Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   20  அக்டோபர் 2018  
                                                           பொதுக்காலம் 28ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
கிறிஸ்துவைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். திருச்சபையே அவரது உடல்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 15-23

சகோதரர் சகோதரிகளே, ஆண்டவராகிய இயேசுவின் மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை பற்றியும் இறைமக்கள் அனைவரிடமும் நீங்கள் செலுத்தும் அன்பு பற்றியும் கேள்வியுற்று, நான் இறைவனிடம் வேண்டும்போது உங்களை நினைவு கூர்ந்து உங்களுக்காக நன்றி செலுத்தத் தவறுவதில்லை.

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சி மிகு தந்தையுமானவர், அவரை முழுமையாக நீங்கள் அறிந்துகொள்ளுமாறு, ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்றும், இறைமக்களுக்கு அவர் அளிக்கும் உரிமைப்பேறு எத்துணை மாட்சிமிக்கது என்றும், அவர்மீது நம்பிக்கை கொள்பவர்களாகிய நம்மிடம் செயலாற்றுகிற அவரது வல்லமை எத்துணை ஒப்புயர்வற்றது, மேலானது என்றும் நீங்கள் அறியுமாறு, உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! கடவுள் வலிமைமிக்க தம் ஆற்றலை, கிறிஸ்துவிடம் செயல்படுத்தி, இறந்த அவரை உயிர்த்தெழச் செய்து, விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில் அமர்த்தினார். அதன் மூலம் ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர், வல்லமை உடையோர், தலைமை தாங்குவோர் ஆகிய அனைவருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார்; இவ்வுலகில் மட்டும் அல்ல; வரும் உலகிலும் வேறு எப்பெயர் கொண்டோருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார். அனைவரையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச் செய்து, அனைத்துக்கும் மேலாக, அவரைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். திருச்சபையே அவரது உடல். எங்கும் எல்லாவற்றையும் நிரப்புகின்ற அவரால் அது நிறைவு பெறுகின்றது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா 8: 1-2a. 3-4. 5-6 (பல்லவி: 6a)
=================================================================================
பல்லவி: உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்.

1 ஆண்டவரே! எங்கள் தலைவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது! உமது மாட்சி வானங்களுக்கு மேலாகவும் உயர்ந்துள்ளது. 2ய பாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழியிலும் வலிமையை உறுதிப்படுத்தினீர். பல்லவி

3 உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது, 4 மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? பல்லவி

5 ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர். 6 உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
 யோவா 15: 26b,27a

அல்லேலூயா, அல்லேலூயா! உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 8-12

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "நான் உங்களுக்குச் சொல்கிறேன்; மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை மானிட மகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக்கொள்வார்.

மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் கடவுளின் தூதர் முன்னிலையிலும் மறுதலிக்கப்படுவார். மானிட மகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டவரும் மன்னிக்கப்படுவார்.

ஆனால் தூய ஆவியாரைப் பழித்துரைப்பவர் மன்னிப்புப் பெறமாட்டார். தொழுகைக்கூடங்களுக்கும் ஆட்சியாளர், அதிகாரிகள் முன்னும் உங்களைக் கூட்டிக்கொண்டு போகும்போது எப்படிப் பதில் அளிப்பது, என்ன பதில் அளிப்பது, என்ன பேசுவது என நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

ஏனெனில் நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

அன்பு செய்கின்றேன் என்று சொல்பவர்கள், ஏற்றுக் கொள்பவர்களாக இருந்திடல் வேண்டும். துன்பமோ, துயரமோ கடவுளின் கட்டளைகளை ஏற்று, கடைபிடிப்போரே அவரை அன்பு செய்கின்றேன் என்று சொல்லிட முடியும்.

மற்றவர்கள் முன்பாக தான் கடவுளை ஏற்று, தெய்வ நம்பிக்கையோடு வாழ்பவன் என்பதை அறிக்கை செய்திட தயங்குகிறவன் என்றால், அவன் கடவுளை அன்பு செய்கின்றவர் என்று எப்படி சொல்லிட முடியும்.

கடவுளை அன்பு செய்கின்றவர்கள், எந்த நிலையிலும் அவரை அறிக்கை செய்கின்றவர்களாக வாழ்ந்திடல் வேண்டும்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 
"மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை மானிடமகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக்கொள்வார்"

2008 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், ஒரிசா மாநிலத்தில் உள்ள கந்தமால் மாவட்டத்தில், கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் அகில உலகம் அறிந்த செய்தி.

