாட்டில் தோன்றிய மிகப்பெரிய கணிதவியலாளர் ஏ. வில்லியம் என்பவர். கணிதத்துறையில் அவர் நிகழ்த்திய சாதனைகளுக்காக பிரான்சு நாட்டு அரசாங்கம் அவருக்கு உயரிய விருதைக் கொடுத்து கவுரவித்தது. அந்த விழாவில் அவரிடத்தில் ஒருவர், "கணிதமேதையே! நீங்கள கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளில் எது தலைசிறந்த கண்டுபிடிப்பு?" என்று கேட்டார். அதற்கு வில்லியம் சிறிதும் தாமதியாமல், "நான் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளில் தலைசிறந்த கண்டுபிடிப்பு யாதெனில், இயேசுவே இந்த உலகின் மீட்பர் என்பதாகும்" என்றார்.

ஆம், இயேசுவே இவ்வுலகின் மீட்பர். அவரை நாம் தேடிச்சென்றால், வாழ்வது உறுதி. ஆகவே, தூய காபிஸ்றனோ நகர தூய ஜானின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஆண்டவரைத் தேடிச் செல்வோம். அதன்வழியாக வாழ்வடைவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.




- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3
=================================================================================


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!