2008 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி இரவு, சுவாமி லக்ஷ்மானந்தா சரஸ்வதி மர்மநபர்களால் தாக்கப்பட்டதற்கு அங்கிருந்த கிறிஸ்தவர்கள்தான் காரணம் என்று மதவெறியர்கள் கிறிஸ்தவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தத் தொடங்கினார்கள். இச்செய்தி கந்தமால் மாவட்டத்தில் உள்ள தியங்கியா என்ற ஊரில், கிறிஸ்தவ விசுவாசத்தில் வேரூன்றி இருந்த போரிஹிடோ (Porikhito) என்பவருக்குத் தெரியவந்தது. அவர், தனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை, தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு மகள்களுக்கும் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, இரவோடு இரவு தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு மகள்களையும் கூட்டிக்கொண்டு மலைப்பாங்கான ஊராகிய ரைகியாவில் விட்டுவர சென்றார்.

போரிஹிடோ, தியாங்கியாவிலிருந்து ரைகியாவிற்குத் தப்பித்துச் சென்ற செய்தி எப்படியோ மதவெறியர்களுக்குத் தெரியவந்தது. உடனே அவர்கள் புறப்பட்டுச் சென்று, போரிஹிடோவையும் அவருடைய மனைவி மற்றும் இரண்டு மகள்களையும் பிடித்து, அவருடைய சொந்த ஊரான தியாங்கியாவிற்கு இழுத்துக்கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் போரிஹிடோவை ஒரு மரத்தில் கட்டிவைத்து அடி அடியென அடித்தார்கள். அடிக்கும்போதே நீ கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்குத் திரும்பினால், உன்னைக் கொல்லாமல் விட்டுவிடுவோம் என்று சொல்லிச் சொல்லலி அடித்தார்கள். அப்போது போரிஹிடோவோ, "நான் ஒருபோதும் கிறிஸ்தவ மதத்தை விட்டு வெளிவர மாட்டேன்" என்றார். இதனால் அவரை அடித்துத் துன்புறுத்திய மதவெறிக் குப்பல் இன்னும் கடுமையாக அடித்தது.

இதற்குக்குப் பின் அவர்கள் போரிஹிடோவை மரத்திலிருந்து அவிழ்த்து, சாலையில் தரதரவென இழுத்துச் சென்று, அவருடைய கைகளையும் கால்களையும் முறித்துப் போட்டார்கள். பின்னர் அவர்கள் அவருடைய உடலில் பெட்ரோல் ஊற்றி, எரித்துக் கொன்றுபோட்டார்கள். அவ்வாறு அவர்கள் அவரை எரிக்கும்போது இயேசு இயேசு என்று சொல்லிக்கொண்டே அவர் இறந்தார். இதற்கிடையில் தியாங்கியாவில் இருந்த ஒருசில நல்ல உள்ளம் படைத்த இந்துப் பெண்கள் போரிஹிடோவின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளையும் மதவெறியர்களின் கையிலிருந்து காப்பாற்றி, ஒரு பள்ளிக்கூடத்தில் பத்திரமாக வைத்தார்கள். மீட்புக் குழுவினர் வந்துதான் அவர்களை மீட்டார்கள்.

"தன்னுடைய உயிர் போனாலும் பரவாயில்லை, கிறிஸ்தவ விசுவாசத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன், கிறிஸ்துவை மறுதலிக்கவும் மாட்டேன்" என்று சொல்லி கிறிஸ்துவுக்காக உயிரையே துறந்த போரிஹிடோவின் சாட்சிய வாழ்வு நமது பாராட்டிற்கு உரியதாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை மானிடமகனும் தூதர் முன்னிலையில் ஏற்றுக்கொள்வார். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் கடவுளின் தூதர் முன்னிலையில் மறுதலிக்கப்படுவார்" என்கின்றார்.

இயேசுவின் இவ்வார்த்தைகள் ஆழமான சிந்தனைக்குரியதாக இருக்கின்றன. இன்றைக்குப் பலர், பணிப்பெண்ணையும் அரண்மனை சேவகனையும் கண்டு பயந்து இயேசுவை மறுதலித்த பேதுருவைப் போன்று அடுத்தவர் என்ன நினைப்பாரோ?, என்ன பேசுவாரோ? என நினைத்துக்கொண்டு கிறிஸ்தவ அடையாளத்தை மறைத்துக்கொண்டு வாழ்வதைப் பார்க்க முடிகின்றது. இப்படிப்பட்டவர்கள் எல்லாம் கிறிஸ்தவர்கள் எல்லாம் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ள அருகதை அற்றவர்கள். கிறிஸ்துவை மறுதலித்து வாழும் இப்படிப்பட்டவர்களைக் கிறிஸ்துவும் கடவுளின் தூதர் முன்பாக மறுதலிப்பார் என்பது உறுதி.

ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக எத்தகைய இடர்வரினும், துன்பங்கள், சவால்கள் வந்தாலும் கிறிஸ்தவ விசுவாசத்தில் மிக உறுதியாக இருந்து, கிறிஸ்துவை இறைவன் என ஏற்று, எல்லார் முன்னிலையிலும் அறிக்கையிடுபவர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள், எவருக்கு முன்னாலும் ஆண்டவர் இயேசுவைப் பற்றி துணிவுடன் அறிக்கையிட தூய ஆவியார் ஆற்றலையும் வல்லமையையும் தந்திடுவார், அப்படிப்பட்டவர்களை இயேசு கடவுளின் தூதர் முன்பாக ஏற்றுக்கொள்வார் என்பது உண்மை.

நாம் உயிருக்குப் பயந்து கிறிஸ்தவை மறுதலித்து வாழும் கோழைகளா? அல்லது எத்தகைய இடர்வரினும் ஆண்டவர் இயேசுவை ஆழமாக நம்பி, அவரைத் துணிவுடன் அறிக்கையிடுபவர்களாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். கடவுள் தம் ஆவியால் கோழை உள்ளத்தை நமக்கு அருளவில்லை. வலிமையையும் அன்பும் விவேகமும் கொண்ட உள்ளத்தையே அருளினார் என்பார் தூய பவுல் (2 திமோ 1:17).

ஆகவே, நாம் வலிமையையும் அன்பும் விவேகமும் கொண்ட உள்ளத்தினராய் இயேசுவுக்கு சான்று பகர்ந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 
Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை -
  28ம் வாரம் சனிக்கிழமை, பொதுக்காலம்
                               (அக்டோபர் 20, 2018)
=================================================================================
ஒருமனப்பாடும் அர்ப்பணிப்பும்

எபேசியர் 1:15-23
லூக்கா 12:8-12

இன்றைய வார்த்தை நம்மை தந்தை, மகன், தூய ஆவியார் என்னும் நமது நம்பிக்கையின் முழுமுதல் உண்மையாம் மூவொரு இறைவனின் முன் நிறுத்துகிறது! பவுலடிகளாரும் சரி நற்செய்தியில் கிறிஸ்துவும் சரி நமக்கு மூவொரு இறைவனின் உண்மையையும் அவர் நமக்கு தரும் சவாலையும் முன் நிறுத்துகிறார்கள். மூவொரு இறைவனின் இலக்கணமாம் ஒருமனப்பாடும் அவரது இயல்பாம் அர்ப்பணிப்பும் நமக்கு சவாலாக தரப்படுகின்றன.

இன்று உலகளாவிய திருச்சபையை, அதாவது இறைவனின் மக்களை, காணும்போது ஒருவிதமான வருத்தம் நம் மனதை தழுவி கொள்கிறது. எத்தனை எத்தனை பிரச்சனைகள், பிரிவினைகள் பூசல்கள் குழப்பங்கள்... காரணம் என்ன? எல்லாமே இறைசித்ததை ஒட்டியதா? இறையரசை முன்னிறுத்தியதா? இறைவனின் மேலான மகிமையை பற்றியதா? இந்த சூழலில் தான் இன்றைய வார்த்தை நம்மை ஒருமனபாட்டிற்கு அழைக்கிறது. இது வெறும் எதிராளிகளுக்கு பயந்து ஒட்டி வாழும் வெற்று ஒற்றுமையல்ல, கூட்டுசதியும் அல்ல. ஆனால் இறையரசு என்னும் ஒரே மையத்தை, இறையாட்சி என்னும் ஒரே இலக்கை ஒன்றித்து காண்பதால் ஏற்படுகின்ற ஒருமனப்பாடு... ஒரே மனதும் ஒரே சிந்தனையும் கொண்ட மக்களாய் உருவாகும் அன்பின் நிலை! இந்த நிலையே இறையரசாகும், இறையாட்சியாகும்.

பல நேரங்களில் இது வெறும் வாய்ப்பேச்சாகவே இருந்து விடுகிறது, இதுவே பெரும் வேதனை! இறையரசு என்பது வெறும் பேச்சால் நிகழ்வதல்ல, கூட்டங்கள் மாநாடுகளால் உருவாவதல்ல... உண்மையான அர்பணிப்பால் உருவாகிறது, முழுமையான அர்பணிப்பால் மட்டுமே மலர்கிறது. துன்பங்கள், துயரங்கள், இழப்புக்கள், இடர்கள் என எதையும் பொருட்படுத்தாது அடுத்தவர் நலன், பொது நலன், மானுடம் முழுதின் நல்வாழ்வு, அண்டம் அனைத்தின் அக்கறை என்று நாம் சிந்திக்கும் போதே அர்ப்பணம் தோன்றுகிறது. இறையரசை நாம் நிறுவ நினைத்தால் இவற்றிற்கு ஒருமனதாய் நமது தேர்வை வெளிப்படுத்த வேண்டும். இதுவே அர்ப்பணம்.

ஒருமனபாட்டிலும் உண்மை அர்ப்பணத்திலும் வளர முயல்வோம், இறையரசை நம் மத்தியிலே நிறுவி வாழ்வோம்!

(Rev. Father: Antony Christy SDB)


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!